ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான்.
ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை தட்டி இப்போ மரம் மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று கத்த
அவனோ “மேடம் நீங்க அப்போ கதவை தட்டி எங்களுக்கு அட்வைஸ் பண்ணுனிங்களே! அப்போ எங்களுக்கும் இப்பிடி தானே இருந்திருக்கும்” என்று சொல்ல அவள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.
“டேய் மலைமாடே! அதுவும் இதுவும் ஒன்னா? நான் தட்டுன நேரம் என்ன அர்த்தராத்திரியா? நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? இன்னொரு தடவை இப்பிடி பண்ணி வச்சன்னா கன்ஃபார்மா நான் போலீஸுக்கு ரிப்போர்ட் பண்ணிடுவேன்” என்று கத்திவிட்டு கதவை அறைந்து சாத்தினாள்.
வேதாவும், சுப்பிரமணியமும் மாத்திரையை போட்டுவிட்டு தூங்கியதால் அவள் போட்ட சத்தம் அவர்களின் காதில் விழவில்லை. ஆனால் மேனகா விழித்துவிட்டாள். ஹாலின் விளக்கை அணைத்துவிட்டு வந்த ஸ்ராவணியை பார்த்து “என்னடி நடுராத்திரி யாரு கூட சண்டை போட்டுட்டு இருக்க?” என்று கேட்க
ஸ்ராவணி கைவிரல்களை சொடுக்கு முறித்தவாறே “எல்லாம் பக்கத்து ஃப்ளாட் எருமை தான். நான் அப்போ போய் அவன் வீட்டு கதவை தட்டுனதுக்கு அந்த எருமை இப்போ வந்து தட்டிட்டு போறானாம். இவனுங்கல்லாம் எந்த கேலக்ஸில இருந்து வந்தானுங்களோ? சே! தூக்கம் போச்சு எனக்கு” என்றபடி மெத்தையில் அமர்ந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆனால் மேனகாவுக்கு இன்னும் தூக்க கலக்கம் தீரவில்லை. ஸ்ராவணியின் கூப்பாட்டை உம் கொட்டிக் கொண்டே படுக்கையில் விழுந்தாள் அவள். ஸ்ராவணியும் அவள் தூக்கத்தில் மூழ்கியதை கண்டு விட்டு விளக்கை அணைத்துவிட்டுத் தூங்க முயற்சித்தாள்.
******
மறுநாள் காலை….
அபிமன்யூ அன்று சீக்கிரமாக எழுந்துவிட்டான். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தவனை கண்ட சுபத்ரா எதுவும் பேசாமல் செல்ல அவனுக்கு உள்ளே வலித்தாலும் இப்போதெல்லாம் அவரின் இந்த அலட்சியம் அவனுக்கு பழகிவிட்டது.
வழக்கம் போலவே “என்னைக்காச்சும் நீங்க என்னை புரிஞ்சிப்பிங்கம்மா. அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டபடி செய்தித்தாளில் கண் பதித்தான்.
அதன் பின் சகாதேவன், அஸ்வின், ஜனனி என்று ஒவ்வொருவராய் எழுந்து வர அபிமன்யூ கிட்சனை நோக்கி “கோமதி அக்கா! எல்லாருக்கும் காபி கொண்டு வாங்க. இன்னைக்கு நாங்க எல்லாரும் ஒன்னா உக்காந்து காபி குடிக்க போறோம்” என்று சொன்னவன் அஸ்வினை நோக்க அவன் புரிந்தது போல எழுந்து சென்று சுபத்ராவை கையோடு அழைத்து வந்தான்.
அவரும் அஸ்வின் அருகில் அமர கோமதி காபி கொண்டு வந்தார். அனைவரும் காபியை அருந்த தொடங்க ஜனனி ஆவலுடன் “எவ்ளோ நாளாச்சுல்ல நம்ம எல்லாரும் ஒன்னா இப்பிடி உக்காந்து காபி குடிச்சு? இன்னைக்கு பெரியப்பாவும் வந்துடுவாங்க. டுமாரோல இருந்து இனிமே டெய்லியும் நம்ம எல்லாரும் ஒன்னா தான் காபி குடிக்குறோம், சாப்பிடுறோம். இது இந்த ஜனனியோட ஆர்டர். சரி தானேப்பா?” என்று சகாதேவனை நோக்கி கேட்க அவர் “நீ சொன்னா சரியா தான்டா இருக்கும்” என்றார் மகளை வாஞ்சையோடு பார்த்தார்.
அபிமன்யூவும் அஸ்வினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இருவரது பார்வையிலும் இருந்த அர்த்தம் ஒன்று தான். அந்த வீட்டில் பழைய களை திரும்ப வந்தது போல இருவருக்கும் தோன்றியது. ஜனனி சொன்ன மாதிரியே காலையுணவையும் சேர்ந்தே உண்டவர்கள் நீண்டநாட்கள் கழித்து மனநிறைவாக உணர்ந்தனர்.
அபிமன்யூ கை கழுவிவிட்டு வந்தவன் அஸ்வினிடம் “அச்சு! பத்து மணி ஆச்சுடா. நம்ம கட்சி ஆபிஸுக்கு போய் அங்கிளை பாத்துட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருக்க அஸ்வின் தயாராகி இறங்கிவந்தவன் “போலாமாடா?” என்று கேட்கும் நேரத்தில் அபிமன்யூவின் போன் அடிக்க புதிய எண்ணாக இருக்கிறதே என்ற குழப்பத்துடன் அழைப்பை ஏற்றான் அவன்.
“ஹலோ! அண்ணா நாங்க தான் பேசுறோம்ணா! இந்த ரிப்போர்ட்டர் பொண்ணு எங்களை ஸ்டெஷன்ல கொண்டு வந்து உக்கார வச்சிடுச்சு. நாங்க உங்க ஆளுங்கன்னு சொன்னா இன்ஸ் நம்ப மாட்றாருணா. கொஞ்சம் ஸ்டேஷன் பக்கம் வர முடியுமாண்ணா?” என்று பேசியவன் கூறிய விஷயத்தை கேட்ட அபிமன்யூவின் மனதிற்குள் “கடைசில உன் பிளானோட பாதி கிணறை தாண்டிட்டடா அபி” என்று ஒரு குரல் ஒலிக்க எந்த ஸ்டேஷன் என்று விசாரித்தான்.
அவன் “நுங்கம்பாக்கம் F3 அண்ணா” என்று சொல்ல இன்னும் சிறிது நேரத்தில் தான் வந்துவிடுவதாக சொல்லி போனை வைத்தவன் அஸ்வினிடம் கட்சி அலுவலகத்துக்கு போவதற்கு முன் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்று சொல்ல அவனும் அபிமன்யூவை பின் தொடர்ந்தான்.
அடுத்த சில மணித்துளிகளில் ஸ்டேஷன் வாசலில் நின்ற காரிலிருந்து இறங்கிய அஸ்வின் அபிமன்யூவிடம் “அபி! கண்டிப்பா இந்த பிளானை எக்ஸிகியூட் பண்ணி தான் ஆகணுமாடா?” என்று கேட்க அபிமன்யூ நடந்து கொண்டிருந்தவன் நடப்பதை நிறுத்திவிட்டு “அச்சு! அந்த அனு என் கிட்ட வனியோட வீக்னெஸ் மேகினு சொன்னப்போ அந்த பொண்ணை எதாச்சும் பண்ணுனா ரிப்போர்ட்டர் டென்சனாயிடுவானு யோசிச்சேன். பட் அடுத்த செகண்ட் நீ அதுக்கு ரியாக்ட் பண்ணுனதை பாத்துட்டு தான் நான் வீட்டை பத்தி பிளான் போட ஆரம்பிச்சேன். இதையும் என்னை விட சொல்லாதடா” என்று சொல்ல அஸ்வினும் இதற்கு மேல் நடப்பது எல்லாம் ஆண்டவன் செயல் என்று எண்ணியவனாய் அபிமன்யூவுடன் சேர்ந்து காவல் நிலையத்துக்குள் நுழைந்தான்.
அபிமன்யூ உள்ளே நுழைந்ததும் உட்காரவைக்க பட்டிருந்த ஸ்ராவணியின் பக்கத்து ஃப்ளாட் பையன்கள் அனைவரும் “அண்ணா” என்ற முகமலர்ச்சியுடன் எழ இன்ஸ்பெக்டர் எழுந்து “எம்.எல்.ஏ சார் நீங்களா?” என்று தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டார்.
அபிமன்யூவின் பார்வை அந்த அறை முழுவதும் அளவிட அதன் இன்னொரு ஓரத்தில் ரைட்டர் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மேனகாவுடன் அமர்ந்திருந்த ஸ்ராவணியின் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம் அவன் பார்வை வட்டத்தில் விழுந்ததும் மனதிற்குள் ஒரு இதம் பரவ அவளிடம் சென்றவன் “ஓ மை காட்! ரிப்போர்ட்டர் மேடம், நீங்க எவ்ளோ பெரிய ஆளு? நீங்க போய் இப்பிடி ஸ்டேஷன்ல உக்காந்திருக்கலாமா?” என்று கேலியாய் கேட்க அவள் நாற்காலியை தள்ளிவிட்டு எழ மேனகாவும் சட்டென்று எழுந்தாள்.
ஸ்ராவணி அவன் அருகில் வந்தவள் “லிசன்! நான் ஆல்ரெடி கடுப்புல இருக்கேன். நீ தான் இந்த மலைமாடு சொன்ன அண்ணனோ? மரியாதையா அவனுங்க கிட்ட சொல்லி வை. என் கிட்ட வம்பு வச்சிக்க வேண்டானு” என்று சொல்ல அபிமன்யூ கையை கட்டிக் கொண்டு “அவங்களை அனுப்புனதே நான் தான்” என்று சொல்ல ஸ்ராவணி அதிர்ந்தாள்.
“வாட்?” என்று நம்ப முடியாமல் கேட்க அவள் தள்ளிவிட்ட நாற்காலியை தன் அருகில் இழுத்து போட்டு அமர்ந்துவிட்டு “ஒன்னும் பெருசா இல்ல மிஸ் ஸ்ராவணி சுப்பிரமணியம்! உன்னோட வீட்டை நீ எனக்கு வித்துடு. அதுக்கு அப்புறமா இவங்க தொல்லை உனக்கு இருக்காது. அது ஒன்னும் இல்ல மேடம். எனக்கும் அசெம்பிளி உங்க ஏரியால இருந்து பக்கம். அதுக்கு வசதியா ஏதாச்சும் வீடு கிடைச்சா நல்லா இருக்கும்னு தேடிட்டு இருந்தேன். அப்போ தான் உன்னோட ஃப்ளாட் கண்ணுல பட்டுச்சு. சோ நீ என்ன பண்ணுற, குட் கேர்ளா போய் அதோட பேப்பர்ஸை என் பேருக்கு மாத்திக் குடுக்கற” என்றான் சாதாரணமாக.
ஸ்ராவணிக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை இவன் சாதாரணமாக கேட்கிறான் என்ற ஆதங்கம். அது குரலிலும் வெளிப்பட “என்னோட வீட்டை எதுக்கு நான் உனக்கு விக்கணும்? அது எங்க அப்பாவோட உயிர். அவர் ஆசையா வாங்கி, பார்ர்த்து பாத்து ஒவ்வொரு பொருளா சேர்த்து வச்ச வீடு அது. அதை விக்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு இல்ல. அப்பிடியே வந்தாலும் உன்னை மாதிரி ஒருத்தனுக்கு என்னைக்கும் விக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டு நகர முயல
அவன் அதற்குள் அவளது கையை பற்றி நிறுத்தியவன் “வெயிட் பேபி! நீ இப்பிடியே பிடிவாதம் பிடிச்சன்னு வையேன், இன்னைக்கு என்னோட தம்பிங்க ஜஸ்ட் குடிச்சுட்டு உன் வீட்டு முன்னாடி தான் விழுந்து கெடந்தாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். சப்போஸ் உங்க அம்மாக்கு பாத்ரூம்ல ஹீட்டர் போடுறப்போ கரெண்ட் ஷாக் அடிக்கலாம். இல்லனா ஆஸ்துமா கம்ப்ளைண்ட் இருக்கிற உன்னோட அப்பா போற லிப்ஃப்ட் பாதியிலேயே நின்னு போகலாம்” என்று அவன் அடுக்க அவள் கையை உதறினாள்.
முகம் சினத்தில் சிவக்க “நீ என்னை என் அப்பா அம்மாவை காட்டி பிளாக்மெயில் பண்ணுறியாடா?” என்று கத்திய ஸ்ராவணியை பார்த்து சிரித்தவன் “சேச்சே அதுல்லாம் எனக்கு பழக்கம் இல்லம்மா. இந்த நிகழ்வுகள் நடக்க பிராபப்லிட்டி இருக்குனு சொல்லுறேன்” என்றான்.
“அப்பிடி எதுவும் நடக்க நான் விட மாட்டேன். உன்னால என்ன கி……பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு வெளியேற மேனகா இருவரையும் முறைத்து விட்டு அவள் பின்னே சென்றாள்.
அவர்கள் இருவரும் சென்றபிறகு அபிமன்யூ இன்ஸ்பெக்டரிடம் பேசி அந்த இளைஞர்களை விடுவித்தவன் “இங்க பாருங்க தம்பிங்களா! இதே ஃபயரோட வேலை பாருங்க. பட் ஒன் கண்டிஷன். யாருக்கும் சின்ன இன்ஜுரி கூட வந்துட கூடாது. உங்க வேலை பயமுறுத்தறது மட்டும் தான்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
அஸ்வின் அபிமன்யூவிடம் வந்தவன் “அபி சித்தப்பா போன் பண்ணுனாருடா! அங்கிள் இப்போ நம்ம வீட்டுல அம்மா கூட தான் பேசிட்டு இருக்காறாம். நம்ம ரெண்டு பேரும் உன்னோட தொகுதிக்கு போய் ஜெயிக்க வைச்ச மக்களுக்கு ஒரு நன்றியறிவிப்பு கூட்டம் நடக்குதாம். அதுல கலந்துக்கணும்னு சொன்னாரு. வா! கிளம்புவோம்” என்று அவனைக் கையோடு தொகுதிப்பக்கம் இழுத்து சென்றான்.
**********************************************************************************
ஸ்ராவணி கடுப்புடன் அலுவலகம் வந்தவள் நீண்டநாள் கழித்து வந்த சுலைகாவை கண்டதும் அவளது முகம் மலர “சுகா! நீ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தானே வர்றேனு சொன்னடி! அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்ட. எனிஹவ் ஐயம் ரியலி ஹேப்பி டு சீ யூ அகெய்ன்” என்றபடி அவளை கட்டிக்கொண்டாள்.
சுலைகாவும் நீண்டநாள் கழித்து நெருங்கிய தோழிகளை கண்ட மகிழ்ச்சியில் இருந்தவள் மேனகாவையும், ஸ்ராவணியையும் அழைத்து கொண்டு காஃபடேரியாவுக்கு சென்றாள். மூவரும் காபியோடு வந்து அமர்ந்தபடி அரட்டையடிக்க சுலைகா விக்ரமை பற்றி ஆரம்பித்தாள்.
“வனி! விக்கி விஷயத்துல நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோனு எனக்கு தோணுதுடி. அவன் ஏதோ குழப்பத்துல அந்த மாதிரி நடந்திருப்பான். அவனுக்கு நீன்னா எவ்ளோ பிடிக்கும் தெரியுமா?”
“சுகா! இப்போவும் அவனுக்கு என்னை பிடிக்கும்டி. ஆனா என்னோட வேலையை விடச் சொல்லுறான். அதை கேட்டுட்டு என்னை எப்பிடி பொறுமையா இருக்க சொல்லுற? அது என்னடி எப்போ பாத்தாலும் குடும்பத்துகாக, காதலுக்காக, குழந்தைக்காகனு பொண்ணுங்க மட்டும் அவங்க புரஃபசனை விட்டுட்டு வீட்டோட இருக்கணும்னு சொல்லுறிங்க. இது வரைக்கும் ஒரு ஆம்பளை தன்னோட மனைவிக்காகவோ, இல்ல குழந்தையை பாத்துக்கிறதுக்காகவோ வேலையை விட்டு நின்னுருப்பானா? பொண்டாட்டி வேலை பாத்தாலும், அவ புருஷனை விட அதிகமாவே சம்பாதிச்சாலும் இந்த உலகம் கல்யாணம், குழந்தையை காரணம் காட்டி அவளை வேலையை விடச் சொல்லுதே, ஏன்?” என்று மூச்சுவிடாமல் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
அவளை இருவரும் விழியகல பார்க்க “நான் எனக்காக மட்டும் வாழுவேன், என்னோட சந்தோசம் தான் எனக்கு பெருசுனு நெனைக்கிறது சுயநலம். ஆனா மத்தவங்களுக்காக ஒரு பொண்ணு தன்னோட எத்தனை ஆசைகள், கனவுகளை துறந்து ஒரு குட்டி வட்டத்துக்குள்ள தன்னை அடைச்சுக்க வேண்டியிருக்கு? இதுக்கு சுயபுறக்கணிப்புனு பேரு. சுயநலம் எந்த அளவுக்கு மோசமானதோ அதே மாதிரி தான் சுயபுறக்கணிப்பும் ரொம்ப மோசமானது” என்று சொல்லிவிட்டு காபியை காலி செய்தாள்.
சுலைகா அவளிடமிருந்து கப்பை வாங்கியவள் “அப்போ நாளைக்கு உன்னை கட்டிக்க போறவன் இந்த வேலையை விட்டுட சொன்னா…..” என்று இழுத்தபடி அவளை பார்க்க ஸ்ராவணி சாதாரணமாக “அவனை வேணும்னா டிவோர்ஸ் பண்ணுவேனே தவிர வேலையை விடுற ஐடியா இந்த ஜென்மத்துல எனக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு மேனகாவுக்கு ஹைஃபை கொடுக்க சுலைகா ஒரு பெருமூச்சுடன் சென்று கப்பை சுத்தம் செய்யும் இடத்தில் போடச் சென்றாள்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction