இந்தியாவுல பெண்கள் வீட்டுவேலைக்காகவும், குடும்பத்துல உள்ளவங்களைக் கவனிக்குறதுக்காகவும் செலவிடுற நேரம் மத்த நாடுகளோட ஒப்பிடுறப்ப ரொம்ப அதிகமாம். இதுக்காக ஒரு நாள்ல குறைஞ்சது 5 மணி நேரம் செலவிடுறாங்களாம். ஆனா ஆண்கள் செலவிடுறது தோராயமா ஒன்றரை மணி நேரம் தானாம். இன்னொன்னு தெரியுமா? வீட்டுவேலையும் சமையலும் பெருசா யாரும் பாராட்டக்கூடிய வேலைகளும் இல்ல. குறைதான் அதிகமா கண்டுபிடிப்பாங்க. இதுக்கு ஓய்வும் கிடையாதுங்கிறதால இந்தியப்பெண்களோட உடல்நலனையும் மனநலனையும் இந்த வேலைகள் ரொம்ப பாதிக்குதாம். ஆனா பாருங்க., இதுதான் நிதர்சனம் இதை ஏத்துக்கனு உங்கள்ல சிலரே சொல்லுவிங்க. இதுல இவ்ளோ கஷ்டம் இருக்குனு சொன்னாலும் இதைக் கஷ்டம்னு சொல்லவே உங்கள்ல சிலருக்கு தயக்கமா இருக்கலாம். என்ன செய்யுறது? நாம உருவாக்கப்பட்ட மோல்ட் அப்பிடிப்பட்டது.
-ஆதிரா
புவனேந்திரன் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து பத்து நாட்கள் கடந்திருந்தன. பத்து நாட்களில் அவர்களின் ஹோட்டலுக்காக வடிவமைக்கச் சொன்ன மென்பொருளின் நிலவரம் என்னவென்பதை அவனுக்குப் பதிலாக அரவிந்தன் மேற்பார்வையிட்டிருந்தான்.
வாராந்திர அறிக்கை சமர்ப்பிப்பு என்ற பெயரில் புவனேந்திரனை அணுக முயன்ற மதுமதியின் முயற்சிகள் முடிந்ததென்னவோ அரவிந்தனிடம் கோப்பினைக் கொடுத்த இடத்தில்தான்.
“இது சம்பந்தமா எம்.டி கிட்ட ரிப்போர்ட் குடுக்கணும்னு எங்க மேனேஜர் சொன்னார்” என அவளும் புவனேந்திரனைப் பற்றி விசாரிக்க முயன்றாள்.
“சார் இன்னும் கொஞ்சநாளுக்குப் பிசியாதான் இருப்பாங்க. பெர்ஷனலா சாருக்குக் கொஞ்சம் வெலை இருக்கு” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்ட அரவிந்தன் இனி வாராந்திர அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சொல்லிவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பெரும் எதிர்பார்ப்புடன் ஹோட்டலுக்கு வந்த மதுமதி ஏமாந்த முகத்தோடு திரும்பிய விவரம் அரவிந்தனால் புவனேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது.
“தேங்க்ஸ் அரவிந்த்” என்றான் உளப்பூர்வமாக.

“எதுக்கு சார் தேங்க்ஸ்? எனக்கும் உங்க மனநிலை எப்பிடி இருக்கும்னு புரியுது”
விசுவாசமான ஊழியனாய் அரவிந்த பேச, புவனேந்திரனுக்கு நிம்மதி. இனி மதுமதியை எப்படி சமாளிப்பதென அவன் திணறவேண்டியதில்லை.
அன்று மாலை வீட்டுக்கு வந்தவனிடம் திரட்டுப்பாலோடு சிறிய கரண்டியும் வைக்கப்பட்ட சின்ன கிண்ணம் திணிக்கப்பட்டது.
“ஸ்வீட் எடுத்துக்க புவன்! சங்கரன்கோவில்காரங்க அடுத்த வெள்ளிகிழமை பொண்ணு பாக்க வரச் சொல்லிட்டாங்க” என்று மலர்ந்த முகத்தோடு கூறினார் சிவகாமி.
புவனேந்திரனும் அன்னையின் முகம் மலர்ந்ததில் உற்சாகமடைந்தான். திரட்டுப்பாலின் தித்திப்பு அதிகம்தான்! ஆனாலும் முழு கிண்ணத்தையும் காலி செய்துவிட்டுதான் கொடுத்தான்.
அவன் திருமணத்திற்காக மனரீதியாகத் தயாராகியிருந்தான். எது தனது குடும்பத்தினரைச் சந்தோசமாய் வாழவைக்குமோ அதைச் செய்ய இனி அவனுக்குத் தயக்கமில்லை.
நரசிம்மனும் சிவகாமியின் கட்டாயத்திற்காகச் சம்மதிக்கிறாயா எனக் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார்.
“என் வாழ்க்கைக்கான முடிவு இது. இதுல கட்டாயப்படுத்திச் சம்மதிக்க வைக்குறதுக்கு என்ன இருக்குப்பா?” என்று முடித்துக்கொண்டான் அவரது மைந்தன்.
அவனது சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் சொன்னபடியே வெள்ளிகிழமை பெண் பார்க்க சங்கரன்கோவிலுக்குப் பெண் பார்க்க கிளம்பினார்கள் என்.எஸ்.என் குடும்பவாசிகள்.
வசதியான குடும்பம்! சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டியில் சொந்தமாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறாராம் பெண்ணின் தந்தை மகேஷ்வரன். அது போக உரக்கடை, அரிசி மண்டி என தொழிலுக்கும் அதில் வரும் பணத்துக்கும் பஞ்சமேயில்லை. பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதால் ஊருக்குள் அவருக்குத் தனி மரியாதை.
பெண்ணும் திருநெல்வேலியில் படிப்பை முடித்து அங்கேயே தனியார் வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறாள். பார்த்தவுடன் பிடிக்கிற தோற்றம்தான் பிருந்தாவுக்கும்.
மகேஷ்வரனும் அவரது மனைவி கருணாகரியும் சிரித்த முகமாய் நரசிம்மனையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றார்கள். பெண் வீட்டில் உறவுக்காரர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆளாளுக்குக் கதிர்காமனைத் தூக்கிக் கொஞ்சியதில் மலர்விழிக்குப் பெருமைபிடிபடவில்லை. அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த புவனேந்திரனுக்கு இந்தச் சம்பந்தத்தில் மறுப்பு சொல்ல எதுவுமில்லை.
பிருந்தாவும் அவனும் தனியே பேசுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
“இந்தக் கூட்டத்தைப் பாத்ததும் ஷாக் ஆகியிருப்பிங்களே?” என அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
புவனேந்திரன் சிரித்தான்.
“இந்தக் கூட்டமெல்லாம் ஒத்துக்காதுனுதான் நான் திருநெல்வேலியில தங்கிடுறது. இன்னைக்கு மானிங்தான் நான் இங்க வந்தேன்” என இயல்பாய் அவள் பேச அவளைக் கவனித்தபடி நின்றான் புவனேந்திரன்.
“பெருமாள்புரம் ப்ராஞ்ச்ல மேனேஜரா இருக்குறேன். கூடவே பேங்க் எக்சாமுக்கும் படிக்குறேன். கண்டிப்பா இந்தத் தடவை க்ளியர் பண்ணிடுவேன். இங்க வந்தா படிக்க முடியாது. நசநசனு வீட்டுக்கு ஆட்கள் வந்துட்டே இருப்பாங்கனு திருநெல்வேலியில லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்.”
அவள் பேச பேச வேலையின் மீது பிடித்தமுள்ள பெண் என்பது புரிந்துபோனது புவனேந்திரனுக்கு. அதே நேரம் உறவுகள்மீது அதிருப்தி கொண்டவள் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்றது அவனது மனசாட்சி.
“உங்க வீடு இப்பிடி கூட்டம் கும்பல் இல்லாம அமைதியா இருக்கும்தானே?” என்று கண்களில் ஆர்வத்தைத் தேக்கிக் கேட்டவளிடம் புன்னகைத்தான் அவன்.
“அப்பப்ப வருவாங்க. நவராத்திரி மாதிரி டைம்ல” என அவன் சொல்லவும் சின்னதாய் ஒரு சலிப்பு.
“ஏன்? உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதா?” என விசாரித்தான்.
“உறவுகளோட நச்சரிப்பு பிடிக்காதுனு சொல்லுற உரிமை கூட தமிழ் சொசைட்டி பொண்ணுங்களுக்குக் குடுக்கலயே! நான் படிக்குறதுக்குத் தொந்தரவு இல்லாம இருக்கணும். அதுக்காகக் கேட்டேன்”
“சரிதான்! எங்க வீட்டுல குட்டிப்பையன் இருக்குறான். அவன் வளருற வரைக்கும் வீட்டுல சத்தத்தைத் தவிர்க்க முடியாது” எனப் புவனேந்திரன் சொல்லும்போதே பிருந்தாவின் முகத்தில் சலிப்பு தெரிந்தது.
உறவுக்காரர்கள் அனைவரும் குழந்தையைக் கொஞ்சியபோதும் அவள் ஒதுங்கி நின்றதைக் கவனித்தவனுக்கு இந்தச் சலிப்பு மட்டும் தெரியாமலா போய்விடும்.
புவனேந்திரனின் கண்கள் அதைப் படம்பிடித்துவிட்டன.
“கதிர் எங்க குடும்பத்தோட பெரிய சந்தோசம். குழந்தைங்க இருந்தா அந்த வீட்டுக்குத் தனி களை வந்துடுதுல்ல”
“ப்ச்! கண்டிப்பா! ஆனா ஓயாத அழுகை, தூக்கமில்லாத இரவுகள்னு கஷ்டப்படுறதும் அந்தக் குடும்பங்கள்தான்”
“இதெல்லாம் எல்லா பேரண்ட்சும் கடந்து வந்திருப்பாங்க. நாமளும் என்னைக்கோ ஒரு நாள் இந்தக் கட்டத்துக்கு வந்துதானே ஆகணும்”
“வந்தே ஆகணும்னு கட்டாயம் எதுவும் இருக்குதா என்ன?”

“குழந்தைங்கனா அவ்ளோ கடுப்பா?”
சிரித்தபடியே வினவினான் புவனேந்திரன்,.
“அப்பிடி இல்ல. பட் அவங்களோட டேண்ட்ரம் எல்லாம் என்னால ஹேண்டில் பண்ண முடியாதுப்பா.”
‘இந்தப் பெண் நல்லவள்! இலட்சியப்பிடிப்பு உள்ளவள்! ஆனால் இவளால் தனது குடும்பத்தோடு பிணைந்து வாழ முடியாது’
அந்நொடியில் அவனது மனதில் தோன்றிய எண்ணம் இது.
அவளது படிப்புக்கும், அவளது குணத்துக்கும் பொருத்தமானக் குடும்பத்தில் போய் வாழட்டுமென்ற முடிவை அப்போதே எடுத்துவிட்டான்.
தனியே பேசிவிட்டு வந்ததும் அவன் ஒரு பக்கம் சிவகாமியின் காதைக் கடித்தான் என்றால் பிருந்தா கருணாகரியைத் தனது அறைக்கு அழைத்துப்போய்விட்டாள்.
“வீடுனா குழந்தைங்க இருக்கத்தான் செய்யும். இதுக்காக எல்லாம் சம்பந்தத்தை ஒதுக்க முடியாது. நீ ரொம்ப ஓவரா யோசிக்குற”
“சரிம்மா! அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தனியா…”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாமே”
“எதுக்கு? குடும்பத்தைப் பிரிச்சிட்டானு பேர் வர்றதுக்கா?”
“இப்பவே இவ்ளோ யோசிக்கணுமா பிருந்தா? கல்யாணம் ஆகிடுச்சுனா உனக்கே அந்த வாழ்க்கை பிடிச்சிடும்”
“அதெல்லாம் உங்க காலத்துல நடக்கும். அப்பிடி மாறலாம் இப்பிடி மாறலாம்ங்கிற ஊகத்தோட வாழ்க்கைய அணுகுற ரிஸ்கை நான் எடுக்கமாட்டேன்”
அவளுக்கு எது சரியோ அதைப் பற்றி யோசித்தே பிருந்தா பேச கருணாகரிக்கு அப்போதே இந்த வரன் கைகூடாது என்பது புரிந்துவிட்டது.
புவனேந்திரனும் அதையேதான் அன்னையின் காதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“நல்ல பொண்ணுதானே புவன்?”
“இல்லனு சொன்னேனா? அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த குடும்பம் நாம இல்லம்மா. நாளை பின்ன கதிரைக் காரணமா வச்சு ஒரு சண்டை வந்துச்சுனா கஷ்டம்”
புவனேந்திரன் அழுத்தமாய்ச் சொன்னதும் வீட்டுக்குச் சென்று கலந்து பேசிவிட்டுத் தங்கள் முடிவைச் சொல்லுவதாக அறிவித்துவிட்டு நரசிம்மனின் குடும்பம் அங்கிருந்து அம்பாசமுத்திரம் கிளம்பியது.
பெண் பார்க்க சங்கரன்கோவில் வரும்போதே தங்கள் வீட்டுக்கும் வருமாறு எழிலரசி அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார் சிவகாமியிடம்.
மகிழ்மாறன் கல்லூரியில் வேலை இருந்ததால் வரவில்லை. மலர்விழிக்கும் ஆதிராவைக் காண இஷ்டமே.
மதியம் பன்னிரண்டு மணியளவில் அம்பாசமுத்திரத்தில் சந்திரவிலாசத்தின் முன்னே வந்து நின்றது புவனேந்திரனின் கார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரவிலாசத்துக்கு வருகிறான் அவன். சின்ன வயதில் ஸ்வேதாவோடு அவனும் மகிழ்மாறனும் ஓடி விளையாடிய நினைவுகள் அலையாய் எழுந்தன அவனது மனதுக்குள்.
புன்னகை துளிர்த்த வதனத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவர்களின் நாசியில் வெங்காய வடகம் பொரிக்கும் மணம் நுழைந்தது.
வினாயகம் உற்சாகத்துடன் வரவேற்றார் அனைவரையும். மருதநாயகியும் பெங்களூருவிலிருந்து அம்பாசமுத்திரத்துக்குத் திரும்பியிருந்தார்.
“என்ன புவன் பொண்ணு பிடிச்சிருக்கா?” என்று கேட்டு அவனைக் கேலி செய்தார் அவர்.
“நல்ல வெயில்”
“நேத்து லைட்டா சாரல் அடிச்சுது மதினி” என்றபடி வந்த எழிலரசியின் கைகளில் இருந்த ட்ரேயில் அனைவருக்காகவும் சின்ன சின்ன தம்ளர்களில் மோர் இருந்தது.
“வெயிலுக்கு நல்லா இருக்கும்” என்றபடி கொடுத்தார் அவர்.
அனைவரும் மோர் அருந்தும்போதே “ஆதி அக்கா எங்க?” எனக் கேட்டாள் மலர்விழி.
“அவ மில்லுல இருந்து வர்ற நேரம்தான்” வினாயகம் சொல்ல, நரசிம்மனும் அவரும் தொழில்ரீதியானப் பேச்சில் ஆழ்ந்தார்கள்.
கதிர்காமனையும் மலர்விழியையும் மருதநாயகி தனது பேச்சால் வளைத்துக்கொண்டார். சிவகாமி பெண் வீட்டில் புவனேந்திரன் அவனது அதிருப்தியைத் தன்னிடம் தெரிவித்ததை எழிலரசியிடம் பகிர்ந்துகொள்ள போய்விட்டார்.
தனியே விடப்பட்ட புவனேந்திரனுக்கு மோர் காலியானதும் போரடித்தது. பெரியவர்களின் பேச்சில் கலந்துகொள்ள ஏனோ ஆர்வம் வரவில்லை அவனுக்கு.
பதினைந்து நிமிடங்கள் சோதனையாகக் கழிந்திருந்தன. அப்போது வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தவன் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த ஆதிராவைப் பார்த்ததும் புன்னகைத்தான்.
“அடடே! வாங்க வாங்க! பொண்ணு பாத்து பாத்துட்டு வந்தாச்சா? அத்தை மலர் எல்லாம் எங்க?”
வரும்போதே ஆர்வத்தோடு கேட்டவள் நரசிம்மனும் இரு வார்த்தைகள் பேசிவிட்டு மலர்விழியைத் தேடி போய்விட்டாள்.
திரும்பி வந்தபோது கூந்தல் க்ளட்சில் அடங்கியிருந்தது. சிங்கிள் ஃப்ளீட்டாக விடப்பட்ட புடவையின் மத்தியில் இருந்து கொஞ்சம் தோளில் போட்டிருந்தாள். அவள் அணிந்திருந்தது சந்தேரி சில்க் காட்டன் புடவை என்பதால் நழுவாமல் நின்றது முந்தானை.
‘இவ்வளவு ஆழமாக அவளை உற்று நோக்குவதற்கு உனக்கு உரிமையில்லை’
சட்டெனப் பார்வையைத் திருப்பிக்கொண்டவன் அவன் அமர்ந்த அதே சோஃபாவில் சற்று இடைவெளிவிட்டு ஆதிராவும் அமர்ந்ததும் கதிர்காமனை அவளிடமிருந்து வாங்க கை நீட்டினான்.
குழந்தை அவனிடம் வராமல் ஆதிராவிடம் ஒட்டிக்கொண்டு சிரிக்கவும் “டேய் வீட்டுக்குப் போனதும் நீ பெரியப்பா கிட்ட தான் வரணும்” என மிரட்டினான் புவனேந்திரன்.
ஆதிரா அவனைப் பொத்திவைத்துக்கொண்டவள் “நான் வீட்டுக்கு வரலனு சொல்லு குட்டி. நீ இங்கயே இருக்குறியா?” என்று கொஞ்ச

“மலரும் மாறனும் ஒரு நிமிசம் இவன் இல்லாம இருக்கமாட்டாங்க” என்றான் புவனேந்திரன்.
“அப்பிடியா செல்லக்குட்டி?”
ஆதிரா பேச்சு கொடுக்க கொடுக்க கதிர்காமன் உற்சாகமாய்ச் சிரித்தான்.
அவனது சிகையை வருடியபடியே “எப்ப கல்யாணம்?” என நிதானமாகக் கேட்டாள் அவள்.
“ப்ச்! இந்தப் பொண்ணு செட் ஆகாது ஆதிரா”
அசட்டையாய் அவன் சொல்லவும் மெல்லிய அதிர்ச்சி அவளிடம்.
“ஏன்? பொண்ணு எதுவும் கஷ்டமானக் கண்டிசன் போட்டுச்சா?”
“சேச்சே! அதெல்லாம் இல்ல. நல்லப்பொண்ணுதான். நல்லப் பொண்ணா இருக்குறது மட்டுமே மேரேஜ் லைஃபுக்கு போதாதே”
ஆதிரா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“நீங்க இவ்ளோ தூரம் பேசுறதுக்கு உங்களுக்குப் படையப்பா நீலாம்பரி மாதிரி பொண்டாட்டிதான் வரப்போகுது” என்றாள்.
“இதென்ன விசித்திரமானச் சாபம்?” சிரித்தபடியே கேட்டான் புவனேந்திரன்.
“பின்ன? நல்ல பொண்ணு பிடிக்கலனு சொல்லுறவங்களுக்கெல்லாம் வில்லிப்பொண்ணுதான் பொண்டாட்டியா வரும். அப்பிடித்தானே கதிர்? பாரேன் உனக்கு வரப்போற பெரியம்மா ரவுடி பேபியா இருக்கப்போகுது”
அவள் சொல்வது புரியவில்லை என்றாலும் கதிர்காமன் பூவாய்ச் சிரித்தான். புவனேந்திரனோ புரிந்ததாலேயே சிரித்தான்.
“அவினாஷ் என்ன சொல்லுறாப்ல?” மெல்ல விசாரித்தான் அவளிடம்.
“டெய்லி பேசுறோம். ஹாய், ஹலோ, குட்மானிங், குட் நைட். இவ்ளோதான். இதைத் தாண்டி ஒரு வார்த்தை அதிகமா பேசிக்கிறதில்ல. கல்யாணம் வரைக்கும் இதையே மெயின்டெயின் பண்ணுவோம்னு அவரும் நினைக்குறார் போல”
“நல்ல முடிவு. அளந்து பேசணும்ங்கிற அறிவு நிறைய ஆம்பளைங்களுக்குக் கல்யாணத்துக்கு அப்புறம்தான் வருமாம். அவினாஷுக்கு இப்பவே வந்திடுச்சு பாரு. யூ ஆர் லக்கி”
“அப்பிடி இருந்தா நல்லாதான் இருக்கும்”
அரைமனதோடு கூறினாள் ஆதிரா.
“சியர் அப் லேடி. நீ இவ்ளோ அழுது வடிய அவசியமே இல்ல. கொஞ்சம் நீ அனுசரிச்சு அவினாஷுக்காக யோசிச்சனா போதும். அந்தப் பையன் உன்னையே சுத்தி சுத்தி வருவான். பொதுவா தன் குடும்பத்துக்கும் பொண்டாட்டிக்கும் இடையில அல்லாடுற ஆம்பளைங்களோட அதிகபட்ச எதிர்பார்ப்பு பொண்டாட்டியோட அன்பு மட்டும்தான். அது கிடைச்சிட்டா அவன் சரண்டர் ஆகிடுவான் அவ கிட்ட.”
ஆதிரா ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
“அப்பிடியா சொல்லுறிங்க? காசா பணமா? அன்பு தானே? கழுதைய குடுத்துப் பாப்போம்” என்றாள் கேலியாக.
பின்னர் சமையலறை பக்கம் திரும்பிப் பார்த்தவள் “இன்னைக்கு அம்மா நீங்கல்லாம் வருவிங்கனு சூப்பரா சமைச்சிருக்காங்க. வெங்காய வடகம் மலருக்குப் பிடிக்குமாமே!” என்க
“ஆமா! அதை மட்டும் ப்ளேட் நிறைய குடுத்தாலும் சாப்பிடுவானு மாறன் கிண்டல் பண்ணுவான்” என்றான் புவனேந்திரன்.
பேச்சினிடையே அரவிந்தனிடமிருந்து அழைப்பு வந்தது. பேசும்போதே முகம் மாறியது அவனுக்கு. சரிசரியெனக் கேட்டுக்கொண்டவன் அழைப்பைப் பேசி முடித்தபோது ஆதிராவின் முகத்திலும் யோசனை பாவனை.
“என்னாச்சு? அதுக்குள்ள சீரியஸ் புவன் ஆகிட்டிங்க”
“தொழில்ல வர்ற டென்சன். வேற எதுவுமில்ல. ஹான்! ஹோட்டல்ல இருக்குற சௌத் இந்தியன் ரெஸ்ட்ராண்டுக்கு உங்க கிட்டவே மொத்தவிலைக்கு எண்ணெய் வாங்கலாம்னு என் பி.ஏ அரவிந்த் சொன்னான். அதை பத்தி இங்க வச்சு பேச முடியாது. உன்னால திருநெல்வேலிக்கு வரமுடியுமா?”
ஆதிரா யோசித்தாள்.
“முதலாளியம்மா பிசினு தெரியும். ஆனா அக்ரிமெண்ட் சைன் பண்ணனும்னா வேற வழியில்லையே?” புவனேந்திரன் கிண்டல் செய்யவும்
“புதன்கிழமை உங்களுக்கு ஓ.கேவா? அன்னைக்குத்தான் வேற எந்த வேலையும் இல்ல எனக்கு” என்றாள்.
“ஓ.கே! பட் பதினோரு மணிக்கு முன்னாடி வந்துடு. அதுக்கு அப்புறம் நான் ஹோட்டலோட ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டையும் இன்ஸ்பெக்ட் பண்ண கிளம்புவேன்”
“டன்”
கட்டைவிரலை அவள் உயர்த்திக் காட்டவும் மடியிலிருந்த கதிர்காமன் சிரித்தான்.
தொழில்ரீதியான ஒப்பந்தத்துக்காக இணையப்போகும் இருவரையும் வாழ்க்கையில் இணைய வைப்பதற்கான முதல் திருப்பம் இனிதானே அரங்கேறப்போகிறது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


 Written by
Written by