“இன்னைக்கு ரொம்ப வருசத்துக்கு அப்புறம் புவனைப் பாத்தேன். அடிக்கடி அவரை நான் சந்திச்சதில்ல. நான் படிச்சது எல்லாமே பெரியம்மா வீட்டுலங்கிறதால அக்கா அளவுக்கு நான் புவனுக்கும், மாறனுக்கும் க்ளோஸ் இல்ல. ஆனா டீனேஜ்ல பாத்த புவனை விட இந்தப் புவன் ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம். அந்த ஃபார்மல் ஷேர்ட், சினோஸ், ட்ரிம் பண்ணுன தாடில மனுசன் அட்டகாசமா இருக்காப்ல. இவரைப் போய் வேணாம்னு சொல்ல ஒருத்திக்கு எப்பிடி மனசு வந்துச்சு? பைத்தியம், அவ பைத்தியமேதான்! மலரோட அக்கா தானாம் அவ. எல்லாம் முடிஞ்ச அப்புறம் புவனைக் கல்யாணம் பண்ணிக்க அவ போராடுனாளாம். ஆனா மனுசன் திரும்பிக் கூட பாக்கலயாம். அவளுக்கு உதவி பண்ணுனதோட ஒதுங்கிட்டாராம். ப்பா! செமல்ல. இப்பிடி ஒரு ஆளைச் சொந்தமாக்கிக்க யாருக்குக் குடுத்து வச்சிருக்கோ?”
-ஆதிரா
திருமண மண்டபத்தில் நாதஸ்வரத்தின் இசை திருமணத்திற்கான துள்ளல் உணர்வை விதைத்துக்கொண்டிருக்க தனது தந்தையுடன் கதிர்காமனை ஏந்தியவாறு வந்து கொண்டிருந்தான் புவனேந்திரன்.

குழந்தைக்கு ஜலதோசத்தால் உண்டான இருமல் கொஞ்சம் சீராகியிருந்தது. மலர்விழியும் மகிழ்மாறனும் அவர்களிடமிருந்து சில அடிகள் இடைவெளியில் வந்து கொண்டிருந்தார்கள்.
வரவேற்கும் பெண்கள் நீட்டிய சந்தனத்தை மலர்விழி நெற்றியில் வைத்தபோது அது கொஞ்சம் சரிந்துவிட்டது. அதைத் தனது கைக்குட்டையால் சரி செய்வதற்காக, கதிர்காமனைத் தமையனிடம் கொடுத்திருந்தான் மகிழ்மாறன்.
நால்வரையும் குட்டிப்பையனையும் மணமேடையிலிருந்து பார்த்துவிட்ட ஸ்வேதாவும் ஆதிராவும் முகம் பூரிக்க அவர்களை நோக்கி வந்தார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வாங்க மாமா! நல்லா இருக்கிங்களா?” என ஆதிரா நலம் விசாரிக்க
“ரொம்ப நல்லா இருக்கேன்டா ஆதி” என்றார் நரசிம்மன்.
“ஏன் நீங்க அத்தை கூட வரல?” – இது ஸ்வேதாவின் கேள்வி.
“ஆதி கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்துடுறேன். போதுமா?” என்று அவளைச் சமாதானம் செய்தவர் தனது பேரனைப் புவனேந்திரனிடமிருந்து ஆதிரா வாங்குகையில் மைந்தனின் முகம் இளகுவதைக் கவனித்துவிட்டார்.
“நிச்சயதார்த்தத்துல மலர் கிட்ட இருந்து இவனை வாங்கி கொஞ்சிட்டிருந்தேன். இந்தக் குட்டி ராஸ்கல் அவங்கம்மா கிட்ட போகமாட்டேன்னு ஒரே அடம்” என ஆதிரா சொல்ல
“குழந்தைங்களுக்குத் தேவதைகளை அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியுமாம்” என்றான் புவனேந்திரன் அடக்கப்பட்ட சிரிப்போடு.

முதலில் திகைத்த ஆதிரா பின்னர் சத்தமாக நகைத்தபடி “நல்லா பேசுறிங்க” என்க
“நோ! நான் ஃபார்மாலிட்டிக்காகச் சொல்லலை ஆதிரா. யூ லுக் ஆசம்” என்றான் வெங்காய ரோஸ் வண்ண மென்பட்டில் மிளிர்ந்தவளை ரசனையுடன் பார்த்தபடி.
ஆதிரா அதற்கும் புன்னகைத்தாள். புவனேந்திரனின் மூளை அவனைச் சுத்தியலால் அடிக்காதக் குறை.
பின்னர் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டவன் எழிலரசியும் வினாயகமும் வரவும் புன்முறுவலோடு அவர்களிடம் பேசினான்.
“மிருணாளினி கூட மதினி இருக்காங்க” என்ற எழிலரசி மலர்விழியும் மகிழ்மாறனும் வந்துவிட அவர்களிடம் பேசுவதில் மும்முரமானார்.
வினாயகம் இளைய மகளிடம் “காபி கொண்டு வந்து குடு ஆதிம்மா” என்க அவளும் சரியென்று திரும்ப அந்நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தான் அவினாஷ்.
ஆதிராவைக் கண்டதும் அவனது விழிகளில் எக்ஸ்ட்ரா பிரகாசம். ஆனால் அவளது முகமோ அவனைக் கண்டதும் சுண்டிப்போனது. இந்த முகமாற்றத்தை அவளது முகத்திலிருந்து விழிகளை அகற்றாமலிருந்த புவனேந்திரன் கண்டுகொண்டான்.
‘என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு? வருங்காலக் கணவனைக் கண்டதும் வர வேண்டிய நாண முறுவலோ, பளிச் பார்வையோ ஏன் இவளிடம் இல்லை?’
அவனது மூளை ஆராயும்போதே கதிர்காமனை நரசிம்மனிடம் கொடுத்தாள் ஆதிரா.
“எல்லாருக்கும் காபி கொண்டு வர்றேன். மலர் என் கூட வர்றியா?” என்று கேட்டு மலர்விழியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.
வினாயகம் அவினாஷை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவினாஷும் அவர்களிடம் இன்முகத்துடன் பேசினான். அவனது சொந்தத் தொழில் கனவைப் பற்றி கூறினான்.
‘நல்லப்பையனாகத்தானே தெரிகிறான்’ என மனதுக்குள் பேசிக்கொண்டான் புவனேந்திரன்.
சிறிது நேரத்தில் அவனது குடும்பத்தாரும் அறிமுகப்படுத்திவைக்கப் பட்டார்கள். தமக்கை மட்டும் அலட்டல் பேர்வழியாக, பழமைவாதியாகத் தெரிந்தாள் புவனேந்திரனின் மனதுக்கு. மற்றபடி வைத்தியநாதனும் அலமேலுவும் நன்றாகவே பேசினார்கள்.
காபியோடு வந்த மலர்விழியும் ஆதிராவும் அனைவருக்கும் காபியைக் கொடுத்தார்கள். அவினாஷும் அவனது குடும்பத்துக்கும் மட்டும் மிஸ்சிங்.
“உங்க மருமகள் அவங்க பக்கத்து உறவுக்காரங்களை உபசரிக்குறதுல காட்டுற முனைப்பை நமக்குக் காட்டுறதில்ல. பாருங்களேன், அவங்களுக்கு அன்பா காபி கொண்டு வந்து குடுக்குறதை. பொண்ணு பாக்க வந்தப்ப ரஞ்சனி என்ன சொன்னா? ஆதிரா எங்க வீட்டு இளவரசி. அவளை இந்த வேலை செய்யவிடமாட்டோம்”
ரஞ்சனியைப் போல சுஜாதா பேசிக் காட்டியதை அங்கே யாரும் ஜோக்காக கருதவில்லை.
அவினாஷே அவளை முறைத்தான்.
ஆதிராவால் சும்மா விட முடியவில்லை.
“இளவரசியோ மகாராணியோ, தன்னோட மனசுக்குப் பிடிச்சவங்களுக்காக காபி ட்ரே என்ன, காவடியே தூக்கச் சொன்னாலும் சந்தோசமா தூக்குவாங்க. மத்தவங்க என் கிட்ட நடந்துக்குற விதத்தை வச்சு அவங்களை ட்ரீட் பண்ணுற பழக்கம் எனக்கு”
முந்தைய தினம் தங்கவேலுவிடம் சுஜாதா பேசியதற்கு பழி தீர்த்துக்கொண்டாள் ஆதிரா.
அவினாஷின் நிலை பரிதாபமாகிப்போனது. அவனது விழிகளில் தர்மச்சங்கடம். யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்ற குழப்பம். நல்லவேளையாக வைத்தியநாதன் ஏதோ பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டார்.
ஆதிரா கடுப்புடன் அங்கிருந்து நகர, அவளோடு மலர்விழியும் சென்றாள்.
“நீங்க டென்சனா இருக்கிங்களா அக்கா?” எனப் பொறுமையாக விசாரித்தாள்.
“நீயே பாத்தல்ல மலர்! காட்! இந்தப் பொம்பளை என் தலைய வெடிக்க வைக்குறா. எவ்ளோ தைரியம் இருந்தா எங்க ரஞ்சனிக்காவ கிண்டல் பண்ணுவா?”
ஆதிரா எரிமலையாய் வெடித்தாள். மலர்விழி அவளை அமைதியாக்கினாள்.
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு மலர். இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கணுமா வேண்டாமானு தினமும் ஒரு தடவையாச்சும் என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்டுடுது”
திருமணம் நிச்சயமானப் பெண்ணி மனக்குமுறல் இப்படியா இருக்கவேண்டும்? இந்நேரத்தில் அவள் கல்யாணக்கனவுகளில் மிதந்திருக்க வேண்டும். அப்படி நடக்காமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.

“எல்லா பொண்ணுங்களுக்கும் இப்பிடித்தான் இருக்குமா? உனக்கு இப்பிடித்தான் இருந்துச்சா?”
“எனக்கு இதெல்லாம் யோசிக்க டைம் கிடைக்கலையேக்கா. கல்யாணத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் நான் கல்யாணப்பொண்ணு ஆனேன். உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே?”
“அதனாலதான் உன் கிட்ட கேக்குறேன். எனக்குக் கல்யாணத்துக்கு இவ்ளோ டைம் இருக்கு. ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் எனக்குள்ள. உனக்கு எல்லாமே திடுதிடுப்புனு நடந்திருக்கும். நீ எப்பிடி மேனேஜ் பண்ணுன?” ஆச்சரியமாய்க் கேட்டாள் ஆதிரா.
“எனக்கும் முதல்ல ரொம்ப பயமா இருந்துச்சு. நான் மகிழ் மாமாவ காலேஜ்ல ஸ்ட்ரிக்டான கரெஸ்பாண்டெண்டா மட்டுமே சந்திச்சிருந்தேன். இந்த மனுசன் கல்லையும் கான்க்ரீட்டையும் சாப்பிடுவாரோனு மைண்ட் வாய்ஸ்ல திட்டவும் செஞ்சிருக்கேன். ஆனா அதுக்கு அப்புறம் நடந்த நாலஞ்சு சந்திப்புல அவர் ரொம்ப நல்ல மனுசன்னு புரிஞ்சுது. எங்கப்பா அம்மாவ, என்னை என் பெரியப்பா குடும்பம் அவ்ளோ மட்டமா நடத்துவாங்க ஆதிக்கா. எல்லா பணக்காரங்களும் இப்பிடித்தான்னு நினைச்சிட்டிருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்குனவங்க மகிழ் மாமாவும் அவங்க குடும்பமும்தான்.
கழுத்துல தாலியேறுனதும் அவ்ளோ பயம். ஆனா மகிழ் மாமா ரியாலிட்டி என்னனு எனக்குப் புரியவச்சார். தைரியமே இல்லாத மலர்விழிக்குச் சுயமரியாதையோட முக்கியத்துவத்தைப் புரியவச்சவர் அவர். அவரோட பேச்சு, உடல்மொழி ரொம்ப கறாரா இருக்கும். அப்பிடி அவர் இருக்கப்போய்தான் நானும் இந்தளவுக்கு மாறியிருக்குறேன் ஆதிக்கா. அவினாஷ் அண்ணாவும் கண்டிப்பா நல்ல மனுசனாதான் இருப்பார்”
ஆதிராவுக்கு முந்தைய இரவில் தன்னிடம் மொபைலில் பேசிய அவினாஷின் சிடுசிடுப்பு ஞாபகம் வந்தது.
தனது அன்னையிடம் தமக்கையைப் பற்றி மரியாதைக்குறைவாகப் பேசிவிட்டாளெனக் குதித்தான் அவன்.
“மாப்பிள்ளைவீட்டுக்காரங்கனா கொஞ்சம் அதிகமா பேசுறது வாடிக்கைதான் ஆதிரா. ஏன் உன் பேரண்ட்ஸ் அவங்க சம்பந்தி கிட்ட பேசுறதில்லையா? அதுக்குனு நீ என் அக்காவ பத்தி எங்கம்மா கிட்ட குறை சொல்லுவியா?”
“போதும் அவினாஷ். இதுக்கு மேல உங்க கிட்ட பேச எனக்கு விருப்பமில்ல”
அவனது கூப்பாடுகள் அனைத்தும் அவளது கம்பீரக்குரலின் கட்டளையின் முன்னே ஒன்றுமில்லாமல் போய்விட மனதுக்குள் குமைந்தபடி இரவை நெட்டித் தள்ளியிருந்தாள் ஆதிரா.
அவனிடம் பேசக் கூட விருப்பமில்லை அவளுக்கு. காலையில் அவளது புடவை தரிசனத்தில் மனதைப் பறிகொடுத்துப் பேச வந்தவனிடம் “அது எப்பிடி நைட் அவ்ளோ பேசிட்டு இப்ப சிரிச்சிக்கிட்டே வந்து நிக்குறிங்க? ஆம்பளையா இருக்குறதோட அட்வான்டேஜ்ல இது. கண்ட மேனிக்குத் திட்டிட்டு, அப்புறமா ‘நீ அழகா இருக்க’னு சொல்லிட்டா பொண்டாட்டி உச்சி குளிர்ந்து போய் நம்ம பேசுன அவமரியாதையான வார்த்தைகள் எல்லாத்தையும் மறந்துடுவானு எவ்ளோ அழகா கால்குலேட் பண்ணி காய் நகர்த்துறிங்க? செஞ்சது தப்புனு ஒரு நொடி கூட உங்க மனசுல எல்லாம் குற்றவுணர்ச்சி வராதுல்ல. போதும் அவினாஷ். உங்க சிரிப்புல, கண்ணுல தெரியுற மயக்கத்துல எல்லாம் போலித்தன்மைதான் தெரியுது எனக்கு” என்று வெடித்துத் தீர்த்து விரட்டியிருந்தாள்
அவனும் பாவம்தான்! தனது குடும்பத்துக்கும் வருங்கால மனைவிக்கும் இடையே சிக்கி முடிவெடுக்கத் தெரியாமல் ஒப்பேற்றும் சராசரி ஆண் அவன்.
‘இந்தப் புடவையில் நீ தேவதை போல இருக்கிறாய்’ என்று வசனம் பேசி ஆதிராவின் கோபத்தைத் தணிக்கலாமென அவன் போட்ட கணக்கு தப்பாகிப் போனது.
ஆதிராவின் யோசனையைக் கலைத்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் புவனேந்திரனுடையது.
“கதிர் உன்னைத் தேடுறான்மா” என அவன் சொல்லவும் ஆதிராவிடம் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டாள் மலர்விழி.
புவனேந்திரன் ஆதிராவின் முகத்திலிருந்து அவளது மனக்குமுறலைப் படித்துவிட்டான்.
“அந்த மனுசன் பாவம்! போய் பேசு” என்றான்.
“அவினாஷ்?”
“ஆமா! நீ ஒரு தடவை பாத்துச் சிரிக்க மாட்டியானு தவிக்குறான் ஆதிரா. நான் ஒரு காலத்துல அவன் இடத்துல இருந்திருக்கேன். ஒரு பார்வை, ஒரு சிரிப்பு நமக்காக வராதானு காத்திருந்து ஏமாந்திருக்கேன். இது தப்பு! போய் பேசு” என்றான்.
ஆதிரா சிரித்தாள். பின்னர் எரிச்சலுடன் “சீரியஸ்லி? நீங்களும் அவரும் ஒன்னு கிடையாது. நானும் உங்க எக்ஸ் ஃபியான்சியும் ஒன்னு கிடையாது. நிறைய வித்தியாசம் நமக்குள்ள இருக்கு புவன். அவர் என்ன செஞ்சார்னு…” என்று ஆரம்பிக்க
“அமைதி! ஏன் இவ்ளோ டென்சன்? ரியாலிட்டில குடும்பங்கள் இப்பிடித்தான் இருக்கும் ஆதிரா. எல்லா ஆம்பளையும் துணிச்சலா எல்லா நேரத்துலயும் இருந்துட முடியாது. சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி ஆதர்ச புருசன் இந்த உலகத்துல பிறக்கவேயில்ல. இனியும் பிறக்கமாட்டான். உன் நாத்தனார் கொஞ்சம் பிரச்சனைய விரும்புற ரகமா தெரியுறாங்க. எனக்குப் புரியுது. அதுக்கு அந்தப் பையன் என்ன செய்வான்? அவன் அப்பாவி. ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறான்” என்றான் புவனேந்திரன் சிறுபிள்ளைக்கு விளக்கும் விதமாய்!
மை பூசிய விழிகளில் கோபத்தையும் பூசிக்கொண்டு, கோபமாய் அவள் உறுத்துவிழித்த விதம் தனது இதயத்தை அசைப்பதைச் சிரமத்தோடு மறைத்துக்கொண்டான்.
அவனது விளக்கத்தைக் கேட்டதும் ஆதிராவின் கோபம் இன்னும் அதிகரிப்பதாய்! நாணத்தில் சிவக்க வேண்டிய முகம் கோபத்தில் சிவந்து போனது.
“ஓஹ்! அக்கா செஞ்ச தப்பைத் தட்டிக் கேக்க துப்பில்ல. என் கிட்ட சீறிக்கிட்டு வர்றான். இவனெல்லாம் என்ன ஆம்…”
“ஆதிரா”
புவனேந்திரனின் குரலில் கடுமையேறியதும் கப்சிப்பானாள் அவள். தங்களைச் சுற்றி யாரார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தவனின் முகத்தில் கடுமை. கோபத்தைக் காட்டவும் இடம், பொருள், ஏவல் வேண்டாமா?
“இது கல்யாண வீடு. நீ பேசுறது எப்ப யார் காதுல விழும்னு தெரியாது. வார்த்தைல கவனம் வச்சுக்க. இந்நேரம் உன் கோவத்தோட தீவிரம் அவனுக்குப் புரிஞ்சிருக்கும். மேற்கொண்டு அவனை ஏன் காயப்படுத்தணும்? மெச்சூர்டா யோசி. போய் அவன் கிட்ட பேசு”
“நீங்களும் ஆம்பளைதானே புவன்! உங்களால வேற எப்பிடி பேச முடியும்?”
“நான் உன் கிட்ட ஆம்பளைங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசல ஆதிரா. எடுத்தேன் கவிழ்த்தேன்னு நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நாளைக்கு உனக்கு எதிரா திரும்பும். அப்ப நீ எப்பிடி சமாளிப்ப?”
சொன்னவனின் குரலில் மெல்லிய கவலை. இந்தப் பெண்ணின் அதீத நிமிர்வும், வாய்த்துடுக்கும் இவளுக்கே பிரச்சனையாய் மாறிவிடுமோ என்ற பரிதவிப்பு.
“என்னால சமாளிக்க முடியும் புவன். சமாளிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இருக்குறதாலதான் என் மனசு என்ன நினைக்குதோ அதைப் பேசுறேன். என்னை அவினாஷ் பேசுன வார்த்தைகள் ரொம்ப தப்பு. அதுக்கு அவர் தவிச்சார்னா தவிக்கட்டும். ஐ டோண்ட் கேர்”
“உன் மனநிலை ரொம்ப க்ரூயலா இருக்கு ஆதிரா”
“தேவதையும் சில நேரம் பிசாசா மாறியாகணும் புவன்”
அவன் சற்று முன்னர் புகழ்ந்ததைக் கோடிட்டுக் காட்டி ஆதிரா பேசவும், சற்று முன்னிருந்த கோபமும் கடுப்பும் மாறி புவனேந்திரனிடம் சிரிப்பு குடிகொண்டது.
“எப்பிடியோ நல்லா இருந்தா சரி” என இரு கரத்தையும் தூக்கி அவளை ஆசிர்வதிப்பது போல அவன் சைகை காட்டவும், ஆதிரா ஆசிர்வாதம் வாங்குவது போல நடித்தாள், தலையைக் குனிந்தபடி.

இருவரும் சிறுவயதில் பார்த்துப் பழகியவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த உரையாடலோ, செயல்களோ தவறாகப் படவில்லை. ஆனால் அனைவரின் கண்களும் ஒரே மாதிரியான எண்ணவோட்டத்துடன் பார்ப்பதில்லையே!
சுஜாதாவின் பார்வையைப் பற்றி சொல்லவே வேண்டாம். சும்மாவே என்ன குறை சொல்லலாமெனத் திரிபவள், இக்காட்சியைக் கண்டுவிட்டால் சும்மாவா விடுவாள்?
தம்பியை அழைத்து காட்டினாள்.
“பாரு! உன் கிட்ட முகம் குடுத்துப் பேசல. அவங்க சொந்தக்காரன் கிட்ட சிரிக்குறா. இப்பவே அவங்க வீட்டாளுங்க, நம்ம வீட்டாளுங்கனு பிரிச்சுப் பாக்குறாடா”

அவினாஷின் முகத்தில் யோசனை கோடுகள்!
அனைவரும் அதிகம் யோசிக்கும் முன்னர் மாங்கல்யதாரணத்துக்கான நேரம் நெருங்கிவிட அதில் கவனமானார்கள்.
அட்சதை மழையில் நனைந்தபடி மிருணாளியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டிய கர்ணன் அவளைத் தனது சரிபாதியாக்கிக்கொண்டான்.
தங்கவேலுவின் முகத்தில் அத்துணை நிம்மதி! மகளைச் சரியான ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டோமென்ற நிம்மதி!
மருதநாயகிக்கு மனம் நிறைந்துவிட்டது. அவர் ஆசைப்பட்டபடியே பேரனின் திருமணத்தைக் கண் குளிர பார்த்துவிட்டார். இனி ஆதிராவின் திருமணத்தையும் பார்த்துவிட்டால் போதும்! அவர்களைத் தூக்கி வளர்த்த நெஞ்சுக்கு இதை விட வேறு மகிழ்ச்சி வேண்டுமா என்ன?
பாவம் அந்த மூதாட்டி! அவினாஷின் மனதில் சுஜாதா உண்டாக்கிய கலக்கத்தை அவர் அறியமாட்டாரே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

