பெரும்பாலான பெண் சைக்கோபாத்கள் அடுத்தவர்களை உணர்வுரீதியாக வதைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். ஒரு பெண் சைக்கோபாத் தனது எதிராளியின் தன்னம்பிக்கையை உடைப்பது, அவர்களை கேலிக்கு ஆளாக்குவது, குடும்பத்தினர் மற்றும் தோழமை வட்டத்திடம் அந்த எதிராளியைப் பற்றித் தவறாகச் சொல்லி அவர்களை அந்த எதிராளிக்கு எதிராகத் திருப்பிவிடுவது போன்ற காரியங்களைச் செய்யத் தயங்கமாட்டார். யாராவது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கவேண்டுமென அந்த பெண் சைக்கோ முடிவு செய்துவிட்டால் அதில் வெறியோடு இறங்குவார். பெண் சைக்கோபாத்கள் ஆண் சைக்கோபாத்களை விட தந்திரமான, அடுத்தவர்களை தன் இஷ்டத்திற்கு ஆட்டிவைக்கக்கூடிய, தலைசிறந்த பொய்யர்களாக இருப்பார்கள். அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கி குவிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் இவர்கள். அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் எப்படியெல்லாம் அவர் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். சில நேரங்களில் உங்கள் இரக்கத்தை ஜெயிக்க அவர் முதலை கண்ணீர் வடிப்பார். ஆனால் நீங்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிய அடுத்த நொடி அழுகை சிரிப்பாக மாறிவிடும். அவருடைய குணாதிசயம் நொடிப்பொழுதில் மாறும்.
– An article from Psychology today
இனியாவின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வரும் பதிவுகளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து. சிரித்தபடி, முறைத்தபடி., கருத்தாய் பேசியபடி, தம்பி தங்கையருடன் குறும்பு செய்தபடி விதவிதமான உணர்வுகளைக் கொட்டி அவள் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் முத்துவின் ஒருதலைக்காதலுக்குத் தீனி போட்டதைப் பாவம் அந்தப் பெண் அறியவில்லை.
அதோடு நிறுத்தாமல் அவ்வபோது தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு பொன்மலைக்கு வருபவன் இனியாவின் பள்ளிக்கருகே நின்று அவள் வெளியே வரும்போது இரகசியமாக ரசிப்பான்.
சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இணைந்திருப்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட்டுத் தனது தோற்றத்தை அடிக்கடி வெவ்வேறு மாதிரி காட்டிக்கொள்வான். அதனால் சில நேரங்களில் ஜான் கூட அவனை அடையாளங்காண முடியாமல் திணறியதுண்டு.
அதனால் தானோ என்னவோ முத்து என்ற ஒருவன் எப்படி இருப்பான் என்பது பெரும்பாலான பொன்மலைவாசிகளுக்குத் தெரியாது, சாத்தான் வழிபாட்டுக்குழுவிலிருந்தவர்களைத் தவிர.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்படி நாட்கள் கற்பனைகளோடும் கனவுகளோடும் அவனுக்குக் கழிந்துகொண்டிருந்தபோது தான் ஒருநாள் இனியாவும் நிஷாந்தும் காதலிப்பதாக அவன் தலையில் இடியை இறக்கினார் ஜான். முத்துவால் அச்செய்தியை நம்பவே முடியவில்லை.
அப்படி எல்லாம் இருக்காதென அடித்துக்கூறியவன் ஜான் அவர்களின் காதலை முருகன் கோவிலில் காட்டியதும் நம்ப முடியாமல் திணறினான்.
இயலாமையும், ஏமாற்றமும், ஆத்திரமும் ஒருங்கே பொங்கின. உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாதவன் அவன். சாத்தான் வழிபாட்டுக்குழுவில் சேர்ந்து போதைப்பொருட்களுக்குப் பழகிய பின்னரோ ஒருவித மன இறுக்கத்தில் இருந்தான்.
அதை இன்னும் அதிகரித்துவிட்டது இனியாவும் நிஷாந்தும் சிரித்துப் பேசியபடி கோவிலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த காட்சி.
அடுத்த சில நொடிகளில் அங்கே முருகையா வரவும் அவர் எதற்கு வந்தார் என்பதையே அறியாமல் நிஷாந்த் – இனியா காதலுக்குத் உதவுபவர் முருகையா என்ற ரீதியில் ஜான் பேசிவைக்க முத்துவின் ஆத்திரத்தில் சரிபாதி முருகையா மீது பாய்ந்தது.
பல்லைக் கடித்தவனுக்கு அப்போதே முதியவர் மீது இனம்புரியாத பகையுணர்வு பொங்கியது. அந்தப் பகையுணர்வு ஒருநாள் ஜான் மீதும் பாய்ந்தது.
ஜான் நிஷாந்த் – இனியா பழக்கத்தைப் பற்றி கலிங்கராஜனிடம் சொல்லி அவர் இனியாவின் மொபைலை வாங்கிவைத்துவிட்டத் தகவலை முத்துவிடம் சொன்ன போது அவன் ஆளே மாறிப்போய் அவரைத் தாக்கத் துணிந்தான்.
அன்று ஜான் அவனிடமிருந்து தப்பித்தது பெரிய விசயம். அதற்கு பிறகு இனியா எப்படியோ கலிங்கராஜனுக்குத் தெரியாமல் அவளது மொபைலை எடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் மீண்டும் உலா வர ஆரம்பித்ததும் தான் அவன் கொஞ்சம் சாந்தமடைந்தான்.
எப்படியாவது நிஷாந்தும் இனியாவும் பிரியவேண்டுமென அவன் உள்ளம் ஆசைப்பட்டது. இனியாவின் முன்னே சென்று நிற்கவோ தயக்கமாக இருந்தது. தூரத்திலிருந்தே அவளை ரசித்து ஏக்கத்தைப் போக்கிக்கொண்டவனுக்கு எப்போதாவது பள்ளிக்கு அருகே யாருமறியாவண்ணம் நிஷாந்துடன் அவள் பேசுவதைக் கண்டால் அவளது தலைமுடியைப் பற்றி இழுத்துவந்துவிடுவோமா என்று கூடத் தோன்றும்.
தான் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுமிராண்டியாக மாறிக்கொண்டிருப்பது அவன் புத்தியில் உறைக்காதது பரிதாபமே.
இதற்கிடையே சாத்தான் வழிபாட்டுக்குழுவின் சடங்குகள் மற்றும் வழிமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தான் முத்து.. ரோஷணோடு சேர்ந்து அவ்வபோது அவனும் சில சடங்குகளைச் செய்யுமளவுக்கு முன்னேறினான்.
அவனது தொழிலிலும் நல்ல ஓட்டம். இதற்கிடையே ரோஷணின் முதலாளியான ஏகலைவனை ஒரு நாள் தூத்துக்குடி விமானநிலையத்துக்குக் கொண்டு போய்விடவேண்டிய சூழல்.
பிரயாணத்தின்போது பேச்சுவாக்கில் ஏகலைவனிடம் தனது நீண்டநாள் கனவை அவன் சொல்லிவிட்டான்.
“கவலைப்படாத தம்பி… எங்க கம்பெனி ஆட்ல ஆக்ட் பண்ணுற பாலிவுட் ஆக்ட்ரஸ் அவங்களுக்கு பெர்ஷனல் மேக்கப் மேன் அண்ட் ஹேர்ட்ரஸர் வேணும்னு சொன்னதா மார்க்கெட்டிங் மேனேஜர் விளையாட்டா சொல்லிட்டிருந்தார்… ஐ வில் ரெகமண்ட் யுவர் நேம் டு ஹெர்… டோண்ட் கிவ் அப் யுவர் ட்ரீம்ஸ்” என்று சொல்லித் தட்டிக்கொடுத்துவிட்டுப்போனான்.
தனக்கு நிஷா அகர்வாலிடம் வேலையே கிடைத்துவிட்டாற்போல குதூகலித்தான் முத்து. இந்நற்செய்தியை முதலில் ஜானிடம் கூறினான். அவனிடம் பேசவே பயந்த ஜானுக்கு முத்துவின் வாழ்க்கையில் திருப்பம் கிடைத்துவிடுமென்பதில் மகிழ்ச்சியே.
“கோவத்தை குறைச்சிக்க முத்து… நீ மட்டுமில்ல நானும் என் கோவத்தைக் குறைச்சிக்கணும்…. ஏன்னு தெரியல, சமீபமா சுருக்குனு கோவம் வருதுப்பா… நவநீதம் கூட சொன்னா” என்றார்.
“கோவம் வரலனா சூடு சொரணை இல்லனு அர்த்தம்ணே… அதை விடு… உன் கிட்ட இதை நான் ஏன் ஃபர்ஸ்ட் சொன்னேன் தெரியுமா? உன்னால தான் சாத்தான் வழிபாடு குரூப் எனக்கு அறிமுகமாச்சு… இதுக்குலாம் அந்தச் சாத்தானோட அருள் தான் காரணம்”
“நீ நல்லா இருந்தா போதும் முத்து… நீ பாம்பேக்குப் போய் பெரியாளா வந்துட்டனா முதலாளி கிட்ட தைரியமா இனியாவ பொண்ணு கேக்கலாம்… என்னடே சொல்லுற?”
“என் கனவே அது தான்ணே”
எல்லாம் சாத்தானின் அருள் என்று நம்பிய மூடர்களும் முருகையா மீது கோபமுறும் நாளும் வந்தது.
முத்து இனியாவைப் பின்தொடர்வது அவளுக்கு வேண்டுமானால் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் விசுவாசமான ஊழியரான முருகையா அவனைக் கண்டுகொண்டார்.
“எங்க சின்னம்மா பின்னாடி ஏன்டா சுத்துற?” என்று ஒரு நாள் வழிமறித்து கண்டித்தார் அவர்.
அது கொஞ்சம் மக்கள் போக வரவிருந்த பகுதி. எனவே அவரிடம் எகிறாமல் பொறுமையோடு பேசும் முடிவுக்கு வந்தான் முத்து.
“பெரியவரே”
“பேசாதடா… இனிமே எங்க சின்னம்மா பின்னாடி பாத்தேன்னா போலீஸ்ல சொல்லிடுவேன், ஜாக்கிரதை… எங்க முதலாளி ஐயாக்கு மட்டும் இது தெரியவந்துச்சுனா உன்னை உயிரோட விடமாட்டார்… மரியாதையா இருந்துக்க,,, படிக்குற பிள்ளை மனசைக் கெடுத்து பாவம் பண்ணாத”
ஆங்காங்கே சிலர் அவனையே வெறிக்கவும் முத்துவுக்கு அவமானமாகப் போய்விட்டது. தனக்கும் இனியாவுக்கும் இடையே வர இந்தக் கிழவன் யாரென பொங்கிய கோபத்தை வெளிக்காட்டாமல் இடத்தைக் காலி செய்தான்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தபோது மறக்காமல் ஜானிடம் இச்சம்பவத்தைப் பகிர்ந்தும் கொண்டான். இருவருக்கும் சாத்தான் வழிபாட்டுக் குழுவில் பழகிய போதையில்லாமல் இப்போதெல்லாம் இரவில் உறக்கமே வருவதில்லை.
“என்னைக்கு இருந்தாலும் அந்தக் கிழவனுக்கு என் கையால தான் சாவுண்ணே” என உறுமினான் முத்து.
ஜானோ “நம்ம கையிலனு சொல்லு முத்து” என்று குழறலாகக் கூறினார்.
அன்று சொன்னதை இப்போதும் உணர்ச்சி மாறாமல் சொல்லி முடித்தவனை இதன்யா உணர்வின்றி வெறித்தாள்.
அதற்குள் அவனுக்கு வியர்த்துவிட்டது.
“சோ இதுதான் முருகையாவ கொல்ல காரணம்னு நீ சொல்லுறதை நாங்க நம்பணும்… அதானே?” கேலியாக அவள் கேட்க முத்துவின் முகம் மாறியது.
“இதுக்காக அவரைக் கொல்லலை… அதுக்குக் காரணம் ரோஷண்… அவனோட சாவு” என்றான் அவன்.
மீண்டும் நடந்ததை முத்து சொல்ல ஆரம்பிக்க இதன்யா கவனமாகக் கேட்க ஆரம்பித்தாள்.
“இனியாவோட சாவு வரைக்கும் எங்க சாத்தான் வழிபாட்டு குரூப்ல எந்தப் பிரச்சனையும் வரல மேடம்… அவளோட மரணம் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு… ஆனா அதை சகிக்க முடிஞ்ச என்னால ரோஷண் அதுக்குக் காரணம்னு போலீஸ் அரெஸ்ட் பண்ணுனதை சகிச்சிக்க முடியல… ரொம்ப நாளா அவனுக்குச் சக்தி வரணும்னா ஒரு இளவயசு பொண்ணை அருவருப்பான முறையில சாகடிச்சு சாத்தானுக்கு நரபலியா குடுக்கணும்னு ரோஷண் சொல்லிட்டே இருந்தான். அவன் வேற யாரைக் கொன்னுருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்… என் இனியாவை…”
பேச்சை முடிக்க முடியாமல் திணறிப்போனான் முத்து.
“இனியாவ அவன் தான் கொன்னுருப்பான்னு எப்பிடி சொல்லுற? லை டிடெக்டிங் டெஸ்டுல கூட அவன் கொலை பண்ணுனதை ஒப்புக்கல… இத்தனைக்கும் அவனுக்கு இருந்த டிப்ரசனுக்கு அவனால மனவலிமையோட பொய் சொல்லிருக்க முடியாது… போலீசே அவன் குற்றவாளி இல்லனு சொன்னப்புறமும் நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்லுறியே ஏன்?”
“ஏன்னா இனியா இறந்த விதம் எங்களைப் போல கல்ட் குரூப் ஒன்னுல நரபலி குடுக்குறதுக்காக பயன்படுத்துற விதத்தோட ஒத்துப்போகுது… குரூப்புல சேர்ந்த கிளாரா மேடமும், கலிங்கராஜன் சாரும் அங்க இருந்து விலகுனதுக்குக் காரணம் இனியா தான்னு அவனுக்குத் தெரியவந்தப்ப ரோஷண் ரொம்ப கோவப்பட்டான்… ஒரு கல்ட் குரூப்போட எதிர்காலம் அதோட உறுப்பினர்களோட நம்பிக்கைல தான் இருக்கும்… உறுப்பினர்கள் மனசு மாறுனா அதுக்கு எதிர்காலமே இல்லாம போயிடும்… அந்த மாதிரி கல்ட் குரூப்போட தலைவனா அவனோட கோவம் எனக்கு அப்ப நியாயமா தோணுச்சு… ஆனா அவன் இனியாவ நரபலி குடுப்பான்னு நான் எதிர்பாக்கல”
“சோ அவனைத் தற்கொலைக்குத் தூண்டிருக்க?”
முத்து மௌனமாகத் தலையசைத்தான். கூடவே அன்று நடந்ததை சொல்லவும் ஆரம்பித்தான்.
ரோஷண் கைதான தினத்திலிருந்து சாத்தான் வழிபாட்டுக் குழு உறுப்பினர்கள் பீதியில் கலங்கினர். முத்துவோ ரோஷண் மீது கொலைவெறியில் இருந்தான். காவல்துறை அவனைச் சும்மாவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை.
குழுவின் உறுப்பினர்களுக்குத் தைரியம் கொடுக்கவேண்டிய இடத்தில் முத்து இருந்தான். இருப்பினும் ரோஷணின் தம்பி ராக்கி வந்து அவர்களிடம் பேசினால் கொஞ்சம் குழுவினர் தைரியமடைவார்கள் என்பதால் அவனைச் சந்தித்துப் பேச சக்கரவர்த்தி தேயிலை தோட்ட அலுவலகத்துக்கே போனான், வழக்கமான மாறுவேடத்தில் தான்.
அங்கே காவல் நிலையத்திலிருந்து வந்த மொபைல் அழைப்பில் பேசிக்கொண்டிருந்தான் ராக்கி.
“சரி நான் அவனோட மாத்திரைய கொண்டு வந்துடுறேன்”
ரோஷண் மன அழுத்தத்திற்கு மாத்திரை எடுப்பது முத்துவுக்கும் தெரியும். அவனுடன் நெருங்கிப் பழகியதால் அவ்வபோது அந்த மாத்திரையை குகையில் எங்கே ஸ்டாக் வைப்பான் என்பதும் தெரியும்.
தொடர்ந்து ராக்கி அங்கிருந்த டீ சப்ளையரிடம் பேசியது தான் ரோஷணை முடிக்கவேண்டுமென்ற முடிவுக்கு முத்துவை வரவைத்தது.
“அண்ணன் மேல எந்தத் தப்பும் இருக்காதுண்ணே… ஃபாதர் சில பெரியாளுங்களை வச்சு அண்ணனை வெளிய எடுக்க ஏற்பாடு பண்ணிட்டிருக்கார்”
உடனே முத்துவுக்கு வெறியேறியது. என் காதலியைச் சித்திரவதை செய்து கொன்றவன் இனி உயிரோடு இருக்கவே கூடாது என தீர்மானித்தவன் நேரே காட்டு குகைக்குப் போனான்.
அங்கே இருந்த மருந்துகளில் எது ஹைடோஷ் என்பதைப் பார்த்து எடுத்துக்கொண்டவன் சாத்தான் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஹாக்சா ப்ளேடில் ஒரு துண்டு உடைந்து கிடப்பதைப் பார்த்தான். அதையும் மாத்திரையையும் ஒரு கவரில் போட்டு எடுத்துக்கொண்டவன் நேரே சாத்தான் சிலையின் முன்னே மண்டியிட்டான்.
“இன்னைக்கு உங்களைச் சந்தோசத்துல ஆழ்த்த ஒரு உயிர்பலி நடக்கப்போகுது சாத்தானே! நான் எடுத்தக் காரியத்தைக் கச்சிதமா செஞ்சு முடிக்க உங்க அருள் தேவை” என வேண்டிக்கொண்டான்.
ஏற்கெனவே போட்ட மாறுவேடத்தோடு காட்டுக்குகையிலிருந்து முத்து வெளியேறியதை சாத்தான் சிலைக்குப் பின்னே படுத்திருந்த பத்ரா பார்த்துக்கொண்டிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

