“இன்னைக்கு அவினாஷ் கால் பண்ணுனப்ப நான் சப்ளையர்ஸ் கிட்ட பேசிட்டிருந்தேன். அந்தப் பிசில அவரோட கால்ஸ் எதையும் நான் கவனிக்கல. கல்யாணத்துக்கு முன்னாடி குடுக்க வேண்டிய ஆர்டர்சை ரெடி பண்ணுற அவசரம் எனக்கு. நைட் அவர் கால் பண்ணுனப்ப நான் அவரை அலட்சியமா நடத்துறதா ஒரே கம்ப்ளைண்ட். வாழ்க்கை முழுக்க இப்பிடியே போகுமானு அழாதக் குறை. பிசினஸ் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்ந்து நம்ம வாழ்க்கைய நாசமாகிடாதானு கேக்குறார். இதே ஸ்ட்ரெஸ் அவர் பிசினஸ் ஆரம்பிச்சாலும் வரும்தானே? அப்ப எங்க வாழ்க்கை நாசமாகிடாதானு கேட்டா ‘ஆம்பளைக்கு அழகு தொழில் நடத்துறது, பொம்பளைக்கு அழகு குடும்பத்தை நடத்துறது’னு பூமர் மாதிரி க்ளாஸ் வேற எடுக்குறார். அவங்கம்மா பேசுறப்ப “வேலை என்னம்மா வேலை? அதெல்லாம் ஆம்பளைங்க பாத்துப்பாங்க. நீ சௌக்கியமா வீட்டுக்குள்ள இருந்து ராணியாட்டம் வாழு”னு சொல்லுறாங்க. கடவுளே! இந்தக் குடும்பத்துல என்னால பொருந்தி வாழமுடியுமா? தலை சுத்துது எனக்கு”
-ஆதிரா
“அப்பிடியா? ரொம்ப சந்தோசம் மதினி. ஆதி என்ன சொல்லுறா? அவளுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?”

காரிலிருந்து இறங்கிய புவனேந்திரன் வீட்டுக்குள் செல்லும்போது அன்னையின் பேச்சு காதில் விழுந்ததும் நின்றான்.
“விக்கிரமசிங்கபுரமா? அங்க என் ஒன்னுவிட்ட தங்கச்சி இருக்காளே. அவ கிட்ட மாப்பிள்ளை குடும்பத்தைப் பத்தி விசாரிக்கச் சொல்லுறேன். கண்டிப்பா மதினி”
அன்னையைத் தேடிச் சென்றான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பேரனா? அவனுக்கென்ன? அவன் அம்மையையும் என்னையும் ஆட்டி வைக்குறான். ஆமா! அவ மொத்தமா சேர்த்து பரீட்சை எழுதிடுவேன்னு சொல்லிட்டா. யூனிவர்சிட்டி ரூல்படி பெனால்டி கட்டிக்கலாம்னு மாறனும் சொல்லிட்டான். அவளுக்குக் கதிரை விட்டு அங்க இங்க நகரக்கூடாது.”
“யார் கிட்ட பேசுறிங்கம்மா?” என்றபடி நின்ற புவனேந்திரனிடம்
“எழில் மதினி! பேசுறியா?” என்று மொபைலை நீட்டினார் சிவகாமி.
நமது அன்னையர்களின் பழக்கமிது. அவர்கள் உறவுக்காரர்களிடம் பேசும்போது நாம் இடையில் வந்துவிட்டோம் என்றால் உடனே போனை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். என்ன பேசுவதென்று தெரியாமல் நாம்தான் விழிப்போம். வேறு வழியின்றி பொதுவாக எதையோ உளறிவைப்போம்.
புவனேந்திரனின் நிலையும் அதுவே! மொபைலை வாங்கியவன் “நல்லா இருக்கிங்களா அத்தை?” என்று விசாரித்து வைத்தான்.
“நல்லா இருக்குறேன் புவன். நீ எப்பிடிப்பா இருக்குற? ஹோட்டல் எல்லாம் நல்லா போகுதா?” என எழிலரசியும் பேச அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தான் அவன்.
சிவகாமியும் மொபைலை வாங்கிக்கொண்டார்.
“எங்க? கடவுளுக்கு இன்னும் கண் திறக்குற எண்ணமில்ல போல. வர்ற சம்பந்தம் எல்லாம் எப்பிடியோ தட்டிப் போகுது மதினி. ம்ம்! நம்ம ஆதி கல்யாணத்துல சொந்தக்காரங்க எல்லாரையும் பாத்துப் பொண்ணு வீடு இருந்தா விசாரிக்கச் சொல்லணும்”
அவரது கவலை அவருக்கு என்ற ரீதியில் வீட்டுக்குள் வந்துவிட்டான் புவனேந்திரன்.
நரசிம்மன் கதிர்காமனைக் கொஞ்சியபடி அமர்ந்திருந்தவர் மூத்தவனைப் பார்த்ததும் “இங்க பாரு கண்ணா! பெரியப்பா வந்துட்டான்” என்று கொஞ்ச குழந்தை அவனிடம் தாவ ஆர்ப்பரித்தது.
“ஓஓ! பெரியப்பா அழுக்கா இருக்கேன். குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றான் புவனேந்திரன்.
தனது அறைக்குச் சென்று குளித்து இலகு உடை அணிந்து வந்தவன் கதிர்காமனைத் தூக்கிக்கொள்ள அவனது தாடையைத் தனது பல் இல்லாத ஈறுகளால் கடித்தான் குழந்தை.
“பெரியப்பா மேல கோவமா? கடிக்குறிங்களா என்னை?”
அது என்னவோ மெத்தென்று இருக்கும் குழந்தையின் ஸ்பரிசத்தில் அந்நாளைய அலுப்பு, சலிப்பு எல்லாம் கரைவதாய் உணர்ந்தான் அவன்.
அவனை அணைத்தபடியே தந்தை அருகே அமர்ந்தான் புவனேந்திரன்.

“தூத்துக்குடி ஹோட்டல் கன்ஸ்ட்ரெக்சனைப் போய் பாத்திங்களாப்பா?” என விசாரித்தான்.
“இன்னைக்கு ஈவ்னிங் போய் பாத்துட்டு வந்தேன் புவன். எல்லாம் நல்லா போகுது. இன்னும் ரெண்டு மாசத்துல வேலை முடிஞ்சிடும்னு இன்ஜினியர் சொன்னார்”
“அதுக்கு அப்புறம்தானே நமக்கு நிறைய வேலை இருக்கு? நாம வேலைய ஒப்படைச்சிருக்குற கம்பெனியே இண்டீரியர் பண்ணிக் குடுத்துடுறதா சொன்னாங்க. உங்க கிட்ட அதைச் சொல்ல மறந்துட்டேன்”
தந்தையும் மகனும் தொழில்ப்பேச்சைத் தொடரும்போது மொபைல் பேச்சை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார் சிவகாமி.
“ஸ்வேதாவோட தங்கச்சிக்கு விக்கிரமசிங்கபுரத்துல வரன் பேசி முடிச்சிருக்காங்களாம். இப்பதான் எழிலரசி மதினி பேசுனாங்க. நிச்சயதார்த்தத்துக்கு வரச் சொல்லிருக்காங்க” என்றார் அவர்.
“அப்பா ஹோட்டல் கன்ஸ்ட்ரக்சனை மேற்பார்வை பாக்கப் போயிடுவார். மாறனுக்குக் காலேஜ்ல நிறைய வேலை இருக்கு. நீங்களும் மலரும் போயிட்டு வாங்க.”
“குடும்பத்தோட போகலாம்னு…”
“குடும்பத்தோட போறதுக்கு எழிலத்தை என்ன கும்பாபிஷேகமா பண்ணுறாங்க? எங்கேஜ்மெண்ட்தானே? கல்யாணத்துக்கு நாங்க வருவோம்”
“யார் நீ? ஏன் புவன் என்னைச் சமாதானப்படுத்தணும்னு பொய் சொல்லுற?”
“அடடே! கண்டுபிடிச்சிட்டிங்களா?” எனப் புவனேந்திரன் கிண்டல் செய்ய
“போடா!” எனச் சலித்துக்கொண்ட சிவகாமி “நீ வாடா செல்லம். உன் பெரியப்பனுக்கு எப்பவும் ஆள் அம்பு ஆகாது” என்று பேரனை வாங்கிக்கொண்டு செல்ல நரசிம்மன் சிரித்தார்.
“சொந்தக்காரங்க வீட்டுக்குப் போக வர இருக்கணும் புவன்” என்றார் அவர்.
“உஃப்! அப்ப வேலை எல்லாம் அப்பிடியே கிடக்குமேப்பா? அதெல்லாம் அம்மா பாத்துப்பாங்க.” என்றான் அவன்.
“உன் அம்மா ஒருத்தி இருக்குறதாலதான் நம்ம குடும்பம் இன்னும் நம்ம சொந்தக்கார உறவுகள் கூட பிணைக்கப்பட்டிருக்கு. அதுக்காக அந்தச் சுமைய முழுக்க அவ மேல சுமத்திட்டு நான் நகர முடியாதுல்ல. தொழிலைக் கட்டிக் காப்பாத்துறது ஆம்பளைங்களுக்குப் போராட்டம்! குடும்ப உறவுகளைக் கட்டிக் காப்பாத்துறது வீட்டுப்பொம்பளைங்களுக்குப் போராட்டம். ரெண்டுமே சுலபமில்ல. கொஞ்சம் சறுக்குனாலும் ரெண்டு இடத்துலயும் நாம ஒதுக்கி வைக்கப்பட்டுடுவோம் புவன்.”
நரசிம்மன் தனது இத்தனை ஆண்டுகால அனுபவத்தை மகனிடம் பகிர்ந்துகொண்டார். புவனேந்திரனுக்கும் புரிந்தது போலதான் இருந்தது.
“அதனாலதான் அம்மா சொந்தக்காரங்க வீடுகளுக்குப் போறப்ப நீங்களும் போவிங்களா?”
“கண்டிப்பா! என் பொண்டாட்டிய நான் இல்லாத நேரத்துல யாரும் ஒரு சொல் தப்பா பேசிடக்கூடாதுல்ல. பணம் இருக்கோ, இல்லையோ புகுந்தவீட்டுச் சொந்தங்கள் எப்பவும் வீட்டுக்கு வந்த மருமகளை எதையோ சொல்லி சீண்டுறதை நிறுத்திக்கிறதில்ல. என் தங்கச்சி வீட்டுக்குப் போனப்ப மலரை அவ ஏதோ சொன்னானு மாறன் கோவப்பட்டு வந்தானே! இது எல்லா வீடுகள்லயும் நடக்கும் புவன். அந்த இடத்துல நாம துணையா இருந்தா நம்ம வாழ்க்கைத்துணை அவ்ளோ சந்தோசப்படுவாங்க. ஒரு ஆம்பளைக்குக் கௌரவம், அவன் கையைப் பிடிச்சவளை எந்த இடத்துலயும் தனியா விட்டுட்டு யாரோ எதுவோ சொல்லட்டும்ங்கிற அலட்சியமா இருக்காம, என்ன ஆனாலும் உனக்கு நான் துணையா இருப்பேன்ங்கிற நம்பிக்கைய குடுக்குறதுதான்”
புவனேந்திரன் அந்நேரத்தில் தந்தையின் முகத்தில் தெரிந்த கனிவைக் கண்டுகொண்டான்.
அவரது கையைப் பற்றியவன் “ரொம்ப சரிப்பா. அப்ப நீங்களும் மாறனும் அம்மாவையும் மலரையும் எழிலத்தை வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிட்டுப் போங்க. எனக்குப் பொண்டாட்டினு ஒருத்தி வந்த அப்புறம் இதெல்லாம் நான் பாத்துக்குறேன்” என்றான் புன்னகையோடு.
அதே நேரத்தில் சந்திரவிலாசத்தில் பதற்றமானச் சூழல் நிலவிக்கொண்டிருந்தது.
இரவுணவுக்குப் பிறகு அனைவரும் உறங்க சென்றபோது மருதநாயகி மூச்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்துவிட்டார்.
அதைக் கண்டதும் எழிலரசியும் வினாயகமும் துடித்துப் போய்விட்டார்கள்.
“கர்ணா! ஆச்சிய தூக்குடா” வினாயகம் பதற, வாரயிறுதியில் வீட்டுக்கு வந்திருந்த கர்ணன் மருதநாயகியைத் தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்தான்.
“ஆர்.வி. ஸ்கூல் பக்கத்துல கார்த்திக் நர்சிங் ஹோம் இருக்கு. அங்க போ கர்ணா.”
வினாயகம் சொல்லவும் கார் விரைந்தது மூவரோடும்.
எழிலரசியும் ஆதிராவும் கதிகலங்கி போய் நின்றார்கள். இப்படியெல்லாம் மருதநாயகிக்கு ஆனதேயில்லை. இந்த வயதிலும் திடகாத்திரமாக இருந்தவர் திடுமென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்ததை நேரில் பார்த்தவர்களுக்குப் பயமும் பதற்றமும் பீடித்தது.
“உன் கல்யாணத்தைப் பாத்துடணும்னு அவ்ளோ ஆசையா பேசுனாங்களே. எனக்குப் பயமா இருக்குடி ஆதி”
கண்ணீரே வந்துவிட்டது எழிலரசிக்கு.
“ம்மா! ஒன்னும் ஆகாது. அண்ணாவும் அப்பாவும் போயிருக்காங்கல்ல. ஆச்சிக்கு ப்ரஷரால வந்த மயக்கமா இருக்கும்”

“அப்பிடி இருந்துட்டா போதும் ஆதி. நான் அவங்களுக்குச் சரியான டைம்ல மாத்திரை குடுத்துப் பாத்துப்பேன். கர்ணன் கல்யாணத்தை இன்னும் பாக்கலனு அவங்களுக்கு ஏக்கம் இருந்துச்சு. உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவன் கல்யாணத்தை முடிச்சிடணும்னு நினைச்சாங்க. பயமா இருக்குடி”
அன்னையைச் சமாளித்தபடி நேரத்தை நெட்டித் தள்ளினாள் ஆதிரா.
மருத்துவமனைக்குப் போன கர்ணனின் மொபைலுக்கு இடையிடையே அழைத்துப் பார்த்தாள். ஏனோ அழைப்பு ஏற்கப்படவில்லை. அது அவளையும் பதற்றத்தில் தள்ளிவிட, கனமான மனதுடன் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள்.
பரபரப்பில் வினாயகம் மொபைலை வீட்டில் வைத்துவிட்டுப் போயிருந்தார்.
‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்று ரிங்டோன் கேட்டதும் ஆதிராவின் பதற்றம் இன்னும் கூடியது.
அன்னையைச் சமாளிக்கவேண்டும். பாட்டியின் உடல்நிலையைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தனது பதற்றத்தை வெளிக்காட்டினால் அன்னை இன்னும் பதறுவார். தனது உணர்வுகளை மறைத்துக்கொண்டு அன்னையின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதிரா.
சரியாக அரைமணி நேரம் கழித்து கர்ணனிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்னாச்சு அண்ணா? எதுவும் பிரச்சனை இல்லையே?”
“ப்ரஷர்தான் காரணம். கிழவி இன்னைக்கு மாத்திரை போடாம இருந்திருக்கு”
“அண்ணா” ஆதிராவின் குரல் கண்டிப்பாய் உயர்ந்தது.
“ப்ச்! வேற என்ன ஆதி? ஒரு நிமிசம் பதறிடுச்சு எனக்கு. என் கிட்ட வம்பிழுத்து என்னைத் திட்டிக்கிட்டே இருக்குற ஆளு மூச்சுப்பேச்சில்லாம கிடந்ததைப் பாத்ததும் பக்குனு இருந்துச்சு தெரியுமா?”
சொல்லும்போதே குரல் நடுங்கியது அவனுக்கு. அன்பையும் பரிதவிப்பையும் கோபமாக மட்டுமே காட்டத் தெரிந்த சராசரி ஆண் அவன்.
“அண்ணா! அதான் ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிட்டாரே”
“டாக்டர் சொல்லிட்டார். ஆனா கிழவி புலம்புது. அழுவுது ஆதி”
“என்னவாம் ஆச்சிக்கு?”
“இதோ இப்ப வீட்டுக்குக் கிளம்புறோம். வந்ததும் என்னனு நீயே கேளு”
ஆச்சிக்குப் பெரிதாக உடல்நிலையில் பிரச்சனை இல்லையெனத் தெரிந்ததும் ஆதிராவால் சீராக மூச்சு விட முடிந்தது.
பயத்தோடு இருந்த எழிலரசியிடம் நிலமையைக் கூறி ஆசுவாசப்படுத்தினாள்.
சிறிது நேரத்தில் மருதநாயகியும் வந்து சேர்ந்தார். முகம் சோர்ந்திருந்தது.
அவரைக் கண்டதும் “அத்தை” எனத் தழுதழுத்தது எழிலரசியின் குரல்.
“எழிலு”
மாமியார் மருமகள் இடையே இதுவரை கருத்து வேறுபாடு என எதுவும் எழுந்ததில்லை. ஒருவருக்கொருவர் எல்லா நேரத்திலும் துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர் மயங்கி விழுந்து மூர்ச்சையுற்றதும் பதறிவிட்டது எழிலரசிக்கு.
இப்போது அவர் சாதாரணமாக நடந்து வந்ததும் தான் உயிரே வந்தது.
கர்ணன் ஆதிராவிடம் கண் காட்டினான். அவள் சுதாரித்து “ஹான், ஆச்சி நீ ஏன் ஹாஸ்பிட்டல்ல அழுத?” என்று கேட்க மருதநாயகியின் கண்கள் மீண்டும் கலங்கின.
“உங்க ரெண்டு பேரு கல்யாணத்தையும் பாக்காம நான் போய் சேர்ந்துடுவேனோனு பயமா இருக்கு ஆதிரை”

“ஆச்சி! இது ப்ரஷரால வந்த மயக்கம். நீ அவ்ளோ சீக்கிரமா போய்ச் சேர்ந்துட மாட்ட. அப்புறம் என் பிள்ளைய, அண்ணாவோட பிள்ளைய எல்லாம் யார் வளக்குறது?”
அவரது கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆதிரா. ஆனாலும் மருதநாயகியின் கலக்கம் அகலவில்லை.
வினாயகத்தின் கையைப் பிடித்தவர் “ஐயா நான் திடமா இருக்கப்பவே என் பேரப்புள்ளைகளோட கல்யாணத்தைக் கண்ணால பாத்துடணும்னு ஏக்கமா இருக்கு. சீக்கிரமா நம்ம கர்ணனுக்குப் பொண்ணு பாருய்யா” என்று சொல்ல
“கிழவி…” என்று எதிர்ப்புகுரல் எழுந்தது கர்ணனிடமிருந்து.

“வாயை மூடுல. கல்யாணத்துல பாத்தானாம். காதலிச்சானாம்! அந்தப் புள்ளைக்குத்தான் இப்ப கல்யாணம் பண்ணுற எண்ணமில்லனு அவளைப் பெத்தவங்களே சொல்லிட்டாங்களே! இன்னுமா அவளையே மனசுல சுமந்துக்கிட்டு சுத்துவ? எனக்கு உன் கல்யாணததைப் பாக்காம போயிடுவேனோனு பயமா இருக்குயா” என்று அதட்டலாக ஆரம்பித்து அழுகையில் முடித்தார் மருதநாயகி.
கர்ணன் உடனே உடைந்துவிட்டான்.
“அழாத ஆச்சி!” என்றவன் அவரது கையைப் பிடித்தான்.
“என்னால ஈஸ்வரிய மறக்க முடியல ஆச்சி” என்றான் கம்மிய குரலில்.
“அவளுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லனு தெரிஞ்சும் ஏன்யா இப்பிடி அவளையே நினைச்சிட்டிருக்க? ஆச்சியோட பயம் உனக்குப் புரியலையா?”
மருதநாயகி அழவும் வினாயகத்துக்கும் எழிலரசிக்கும் பொறுக்கவில்லை.
“சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது அத்தை. நான் அவனுக்குப் பொண்ணு பாக்குறேன். நீங்க அழாதிங்க”
“இந்த வருசத்தை விட்டுட்டா இவனுக்கு முப்பத்து நாலுல தான் கல்யாணம்னு ஜோசியர் சொல்லிட்டாரே எழிலு. அத்தனை வருசம் நான் இருப்பேனோ இல்லையோ?”
“ஏன்மா இப்பிடியெல்லாம் பேசுறிங்க? நம்ம தங்கவேலு கிட்ட சொல்லி தெரிஞ்ச பொண்ணுவீடு இருந்தா தகவல் குடுக்கச் சொல்லிடுறேன். நல்ல பொண்ணு அமைஞ்சா ஒரே மேடையில ஆதிரா, கர்ணன் ரெண்டு பேரோட கல்யாணத்தையும் வச்சிடலாம். இப்ப திருப்தியா?”
அண்ணனும் தங்கையும் வினாயகத்தின் பேச்சில் அதிர்ந்தே போனார்கள் தந்தையின் பேச்சில்.
அவினாஷின் வீட்டில் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து தகவல் சொல்லியிருந்தார்கள். அதற்கான ஏற்பாட்டை ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் மருதநாயகியின் விருப்பம் வேறு இடையில் புகுந்துவிட்டது. இனி என்ன நடக்கும்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

