“ஃபெமினிட்டினா என்ன? ரொம்ப சாஃப்ட்டா, ரொம்ப பாசமா, பிரச்சனைய பாத்ததும் எதிர்கொள்ள தெரியாம அழுதுகிட்டு இருக்குறதா? சத்தியமா இல்ல. உண்மையான ஃபெமினிட்டினா தனக்குப் பிடிச்ச விஷயத்துக்காகவும், தனக்குன்னு ஒரு கட்டுப்பாடு (எல்லை) வச்சுக்கிட்டு, உறுதியா நிக்கிற தைரியம் இருக்குல்ல, அந்த வலிமையான உணர்ச்சிதான். அதே மாதிரி, ஒரு பொண்ணோட நளினம் (Grace)-ங்கிறது அவளோட அழகுல மட்டும் இல்ல. எவ்வளவு தெளிவாவும், தன்னம்பிக்கையோடவும், நிதானத்தோடவும் அவ நடந்துக்கிறாங்கிறதையும் சேர்த்துதான். அவ தைரியமா ஒரு விஷயத்தை எதிர்த்து நிக்கும்போது, அந்தத் துணிச்சலான கெத்து அவளோட நளினத்தை இன்னும் அழகாக்கும். அதனால, ஒரு பொண்ணு தைரியமா இருக்கான்னா, அவளோட மென்மையும், அழகும் போகாது. மாறாக, அவளோட கேரக்டரே (ஆளுமை) இன்னும் ஸ்ட்ராங்கா, டீப்பா மாறும்.”
-ஆதிரா
ஹிப்நாடிக் ஹில்ஸ்…
வயநாட்டின் அச்சூர் தேயிலை எஸ்டேட்டின் நடுவில் இருக்கும் ரிசார்ட்டின் டீ பங்களாவைத் தேனிலவுக்காகப் புக் செய்திருந்தான் புவனேந்திரன். தேர்வு செய்ததென்னவோ மலர்விழியும் மகிழ்மாறனும்தான். அவர்களின் தேனிலவும் அங்கேதானே நடந்தது.
ஆதிராவுக்கு அந்த ரிசார்ட் பிடித்திருந்தது. அவர்களது டீ பங்களா அறைக்கு வெளியே இருந்த மரமொன்றில் தொங்கிய மூங்கில் கூடை ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து நிதானமாக ஆடியபடியே அன்னையிடம் தாங்கள் இருவரும் பாதுகாப்பாக அங்கே வந்துவிட்டதாக மொபைல் மூலம் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தாள்.
புவனேந்திரன் அவளது விருப்பமான உணவுகளை இரவில் தங்களது அறைக்கே கொண்டு வந்து ‘கேண்டில் லைட் டின்னர்’ போல ஏற்பாடு செய்யுமாறு ரிசார்ட் மேலாளரிடம் சொல்ல போயிருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மேலாளரும் குறித்துக்கொண்டவர் “இங்க இருந்து முப்பத்தைஞ்சு கிலோ மீட்டர்ல வள்ளியூர்காவு பகவதி கோவில் இருக்கு சார். அங்க இப்ப பதினாலு நாள் திருவிழா நடக்குது. வாய்ப்பிருந்தா போய் பாருங்க சார். உங்களால மறக்கவே முடியாது” என்றார்.
அதை மனதில் குறித்துக்கொண்டான் புவனேந்திரன்.
“ஓ.கே! அப்ப நாளைக்குக் கேண்டில் லைட் டின்னர் அரேஞ்ச் பண்ணிடுங்க. இன்னைக்கு லைட்டா இட்லி மட்டும் போதும்”
அவன் திரும்பி டீ பங்களாவுக்கு வந்தபோது ஆதிரா பாடலைக் கேட்டபடி மூங்கில் கூடை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்.
புவனேந்திரனைக் கண்டதும் “எங்க போனிங்க புவன்? சாங் கேக்குறிங்களா?” என்று இயர்பட்சை நீட்டியபடி ஊஞ்சலில் நகர்ந்து அமர்ந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
“ரெண்டு பேர் வெயிட்டை ஊஞ்சல் தாங்குமா?” சந்தேகத்தோடு கேட்டபடி அமர்ந்தான் புவனேந்திரன். வலிமையான மூங்கில் கட்டையால் பின்னப்பட்ட கூடை வடிவ ஊஞ்சல் பாந்தமாக இருவரையும் தனக்குள் அமர்த்திக்கொண்டது.

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க..
சட்டெனக் காதிலிருந்து இயர்பட்சைக் கழற்றிய புவனேந்திரன் “என்ன இது? காதல் பாட்டு கேக்குறனு நினைச்சா கள்ளக்காதல் பாட்டு கேட்டுட்டிருக்க?” எனக் கிண்டல் செய்ய ஆதிரா அவனது அவனது முதுகில் அடித்தாள்.
“பாட்டைக் கேளுங்கனா படக்கதைய ஏன் ரிவியூ பண்ணுறிங்க? அருமையா இருக்கும் இந்தப் பாட்டு” என்றவள் அவன் காதில் இயர்பட்சைத் திணித்துக் கேட்கச் சொல்ல
“இதுல்லாம் வயலென்ஸ்ல சேர்த்தி” என்று முணுமுணுத்தபடி பாடலை அரைமனதோடு கேட்க ஆரம்பித்தான் அவன்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை என்றால் அவனுக்கும் பிரியமே. இந்தப் பாடலை பாடிய மூன்று பாடகர்களின் குரலும் அவனுக்குப் பிடித்தமானது. அதனால் படத்தின் கதையுடைய கருவைப் பற்றி யோசிக்காமல் பாடலில் ஆழ்ந்துவிட்டான்.
புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா
நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்
அவனும் ஆதிராவும் பாடல் வரிகளில் மூழ்கியிருந்த அதே நேரத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் அவினாஷின் சூப்பர் மார்க்கெட்டில் அவனுக்கும் சுஜாதாவுக்கும் சின்னதாய் ஒரு வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
“ஊர்ல வேற எண்ணெய் மில்லே இல்லையா அவினாஷ்? ஏன் அந்த அகம் பிடிச்ச கழுதையோட மில்லுல போய் வாங்க ஒப்பந்தம் போட்டிருக்க? சும்மாவே ஆடுவா அவ. இதுல நீ அவ காலுல சலங்கை கட்டி விட்டிருக்க”
“உன்னைக் கோவில்ல வச்சு மாமா முன்னாடி அசிங்கப்படுத்துனானு சொன்னல்லக்கா. அதை அப்பிடியே விட்டுட முடியுமா? அப்பிடி விட்டா நான் என்ன ஆம்பளை?”
அவினாஷின் முகத்தில் சீற்றம் தெரிந்தது. சுஜாதாவுக்கோ கவலை! எங்கே ஆதிராவினால் தம்பி சிக்கலில் மாட்டிக்கொள்வானோ என்ற அச்சம்! அவனது வாழ்க்கையைப் பாதிக்கும் எந்தவொரு காரியத்திலும் இறங்கிவிடக்கூடாதே என்ற தவிப்பு!
“ப்ச்! அதை விட்டுத் தள்ளு அவினாஷ். அவளுக்குப் போட்டியா நீ தொழில்ல வளர்ந்து காட்டுடா. அது போதும் எனக்கு. நீ ஆம்பளைனு அங்க நிரூபி. மத்ததை மறந்துடு”
“இல்லக்கா! அவ ஆரம்பத்துல இருந்தே நம்மளை ஏதோ புழு பூச்சி போல தான் ட்ரீட் பண்ணுனா. பொண்ணு பாக்க போன இடத்துல சபைல விழுந்து நமஸ்காரம் பண்ண சொன்னதுக்கு எவ்ளோ பெரிய லெக்சர் அடிச்சா? ஆப்டர் ஆல் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ திமிரா? அதை அடக்கவேண்டாமா? அவளைத் தலை குனிய வைக்க நான் எதுவும் செய்வேன்கா”
“டேய்! எனக்கு உன் உணர்வுகள் புரியுது. ஆனா அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல”
“சும்மா இருக்கா. இப்பிடி சொல்லி சொல்லிதான் அவ கர்வமா திரியுறா. அந்தக் கர்வத்தை உடைச்சு என் காலடில அவளை விழவைப்பேன்”
“அவ இன்னொருத்தன் பொண்டாட்டி, அதை மறந்துடாத”
தமக்கை சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் சத்தமாய்ச் சிரித்தான் அவினாஷ்.
“அப்பிடியெல்லாம் உன் தம்பி வழி தவறிட மாட்டேன்கா. எதுக்கெடுத்தாலும் தலையைச் சிலுப்பிட்டுப் பேசுறவ கிட்ட இத்துணூண்டு பெண்மைய கூட நான் உணர்ந்ததில்ல. பொண்ணுங்களுக்கு இருக்க வேண்டிய நளினம், அமைதினு எதுவுமே இல்லாத ஒருத்திய என்னால எந்தக் காலத்துலயும் வேற மாதிரி நினைக்க முடியாது. அவளோட கர்வம் இருக்கே, அதை உடைச்சா போதும் எனக்கு. உடைப்பேன் நான்”
அவினாஷின் இந்தச் சங்கல்பம் சுஜாதாவுக்குப் பெருங்கவலையை உண்டாக்கிவிட்டது.
ஒரு பெண் தைரியமாய் இருந்தால், தனக்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்தால் அவளை ஆண்பிள்ளை மாதிரி நடந்துகொள்வதாகக் கூறுவார்கள். தைரியமும் நிமிர்வும் ஆண்களின் சொத்து என்ற நினைப்பு சிலருக்கு.
பெண்மையும், பெண்மையின் நளினமும் தைரியமானப் பெண்களிடம் தொலைந்து போவதாகச் சில ஆண்களுக்கு எண்ணம். அவர்களுக்குத் தங்கள் அதிகாரத்திற்குச் சவால் விடாத, மென்மையான மற்றும் கீழ்ப்படிதல் கொண்ட பெண்கள் மட்டுமே கவர்ச்சியாக நளினமாகத் தோன்றுவார்கள். குறிப்பாக அவர்களுக்குத் தைரியமான பெண்கள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். இவர்கள் எல்லாம் போன தலைமுறையின் பொதுமைப்படுத்துதலைத் தலைக்குள் ஏற்றிக்கொண்டு திரிபவர்கள்.
நவீன யுகத்து ஆண்கள் ஒரு பெண்ணின் தைரியத்தையும் துணிச்சலையும் கவர்ச்சிகரமான குணமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையைப் பகிர்வதற்கு தேடுகிற இணை எல்லா நேரத்திலும் பயந்து மருண்டு விழிப்பதையும், அழுகையில் கரைவதையும் விரும்புதில்லை. தைரியம், தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் ஒருவரின் எல்லைகளைத் தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றை ஆளுமை கவர்ச்சியின் முக்கிய அம்சங்களாக நவீனகாலத்து ஆண்கள் கருதுகிறார்கள். ஒரு தைரியமான பெண் தன்னம்பிக்கை கொண்டவளாக அவர்களது கண்களுக்குத் தோன்றுகிறாள்.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால் ஆளுமையான ஆண் ஒருவனால் மட்டுமே ஆளுமையானப் பெண்ணைச் சமாளிக்க முடியும். ஆளுமையற்ற ஆணோ ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என திராட்சைக்கொடியை எட்டிப் பிடிக்க முடியாத நரி போல தன்னால எதிர்கொள்ள முடியாத ஆளுமையுடன் கூடிய பெண்ணை ஒதுக்கியதாக ஜம்பமாய் பேசுவான். அவினாஷும் இந்த வகையறாவே!
புவனேந்திரன் சொன்ன ‘மிரர் சோல் தியரி’யில் இந்த ஆளுமையும் அடங்கும். அதனாலேயே ஆதிராவால் புவனேந்திரனுடன் தடையின்றி பழக முடிந்தது. அவளது ஆளுமையையும் தாண்டி சின்ன சின்ன நாணம், குறுஞ்சிரிப்பு, கண்களில் தெரியும் மையலைப் புவனேந்திரனாலும் ரசிக்க முடிந்தது.
இதோ இப்போது கூட மேலாளர் சொன்ன கோவிலுக்குச் செல்லலாமென முடிவெடுத்து அவளைக் கிளம்பச் சொன்னவன் புடவையில் பாந்தமாய் தயாரானவளை அவ்வளவு ரசித்தான்.
காதுகளில் குட்டியாய் ஜிமிக்கி, ஆலிவ் பச்சையில் அடர்பச்சையில் சிறிது ஜரிகையுடன் பார்டரிட்ட மங்கலகிரி காட்டன் புடவை, வழக்கம் போல க்ளட்சில் அடங்கிய கூந்தல் என அவளது அழகுக்குக் குறைவில்லை.
கேரள கோவில்களில் பாரம்பரிய உடை என்பது கட்டாயம். தேனிலவுக்குக் கேரளாவைத் தேர்வு செய்தபோதே கண்டிப்பாக ஒரு கோவில் விசிட் வேண்டுமெனக் கேட்டுத் தனக்கும் புவனேந்திரனுக்குமாக ஒரே நிறத்தில் ஆதிரா உடை எடுத்து வைத்திருந்தாள்.
ஆலிவ் பச்சை குர்தா, க்ரீம் வண்ண வேஷ்டி அவனுக்கு. அதில் அவனும் கம்பீரமாய் இருந்தான் எனத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை.
“கிளம்பலாமா?” என்று அவள் கேட்க
“கண்டிப்பா கிளம்பணுமா?” என்று அவன் பதிலுக்குக் கேட்க, இம்முறை ஆதிராவிடம் கிள்ளு வாங்கியது புவனேந்திரனின் புஜம்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் வலித்த புஜத்தைத் தடவிக்கொண்டு அவனும், நமட்டுச்சிரிப்போடு அவளும் காரிலேறினார்கள்.
வள்ளியூர்காவு பகவதி கோவில் அமைதியான இடத்தில் எளிமையாய் இருந்தது. சொல்லப்போனால் இயற்கைக்கு நெருக்கமாய் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இடத்தில் இருந்தது.
அந்தக் கோவில் ஒரு காலத்தில் பழங்குடியினர் மட்டுமே வணங்கக் கூடிய கோவிலாக இருந்து இப்போது எல்லா தரப்பு மக்களும் வந்து செல்லக் கூடிய கோவிலாக மாறியிருந்தது.
இந்தப் பதினான்கு நாட்கள் திருவிழாவும் பழங்குடி மக்களால்தான் நடத்தப்படும்.
ஆதிராவும் புவனேந்திரனும் அங்கே சென்றபோது மானந்தவாடிக்கு அருகிலுள்ள பள்ளியற பகவதி கோவிலில் இருந்து தலைமைப் பூசாரி அம்மனின் புனித வாளை எடுத்து வந்தார்.
கூட்டம் ஜேஜேவென இருந்தது. ஒரு பக்கம் திருவிழாக்களுக்கே உரித்தான கடைகள், பொழுதுபோக்குக்கான இராட்டினங்கள், வேடிக்கை விளையாட்டுகள் என அனைத்தும் இருந்தன அங்கே.

படிகளில் ஏறி மேலே இருந்த கேரளா பாணி கோவிலில் மூன்று ரூபங்களில் இருந்த பகவதியைத் தரிசித்துவிட்டுக் கிளம்ப எத்தனித்தபோது கேரளப் பகுதிகளிலிருக்கும் கோவில்களில் முக்கியமாக நடைபெறும் சடங்கான தெய்யத்தின் முதல் பகுதி ஆரம்பித்திருந்தது. அதை வெள்ளாட்டம் என்பார்கள்.
ஆதிராவும் புவனேந்திரனும் முதல் முறை இதையெல்லாம் பார்க்கிறார்கள். ஆச்சரியமாக அங்கே நடப்பதை அவர்கள் பார்க்க ஆங்காங்கே சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இப்படியே பத்துமணி ஆகிவிட்டது. அப்போதுதான் தெய்யத்தின் முக்கியப்பகுதி ஆரம்பித்தது. அதில் கோவிலில் இருக்கும் மூல தெய்வத்தை அடிப்படையாக வைத்து தெய்யாட்டம் நடக்கும். இங்கே மூலதெய்வம் பகவதி என்பதால் பகவதி தெய்யம் ஆடும் நபர் வந்துவிட்டார். அந்த நபர் தெய்வமாகக் கருதப்படுவார்.
முகத்தில் பலவித இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட வடிவங்கள், செயற்கையான கோரைபற்கள், நீண்டு விரிந்த கூந்தல், மூங்கிலால் செய்யப்பட்ட தலை க்ரீடம், கால் சிலம்பு என பார்க்கையில் தெய்வமே நேரில் வந்து நிற்பது போல இருந்தது.

தெய்யம் சடங்குக் கலையின் அடிப்படை நம்பிக்கையே, சடங்கு நிகழ்த்துபவர் வழியாக தெய்வமே மனித உடலுக்குள் இறங்கி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுதான். பார்க்கும்போது புல்லரித்தது இருவருக்கும்.
பதினோரு மணிக்கு இருவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அங்கிருந்து அச்சூர் செல்ல நேரமாகுமே!
பயணத்தினிடையே ஆதிரா உறங்கிவிட்டாள்.
அவர்களின் கார் ரிசார்ட் வந்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கார் நின்ற பிறகு அவளை எழுப்ப மனமேயில்லை புவனேந்திரனுக்கு. வெகு நேரம் நின்று தெய்யம் ஆடியதை வீடியோ எடுத்தாளே! கால்கள் கூட வலி கண்டிருக்கும்.
அவளைப் பூ போல் தூக்கிக்கொண்டு டீ பங்களாவிற்கு சென்றவன் படுக்கையில் படுக்க வைத்தபோது உறக்கம் கலைந்துவிட்டது ஆதிராவுக்கு.
அவனுக்கு இரவுணவு எடுத்துவ இக்க எழுந்திருக்கப் போனவளின் தோளில் தட்டி “பசியில்ல.நீ தூங்குமா!” என்றான் அவன்.
அவன் தட்டிக்கொடுத்ததில் ஆதிரா உறங்கிவிட்டாள். அவளது க்ளட்ச் கிளிப்பையும் ஜிமிக்கியையும் உறக்கம் கலையாதவண்ணம் கழற்றி வைத்தான். உறக்கத்தில் புரண்டால் அது தொந்தரவாக இருக்குமே என்ற எண்ணம்.
அங்கே இருந்த குளிருக்கு இதமாகக் கம்ஃபோர்டரைப் புவனேந்திரன் அவளுக்குப் போர்த்திவிட ஆழ்ந்து உறங்கிப்போனாள் ஆதிரா.
கோவிலில் உள்ள கடைகளில் வாங்கி சாப்பிட்ட சிற்றுண்டிகளும் தேனீரும் வயிற்றை அடைத்துவிட புவனேந்திரனும் உடைமாற்றிவிட்டுப் படுத்தான்.
தன்னருகே படுத்திருந்தவளின் கூந்தலை ஒதுக்கிவிட்டவனுக்கு உறக்கத்தில் கூட பேரழகியாகத் தெரிந்தவளை விழியகற்றாமல் பார்க்கப் பிடித்தது.

இதென்ன பைத்தியக்காரத்தனம்? நள்ளிரவில் விளக்கை போட்டுவிட்டு கொட்ட கொட்ட விழித்து உறங்கிக்கொண்டிருப்பவளைப் பார்ப்பது என்று உங்களுக்குத் தோன்றலாம்! மனித மனதில் இம்மாதிரி எழும் சின்ன சின்ன பைத்தியக்காரத்தனமான ஆசைகளை அவ்வபோது நிறைவேற்றிதான் பாருங்களேன்! அப்போதுதான் அந்த நொடியில் அடையும் மனநிறைவு எப்படிப்பட்டதென உங்களுக்கு புரியும்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

