“எனக்குக் கல்யாணம் பண்ணுறதுல விருப்பமில்லனு சொல்லமாட்டேன். விருப்பத்தைத் தாண்டி எனக்குள்ள சின்னதா ஒரு பயம். அப்பா கிட்ட இருந்து மில்லை வாங்கி லாபகரமா நடத்துறதுக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன். முன்னாடி பெரிய டின்ல மொத்த விலைக்கு வித்துட்டிருந்த ஆயில்ஸ் எல்லாமே இப்ப உலகம் ப்ராண்ட்ல மார்கெட் பண்ணிட்டிருக்கோம். இந்த நேரத்துல எனக்குக் கல்யாணமாகி புருசன்னு ஒருத்தர் என் வாழ்க்கைக்குள்ள வந்த அப்புறம், ‘ஏன் நீ நேரம் காலம் பாக்காம பிசினஸ்ல மூழ்கியிருக்குற’னு கேட்டுட்டா அப்புறம் என்ன பண்ணுறதுனு பயம். எனக்குத் தேவை கணவர்ங்கிற பேருல மனசையும் உடலையும் பகிர்ந்துக்குற ஒரு ஆண் இல்ல. என்னோட பயம், என் பலவீனம், என் நிராசைய புரிஞ்சிக்கிற ஒரு பார்ட்னர். பிசினஸை அப்புறம் பாரு, முதல்ல குடும்பத்தைக் கவனினு என் சிறகை ஒடிக்கிற ஒருத்தர் என் வாழ்க்கைல வந்துடக்கூடாதுங்கிற பயம் வரவர அதீதமா ஆகியிருக்கு”
-ஆதிரா
சந்திரவிலாசம், அம்பாசமுத்திரம்…
“ஐயா களக்கோடி சாஸ்தாவே! என் பேத்திக்கு இந்த வரன் தகைஞ்சுதுனா கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ணையும் மாப்பிள்ளையையும் உன் கோவிலுக்குப் பொங்கல் வைக்க அழைச்சிட்டு வர்றேன்”

பூஜையறையில் பூர்ணா, புஷ்கலா தேவியருடன் இருந்த களக்கோடி சாஸ்தாவின் திருவுருவப்படத்தை வணங்கிய மருதநாயகி திருநீறை பூசிக்கொண்டு வெளியே வந்தார்.
“ஐயா வினாயகம், மாப்பிள்ளை வீட்டாளுங்க எப்ப வர்றாங்களாம்?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அன்னை கேட்டதும் பரபரப்புடன் இருந்த வினாயகம் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்றார்.
திருப்தியுடன் தலையாட்டிவிட்டு மாடிப்படிகளில் ஏறியவரிடம் “அத்தை காபி வேண்டாமா?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் எழிலரசி. வினாயகத்தின் மனைவி. அந்த வீட்டின் தலைவி.
“உன் மவ ஆதிரை தயாராகிட்டாளானு பாத்துட்டு வந்து குடிச்சிக்கிறேன்” என்றபடி மேல்தளத்திலிருக்கும் பேத்தியின் அறைக்குச் சென்றார் மருதநாயகி.
“டி ஆதி! மாப்பிள்ளை போட்டோவ பாத்தாலே அம்மா கோண்டா இருப்பான்னு தோணுது. எப்பிடி ஒத்துக்கிட்ட?” இது மருதநாயகியின் கணவர் பக்கத்து உறவில் இருக்கும் பேத்தி மீனாவின் கேள்வி.
“ஹூம்! எனக்கும் அப்பிடித்தான் தோணுது. இந்த அம்மா கோண்டுங்க கிட்ட சிக்குனோம்னா நம்ம வாழ்க்கை அதோகதிதான். சுதாரிச்சிக்க ஆதி” என்றாள் அந்த மீனாவின் தமக்கையும் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணமானவளுமான ரஞ்சனி.
“என்னடி என் பேத்தி கிட்ட மூட்டி குடுத்திட்டிருக்கிங்க?” என்று குரல் கொடுத்தபடி வந்த மருதநாயகி கண்ணாடியின் முன்னே அமர்ந்திருந்தவளைக் கண்டதும் விழிகளில் மலர்ச்சியைக் காட்டினார்.
அந்தப் பெண்ணும் எழுந்து நின்றாள். சராசரி உயரம், சராசரியான உருவம், முகத்தில் மட்டும் சௌந்தரியம் மின்னியது. கூடவே கொஞ்சம் கம்பீரமும். அரக்குவண்ணத்தில் நெற்றியில் ஒட்டியிருந்த கோபுர பொட்டும் அதன் கீழ் துளி சந்தனமும் அத்துணை அழகு.

அவள் ஆதிரா. மகிழ்மாறனின் தோழி ஸ்வேதாவின் உடன்பிறந்த தங்கை. அவளுக்கு மூத்தவனான கர்ணனுக்கு மலர்விழியின் தோழி ஈஸ்வரியை மணமுடிக்க விரும்பி அது கைகூடவில்லை என்றதும் மகளின் திருமணத்தில் மும்முரமானார் வினாயகம்.
விக்கிரமசிங்கபுரத்தில் இருக்கும் பெருந்தனக்காரர் வைத்தியநாதனின் மகனுக்கு ஆதிராவைப் பெண் கேட்டிருந்தார்கள். பையனும் கர்ணனைப் போல மென்பொருள் துறையில் கைநிறைய சம்பவாதிக்கிறான். மறுக்க காரணங்கள் பெரிதாக இல்லை என்றதால் கலந்து பேசி இரு குடும்பங்களுக்கும் தோதான நாளில் பெண் பார்க்கும் படலத்தை வைத்துக்கொள்வோமெனத் தீர்மானித்திருந்தார்கள்.
ஆதிராவுக்குப் பெரிதாக திருமண ஏற்பாட்டில் ஆர்வமில்லை. அது அந்த வயதுப்பெண்களின் இயல்பு.
“எங்க வீட்டுலயே நான் சகல சௌகரியத்தோடவும் இருக்கேன். அப்பா என் கிட்ட ஒப்படைச்ச தொழிலை மேற்பார்வை பண்ணிட்டிருக்கேன். இதே சுதந்திரம் இன்னொரு வீட்டுல இருக்குமா?” இதுவே ஆதிராவின் ஐயம்.
அவளைப் போராடி சம்மதிக்க வைத்திருந்தார்கள் எழிலரசியும் வினாயகமும்.
“உனக்குக் கல்யாணம் பண்ணாம எப்பிடி கர்ணனுக்குப் பண்ண முடியும்? யோசிச்சுப் பாரும்மா” என்று தந்தை உருக்கமாகச் சொல்லிவிட்டார்.
“டேய் அண்ணா! நான் உன் கல்யாணத்துக்குத் தடையா இருக்கேனா?” எனக் கர்ணனிடம் கேட்டாலோ அவன் ஈஸ்வரியை மனைவியாக அடைய முடியாத கடுப்பில் வீடியோ காலில் கொடூரமாக முறைத்தான்.
‘ஏதோ செய்யுங்கள்’ என்று அலட்சியமாகச் சம்மதித்தவளுக்கு அன்றைய தினம் இந்தப் பெண் பார்க்கும் படலத்தை முடித்துவிட்டுச் சீக்கிரமாக அவர்களின் ஆயில் மில்லுக்குக் கிளம்பவேண்டும் என்ற எண்ணம்.
‘உலகம் கோல்ட்ப்ரஸ்ட் ஆயில்ஸ்’ என்ற பெயரில் சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய்களை அவர்களே பிழிந்தெடுத்து விற்கவும் செய்கிறார்கள். புதிதாக கோல்ட் ப்ரஸ்ட் முறையில் எண்ணெய்யைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களை வாங்கும் வேலை இரண்டு வாரங்களாக நடக்கிறது.
கோயம்புத்தூர் சப்ளையர் ஒருவரிடமிருந்து அன்று காலை பதினோரு மணிக்கு எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் ஆயில் மில்லில் டெலிவரி ஆகிவிடும். அதன் தரத்தைப் பரிசோதனை செய்ய ஆதிரா அங்கே இருந்தாகவேண்டும்.
குடும்பத்தொழிலை ஆண்பிள்ளைகளிடம் ஒப்படைப்பதே வழக்கம். கர்ணனுக்குத் தனது குடும்பத்தோடு அம்பாசமுத்திரத்தில் இருந்து குடும்பத்தொழிலைச் செய்வதில் விருப்பமில்லை.
ஆதிரா அவளே விரும்பித் தொழிலை மேற்பார்வை செய்யவா எனக் கேட்டு வாங்கி நடத்தி வருகிறாள். அதெல்லாம் வினாயகத்துக்குக் கர்வம்தான்.
ஆனால் “இருபத்தாறு ஆச்சே! இன்னுமா பொண்ணுக்கு வரன் பாக்கல?” என்பது மாதிரியானக் கேள்விகள் இப்போது அடிக்கடி அவரிடம் கேட்கப்படுகின்றன.
தொழிலிருந்து மகள் ஓய்வு கொடுத்துவிட்டாள். உற்றார் உறவினர்கள் வீட்டு விசேசங்கள், நற்காரியங்களுக்குச் செல்கிறபோது இந்தக் கேள்வி திடுமென எழுந்து வினாயகத்தையும் எழிலரசியையும் திக்குமுக்காடச் செய்துவிடும். இது வாடிக்கையும் ஆகிவிட்டது.
மகளிடம் சொன்னால், அவளோ தயங்கினாள்.
“உனக்கென்ன? இந்தத் தொழிலைக் கல்யாணத்துக்கு அப்புறம் இதே சுதந்திரத்தோட மேற்பார்வை செய்யணும். அவ்ளோதானே? நமக்குப் பக்கத்துல இருக்குற ஊர்ல மாப்பிள்ளை தேடுறேன் ஆதி.” என்று ஆதிராவிடம் உறுதியளித்திருந்தார் வினாயகம்.
அப்படி தேடியெடுத்த வரன்களில் ஒருவன்தான் விக்கிரமசிங்கபுரத்து வைத்தியநாதனின் மகனான அவினாஷ். ஆள் பார்க்க அம்சமாக இருந்தான். பிரபல தொழில்நுட்ப நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியியலாளனாகப் பணியாற்றுகிறான். பெற்றோருக்கு அடங்கிய பையன். ஆண் ஒன்று பெண் ஒன்று என வாரிசுகள். பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது. கல்லிடைகுறிச்சியில் அவளது கணவரோடு வசித்து வருகிறாள்.
விசாரித்துப் பார்த்தவரையில் குடும்பத்தைப் பற்றியோ, மாப்பிள்ளை பையனைப் பற்றியோ தவறான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதோ பெண் பார்க்கவும் வரப்போகிறார்கள். பெண்ணும் அவனும் பார்த்த பிறகு இதர சம்பிரதாயங்களைப் பேசிக்கொள்ளலாமென வைத்தியநாதனும், வினாயகமும் பேசியிருந்தார்கள்.
தேவதையாகத் தயாராகி நின்ற ஆதிராவின் முகம் வழித்துத் திருஷ்டி கழித்தார் மருதநாயகி. பேத்தியோ காலில் வென்னீரை ஊற்றாதக் குறையாக நின்றாள் அதெல்லாம் மருதநாயகிக்குத் தெரிந்ததுதான்.
“ஒரு பொண்ணு என்ன தான் படிப்பு, வேலைனு எல்லாத்துலயும் முதன்மையா இருந்தாலும் அவளுக்குக் கல்யாணம் பண்ணி பார்க்குறதுல கிடைக்குற சந்தோசம் வேற எதுலயும் பெத்தவங்களுக்குக் கிடைக்காது ஆதிரை”
“அது உன் காலத்துல ஆச்சி” சலிப்பு தட்டியது ஆதிராவின் குரலில்.

“என்னடி இவ? எல்லா காலத்துலயும் பெத்தவங்க மனசு யோசிக்குற விதம் இதுதான். நீ சந்திரமண்டலத்துக்கு ராக்கெட் விட்டாலும் உன் கழுத்துல தாலியேறலைனா உன்னைப் பெத்த தகப்பனை ஊர் உலகம் விட்டு வைக்காது. ஞாபகம் வச்சுக்க” அவளது கன்னத்தில் இடித்துக் கூறினார் மருதநாயகி.
“உஃப்! ஆளை விடு ஆச்சி”
கையெடுத்துக் கும்பிட்டவளுக்கு ஆயில் மில்லில் இருந்து மொபைல் அழைப்பு வரவும் மருதநாயகியின் முகம் சிடுசிடுத்தது.
“இந்தா கூப்பிட்டுட்டான்!” எனக் கடுகடுத்தார் அவர்.
அழைத்தவர் ஆயில் மில்லின் ஏ டூ இசட்டாய் இருக்கும் தங்கவேலு. வினாயகத்தின் காலத்தில் அங்கே பணிக்குச் சேர்ந்தவர் இன்னும் அங்கே பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஆதிராவும் மூத்த ஊழியர், அனுபவஸ்தர் என்ற வகையில் அவருக்கு மரியாதை கொடுப்பாள். அவளுக்குத் தொழிலின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொடுத்ததில் தங்கவேலுவின் பங்கு அதிகம்.
ஆதிரா நிதானமாக அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க மாமா”
“ஆதிம்மா என் மவளுக்கு இன்னைக்குக் காலேஜுல கேம்பஸ் இண்டர்வியூ இருக்குனு சொல்லிருந்தேன்ல”
“ஆமா”
“அங்க அவ தனியா போயிப்பாளாம். அப்பாவ கூட்டிட்டுப் போக அவ ஒன்னும் சின்னக்குழந்தை இல்லயாம். அதனால எனக்கு இன்னைக்கு லீவு வேண்டாம்மா. நான் மில்லுக்குப் போய், வந்த மிஷின் எல்லாத்தையும் செக் பண்ணிடுறேன். நீ மாப்பிள்ளைவீட்டுக்காரங்களை மட்டும் கவனி”
“சரி மாமா! நீங்க பாத்துக்கோங்க”
அவள் அழைப்பைப் பேசி முடித்ததும் என்னவென விசாரித்தார் மருதநாயகி.
“தங்கவேலு மாமா பொண்ணுக்கு இன்னைக்குக் கேம்பஸ் இண்டர்வியூ, அவளைக் காலேஜுக்கு அழைச்சிட்டுப் போகணும்னு லீவ் கேட்டார். அவ தனியா போயிடுவேன்னு சொல்லிட்டாளாம். இன்னைக்கு நம்ம மில்லுக்கு வர்ற மிஷின் எல்லாத்தையும் மாமாவே செக் பண்ணிடுறதா சொல்லிருக்கார்”
“நல்ல காரியம் பண்ணுனான். நீ பொண்ணா லெச்சணமா மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வர்ற வரைக்கும் இங்கயே இரு”
மருதநாயகி இடத்தைக் காலி செய்த சில நிமிடங்களில் சந்திரவிலாசத்தின் காம்பவுண்டுக்குள் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது.
தொடர்ந்து ஒரே ஆரவாரமும் உற்சாகமும்!
“வாங்க வாங்க! நல்லா இருக்கிங்களா?” என நலவிசாரிப்புகள் ஆதிராவின் காதில் விழுந்தன.
வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார், வினாயகத்தின் குடும்பத்தினர் என அனைவரும் பேசும் சத்தமும் அவளது செவிகளில் விழுந்தது.
“காபி எடுத்துக்கோங்க” ரஞ்சனி சொல்வதும் கேட்டது.
“வழக்கமா இதைப் பொண்ணுதானே கொண்டு வரணும்”
சுருதிபேதமாக ஒரு பெண் குரல்! வயதானப்பெண்ணில்லை!
“ஆதி எங்க வீட்டு மகாராணி. அவளை இதெல்லாம் செய்யவிடமாட்டோம்” என்றாள் ரஞ்சனி சிரிப்புடன்.
உடனே அங்கே பெரிய சிரிப்பலை.
“எங்க வீட்டு மருமகளானதும் இதை விட தங்கமா பாத்துப்போம்” என்றது ஐம்பத்தைந்து வயது பெண்ணின் குரல்.
அடுத்து சுருதிபேதக்குரல்காரி – “ராணியா இருந்தாலும் ராஜாவோட மனசு கோணாம, பொண்டாட்டிக்குரிய கடமைய செஞ்சாதானே மரியாதை?”
“ப்ச்! சுஜாதா! அதெல்லாம் மருமகளுக்குத் தெரியாமலா இருக்கும்? பெரியவங்க சொல்லி குடுத்து வளத்திருப்பாங்க” இந்தக் குரல் அவளது தந்தையாக இருக்கலாமோ?
ஆதிரா யோசிக்கும்போதே மீனா அவளது காதில் கிசுகிசுத்தாள்.
“உனக்கு ஒரு நாத்தனார் உண்டாம். அந்தப் பொம்பளை பேசுதுனு நினைக்குறேன். இங்க பாரு ஆதி! கல்யாணத்துக்கு அப்புறம் இவளை மட்டும் நீ ஸ்பெஷலா டீல் பண்ணனும். வீடு, அடுக்களை, கொத்துச்சாவி, தலகாணி மந்திரம் இதைத் தாண்டி யோசிக்காத பொம்பளை ஆயிரம் பாகிஸ்தான் தீவிரவாதிக்குச் சமம். புருசன் பொண்டாட்டிக்குள்ள குண்டு வைக்குறதுல இந்த மாதிரி பொம்பளைங்க எக்ஸ்பர்ட். ரஞ்சனியக்கா நாத்தனாரை உனக்கு ஞாபகம் இருக்குதா? என்ன ஆட்டம்! அக்கா சாட்டைய சுழற்றுன அப்புறம்தான் அடங்குனா அவ.”
“அதெல்லாம் பாத்துக்கலாம் விடு” என்று ஆதிரா சொல்லும்போதே ரஞ்சனி பரபரப்போடு வந்தாள்.
“உன்னைக் கூப்பிடுறாங்க ஆதி. வா”
அவள் கையைப் பிடித்துக் கீழே இறங்கிய ஆதிரா கூடத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளைவீட்டாருக்கு வணக்கம் கூறினாள்.
பின்னர் சுவாதீனமாகத் தந்தைக்கு அடுத்து இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
வந்திருந்தவர்களில் மாப்பிள்ளையின் தமக்கையான பெண்ணின் முகம் இதில் சுண்டியது.
“பெரியவங்களை நமஸ்காரம் பண்ண வேண்டாமா?” என அதிகாரமாய் ஒலித்தது அவளது குரல்.
மாப்பிள்ளை அவினாஷின் ஆர்வப்பார்வையில் குறுகுறுத்த மனதுடன் இருந்த ஆதிரா சட்டென விழிகளை அவள் பக்கம் திருப்பினாள்.

“வணக்கம் சொன்னேனே! நீங்க கவனிக்கலையா? எங்க ரஞ்சனிக்காவோட காபியோட மகிமை உலகத்தையே மறக்க வச்சிடும். அதுல மயங்கி நீங்க கவனிக்காம இருந்துட்டிங்க போல” என அமைதியாகவே பதிலளித்தாள்.
அதில் சுஜாதாவின் முகம் மாறியது. அவினாஷின் கையை அழுத்தினாள் அவள். அவளது பெற்றோர் சிரிக்கவும் அவளும் சிரித்து வைத்தாள்.
“இல்ல, என்னைப் பொண்ணு பாக்க வர்றப்ப நான் சபைல விழுந்து நமஸ்காரம் பண்ணுனேன். அதானே நம்ம வழக்கம்! எவ்ளோ பணம் வந்தாலும் கலாச்சாரத்தை மறந்துடக்கூடாதுல்ல”
“ஓஹ்! நேருக்கு நேர் பாத்து வணக்கம் சொல்லுறதுல இருக்குற மரியாதை கால்ல விழுறப்ப கிடைக்காதுங்கிறது எங்க ஸ்கூல் டீச்சர் எனக்குச் சொல்லிக் குடுத்தது. என் ஆச்சி கால்ல கூட நான் ஆசிர்வாதம் பண்ணுங்கனு விழுந்ததில்ல. அப்பிடித்தானே ஆச்சி?”
மருதநாயகியை வம்பிக்கு இழுத்தாள் ஆதிரா. சுஜாதாவுக்கு வாயடைத்துப் போன நிலை.
அவினாஷும் தமக்கையை அடக்கினான்.
“டே ஓல்ட் ஃபேஷன் அதெல்லாம். நீ சும்மா இருக்கா”
ஆணாதிக்கத்தில் ஊறிய பெண்கள் ஆண்களை விட ஆபத்தானவர்கள்! சுஜாதாவும் அவர்களில் ஒருத்தியே! கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் வழிவழியாக வரும் பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் கடைபிடிப்பவள்!
அதையே அவினாஷின் மனைவியாகப் போகிறவளிடமும் எதிர்பார்த்து மூக்குடைபட்டுப் போனாள்.
அந்நொடி அவள் மனதில் உதித்த எண்ணம் “இந்தப் பொண்ணு குடும்பத்துக்குத் தகுதியானதா?” என்பதே!
அர்த்தமற்ற சம்பிரதாயங்களை ஒரு பெண் மறுக்கும்போது, அந்தச் சம்பிரதாயங்களைக் குருட்டுத்தனமாகக் கடைபிடிக்கும் பெண்களுக்கு இயல்பாகவே எழும் வயிற்றெரிச்சல் சுஜாதாவுக்கும் எழுந்தது.
அது உண்டாக்கப் போகிற பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் ஆதிராவும் அவினாஷும் தனியே போய் பேசிவிட்டு வந்தார்கள்.
அவனும் ஐ.டியில் வேலையை விட்டுவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் சொந்தத்தொழில் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறானாம். அதனால் அவளது தொழிலார்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றான்.
அவனது பேச்சில் நிறைய பிரச்சார நெடி அடித்த உணர்வு ஆதிராவுக்கு. அத்துணை பெண்ணியம், முற்போக்கு கருத்துகளைப் பேசினான். அவளுக்குப் போரடித்தது. சொல்லப்போனால் அவளது மனதைக் கவர அவன் அவ்வாறு பேசியதாகத் தோன்றியது.
பெண்ணியத்தையும் முற்போக்குக் கருத்துகளையும் மதிக்கும் ஆண் அதை எப்போதும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கமாட்டான்.
சொல்லப் போனால், ஆணாதிக்கவாதியை விட இம்மாதிரி வாய்வார்த்தைக்குப் பெண்ணியம் முற்போக்கு பேசும் விளம்பர முற்போக்கு ஆண்கள் ஆபத்தானவர்கள்.
ஆதிராவுக்கு அதெல்லாம் தெரியாதல்லவா! கொஞ்சம் நாடகத்தனமாகப் பேசினாலும் அவினாஷை அவளுக்குப் பிடித்திருந்தது. பெற்றோர் தவறான ஒருவனைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு.

இருவரும் தனியே பேசிவிட்டு வந்து ‘பிடித்திருக்கிறது’ என்றதும் கூடத்தில் இருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன, சுஜாதாவைத் தவிர்த்து.
பேச வேண்டிய மற்ற அனைத்து கொடுக்கல் வாங்கல்களைப் பற்றியும் பேசினார்கள். ஏற்பாட்டுத்திருமணத்தில் இதைத் தவிர்க்க முடியாது.
பெரியவர் ஒருவரை வைத்து நிச்சயத்துக்கான நாளைக் குறித்த பிறகு அவினாஷின் குடும்பத்தினர் கிளம்பினார்கள்.
“நிச்சயத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பிச்சிடுவோம் சம்பந்தி” என்று சொல்லி விடைபெற்றார் வைத்தியநாதன்.
அவர்கள் போனதும் எழிலரசி மகளைப் பிடித்துக்கொண்டார்.
“இங்க பாரு ஆதி! எல்லா இடத்துலயும் மனசுல பட்டதைப் பேசிடக்கூடாது. அது நிறைய நேரம் உனக்கு எதிரா போய் முடியும். அந்தச் சுஜாதா முகமே சரியில்ல.”

“இனிமே அந்தம்மா இருந்தா யோசிச்சுப் பேசுறேன். அதுக்காக அவங்க சொல்லுறதுக்குத் தலையாட்ட என்னால முடியாது”
“ஆதி…” அவர் அதட்டலாக ஆரம்பிக்க வினாயகம் மனைவியை அமைதிபடுத்தினார்.
“சின்ன வயசுல இருந்து மகாராணியாட்டம் வளத்துட்டு இப்ப கால்ல விழுனு சொன்னா அவ தயங்கதானே செய்வா” என்றார் மகளுக்கு ஆதரவாக.
ஆதிராவின் முகம் பூவாய் மலர்ந்தது.
“அப்பிடி சொல்லுங்கப்பா! எனக்குப் பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. அதை நானே செஞ்சா மட்டும்தான் எனக்குச் சந்தோசம். நான் கால்ல விழுந்தேன் நீயும் விழு, நான் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்த கஷ்டப்பட்டேன், நீயும் கஷ்டப்படுனு ஜெனரேசனல் ட்ராமாவ (generational trauma) என் கிட்ட திணிக்கப் பாத்தா நான் அசைஞ்சு குடுக்கமாட்டேன். தெரிஞ்சும் அனுசரிச்சுப் போனு சொன்னா என்ன அர்த்தம்?”
“விடுடா! அம்மா ஏதோ ஆதங்கத்துல சொல்லுறா.”
“இப்பிடியே இவளை ஏத்திவிடுங்க”
எழிலரசி போய்விட மீனாவும் ரஞ்சனியும் சுஜாதாவுக்கு ஆதிராவின் ட்ரீட்மெண்ட்தான் சரியென்றார்கள் ஒரே குரலாய். பின்னர் ஸ்வேதாவிடம் செய்தியைச் சொல்ல அவர்கள் போய்விட, நடுக்கூடத்தில் சுஜாதா சுவைக்காத காபி ஆறி ஏடேறிப் போயிருந்தது. இது எதற்கான அறிகுறியோ?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

