“அவ என்னைத் தள்ளி நிறுத்துறதா நினைக்குறா. ஆனா அவளால என்னை அலட்சியப்படுத்த முடியல. என்னைப் பத்தி ரொம்ப அதிகமா யோசிக்குறா. அந்த யோசனை தான் அவளோட சண்டைக்காரி இயல்பை மீறி அவளைத் தடுமாற வைக்குது. ஒருத்தர் நம்மளைத் தவிர்க்க நினைக்குறது கூட பேரன்போட அடையாளமா தெரியும்னு இன்னைக்குத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன். என் மேல அவளுக்கு இருக்குற ஃபீலிங்சைக் கையாளத் தெரியாம அவ என்னைத் தள்ளி நிறுத்துறா. எத்தனை நாள் இந்தப் போராட்டம்னு பாக்கலாம்”
-பவிதரன்
மனதில் ஊற்றெடுக்கும் உற்சாகத்தோடு நதியூரிலிருந்து கிளம்பி மேரு பில்டர்ஸ் அலுவலகத்துக்கு தர்ஷனை அழைத்து வந்தாள் மதுமதி.
அலுவலகத்தை வெளியே நின்று பார்த்தவனின் விழிகளில் சின்னதாய் ஒரு அதிருப்தி.
சில பல இலட்சங்கள்தான் டர்ன் ஓவர் என்று சொல்லியிருந்தாள் அவள். அவனால் அதை நம்ப முடியவில்லை. கட்டாயம் கோடிகளில் இருக்கும் என்றே அனுமானித்திருந்தான்.
அப்படிப்பட்ட நிறுவனம் இன்னும் கொஞ்சம் நவீனமாய், இன்னும் கொஞ்சம் பெரிதாய் இருந்திருக்கலாமென்ற எண்ணம் அவனுக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அலுவலகத்தில் நுழையும்போதே ரிசப்ஷனிஸ்ட் மயூரி வணக்கம் சொல்ல இருவரும் தலையசைத்துவிட்டு உள்ளே வந்தார்கள்.
எண்ணி நான்கே அலுவலக ஊழியர்கள்! எந்தவித உள் அலங்காரமும் இல்லாத அலுவலகம். ஒவ்வொன்றையும் நோட்டமிட்ட தர்ஷனை மதுமதி பவிதரனின் அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
போகும்போதே ஒருவித அசூயையுடன் ஈஸ்வரியைப் பார்க்க அவளோ ‘நீ எப்படி பார்த்தால் எனெக்கென்ன அக்கற?’ என்ற ரீதியில் தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.
அதை மரியாதைக்குறைவு என மதுமதி நினைத்தாலும், அவள் மனம் குமுறினாலும், இப்போதே இவளுக்குப் பதிலடி கொடுத்துவிடவேண்டுமென அவளுக்குள் ஒரு குரல் கேட்டாலும் தர்ஷன் அங்கே இருந்ததால் அவன் முன்னிலையில் எந்தவித இரசபாசமும் செய்ய அவளுக்கு விருப்பமில்லை.
அதனால் அமைதியாய்க் கடந்தாள். அதே சமயம் அங்கே இருந்த அமைப்பும் தர்ஷனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவனது முகமே காட்டிக்கொடுத்தது.
“என்னாச்சு தர்ஷன்? ஏன் ஒரு மாதிரி இருக்குறிங்க?”
நாற்காலியில் அமர்ந்தபடி வினவினாள் மதுமதி.
தர்ஷன் மீண்டும் ஒரு முறை தனது அதிருப்தி பூசிய விழிகளால் அந்த அலுவலக அறையை நோட்டமிட்டான்.
“ரொம்ப ஓல்ட் மாடல் ஆபிசா இருக்கு மது. கொஞ்சம் ரினொவேசன் அவசியம். இண்ட்ரீயர் எல்லாம் ரொம்ப பாடாவதியா இருக்கு”
மதுமதி பெருமூச்சு விட்டாள்.
“அதைப் பத்தி நமக்கென்ன தர்ஷன்? இது அண்ணனோட தொழில்”
தர்ஷனின் புருவங்கள் முடிச்சிட்டன.
“இந்தத் தொழில்ல மாமாக்கும் உனக்கும் ஷேர் இருக்குல்ல? அவருக்காக நாம யோசிக்கலாமே?”
மதுமதிக்கு இதில் பெரிதாய் அக்கறை இல்லை என்றாலும் மத்திமமாய் தலையாட்டி வைத்தாள்.
“எப்பிடியும் வருச டர்ன் ஓவர் ஏழுல இருந்து பத்து கோடி இருக்கலாம். அப்பிடிப்பட்ட இலாபத்தைச் சம்பாதிச்சுத் தர்ற தொழிலுக்குச் சில லட்சணங்கள் இருக்கனும் மது. இந்த ஆபிஸ், இதோட இண்டீரியர், ஒர்க்கர்சோட பிஹேவியர்னு எல்லாத்துலயும் மாற்றம் தேவை. இதெல்லாம் மாமா கிட்ட நீ தான் எடுத்துச் சொல்லணும்”
“ஆனா ஏன்? எனக்கு இந்த பிசினஸ் மேல பெருசா இண்ட்ரெஸ்ட் இல்ல. நீங்க வரனும்னு சொன்னதால அழைச்சிட்டு வந்தேன்”
மதுமதி என்ன தான் சமாளித்தாலும் மனதுக்குள் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தாள். தர்ஷன் திருவனந்தபுரத்தில் இருக்கும் கார்பரேட் அலுவலகங்களின் அமைப்பைத் தங்களிடம் எதிர்பார்க்கிறான் என்பது புரிந்தது.
அதே நேரம் இப்படி பழையபாணியில் அலுவலகத்தை வைத்திருந்த தமையன் மீது எரிச்சல் வந்தது.
நண்பர் கூட்டத்தில் அனைவரும் புதுவிதமாய் நவநாவகரிகமாய் உடையணிந்திருக்க, நாம் மட்டும் பழைய உடையை அணிந்து போனால் ஒருவித அசௌகரியமும் சங்கடமும் வருமே, அது போலதொரு சங்கடம் மதுமதிக்குள்!
“இண்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லக்கூடாது மது. நீயும் இங்க போக வர இருக்கணும். எல்லாத்தையும் பவி தலையில தூக்கிப் போட்டா அவரும் என்ன செய்வார்? தனிமனுசனா கஷ்டப்படுறார். என்னைக் கேட்டா மாமா அடிக்கடி ஆபிஸ் வந்து மேற்பார்வை செய்யணும்னு சொல்லுவேன்”
நிதானமாய்ச் சொன்னவனின் பார்வை அந்த அறையிலிருந்த கோப்புகள் அடுக்கிய அலமாரிகள் மீது படர்ந்தது. அதில் அலுவலகத்தின் முக்கியமானக் கோப்புகள், வரி சம்பந்தப்பட்ட விவரங்கள், கணக்கு வழக்குகளின் பிரதிகள் அடங்கிய கோப்புகள் என அனைத்தும் ஆண்டுவாரியாக அடுக்கப்பட்டிருந்தன.
நிதானமாக அதனருகே போனவன் அது பூட்டியிருப்பதை அறிந்து “இதோட சாவி?” என மதுமதியைக் கேட்க அவளோ அண்ணனின் மேஜையில் தேடிப் பார்த்தாள். சாவி இல்லை.
“ஸ்டாஃப்ஸ் கிட்ட கேட்டுப் பாக்குறேன்” என்றவள் தமையனின் மேஜை மீதிருந்த தொலைபேசியில் அழைத்தாள். அது நேரே ரிசப்சனிஸ்டுக்குப் போகவும் “சொல்லுங்க மேடம்” என்ற குரல் கேட்டது.
“ஆபீஸ் ரூம்ல இருக்குற கபோர்டோட கீ எங்க இருக்கு?”
“அது ஜீவன் சாருக்குத்தான் தெரியும் மேடம்”
“அப்ப அவரை ரூமுக்கு வரச் சொல்லுங்க”
தர்ஷன் போனையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
“எல்லா ஸ்டாஃப் கிட்டவும் கனெக்ட் பண்ணுற மாதிரி இண்டர்காம் ஒன்னு வைக்கணும்” என்றான் மனதுக்குள்.
ஏன் இதெல்லாம் நான் யோசிக்கிறேன் என்ற எண்ணமே அவனுக்குள் வரவில்லை. ஏதோ பாழடைந்த கட்டிடத்தைப் பழுது பார்த்து நவீனப்படுத்தும் ஆளைப் போல உணர்ந்தான் அவன்.
அவன் பார்த்துப் பழகிய அலுவலங்களிடமிருந்து பத்து பதினைந்து வருடங்கள் இந்த அலுவலகம் பின்தங்கியிருப்பதாக உணர்ந்தான்.
ஜீவன் உள்ளே வந்ததும் அலமாரியைக் காட்டி சாவி எங்கே என வினவினாள் மதுமதி.
“அந்தக் கபோர்டா?” ஜீவனிடம் சின்னதாய் தயக்கம்.
“ஆமா. சாவி எடுத்துக் குடுங்க”
“அது… அந்தக் கபோர்ட்ல இருக்குறது கான்ஃபிடன்சியலான ஃபைல்ஸ் மேடம். அதை பவி சாரைத் தவிர வேற யாரும் பாக்குறதுக்கு விட முடியாது”
விசுவாசமான ஊழியனின் பதிலில் மதுமதியின் முகம் இருண்டது.
‘எங்களிடம் சம்பளம் வாங்குபவன் எனது கட்டளையை நிறைவேற்ற மறுக்கிறான்’
சும்மாவே தலைக்கனத்தில் திரிபவளுக்கு வருங்காலக் கணவன் முன்னிலையில் தங்களது ஊழியன் ஒருவன் இவ்வாறு பேசியதும் ஈகோ தலைக்கேறியது.
“வாட்? அப்ப நானும் இவரும் வெளி ஆளுங்களா? இந்த ஆபீஸ்ல, இந்த கம்பெனில எனக்கும் பங்கு இருக்கு. நான் இங்க வராம இருக்குறதால என்னை வெளியாள் மாதிரி நீங்க ட்ரீட் பண்ணுவிங்களா?”
“அப்பிடி இல்ல மேடம். இது பவி சாரோட ஆர்டர்”
“நான் அவரோட தங்கச்சி. இந்தக் கம்பெனியோட ஷேர் ஹோல்டர்ல நானும் ஒருத்தி. என் கிட்ட கம்பெனியோட கான்ஃபிடென்சியல் டேட்டாவ காட்டுறதுக்கு உங்களுக்கு என்ன தயக்கம்? நாங்க சொல்லுறதைச் செய்ய தான் உங்களுக்குச் சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருக்கோம். எங்க கிட்ட எதிர்த்துப் பேசுறதுக்கு இல்ல”
அவள் எகிற, ஜீவன் தடுமாற, அவன் உள்ளே வரும்போது மூடாதக் கதவின் வழியே மதுமதியின் ஆணவமானப் பேச்சு ஊழியர்களின் செவியைச் சுட்டது.
அனைவரின் முகங்களும் மாறின. ஈஸ்வரி கடுப்போடு தனது இருக்கையிலிருந்து எழுந்தாள். சுமதி அவசரமாய் அவளது கையைப் பற்றி அமர வைத்தார்.
“எங்க போற?”
“அவ அங்க ஜீவன் அண்ணா கிட்ட திமிரைக் காட்டிட்டிருக்கா. அமைதியா இருக்கச் சொல்லுறிங்களாக்கா?”
“சம்பளம் குடுக்குற முதலாளி என்ன பேசுனாலும் கேட்டுக்கனும் ஈஸ்வரி. வேற வழியில்ல நமக்கு”
“இவளா நமக்குச் சம்பளம் குடுக்குறா? நம்ம வேலை பாக்குறது இவ அண்ணன் கிட்ட. இவ கிட்ட இல்ல”
“அண்ணன் வேற தங்கச்சி வேறயா ஈஸ்வரி? அவங்களுக்கு நம்ம கம்பெனில ஷேர் இருக்கு. ஒரு ஷேர் ஹோல்டரா அவங்களும் நமக்கு முதலாளிதான்.”
“அதெல்லாம் புரியாம இல்லக்கா. அவ ஜீவன் அண்ணா கிட்ட பேசுற விதம் நல்லா இல்ல”
அதே நேரம் உள்ளே இருந்து மதுமதியின் பேச்சு இன்னும் உரத்தக் குரலில் கேட்டது.
“நாளைக்கே இந்த ஆபிசுக்கு நான் முதலாளியா வந்து உக்காந்தா என்ன பண்ணுவிங்க? வேலைய விட்டுத் துரத்துனா அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்ல உங்க யாருக்கும். இந்த நிலமைல இருக்குறப்ப இவ்ளோ திமிரா?”
“அதில்ல மேடம்…” ஜீவன் சொல்ல முற்படும் முன்னர் மீண்டும் குறுக்கிட்டாள் அவள்.
“அநாவசியமா பேசாதிங்க. சாவிய குடுத்துட்டு வெளிய போங்க.”
இத்துணை உதாசீனமா? இதற்கு மேல் பொறுக்க முடியாமல் அலுவலக அறைக்குள் வேகமாக நுழைந்தாள் ஈஸ்வரி.
அங்கே பவிதரனின் இருக்கையில் அமர்ந்திருந்தான் தர்ஷன். அதைப் பார்த்தபோதே காரணம் என்னவெனப் புரியாமல் வயிற்றுக்குள் தீப்பற்றியது அவளுக்கு.
அடுத்தவரின் இருக்கை, அடுத்தவரின் இடம், அடுத்தவரின் உடைமை இவற்றைப் பறிப்பதைச் சிலர் அசிங்கமெனக் கருதுவதில்லை. சுயம் என்ற ஒன்றும், சுயமரியாதை என்ற குணமும் அனைவரும் இருக்குமென எதிர்பார்க்க முடியாதே!
கொஞ்சம் கொஞ்சமாய் கஷ்டப்பட்டு வெற்றியை ருசிக்கும் பொறுமை சிலருக்குக் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் குறுக்குவழியில் துரிதமாய் முன்னேறுவது மட்டுமே!
அடுத்தவரது உழைப்பில் உருவான அவருடைய உடைமையைத் தட்டிப் பறித்துத் தன்னுடையதாக்கிக் கொள்ளும் கேவலபுத்தி அவர்களுக்கு இருக்கும்.
ஏனோ தர்ஷனுக்குக் கடினமாய் உழைத்து என்றோ ஒரு நாள் நம்பர் ஒன் இடத்துக்கு வருவது என்ற தத்துவத்தில் பிடித்தமில்லை.
உயர்வும் வளர்ச்சியும் உடனடியாக வரவேண்டுமென விரும்புபவன்.
அவனால் இதன் காரணமாகவே பவிதரனின் இருக்கையில் கூச்சமின்றி அமர முடிந்தது.
ஈஸ்வரிக்கோ அந்தக் காட்சியைப் பார்த்ததும் எரிச்சல் தாளவில்லை.
“யாரைக் கேட்டு பவிதரன் சாரோட சேர்ல உக்காந்திருக்கிங்க? இது அவரோட ஆபிஸ். நாங்க எல்லாரும் அவரோட ஸ்டாஃப்ஸ். எங்களை என்ன வேணும்னாலும் சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து அதிகாரம் பண்ணுறதுக்கு எந்த உரிமையும் இல்லாதவங்க. பவிதரன் சாரைத் தவிர வேற யாருக்கும் பதில் சொல்ல நாங்க கடமைப்படல”
மதுமதிக்குச் சும்மாவே ஈஸ்வரியைப் பிடிக்காது. மலர்விழியின் தோழி என்பது முழுமுதற்காரணம். தங்களது நிறுவனத்தில் வேலை பார்ப்பவளுக்கு இவ்வளவு திமிரா என்று பொங்கியெழுந்துவிட்டாள்.
“வாயை மூடு! இவர் என்னோட ஃபியான்ஸ். உனக்கு என்ன தகுதி இருக்கு எங்களைப் பத்தி பேசுறதுக்கு? இந்த சேர் என் அண்ணனோடது. இதுல உக்கார என் தர்சனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆபிசுக்கு வந்தோமா, வேலைய பாத்தோமா, சம்பளத்தை வாங்கி வயித்துப்பாட்டைப் பாத்தோமானு இரு. இல்லனா இந்த வேலைய விட்டு உன்னைத் தூக்கியெறிய நான் கொஞ்சம் கூட தயங்கமாட்டேன்”
“உன்னால முடிஞ்சா செஞ்சு பாரு. வாங்க ஜீவன் அண்ணா. சாரைத் தவிர வேற யார் கிட்டவும் நீங்க சாவிய குடுக்கவேண்டிய அவசியமில்ல. அதைத்தாண்டி இவ பிரச்சனை பண்ணுனா நான் பாத்துக்குறேன்”
ஜீவன் தயக்கத்தோடு ஈஸ்வரியோடு வெளியெற, மதுமதி கையாலாகாத்தனத்தை எப்படி காட்டுவதெனத் தெரியாமல் தரையை உதைத்தாள்.
ஆனால் பவிதரனின் இருக்கையில் அமர்ந்திருந்த தர்ஷனின் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. ஆனால் மனதுக்குள் மட்டும் வைராக்கியமாய் ஒரு எண்ணம்!
இங்கே வரும்வரை கூட அந்த எண்ணமில்லை அவனுக்கு. ஜீவனின் மறுப்பும், ஈஸ்வரியின் பேச்சும் அவனுக்குள் உண்டாக்கிய தாக்கத்தால் உருவான எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவானது.
‘இதே அலுவலகத்தை என்னுடையதாக்கிக் காட்டுகிறேன்’
வைராக்கியத்தோடு மானசீகமாய்ச் சொல்லிக்கொண்டான் அவன்.
“விடு மது! இதெல்லாம் உன் தலைக்குள்ள ஏத்தி டென்சன் ஆகாத. நம்ம கல்யாணத்தைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்காத”
மதுமதியை அழைத்துக்கொண்டு அந்த அலுவலகத்திலிருந்து தர்ஷன் வெளியேறிய சில மணி நேரங்களில் பவிதரன் அங்கே வந்து சேர்ந்தான்.
ஊழியர்களின் முகவாட்டத்தைக் கண்டதும் என்னவென ஜீவனை அழைத்து விசாரித்தான். அவனும் நடந்ததைச் சொல்ல பவிதரனுக்கே தங்கை நடந்துகொண்ட விதத்தில் கடுப்பு.
“நீங்க போங்க ஜீவன். எதையும் மனசுல வச்சுக்காதிங்க. மத்தவங்க கிட்டவும் நடந்த எதையும் மனசுல வச்சுக்க வேண்டாம்னு சொல்லிடுங்க. இந்த ஆபிஸ்ல எந்த மாற்றமும் வராது. அதுக்கு நான் கேரண்டி. போங்க”
ஈஸ்வரியிடம் மதுமதி பேசிய விதத்தைச் சொல்லிவிட்டுத்தான் ஜீவன் வெளியேறினான். அவன் வெளியேறிய சில நிமிடங்களில் தனது அலுவலக அறையை விட்டு வெளியே வந்து கதவில் சாய்ந்து நின்ற பவிதரன் அனைத்து ஊழியர்களின் முகங்களிலும் சின்னதாய் ஒரு ஆசுவாசம் படர்ந்திருப்பதைக் கவனித்தான்.
ஈஸ்வரியின் முகத்தில் மட்டும் அது மிஸ்சிங். அவளது முகச்சுணக்கமும் ஆதங்கமும் அவனைப் பாதிப்பதாய்!
“ஈஸ்வரி”
அவனது குரல் ஒலித்ததும் கணினியின் திரையிலிருந்து தனது பார்வையை உயர்த்தினாள் அவள்.
“உங்க கிட்ட பேசணும்” என்றவன் உள்ளே போய்விட அவளும் எழுந்து அலுவலக அறைக்குள் வந்து நின்றாள்.
“உக்காரு”
“நான் உங்க கிட்ட..”
“உக்காருனு சொன்னேன்”
அழுத்தமாய் கட்டளை பிறப்பித்ததும் அவளால் மீற முடியவில்லை.
அமர்ந்தாள். அவனைப் படபடப்புடனும் அமைதியின்மையோடும் நோக்கினாள்.
பவிதரன் நிதானமாய் தண்ணீர் தம்ளரை அவளை நோக்கி நகர்த்தினான்.
“குடி”
“இப்ப இது அவசியமா?” ஆயாசமாய் வந்தது ஈஸ்வரிக்கு.
“கண்டிப்பா! டென்சனா இருக்கப்ப மூச்சு வாங்கும். இதயம் வேகமா துடிக்கும். தண்ணி குடிச்சா சுவாசம் கொஞ்சம் சீராகும். குடி!”
பவிதரனை முறைத்தபடி முழு தம்ளரையும் காலி செய்தாள்.
“இப்ப பேசட்டுமா?” என்றாள்.
“ம்ம்” ‘ஆரம்பி’ என்பது போல கையசைத்தான் பவிதரன்.
ஈஸ்வரி அவனை நிதானமாகப் பார்த்தவள் “இந்த சேர் உங்களோடது. இதுல உங்களைத் தவிர வேற யாரையும் உக்கார விடாதிங்க. உங்களோட இடம் என்னைக்கும் உங்களோடதா மட்டும்தான் எப்பவும் இருக்கணும்” என்றாள்.
அவளது கண்களில் தெரிந்தது ஆதங்கம் மட்டுமே! இப்போது கூட பவிதரனின் இருக்கையில் தர்ஷன் அமர்ந்ததை அவளால் சகிக்க இயலவில்லை.
“சோ தர்ஷன் என் சீட்ல உக்காந்தது உனக்குப் பிடிக்கல?”
அவன் குறுநகையோடு புருவம் உயர்த்திக் கேட்ட விதத்தில் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் தர்ணா போராட்டம் செய்தன ஈஸ்வரிக்கு.
“அ..அது…”
“ஏன் பிடிக்கல சண்டைக்காரிக்கு?”
ஈஸ்வரி அவசரமாய்த் தண்ணீரைத் தேடினாள்.
“என்ன? தண்ணி வேணுமா?”
கிண்டல் பவிதரனின் குரலில். முறைப்பாய் அவள் பார்வை மாறியதும் தண்ணீர் பாட்டிலில் இருந்து தம்ளரில் நிரப்பினான்.
அதை எடுத்து அருந்தியவள் “ஆமா பிடிக்கல! எங்க கண்ணு உங்களை மட்டும்தான் முதலாளியா பாத்திருக்கு. இனியும் பாக்க விரும்புது. உங்க மச்சான் கிச்சான்னு எவன் வந்தாலும் அவனை எங்களால சகிக்க முடியாது. நீங்க எங்களை எப்பவுமே மட்டமா நடத்துனதில்ல. ஸ்டாஃப்ஸ் தானேனு அலட்சியப்படுத்துனதில்ல. இவ்ளோ ஏன்? எங்களுக்கு வாங்குற டீயைத் தான் நீங்க குடிக்கிறிங்க. எங்களை இவ்ளோ மரியாதையா நடத்துற உங்களை விட்டுட்டு இன்னொரு குப்பன் சுப்பனை உங்க இடத்துல வச்சு எப்பிடி எங்களால பாக்க முடியும்?” என்று அவள் கேட்க
“அப்பிடியா? அப்புறம்…” எனக் கதை கேட்பவனைப் போல பவிதரன் கன்னத்தில் கையூன்றிக்கொண்டான்.

“அப்புறம் என்ன? ஒன்னுமில்ல”
ஈஸ்வரி எழுந்துகொண்டாள். ஆனாலும் அவனது சிரிப்பு அவளை ஏதோ செய்வதாய்! அதிகப்பிரசங்கித்தனமாய் பேசிவிட்டோமொ என்ற கேள்வி அவளுக்குள். சமாளித்து வைப்போமெனத் தீர்மானித்தாள்.
“எல்லா ஸ்டாஃபும் என்ன நினைக்குறாங்களோ அதைச் சொன்னேன்”
பவிதரனின் தலை மறுப்பாய் அசைந்தது.
“ஸ்டாஃப்சுக்கு மாசமாசம் சேலரி வந்தா போதும். மத்தபடி முதலாளி சீட்டுல யார் உக்காந்தாலும் அவங்களுக்குக் கவலை இருக்காது. உன்னோட ஆதங்கம் ஒரு ஸ்டாஃபோட ஆதங்கமா எனக்குத் தோணல. நீ உன்னை ஏமாத்திக்காத ஈஸ்வரி. போ”
சன்னச்சிரிப்போடு அவன் சொன்ன விதம் அவளுக்குள் குழப்பத்தை விதைப்பதாய்!
‘என்னை நான் ஏமாற்றிக்கொள்கிறேனா? எந்த விதத்தில்? என்ன அர்த்தத்தில் இவன் சொல்கிறான்?’
தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியவளின் குழப்பமான முகத்தைக் கூட ரசிக்கப் பிடித்தவனாய் பவிதரன் அவனது நாற்காலியில் வசதியாய் சாய்ந்து அமர்ந்துகொண்டான். அவனது இரு கரங்களும் அந்த நாற்காலியின் இரு கைப்பிடிகளிலும் அழுத்தமாய் அதிகாரமாய் பதிந்து இறுகின.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

