“இன்னைக்கு எனக்கு நைட் தூக்கமே வராதுனு நினைக்குறேன். திடீர்னு புவன் கால் பண்ணி கிப்ட் வாங்கணும், வா ஆதினு சொன்னார். நானும் கிளம்புனேன். அவரே வந்து பிக்கப் பண்ணிக்கிட்டார். அழகா ஒரு மோதிரம்! அவரோட செலக்சன்தான்! கையில போட்டுவிட்டு குட்டியா ஒரு முத்தம்! அந்த முத்தமில்லாம மோதிரத்தை மட்டும் போட்டு விட்டிருந்தார்னா கிப்ட் முழுமையானதா எனக்குத் தோணிருக்காது. இப்ப மனசு முழுக்க தித்திப்பு! நைட் டின்னரை வெளிய முடிச்சிட்டு வீட்டுல என்னை ட்ராப் பண்ணுறப்ப அவரோட கண்ணுல வித்தியாசமான ஒரு பார்வை! என்னனு கேக்குறதுக்கு முன்னாடியே கன்னத்தை அழுத்திப் பிடிச்சு “Mwah!”… குட்டியா இன்னொரு முத்தம்! இதோ ரூமுக்கு வந்துட்டேன். இன்னும் என் கன்னத்துல அந்த ஈரமும், அவரோட தாடி முடி கீறின சின்ன கூச்சமும் அப்படியே இருக்கு. இப்போ கன்னத்தைத் தொட்டுப் பார்க்குறப்ப கூட, கரண்ட் பாஸ் ஆன மாதிரி இருக்கு.
-ஆதிரா
‘புவனேந்திரன் வெட்ஸ் ஆதிரா’
தங்க நிற பின்னணியில் லில்லி மலர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துகள் மின்னின அலங்காரப்பலகையில்.
கர்ணன் – மிருணாளினியின் திருமணம் நடந்த அதே மண்டபம். தேர்வு என்னவோ புவனேந்திரனுடையதுதான்! அங்கே ஆதிராவைச் சந்தித்ததுதானே அவனுடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தச் செண்டிமெண்டுக்காக அதே மண்டபத்தைப் புக் செய்ய சொல்லிவிட்டான்.
இரு குடும்பமும் உறவுக்காரர்கள் என்பதால் நெருங்கிய உறவுகள், தூரத்து உறவுகள் என அனைவரும் திருமணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சின்ன சின்ன சலசலப்புகள் அவ்வபோது எழுந்தன.
“நீயும் மிருணாவும் ஏன் தனித்தனியா மெட்ராசுல இருந்து வந்திங்க? ஃப்ளைட்டுல வர்றவன் அவளுக்கும் ஒரு டிக்கெட்டைப் போட்டுக் கூட்டிட்டு வரலாம்ல?”
கர்ணனும் மிருணாளினியும் தனித்தனியே சென்னையிலிருந்து ஊருக்கு வந்த விவகாரத்தைச் சுட்டிக் காட்டி அவனிடம் கேள்வி கேட்டது ஒரு பெருசு.
“வைத்தியநாதன் மவன் விக்கிரமசிங்கபுரத்துல பெருசா ஒரு சூப்பர் மார்க்கெட் திறந்திருக்கானாம். கவனிச்சீரா?”
வேண்டுமென்றே அவினாஷைப் பற்றி பேச்சைப் பற்ற வைத்தது இன்னொரு பெருசு.
“போன கல்யாணத்துல எல்லாம் இப்பிடித்தான் நல்லா போச்சு. கடைசி நேரத்துல பொண்ணு மாப்பிள்ளை மாறுனாங்க. இன்னைக்கு எப்பிடியோ?”
கலகம் மூட்டுவதே கடமையாக வந்த பெண்மணிகளில் ஒருவர் பெருமூச்சுவிட்டார் இவ்வாறு!
இத்தகைய சலசலப்புகள் இல்லாமல் எந்தத் திருமணம் முடிந்திருக்கிறது? அனைத்தையும் சமாளித்தார்கள் இரு குடும்பத்துப் பெரியவர்களும்.
மணமகள் அலங்காரம் முடிந்த கையோடு ஆதிராவின் காதில் ஏதோ இரகசியம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஷண்மதி. மதுமதியின் தமக்கை. அவர்களது குடும்பத்துக்கும் திருமண அழைப்பிதழ் வைத்திருந்தார்கள் சிவகாமியும் நரசிம்மனும்.
கூடவே பவிதரனுக்காக மாணிக்கவேலு நிலவழகிக்கும் அழைப்பிதழ் வைத்திருந்தார்கள். அவர்கள் வரவில்லை. ஆனால் பவிதரன் சிகாமணியையும் குழலியையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டான்.
அவர்கள் வரமாட்டார்கள் என்பது தெரிந்ததுதானே! மலர்விழி முகமலர்ச்சியோடு தனது குடும்பத்தினரை வரவேற்றாள்.
“ஈசு வர்றதா சொன்னாளே?” என்ற கவலை வேறு!
“அவளைக் கார்ல வர்றியானு கேட்டேன். சிலுப்பட்டை மாதிரி முடிய சிலுப்பிட்டுப் போனா. வருவா, நீ வேற வேலைய பாரு. கதிரை என் கிட்ட குடு” என்று மருமகனை வாங்கிக்கொண்டான் பவிதரன்.
அவன் சொன்னபடியே ஈஸ்வரியும் அவளது அன்னையும் சிறிது நேரத்தில் வந்துவிட பவிதரன் அவளைக் கவனித்தானோ இல்லையோ மிருணாளினி ஆயிரம் முறையாவது நோட்டம் விட்டிருப்பாள்.
இடையிடையே கர்ணனைக் கொடூரமாக முறைக்கவும் தவறவில்லை அவள். அதிலும் ஈஸ்வரி அவனிடம் புன்னகையோடு “எப்பிடி இருக்குறிங்க? வேலை எல்லாம் நல்லபடியா போகுதா?” என விசாரிக்கவும் கர்ணனின் முகம் விகசிப்பதைப் பற்களைக் கடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்.
இவர்களின் கலாட்டாக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
மணமகன் அறையில் மகிழ்மாறன் புவனேந்திரனின் ஆடையைச் சரி செய்துகொண்டிருந்தான்.
அவனது கைகள் மெல்ல நடுங்குவதைக் கவனித்தவன் அதைத் தனது கரத்தால் இறுக்கமாகப் பற்றினான்.
“எதுவும் தப்பா ஆகாது. நாங்கல்லாம் இருக்குறோம்ல. தப்பா எதுவும் நடக்க விடமாட்டோம். நீ சந்தோசத்தோட தயாராகு” என்றான் புவனேந்திரனிடம்.
“எனக்குள்ள அந்த ட்ராமாவோட மிச்சம் இன்னும் இருக்கு மாறா.”
“ப்ச்! தூக்கி வீசிடு அதை. இனிமே உனக்குள்ள ஆதிய பத்தி மட்டும்தான் சிந்தனை இருக்கணும்”
இளையவன் கொடுத்த தைரியத்தில் நிமிர்வாய் கண்ணாடியைப் பார்த்தான் புவனேந்திரன்.
மணமகனை மணமேடைக்கு அழைத்து வருவது மைத்துனனின் பொறுப்பு என்பதால் கர்ணனும் அங்கே ஆஜரானான்.
“என்ன மாப்பிள்ளை கிளம்பலாமா?” என்றபடி புவனேந்திரனின் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்து வந்து அங்கே அமரவும் வைத்தான்.
அடுத்து ஆதிராவை அழைத்து வந்து அமர வைத்தார்கள்.
புவனேந்திரன் பாராட்டிய அதே கிரிம்சன் வண்ண பட்டுப்புடவை, கெட்டியான டெம்பிள் டிசைன் அணிகலன்கள், கருங்கூந்தலை அலங்கரித்திருந்த மலர்கள் என மணப்பெண் கோலத்தில் அத்துணை அழகாக மிளிர்ந்தாள் அவள்.
பெண்கள் எளிமையில் ஒருவித அழகென்றால், அலங்கரிக்கப்படுகிறபோது இன்னொரு விதத்தில் அழகு.
மெல்லிய பரபரப்பு இருவருக்குள்ளும்.
அதெல்லாம் மாலை மாற்றும்போது இருவரின் கண்களும் சந்தித்த தருணத்தில் வடிந்து போனது. முகத்தில் முறுவலும், கண்களில் ரசனையும், உடல்மொழியில் குதூகலமும் குடியேறியது இருவருக்கும்.
“ஆர் யூ ஹேப்பி?” மெதுவாக வினவியவனிடம்

“இன்னும் ரெண்டு நிமிசத்துல ஹேப்பி ஆகிடுவேன்” என்றாள் அவள்.
“ரெண்டு நிமிசம்?” புரியாமல் விழித்தான் புவனேந்திரன்.
“இப்பதானே அட்சதையை எல்லாருக்கும் குடுத்திட்டிருக்காங்க. அது முடிய ரெண்டு நிமிசம் ஆகிடும். அப்புறம்தானே நீங்க என் கழுத்துல தாலி கட்டுவிங்க?”
கண்களில் குறும்பு மிளிர ஆதிரா சொல்லவும் அவள் சொன்ன இரண்டு நிமிடத்துக்கான அர்த்தம் புரிந்து போனது புவனேந்திரனுக்கு.
சொன்னது போலவே அவனது கையால் திருமாங்கல்யம் கழுத்திலேறியபோது அத்துணை மகிழ்ச்சி ஆதிராவுக்கு.
விரும்பியவனை, மனதை ஆள்பவனை மணப்பது எல்லாம் ஒரு வரம். வரம் பெற்றவள் உவகையில் ஆழ்வது இயல்புதானே!
நெற்றி வகிட்டில் அவன் வைத்த குங்குமம் கொஞ்சம் சிதறி ஆதிரா கைகளில் ஏந்தியிருந்த திருமாங்கல்யத்தில் விழுந்தது. திருமாங்கல்யத்தில் பூ முடித்துக்கொண்டிருந்த மலர்விழியும் மிருணாளினியும் “இதை நல்ல சகுனம்னு சொல்லுவாங்க” என ஒரே குரலில் சொல்ல ஆதிராவின் முகத்தில் கோடி சூரியனின் பிரகாசம்.
மாங்கல்யதாரணம் முடிந்து திருமதி புவனேந்திரனாக அவனருகே அமர்ந்து இதர சடங்குகளையும் செய்தபோது அத்துணை சிரிப்பு அவளது முகத்தில்!
சிவகாமிக்கும் நரசிம்மனுக்கும் மூத்தவனின் திருமணம் எவ்விதக் குறையுமில்லாமல் முடிந்த திருப்தியில் உள்ளம் நிறைந்து போனது.
மருதநாயகிக்கும் தான்! இளையவர்கள் நெற்றியில் திருநீறு பூசி ஆசிர்வதித்தார் அந்த மூதாட்டி.
திருமணத்தின் ஒவ்வொரு சடங்கும் அதற்கேயுரிய உற்சாகத்தோடு நடந்தேறியது. மாலை வரவேற்பில் இருந்த சந்தோசத்துக்கும் குறைவில்லை.
வரவேற்பு முடிந்து என்.எஸ்.என் நிவாசத்திற்குள் மருமகளாகக் காலடி எடுத்து வைத்த ஆதிராவை உளப்பூர்வமாக வரவேற்றார்கள் சிவகாமியும் மலர்விழியும். மணமக்களுக்குத் திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துக்கொண்டார்கள்.
பூஜையறையில் விளக்கேற்றிய பிறகு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு பரிமாறினாள் மலர்விழி.
இரவுணவு வரவேற்பின்போதே முடிந்துவிட்டது. சாப்பிடாதவர்கள் புவனேந்திரனும் ஆதிராவும் மட்டுமே!
“வாங்க புவன் மாமா! சூடா தோசை வார்த்து வச்சாச்சு. ஆளுக்கு ரெண்டு தோசை சாப்பிடுங்க” என்று இருவரையும் இழுத்து வந்து உணவு மேஜையில் அமர வைத்துப் பரிமாறினாள் மலர்விழி.
நெய் ஊற்றி மொறுமொறுவென ரோஸ்ட் போல வார்த்திருந்த தோசையும் காரச்சட்னியும் சுவைமொட்டுகளைத் தூண்டிவிட்டன. இரண்டு என்ற லிமிட் நான்காகிவிட்டது,

தோசையோடு சேர்த்துக் கொஞ்சம் போல பாதாம் அல்வா ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இருவரும் பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டார்கள்.
“நீங்க கேக் சாப்பிடல்லல்ல??”
மிருணாளினி சின்ன தட்டுகளில் இரு துண்டு கேக்குகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனாள்.
இருவரும் நிமிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“இதெல்லாம் சாப்பிட்டா நைட் முழுக்க தூக்கம்தான்” சிரிப்போடு சொன்னான் புவனேந்திரன்.
ஆதிரா நாணத்தோடு அவனைப் பார்த்தாளேயொழிய எதுவும் பேசவில்லை.
“ஃப்ரூட் சாலட்?” என்றபடி வந்த ஷண்மதியிடம்
“இதுவே அதிகம் மதினி. இன்னைக்கு மானிங்ல இருந்து நீங்க நிறைய வேலை பாத்திருக்கிங்க. நீங்களே சாப்பிட்டுத் தெம்பா இருங்க” என்று சொல்லிவிட்டான் புவனேந்திரன்.
அதற்கு ஆதிரா சிரிக்க “பார்றா! எல்லாரும் அங்க தட்டு தட்டா காலி பண்ணுறாங்க, புது மாப்பிள்ளையும் புதுப்பொண்ணும் சாப்பிடலையேனு எடுத்துட்டு வந்தா உங்களுக்குக் கிண்டலா இருக்குதா?” எனப் போலியாய்க் கோபம் காட்டிவிட்டு அவள் போய்விட்டாள்.
“சீக்கிரம் சாப்பிடுங்க. சடங்குக்கு நேரமாகுது”
மருதநாயகியின் குரல் கேட்டதும் மீண்டும் கனத்த அமைதி இருவரிடத்தில்.
சாப்பிட்ட பிறகு தனித்தனியே அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் மீண்டும் புவனேந்திரனின் அறையில் சந்தித்தபோது மெல்லிய பயமும், தவிப்புமாகக் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள் ஆதிரா.
அறை என்னவோ மலர்களால் நவீன பாணியில் முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை ரசிக்கும்போதே இனம்புரியாத பயமொன்று ஆதிராவிடம் எழுந்தது.
புவனேந்திரன் ஆதிராவின் முகத்தில் வந்து போன ஒவ்வொரு உணர்வையும் கூர்ந்து கவனித்தவன் அவளை நெருங்கவும் ஏ.சி ஓடிய அறையிலும் அத்துணை வியர்வை அவளிடம்.
பொதுவாக நெருக்கமாக இருக்கும் இடத்தில் உருவாகும் க்ளாஸ்ட்ரோஃபோபியாவுக்கான அறிகுறிகள் இப்போது உருவாகிறதோ தனக்குள்?
தன் முன்னே நிற்கும் புவனேந்திரனின் ஆகிருதியான உருவம் நான்கு புறமும் வியாபித்து பிரம்மாண்டமாக நிற்பது போல தோன்றியது.
கண்களின் மிரட்சியோடு ஏறியிறங்கிய குரல்வளை அவள் பரிபூரணமான பயத்தோடு இருப்பதை அவனுக்கு உணர்த்தியது.
“ஆதி…”
அவனது குரலின் மிருதுத்தன்மை அவளது இதயத்தைத் தொட்டதோ! கண்களில் இருந்த மிரட்சியின் பரவல் குறைய ஆரம்பித்தது.
“என…எனக்கு ஒரு மாதிரி டென்சனா இருக்கு” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டாள்.
“எந்த மாதிரி?”
“ஒரு நெருக்கமான இடத்துல அடைபட்ட மாதிரி… அதே நேரம் இந்த உணர்வை என்னால வெறுக்கவும் முடியல”
முதல் தனிமை கொடுத்த முதல் நெருக்கம்! முதல் நெருக்கம் கொடுத்த முதல் குழப்பம்! முதல் குழப்பத்தின் விளைவாய் நெற்றியில் முத்து முத்தாய்ப் பூத்திருந்த வேர்வைப்பூக்கள்!
புரிந்துகொள்ள முடிந்தது புவனேந்திரனால்! விலகி நிற்க தீர்மானித்து பின்னடையப் போனவனின் சட்டை அடுத்தநொடி ஆதிராவின் மருதாணி பூசிய விரல்களால் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டது.
“எங்க விலகிப்போறிங்க? விலகவே மாட்டேன்னு சொன்னிங்களே?”
கண்ணோரம் நாணத்தின் ரேகையும் கன்னத்துக் கதுப்பின் நாணச்சிவப்பும் ஒருங்கிணைய ஆதிரா கேட்டதும் அவனுக்குள் பிரளயமாய் வெடித்தது ஏதோ ஒரு உணர்வு!
“நெருங்குனா நீ பயப்படுறியே?” என்றான் காதோரம் கூந்தலை ஒதுக்கி மென்மையாய்.
“நான் பயப்படத்தான் செய்வேன். என் பயத்தைப் போக்கவேண்டியது உங்க கடமை. எப்பிடி என் க்ளாஸ்ட்ரோஃபோபியா நேரத்துல துணையா இருந்திங்களோ அதே மாதிரி இப்பவும் நீங்க என் கூட இருக்கணும்”
வெட்கத்தோடு சொன்னவளின் வார்த்தைகளைச் சம்மதமாய் ஏற்றான் புவனேந்திரன்.
இடையோடு சேர்த்து அவளை வளைத்து அணைத்தவன் மிக மிக நெருக்கத்தில் அவளது மேனி நடுங்குவதைக் கவனித்தவாறே அவளது கரங்களைப் பற்றினான்.

தொப்பியாய்ச் சிவந்திருந்த மருதாணியோடு சிரித்த விரல்களை ஒவ்வொன்றாக அவன் முத்தமிடவும் ஆதிராவின் பயம் அடங்கி பெண்ணவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பு!
அவனது குட்டி முத்தங்கள் அவளுக்குத் தைரியமூட்டுவதாய்! அவனது மீசையின் உரசல்கள் அவளுக்குள் அதிர்வூட்டுவதாய்!
“பயம் போயிடுச்சா?” தலை சரித்துச் சிரிப்போடு கேட்டவனிடம் ஆமென அவள் தலையசைத்த அடுத்த நொடியில் பொக்கிஷமாய் அவளை அள்ளியிருந்தான் புவனேந்திரன்.
இன்னும் இறுக்கமாய் அவளது விரல்கள் புவனேந்திரனின் சட்டையைப் பற்றிக்கொண்டன.
அவளது முகம் அவனது மார்பில் அழுத்தமாய்ப் பதிய ‘என்னை இங்கேயே வைத்துப் பூட்டிக்கொள்ளேன்’ என்று மானசீகமாக எண்ணினாள் ஆதிரா.
அதை டெலிபதியாய் அறிந்தானோ என்னவோ, சரியெனச் சொல்வது போல ஆதிராவை உச்சி முகர்ந்தான் புவனேந்திரன்.
பயம் குறைந்து, நெருக்கம் பழகி, மேனி பூவாய் இளக தன் மீது சாய்ந்திருந்தவளைத் தனது ஆளுகைக்குள் ஆலிங்கனமெனும் வியூகம் அமைத்துக் கொண்டு வந்த புவனேந்திரனுக்கு ஆதிராவின் ஒவ்வொரு அணுவையும் அத்துணை பிடித்தது.
குங்குமம் மின்னும் நெற்றி! ஜிமிக்கி ஆடும் காதுகள்! அவன் கட்டிய மாங்கல்யம் உறவாடும் கழுத்து!
பிடித்த இடங்களில் எல்லாம் முத்த முத்திரைகள் தாராளமாய் பதிய, முத்திரைகளோடு அவன் கொடுத்த காதலின் சின்னங்களையும் ஏற்றுக்கொண்டாள் ஆதிரா தாராளமாய்.
மில்லி மீட்டர் இடைவெளியைக் கூட விலகலாகப் பாவித்து அவள் முகம் மாற, காற்றே புகமுடியாதொரு பிணைப்பைத் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்டான் புவனேந்திரன்.
நேசத்தால் நெய்து மாங்கல்யத்தால் இணைக்கப்பட்ட அவர்களின் பந்தம் காதலால் பிணைக்கப்பட்டு அழகானதொரு கூடலில் ஒன்றிணைய, சிருங்காரமாய் சிணுங்கல்கள் ஒலிக்க, கொலுசொலி அதற்கு இனிமை சேர்க்க, காதோரம் செல்லம் கொஞ்சியே காரியங்களைச் சாதித்துக்கொண்ட கணவனின் அணைப்பிலும் ஆளுமையிலும் தன் வசமிழந்து போனாள் ஆதிரா.
காதல் தருணங்களில் நீங்கள் உங்களை மறக்கவேண்டும்! சுயமிழக்க வேண்டும்! உங்கள் பார்வை, மூச்சு, சிந்தனை அனைத்துமே உங்களது இணையரை மட்டுமே நோக்கியதாக மாறவேண்டும்! அகம் திறந்து புறம் மறந்து இரு இதயங்கள் இணையவேண்டும்! யாருமற்ற உலகத்தில் நீங்களும் உங்கள் இணையரும் மட்டும் இருப்பதாய் ஒரு கற்பனை விரியவேண்டும்! அதை உண்மையென உங்கள் மனமும் மூளையும் ஒருசேர எண்ணவேண்டும்! இதெல்லாம் சாத்தியமாகிற பொழுதில் காதலும் காமமும் இணையும் கூடலானது பரிபூரணமாகும்!
அத்தகைய பொழுதையே ஆதிராவும் புவனேந்திரனும் இப்போது ஆண்டு கொண்டிருந்தார்கள்! அற்புதமானதொரு அத்தியாயம் அவர்களது வாழ்வில் அந்த இரவில் உருவானது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

