“என்னோட ஒரு நாள் எப்பிடி ஓடும் தெரியுமா? ஆயில் மில்லுக்குப் போனதும் எவ்ளோ ஆர்டர் வந்திருக்கு, வாங்கிட்டுப் போன கடைக்காரங்க சூப்பர்மார்க்கெட் யாரும் ஆயிலைத் திருப்பிக் குடுத்தாங்களா, போன வாரம் வர்றதா இருந்த சரக்கு லோடு ஏன் இன்னும் வரல இதெல்லாம் செக் பண்ணுறதுலயே ஓடிடும். இதோட முடிவுல ‘நானே முதலாளி’னு ஒரு ஃபீல் வரும் பாருங்க, அது வேற லெவல். அந்த நாளோட பரபரப்பும், டென்சனும், தலைவலியும் மொத்தமா வடிஞ்சு கர்வமா ஃபீல் ஆகும். இப்பிடி போகுற என்னோட நாட்களை என் கல்யாணம் மாத்திடுமோங்கிற சந்தேகம் சமீப நாட்களா எனக்கு அதிகமா வருது. இந்தச் சந்தேகம் கல்யாணம் ஆகப்போற ஒவ்வொரு பொண்ணுக்கும் இருக்கும். கல்யாணமாகிப் போன அப்புறம் என்னால நானா இருக்க முடியுமா?”
-ஆதிரா
கிருஷ்ண ஈஸ்வர உடையார் கோவில்…
“குழந்தையோட பெரியப்பா நீங்களும் சாதத்தை எடுத்து ஊட்டுங்கோ”
ஐயர் சொல்ல அணிந்திருந்த ஃபார்மல் சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை இழுத்துவிட்டுக் கொண்டு ஆறு மாதக் குழந்தை கதிர்காமனை வாங்க கை நீட்டினான் புவனேந்திரன்.
“கதிர் குட்டி பெரியப்பா கிட்ட போங்க” மகனைக் கொஞ்சியபடி தமையனிடம் கொடுத்தான் மகிழ்மாறன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனை வாங்கி மடியில் வைத்துக்கொண்ட புவனேந்திரன் கரண்டியில் இனிப்பான பால் சாதத்தை எடுத்து குழந்தைக்கு ஊட்டினான்.
தேன் ருசிக்குக் குழந்தை சப்பு கொட்டிச் சாப்பிட புவனேந்திரன் முகத்தில் புன்னகை! அவனது ஆகிருதியானத் தோற்றத்திற்கு அந்தக் குட்டி உருவத்தை மடியில் வைத்திருந்த காட்சி அத்துணை பாந்தமாகத் தெரிந்தது புவனேந்திரனின் தந்தை நரசிம்மனுக்கு.

மகிழ்மாறன் – மலர்விழியின் மகனான கதிர்காமனுக்கு அன்று அன்னபிரசன்னம்!
குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்த புவனேந்திரன் “கதிர் குட்டி இன்னொரு ஸ்பூன் பெரியப்பா தரட்டுமா?” என்று கொஞ்சியபடி மிகவும் கொஞ்சமாக எடுத்து இன்னொரு வாய் ஊட்டவும், சிரித்தான் கதிர்காமன்.
“அவன் அப்பிடியே அவங்கம்மைய மாதிரி. இனிப்புனா சப்பு கொட்டுறான் பாரு புவன்”
சிவகாமி சொல்லவும் கதிர்காமனைப் பெற்ற மலர்விழி பூவாய்ச் சிரித்தாள். வீட்டின் இளைய மருமகளாய், தம்பி மகிழ்மாறனின் மனைவியாய், அன்பானதொரு உறவாய் அவள் மீது எப்போதுமே வாஞ்சை உண்டு புவனேந்திரனுக்கு.
இனிப்பு சுவை நாவிலிருந்து அகன்றதும், புவனேந்திரனிமிருந்து தந்தையிடம் தாவ கைகளை ஆட்டினான் கதிர்காமன்.
“இந்தாடா உன் மகனை வாங்கிக்க” என்று மகிழ்மாறனிடம் ஒப்படைத்தவனைச் சிவகாமி தன்னுடன் வருமாறு அழைத்தார்.
“என்னம்மா?” என்று அன்னையைத் தொடர்ந்தவன் அவர் நேரே பைரவர் சன்னதியில் போய் நிற்கவும் ஆயாசமாக விழித்தான்.
“என்ன பாக்குற? கும்பிடு. இன்னைக்குத் தேய்பிறை அஷ்டமி. பைரவருக்கு உகந்த நாள். உனக்கு ஏத்த ஒருத்தி சீக்கிரம் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் வேண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட நீ வேண்டுனாதான் இன்னும் பவர்ஃபுல்லா இருக்கும் புவன்”
சிவகாமிக்கு அவரது கவலை பெரிதாகத் தெரிந்தது. இளையவன் மகிழ்மாறனுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகிவிட்டது. இன்னும் புவனேந்திரனுக்குத் தகுந்த சம்பந்தம் அமையவில்லை.
அப்படியே அமைந்தாலும் அவன் அலட்சியம் காட்டி திருமணத்தைத் தவிர்க்கிறான். இப்படி சாமி, வேண்டுதல் என்று எந்த வழியிலாவது அவனது வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு அன்னையாய் சிவகாமிக்கு இருக்கும்தானே!

அன்னை சொன்னாரே என்று கை கூப்பி நின்றாலும் கடவுளின் முன்னே அலட்சியம் காட்டவில்லை புவனேந்திரன். அந்த வகையில் அவனும் மகிழ்மாறனும் ஒரே மாதிரி.
என்னவொன்று, கனிவே உருவான புவனேந்திரனை ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நின்று போன திருமணமும், அதன் பின்னர் அவனைப் பற்றி பரவிய பேச்சுகளும் கொஞ்சம் இறுக்கமானாவனாய், அழுத்தகாரனாய் மாற்றியிருந்தது.
வீட்டிற்குள் சிரிப்புக்கும், கனிவுக்கும் பஞ்சமில்லை. ஆனால் தொழிலிடங்களுக்குச் சென்றால் கறார்தான்.
“நான் காலேஜ்ல பாத்த புவன் சார் இல்ல நீங்க. மகிழ் மாமா மாதிரியே மாறிட்டிங்க. நீங்க ஹோட்டலுக்குப் போனாலே ஸ்டாஃப்ஸ் எல்லாரும் நடுங்காதக் குறை. ஏன் புவன் மாமா?”
அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான என்.எஸ்.என் குரூப் ஆப் எஜூகேசனல் இன்ஸ்டிட்டியூசனின் சேர்மனாக, என்.எஸ்.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கரெஸ்பாண்டெண்டாகப் புவனேந்திரன் இருந்த சமயங்களில் அவன் ஊழியர்களையும் பேராசிரியர்களையும் கனிவாய் நடத்துவதைப் பார்த்தவள் மலர்விழி.
அவளால் இப்போது அவனது குணநலனின் உண்டான மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வபோது அதை ஆதங்கமாய் அவள் சொல்வதும் உண்டு.
பைரவர் முன்னே கண் மூடி நின்றவனுக்கு மனதில் எந்த வேண்டுதலும் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் அவன் ஒரு உதவியை மட்டும் அவரிடம் கேட்டான்.
“எனக்கு மறதிய குடு. சில விசயங்களை நான் மறக்கணும். முடிஞ்சா என் காதையும் கேக்கவிடாம பண்ணிடு. அப்பதான் என் முதுகுக்குப் பின்னாடி என்னைப் பத்தி மத்தவங்க பேசுற எதுவும் என் காதுல விழாது”
இந்த மாதிரி எண்ணவோட்டத்தில் இருப்பவனுக்கு எங்கிருந்து திருமணத்தில் நாட்டம் வரும்? முதலில் அதற்கு அவன் பெண்ணொருத்தியை நம்ப வேண்டுமே!
மகன் உள்ளமுருகி வேண்டுகிறான், கட்டாயம் பைரவர் கண் திறந்து அவன் வாழ்க்கைக்கு ஒரு வழியைக் காட்டுவாரென சிவகாமி எண்ணிக்கொள்ள, புவனேந்திரனோ வினோதமான உதவியைப் பைரவரிடம் கேட்டுவிட்டுக் குடும்பத்தினரிடம் விடைபெற்றான்.
“இவ்ளோ நாள் ஹோட்டலோட லாண்ட்ரி பார்ட்னரா இருந்தவங்க மேல கடந்த ஒரு மாசமா நிறைய கம்ப்ளைண்ட் வந்துச்சுனு சொன்னேன்ல. அவங்களை மாத்தியே ஆகவேண்டிய கட்டாயம். நாம வெப்சைட்ல குடுத்த ஆட் பாத்துட்டு இன்னைக்குச் சில லாண்ட்ரி நிறுவனங்கள்ல இருந்து கொட்டேசனோட ஆட்கள் வர்றதா இருக்காங்க. நான் போய் பேசி நமக்குச் சரியான லாண்ட்ரி பார்ட்னரைச் செலக்ட் பண்ணனும். தப்பா எடுத்துக்காத மாறா” என்று மகிழ்மாறனிடம் சொல்லிவிட்டுக் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறினான் புவனேந்திரன்.
காரில் போகும்போதே எண்ணற்ற சிந்தனைகள்! இடையே பொது மேலாளர் அரவிந்தன் மொபைலில் அழைக்க, ஏர்பட்சை மாட்டிக் காரை ஓட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தான் புவனேந்திரன்.

“சொல்லுங்க அரவிந்தன்”
“சார் சென்னைல இருந்து நாம வரவழைச்ச இன்ஃப்ளூயன்சர் ரொம்ப பிரச்சனை பண்ணுறார். அவரோட சூட்ல இருந்த மினிபார் சரியா வேலை செய்யலையாம். பியர் கூலிங்கா இல்லனு பிரச்சனை பண்ணுறார் சார். ஹவுஸ்கீப்பிங் ஆட்கள் அதை ஏதோ பண்ணிட்டாங்கனு அவங்களைத் திட்டுனார். இடையில போய் சமரசம் பண்ண போனதுக்கு என்னையும் மோசமா பேசுறார் சார்”
புவனேந்திரனின் புருவங்கள் நெறிந்தன. அவனுக்குச் சமூக வலைதளங்களில் இயங்கும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் மீது நன்மதிப்பும் கிடையாது.
‘ஃபுட் வ்ளாகர்’ என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களை சக ஹோட்டல் நடத்தும் முதலாளிகள் புலம்பியபோது கேட்டிருக்கிறான். எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் காலடியே என்.எஸ்.என் ஹோட்டல் பக்கம் வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தவன் கொஞ்சம் தளர்ந்தது புதிய பொது மேலாளரான அரவிந்தன் சொன்ன யோசனையால்தான்.
“நம்ம ஹோட்டல் பத்தி சோஷியல் மீடியால நாலு பேர் பேசுனாதான் சார் ‘வேர் பை மவுத்’ மூலமா இன்னும் நம்ம ஹோட்டலோட பேர் நிறைய மக்கள் கிட்ட போய் சேரும்”
மகிழ்மாறனின் வயதிலுள்ள அரவிந்தனின் பேச்சு எப்படியோ புவனேந்திரனைச் சம்மதிக்கவும் வைத்தது. பிரபல இன்ஃப்ளூயன்சர் இளைஞனையும் அவனது குழுவையும் ஹோட்டலுக்கு வரவழைக்கவும் செய்தாயிற்று.
ஹோட்டலில் இருக்கும் எல்லா துறைகளும் பிரச்சனையின்றி இயங்க வேண்டும் என்பதில் எப்போதுமே புவனேந்திரன் காம்ப்ரமைஸ் செய்ததில்லை.
ஹவுஸ்கீப்பிங், லாபி, ரிசப்சன், சமையல், நிர்வாகம் என அனைத்துப் பிரிவுகளையும் தினசரி இரு முறை நேரடி மேற்பார்வை செய்வான். அவன் விரும்பிய கச்சிதமும் நேர்த்தியும் முதலில் ஊழியர்களுக்குக் கடினமாக இருந்தாலும் போக போக பழகிக்கொண்டார்கள்.
இதோ இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஊழியர்கள் மீது அற்பசொற்பமாக எப்போதோ சின்ன சின்ன புகார்கள் வருமே தவிர, இப்படி பொருட்களை பழுதாக்கிய புகார் வந்ததில்லை.
நிர்வாகம் குறித்து வாடிக்கையாளர்கள் சொல்லும் புகார்களைப் புவனேந்திரன் கேட்டுக்கொள்வானே தவிர ஹோட்டலுக்குத் தங்க வரும் வாடிக்கையாளர்கள் தனது ஊழியர்களிடம் அத்துமீறுவதை அவன் என்றுமே ஊக்குவித்ததில்லை.
‘என் ஊழியர்களின் பாதுகாப்பும் மரியாதையும் எனக்கு முக்கியம்’ என்பதில் உறுதியாக இருந்தான்.
விளம்பரத்துக்காக ஒருவனைத் தங்க வைத்தால் அவன் தனது ஊழியர்களிடம் அராஜகம் செய்திருக்கிறான். அந்த இன்ஃப்ளூயன்சரையும் அவனது குழுவையும் தங்க வைத்திருக்கும் சூட் அறையின் ஒரு நாள் வாடகை மட்டும் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து பன்னிரண்டாயிரம் ரூபாய்.
இரண்டு நாட்கள் தங்கியது, சாப்பிட்டது எல்லாம் சேர்த்து பில் மட்டும் முப்பதாயிரம் வரும். அது போக திருநெல்வேலி ரயில்வே ஸ்டேசனிலிருந்து ஹோட்டலுக்கு வர டாக்சி செலவு தனி.
அனைத்தையும் கணக்கிட்டுக் கொண்டே வண்ணார்ப்பேட்டையில் இருக்கும் என்.எஸ்.ஹோட்டல் கார்டனியாவுக்கு வந்து சேர்ந்தான் புவனேந்திரன்.
வாயிலிலேயே அரவிந்தன் நின்றான்.
“இன்னுமா பிரச்சனை முடியல?”
“தகராறு பண்ணுறான் சார். ஐ அம் ரியலி சாரி. என்னாலதான் இந்தப் பிரச்சனை”

“சாரி சொல்லுறதால எதுவும் சரியாகிடாது. நாமதான் சரி பண்ணனும்”
வணக்கம் வைத்த ரிசப்சனிஷ்ஸ்ட், ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களுக்குத் தலையசைத்துவிட்டு லிப்டில் அரவிந்தனுடன் ஏறினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

