நான்காவது தளத்தில் அமைந்திருந்த சூட் அறை முன்னே லபோதிபோவென்ற சத்தம். பொதுவாக இம்மாதிரி சூட் அறைகள் வி.ஐ.பிகளுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. நல்லவேளையாக அந்தத் தளத்தில் இப்போதைக்கு இன்ஃப்ளூயன்சரைத் தவிர வேறு யாரும் இல்லை.
“நான் உடைச்சேனா? நீ பாத்தியாடா? ஓட்டை உடைச்சல் பொருளை வச்சு ஹோட்டல் நடத்திக்கிட்டிருக்கிங்க. உங்க தொழில் இன்னும் வளரணும்னா என்னை மாதிரி இன்ஃப்ளூயன்சர் தயவு வேணும். இப்பவே இந்த மினிபார் ஃப்ரிட்ஜை மாத்திக் குடுக்க ஏற்பாடு பண்ணு. இல்லனா இன்னும் ஒரு வாரத்துக்கு என் இன்ஸ்டா ஹேண்டில், யூடியூப் சேனல்ல உங்க ஹோட்டல்தான் கண்டெண்ட். நாறடிச்சிடுவேன் உங்க ஹோட்டலோட பேரை”
புவனேந்திரன் அங்கே போய் நின்றதும் இன்ஃப்ளூயன்சரின் ஆவேசம் குறைந்தது.
“வாங்க சார். உங்க ஹவுஸ்கீப்பிங் ஸ்டாஃப் ரூமை சுத்தம் பண்ண வர்றப்ப இங்க இருந்த மினிபார் ஃப்ரிட்ஜை ஏதோ பண்ணிட்டு என் மேல பழி போடுறாங்க. இந்த அசிங்கம் எனக்குத் தேவையா?” என அவனிடமும் இரைந்தான்.
“கொஞ்சம் அமைதியா பேசுறிங்களா?” புவனேந்திரன் நிதானமாகச் சொல்ல, அந்த இளைஞன் கேட்கிற மாதிரி தெரியவில்லை.
நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறியவன் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களை வேலையைக் கவனிக்குமாறு அனுப்பிவைத்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உள்ள வாங்க. போய் பாக்கலாம்”
அரவிந்தன், புவனேந்திரனோடு அந்த இன்ஃப்ளூயன்சரும் உள்ளே நுழைந்தான்.
மினிபார் ரெஃப்ரிஜிரேட்டரைப் பார்த்தான் புவனேந்திரன். நன்றாகத் தான் இருந்தது. திறந்து பார்த்தபோது சீறும் சத்தம் கேட்டது. கூலிங்கும் ஏறவில்லை எனத் தெரிந்தது.
அப்போதுதான் ஃப்ரிட்ஜுக்குள் இருந்த கீறல் ஒன்றை கவனித்தான் அவன். கூர்மையான ஏதோ ஒன்றை வைத்து ஃப்ரிட்ஜுக்குள் இப்படி கீறினால், ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே இருக்கும் குளிர்விக்கும் காயில்களில் (Cooling Coils) ஓட்டை விழுந்து, கேஸ் கசிவு (Refrigerant Leak) ஏற்பட்டு, முழுமையாக வேலை செய்யாமல் போகும்.
“இந்தக் கீறல் எப்பிடி வந்துச்சு?” என விசாரித்தான்.
இன்ஃப்ளூயன்சர் இளைஞனோ “நிறைய ஐஸா இருந்துச்சு. அதை க்ளீன் பண்ண நான்தான் கத்திய யூஸ் பண்ணுனேன்” என்றான் சர்வசாதாரணமாக.
இவன் பனிக்கட்டியை நீக்க பயன்படுத்திய கத்தி கீறலை உண்டாக்கியதன் விளைவே இப்போது ரெஃப்ரிஜிரேட்டர் இயங்காமல் போகக் காரணம். ஆனால் இவன் அந்தப் பழியைத் தனது ஊழியர்கள் பக்கம் திருப்புகிறான்.
“இந்தக் கீறலாலதான் கூலிங் ப்ராப்ளம் வந்திருக்கு. குறைஞ்சது ஐயாயிரம் ரூபா செலவாகும். அதை பே பண்ணிடுங்க” என்றான் புவனேந்திரன்.
இன்ஃப்ளூயன்சர் இளைஞன் மீண்டும் தாம்தூமெனக் குதித்தான்.
“இத்துணூண்டு கீறலுக்கு நான் ஐயாயிரம் அழணுமா? இப்பிடித்தான் உங்க ஹோட்டலுக்கு வர்ற ஆளுங்களையும் ஏமாத்துவிங்க போல. இதை நான் சும்மா விடப் போறதில்ல.”
“என்ன பண்ணுவ?” புவனேந்திரன் சட்டையில் ஸ்லீவை ஏற்றிவிட்டவண்ணம் கேட்டதும்
“உங்க ஹோட்டலோட லெச்சணம் இதுதான்னு வீடியோ போடுவேன்” எனச் சிலிர்த்தான் அவன்.
“ஓஹ்! நீ டேமேஜ் பண்ணுனதுக்கானக் காசைக் கேட்டா வீடியோ போடுவ. அப்பிடித்தானே?”
“ஆமா! நூறு ஐநூறுனா பரவால்ல. ஐயாயிரம் கேக்குறிங்க. இந்த ரெஃப்ரிஜிரேட்டரோட விலையே பத்தாயிரம்தான் இருக்கும்.” எனக் கணக்கு வழக்கெல்லாம் கூறினான் அவன்.
புவனேந்திரனின் பொறுமை கற்பூரமாய்க் கரைந்து கொண்டிருந்தது.
“இந்த வாரம் கண்டெண்ட் நீங்கதான்டி” என கை நீட்டி அவன் மிரட்டவே மண்டை சூடாகிவிட்டது.
யோசிக்காமல் பளாரென ஒரு அறை வைத்தான் அந்த இன்ஃப்ளூயன்சரின் கன்னத்தில். தாடை எலும்பு நொறுங்கிவிட்டதோ என்று பயந்து அழுமளவுக்கு அடி பலமாக விழுந்துவிட, பையன் பதற ஆரம்பித்தான்.
“நானும் சின்னப்பையனாச்சேனு பொறுமையா எடுத்துச் சொன்னா, என் கிட்டவே எகிறுற. அரவிந்த்! உடனே போலீசுக்குக் கால் பண்ணுங்க. விளம்பரத்துக்காக நம்ம ஹோட்டலுக்கு வரவழைச்ச இன்ஃப்ளூயன்சர் ஹோட்டலோட உடைமைகளைச் சேதம் பண்ணிட்டு அதுக்கானப் பணத்தைக் குடுக்காம நம்மளை மிரட்டுனார்னு கம்ப்ளைண்ட் பண்ணுங்க. தம்பி நமக்குக் குடுக்க வேண்டிய நஷ்ட ஈடைக் குடுக்காம திருநெல்வேலி எல்லைய எப்பிடி தாண்டுறார்னு நானும் பாக்குறேன்”

காவல்துறையில் புகார் என்றதும் கலங்கினான் அந்த இன்ஃப்ளூயன்சர் இளைஞன். காலில் விழாதக் குறையாகக் கதறினான்.
இது வேறு இன்ஃப்ளூயன்சர்கள் ஏதோ ஒரு பிரச்சனை அல்லது ஸ்காமில் சிக்கி வறுக்கப்படும் சீசன். அதில் தானும் ஒருவனாகிவிட்டால் ஃபாலோயர் எண்ணிக்கை குறையும். பின்னர் உழைத்து உண்ணவேண்டுமே!
இப்போதுதான் ஒரு ஃபுட் வ்ளாகர் திமிரெடுத்துச் செய்த காரியத்தால் சமூக வலைதளங்களில் வறுக்கப்பட்டுத் தனது ரீச்சை இழந்தார். அந்த நிலை தனக்கு வந்துவிட்டால்?
அழுதேவிட்டான் பையன்.
“மன்னிச்சிடுங்கண்ணா. நான் இப்பவே பணம் குடுத்துடுறேன். ரெண்டு நாள் தங்குனதுக்கானப் பில் கூட செட்டில் பண்ணிடுறேன். போலீஸ் கேஸ் எல்லாம் வேண்டாம்ணா. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கண்ணா”
புவனேந்திரனின் பார்வையில் நம்பிக்கையில்லாத்தன்மை மிளிர்ந்தது. இப்போதெல்லாம் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் அவனால் இலகுவாக நம்ப முடிவதில்லை.
“அரவிந்த் நான் சொல்லுற மாதிரி லெட்டர் டைப் பண்ணி கொண்டு வாங்க. அப்பிடியே இவன் எந்த ஹவுஸ்கீப்பிங் ஸ்டாஃப்சை எல்லாம் திட்டுனானோ அவங்களையும் இங்க வரச் சொல்லிடுங்க” என்றவன் அந்த உறுதிமொழி கடிதத்தில் இருக்க வேண்டிய சாராம்சத்தைச் சொன்னதும் இன்ஃப்ளூயன்சரின் முகத்தில் ஈயாடவில்லை.
“இப்பவே வர்றேன் சார்”
சரியாக இருபதே நிமிடத்தில் அரவிந்தன் அந்த உறுதிமொழி கடிதத்தைத் தட்டச்சு செய்து பிரதி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். கூடவே ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களும் வந்துவிட்டார்கள்.
“உங்க மொபைல்ல வீடியோ ரெக்கார்ட் பண்ணுங்க அரவிந்தன்” எனக் கட்டளையிட்டவன் “முதல்ல என் ஸ்டாஃப்ஸ் கிட்ட கத்துனதுக்காக மன்னிப்பு கேட்டுட்டு அப்புறமா அந்த லெட்டர்ல இருக்குறதைச் சத்தமா வாசிச்சுக் கையெழுத்து போடுங்க தம்பி” என்றான் கட்டளையிடும் தொனியில்.
அந்த இளைஞன் முதலில் அதிர்ந்தான். பின்னர் வேறு வழியில்லாமல் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டான். அரவிந்தனிடமும். பின்னர் உறுதிமொழி கடிதம் அச்சானக் காகிதத்தை வாங்கி வாசித்தான்.
அவனது பெயர், முகவரி எல்லாம் குறிப்பிட்டு அவனை என்.எஸ்.என் ஹோட்டல் கார்டனியாவுக்கு விளம்பரத்துக்காக அழைத்ததாகவும், வி.ஐ.பி சூட் ஒன்றில் தங்க வைத்ததாகவும், அங்குள்ள மினிபார் ரெஃப்ரிஜிரேட்டரை அவனே சேதமாக்கிவிட்டுப் பழியை ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் மீது போட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே சமரசம் பேச வந்த ஹோட்டலின் பொது மேலாளர் அரவிந்தனை முறைகேடான வார்த்தைகளால் திட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கெல்லாம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு சேதமடைந்த பொருளைப் பழுது பார்ப்பதற்கானத் தொகையை நஷ்ட ஈடாகக் கொடுக்கச் சம்மதிக்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டதை வாசித்தவன் பரிதாபமான முகத்தோடு கையெழுத்து போட்டான்.

“லாபில இருந்து பார்கோட் டிவைஸ் கொண்டு வரச் சொல்லுங்க. என் கண் முன்னாடி நீங்க பணத்தைப் பே பண்ணிடுங்க தம்பி” என்று அடுத்தக் கட்டளை!
டிவைஸ் வந்ததும் அந்த இன்ஃப்ளூயன்சர் இளைஞன் அவனது மொபைலில் இருந்து இணையவழியில் பணத்தைச் செலுத்தினான். அனைத்தும் வீடியோவாகப் பதிவானது.
திருப்தியோடு அவன் கையெழுத்திட்ட உறுதிமொழி கடிதத்தை அரவிந்தனிடம் கொடுத்த புவனேந்திரன் அந்த இளைனைப் பார்த்த பார்வையில் இளக்கமில்லை.
“இந்த லெட்டரும் வீடியோவும் எங்க கிட்ட பத்திரமா இருக்கும். வெளிய போனதுக்கு அப்புறம் கொடுக்கு முளைச்சு நீ எங்க ஹோட்டலோட பேருக்குக் களங்கம் உண்டாக்குற மாதிரி ஏதாச்சும் பண்ணுனதா தகவல் வந்துச்சுனா இந்த லெட்டரும், வீடியோவும் வைரல் ஆகிடும். ஜாக்கிரதை! இன்னும் ஒரு மணி நேரத்துல ஹோட்டல்ல இருந்து நீ செக் அவுட் பண்ணிட்டுக் கிளம்பிருக்கணும். முக்கியமா நீ மூச்சு விடுற சத்தம் தவிர வேற எந்தச் சத்தமும் எனக்குக் கேக்கக் கூடாது. புரியுதா?”
அவனிடம் கர்ஜித்துவிட்டு அந்தத் தளத்திலிருந்து லிப்டை நோக்கி நடந்தான் புவனேந்திரன். தனது அலுவலக இருக்கும் தளத்தில் இறங்கியவன் அங்கே சென்று தனது இருக்கையில் அமர்ந்த பிறகு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘மினிபாரைச் சேதமடையச் செய்துவிட்டு இத்தனை கூச்சல் போட இவனுக்கு எவ்வளவு audacity இருக்கவேண்டும்?’
அதென்னவோ தவறு செய்துவிட்டு அதற்கானப் பொறுப்பை ஏற்காமல், அடுத்தவர்கள் மீது பழியைத் தூக்கிப் போடுபவர்களைக் கண்டால் அவனுக்குப் பிடிப்பதில்லை. இதே போல ஒருத்தி செய்த தவறும், அதை ஒப்புக்கொள்ள மனமின்றி அவள் செய்த கேவலமான வேலைகளும் மனதில் உலா வர, புவனேந்திரனின் மனதில் சீற்றம் கொண்டது மாபெரும் புயல்!
இந்தப் புயலின் வேகத்தைக் குறைக்கவும், அதனால் உண்டாகும் சேதத்தைக் குறைக்கவும் வல்லமைப்படைத்த ஒருத்தி எங்கிருக்கிறாளோ?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

