“கடலுக்கு அடியில இருக்குறப்ப அலைகளோட வலிமை யாரோட கண்ணுக்கும் தெரியாது. அது கரையை மோதுறப்பதான் அதோட ஆவேசமும் வலிமையும் உலகத்துக்குத் தெரிய வரும். அதே மாதிரிதான் மனவுறுதியும். நமக்குள்ளவே அதை மறைச்சு வச்சிருக்குறப்ப உலகத்தோட பார்வைக்கு அது தெரியாது. ஏதோ ஒரு சோதனையான சூழல்ல அதை நாம வெளிப்படுத்துறப்பதான் அந்த மனவுறுதியை இந்த உலகம் பாக்கும். பாராட்டும்”
-ஈஸ்வரி
ஓல்ட் காபி ஹவுஸ், வல்லக்கடவு, திருவனந்தபுரம்…
கேரளா பாணி கூரையோடு கூடிய பெரிய வீட்டின் வராண்டா போல அமைந்திருந்த அந்தக் கபேயின் வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கபேயிலிருந்து தொலைவில் தெரியும் கடற்கரையையும் அங்கே மணல் துகள்களின் எண்ணிக்கைக்கு ஈடாய் தெரிந்த மனிதத் தலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமதி.
அவள் முன்னே இருந்த மேஜையில் இரண்டு கண்ணாடி தம்ளர்களில் தேநீர் ஆவி பறக்க அமர்ந்திருந்தது. பக்கத்தில் ஒரு தட்டில் தக்காளி சாஸினால் ஸ்மைலி வரையப்பட்டு இதயவடிவில் இரண்டு சிக்கன் கட்லெட்கள் மொறுமொறுப்புடன் சுவைக்கப்படுவதற்காகக் காத்திருந்தன.
இரண்டு தேநீர் தம்ளர்கள் என்றால் கட்டாயம் அவளுடன் இன்னொரு நபர் இருக்கவேண்டும்தானே! அந்நபர் தர்ஷன். அவளுக்காக வீட்டார் பேசி முடித்த வரன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தோற்றத்திலோ பேச்சிலோ அவனிடம் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை மதுமதியால். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவனிடம் இயல்பாய் ஒன்றவிடவில்லை அவளை.
“இங்க டீ ரொம்ப நல்லா இருக்கும். கூடவே பீச் வியூவும் இருக்கும்னு தான் அழைச்சிட்டு வந்தேன். உனக்குப் பிடிச்சிருக்கா?”

ஆவலாய் கேட்டவனின் கண்களில் ஆவலோடு கூடுதலாய் சில கணக்கீடுகளும். அதை மதுமதியால் புரிந்துகொள்ள முடிந்தது.
“ம்ம்… நல்லா இருக்கு”
“அப்ப ஏன் இன்னும் டீ குடிக்காம வச்சிருக்க? கம் ஆன்! ட்ரை பண்ணி பாரு”
அவன் ஊக்கியதில் தேநீரை எடுத்து அருந்தியவள் மெய்யாகவே அது ருசியாக இருக்கவும் கட்லட்டின் துணையோடு காலி செய்தாள். தர்ஷனும் அவளுக்குக் கம்பெனி கொடுக்க மெல்ல மெல்ல இருள் கவ்வியது அங்கே.
‘Old coffe house’ என்ற பெயர் விளக்குகளால் மின்ன பளீர் விளக்குகளின் உபயத்தால் கபேயும் ஒளிர்ந்தது.
“இந்தக் கல்யாணத்துக்கு முழு மனசா நீ சம்மதிக்கலதானே?”
அடுத்துக் கொண்டு வரப்பட்ட ஃபிஷ் பிங்கரைச் சுவைத்தபடி வினவினான் தர்ஷன். மதுமதி திடுக்கிட்டு விழித்தாள். பெற்றோரின் வற்புறுத்தல், தன்னை ஊரிலிருந்து கடத்திவிடும் அண்ணனின் முனைப்பு எல்லாம் சேர்ந்து அவளைச் சொல்லவொண்ணாத விரக்தியில் ஆழ்த்தியிருந்தது.
தனது விருப்பத்தைப் பற்றி யாருக்குமே கவலையில்லை என்ற வெறுப்பு. கூடவே இன்னொருவனைத் தனது வாழ்க்கைக்குள் திணிக்க நினைக்கிறார்களே, அவன் இன்னொரு முரளியாக இருக்கமாட்டான் என என்ன நிச்சயம்?
நிமிர்ந்தவள் “நான் ஒருத்தனைக் காதலிச்சு மண்டபத்தை விட்டு ஓடிப்போனவ. அதுக்கு அப்புறம் கல்யாணம்ங்கிற பேருல ஒரு பொறுக்கிய என் வாழ்க்கையில இணைச்சு வச்சாங்க. அவனை டிவோர்ஸ் பண்ணிட்டேன். எனக்கு நிச்சயம் செஞ்ச புவனேந்திரனை மாதிரி என் மேல உண்மையான அன்பு யாருக்குமே இல்லங்கிறது என்னோட அழுத்தமான நம்பிக்கை” என்றாள் தயக்கமின்றி.
தொடர்ந்து “இப்ப உங்களுக்கே இந்தக் கல்யாணத்துல இண்ட்ரெஸ்ட் போயிருக்கும்” என்றாள் விரக்தியானச் சிரிப்போடு.
தர்ஷன் இல்லையென மறுப்பாய் தலையசைத்தான். மதுமதிக்கு ஆச்சரியம்.
“நீங்க படிச்சவர். நல்ல ஜாப்ல இருக்கிங்க. இவ்ளோ மைனஸ் பாயிண்ட்ஸ் இருக்குற என்னை…”
“எனக்குமே மைனஸ் பாயிண்ட்ஸ் இருக்குதானே? நானும் ஒரு டிவோர்சி தான். எனக்கு எங்கம்மாவோட நிம்மதி முக்கியம். எங்கம்மாவைச் சரிவர கவனிக்காத பொண்டாட்டி தேவையில்லனு பிரியாவை டிவோர்ஸ் பண்ணிட்டேன். அப்புறமா யோசிச்சுப் பாத்தப்ப எவ்ளோ பெரிய முட்டாள் நான்னு புரிஞ்சுது. ஒரு ஆணோட உலகம் அம்மாங்கிற பெண்ல தொடங்கி மனைவிங்கிற பெண்ல அடங்கணும். அதுதான் நிதர்சனம்னு புரிஞ்சுது. இப்ப சொல்லு! கல்யாணம் பண்ணிக்கலாமா?”
மதுமதி வாயடைத்துப் போனாள். நாடக்கத்தனம் இல்லாத அதே சமயம் கடந்தகாலத் தவறை உணர்ந்துகொண்டதற்கான மனப்பாங்கோடு தர்ஷன் கேட்ட விதத்தில் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அவள் அமைதியாக இருக்கவும் “இதை நான் சம்மதமா எடுத்துக்கலாமா?” என்று மெதுவாக வினவினான்.
தந்தையின் அடக்குமுறை, பாசமாக இருந்தாலும் தன்னை எதிலும் முன்னிறுத்தாத தமையனின் நேர்மையால் உண்டான சங்கடம், ஆண் என்ற திமிரில் தன்னைத் துச்சமாக நடத்திய முன்னாள் கணவன் முரளியின் அராஜகம் இதெல்லாம் தாண்டி அவளை மதித்து நடத்திய ஒருவன் உண்டென்றால் அது புவனேந்திரன் மட்டுமே! அதனால்தான் அவனைக் கைநழுவ விட்ட கழிவிரக்கம் மதுமதியை வாட்டியெடுத்தது.
இப்போது தர்ஷனின் அணுகுமுறையில் கொஞ்சமாய் அவளுக்குள் நம்பிக்கை துளிர்க்க “எனக்கு நடந்த எல்லாத்தையும் நீங்க வருங்காலத்துல சொல்லிக் காட்டமாட்டிங்கனு என்ன நிச்சயம்? என் கேரக்டரை மோசமா பேசுறதுக்கும் வாய்ப்பிருக்கே?” என்றாள் தனக்குள் இருக்கும் ஒரே ஒரு தயக்கத்தை மட்டும் காட்டி.
தர்ஷன் சிரித்தான்.
“இவ்ளோ வெளிப்படையா சொன்ன அப்புறம் நான் ஏன் கேரக்டர் அசாசினேசன்ல இறங்க போறேன்? நாம சந்தோசமா வாழ்ந்தா அதுக்கான அவசியம் வராதுனு தோனுது. எனக்கு இருக்குற டிமாண்ட் ஒன்னே ஒன்னுதான். அம்மாவும் நானும் சின்னவயசுல இருந்து தனியா இங்க வாழ்ந்துட்டோம். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன் குடும்பத்தோட ஒரே வீட்டுல இருக்கலாம்னு அம்மா விரும்புறாங்க. உங்க ஊர்ல வீட்டோட மாப்பிள்ளைனா கேலி பண்ணுவாங்களாமே. எனக்கு அதெல்லாம் கவலை இல்ல. அம்மா ஆசைப்படுற மாதிரி நாம ஒரே குடும்பமா இருக்குறது பெட்டர்னு தோணுது. அதோட எனக்குச் சொந்தத் தொழில் செய்யுற ஆசை இருக்கு. அதுக்கு உன் அப்பா உதவுனார்னா நல்லா இருக்கும். என் தொழில்ல லாபம் வந்ததும் அவர் குடுத்த பணத்தைச் செட்டில் பண்ணிடுவேன். இதைச் சொல்லுறதால நீ என்னைப் பணத்தாசை பிடிச்சவன்னு நினைக்கலாம். உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் ஒவ்வொன்னா சொல்லி தொந்தரவு பண்ணுறதை விட இப்பவே வெளிப்படையா பேசிட்டா நல்லதுனு தோணுச்சு. இதுக்கு அப்புறம் உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பமும். நான் சொன்ன ரெண்டு விசயங்கள் நடக்கலனாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற முடிவுல இருந்து பின்வாங்க மாட்டேன். உன்னோட வெளிப்படைத்தன்மை எனக்குப் பிடிச்சிருக்கு. யோசிச்சு உன் முடிவைச் சொல்லு”
மூச்சு விடாமல் பேசி முடித்தவனை ஆச்சரியம் ததும்பிய விழிகளால் அளவிட்டாள் மதுமதி. உடனே அவனது நிபந்தனைகளுக்கான பதிலைச் சொல்லவேண்டிய அவசியமில்லைதான்.
இங்கே வரும்போது பெரிதாக ஆர்வமில்லாமல் வந்த மதுமதிக்குத் தர்ஷனின் அணுகுமுறையால் சின்னதொரு மாற்றம் மனதில் வந்தாலும் அவனது நிபந்தனைகளை அவசரமாக ஏற்றுக்கொள்ள பிரியமில்லை. யோசித்து முடிவைச் சொல்வதாகக் கூறிவிட்டு அவனோடு அங்கிருந்து கிளம்பினாள்.
அதே நேரம் ரங்கநல்லூரில் மாணிக்கவேலுவுக்கு இத்தகவல் மறுநாளே பறந்திருந்தது நிலவழகியின் மூலமாக.
“நான் என்ன சொன்னேன்? அவங்க கூட நெருக்கமா பழகவிடாதனு சொன்னேனா இல்லையா? உன் மக எல்லாத்தையும் கொட்டி முழக்கிடுவா. இந்தச் சம்பந்தமும் நாசமா போகணுமா?” என வெடித்தார் மொபைலில்.
ஆனால் மறுமுனையில் பேசிய நிலவழகியிடம் அந்தப் பதற்றம் இல்லை.
“நீங்க நினைக்குற மாதிரி இல்லங்க. மாப்பிள்ளையும் சம்பந்தியம்மாவும் தங்கமானவங்களா தெரியுறாங்க. அவங்க நம்ம கூட ஒரே குடும்பமா வாழப் பிரியப்படுறாங்க. மாப்பிள்ளை அதைத்தான் சொன்னார். மது நம்ம கண்ணு முன்னாடி இருந்தா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ங்க”
“எல்லாம் எனக்கும் புரியுது அழகி. ஆனா உன் மவன் இதுக்குக் குறுக்க நிக்குறானே? மாப்பிள்ளைக்குப் பணத்தைக் குடுத்து திருவனந்தபுரத்துலயே தொழில் ஆரம்பிச்சுக் குடுக்கச் சொல்லுறான் அவன். இங்க மது இருந்தானா மறுபடி புவனேந்திரன் வாழ்க்கைக்குள்ள மூக்கை நுழைப்பானு அவன் பயப்படுறான். பாரேன்! இப்ப கூட தங்கச்சிக்காக அவன் யோசிக்கல”
சொல்லும்போதே மனம் காந்தியது மாணிக்கவேலுவுக்கு. நிலவழகிக்கோ மகனை விட்டுக்கொடுத்துப் பேசும் எண்ணமில்லை. அவனது பயம் நியாயமானது என்றும் தோன்றியது அவருக்கு. ஆனால் மகளின் வாழ்க்கையைச் சீரமைத்தே ஆகவேண்டுமென்ற வைராக்கியமும் இருந்தது.

“என் மக நல்லா வாழணும். அந்த மலர் அவ புள்ளைய தூக்கிட்டு வர்றப்ப எல்லாம் எனக்கு வயிறு எரியுது. எப்பிடி வாழவேண்டியவ என் மக? அவ வாழ்க்கை இந்த தடவையாச்சும் நல்லபடியா இருக்கனும். உங்களுக்குச் சரினு தோணுறதை பண்ணுங்க. பவி கிட்ட நான் பேசுறேன்” என்றார் அவர்.
“ம்ம்… சீக்கிரம் பேசி அவனுக்குப் புரியவை. இல்லனா கஷ்டம். நானும் நம்ம மக வாழ்க்கைய நினைச்சுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன் அழகி. பவி கொஞ்சம் இறங்கி வந்தான்னா நல்லது. சில நேரம் அவன் எனக்கே அப்பனா சில முடிவுகளை எடுக்குறான். அது சரியில்லனு சொல்லி வை”
உறுமிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் மாணிக்கவேலு.
இத்தனை வருடங்கள் மகனது பேச்சுக்குக் கட்டுப்பட்டு வீட்டோடு முடங்கியாயிற்று. இனியும் அதைச் செய்ய விருப்பமில்லை அவருக்கு. தம்பி குடும்பத்தை ஏமாற்றி சொத்து சேர்த்தது தவறுதான். ஆனால் அந்தச் சொத்தை குடி கூத்தியாள் என்றா செலவழித்தார்?
சொந்தப் பிள்ளைகளுக்குத்தானே சேர்த்து வைத்தார். மகன் அப்படியே அவரது தந்தையின் மறுவுரு. நியாயம் தர்மமெனப் பேசி தம்பி குடும்பத்திடம் பிடுங்கிய சொத்துகளை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டான்.
கூடவே தொழில்களின் கட்டுப்பாட்டை அவன் வசப்படுத்தி தன்னை வீட்டில் உட்காரவைத்துவிட்டான். தொழில்கள் அனைத்துக்கும் தலைமைப்பொறுப்பு அவரிடம்தான் உள்ளது. இன்னும் அவர்களின் கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பான்மை மாணிக்கவேலு வசமே இருக்கிறது.
அதை மகனுக்கு எதிராகப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை. மகன் தானே தனக்குப் பின்னர் தொழிலை ஆளப்போகிறான் என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்துவிட்டார். அது தவறோ என்று இப்போது ஐயம் பிறந்தது.
“இப்பிடியே விடக்கூடாது. இன்னும் நான் பழைய மாணிக்கம்தான்னு அவனுக்குப் புரியவைச்சே ஆகணும்.” எனத் தீர்மானித்தவர் சொல்லாமல் கொள்ளாமல் மேரு பில்டர்ஸ் நிறுவனத்துக்குக் கிளம்பினார்.
அவர் அங்கே போய் நின்ற நிமிடத்தில் பவிதரன் அலுவலகத்தில் இல்லை. அவரது பார்வையில் முதலில் விழுந்தவள் ஈஸ்வரி.
‘இவள் எப்போது இங்கே பணிக்குச் சேர்ந்தாள்? தன்னிடம் கூட மகன் மறைத்துவிட்டானே’
ஆதங்கத்துடன் உள்ளே வந்தவருக்கு வணக்கம் சொல்லி எழுந்து நின்றார்கள் அனைத்து ஊழியர்களும். ஈஸ்வரியும் எழுந்து நின்றாள்.
மாணிக்கவேலு வேறு யாரையும் கவனிக்கவில்லை. ஈஸ்வரியை மட்டும் பார்த்தவர் “நீ எப்ப வேலைக்குச் சேர்ந்தமா?” என்று வினவினார்.
“ஒரு வாரம் ஆச்சு. சிகாமணி மாமா சொல்லி உங்க மகன் என்னை வேலைக்கு வச்சிருக்கார்” என்றாள் அவள் சுருக்கமாக.
அந்த நொடியே கோபத்தீ பற்றிக்கொண்டது மாணிக்கவேலுவின் மனதில்.
‘வீட்டோடு மாப்பிள்ளையாக தர்ஷனை வைத்துக்கொள்வோம் என நான் சொன்னதற்கு அத்துணை தூரம் மறுப்பு தெரிவித்தவன் சிகாமணி கேட்டுக்கொண்டதற்காக இந்தப் பெண்ணைப் பணிக்குச் சேர்த்திருக்கிறான். என்னை விட சிகாமணியின் பேச்சை மதிக்கிறான். இவனுக்குப் படிப்பைக் கொடுத்தது யார்? இவனை இந்தளவுக்கு உறுதியான ஆண்மகனாக வளர்த்தது யார்? இவன் வசம் தொழிலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்ற பிறகும் எனது வார்த்தைகளை மதியாமல் தான்தோன்றித்தனமாக இருக்கிறானே!’
மனம் வெந்து போனது மாணிக்கவேலுவுக்கு.
“சரிம்மா! நீ வேலைய பாரு.” என்றவர் இன்னொரு ஊழியரிடம் பவிதரன் எங்கே என விசாரித்தார்.
“எக்ஸ் மேயர் வீட்டு கன்ஸ்ட்ரக்சனைப் பாக்க கே.டி.சி நகர் சைட்டுக்குப் போயிருக்கார் சார்.”
பவிதரனின் கேபினுக்குப் போனவர் அவரது இருக்கையாக இருந்து அவனது இருக்கையாக மாறியிருந்த நாற்காலியில் அமர்ந்தார் மாணிக்கவேலு.
அங்கிருந்த டேபிள் வெயிட்டை உருட்டியவர் உடனே மகனின் மொபைலுக்கு அழைத்தார்.
“தட்சிணாமூர்த்தி மவளுக்கு நம்ம ஆபிசுல வேலை குடுத்திருக்கியாமே? நான் நம்ம ஆபிசுலதான் இருக்கேன்”
“ஆமாப்பா. சித்தப்பா கால் பண்ணி கேட்டார். அதனால மூர்த்தி மாமா கிட்ட சொல்லி வேலைக்கு வரச் சொன்னேன்”
“உன் சித்தப்பன் பேச்சுக்கு இவ்ளோ மரியாதை குடுக்குற நீ பெத்த அப்பனோட பேச்சை மதிக்கல. இதை நான் எப்பிடிய்யா எடுத்துக்குறது?”
புகைச்சலை மறைத்துக்கொண்டு வினவினார்.
பவிதரன் மறுமுனையில் பெருமூச்சுவிட்டான். தர்ஷனைப் பற்றி சொல்கிறார் போல என்று புரிந்துகொண்டான்.
“இப்ப என்ன செய்யலாம்னு இருக்குறிங்கப்பா?”
“என் முடிவுல மாற்றம் இல்ல தம்பி. நீ அதை ஏத்துக்கலனாலும் மருமகனும் சம்பந்தியம்மாவும் நம்ம பக்கம் வரப்போறது உறுதி. நம்ம வீட்டுல நம்மளோட அவங்க வாழப்போறதும் உறுதி. இதை மனசுல வச்சுக்க. நான் எல்லா நேரத்துலயும் குறுக்குத்தனமா யோசிப்பேன்னு நினைக்காத. இந்தத் தடவை என் மக வாழ்க்கைக்காக ஒரு அப்பனா நான் சரியாதான் யோசிக்குறேன். என்னால உனக்கு ஒரு கேரண்டிய குடுக்க முடியும். தர்ஷன் பொண்டாட்டியா ஆன அப்புறம் உன் தங்கச்சி வேற யார் வாழ்க்கைலயும் தலையிட மாட்டா. நான் அவ கிட்ட சொல்லி வைக்குறேன்”
“நீங்க சொன்னதை அவ கேட்டா சந்தோசம்தான். கேக்கலனா நான் சில முடிவுகளை எடுப்பேன். அது உங்களைச் சங்கடப்படுத்தாம பாத்துக்கோங்க”
உறுதியாகச் சொன்னவன் அழைப்பைத் துண்டித்தான். தந்தை இத்தனை வருடங்கள் வீட்டோடு முடங்கியிருந்து இப்போது அலுவலகத்துக்கு வந்ததில் அவனுக்கு ஒன்றும் வருத்தமில்லை. அவரைப் பவிதரன் வீட்டில் உட்காரச் சொல்லவில்லை. இனி தொழிலை நானே கவனித்துக்கொள்கிறேன் என்றுதான் கூறியிருந்தான். எனவே அதிகமாய் அவரைப் பற்றி யோசிக்காமல் கவனத்தை வேலையில் குவித்தான்.
மேஸ்திரி ராமசாமி ப்ளூம்லைனை வைத்து சுவரின் நேர்த்தியைச் சரிபார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் போனவன் தனது கையிலிருந்த டேபில் இருந்த கட்டிட வரைபடத்தைக் காட்டினான்.
“நேத்து அனுப்புன ப்ளானிங்படி இங்க ஃப்ளக்ஸ் பைப்புக்கு ஹோல் ஒன்னு குடுக்கணும்ணே. அங்க ஜன்னல் வருதே, அதுல லிண்டல் ஹைட் சரி பாத்திங்களா?” எனத் தொழில்ரீதியாகப் பேச ஆரம்பித்தான்.

“எல்லாம் சரியா இருக்கு தம்பி. அந்தப் பைப்புக்கு இப்பவே இடம் விட்டுட்டா அப்புறம் உடைக்கத் தேவையில்லனு சொல்லிட்டிருந்தேன்”
மேஸ்திரியிடம் பேசிவிட்டுத் தூண்களுக்காகவும், ஸ்லாப்புகளுக்காகவும் கம்பிகளைக் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்வையிடப் போனான் பவிதரன்.
கம்பியின் அளவையும் கோணத்தையும் பார்த்தவன் “சரியா தொண்ணூறு டிகிரிக்கு வளைக்கணும் தம்பி. இல்லனா ஸ்லாப் போடுறப்ப கஷ்டம்” என்றான்.
“சரிங்கண்ணே”
இந்த ஊழியர்கள் அனைவரும் அவனது தந்தை காலத்திலிருந்தே அவர்களிடம் பணியாற்றுபவர்கள். யாரையும் அதட்டி உருட்டி வேலை வாங்கும் அவசியம் பவிதரனுக்கு நேர்ந்தது இல்லை. அனைவருமே வேலையில் படு நேர்த்தி. உண்மையாய் உழைத்து விசுவாசமாய் இருப்பவர்களும் கூட.
அதனால் பவிதரனுக்குச் சைட்டில் வேலையும் சுளுவாக முடிந்துவிடுகிறது.
அடிப்படையில் அவனும் ஒரு சிவில் இன்ஜினியர் தான். நிறுவனத்தை மேற்பார்வையிடுவதால் அது மாறிவிடாதே!
கண்ணாடி சுவர் அறைக்குள் பூட்டிகொண்டு கோப்பினைப் புரட்டி கையெழுத்திடுவதோடு அவனது வேலை முடிவதில்லை. அது அவனுக்குத் திருப்தி தருவதுமில்லை.
இந்தக் கட்டுமானத்தளமும், அதன் பரபரப்பும் அவனுக்குத் தரும் நிறைவே தனி. செங்கல்லும் சிமெண்டும் கலந்து கட்டிடங்கள் உயரும்போது பவிதரனின் கனவுகளும் உயரும்.
அவனுக்குள் அழுத்தும் குடும்பம், தொழில் சார்ந்த இறுக்கங்கள் யாவும் தளர்வது இந்த இடத்தில்தான்!
பவிதரனுக்குள் இருக்கும் கட்டிடப் பொறியாளனுக்குக் கட்டிடங்கள் மீதும், அவை கட்டப்படும் காட்சிகள் மீதும் இருக்கும் பிரேமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரவருக்கு அவரவர் தொழில் உயர்வானதுதானே?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

