“ஊடல் அழகானதுனு ஏன் சொல்லி வச்சாங்கனு இப்ப புரியுது. பேசாத மௌனமும், தவிர்க்கப்படுற பார்வைகளும் எங்களுக்கு நடுவுல இமயமலைய உருவாக்கிடுச்சோனு தோணுச்சு நேத்து எல்லாம். தீ மாதிரி எரிஞ்சிக்கிட்டிருந்த கோவம் எல்லாம் சட்டுனு அணைஞ்சு போன மாதிரி இருக்கு. என் உடம்பும் சரி மனசும் சரி புவனோட அரவணைப்புல குழந்தையா மாறுனதா உணர்ந்தேன் நானு. ஒரு சண்டைக்கு அப்புறம் வர்ற காதல் கணங்கள் எல்லாம் மிளகாய்ப்பொடி தூவுன சர்க்கரைப்பொங்கல் மாதிரி! கொஞ்சம் ஸ்பைசியா எக்கச்சக்க இனிப்பா என்னனு தெரியாத ஒரு மாதிரி ஃபீல் இது!”
-ஆதிரா
பன்னீர் ரோஜா பதியன்கள் செழித்து வளர்ந்திருந்தன. ஒரு ஓரமாய் நின்று அவற்றில் தலைநீட்டியிருந்த மொட்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.

புவனேந்திரன் இன்னொரு பக்கம் செழித்து வளர்ந்திருந்த வாழைகளைத் தேடிப் போய்விட்டான்.
தோட்டத்தின் இன்னொரு பகுதியாக வளர்ந்திருந்த வாழைமரங்களுக்குக் காலையில்தான் சிகாமணி தண்ணீர் பாய்ச்சிவிட்டுப் போயிருந்தார். தரை கொஞ்சம் சதசதவென ஈரமாய்ச் சகதி கட்டிப் போயிருந்தது.
புவனேந்திரன் அணிந்திருந்த தோல் செருப்பில் நீரும் சகதியுமாய் மண் ஒட்டிக்கொண்டது. அதை உதறியபடி நடந்தவனுக்கு இந்தச் சூழலே புதிதுதான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எப்படி ஆதிராவிடம் பேச்சை ஆரம்பிப்பது? இந்த யோசனை மனமெகும் வியாபித்திருந்தது அவனுக்கு. இருவரையும் தனித்திருக்க வைத்துவிட்டுச் சிகாமணி கிளம்பியதுமே பனிமூட்டம் சூழ்வதைப் போல இருவரையும் கனத்த அமைதி சூழ்ந்துகொண்டது.
ஆதிரா ரோஜாக்கள் பக்கம் செல்வதைப் பார்த்தவன் என்ன சொல்லி அவளைச் சமாதானப்படுத்தலாமென யோசித்தபடியே வாழைமரங்கள் அடர்ந்த பகுதிக்குப் போய்விட்டான்.
ஆதிரா நடந்தபடியே ரோஜா செடிகளையும் அவற்றில் குட்டி குட்டியாய் முளைத்திருந்த மொட்டுகளையும் ரசித்தபோதே அவளது மொபைல் இசைத்தது. அழைத்தவர் சிகாமணியே!
‘சமையல் முடிந்ததும் மொபைலில் அழைக்கிறேன் என்றாரே! அவர் சென்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவா குழலி சமைத்துவிட்டார்?’
சிறிய ஆச்சரியத்துடன் அழைப்பை ஏற்றாள் அவள்.
“சொல்லுங்க சித்தப்பா”
“உங்க கிட்ட ஒரு விசயத்தைச் சொல்ல அயித்துப் போனேன்ல (மறந்துட்டேன்). நம்ம வாழைத்தோட்டம் பக்கம் போனா கொஞ்சம் கவனமா இருக்கனும். வாழைமரத்துல நிறைய கடந்தை (ஒரு வகை விஷக் குளவி) கூடு பாத்தேன். கடந்தை கொட்டுனா மருந்தே கிடையாதும்பாவ. கவனம்”
“சரிங்க சித்தப்பா. நான் பாத்துக்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள் புவனேந்திரன் எங்கேவெனத் தேடினாள்.
தோட்ட வீட்டில் அவனைக் காணவில்லை. பூச்செடிகள் வளர்ந்திருந்த பக்கம் அவன் எட்டிப் பார்க்கவும் இல்லை. ஒருவேளை வாழைத்தோட்டத்திற்கு சென்றிருப்பானோ?
மொபைலில் இருந்து அவனது எண்ணுக்கு அழைத்தாள். ஆனால் அவனது மொபைல் ரிங்டோன் தோட்ட வீட்டுக்குள் கேட்கவும் போனை வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்பது தெரிந்தது அவளுக்கு.
அவசரமாக வாழைத்தோட்டத்தை நோக்கி நடந்தாள். செழித்து வளர்ந்திருந்த வாழைகளும், அதில் தொங்கிய பெரிய வாழைப்பூக்களும், வாழைக்குலைகளும் அழகுதான். ரசிக்க ஆசையாக இருந்தாலும் சிகாமணி சொன்ன கடந்தை பற்றிய எச்சரிக்கை பயத்தைக் கொடுத்தது.
கடந்தை என்ற ஒரு வகை விஷக்குளவி உடலில் மஞ்சள் கோடுகள் கொண்டது. அது கொட்டினால் உடனடியாக சிகிச்சை பார்த்தாகவேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு நிச்சயம்.
அப்படி கடந்தை கொட்டி இறந்த கதைகள் அவர்கள் பக்கத்தில் ஏராளம். அதனாலேயே ஆதிராவின் மனதில் புதியதொரு பயம் பீடித்துக்கொண்டது.
“புவன்” சத்தமாக அழைத்தபடி முன்னேறியவளின் புடவை நீரும் சகதியுமாக இருந்த மண்ணில் புரண்டு கொண்டே வருவதை அவள் கவனிக்கவில்லை.
தூரத்தில் ஆதிராவின் குரல் கேட்டதும் புவனேந்திரனின் யோசனை கலைய அவனும் குரல் வந்த திசையை நோக்கி நடைபோட்டான்.
“புவன்” பெருங்குரலில் அழைத்தவள் தனது புடவையின் கீழ்பகுதி பார்டர் முழுவதும் சேறானதை அப்போதுதான் கவனித்தாள்.
குனிந்து புடவையைக் கொஞ்சம் கரண்டை அளவு தூக்கிக்கொண்டவளின் செருப்பு முழுவதும் சகதி. அதோடு சேற்றில் சிக்கிக்கொண்டதால் வெளியே வராமல் சதி செய்யவும் எரிச்சலின் உச்சக்கட்டத்துக்குப் போய்விட்டாள் ஆதிரா.
புவனேந்திரன் வேறு வரவில்லை என்றதும் எரிச்சலோடு பதற்றமும் சேர்ந்துகொண்டது.
“புவன்” மூன்றாவது முறையாக அவள் கோபத்தோடு கத்தவும் புவனேந்திரன் அங்கே வரவும் சரியாக இருந்தது.
“என்னாச்சு ஆதி?” என்றபடி வந்தவனிடம்
“என்ன நொன்னாச்சு ஆதி? காட்டுக்கத்து கத்துறேன், காது கேக்கல உங்களுக்கு?” என்று கோபமாய்க் கத்தினாள் ஆதிரா.
அவனை எந்தக் கடந்தையும் எதுவும் செய்யவில்லை என்ற நிம்மதி ஒரு புறம் இருந்தாலும் ‘எங்கே அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ’ என முன்பிருந்த பயமும் குறையவில்லை.
கூடவே செருப்பும் புடவையும் சேற்றில் வீணான கடுப்பும் சேர்ந்துகொள்ள கத்தியேவிட்டாள். சொல்லப்போனால் முந்தைய தினம் நடந்ததற்கும் சேர்த்துதான் இந்தக் கோபம் என்பதைப் புரிந்துகொண்டான் புவனேந்திரன்.
“நான் உள்ள வரைக்கும் போயிட்டேன். அதனாலதான் வர டைம் ஆச்சு” அவளது செருப்பு சேற்றில் புதைந்திருப்பதையும் ஒரு காலை அவள் தூக்கிக்கொண்டு நிற்பதையும் பார்த்தவன் அவளருகே வந்தான்.
“என்ன செய்யப் போறிங்க?” என்று வினவினாள் ஆதிரா.
புவனேந்திரன் பதில் சொல்லாமல் அவளைத் தூக்கிக்கொண்டான் தனது கைகளில்.

“ஐயோ செருப்பு”
“அது என்ன சின்ட்ரெல்லாவோட க்ளாஸ் ஸ்லிப்பரா? கிடக்கட்டும்”
“இந்த நக்கல் பேச்சுக்கெல்லாம் குறைச்சலே இல்ல”
“அதை விடு! ஏன் இவ்ளோ கோவம் உனக்கு?”
“இந்த வாழைத்தோட்டத்துல கடந்தைக்கூடு நிறைய இருக்குதாம், சித்தப்பா கால் பண்ணி கவனமா இருங்கனு சொன்னாரு. நீங்க தான் இங்க வந்ததுல உலகத்தையே மறந்துட்டிங்களே”
“ஒரு குளவிக்கூட்டை நினைச்சா இவ்ளோ பயம்?”
“அது சாதாரணக் குளவி இல்ல. தங்கவேலு மாமாவோட சொந்தக்காரர் ஒருத்தர் போன வருசம் கடந்தை கொட்டி செத்துப் போயிட்டார் தெரியுமா?”
ஆதிரா கதை போல சொல்லிக்கொண்டு வர இருவரும் பேச்சுவாக்கில் வாழைத்தோட்டத்தை விட்டு பூந்தோட்டத்தை அடைந்தார்கள்.
“இறக்கி விடுங்க. மோட்டார் பம்ப் செட் அங்க இருக்கு. கால்ல ஒட்டியிருக்க சேறைக் கழுவணும்”
ஆதிராவை இறக்கிவிட்டவன் மோட்டார் ரூமுக்குள் சென்று அதை ஆன் செய்ய தடதடவென மோட்டார் ஓட ஆரம்பித்ததும் தண்ணீர் தொட்டியில் கொட்ட ஆரம்பித்தது. ஆதிரா சேறாகியிருந்த காலைக் கழுவிக்கொண்டாள்.

புவனேந்திரன் கால்கள், செருப்பைக் கழுவிக்கொண்டவன் “புடவை கூட சேறாகிடுச்சே” என்று சொல்ல
“ம்ம்” என்றவள் கைகளால் கசக்கிப் புடவையின் அடிநுனியில் இருந்த சேற்றைத் தண்ணீரில் கழுவினாள்.
“கோவம் போயிடுச்சா?” புவனேந்திரனின் குரலில் மெல்லிய ஆர்வம்.
“போகலனா என்ன பண்ணப்போறிங்க? நேத்து நான் கொதிச்சுப் போயிருந்தேன். இப்பவும் அந்த ஹீட் அடங்கல”
புவனேந்திரன் தொட்டில் விழுந்த நீரை அள்ளி அவள் மீது வீச “புவன்” என்றபடி நிமிர்ந்தவள் “என்ன விளையாட்டு இது?” என்று கேட்க
“கொதிச்சுப் போனவளைச் சில்லுனு மாத்துறதுக்கு என்னோட சின்ன முயற்சி” என்றவன் இன்னொரு கை நிறைய நீரை அள்ளி அவள் மீது வீசினான்.
இம்முறை ஆதிராவின் முகத்தில் தண்ணீர் தெறித்து முகத்தை நனைத்துவிட்டது. ஆனால் அவள் இப்போது முறைக்கவில்லை. மெல்லிய முறுவல் அவளிடம்.
ஓரளவுக்குப் புடவையிலிருந்த சேறு போய்விட்டது. புவனேந்திரன் அமர்ந்திருந்த பம்ப் செட் தண்ணீர் விழும் தொட்டியின் திண்டில் அவனருகே போய் அமர்ந்தாள்.
“நாம ஒரு டீல் பேசிப்போமா?” என்றாள் அவனைப் பார்த்தபடி.
“என்ன டீல்?”
“இனிமே ஒருத்தர் இன்னொருத்தரோட பிசினஸ்ல மூக்கை நுழைக்க மாட்டோம்னு”
புவனேந்திரன் கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.
“என்ன பாக்குறிங்க? டீலா? நோ டீலா?”
“நோ டீல்னு சொன்னா மறுபடியும் நமக்குள்ள அசௌகரியமான மௌனம் வந்துடுமே! அதுக்கு இடம் குடுக்க எனக்கு விருப்பமில்ல. அதே நேரம் நோ டீல்னு சொல்லி ஒரேயடியா நீ எப்பிடியோ போனு என்னால விடவும் முடியாது”
ஆதிரா அவனது கையைப் பிடித்தவள் “பெருசா என்னால சமாளிக்க முடியாத பிரச்சனையோ சவாலோ வர்றப்ப நான் கண்டிப்பா உங்க கிட்ட தான் உதவிக்கு வந்து நிப்பேன் புவன். நான் சொல்ல வர்றது பிசினஸ்ல நாம எடுக்குற முடிவுகளைப் பத்தி. ஒருத்தரோட பிசினஸ் சம்பந்தப்பட்ட முடிவை இன்னொருத்தர் எடுக்க வேண்டாம். அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லதுனு நினைக்குறேன். உங்க ஒபீனியன் என்ன?” என்று கேட்க
“நீ சொல்லி நான் மறுக்க என்ன இருக்கு ஆதி? பவுண்டரி வயலேசன் தப்புதான். ஒத்துக்குறேன். இனிமே இது நடக்காது. ஐ அக்ரி டு யுவர் டீல்” என்றான் புவனேந்திரன்.
தொடர்ந்து “எல்லா நேரமும் இக்னோர் நெகடிவிட்டிங்கிற பாலிசி சாத்தியப்படாது ஆதி. ஒரு பிசினஸ் வுமனா நீ இதையும் புரிஞ்சிக்கனும். எப்பவுமே உன் பிசினஸ் முடிவுகள்ல உன் உணர்ச்சிகளை ஆதிக்கம் செலுத்த விடாத” என்றான் கனிவானக் குரலில்.
ஆதிரா அவனது புஜத்தை இரு கரங்களால் தழுவிக்கொண்டவள் “ட்ரை பண்ணுறேன்.” என்று சொல்லி கண் சிமிட்ட குனிந்து தொட்டியில் கிடந்த தண்ணீரை அள்ளி அவள் மீது வீசினான் புவனேந்திரன்.
“மறுபடியுமா?” எனத் தரையில் குதித்த ஆதிரா அவனது புஜத்தில் விளையாட்டாக அடிக்க, புவனேந்திரனோ தள்ளாடி தொட்டிக்குள் விழுபவனை போல நடித்தான்.
“ஐயோ புவன்” பதறியடித்து அவனது கரத்தைப் பற்றிக்கொண்டாள் ஆதிரா.
அவளது பதற்றத்தைக் கண்டதும் அவன் பீறிட்டுச் சிரித்தான். ஆதிரா இயல்பானதில் அவனது மனமும் இலேசாகியிருந்தது. இறகைப் போல மாறிய மனதில் இருந்த இறுக்கம் அகன்றுவிட்டது.
சிரித்தபடியே அவளது இடையை வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தவன் “ட்ரஸ் ஈரமாகிடுச்சுல்ல” என்று சொல்லி கள்ளப்பார்வை பார்க்கவும் அவனது தலையில் குட்டினாள் ஆதிரா.
“அவுச்”
“என்ன அவுச்? இடம் பொருள் ஏவல் வேண்டாமா? பார்வைய பாரு! உங்களுக்குள்ள இருக்குற கியூட் பூனைக்குட்டி இப்ப திருட்டுப்பூனை ஆகிடுச்சு”
“ஏன் இந்த இடத்துக்கு என்ன?” என்றவனின் கண்களில் உல்லாசம்! குரலோ காதல் சமருக்கு அறைகூவல் விடுப்பது போல ஹஸ்கியும் கரகரப்புமாய் ஒலித்தது.
ஆதிரா சட்டென அவனிடமிருந்து விலகிக்கொண்டவள் “ப்ச்! போங்க” என்று போக எத்தனிக்க, அடுத்த நொடியில் அவளை அள்ளிக்கொண்டான் புவனேந்திரன்.
“என்ன பண்ணுறிங்க?” என்று திகைப்பாய்க் கேட்டவளிடம்
“எல்லாத்தையும் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணனுமா பொண்டாட்டி? நேத்து நைட் வேஸ்டா போச்சே! அதை டேலி பண்ண வேண்டாமா?” என்று குழைவாய்ப் பதிலளித்தவன் தோட்டத்து வீட்டை நோக்கி நடைபோட்டான்.
“நீங்க இருக்கிங்களே! உங்களுக்கு விவஸ்தையே இல்ல” குறை கூறுவது போல காட்டிக்கொண்டாலும் ஆதிராவின் விரல்கள் புவனேந்திரனின் தாடையை வருடிக்கொண்டிருந்தன அவற்றின் போக்கில்.
“சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்ல ஆதி” என்றவன் தாழிடாமல் அடைத்து வைத்திருந்த கதவைத் தனது காலால் எக்கித் திறந்து அவளையும் சுமந்துகொண்டு உள்ளே சென்றான்.
முந்தைய இரவை வீணடித்த மடமை உணர்ந்து அதை இந்தப் பகலில் ஈடு செய்துகொண்டார்கள் இருவரும்,
பின்னர் என்ன? தோட்டம் முழுவதும் மாறனின் மலர்கணைகளின் ஆட்சி! தோட்ட வீட்டிலோ காதலின் சாம்ராஜ்ஜியம்!
சிகாமணியிடமிருந்து அழைப்பு வரும் வரை புவனேந்திரனும் ஆதிராவும் அந்தச் சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகளாகிப் போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
மொபைல் அழைப்பு கூட தொந்தரவாகத் தோன்றியது இருவருக்கும்.
இருப்பினும் அழைப்பை ஏற்காமல் விட்டால் மரியாதைக்குறைவாகத் தோன்றுமே!
“சொல்லுங்க மாமா”
“சாப்பாடு தயார் மருமகனே! நீங்களும் ஆதியும் வந்துடுவிங்களா? நான் வந்து உங்களை அழைச்சுக்கட்டுமா?”
“பாதை ஞாபகம் இருக்கு மாமா. நாங்களே வந்துடுறோம்”
மொபைலில் பேசிய புவனேந்திரன் கொசுவத்தைச் சரிபடுத்திக்கொண்டிருந்த ஆதிராவை மீண்டும் ஒரு முறை மையல் பார்வை பார்க்க ‘அடி விழும்’ எனச் சைகை காட்டினாள் அவள்.
பின்னர் இருவரும் தோட்டத்து வீட்டைப் பூட்டிய பிற்பாடு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் சிகாமணியின் வீட்டுக்குச் சென்றார்கள்.
“என்னாச்சு ஆதிம்மா? சேலை ஏன் நனைஞ்சிருக்கு?”
குழலி கேட்க “அது… வாழைத்தோப்புல சேறாயிடுச்சு சித்தி.. பம்ப் செட்ல…” எனச் சமாளித்தாள் ஆதிரா.
அவளது தடுமாற்றத்தையும், புவனேந்திரனின் விசமச்சிரிப்பையும் கவனித்த குழலி மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
“ஈரச்சேலையோட இருக்க வேண்டாம். நீ வா! நான் மலரோட சுடிதார் ஒன்னு தர்றேன். சேலையை பின்வாசல் கொடில உலர்த்திக்கலாம்”
குழலியோடு சென்றவள் மலர்விழியுடைய சுடிதாரை அணிந்துகொண்டு வந்தாள். பின்னர் என்ன? விருந்து பரிமாறப்பட்டது புதுமணத்தம்பதிக்கு.
குழலி தடபுடலாய் அசைவ விருந்தை சமைத்திருந்தார். அவரது கைமணத்தில் விருந்தும் பிரமாதம்.
திருப்தியாக உண்டுவிட்டு மாலை மூன்று வாக்கில் புவனேந்திரனும் ஆதிராவும் குலவணிகர்புரத்துக்குக் கிளம்ப தயாரானார்கள்.
ஆதிரா காய்ந்துவிட்டப் புடவையை அணிந்து வந்தவள் குழலி கொடுத்த தாம்பூலத்தை வாங்கிக்கொண்டாள்.
அழகான காட்டன் சில்க் புடவை, குங்குமச்சிமிழ், மஞ்சள் அடங்கிய டப்பா, சிவப்பு பச்சையில் இரண்டிரண்டு கண்ணாடி வளையல்கள், ஒரு துண்டு மல்லிகைச்சரம்!
“முத்தாரம்மா என் புள்ளைங்க நல்லா இருக்கணும்” அம்மனை வேண்டிக்கொண்டு திருநீறு பூசிவிட்டார் சிகாமணி இருவரின் நெற்றியிலும்.
“வர்றோம் மாமா! உங்க தோட்டத்தை நான் மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி விடைபெற்றான் புவனேந்திரன்.
காரிலேறி அமர்ந்து கார் கிளம்பியதும் அவனது புஜத்தில் கிள்ளினாள் ஆதிரா.
“அவுச்! கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குக் கையும் வாயும் நீளமாகிடுச்சு ஆதி.”
“தோட்டத்தை மறக்கவே மாட்டிங்களா?” அழுத்தமாக அவள் கேட்கவும் விசமச்சிரிப்பு அவனிடம்.

கன்னச்சதையை நாவினால் உந்தி அவன் சிரிக்கவும் “திருட்டுப்பூனை திருட்டுப்பூனை” என்று சொல்லி அவனது கன்னத்தில் அடிக்கப்போனவளின் கரம் பற்றி அங்கே அழுத்திக்கொண்டான்.
“ப்ச்! தாடி குத்துது புவன்” கையை விலக்கப்போனவளிடம்
“அப்ப சைலண்டா இருந்துட்டு இப்ப மட்டும் விலக்கிக்கற” என்று வம்பு பேசி மீண்டும் அவளிடம் கிள்ளு வாங்கிக்கொண்டான் புவனேந்திரன்.
வரும்போதிருந்த இறுக்கமான மனநிலை மாறி உல்லாசமான மனநிலை நிரம்பியிருந்தது இருவரிடமும்.
தொழில்ரீதியாக இருவரும் எல்லைகளை வகுத்துக்கொண்டு அதைக் கடைபிடிப்பதாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் பின்னாட்களிலும் அவர்களிடையே சலசலப்பு வரலாம்! ஆனால் அதையும் மறக்கடித்துவிடும் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பும் நேசமும்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

