“இந்தக் கிச்சன் பாலிடிக்ஸ் இருக்கு பாருங்க… இதுக்கு எல்லையே இல்லை. இதுல, ஒருத்தர் இன்னொருத்தரைவிட எந்த விதத்துல உசத்தின்னு நிரூபிக்கிறதுலதான் பொண்ணுங்க கவனம் இருக்கு. ஒருத்தரோட வெற்றியோ, கஷ்டமோ இன்னொருத்தருக்கு புறணி பேசுறதுக்கான கண்டெண்ட்தான். பெண்களுக்குள்ளே இருக்கிற இந்தப் போட்டி மனப்பான்மை, பொறாமைதான் ரொம்பவும் கொடுமையானது. வெளியில சமுதாயத்துல போராடுறதைவிட, இந்த மாதிரி சொந்தங்களுக்குள்ளேயே சண்டையிடுறதால, நம்மளோட சக்தி வீணாகுது. இந்தச் சின்னச் சின்ன ஈகோக்களுக்காகவும், பொறாமைத் தீக்காகவும் ஒருத்தரோட வாழ்க்கையை ஒருத்தர் கெடுக்க நினைக்கிறாங்க. நான் வெளியில ஒரு தைரியமான ஆளுமையா இருக்கலாம். ஆனா, இந்தக் குறுகிய மனசு உள்ளவங்க என்னைச் சுத்தி இருக்குறப்ப என்னால ஒரு குடும்பத்துல நிம்மதியா வாழமுடியுமா?”
-ஆதிரா
புவனேந்திரன் வீடு திரும்பியபோது அம்பாசமுத்திரத்தில் நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள் சிவகாமியும் நரசிம்மனும். மலர்விழியும் மகிழ்மாறனும் அவர்களோடு சென்றிருந்தார்கள்.
“நிச்சயம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாம்மா?” என்று அன்னையிடம் கேட்டான் அவன்.

“சிறப்பா முடிஞ்சுது புவன். குட்டிப்பையனுக்குத்தான் உடம்பு அலுப்பா இருக்கு போல. அழுதுட்டே இருக்கான்” என்றார் சிவகாமி.
மகிழ்மாறன் அந்நேரத்தில் வரவும் “என்னடா? கதிர் அழுகை நின்னுடுச்சா?” என்று கேட்டான் அவனிடம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஆமாண்ணா! மலர் ஹாட்வாட்டர்ல மேல் கழுவி விட்டா. இப்ப தான் தூங்குனான்”
புவனேந்திரனிடம் மென்பொருளுக்கான வேலை எப்படி நடக்கிறதென கேட்கவும் செய்தான். அவன்தான் இன்னும் மதுமதி பற்றிய விவரத்தை வீட்டில் சொல்லவில்லையே!
“டெவலப்பர்ஸ் வேலைய ஆரம்பிச்சிட்டாங்க மாறா. நம்ம எதிர்பார்ப்பு என்னனு ஒன் வீக் முன்னாடியே அவங்கள்ல ஒருத்தர் ஹோட்டலுக்கு வந்து கேட்டுட்டுப் போயிட்டாங்க” என்றதோடு முடித்துக்கொண்டான்.
இரவுணவின்போது மலர்விழியும் சிவகாமியும் பேசிக்கொண்டார்கள்.
“ஆதிக்கா ரொம்ப அழகுல்ல?”
“ஆமாடி பொண்ணே! ரொம்ப திறமைச்சாலியும் கூட. குடும்பத்தொழிலை ஒரு பொண்ணு எடுத்து நடத்துறது அவ்ளோ சுலபமில்ல. ஸ்வேதா வாயாடி. கர்ணன் உம்மணாமூஞ்சி. இந்த ஆதிரைக்கு வாயும் அதிகம், நிதானமும் அதிகம். அப்பிடி இருந்தா தான் அவ மாமியாக்காரி கிட்ட பிழைக்க முடியும். ஷப்பா! நாத்தனார்னு ஒருத்தி இருந்தாளே, அவ மூஞ்சில கடுகு அள்ளிப் போட்டா வெடிச்சிடும் போல”

“நானும் பாத்தேன் அத்தை. அவங்க என்ன சொல்லி குட்டைய குழப்பலாம்னு காத்திருந்த மாதிரி தான் நடந்துக்கிட்டாங்க. முழு நிச்சயதார்த்தத்துலயும் மாப்பிள்ளைங்களும் பொண்ணுங்களும் அவங்களைப் பெத்தவங்களும் அவ்ளோ சந்தோசமா இருந்தாங்க. இவங்க ஒருத்தரைத் தவிர”
ஆண்கள் மூவரும் அவர்கள் பேசிய கதைகளைக் கேட்டபடி சாப்பிட்டார்கள்.
“சரி! கல்யாணம் எப்ப?” புவனேந்திரன் இடையே கேட்டான். இப்போதே கேட்டுவைத்துக்கொண்டால் தனது வேலைகளை அதற்கேற்றாற்போல முடித்துவிடலாமே!
சிவகாமி பெருமூச்சு விட்டவர் “ஆதி பொண்ணு கல்யாணம் இன்னும் மூனு மாசம் தள்ளிப்போகுது புவன். கர்ணனுக்கு அடுத்த முகூர்த்தத்துல தேதி குறிச்சிட்டாங்க” என்றார்.
“கர்ணன் கல்யாணத்துக்கு ஏன் இவ்ளோ அவசரம்?”
“பெரியம்மாக்கு ரெண்டு கல்யாணமும் ஒரே மேடைல நடக்கணும்னுதான் ஆசை. ஆனா ஆதிரைக்கு மாப்பிள்ளை வீட்டு தரப்புல மூனு மாசம் தள்ளிப் போட்டுருக்காங்க. அந்த மாப்பிள்ளை பையன் ஐ.டி வேலைய விட்டுட்டுச் சொந்த ஊருலயே ஏதோ பிசினஸ் ஆரம்பிக்கப்போறானாம். அதுக்கான ஏற்பாட்டைச் செய்யுறப்ப கல்யாணம் வேண்டாம்னு அவன் அக்கா சொன்னாளாம். மக பேச்சை யாரையும் தட்ட மாட்டாங்களாம். அதனால மூனு மாசம் தள்ளிப் போகுது ஆதிரை கல்யாணம்”
புவனேந்திரன் சிரித்தான்.
“பாவம்! கர்ணன் மாட்டிக்கபோறான் போல. ஸ்வேதா இந்தத் தடவையாச்சும் பெங்களூர் போறதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வருவாளா மாறா?”
“வர்றேன்னு சொல்லிருக்கா. அவ உன் கல்யாணத்தை ஆவலோட எதிர்பாக்குறாளாம்”
புவனேந்திரன் சிரித்தான்.
“அப்ப அவளையே பொண்ணு பாக்க சொல்லுடா”

இந்த இடத்தில் மலர்விழி வாயைத் திறந்தாள்.
“நானும் அத்தையும் நிச்சயத்தார்த்தத்துல விசாரிச்சிச்சிருக்கோம் புவன் மாமா. இன்னைக்கு நைட் அத்தைக்கு வாட்சப்ல போட்டோ வரும். பிடிச்சிருந்தா சொல்லுங்க. சீக்கிரமா உங்களுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்”
“ஸ்வேதா ஆசைப்படுறானு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? ஏன் மலர் உனக்கே இது அநியாயமா தெரியல?”
புவனேந்திரன் பரிதாபமாகக் கேட்கவும் “நீங்க உங்களுக்காகப் பண்ணிக்கோங்கனு சொல்லுறேன். உங்களுக்குப் பிடிச்சா மட்டும்தான் கல்யாணம்” என்று உறுதியளித்தாள் அவள்.
புவனேந்திரன் யோசிப்பது போல இருக்கவும் மாமியாரும் மருமகளும் கண் ஜாடையில் பேசிக்கொண்டார்கள்.
அதைக் கவனித்துவிட்ட மகிழ்மாறன் தங்களது அறைக்குப் போனதும் மலர்விழியிடம் எந்தப் பெண் வீட்டாரிடம் பேசி வைத்திருக்கிறீர்கள் என விசாரித்தான். அவளும் சிவகாமி தரப்பு உறவுக்காரக் குடும்பங்களைக் குறிப்பிட்டாள்.
“சங்கரன்கோவில்ல இருக்குற பொண்ணு புவன் மாமாக்குப் பொருத்தமா இருக்கும்னு அத்தை நினைக்குறாங்க”
“புவன் அண்ணா கல்யாணத்துல நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல?”
“ஆமா! நம்ம கதிர் கூட விளையாட இன்னொரு பாப்பா இந்த வீட்டுக்கு வரவேண்டாமா?”
மேஜை மீது புத்தகத்தை எடுத்துவைத்தபடி வினவினாள் மலர்விழி.
“அஹான்!”

தலைசரித்து கண்ணாடியை அழுத்தி மகிழ்மாறன் கேட்ட விதத்தில் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.
தன்னைச் சமாளித்துக்கொண்டவள் “எக்சாமுக்குப் படிக்கணும் மகிழ் மாமா. டிகிரி முடிக்கிற வரைக்கும் இன்னொரு பாப்பாக்கு நோ” என்றாள் கவனத்துடன்.
மகிழ்மாறன் சத்தமாகச் சிரித்தவன் “நீ படி. நான் என் பையனைப் பாத்துக்குறேன்” என்று மகனருகே படுத்துக்கொண்டான்.
படிப்பில் ஆழ்ந்தாலும் சீக்கிரமாகப் புவனேந்திரனும் அவனது மனைவியோடு இந்த வீட்டில் வாழப்போகும் நாளுக்கான ஆவல் மலர்விழிக்குள் வந்துவிட்டது.
நாட்கள் அதன் போக்கில் நகர, கர்ணனின் திருமணமும் வந்துவிட்டது. அந்நேரத்தில் மகிழ்மாறனுக்குக் கல்லூரியில் முக்கியவேலை. கதிர்காமனுக்கும் ஜலதோசம். எனவே மகிழ்மாறனும் மலர்விழியும் திருமணத்தன்று காலையில் முகூர்த்தத்துக்கு வருவதாக ஸ்வேதாவிடம் கூறிவிட்டார்கள்.
ஆனால் எழிலரசி சிவகாமியை விடவில்லை. அவரது வற்புறுத்தலால் சிவகாமி முந்தைய தினமே அம்பாசமுத்திரத்துக்குக் கிளம்பினார். அவரைக் கொண்டு போய் விட புவனேந்திரனும் தயாராகி நின்றான்.
நரசிம்மனுக்குத் தொழில்ரீதியாக அரசியல் வட்டாரத்தில் ஒரு வேலை வந்துவிட அவரும் மகிழ்மாறன் – மலர்விழியோடு மறுநாள் காலையில் வருவதாகச் சொல்லிவிட்டார்.
சிவகாமி உடைமைகளோடு காரில் அமர புவனேந்திரன் காரை ஓட்டினான். அன்றைய தினம் ஹோட்டலில் பெரிதாக அவனுக்கு வேலை இல்லை என்பதால் அன்னையை அம்பாசமுத்திரத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருந்தான்.
அம்பாசமுத்திரத்தில் பிரம்மாண்டமான மண்டபத்தின் தரிப்பிடத்திற்கு சென்ற கார் நின்றது.
“கல்யாணம் நாளைக்குத்தானே? நீங்களும் காலையில அப்பா கூட வந்தா போதாதா?”
கார்க்கதவைத் திறந்துவிட்டபடி நூறாவது முறையாகச் சிவகாமியிடம் கேட்டான் புவனேந்திரன். ஏனோ தாங்கள் யாருமில்லாத இடத்தில் அவரை விட்டுச் செல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
“ஸ்வேதாவோட தம்பி கல்யாணம் ஆச்சே! அவ நேத்தே வரச் சொன்னா. இதுவே லேட்னு மூஞ்சிய தூக்குவா புவன். எழில் மதினி அவ்ளோ தூரம் சொன்ன அப்புறம் நான் இங்க வரலனா நல்லா இருக்காது”
சிரிப்போடு சொன்ன சிவகாமி, மகன் தனது உடைமைகள் அடங்கிய பேக்கை எடுத்துக்கொண்டு தன்னோடு வரவும் “நாளைக்கு முகூர்த்தத்துக்கு வந்துடு. சும்மா பழசையே யோசிச்சிட்டிருக்காத” என்று சொல்ல
“நானும் மாறனும் வர்றது கஷ்டம்னு தோணுதும்மா. கதிருக்குச் சரியாகலனா மலர் வர்றதும் சந்தேகம்தான். ஆனா அப்பா வருவார்” என்றான் அவன்.
“வர வர நீ முசுட்டுப்பையனா மாறிட்டு வர்ற புவன். எல்லாரும் என்னை மட்டும் கழட்டிவிடுறிங்கடா”
அன்னையும் மகனும் பேசியபடி மண்டபத்தினுள் வர ஸ்வேதா ஓடோடி வந்தாள்.
“வாங்கத்தை! வாங்க புவன்! ஏன் அத்தை உங்களை நான் எப்ப வரச் சொன்னேன்? இன்னும் லேட்டா வந்திருக்கக் கூடாது?” என்று உரிமையாய்க் கோபப்பட்டபடி அவரது உடைமைகள் அடங்கிய பேக்கைப் புவனேந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
“சரிம்மா! நான் கிளம்புறேன்” எனக் கிளம்ப எத்தனித்தான் புவனேந்திரன்.
திருமண மண்டபம், உறவுக்காரர்கள் கூட்டம் என்றாலே இப்போது அவனுக்கு ஒவ்வாமை! ஒருத்தி செய்த அனர்த்தத்தின் விளைவு அவனை இன்னும் ஆட்கொண்டு ஆட்டி வைக்கிறது.
“என்ன அதுக்குள்ள போகப் பாக்குறிங்க புவன்? வாங்க! கவின் உங்களைப் பாக்கணும்னு சொன்னார்”
“இல்ல ஸ்வேதா கொஞ்சம் வேலை…” என்று புவனேந்திரன் மறுக்கும்போதே அவனுக்குப் பின்னே ஒரு குரல் கேட்டது.
“வந்துட்டிங்களாத்தை? அம்மா உங்களுக்காக வெயிட்டிங்”
குரலால் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தான் புவனேந்திரன்.
மெரூன் வண்ணத்தில் மகேஸ்வரி காட்டன் சில்கில் சுடிதார் அணிந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். திருத்தமான அவளது முகத்தை எப்போதோ பார்த்த ஞாபகம்.
க்ளட்சில் பாதி அடங்கியிருந்த கூந்தலில் மீதி தோளை மறைத்திருந்தது. மல்லிகைச்சரம் அதை இன்னும் அழகாக்கியிருக்க புவனேந்திரனைப் பார்த்ததும் அவளது இதழ்களில் பளீர் புன்னகை மின்னியது.
“நீங்களா? எப்பிடி இருக்கிங்க?” என்று அவள் இயல்பாக விசாரிக்க, குழம்பி நின்றவன் புவனேந்திரன் மட்டுமே!
“யாருனு தெரியலையா? ஸ்வேதாவோட தங்கச்சி ஆதிரா” சிவகாமி சொல்லவும் சின்ன ஆச்சரியம்.
புவனேந்திரன் புருவம் சுருக்கியவன் “ஹலோ” என்றான்.

“இப்பவும் உங்களுக்கு என்னை ஞாபகம் வரலையா?” தலையைச் சரித்துக் கேட்டவளைச் சிறுவயதில் பார்த்த ஞாபகம் புவனேந்திரனின் மூளையில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்து கண் சிமிட்டியது.
“பாத்து வருசக்கணக்காதுல்ல” என்றவன் “அம்மா கல்யாணம், மறுவீடு எல்லாம் முடியுற வரைக்கும் இங்க இருப்பாங்க. நான் இப்ப போயாகணும்” என்றவனிடம்
“நாளைக்கு வருவிங்கல்ல?” என்று கேட்டாள் ஆதிரா.
“அப்பா வருவாங்க. நானும் மாறனும் வர்றது சிரமம்”
“அதெல்லாம் வரலாம். வரணும்னு நினைப்பு இருந்தா”
அழுத்தமாகச் சொல்லி புன்னகைத்தவள் “சரி நீங்க கிளம்புங்க! இதுக்கு மேல உங்களைச் சோதிக்க விரும்பல” என்றதும் புவனேந்திரனின் உதடுகளும் புன்னகையாய் வளைந்தன.
“வர்றேன்மா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் ஸ்வேதாவின் தம்பி கர்ணனின் திருமணத்துக்கு வந்தே ஆகவேண்டுமா? மனதின் ஒரு ஓரமாகத் தனது திருமணம் நின்ற சமயத்தின் நினைவுகள் கிளர்ந்தெழவும் வேண்டாமெனத் தலையை உலுக்கிக்கொண்டான்.
கார்க்கதவைத் திறந்து அமர்ந்தவன் மீண்டும் ஒரு முறை திருமண மண்டபத்தைப் பார்த்தான். ஓராண்டு கடந்தும் உடைந்த கண்ணாடியின் சில்லுகளாய் அவனை அறுக்கிற சில நினைவுகளைக் கடக்க முடிவதில்லை அத்துணை எளிதாக.
அவன் மறக்க வேண்டிய தருணங்களை நினைவுபடுத்தும் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள இவ்வளவு தவிப்பவன் எப்படி தனக்கான திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வான்? மிகப்பெரிய கேள்விக்குறி!
“எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். அதை நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கிட்டா பிரச்சனையே இல்ல. பழசை மட்டுமே யோசிக்குறது மனசைப் பாழடைய வைக்குறதுக்குச் சமம். அது நமக்கு நாமளே செஞ்சுக்குற அநியாயம். எல்லாத்தையும் மறந்துட்டுச் சுத்தியிருக்குற அற்புதமான மனுசங்களைப் பாரு. ஒரு நிமிசம் அவங்க எல்லாரும் எப்பிடி வாழ்க்கைய வாழுறாங்கனு யோசி. பழசை நினைச்சு ஒதுங்கி நிக்குறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு உனக்கே புரியும்”
கண்டிக்கும் குரலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ஆதிராவின் பேச்சு அவனது செவியில் விழுந்தது. எட்டிப் பார்த்தவன் அவள் மொபைலில் யாருக்கோ அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்.
வார்த்தையின் தெளிவும் அழுத்தமும் அவளது முகத்திலும் பிரதிபலித்தன. காரைக் கிளப்புவதை நிறுத்திவிட்டு அவளை ஊன்றி கவனிக்கத் தோன்றியது புவனேந்திரனுக்கு.

தன்னை ஒருவன் கூர்ந்து நோக்குவதை அறியாமல் காற்றிலாடிய சுடிதாரின் துப்பட்டாவைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடியபடியே மொபைலில் உரையாடிக்கொண்டிருந்தாள் ஆதிரா.
காற்றின் தயவால் கூந்தல் கற்றைகள் கன்னத்தை முத்தமிடுவதும், அவற்றை அவள் விலக்குவதும், ஏதோ ஒரு அழகியல் காட்சி போல தோன்றியது புவனேந்திரனுக்கு.
அவனது மனதின் ஒரு ஓரத்தில் ‘நாளை திருமணத்துக்கு வந்தால் தான் என்ன?’ என்ற கேள்வி உதயமானது அந்நொடியில்! கிட்டத்தட்ட பதினான்கு மாதங்களாகத் தன்னை வாட்டிய மாபெரும் ‘ட்ராமாவிலிருந்து’ வெளிவரும் எண்ணம் துளிர்த்தெழுந்தது புவனேந்திரனின் மனதில்!
‘இன்னொருவனின் மனைவியாகப் போகிற பெண்ணை ரசிக்கிற வேலையை இதோடு விட்டுவிடு புவன்’
நியாயவாதியான மனசாட்சி நினைவுறுத்தியது.
அப்போதுதான் ஆதிராவின் திருமணம் பற்றிய ஞாபகமே வந்தது புவனேந்திரனுக்கு. அவளது திருமணம் தள்ளிப்போகாவிட்டால் இந்நேரம் அவளும் ஒரு மணமகளாகத் தயாராகிக் கொண்டிருப்பாள் என்ற சிந்தனை!
அதே நேரம் தோழியிடம் மொபைலில் பேசிவிட்டுச் சிவகாமியைத் தேடிப் போனாள் ஆதிரா. அங்கே பெண்கள் எல்லாரும் வட்டமாக அமர்ந்து சொந்தக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் நடுநாயகமாக அமர்ந்திருந்த மருதநாயகியின் முகத்தில் மட்டும் சின்னதாய் ஒரு கவலை.
அவரைத் தனியே அழைத்துப் போய் என்னவென விசாரித்தாள் ஆதிரா.
“ஒன்னுமில்ல ஆதிரை” என ஒதுங்கப் போனவரை இழுத்துப் பிடித்து நிறுத்தியவள் “இப்ப என்ன பிரச்சனைனு நீ சொல்லலைனா உன் கூட ஜென்மத்துக்கும் நான் பேசமாட்டேன் ஆச்சி” என்றாள் பிடிவாதமாக.
மருதநாயகியும் சற்று முன்னர் நடந்ததைச் சொல்லிவிட்டார்.

“உன் நாத்தனார் சுஜாதா நம்ம தங்கவேலுவை மூஞ்சிலடிச்ச மாதிரி பேசிட்டா ஆதிரை”
ஆதிராவின் முகம் சுருங்கிப்போனது. வரவர சுஜாதாவின் அலட்டல் அதிகமாகி வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேயாகவேண்டும்.
“எதுக்கு?”
“உன் அம்மா அப்பா கிட்ட தங்கவேலு ஏற்பாடுல எதுவும் குறை இருக்குதானு கேக்க வந்தான். அப்ப… அப்ப சுஜாதா அந்தப் பக்கமா வந்தா. உங்கப்பா கிட்ட வேலை பாத்துக்கிட்டே தங்கவேலு அவனுக்குச் சம்பந்தி ஆகிட்டான்னு இளக்காரமா பேசுனா. அங்க யார் என்ன பேச முடியும்? என்னமோ மிருணாவ நாம இரக்கப்பட்டு நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்ற மாதிரியும், தங்கவேலுக்குக் காசு செலவு பண்ணி கல்யாணம் பண்ண வக்கில்லங்கிற மாதிரியும் பேசிட்டா. வினாயகம் அவளைக் கண்டிச்சு அனுப்பிவிட்டுட்டான். ஆனா தங்கவேலு பாவம் ஆதிரை. அவன் முகமே மாறிப்போயிடுச்சு”
மருதநாயகி சொல்லி முடித்ததும் ஆதிராவுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை.
“இரு ஆச்சி! நான் போய் என்னனு கேக்குறேன்” எனக் கொந்தளித்தவளை அமைதியாக்க மருதநாயகி எடுத்த முயற்சிகள் யாவும் வீணாயின.
ஆதிரா கோபத்தோடு வருங்கால மாமியாரிடம் போய் நின்றாள்.
“வா ஆதிம்மா!” என்று புன்னகைத்தவரிடம்
“தங்கவேலு மாமா கிட்ட சுஜாதா மதினி தேவையில்லாத வார்த்தைகள் நிறைய பேசிருக்காங்க அத்தை. இது நல்லா இல்ல. அவர் மேல அப்பா நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர் கிட்ட நான் கூட மரியாதைக்குறைவா பேசுனதில்ல. ஏன் தேவையில்லாத வேலைய எல்லாம் செய்யுறாங்க அவங்க? தங்கவேலு மாமா எங்க வீட்டுச் சம்பந்தி. அவர் இந்தக் கல்யாணத்துக்குப் பண்ணுன ஏற்பாட்டுல எனக்கும் எங்க குடும்பத்துக்கும் பரம திருப்தி. இதுல வேற யாரும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லதானே அத்தை?” என அழுத்தமாக வினவினாள்.
அந்தப் பெண்மணி என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தார்.

“அதில்ல ஆதிம்மா! அவ கொஞ்சம் உரிமை எடுத்துப் பழகுவா. அது அவளோட சுபாவம்”
“இருக்கலாம். ஆனா எங்க குடும்ப விவகாரத்துல அவங்க தலையிட வேண்டிய அவசியமில்லனு தோணுது அத்தை. சொல்லிப் புரியவைங்க அவங்களுக்கு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் வர்றேன்”
கடுப்பைத் தனக்குள் அடக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் ஆதிரா. மருமகளாகப் போகிறவளின் அழுத்தமான ரூபத்தைக் கண்டு அலமேலு வாயடைத்துப் போய் நின்றுவிட்டார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

