“பொதுவா பெண்கள் தங்களைச் சிண்ட்ரெல்லாவா நினைச்சு வளருவாங்க. இருபத்து மூனு வயசு ஆனதும் ஏதோ ஒரு ராஜகுமாரன் குதிரைல வருவான், நம்மளைக் கல்யாணம் பண்ணிப்பான், காதலைக் கொட்டுவான்னு பெண்களோட கற்பனைகள் அவ்ளோ அழகா, மனசுக்கு இதமா இருக்கும். ஆனா அது எல்லாமே கற்பனை! சிண்ட்ரெல்லாவோட கண்ணாடி ஷூவோட பாரம் ரொம்ப அதிகம் பொண்ணுங்களே! அந்த ராஜகுமாரன் மனம் குளிர சிண்ட்ரெல்லா நிறைய காம்ப்ரமைஸ் பண்ணணும். கல்யாணம் பண்ணிட்டு இன்னொரு வீட்டுக்குப் போறதுனா, வெறும் சுவர், கதவைத் தாண்டிப் போறது இல்ல. சின்ன வயசுல விளையாடுன மாடிப் படியை, சண்டை போட்ட அண்ணன் ரூமை, கிச்சன்ல அம்மா சமைச்ச மணத்தை, அப்பா உட்கார்ந்து பேப்பர் படிச்ச அந்த சேரை அத்தனையும் விட்டுட்டுப் போகணும். ஒரு ஆண் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்குறதை கண்ணீர்க்கதையா சித்தரிக்குற சமூகம் காலங்காலமா பொண்ணுங்க அவங்க குடும்பத்தைப் பிரிஞ்சு இன்னொரு வீட்டுக்குப் போறப்ப அழுதா அதை நாடகமாதானே பாக்குது”
-ஆதிரா
ஊழியர்கள் தேங்காய் கொப்பரையைக் கொள்கலன்களில் அள்ளி மில்லுக்குள் இருக்கும் இயந்திரங்களில் அரைக்க எடுத்துச் செல்வதை மேற்பார்வையிட்டபடி நின்று கொண்டிருந்தாள் ஆதிரா.

“ரெண்டு நாள்ல நிச்சயம். இப்ப நீ இந்த வேலைய எல்லாம் பாக்கணுமா?” என்று உரிமையாய்க் கேட்டபடி வந்தார் தங்கவேலு.
“உங்களுக்கும்தான் நிச்சயதார்த்த வேலை இருக்கும். நீங்க வரலையா மாமா?” என்று ஆதிரா கேட்க
“நான் நிச்சயதார்த்தம் நாளன்னிக்குக் கூட வேலை செய்வேன்மா. நீ கல்யாணப்பொண்ணு” என்றார் அவர் அக்கறையோடு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆதிராவின் முகம் கனிந்தது.
“மிருணாக்குக் கல்யாணத்துல சம்மதம்தானே?” என்று கேட்டாள்.
கொஞ்சம் தடுமாறிய தங்கவேலு பின்னர் முகம் விகசிக்க “அவ ரொம்ப சந்தோசமா சம்மதம் சொல்லிருக்கா ஆதிம்மா. ஏன் உனக்குத் திடீர்னு இப்பிடி கேக்க தோணுச்சு?” என்றார்.
“திடுதிடுப்புனு அப்பாவும் அம்மாவும் மிருணாவ அண்ணாக்குக் பொண்ணு கேட்டுட்டாங்க. அவளுக்கு வேலைக்குப் போறதுல ஆர்வம் இருக்குனு சொன்னிங்க. இப்ப திடீர்னு கல்யாணப்பேச்சு வந்தா அவ கொஞ்சம் ஷாக் ஆகலாம். அதனாலதான் கேட்டேன்”
“அவ கேம்பஸ் இண்டர்வீயூல செலக்ட் ஆன கம்பெனியும் மெட்ராஸ்ல தான் இருக்குதாம். கர்ணன் தம்பிய பத்தி எனக்குத் தெரியாதா? குழந்தையில இருந்து நான் பாத்து வளர்ந்த பையன் அவரு. மிருணாவுக்கும் அவர் ஒன்னும் புது மனுசன் இல்லையே”
“அதெல்லாம் சரிதான் மாமா. சும்மா பாத்து பேசி கடந்து போறது வேற. கணவன் மனைவியா ஒரே வீட்டுல, ஒரே அறைக்குள்ள வாழுறது வேற. இந்தக் காலத்துப் பொண்ணுங்க நாங்க யோசிக்குற விதம் அந்தக் காலத்து லேடீஸ் மாதிரி இருக்காது மாமா”
தங்கவேலு கொஞ்சம் யோசிப்பது போல தெரியவும் “எங்க வீட்டுல மிருணாளினிய நல்லபடியா பாத்துப்பாங்க. அதுல உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். ஆனா வாழப்போறவ அவதானே? அவளுக்கு முழு சம்மதம் இருந்தா மட்டும் நீங்க மேற்கொண்டு நிச்சயதார்த்த வேலைய பாருங்க மாமா” என்றாள் ஆதிரா.
“எனக்கு என் மகள் மேல நம்பிக்கை இருக்கு ஆதிம்மா”
“எந்த மகளும் அப்பாவோட நம்பிக்கைய உடைக்க நினைக்குறதில்ல. அதனாலதான் அப்பாக்கள் ரொம்ப கவனமா அவளுக்கான வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்கணும்.”
ஆதிரா முதிர்ச்சியாகப் பேசுவதைக் கேட்டதும் தங்கவேலுவின் மனம் துணுக்குற்றது. எதற்கும் மகளிடம் இன்னொரு முறை கேட்டுக்கொள்வோமென முடிவு செய்தார்.
ஆதிரா மில்லுக்குள் சென்றாள்.
எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஊழியர்கள் தலை மற்றும் கைகளில் உறைகளை அணிந்து கர்மசிரத்தையுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் தள்ளி ஏற்கெனவே பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெயைப் பெரிய பேரல்களில் நிரப்பி எண்ணெயில் இருக்கும் துகள்கள் படிவதற்காக வைத்திருந்தார்கள். கொஞ்சம் தள்ளி. மெல்லிய வடிகட்டிகளில் எண்ணெய்யை வடிக்கட்டி பாட்டிலில் அடைக்கும் வேலை, பாட்டிலுக்கு லேபிள் ஒட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது.
அனைத்தையும் கண்கள் பார்வையிட்டாலும் ஒரு வாரத்தில் சந்திரவிலாசத்தில் நடந்தேறிய சம்பவங்கள் அவளது மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
கர்ணனுக்குத் திருமணம் செய்வதென்ற முடிவை எடுத்ததும் பெண் தேடும் படலம் தீவிரமாக ஆரம்பித்தது. எழிலரசி தனது பங்குக்கு அனைவரிடமும் தகுந்த பெண் வீடு பற்றி தெரிந்தால் தகவல் அளிக்குமாறு கூறியிருந்தார். சிவகாமியும் அதில் அடக்கம்!
ஏற்பாட்டுத்திருமணம் என்றால் அதில் மணமக்களின் விருப்பத்தை விட ஜாதங்களின் பங்கும், சமூக அந்தஸ்தும்தான் பிரதானம். இதை யாராலும் மறுக்க முடியாது. பல நேரங்களில் இந்த இரண்டு காரணங்களால் பொருத்தமான மாப்பிள்ளையும் பெண்ணும் வாழ்க்கையில் இணையாமல் போன வரலாறும் உண்டு.
கர்ணனின் ஜாதகத்துக்குப் பொருத்தமான பெண் வீடு அமையாமல் போனது எழிலரசிக்குப் பெரும் மனக்குறை.
அந்நேரத்தில்தான் மிருணாளினியின் நினைவு வந்தது அவருக்கு. அவளும் பொறியியல் இறுதியாண்டு தேர்வை முடித்துவிட்டாள். உடனடியாக தங்கவேலுவிடம் அவளது ஜாதகத்தின் பிரதியொன்றை வாங்கி குடும்ப ஜோசியரிடம் பொருத்தம் பார்த்தார்.
இரு ஜாதகங்களும் பொருந்தியிருக்கவும் தங்கவேலுவிடம் மிருணாளினியைக் கர்ணனுக்கு மணமுடித்துத் தருவீர்களா என்று கேட்டு இனிய அதிர்ச்சியொன்றை அளித்தார் எழிலரசி.
எப்போதும் சம்பளம் வாங்கும் ஊழியராகச் சந்திரவிலாசத்துவாசிகள் தங்கவேலுவை நடத்தியதில்லை. இப்போது தனது மகளை அவர்கள் வீட்டுக்கு மருமகளாக்க விரும்பியது தெரிந்ததும் நெகிழ்ந்து போய் சம்மதித்துவிட்டார் அவர்.
அனைத்தும் சுமூகமாக நடந்தேறின. ஆனால் ஆதிராவுக்கு மனதுக்குள் சின்னதாக உறுத்தல். மிருணாளினியின் சம்மதத்தை வாங்கினார்களா இல்லையா என்ற ஐயம். முதலாளி வீட்டில் இருந்து தன் மகளைப் பெண் கேட்கிறார்கள் என்ற சந்தோசத்தில் சரிவர மிருணாளியிடம் பேசியிருக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் ஆதிராவுக்கு.
அதனால்தான் தங்கவேலுவிடம் சொல்லிவிட்டாள். கர்ணன் அரைமனதாகச் சம்மதிருப்பானோ என்ற ஐயமும் அவளுக்கு உண்டு. அவனிடம் கேட்டால் சலிப்போடு பதில் வந்தது.
“ப்ச்! எப்பிடியும் கல்யாணம்னு ஒன்னு ஆகப்போகுது. அது யாரை பண்ணுனா என்ன?” என்ற அலட்சியம் அவனுக்கு.
இது குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியான மனநிலை இல்லையே!
யோசனையில் ஆழ்ந்தவளுக்கு அன்று மாலையே தங்கவேலுவின் மகளிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ”
“நான் மிருணா பேசுறேன்”
“ஹான்… சொல்லு.. சொல்லுங்க மதினி”
தன்னை விட இளையவள் என்றாலும் அண்ணனின் மனைவி ஆகப்போகிறவளுக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும் என்ற எண்ணம்.
“அது… நீங்க அப்பா கிட்ட எனக்குக் கல்யாணத்துல சம்மதமானு கேட்டிங்களாம்”
“ஆமா! எல்லாம் திடீர்னு நடந்துடுச்சுல்ல”

“உண்மைதான்! ஆனா… எனக்குக் கல்யாணத்துல விருப்பம் தான்”
“இப்பவும் உங்க குரல்ல தயக்கம் தெரியுது”
“ரொம்ப தேங்க்ஸ்” மிருணாளினி நன்றி சொன்னவள் “என் விருப்பத்துக்கு நீங்க முக்கியத்துவம் குடுக்குறது எனக்குச் சந்தோசமா இருக்கு. உங்களை மாதிரிதானே உங்க குடும்பமும் இருப்பாங்க? எனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம்”
மிருணாளினியே சம்மதத்தைச் சொன்னதும் அத்துணை மகிழ்ச்சி ஆதிராவுக்கு.
பின்னர் என்ன? நடைபெறப்போகிற இரட்டை நிச்சயதார்த்தங்களுக்காக அவளும் தயாராக ஆரம்பித்தாள்.
அதே நேரத்தில் ஹோட்டலில் புவனேந்திரன் கொதித்துப் போயிருந்தான். சற்று முன்னர் அவனது மொபைலுக்கு வந்த அழைப்பு அவனைக் கொதிப்படைய வைத்திருந்தது. அழைப்பு வந்தது க்ளவுட் பீ டெக்னாலஜி என்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்திலிருந்து. அவர்கள் சொன்ன சாராம்சம் அப்படி!

லாண்ட்ரி பார்ட்னரை மாற்றியாயிற்று! நான்கு இளைஞர்கள் இணைந்து நடத்தி வருகிற பவர் லாண்ட்ரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானப் பிற்பாடுதான் தென்மாநிலங்களில் தங்களுக்கு இருக்கும் ஹோட்டல்கள் அனைத்திலும் அன்றாட நடவடிக்கைகளைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் Property Management System (PMS) மென்பொருள் அடிக்கடி தகராறு செய்கிறதென்று மாதயிறுதி கூட்டத்தில் கூறியிருந்தார்கள்.
“நாம இதுக்கு மட்டுமே வருசத்துக்கு ஒரு பெரிய அமவுண்ட் சப்ஸ்கிரிப்சனா பே பண்ணுறோம் சார். அவ்ளோ செலவு பண்ணியும் இந்த சாஃப்ட்வேர் சரியா செயல்பட மாட்டேங்குது சில நேரம். பீக் ஹவர்ஸ்ல சாஃப்ட்வேர் பிரச்சனை பண்ணுனா புக்கிங், செக் அவுட் எண்ட்ரி போடுறதுலாம் ரொம்ப சிரமமா இருக்கு. கஸ்டமர்களைக் காத்திருக்க வைக்குறது நமக்கு நல்லதில்ல”
“இப்ப என்ன பண்ணலாம்? எனி ஐடியா?”
அரவிந்தன் தயக்கத்தோடு சொன்ன யோசனைதான் சொந்தமாக ஒரு Property Management System மென்பொருளைத் தங்களது ஹோட்டல்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்குவது. இதற்கு முதலீடும், செலவும் ஆரம்பத்தில் அதிகம்தான். ஆனால் இப்போது பயன்படுத்தும் மென்பொருளுக்கு மாதாந்திரம் செலுத்தும் சப்ஸ்கிரிப்சனோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை பெரிதாகக் கையைக் கடிக்காது என்றான் அவன்.
ஹோட்டலின் அன்றாட அலுவல்களைப் பதிவு செய்ய பிரத்தியேகமான மென்பொருளை உருவாக்குவது என்பது புவனேந்திரன் மட்டும் எடுக்கக்கூடிய முடிவல்ல.
அன்றே மகிழ்மாறனிடமும் தந்தையிடமும் ஆலோசனை கேட்டான்.
“நாம சாப்ட்வேர் டெவலப்பர் வச்சு நமக்கான Property Management System சாப்ட்வேரை உருவாக்கிக்கிறது நீண்டகாலத்துக்கு நமக்கு ஒரு பெரிய தொகையை சேவ் பண்ணும்ணா. நாம யூஸ் பண்ணிட்டிருக்குற ஒபேரா PMS ரொம்ப காஸ்ட்லியானது. பத்து வருசத்துக்கு இதுக்கு நாம பே பண்ணுற சப்ஸ்கிரிப்சனை மொத்தமா சேர்த்துப் பார்த்தாலே எவ்ளோ பணம் விரயமா வெளிய போகுதுனு தெரிஞ்சிடும்” – மகிழ்மாறன்.
“சொந்தமா சாப்ட்வேர், ஆப் எல்லாம் டெவலப் பண்ணுனா இந்த சப்ஸ்கிரிப்சன் தொகை மிச்சமாகும். ஆனா சர்வர் மெயிண்டனஸ், சாப்ட்வேர் மெயிண்டனன்சுக்கு பணம் குடுக்கணுமே” – புவனேந்திரன்.
இந்த இடத்தில் நரசிம்மன் தலையிட்டார். ஹோட்டல் தொழிலில் அவருக்கு இருந்த அனுபவம் அந்த இடத்தில் பேசியது.
“இந்த மாதிரி சாப்ட்வேர் டெவலப் பண்ணி தர்ற சின்ன சின்ன ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிறைய இருக்கு புவன். அவங்க கூட நாம அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டா லைஃப் லாங் நமக்கான மெயிண்டன்ஸை அவங்க கிட்ட ஒப்படைச்சிடலாம். நம்ம லாபத்தைக் குறைக்காத அளவுக்கு அக்ரிமெண்ட் போட்டுடலாம். ஒரு சாப்ட்வேருக்கு நாம செலவளிக்கிற காசு நமக்கு முழு பலனையும் குடுக்கணும். இப்ப பயன்படுத்துற சாப்ட்வேர் சரியா ஒர்க் பண்ணாம இருக்குறது நம்ம பணம் விரயமாகுதோனு தோண வைக்குதே புவன்.”
இருவரும் சொன்னதை யோசித்து அவன் எடுத்த முடிவு, என்.எஸ்.என் குழும ஹோட்டல்கள் அனைத்துக்கும் பொதுவான பிரத்தியேக Property Management System மென்பொருள் ஒன்றை உருவாக்க மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் போடுவதுதான்.
அது குறித்து பிரபல தளங்களில் விளம்பரம் செய்ததும் ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். அவற்றில் அவனது கவனத்தைக் கவர்ந்தது தச்சநல்லூரில் இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தின் மின்னஞ்சல்.
எங்கோ சென்னையில், பெங்களூருவில் இருக்கும் நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைப்பதை விட அருகிலிருக்கும் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் தொடர்பு கொள்ளுவது சுலபமாக இருக்குமென்ற எண்ணம் புவனேந்திரனுக்கு.
அந்நிறுவனத்திலிருந்து வந்த மெயிலில் என்.எஸ்.என் ஹோட்டலுக்காக Property Management System மென்பொருளை உருவாக்கித் தர காத்திருப்பதாகவும், தங்களிடம் திறமை வாய்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் குழு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அவர்கள் மென்பொருள் வடிவமைப்பு, மாதாந்திர பரமாரிப்பு, சர்வர் பரமாரிப்புக்காக கோட் செய்திருந்த தொகை ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.
சந்தித்துப் பேசினால் என்ன எனத் தோன்றியதும் அதன் தலைமை புராஜெக்ட் மேலாளரை ஹோட்டலுக்கு வரவழைத்துப் பேசினான்.
சிறிய நிறுவனம் என்றாலும் நிறைய கார்பரேட் கிளையண்டுகளை வைத்திருந்தார்கள். நிறைய தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், பள்ளி கல்வி குழுமங்களுக்காக அவர்கள் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டார் அந்த மேலாளர்.
“உங்களோட Property Management System சாப்ட்வேருக்கான டிமாண்டைப் பாத்தோம். எங்களால அதை உருவாக்க முடியும். கூடவே இந்த சாப்ட்வேர்ல இருந்து டேட்டாவ அப்பிடியே உங்களோட அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேர் கூட இணைக்க முடியும். இதனால உங்களுக்குக் கணக்கு வழக்கு துல்லியமா இருக்கும்”
புவனேந்திரனுக்கு அவர் சொன்னது திருப்தியாக இருந்தது. கூடவே அவர்கள் உருவாக்கி இன்றளவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் சில மென்பொருட்களின் டெமோவைக் காட்டினார்.
அனைத்தும் அத்துணை நேர்த்தி! பின்னர் என்ன? ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று! அந்த மென்பொருளை உருவாக்கவிருக்கும் மென்பொருள் வடிவமைப்பாளர் குழு அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்தபோதுதான் ஒரு மொபைல் அழைபு வந்தது. அந்த மொபைல் அழைப்பு அவனைக் கடுப்பில் ஆழ்த்தியபோதே, அந்த மொபைல் அழைப்பில் குறிப்பிடப்பட்டவள் ஹோட்டலுக்கு வருகை தந்தாள்.
வந்தவள் மதுமதி. போன் அழைப்பை விட நேரில் அவளைப் பார்த்தபோது உண்டான கொந்தளிப்பு அதீதம் புவனேந்திரனுக்கு. ஆனால் அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.
“நான் க்ளவுட் பீ டெக்னாலஜில உங்க புராஜெக்டுக்காக வேலை பாத்துட்டிருக்கேன் புவன்” என அவள் அவனிடம் சொன்னதும் முகம் இறுக எழுந்தான் அவன்.
“இந்த புராஜெக்டை நான் கேன்சல் பண்ணுறேன்” என்றவனிடம்
“எதுக்கு அவசரப்படுறிங்க? நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் மறந்துடுங்க புவன். பாருங்க! நான் இப்ப உங்க முன்னாடி டிவோர்சி மதுமதியா நிக்குறேன். எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல. அதை நீங்க புரிஞ்சிக்கணும். இன்னைக்கு புராஜெக்ட் மேனேஜர் ஒரு வேலைய ஒப்படைச்சார். அதை உங்க கூட டிஸ்கஸ் பண்ண தான் வந்தேன். இந்த மாதிரி டிஸ்கசனுக்காக நான் அடிக்கடி இங்க வர வேண்டியது இருக்கும். ஒவ்வொரு தடவையும் நீங்க என்னை நினைச்சு தவிப்பிங்களா?” எனக் கேட்டாள் அவள்.
‘நிறுத்து’ என்பது போல கையை உயர்த்தினான் புவனேந்திரன்.
“உன்னை நினைச்சு நான் எப்பவும் தவிச்சதில்ல. அதெல்லாம் நீ கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிப்போனியே, அப்பவே முடிஞ்சு போச்சு. நான் உன் விசயத்துல அளவுக்கு மீறுன பெருந்தன்மைய காட்டிட்டேன். அதுக்கு நீயும் உன் அம்மாவும் என்ன பண்ணுனிங்க? உன் அம்மாவும் நீயும் எங்க மலரை என்னென்ன பேசுனிங்க? இன்னைக்கு வரைக்கும் நீ ஓடிப்போனதோட பலனை நான் சிலுவையா முதுகுல சுமந்துட்டிருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. டிவோர்சும் ஆகிடுச்சு. என்னால இப்ப வரைக்கும் எந்தப் பொண்ணையும் நம்ப முடியல. அதுக்குக் காரணம் நீ. ஒரு தடவை இல்ல, ரெண்டு தடவை நீ செஞ்ச கேவலமான வேலை. அதுதான் உன்னைப் பாத்ததும் நான் கொதிக்க காரணம். மத்தபடி ஐயோ இவளை இழந்துட்டோமேங்கிற தவிப்பு என்னைக்கும் எனக்குள்ள வராது” எனக் கம்பீரமாக அவன் சொல்லவும் மதுமதியின் முகத்திலும் சின்னதாக மாறுதல்!

அதைச் சமாளித்தவள் “அதேதான் எனக்கும் புவன். நான் ஒர்க் பண்ணிட்டிருக்குற புராஜெக்டோட க்ளையண்ட் நீங்க. அதைத் தாண்டி உங்க கிட்ட நான் எந்த அட்வான்டேஜும் எடுத்துக்க மாட்டேன். வேலைய தவிர வேற எதை பத்தியும் உங்க கிட்ட பேசவும் மாட்டேன். ஐ ப்ராமிஸ் புவன்” என்றாள் தெளிவாக.
புவனேந்திரனுக்கும் தனது ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு அதன் பிற்பாடு அவளுக்குப் பதிலளிக்க முடிந்தது. அந்த மென்பொருளில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும், எவ்வளவு யூசர் ஃப்ரென்ட்லியாக அது அமைய வேண்டுமென அவன் சொன்ன யாவும் குறிப்புகளாக அவள் கொண்டு வந்திருந்த டேபில் பதிவாகின.
பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியேறினாள் மதுமதி. இந்த விவகாரம் தந்தையின் காதுக்குப் போனால் நிறுவனத்தை மாற்ற சொல்லுவார் என்ற யோசனை புவனேந்திரனுக்கு.
கூடவே மகிழ்மாறன் வெடித்துத் தீர்ப்பான். மலர்விழி வருத்தப்படுவாள். ஆனால் இதற்கெல்லாம் மதுமதி தகுதியானவள்தானா? தங்களது உணர்வு கொந்தளிப்பை விடுத்து அவளை யாரோ ஒருத்தியாக நடத்தப் பழகிக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே!
அந்நேரத்தில் பவிதரனின் முகம் ஞாபகம் வந்தது புவனேந்திரனுக்கு. தனது தங்கை பணிபுரியும் காரணத்தால் இந்த நிறுவனத்தைப் புவனேந்திரன் ஒதுக்கினான் எனத் தெரிந்தால் அவனும் வருந்தலாம்தானே! ஏற்கெனவே மதுமதியின் விவாகரத்தில் நொந்து போயிருந்தான் அவன்.
‘அவனுக்காக மதுமதியை ஒரு புல் பூண்டு போல, யாரோ ஒருத்தி போல நடத்த உன்னால் முடியாதா? அல்லது உனது கொந்தளிப்பைச் சரி செய்ய அந்நிறுவனத்திலிருந்து புராஜெக்டை பிடுங்கி இன்னும் உன் மனதில் கொந்தளிப்பை உருவாக்கும் வல்லமைப்படைத்தவள் மதுமதி என்ற எண்ணத்தை அவளுக்குள் விதைக்கப் போகிறாயா?’
மனசாட்சி கேட்ட கேள்விகள் புவனேந்திரனின் கர்வத்தை அல்லவா தொட்டுச் சென்றன! அவளால் தன்னைப் பற்றி கிளம்பிய பேச்சுகள்தானே அவனைக் கொந்தளிக்க வைக்கின்றன. அவளது நினைவு இல்லையே!
மேஜை மீதிருந்த தண்ணீரைக் குடித்தான். தனக்குள் இருக்கும் கோபத்தைத் தணித்து விட்டு முதிர்ச்சியான புவனேந்திரனாக யோசித்தான். முன்பு போல அவளை யாரோ ஒருத்தியாக நடத்துவது அவனுக்குச் சுலபம்தான். அதே நேரம் மலர்விழியை வைத்து அவள் காய் நகர்த்தியது போல இம்முறை மதுமதிக்கு ஒரு வாய்ப்பைத் தந்துவிடக்கூடாது என்றும் தீர்மானித்தான் புவனேந்திரன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

