இன்னைக்கு ஆதிராவோட வீரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. தலைல லேசா அடிபட்டதுக்கு டாக்டர் ‘எம்.ஆர்.ஐ (MRI) எடுக்கணும்‘னு சொன்னாங்க. சரின்னுதான் போனேன். அந்த ரூம்குள்ள போயி, அந்த மெஷினைப் பார்த்ததும்தான் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. இந்த மெஷின் பாக்கவே ஒரு சுரங்கம் மாதிரி இருந்துச்சு. ஒரு இரும்புப் பெட்டி மாதிரி! ‘நீ பெரிய வீராங்கனை. இப்ப போய் பயந்தா கேவலமா இருக்கும்‘னு மனசுக்குள்ள சொல்லிட்டு, கண்ணை மூடிட்டு உள்ள படுத்தேன். உள்ள போனதும், அந்த வெள்ளைச் சுவர் என் முகத்துக்கு ரொம்பப் பக்கத்துல இருந்துச்சு. என்னைய யாரோ புதைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்! மூச்சு திணற ஆரம்பிச்சிடுச்சு. ஹார்ட் ரொம்ப வேகமா அடிக்க ஆரம்பிச்சிருச்சு. ‘ஐயோ! வெளிய வரணும்! வெளிய வரணும்!‘னு கை காலெல்லாம் துடிக்குது. ‘வெறும் 15 நிமிஷம்தான் ஆதிரா. ரிலாக்ஸ்‘னு எனக்கு நானே பேசிப் பார்த்தேன். கையில குடுத்த ரப்பர் பாலை ரொம்ப இறுக்கமா புடிச்சுக்கிட்டேன். ஆனா, முடியலடா! ஒரு அஞ்சு நிமிஷத்துல, “ஐயோ! போதும்! வெளிய எடுங்க என்னைய!”னு கத்திட்டேன். டெக்னீஷியன் வந்து வெளிய எடுத்தாரு. அவர் என்னைப் பார்த்து, “நீங்க ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு சொன்னாங்க… இப்படிப் பயப்படுவீங்கன்னு நினைக்கல”ன்னு சொன்னாரு. எனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்துச்சு! ஒரு சப்பையான ஸ்கேனைக் கூட முடிக்க முடியலையே! ப்ச்!”
-ஆதிரா
“கவனம் ஆதி. காரை ஸ்பீடா ஓட்டாத. கல்யாணம் பக்கத்துல வர வர எனக்கு டென்சனா இருக்கு” என்று சொல்லி ஆதிராவை வழியனுப்பிவைத்தார் எழிலரசி.
புவனேந்திரனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திருநெல்வேலிக்குச் செல்கிறாள் அவள். தனியாகத் தொழில்ரீதியாக அவள் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
அவளுக்குப் பயமோ பதற்றமோ இல்லை. ஆனால் எழிலரசிதான் நொந்துகொண்டார்.
ஆதிராவுக்குப் புவனேந்திரனை அவனது ஹோட்டலில் சந்திக்கும் ஆர்வம், அவரது மறுப்பை ஒதுக்கித் தள்ள வைத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தனியே காரை ஓட்டிக்கொண்டு செல்லும் வாய்ப்பு அரிதினும் அரிதாய் தான் வாய்க்கும் ஆதிராவுக்கு. அதனாலேயே அந்தக் கார்ப்பயணத்தை விரும்புவாள் அவள்.
காற்றைக் கிழித்துக்கொண்டு கார் செல்லும் வேகமும், மற்ற வாகனங்களை முந்திச் செல்லும்போது வரும் உற்சாகமும் கார் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த அருமையான அனுபவம்.

கூடுதல் போனசாய் புவனேந்திரனைச் சந்திக்கச் செல்லும் எதிர்பார்ப்பு!
‘ஏன் இந்த எதிர்பார்ப்பு? ஏன் இந்த மெல்லிய சிலிர்ப்பு மனதில்! ஒருவேளை தனது செயல்களையும், செயல்பாடுகளையும் அவன் ‘வேல்யூ’ செய்வதால் அவனைச் சந்திக்க இத்துணை ஆர்வமாகச் செல்கிறோமோ?’
தன்னைக் கண்டதும் அவனது விழிகளில் வரும் மரியாதை கலந்த பாவனையை வேறு யாரிடமும் அவள் கண்டதில்லை. தன்னிடம் பேசும்போது அவனது கண்களில் தோன்றும் கனிவும், வேறெங்கும் விழிகளை அலைபாய விடாத கவனமும் அவினாஷிடம் கூட மிஸ்சிங்.
எண்ணவோட்டம் இவ்வாறு செல்லும்போதே ‘இது தவறு ஆதிரா’ என்று முகம் காட்டியது மனசாட்சி.
‘எப்படி நீ அவினாஷையும் புவனேந்திரனையும் ஒப்பிடுவாய்? இது தவறு! அவினாஷ் உன் வருங்காலக் கணவன். புவனேந்திரன் உனது உறவினன். இருவருக்கும் வேறுபாடு உள்ளதடி பெண்ணே!’
ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருந்தாலும் ஒப்பிடுவதை நிறுத்தவில்லை பெண்ணவளின் உள்ளம்.
எனவே எண்ணங்களுக்குச் சங்கிலியிட்டுக் காரை ஓட்டுவதில் கவனமானாள் ஆதிரா.
அதிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து, என்.எஸ்.என் கார்டனியாவில் எவ்வித உணர்வுமின்றி மரத்த முகத்துடன் மதுமதி கொடுத்த கோப்பினை வாங்கிக்கொண்டிருந்தான் புவனேந்திரன்.
அரவிந்த் அத்துணை தூரம் தடுத்தும் புவனேந்திரனைப் பார்த்தால் தான் ஆயிற்றெனப் பிடிவாதமாக உள்ளே நுழைந்துவிட்டாள் அவள்.
அவளிடம் கோபம் கொள்ளும் எண்ணமில்லை புவனேந்திரனுக்கு. அதைக் கூட உரிமைக்கோபமென நினைக்கலாமே அவள்! அப்படி நினைக்கக்கூடியவள்தான்!
“இதை அரவிந்த் கிட்டவே காட்டிருக்கலாமே?”
“உங்க கிட்ட பேசணும்னு வந்தேன் புவன்”
கோப்பினை மூடி வைத்தவனுக்கு இதற்கு மேல் அமைதி காக்கும் அளவுக்குப் பொறுமையில்லை.
“உன் மனசு இன்னும் அலைபாயுறதை நிறுத்தல மதுமதி. நீ எவ்ளோதான் மெச்சூர்டா காட்டிக்க நினைச்சாலும் உன் கண்ணு உன்னைக் காட்டிக் குடுத்துடுது. அதுல நேர்மை துளியளவுக்குக் கூட இல்ல. எனக்கு உன் மேல பரிதாபம் இருக்கு. அவசரமா உன்னை ஒரு மோசமானவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்கனு மலர் கூட வருத்தப்படுவா. அந்தப் பரிதாபம் எப்பவும் அன்பா மாறாதுங்கிறதுல அவ தெளிவா இருக்கா. ஏன்னா நீயும் உன் குடும்பமும் அவ குடும்பத்துக்குச் செஞ்ச துரோகம் அப்பிடிப்பட்டது. அதேதான் என் மனநிலையும். உன் மேல எனக்குப் பரிதாபம் உண்டு. அது என்னைக்குமே நேசமா அன்பா மாறாது. வீண்முயற்சிய கைவிட்டுட்டு உன் வாழ்க்கைய கவனி”
“நான் மாறியிருக்கலாம்னு யோசிக்க மாட்டிங்களா புவன்?”
புவனேந்திரன் சிரித்தான். அதில் ஏளனமும் நம்பிக்கையில்லா பாவனையும் நிரம்பியிருந்தன.
“நீ மாறுனதுக்காக நான் உன்னை நேசிக்கணுமா? அப்பிடி எதாச்சும் கட்டாயம் இருக்குதா?”
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை அவளுக்கு. அவள் கொஞ்சம் வாடினாற்போல இருந்தால் ஐயோவெனப் பதறிப்போகும் புவனேந்திரன் இல்லை இவன்.
அவனைத் திருமணம் செய்ய விருப்பமின்றி காதலனுக்காக மண்டபத்திலிருந்து ஓடியவள் ஏமாந்ததை அறிந்து, தேடி வந்து காப்பாற்றி, அவளைத் தனது வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்த புவனேந்திரனிடம் அப்போதாவது கொஞ்சம் இளக்கம் இருந்தது.
ஆனால் மலர்விழியை வைத்து எப்போது புவனேந்திரனுடைய வாழ்க்கைக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்க திட்டமிட்டு அவளை மதுமதி நோகடித்தாளோ அப்போதே அவனது இதயத்திலிருந்த இளக்கம் மறைந்து போனது.
இப்போது மலர்விழியை அவன் சுட்டிக்காட்டியதில் மதுமதிக்கு ஏகத்துக்கும் கடுப்புதான். அதை மறைக்க அவள் சிரமப்பட்டாள் வெகுவாக.
“என்னை நீ எத்தனை தடவை சந்திச்சாலும் என் வாழ்க்கைக்குள்ள உன்னால நுழைய முடியாது. உன் வேலையில கவனம் வை. இன்னொரு வாழ்க்கைய தேடிக்க. அந்த வாழ்க்கையிலயாச்சும் உன் லைஃப் பார்ட்னருக்கு உண்மையா இரு”
புவனேந்திரன் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தபோதே அவனது அலுவலக அறை கதவு திறந்தது.
ஒரே நேரத்தில் புவனேந்திரனும் மதுமதியும் திரும்பிப் பார்த்தார்கள். கதவினருகே அரவிந்தோடு நின்று கொண்டிருந்தாள் ஆதிரா.
அவளது இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகை புவனேந்திரனைக் கண்டதும் இன்னும் விரிவடைய, உள்ளே அமர்ந்திருந்த மதுமதிக்கோ ‘யாரிவள்?’ என்ற கேள்வி மனதில் உதயமானது.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
தலையைச் சரித்துக் கேட்டவள் அறைக்குள் வந்த விதமும் அவளது உடல்மொழியும் அதீதமான உரிமையைக் காட்டியது மதுமதிக்கு.
“உன்னோட வருகை எனக்கு எப்பவும் டிஸ்டர்பா தோணாது ஆதிரா”
புவனேந்திரன் இயல்பாகதான் கூறினான். ஆனால் மதுமதி இருந்த மனநிலைக்கு எல்லாமே வேறுவிதமாகத் தோன்றியது.
அரவிந்த் உள்ளே வந்ததும் “நீ மிஸ் மதுமதியை அழைச்சிட்டுப் போய் மத்த விசயத்தைச் சொல்லிடு அரவிந்த்” எனக் கட்டளையிட்டான் புவனேந்திரன்.
மதுமதிக்கோ இருக்கையை விட்டே எழுந்திருக்கும் என்ணமில்லை.
“மேடம் வர்றிங்களா?” என அரவிந்த் அழுத்தமாய்க் கேட்டதும் வேறு வழியின்றி எழுந்தாள். அப்போதும் புவனேந்திரனிடம் ஏதோ பேச முயன்றவள் அவனது பார்வையில் கூடிய கூர்மையால் கப்சிப்பாகி அரவிந்துடன் வெளியேறினாள்.
அவள் சென்றதும் ஆதிராவிடம் புன்னகையோடு திரும்பினான் புவனேந்திரன்.
“உக்காரு” அமர்ந்தவளிடம் தண்ணீர் தம்ளரை நகர்த்தினான். ஆதிராவும் அதை அருந்தியவள் “இங்க இருந்து போன பொண்ணை நான் எங்கயோ பாத்திருக்கேன். பட் எங்கனு ஞாபகம் இல்ல” என்றாள்.
புவனேந்திரன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. சில நொடிகள் அவனுக்கும் மதுமதியின் பெயரை உச்சரிப்பதற்கான அவகாசம் தேவைப்பட்டது.
“ஷீ இஸ் மதுமதி. மலர்விழியோட பெரியப்பா பொண்ணு”
ஆதிராவின் முகம் சட்டென மாறியது. மதுமதி? இவளைத்தானே முதலில் புவனேந்திரன் மணப்பதாக இருந்தான். அவள் திருமண மண்டபத்திலிருந்து ஓடிப்போன களேபரத்தில் குடும்ப கௌரவத்தைக் காக்க அவளது சித்தப்பா மகளான மலர்விழியை மகிழ்மாறன் திடீரென மணந்தது வரை அனைத்துமே ஆதிராவுக்குத் தெரியும்.
அவளுக்கு மதுமதி இங்கே புவனேந்திரனிடம் பேசிக்கொண்டிருந்ததில் முதலில் திகைப்பு! பின்னரோ பரிதாபம்! இறுதியாகத் துளிர்த்தது கோபம்.
“ஓஹ்! உங்க நேம் வெறும் புவனேந்திரனா இல்ல செயிண்ட் புவனேந்திரனா?” என்று புகைச்சலுடன் வினவினாள் அவள்.
கண்களைச் சுருக்கியவன் “ஆதிரா…” என்று ஆரம்பிக்கவும்
“அவ எப்பிடிப்பட்டவனு தெரிஞ்சும் உக்கார வச்சு பேசிட்டிருந்திருக்கிங்க. இப்பவும் உங்க மனசுல அவளுக்கு இடம் இருக்குதா புவன்?” என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.
“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்ல” வேகமாக மறுத்தான் புவனேந்திரன்.
“உஃப்! என்னமோ சொல்லுறிங்க. நானும் நம்புறேன்.”
மனதுக்குள் ஏதோ பரிதவிப்பு இந்த வரியை உச்சரிக்கையில்!
‘இவன் யாரிடம் பேசினால் எனக்கென்ன? ஏன் நான் இவ்வளவு தூரம் ஆதங்கமடைகிறேன்?’
தன்னைத்தானே நொந்துகொண்டாள் ஆதிரா.
“நம்ம ஹோட்டலுக்கு PMS சாஃப்ட்வேர் டெவலப் பண்ணுற ஐ.டி கம்பெனில ஒர்க் பண்ணுறா. இப்ப ரிப்போர்ட் சமிட் பண்ண வந்தா. இது முழுக்க முழுக்க வேலை சம்பந்தப்பட்ட சந்திப்பு. உனக்குப் புரியுதா ஆதிரா?”
மென்மையானக் குரலில், சிறு குழந்தைக்கு ஏபிசிடி கற்றுத் தரும்போது வருமே ஒரு பொறுமை, அத்தகைய பொறுமையோடு ஆதிராவிடம் நிலமையை விளக்கினான் புவனேந்திரன்.
‘நீ எதுவும் நினைத்துக்கொள்’ என்று ஆதிராவை அசட்டை செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ஏனோ அவளது முகச்சுணக்கம் அவனைத் தவிப்புக்குள் ஆழ்த்தியது.
ஆதிராவின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி வந்துவிடாதா என அவனது மனம் பரபரத்தது. அத்துணை தவிப்பும் பரபரப்பும் தனக்குள் இருக்கும்போது கூட அவற்றைத் திறமையாக மறைத்துப் பொறுமையாக விளக்கினான் சூழலை.
ஆதிராவும் முதிர்ச்சியற்றவள் இல்லையே! புரிந்துகொண்டாள்.
“நீங்க வேற கம்பெனி கிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருக்கலாம்” என்றாள் அப்போதும் விடாமல்.
“சென்னை, பெங்களூருல இதுபோல வேலைய செய்யுற கம்பெனிகள் ஏகப்பட்டது இருக்கு. ஆனா நம்ம சாஃப்ட்வேர்ல சின்னதா இஷ்யூ வந்தாலும் அவங்களை அங்க இருந்து வரவழைக்கணும். அவங்க வர்றதுக்கு எடுத்துக்குற டைம் கேப்ல இங்க பிசினஸ் என்னாகுறது? இதெல்லாம் யோசிச்சுதான் இந்தக் கம்பெனி கிட்ட சாஃப்ட்வேர் டெவலப் பண்ணுற வேலைய ஒப்படைச்சேன்”
ஆதிரா கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“உங்க பேச்சுல லாஜிக் இருக்கு. நம்புறேன். போனவளை விடுங்க. என்னைக் கவனிங்க” என்றாள் அவள்.
“வந்ததுல இருந்து உன்னைதானே கவனிச்சிட்டிருக்கேன்” அழுத்தமாய் அவன் சொன்னதும் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது நாணம் ஆதிராவின் முகத்தில்.
சின்னதாய் ஒரு தடுமாற்றம்! முகத்தில் மட்டும் குப்பென்று வியர்ப்பது போல ஒரு உணர்வு!
“நான் அதைச் சொல்லல… வந்து”
‘என்ன இது இப்படி தடுமாடுகிறேன்’ ஆதிராவின் மனம் படபடவென பூஞ்சிறகு முளைத்தப் பறவை போல உணர்ந்தது.
“ப்ச்! அக்ரிமெணட்தானே? ரெடி”
அவளது தடுமாற்றத்தைக் கவனித்தவன் பேச்சை மடைமாற்றினான். ஆதிராவின் கண்களில் பிரகாசம்.
‘நான் தடுமாறியதைக் கண்டுகொண்டு சங்கடமாக உணரக்கூடாதென பேச்சை மாற்றுகிறானே!’
அவளை அறியாமல் இதமாய் உணர்ந்தது ஆதிராவின் மனம். ஒரு பெண்ணின் மனம் அறிந்து செயல்படும் ஆண்மகனை அவளுக்குப் பிடிக்காமல் போகுமா? அந்தக் கணத்தில் அதிகமாய்ப் பிடித்தது புவனேந்திரனை.
ஒப்பந்தம் இருந்த கோப்பினை அவன் நீட்ட, அவள் வாங்கிக்கொண்டாள்.
“பேனா?” வாசிக்காமல் பேனாவைக் கேட்டவளிடம்
“படிச்சிட்டுக் கையெழுத்து போடும்மா” என்றான் புவனேந்திரன் தொழிலதிபனாக.
“அதெல்லாம் சரியாதான் இருக்கும்”
“ஒருவேளை நான் டிஸ்கவுண்ட் எதுவும் கோட் பண்ணிருந்தேன்னா என்ன பண்ணுவ?”
“புவன் எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசிடுவார். ஒளிச்சு மறைச்சு எதையும் செய்யுற பழக்கம் அவருக்குக் கிடையாதுனு ஸ்வேதாக்கா அடிக்கடி சொல்லுவா. நான் உங்களை நம்புறேன்”
புவனேந்திரனின் மனம் அவளின் பாராட்டால் குளிர்ந்து போனது. சற்று முன்னர் மதுமதியால் உண்டான கோபத்தின் வெப்பம் தணிந்து மழை கண்ட சோலையாய் ஜில்லென்று மாறிப்போனது அவனது உள்ளம்.
ஆதிரா கையெழுத்திட்டுவிட்டுக் கோப்பினை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள். அதில் இருந்த இரண்டாவது பிரதியை அவளிடம் ஒப்படைத்தான் புவனேந்திரன்.
“இது உன்னோட ஆபிஸ் காப்பி”
“தேங்க்ஸ்”
ஒப்பந்தம் கையெழுத்தானதும் எழுந்தவள் கிளம்ப எத்தனிக்க “நான் இன்ஸ்பெக்சன் போறேன். வர்றியா?” என அவசரமாகக் கேட்டு அவள் செல்வதைத் தடுத்தான்.
ஆதிரா மார்போடு கோப்பினை அணைத்து நின்றவள் “கண்டிப்பா வரணுமா?” என்று தலைசரித்துக் கேட்டாள்.
“வந்தா நல்லா இருக்கும்”
“யாருக்கு?”

பதில் வரவில்லை. மாறாய்க் கண்களில் ஆவல் தொனிக்க புன்னகை மட்டும் அவனிடம்.
‘ஆம்’. ‘இல்லை’ என்ற பதில்களுக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டது அவனுடைய புன்னகை!
அலுவலக அறையிலிருந்து சேர்ந்து வெளியே வந்த இருவரும் பார்வைகளை மட்டும் பாஷையாய்ப் பரிமாறிக்கொண்டு லிஃப்டில் ஏறியதை அரவிந்தோடு பேசிக்கொண்டிருந்த மதுமதி கவனித்துவிட்டாள்.
மனதுக்குள் ஊழித்தீயாய் இயலாமையும் கோபமும் பரவ, கைகள் இறுக்கமாய் கோப்பினைப் பற்றிக்கொண்டன. அவள் கண்கள் இடுங்க பார்க்கும்போதே லிஃப்டின் கதவுகள் மூடிவிட்டன.
பித்து பிடித்த நிலை மதுமதிக்கு.
அதே நேரம் லிஃப்டுக்குள் இருந்தவர்கள் இயல்பான உரையாடலுக்குத் தாவியிருந்தார்கள். மதுமதியின் வயிற்றெரிச்சல் சாத்தானின் பார்வைக்கு வந்துவிட்டது போல!
சீராய் கீழிறங்கிக்கொண்டிருந்த லிஃப்ட் திடுமெனத் தடுமாறியது.
ஆதிராவும் புவனேந்திரனும் ஒரே நேரத்தில் அதிர்ந்து பக்கவாட்டுக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டார்கள். ஏதோ தொழில்நுட்பக்கோளாறில் திக்கித் திணறி இரண்டு தளங்களுக்கும் இடையே நின்றுவிட்டது லிஃப்ட்.
லிப்ட் நின்றும் கதவு திறக்கவில்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. முழுதாய் ஒரு நிமிடம் கரைந்த பிறகு புவனேந்திரனுக்குக் குழப்பம். இம்மாதிரியானச் சூழல் இதுவரை வந்ததில்லை.
ஏனெனில், வழக்கமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்துவிடும். லிஃப்டும் தடையின்றி இயங்கும். இப்போது அதற்கான அறிகுறி கூட இல்லையே!
அவன் யோசிக்கும்போதே, அவனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஆதிராவுக்கு அந்தச் சிறிய லிஃப்டின் நான்கு பக்கச் சுவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னையும் புவனேந்திரனையும் நெருக்குவது போல ஒரு மாயை. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தவளுக்கு மூச்சடைப்பது போன்ற உணர்வு.

லிஃப்ட் சீக்கிரம் இயங்காதா என்ற பயத்தோடு இருந்தவளுக்கு வியர்வை துளிர்த்தது முகத்தில்.
புவனேந்திரன் பதற்றத்தோடு உடனடியாக லிஃப்டைப் பரமாரிக்கும் பிரிவுக்குத் தனது மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தான்.
“ஹலோ! லிஃப்ட் பாதியில நிக்குது. பவர் கட் ஆனதும் ஜெனரேட்டர் ரன் ஆகுதுதானே?”
“ஆகுது சார்”
“அப்ப லிஃப்ட்ல என்ன பிரச்சனை?”
ஊழியர் அவசரமாகப் பார்த்துவிட்டு நிலமை என்னவெனக் கூறினார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்து, முழு திறனுக்கு வருவதற்குள் லிஃப்ட் சிஸ்டத்தில் உள்ள ஃபியூஸ் (Fuse) அல்லது சர்க்யூட் பிரேக்கர் (Circuit Breaker) ஆனது மின்னிழப்பைச் சமாளிக்க முடியாமல் ‘ட்ரிப்’ ஆகி லிஃப்ட் இணைப்பைத் துண்டித்திருக்கலாம்.
இந்த ட்ரிப் ஆன நிலையை சரி செய்ய, ஜெனரேட்டர் இயங்கினாலும், யாராவது வந்து பிரேக்கரை மீண்டும் ‘ஆன்’ செய்ய வேண்டியிருக்கும்.
அதைச் செய்யுமாறு கட்டளையிட்டுவிட்டுத் திரும்பினால் ஆதிரா மெல்ல மெல்ல மூர்ச்சையாகிக் கொண்டிருந்தாள்.
அவளது கை பிடிமானமாக அவனது சட்டையைப் பற்றியது.
“மூ…மூச்சு திணறுற மாதிரி இருக்கு… வலிக்குது புவன்”
திணறலோடு சொல்லிக்கொண்டே பலமின்றி சரிந்தவளுக்குக் கண்கள் இருண்டன.
“என…எனக்கு… கிளாஸ்…ட்ரோஃபோபி..யா” முடிக்கும் முன்னரே முழுமையாய் மயங்கிவிட்டாள் அவள்.
துவண்டு சரிந்தவளைத் தாங்கிக்கொண்டவன் அவளது கன்னங்களில் பலமாகத் தட்டினான்.
“ஆதிரா! ஒன்னுமில்ல. இப்ப லிஃப்ட் சரியாகிடும்… கண்ணை முழிச்சுப் பாரு ஆதிரா”
அவன் கத்தவும் ஒரு பெரும் உலுக்கலுடன் லிஃப்ட் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. விளக்குகள் ஒளியைச் சிந்தின.
ஆனால் ஆதிரா கண் விழிக்கவில்லை. கிளாஸ்ட்ரோஃபோபியா இருப்பவர்களுக்கு மிகவும் சிறிய, அடைக்கப்பட்ட இடங்களில் இருக்கும்போது ஒருவித பயம் வந்துவிடும். இந்தப் பயத்தால் அவர்களின் மூளை ஆபத்தில் இருப்பதாகக் கருதும். எனவே சீரான மூச்சு இருந்தாலும் மூச்சுத்திணறுவது போல உணர்வார்கள்! அதீதப் பயத்தால் உயர்ந்த இரத்த அழுத்தத்தின் விளைவாக அவர்களுக்குச் சில நேரங்களில் மயக்கமும் வந்துவிடும்.
ஆதிராவின் நிலையும் இதுவே! லிஃப்ட் தரைத்தளத்துக்கு வந்ததும் அவளைத் தன் கரங்களில் அள்ளிக்கொண்டு வெளியேறினான் புவனேந்திரன்.
கறாரான முதலாளி சற்று முன்னர் ஹோட்டலுக்கு வந்த பெண்ணைக் கையிலேந்தி வந்த காட்சி அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்தது. அதிலு அந்தப் பெண் மயக்கத்தில் வேறு இருந்தது அவர்களின் சிந்தனையில் ஏகப்பட்ட கேள்விகளை நுழைத்தது.
“மகேஷ்! தண்ணி கொண்டு வாங்க”

ஆதிராவை அனைவர் முன்னிலையிலும் காட்சிப்பொருளாக்க விரும்பாமல் தரைத்தளத்தில் இருந்த சொகுசு அறைக்குள் தூக்கிச் சென்றபடியே கட்டளையிட்டான் புவனேந்திரன்.
ஆதிராவைப் புவனேந்திரன் கையிலேந்தி சொகுசு அறைக்குள் நுழைந்த காட்சியை ‘எப்போதடா சர்ச்சையை உருவாக்குவோம்’ என்ற மனப்பாங்குடன் உலாவும் ஒரு நபரின் கண்கள் பார்த்துவிட்டன.
முதலில் கோபத்தையும் பின்னர் அருவருப்பையும் தத்தெடுத்தது அந்நபரின் முகம். இறுதியாய்க் குறுக்குபுத்தியோடு ஆதிராவையும் புவனேந்திரனையும் இணைத்துச் சந்தேகப்பட்டபடியே அங்கிருந்து லாபியை நோக்கி சென்ற அந்நபர் அவினாஷின் தமக்கையான சுஜாதா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

