“மிருணா மதினிக்கும் அண்ணாவுக்கும் இடையில ஏதோ ஒன்னு சரியில்ல. அம்மா கிட்ட சொன்னா, உனக்கென்ன தெரியும்? இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல போக போக சரியாகிடும்னு சொல்லுறாங்க. இப்பிடி அவசரகதில ஒரு கல்யாணத்தை நடத்திருக்க வேண்டாமோனு எனக்குத் தோணுது. எல்லாம் இந்த ஆச்சியால வந்தது. இன்னும் எத்தனை நாளுக்குப் பெரியவங்களோட அவசரத்துக்காகச் சின்னவங்க கல்யாணம் பண்ணிக்கணும்? ப்ச்! சொன்னா பெரியவங்களை எதிர்த்துப் பேசுறோம்னு சொல்லுவாங்க”
-ஆதிரா
வராண்டாவில் அமர்ந்து தனது மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவினாஷ். அவனது மொபைலின் வால்பேப்பராகச் சிரித்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.
கர்ணன் – மிருணாளியின் திருமணம் முடிந்து ஒரு வாரமாகிவிட்டது. அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இன்று வரை தவிர்க்கிறாள். கர்ணனையும் மிருணாளினியையும் சென்னையில் இருக்கும் வீட்டில் பால் காய்ச்சி குடியேற்றுவதற்காக அவளது பெற்றோர் மற்றும் தங்கவேலு தம்பதியுடன் சென்னைக்குச் சென்றும்விட்டாள்.
இப்போதுவரை அவனது மொபைல் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட அழைப்புகளாகிப் போயின. ஆதங்கமும், கோபமும் ஒருசேர எழுந்தது அவனிடம்.

கொஞ்சம் அமைதியாய் அவளை அணுகியிருக்கலாம். தமக்கையைக் குற்றம் சொல்லிவிட்டாளே என்று கோபத்தில் சிதறடித்த வார்த்தைகளே அவனுக்கு வில்லனாகிப்போயின.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எந்த ஆண்மகன் தனக்கும் தனது வாழ்க்கைத்துணைக்கும் இடையே இன்னொரு நபரை வைத்து பிரச்சனை செய்கிறானோ அவன் தனது வாழ்க்கைத்துணையின் நம்பிக்கையை இழந்துவிடுவான். இது பெண்களுக்கும் பொருந்தும்.
இருவருக்கும் இடையே வரக்கூடிய சச்சரவுகளும், சண்டைகளும் அவர்களை மையப்படுத்தி வந்தால் புரிதலுக்கு ஒரு வழியாய் அமையும். அடுத்த நபரைக் காரணம் காட்டி சண்டையிடுகையில் புரிதலும் வராது. உறவில் இருக்கும் பரஸ்பர மரியாதையும் சிதையும்.
அந்தோ பரிதாபம்! இந்த யோசனை எல்லாம் பெரும்பாலும் இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருப்பதேயில்லை.
‘நாம்’ என்பதில் தாங்கள் இருவரும் மட்டுமே அடக்கம், இதர லொட்டு லொசுக்கு எல்லாம் அந்த வட்டத்தின் வெளியே என்பதை அவர்கள் அறியும் முன்னர் அவர்களுக்கு இடையே அழகான லட்சுமண ரேகை விழுந்து விடும். அதன் பின்னே எங்கிருந்து ‘நாம்’ என்பது சாத்தியப்படும்?
சுஜாதாவை முன்னிறுத்தி பேசியதில் அவினாஷ் அந்த லட்சுமண ரேகையைப் போடுவதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட, ஆதிரா போட்டு முடித்தேவிட்டாள்.
‘திருமணம் தானே! அது நடக்கட்டும்! ஆனால் நீ எப்போதும் இந்த ரேகைக்கு வெளியேதான்’ என்ற மனநிலை அவளுக்குள் நாளுக்கு நாள் ஸ்திரப்பட்டுக்கொண்டே செல்வதை அவினாஷ் அறிந்தான் என்றால் கட்டாயம் கலங்கிப்போவான்.
மகன் சோர்வாய் மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தைக் கண்டுகொண்டார் அலமேலு.
“என்னாச்சு அவினாஷ்? உன் ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” என மென்மையாய் விசாரித்தார்.
இல்லையெனத் தலையாட்டியவன் “ஆதி என் கூட சரியா பேசவேல்லமா. அக்காவ காரணம் காட்டி நான் திட்டுன கோவம் இன்னும் அவ மனசை விட்டுப் போகல. அக்கா ஒரு பக்கம், ஆதி ஒரு பக்கம்னு நின்னா நான் யாருக்குச் சப்போர்ட் பண்ணுவேன்?” என்றான் சோகமாய்.
அலமேலுவுக்குமே அந்த யோசனைதான். ஆனால் எந்த இந்தியக் குடும்பம் மகள் செய்த அநியாயங்களைத் தட்டிக் கேட்டு மருமகள் பக்கம் நின்றிருக்கிறது? அவர்களின் இயலாமைக்குப் பலிகடா ஆவதற்காக வடிவமைக்கப்பட்டவர்கள்தானே மருமகள்கள்!
இந்த இடத்திலும் இரத்தப்பாசம் வென்றது. அலமேலு சுஜாதாவின் பேச்சைப் பெரிதுபடுத்தாமல் ஆதிரா தங்களை எடுத்தெறிந்து பேசியதாகவே மகனின் மனதில் பதியவைக்க முயன்றார்.
“சுஜாதா குணமே இப்பிடித்தான்னு உனக்குத் தெரியாதா அவினாஷ்? அவ ஏதோ விளையாட்டா பேசுனதை சம்பந்தி திட்டி விட்டுட்டார். அதோட விடாம ஆதி ஏன் என் கிட்ட வந்து எடுத்தெறிஞ்சு பேசணும்? இப்ப பாரு, நீ போன் பண்ணுனாலும் பதில் இல்ல. சுஜாதா எப்பவும் உனக்குக் கெட்டது நினைக்குறவ இல்லடா”
“அக்கா கெட்டவனு ஆதியும் சொல்லலைமா”
அலமேலுவின் முகம் சுருங்கியது.
‘என்ன இவன் இப்போதே அவளுக்குப் பரிந்து பேசுகிறான்?’
அவன் காணும் முன்னர் முகத்தைச் சீராக்கிக்கொண்டவர் “இரு! நான் சம்பந்தியம்மா கிட்ட பேசி பாக்குறேன்” என்றார்.
“இதெல்லாம் ஏன் அவங்க கிட்ட சொல்லணும்? ஆதிக்குக் கோவம் தணிஞ்சு அவளே என் கிட்ட பேசட்டும். விட்டுடுங்க”
சலிப்போடு சொல்லிவிட்டு அவனது அறைக்குப் போய்விட்டான். அன்று மாலை சென்னைக்கு ரயில் ஏறுவதற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டுமே.
அதே நேரம் கர்ணனும் மிருணாளினியும் தங்க போகிற ஃப்ளாட்டில் பால் காய்ச்சி முடித்திருந்தார்கள் இரு குடும்பத்தினரும்.
மிருணாளினியின் அன்னை உலகம்மை அவளுக்கு உதவியாக இருக்குமென இட்லிப்பொடி, பருப்புப்பொடி, சாம்பார் பொடி எல்லாம் அரைத்து எடுத்து வந்திருந்தார்.
ஊர் விட்டு ஊர் போகையில் எண்ணெய் கொண்டு போகக்கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் உலகம் ப்ராண்டின் எண்ணெய்களைக் கொண்டு வர இயலவில்லை.
மதிய சாப்பாட்டுக்குப் பெண்மணிகள் இருவருக்கும் சமைக்க உதவிக்கொண்டிருந்தாள் ஆதிரா.
வெளியே ஆர்டர் செய்துவிடுவோமென கர்ணன் சொன்னதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“சாம்பார், அவியல், தொவரன், பருப்பு போட்டு பாயாசம், இதைச் செய்ய எவ்ளோ நேரமாகும்?” என்று கேட்டு அவனது வாயை அடைத்துவிட்டார் எழிலரசி.
மிருணாளினி அவர்களுக்கு உதவட்டுமா என்று கேட்டபோது “நீங்க ரெஸ்ட் எடுங்க மதினி. இன்னைக்கும் நாளைக்கும் எங்க சமையல்” என்று சொல்லிவிட்டாள் ஆதிரா.
“எனக்குப் போரடிக்குது” உதட்டைப் பிதுக்கியவளிடம் “அப்ப ஒன்னு பண்ணுங்க! நீங்களும் அண்ணாவும் அந்தப் பாலை பக்கத்து வீட்டுக்காரங்களுக்குக் குடுத்துட்டு வாங்க.” என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டாள் அவளை.
அவியலுக்குத் தேங்காய் துருவிக்கொண்டிருந்த சமயத்தில் எழிலரசிக்குச் சிவகாமியிடமிருந்து மொபைல் அழைப்பு.
“என்ன மதினி மெட்ராஸ் எப்பிடி இருக்கு?”
“நல்லா இருக்கு மதினி. வெயில் தாங்க முடியல. நல்லவேளை அத்தைய ஸ்வேதா அவ கூட அழைச்சிட்டுப் போயிட்டா. அவங்களால இந்த வெயிலைச் சமாளிச்சிருக்க முடியாது” என்றார் எழிலரசி.
“நானும் அதான் நினைச்சேன். பால் காய்ச்சுன போட்டோ எல்லாம் வாட்சப்ல பாத்தேன். அதான் உங்க கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றவர் புவனேந்திரனுக்குப் பார்க்கவிருக்கும் சங்கரன்கோவில் பெண் வீட்டாரைப் பற்றி விசாரித்தார்.
“மகேஷ்வரன் அண்ணன் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி. அவர் யூனிவர்சிட்டில வேலை பாத்து ரிட்டயர்ட் ஆனவர். கருணாகரியும் பொறுமைசாலி. பிருந்தா பொண்ணு திருநெல்வேலிலதான் படிச்சுது. இப்ப அங்கயே ஏதோ ப்ரைவேட் பேங்க்ல வேலை பாக்குது. அம்மாவ மாதிரியே அமைதியானப் பொண்ணு”
சிவகாமிக்கு மனம் குளிர்ந்தது. கடவுள் மனது வைத்தால் இந்தச் சம்பந்தத்தைப் பேசிவிடலாமென அவர் சொல்ல எழிலரசியும் ஆமோதித்தார்.
“நான் சாந்தி கிட்ட பேசுனேன் மதினி. நம்ம புவனை மாதிரி மருமகன் கிடைக்குறது அவங்களுக்குக் கசக்கவா செய்யும்? நல்ல நாள் பார்த்து வீட்டுல போய் பேசி முடிங்க”
“இதுக்கு மேல லேட் பண்ணவும் முடியாதே மதினி. இந்தப் புவன் பையன் ஏதோ வேலை இருக்குனு மெட்ராஸ் வந்திருக்கான். அவன் ஊர் திரும்புனதும் பொண்ணு வீட்டுல பேசி ஒரு நல்ல நாள்ல பொண்ணைப் பாத்து பூ வச்சிடணும்”
“புவன் இங்க இருக்கானா? அட நல்லதா போச்சு. இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு அழைச்சிடுறேன். அப்பவே பொண்ணு வீட்டைப் பத்தி அவன் காதுல போடுறேன்” என்றார் எழிலரசி ஆர்வமாய்.
சிவகாமிக்கு மனம் குளிர்ந்துவிட்டது. இம்முறை கட்டாயம் புவனேந்திரன் தடை சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை அவர் மனதில் வேரூன்றியது.
எழிலரசி அவரிடம் பேசி முடித்ததும் புவனேந்திரனின் மொபைல் எண்ணுக்கு அழைத்துச் சாப்பிட வருமாறு சொல்லென ஆதிராவிடம் கட்டளையிட்டுவிட்டு தேங்காயை அரைக்கப் போய்விட்டார்.
ஆதிராவிடம் புவனேந்திரனின் மொபைல் எண் இருந்தது. திருமணவீட்டில் அவனிடம் பேசும்போது வாங்கியிருந்தாள்.
“எங்க ப்ராண்ட் எண்ணெய்யை உங்க ஹோட்டல்ல ட்ரை பண்ணி பாக்குறிங்களா?” என்று தொழிலுக்கானத் தூண்டில் போட்டபோது மொபைல் எண்ணையும் வாங்கிவிட்டாள் அந்தச் சாமர்த்தியசாலி.
அன்னை சொன்னதைத் தட்டாமல் புவனேந்திரனின் எண்ணுக்கு அழைத்தாள். தனது மொபைல் எண்ணை அவன் வைத்திருப்பானா என்ற ஐயம்.
ஆனால் அழைப்பு உடனடியாக ஏற்கப்பட்டு “சொல்லு ஆதி” எனக் கம்பீரமாய்ப் புவனேந்திரனின் குரல் காதில் விழுந்ததும் உற்சாகமானாள் அவள்.
“என் நம்பரைச் சேவ் பண்ணிருக்கிங்களா?” என ஆச்சரியம் கொட்டிக் கேட்டாள்.
“எண்ணெய்யை டிஸ்கவுண்டுல வாங்கணும்னா முதலாளியம்மா கிட்ட பேசணும்ல” என அவன் கேலி செய்ய
“டிஸ்கவுண்டா? அதெல்லாம் குடுத்தா என் கையைக் கடிச்சிடும்” என்றான் அவள் கவனமாய்.
புவனேந்திரன் மறுமுனையில் சிரிப்பது அவள் செவியில் விழுந்தது.
“சரிங்க முதலாளியம்மா! எதுக்குக் கால் பண்ணுனிங்கனு சொல்லுங்க”
“இன்னைக்குத்தான் வீடு பால் காய்ச்சுனோம். மதியம் சாப்பிட அம்மா உங்களை இங்க வரச் சொன்னாங்க”
“என்ன சமையல்?”
“எப்பவும் போலதான். சாதம், கதம்ப சாம்பார், அவியல், முட்டைக்கோஸ் பட்டாணி தொவரன், பருப்பு பாயாசம் வித் அப்பளம்”
“ரொம்ப ஹெவியா இருக்கே?”
“ஃபிட்னெஸ் பத்தி யோசிக்குறிங்களோ?”
கேட்டவளின் மனக்கண்ணில் அவனது கட்டுமஸ்தான தோற்றம் வந்து போனது.
“ம்ம்! இட்ஸ் ஓ.கே. ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் பிரச்சனை ஆகிடாது” எனப் புவனேந்திரன் சொல்லவும் அவனது வாட்சப்புக்கு ஃப்ளாட் லொகேசனைப் பகிர்ந்தாள் ஆதிரா.
“நீங்க வந்ததும் எனக்குக் கால் பண்ணுங்க. நான் கீழ வந்துடுறேன்”
அவர்கள் பேசி முடித்து ஒன்றரை மணி நேரத்தில் சமையல் முடிந்ததும் புவனேந்திரனிடமிருந்து அழைப்பு!
“நான் காரைப் பார்க் பண்ணிட்டேன்”
“இதோ வந்துடுறேன்”
லிப்டில் போய் தரைத்தளம் வந்தவள் புவனேந்திரன் கையசைக்கவும் அவனிடம் ஓடோடிப் போனாள்.
தன்னருகே வந்து மூச்சு வாங்க நின்றவளின் கூந்தல் முகத்தில் ஆங்காங்கே படிந்திருக்க, அனிச்சை செயலாய் அவற்றை விலக்கிக் காதோரம் ஒதுக்கிவிட்டான் புவனேந்திரன்.
காது மடலில் தொட்டுச் சென்ற அவனது பெருவிரலின் ஸ்பரிசத்தில் ஒரு நொடி உறைந்து போனாள் ஆதிரா.
புவனேந்திரன் இயல்பாய் புன்னகைத்தான்.
“போகலாமா?” என்று கேட்டான்.
தடுமாறியவள் “ஹான், போகலாமே” என்று சொன்னபடி அவனோடு லிஃப்டை நோக்கி நடந்தாள்.

லிஃப்டில் ஏறியதும் “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள் அவள்.
“சர்ப்ரைஸ்?”
“ம்ம்! உங்கம்மாவும் எங்கம்மாவும் பேசி வச்ச சர்ப்ரைஸ்”
“எதுவும் பொண்ணுவீட்டு விவகாரமா?” சலிப்பாய்க் கேட்டான் புவனேந்திரன்.
“என்ன இப்பிடி கேக்குறிங்க? இது உங்க கல்யாணம். நீங்க உற்சாகமா இருக்க வேண்டாமா?”
ஆதிரா கேட்கும்போதே கதவு திறந்தது. ஃப்ளாட்டை அடையும் காரிடாரில் இருவரும் நடந்தார்கள்.
“ப்ச்! இண்ட்ரெஸ்ட் இல்ல”
“அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. எனக்கு மட்டும் கல்யாண மண்டபத்துல வச்சு பாடம் நடத்துனிங்க. அத்தைக்கும் உங்களுக்குக் கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை இருக்காதா?”
புவனேந்திரனின் நடை நின்றது.
“உனக்கு என் கல்யாணம் எப்பிடி நின்னு போச்சுனு தெரியுமா?”
“தெரியுமே! ஷீ வாஸ் அன்லக்கி. உங்களை இழந்துட்டா. அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு கூட கேள்விப்பட்டேன்”
“இப்ப டிவோர்சும் ஆகிடுச்சு”
ஆதிரா புவனேந்திரனின் முகத்தை ஆராய்ச்சியாய்ப் பார்த்தாள்.
“சோ உங்களுக்கு அவ மேல இப்பவும்…” முடிக்காமல் இழுத்தவளை அவன் முறைத்தான்.
“நான் அந்தளவுக்கு ரோசம் இல்லாதவன் கிடையாது” என்றான் விறைப்பாக.
“அப்ப என்ன? அத்தை சொல்லுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. வாழ்க்கைல நமக்கு என்ன கிடைக்குதோ அதை மனசார ஏத்துக்கணும் புவன். மலர் அண்ட் மாறன் கபிளைப் பாருங்க. அவங்களோட இன்ஸ்டெண்ட் கல்யாணத்தை எவ்ளோ பக்குவமா ஹேண்டில் பண்ணி இன்னைக்கு அழகானக் குடும்பமா மாறியிருக்காங்க. செட் தெம் அஸ் அன் எக்சாம்பிள். கண்டிப்பா உங்களுக்குக் கல்யாணத்துல ஆர்வம் வரும்”
“பார்றா! இவ்ளோ பேசுவியா நீ?”
“ஏன் அட்வைஸ் பண்ணுற உரிமை உங்களுக்கு மட்டும்தான் இருக்குதா என்ன?”
“நான் அப்பிடி சொல்லவேல்லையே! என் அட்வைஸ் இங்க வேலை செஞ்சுதா?” ஆதிராவின் தலையைத் தொட்டுக் கேட்டான் புவனேந்திரன்.
“வேலை செய்யப் போய் தான் கல்யாணம் முடியுற வரைக்கும் அவினாஷ் கிட்ட போன்ல பேசவேண்டாம்னு முடிவு பண்ணிருக்கேன். பேசி பேசி சண்டையாகி உறவே முறியுறதுக்குப் பதிலா அமைதியா இருந்து உறவைக் காப்பாத்திக்கலாம்தானே?”
“எனக்கு அப்பிடி தோணல. இந்த இடத்துல ஒரு ஆம்பளையா அவன் என்ன ஃபீல் பண்ணுவான் தெரியுமா? நீ அவனை வேணும்னு அவாய்ட் பண்ணுறதா நினைப்பான்”
ஆண்களின் மனநிலையைப் படம்பிடித்துப் பேசினான் புவனேந்திரன்.
“அதை நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேசி புரிய வச்சிடுறேன் புவன். இப்ப நாங்க பேசிக்கிட்டா கண்டிப்பா சுஜாதா மதினி பத்தி பேச்சு வரும். அது எங்களுக்கு மறுபடி சண்டைய உண்டாக்கும். பெட்டர் நாங்க பேசிக்காம இருந்துடுறோம்”
“அதுக்குனு ஒரேயடியா அந்தப் பையனைப் படுத்தாதம்மா. உன் முடிவை பத்தி அவன் கிட்டவும் ஷேர் பண்ணு. அவன் புரிஞ்சிப்பான்”
ஆதிரா ஓரக்கண்ணால் புவனேந்திரனைப் பார்க்கவும் சிரித்தான் அவன்.
“அட்வைஸ் பண்ணி சாகடிக்குறேனா?”
“ம்ம்” பரிதாபமாய்த் தலையசைத்தாள் அவள்.
“அடிங்க, ஒரு பேச்சுக்கு இல்லங்க புவன்னு சொல்லுவனு பாத்தா ஆமானு தலையை உருட்டுறியா நீ”
விளையாட்டாய் அவன் மிரட்ட சிரித்தபடியே இருவரும் ஃப்ளாட்டிற்கே வந்துவிட்டார்கள். சோஃபாவில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த கர்ணன் எழுந்து வந்து புவனேந்திரனை வரவேற்றான்.
“கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்பிடி போகுது?” என புவனேந்திரன் விசாரிக்க
“சோதனையா போகுது” என்று சொல்லி மிருணாளினியின் எரிமலை பார்வையை வாங்கி கட்டிக்கொண்டான் கர்ணன்.
“ஹலோம்மா! எப்பிடி இருக்கிங்க?” என நலம் விசாரித்தான் புவனேந்திரன்.
“மிசஸ் கர்ணன் பட்டத்தோட மிசரபிளான வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிருக்கேன்ணா” எனச் சோகமாய்ச் சொல்லி கர்ணனின் காதில் புகை வரவைத்தாள்.
அவர்களின் பேச்சு புவனேந்திரனுக்கும் ஆதிராவுக்கும் கணவன் மனைவியின் விளையாட்டுப் பேச்சாகவே ஒலித்தது.
“வாப்பா புவன்!” எழிலரசி வந்துவிட்டார் ஹாலுக்கு. கூடவே உலகம்மையும்.
“நல்லா இருக்கிங்களா அத்தை? நீங்க எப்பிடி இருக்கிங்க சித்தி?”
குசலம் விசாரித்தவன் தங்கவேலுவும், வினாயகமும் எங்கே எனக் கேட்டான்.
“ஆதி அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். அங்க போயிருக்காங்க புவன். அவங்க வர்ற நேரம் தான்”
அவர் சொன்னபடியே சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்கள் தங்கவேலுவும், வினாயகமும்.
புவனேந்திரனைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி இருவருக்கும்.
மதிய விருந்தை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகையில் ஆதிரா அனைவரையும் தன்னை நோக்கி திரும்பச் சொன்னாள்.
“எல்லாரும் பாருங்க! இது செல்ஃபி டைம்”
அனைவரும் புன்னகைக்க, அந்த அழகானத் தருணத்தை செல்ஃபியாக்கியவள் காலதாமதமின்றி அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றவும் செய்தாள்.
‘Nothing beats a good, old-fashioned family feast’
அவள் பதிவேற்றிய அடுத்த நொடி விக்கிரமசிங்கபுரத்தில் உடைமைகளை அடுக்கிக்கொண்டிருந்த அவினாஷுக்கு நோட்டிபிகேசன் போனது.
பெண் பார்த்த மறுநாளே ஆதிராவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய தொடங்கியிருந்தான் அவன்.
அவள் பதிவேற்றியிருந்த புகைப்படத்தில் அவளருகே அமர்ந்திருந்த புவனேந்திரனைப் பார்த்ததும் திருமணவீட்டில் அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிய தருணங்கள் நினைவுக்கு வந்து போயின.

‘எனது மொபைல் அழைப்புகளை உதாசீனம் செய்தவள் குடும்பத்தோடு குதூகலமாக இருக்கிறாள்! அதுவும் அவன் அருகில் அமர்ந்திருக்கிறாள்!’
பொறாமைத்தீ மெதுவாய்ப் பற்றிக்கொண்டது அவினாஷின் உள்ளத்தில்! அந்தத் தீ அழிக்கப் போவது இரு குடும்பங்களும் பேசி முடித்தச் சம்பந்தத்தை என அறியுமளவுக்கு அவனுக்கு இப்போது புத்தியில்லையே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

