“ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில சவால்களை அணுகுறதுக்கு ஒவ்வொரு முறைய பயன்படுத்துவோம். ஒருத்தரோட டெக்னிக் இன்னொருத்தருக்குச் செட் ஆகாது. இதை கோப்பிங் மெக்கானிசம்னு சொல்லுவாங்க. ஒருத்தரோட பார்வை பிரச்சனை சார்ந்ததா இருக்கும். அது லாஜிக்கலா ஒர்க் அவுட் ஆகும். இன்னொருத்தரோட பார்வை எமோசனலா இருக்கும். அங்க லாஜிக் இருக்காது. ஆனா உணர்வுகளோட கொந்தளிப்பு இருக்கு. அதுதான் முடிவைத் தீர்மானிக்கும். எந்த ஒரு சவாலையும் நான் உணர்வுரீதியாதான் அணுகறேன். இதுதான் எனக்கும் புவனுக்கும் உள்ள வித்தியாசம். என்ன செய்யுறது? பெண்கள் உணர்ச்சிகளால ஆளப்படுறாங்க. ஆண்கள் லாஜிக்கைத் தேடி ஓடுறாங்க. இது பயாலஜிக்கலா நமக்குள்ள விதைக்கப்பட்டாச்சே!”
-ஆதிரா
அவினாஷ் தன்னிடம் சொல்லிவிட்டுப் போன செய்தியைக் கேட்டதும் தங்கவேலு அதிர்ந்து போனார். உடனடியாகப் புவனேந்திரனிடம் வந்தவர் இது பின்னாட்களில் சிக்கலுக்கு வழிவகுக்குமெனச் சொல்லிப் பார்த்தார்.

“என்ன பிரச்சனை வரும்னு நினைக்குறிங்க சித்தப்பா? இப்ப அவன் கூட தொழில் பண்ண முடியாதுனு விரட்டி விட்டா அதுதான் ஆதிரா ஒரு கோழை, அவ சொந்த உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு தொழிலை நடத்த தெரியாம திண்டாடுறானு பேச்சு பரவும். அது மட்டுமில்ல இங்க நீங்க தயாரிக்குற எண்ணெய்யோட தரத்தை மக்கள் மத்தில கேள்விக்குறியாக்குவான். நூத்துக்குத் தொண்ணூறு பேர் அதை நம்ப மாட்டாங்கனு வச்சுப்போம். மீதி பத்து பேர்? அவங்க நம்புவாங்கதானே? தொழில்ல சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் குடுக்கக் கூடாது சித்தப்பா. இதால ஆதிக்கு எப்பவும் பிரச்சனை வராது. நீங்க கவலைப்படாதிங்க”
அவன் இவ்வளவு உறுதியாகச் சொன்னாலும் தங்கவேலுவின் மனம் அடித்துக்கொண்டது.
“நீங்க ஆதி கிட்ட அவினாஷ் கூட முடிஞ்ச டீல் பத்தி சொல்லிடுங்க. எனக்குச் சின்னதா ஒரு வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றவன் கிளம்பிவிட தங்கவேலுவும் சந்திரவிலாசத்துக்குச் சென்று ஆதிராவிடம் அனைத்தையும் கூறிவிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
புவனேந்திரன் அவினாஷின் மூக்கை உடைத்து அனுப்புவான் என எதிர்பார்த்திருந்தவளுக்கு அவனது இந்த அணுகுமுறை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
பெண் பார்த்த தினத்திலிருந்து தனக்காக ஒரு நொடி கூட யோசிக்காத அவினாஷின் அலட்சியம், அவனது தமக்கைக்காக தன்னிடம் கர்ணனின் திருமணத்தில் சண்டையிட்ட அவனது குறுகிய மனப்பான்மை, அவனது தமக்கை சொன்ன அவச்சொல்லைத் தட்டிக் கேட்காமல் தன்னிடம் வந்து உறுதிபடுத்த நின்ற அவனது இயலாமை என அனைத்தும் அவளது மனக்கண்ணில் படமாக ஓடியது.
அவளைப் பொறுத்தவரைக்கும் அவினாஷ் என்ற பெயரை உச்சரித்தால் கூட சுஜாதாவும் நினைவுக்கு வந்துவிடுவாள். அடுத்த நொடி அவளுக்குள் எழும் கோபமும், கடுப்பும் அந்த நாளையே வீணாக்கிவிடும்.
எதிர்மறை மனிதர்களை விரட்டியே பழகியவளுக்கு, அத்தகைய ஒருவனைக் கணவனே இழுத்து வந்து கண் முன் நிறுத்திய உணர்வு. சகிக்க முடியாத எரிச்சல்.
அதோடு கூடுதலாய் இன்னொரு வருத்தமும்!
உலகம் எண்ணெய் மில் ஆதிராவின் தொழில் சாம்ராஜ்ஜியம். சிறியதோ பெரியதோ அதில் முடிவுகளை எடுக்கும் உரிமை அவளுக்கு மட்டுமே உள்ளது. அதை எப்படி புவனேந்திரன் தற்காலிகமாகத் தட்டிப் பறிக்கலாம்?
கோபம் தான் அவன் மீது. வரட்டுமெனக் காத்திருந்தாள் அதைத் தணியாதவண்ணம் பார்த்துக்கொண்டு.
இதற்கிடையே புவனேந்திரனும் ஆதிராவும் சந்திரவிலாசத்தில் அன்று தங்கவேண்டுமென எழிலரசி சொல்லிவிட்டார். சிவகாமியும் நரசிம்மனும் மகிழ்மாறனைக் கருத்தில்கொண்டு மலர்விழியையும் கதிர்காமனையும் அழைத்துக்கொண்டு குலவணிகர்புரத்துக்குக் கிளம்பிவிட்டார்கள்.
புவனேந்திரனிடம் இந்தத் தகவலைச் சொன்ன பிறகே சிவகாமியின் குடும்பம் கிளம்பியது.
“மாப்பிள்ளைக்கு டின்னர் என்ன செய்யணும் ஆதி?” எழிலரசி ஆர்வமாகக் கேட்க
“அவருக்குத் தோசை பிடிக்கும். தக்காளி சட்னி மட்டும் அரைக்கச் சொல்லிடுங்கம்மா” என்று சொல்லிவிட்டாள்.
புவனேந்திரனும் மாலையில் வீடு திரும்பினான். ஆதிராவின் ஆழ்ந்த அமைதி அவனுக்குத் தர்மசங்கடத்தைக் கொடுத்தது.
இரவுணவுக்குப் பிறகு கர்ணனின் டீசர்ட் மற்றும் ட்ராக் பேண்டை எடுத்துக் கொடுத்தார் எழிலரசி.
“மாப்பிள்ளைய மாத்திக்கச் சொல்லு”
புவனேந்திரன் வினாயகத்தோடு பேசிக்கொண்டிருந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் மருதநாயகியை உறங்குமாறு சொல்லிவிட்டுத் தனது அறைக்குப் போய்விட்டாள்.
அரைமணி நேரம் காத்திருந்த பிற்பாடு புவனேந்திரனும் வந்து சேர்ந்தான்.
“வாங்க”
தன்னை அழைத்த குரலில் இனிமை இல்லை என்பதைக் கண்டுகொண்டான் புவனேந்திரன். இதுநாள் வரை இல்லாத தடுமாற்றம் அவனிடம். எதேச்சதிகாரமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறானே!
ஆதிரா மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனை ஏறிட்டாள். அவளது கண்களில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“தங்கவேலு சித்தப்பா நடந்ததைச் சொல்லிருப்பார்…” என ஆரம்பித்தவனை நிறுத்துமாறு கையுயர்த்தி சைகை காட்டினாள் அவள்.
“நான் வேண்டாம்னு ஒருத்தரை ஒதுக்குறேன்னா அவர் எப்பவும் என் லைஃபுக்குள்ள வரக்கூடாதுனு அர்த்தம் புவன். சில நேரங்கள்ல நம்ம மன அமைதிக்காக ஒரு சிலரை நம்மளை விட்டு விலக்கி நிறுத்தணும். ஆனா நீங்க இன்னைக்குப் பண்ணிட்டு வந்திருக்குற காரியம்…. ஓ காட்! திஸ் இஸ் பவுண்டரி வயலேசன். உங்களுக்குப் புரியுதா?”
புவனேந்திரன் தலையை மறுப்பாய் அசைத்தான்.
“உன் தொழில்ல நான் முடிவெடுத்தது தப்புதான். ஆனா அந்த முடிவு தப்பில்ல ஆதி. பிசினஸ்ல பிடித்தம், வெறுப்புக்கு இடமே கிடையாது. இங்க இருக்குறது சப்ளையர் – கஸ்டமர் ரிலேசன்ஷிப் மட்டும்தான். பிடிக்காத ஒருத்தர் என் தொழில்ல எனக்குக் கஸ்டமரா வந்தாலும் நான் அந்த நபரை எதிர்கொள்ளணும். அவர் குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு என் தொழில் இருக்கணும். அதை விட்டுட்டு அவரை விலக்கி வைக்குறது நல்ல பிசினஸ்மேனுக்கு அழகில்ல. வேர்ட் பை மவுத் – இதைக் கேள்விப்பட்டிருக்கியா? வாய்வார்த்தையா நம்மளை பத்தி பரவுற செய்திகள் நம்மளை வளர்க்கவும் செய்யும். வீழவும் வைக்கும். இன்னைக்கு ஒரு அவினாஷை நீ விலக்கிடுவ. அவனும் ஒரு தொழிலை நடத்துறான். அவன் உன் எண்ணெய் மில்லை பத்தி தப்பான செய்திய பரவ விட்டா அது உன் தொழிலுக்குதான் பாதிப்பு ஆதி. பிசினஸ்ல உணர்ச்சிகளை இன்வால்வ் பண்ணக்கூடாது. இங்க லாஜிக்கா யோசிச்சு காய் நகர்த்தணும். அவனைப் பாத்து உனக்கென்ன பயம்? அதுக்கென்ன அவசியம்?”
“என் மன அமைதிக்குக் குந்தகம் விளைவிக்குற யாரைப் பாத்தாலும் எனக்குப் பயம்தான் புவன். இதை ஒத்துக்குறதுல எனக்கு எந்த அசிங்கமும் இல்ல”
“ஆனா எனக்கு இருக்கு. என் பொண்டாட்டி அவளோட முன்னாள் ஃபியான்ஸைப் பாத்து இப்பவும் பயப்படுறானா அது எனக்கு அசிங்கம். யூ ஷுட் ஹேவ் டூ ஃபேஸ் ஹிம்.”
ஆதிரா அவனை ஆழ்ந்து நோக்கினாள். புவனேந்திரன் இப்போது ஒரு ஆணாகப் பேசுகிறான் என்பது புரிந்தது. அதே நேரம் கணவனின் கரிசனமும் அவனது பேச்சில் இருந்தது.
“உங்க ஈகோவ திருப்திப்படுத்த நீங்க இன்னைக்கு என் மனநிம்மதிய விலையா குடுத்திருக்கிங்க புவன். சிலரோட பிரசன்னம் என்னை அமைதியா இருக்கவிடாது. அப்பிடிப்பட்ட ஒருத்தன் கூட எனக்குத் தொழில்ரீதியான உறவை உறுதிபடுத்திட்டு வந்திருக்கிங்க. அதை நான் நல்லவிதமா ஏத்துக்கணும்னு எதிர்பாக்குறிங்க. ஹவ் இஸ் இட் பாசிபிள்? இதெல்லாம் வச்சு பாத்தா நீங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணுற இடத்துல இருக்குறிங்களோனு தோண வைக்குறிங்க புவன்.”
இப்போது புவனேந்திரனின் முகத்தில் அதிர்ச்சி! தொடர்ந்து கோபம்!
“நான் உன்னைக் கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சதில்ல ஆதி. நீ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாத. உன் தொழில்ல நான் முடிவெடுத்தது உன்னை இப்பிடியெல்லாம் யோசிக்க வைக்குதுனு புரியுது. உன் இடத்துல நான் இருந்தாலும் இப்பிடித்தான் பேசுவேன். ஆனா கொஞ்சநேரம் உக்காந்து யோசிச்சுட்டு என் ஒய்ப் எனக்குக் கெட்டது நினைக்கமாட்டானு ஆழமா நம்புவேன். எப்பவும் என் ஒய்ப் என்னைக் கண்ட்ரோல் பண்ண நினைக்குறதா எனக்குத் தோணாது”
“ஏன்னா நீங்களும் நானும் ஒரே மாதிரி யோசிக்குறதில்ல புவன். உங்களோட மிரர் சோல் பிலாசபி இந்த இடத்துல பரிதாபமா தோத்துப் போயிடுச்சு.”
எதிரெதிரே நின்றவர்கள் தங்களுக்குள் இருக்கும் குணாதிசய முரணை முதல்முறையாக அனுபவத்தில் உணர்ந்தார்கள் அந்த கணத்தில்.
எந்த அணைப்பும், முத்தமும் இந்த நிமிடத்தில் ஆறுதலாகவோ, பேட்ச்-அப் கருவியாகவோ பயன்படாதென்ற நிதர்சனம் புரிந்து நின்றார்கள்.

ஒரே மாதிரியான எண்ணவோட்டங்கள் கொண்டவர்களிடையே கூட கருத்து மோதல்களை உருவாக்கும் வல்லமை படைத்தது கணவன் – மனைவி உறவு என்ற உண்மையை அறிந்து உறைந்து நின்றார்கள்!
அவனிடம் கர்ணனின் உடைகளைக் கொடுத்தவள் “மாத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டுப் படுத்துவிட்டாள்.
இருவருக்குமிடையே படுக்கையில் விழுந்த இடைவெளி மனதிலும் விழுந்திருந்தது.
காதலில் களித்த முந்தைய இரவின் நினைவுகளும், பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இன்றைய இரவின் கவலைகளும் இருவரையும் ஆட்டிப்படைத்ததில் உறக்கம் என்னவோ வருவேனா என்று அடம்பிடித்தது.
ஆனாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளமாட்டோமென்ற பிடிவாதம். எப்படியோ உறங்கிப்போனார்கள் இருவரும்.
காலையில் புவனேந்திரனுக்கு முன்னரே கண் விழித்த ஆதிரா குளித்து மாற்றுடை தரித்தாள். அன்றைய தினம் சிகாமணியும் குழலியும் அவளையும் புவனேந்திரனையும் விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.
சீக்கிரமே கிளம்பினால்தான் வெயில் ஏறுவதற்குள் நதியூருக்குச் செல்ல முடியும்.
அவளிடம் காபியைக் கொடுத்த எழிலரசி “மாப்பிள்ளை இன்னும் முழிக்கலையா?” என்று கேட்க
“கொஞ்சம் டைம் ஆகும்மா. ஏன்?” என்று கேட்க
“மறுவீட்டுக்கு வந்த மகளுக்கும் மருமகனுக்கும் முறை செய்யணும். சுருள் வைக்கனும். அது நம்ம பழக்கம். அதனால தான் கேட்டேன்” என்றார் எழிலரசி.
“என்னம்மா இந்தக் காலத்துலயும் சுருள் அது இதுனு? போம்மா”
“அதெல்லாம் பெரியவங்க திருப்திக்குச் செய்யுறது. உனக்கென்னவாம்? முழு உளுந்து தோசை மாப்பிள்ளைக்குப் பிடிக்கும்ல?”
அன்னையும் மகளும் பேசும்போதே புவனேந்திரனும் எழுந்துவிட்டான்.
ஆதிராவிடம் காபியைக் கொடுத்துவிட்டார் எழிலரசி.
அவளுக்கோ அவனிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவதென்ற திகைப்பு. முதல் பிணக்கு இருவரிடையே. அதை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் இரவு முழுவதும் அமைதியாய் இருந்தவர்கள் இப்போது பேசியே ஆகவேண்டிய கட்டாயம்.
“காபி..”
“நான் இன்னும் ப்ரஷ் பண்ணல”
“உள்ள ப்ரஷ் பேஸ்ட் இருக்கு. பண்ணிக்கோங்க”
பட்டும் படாமலும் பேசிய ஆதிரா புவனேந்திரனுக்குப் புதியவளாகத் தெரிந்தாள்.
“ஆதி”
“என்ன?”
“இன்னுமா உன் மைண்ட் அமைதியாகல?”
ஆதிரா நிதானமாக அவனை ஊன்றி கவனித்தாள்.
“நான் அப்பிடி சொன்னேனா? நீங்க செஞ்ச காரியத்தால எனக்கு வருத்தம் இருக்கு. அதை வேற எப்பிடி காட்டுறது?”
“நான் செஞ்சது தப்பில்லனு புரிஞ்சிக்கணும் நீ”
“புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு முதிர்ச்சி இல்லனு வச்சுக்கோங்களேன். அந்த முதிர்ச்சி எனக்குத் தேவையுமில்ல புவன். இனி என்னோட பிசினஸ் முடிவுகளை நான் மட்டுமே எடுக்கணும்னு நினைக்குறேன்.”
கடகடவென ஒப்பித்துவிட்டு கொண்டு வந்த காபி டபராவை அங்கே வைத்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.
பெருமூச்சுவிட்டவன் பல் துலக்கி காபியை அருந்திவிட்டு குளித்து வேறு உடைக்கு மாறினான்.
பின்னர் காலையுணவாக முழு உளுந்து தோசையும் காரச்சட்னியும் மணக்க மணக்கத் தயாராயின. சதிபதி இருவரும் சாப்பிட்டார்கள்.
புத்தாடைகள், பழங்களோடு ஆயிரம் ரூபாயைச் சுருளாக வைத்து வினாயகமும் எழிலரசியும் கொடுக்க ஆதிராவும் புவனேந்திரனும் வாங்கிக்கொண்டார்கள்.
பின்னர் அந்த ஆடையை அணிந்துகொண்டு இருவரும் நதியூருக்குக் கிளம்பினார்கள்.
பயணம் முழுவதும் அமைதியே நீடிக்க புவனேந்திரனுக்கு ஆதிராவைச் சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம்.
என்றாவது ஒரு நாள் தனது செயலின் பின்னே இருக்கும் தர்க்கத்தை ஆதிரா புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.
இருவரும் நதியூரை அடைய சிகாமணியும் குழலியும் மனம் நிறைந்த புன்னகையோடு வரவேற்றார்கள் புதுமணத் தம்பதிகளை.
ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துக்கொண்டார் குழலி.
சிகாமணியின் தோட்டம், மலர் வியாபாரம் பற்றி பேச்சு எழுந்தது.
“தோட்டமா?” ஆச்சரியமாகக் கேட்டாள் ஆதிரா.
“ஆமா ஆதி. நீ எங்க தோட்டத்தைப் பாத்துட்டு வர்றியா?” என்று கேட்டார் குழலி.
ஆதிராவுக்குமே கொஞ்சம் வெளியே சுற்றினால் மனநிலை மாறும் என்றே தோன்றியது.
“சித்தப்பா என்னைத் தோட்டத்துக்கு அழைச்சிட்டுப் போறிங்களா?” என்று அவள் ஆசையாய்க் கேட்கவும் சிகாமணியும் சம்மதித்தார்.
“அங்க போகுதுல்ல வாய்க்கால். அதோட கரைல நடந்து போய் குளத்தைத் தாண்டி போனாதான் நம்ம தோட்டம் வரும். நீ நடந்துடுவியா ஆதிம்மா?” என்று கனிவாய்க் கேட்டார் அவர்.
“அதெல்லாம் நான் நடப்பேன் சித்தப்பா”
ஆதிராவும் உற்சாகமாகத் தயாரானாள்.
குழலி அவளது பேச்சுக்குப் புவனேந்திரனின் முகம் மாறுவதைக் கவனித்தார்.
“நீங்களும் ஆதிம்மா கூட போங்க மருமகனே!” என அவர் சொல்ல புவனேந்திரனின் விழிகள் ஆதிராவிடம் ‘வரட்டுமா’ என வினா தொடுத்தன.
‘வாங்க’ என்ற அழைப்பு விழிகளில் இருக்க, அவனும் கிளம்பினான் அவர்களோடு.
“பேண்டை கரண்டைக்கு மேல சுருட்டிக்கோங்க.” என்று மட்டும் கூறினாள் அவனிடம்.
நதியூரின் கால்வாய் கரையானது முந்தைய தினம் பெய்த மழையால் கொஞ்சம் வழுக்கலாக மாறியிருந்தது. அதனால் ஆதிராவிடம் ஃப்ளாட் செருப்பு ஒன்றை கொடுத்தார் குழலி
புவனேந்திரனும் தோல் செருப்பு ஒன்றை அணிந்துகொள்ள இருவரும் சிகாமணியைத் தொடர்ந்து கரை மீது நடந்தார்கள்.
“பாத்து நட ஆதி. வழுக்குது பாதை” என்று அவன் கவனம் சொல்ல
“ம்ம்” என்ற ஒற்றை வார்த்தை பதிலே அவளிடம்.
சலசலத்தோடிய வாய்க்கால், அதன் கரையோரம் புல் மேய்ந்துகொண்டிருந்த கால்நடைகள், கால்வாயின் படிகட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள். அதன் ஓரமாய் நீண்டு உயர்ந்த அரசு + வேம்பு காம்பினேசன் மரத்தடியில் கோவில் கொண்டிருக்கும் பிள்ளையார் என அனைத்தையும் ரசித்தபடி நடந்தவள் பாதையில் கவனம் வைத்திருந்தாள்.

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பெஞ்ச மழையில மூனு அணையையும் திறந்துவிட்டு தாமிரபரணில வெள்ளக்காடா போச்சு. நாம இப்ப நடக்குறோமே இந்தக் கரைய முக்கி வாய்க்கால்ல தண்ணி போச்சுல”
சிகாமணி கதை போல சொல்லிக்கொண்டே வந்தார்.
“அச்சோ! அப்ப ஊருக்குள்ள தண்ணி வந்திருக்குமே?” ஆதிரா கவலையாய்க் கேட்க
“ஆமால! என்ன செய்ய? ஏதோ நம்ம வீடு உசரமா இருந்ததால தப்பிச்சுது. குழலி வச்ச தோட்டம் முழுக்க தண்ணி. அவளுக்கு வெள்ளம் வடியுறவரைக்கும் சோறு தண்ணி இறங்கல. தோட்டம்னா அவளுக்கு உசுரு” என்று சொல்லிக்கொண்டே போனார் சிகாமணி.
ஆதிராவுக்குச் சிகாமணி – குழலி தம்பதியை எப்போதுமே பிடிக்கும். கள்ளம் கபடமற்ற சிகாமணியை உலகத்தார் ஏமாற்றிவிடக்கூடாதென்ற கவனம் எப்போதும் குழலியின் கண்களில் தெரிவதைப் பார்த்திருக்கிறாள் அவள்.
கணவனுக்காக மனைவி யோசிப்பதும் கவலைப்படுவதும் வாடிக்கைதான். ஆனால் பாதுகாப்பு அரண் போல நிற்பது எல்லாம் இப்போதைய வாழ்க்கை முறையில் சாத்தியமற்ற ஒன்று.
அதிலும் பொருளாதாரரீதியில் சவாலான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கைத்துணை மீது சலிப்பு தட்டிவிடும்.
‘இதென்னடா போராட்டமான வாழ்க்கை?’ என்ற எண்ணம் அவர்களிடையே வளரும். அதன் வெளிப்பாடாக நேசமும் அன்னியோன்யமும் குறையும்.
எந்த வறுமையிலும் உடன் இருக்கும் துணையாய் குழலி சிகாமணிக்குக் கிடைத்து அவர் செய்த பாக்கியம் என்றே தோன்றியது.
யோசனையின் இடையே சிகாமணியின் தோட்டமும் வந்துவிட்டது.
மல்லிகைச்செடிகள் ஒரு பக்கம், செவ்வரளி குறுமரங்கள் ஒரு பக்கம்! சம்பங்கியும் செவ்வந்தியும் இதழ் விரித்து அழைத்தன இன்னொரு பக்கத்திலிருந்து.
“பன்னீர் ரோஜா கன்னுக வச்சு ஒரு மாசம் ஆகுது மருமகனே!”
ரோஜா பதியன்கள் வளருமிடத்தைக் காட்டியவர், ஒரு ஓரமாக இருந்த வீடு ஒன்றையும் அவனிடம் காட்டினார்.
“அதுல காத்தாடி, பாத்ரூம் எல்லாம் உண்டு. நீங்க காத்தாட இங்க ஓய்வா இருங்க. குழலி சமைச்சதும் நான் போன் பண்ணுதேன். அப்புறமா ரெண்டு பெரும் வாங்க. நேர் பாதைதான்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் சிகாமணி.
அழகான மலர்த்தோட்டத்தின் மூலையில் சிக்கனமாய்க் கட்டப்பட்ட வீட்டைப் பார்த்தபடி நின்றார்கள் ஆதிராவும் புவனேந்திரனும். இந்தத் தனிமை அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்களிடையே இருக்கும் முதல் பிணக்கை முறையாய் முடித்துவைக்க புவனேந்திரனுக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தத் தனிமை. அவன் பயன்படுத்திக்கொள்வானா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

