“எனக்கு என்னைப் பத்தி யோசிக்கவே நேரம் கிடைச்சதில்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேக்கும். அது என்ன சொல்லும் தெரியுமா? ‘நீ ஓடிக்கிட்டே இருடா. ஒரு நொடி நீ நின்னாலும் உன்னைச் சுத்தி இருக்குற பிரச்சனைகளோட அழுத்தம் உன்னை இறுக்கமா மாத்திடும். நீ மனுசத்தன்மைய இழந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. நீ ஓடனும் பவி’. உஃப்! அந்தக் குரலை நான் எப்பவும் அலட்சியப்படுத்துறதில்ல. ஒரு நாள் எனக்கும் இந்த ஓட்டம் சலிச்சுப் போகும். அப்ப நான் என்ன செய்யுறது?’
-பவிதரன்
மேரு பில்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் – பாளை பேருந்து நிலையம் அருகே செயிண்ட் தாமஸ் சாலையில் அமைந்திருக்கும் கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் ஒன்றின் மேல்தளத்தில் அமைந்திருந்தது அந்தக் கட்டுமான நிறுவனம்.
கீழே தேசிய வங்கி ஒன்றும், அதன் ஏ.டி.எம்மும் கூடவே அந்தக் காம்ப்ளக்சில் இயங்கி வரும் அலுவலகங்களுக்கான வாகனத்தரிப்பிடமும் இருந்தன. வழிகாட்டியாய் பாதுகாப்புக்காக ஒரு காவலாளியும்.
பாளை பேருந்து நிலையத்திலிருந்து கால்நடையாகவே அங்கே வந்து சேர்ந்திருந்தார் தட்சிணாமூர்த்தி. அந்தக் கமர்ஷியல் காம்ப்ளக்சின் மேல்தளத்தை அண்ணாந்து பார்த்தவர் மேலே ஏறுவதற்கு படிக்கட்டு எங்கே எனக் காவலாளியிடம் விசாரித்தார்.
“ஏ.டி.எம் பக்கத்துல படிக்கட்டு இருக்கு, பாருங்கய்யா”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஏ.டி.எம் அருகே படிக்கட்டு ஆரம்பித்தது.
தட்சிணாமூர்த்தி படிகளில் ஏறி மேரு பில்டர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். பெரிய அலுவலகம் இல்லை. ஆனால் ஐந்து ஊழியர்கள் மும்முரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் அவரவர் கணினியின் முன்னே.
அவர்களில் ஒருத்தியான வரவேற்பு பெண் அவரைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
“நான் பவி தம்பிய பாக்கணும். தட்சிணாமூர்த்தினு சொல்லுங்க. தம்பிக்குத் தெரியும்”
வரவேற்பிலிருந்த பெண் பவிதரனிடம் பேசிவிட்டு அவரிடம் அவனது கேபினைக் காட்டினாள்.
“அந்தக் கண்ணாடி போட்ட கேபின்ல சார் இருக்கார். போய் பாருங்க”
“நன்றிங்கம்மா”
தட்சிணாமூர்த்தி கேபின் கதவைத் தட்டுவதற்குள் பவிதரனே வந்து கதவைத் திறந்தான்.
இன்முகத்துடன் “வாங்க மாமா” என்று உள்ளே அழைத்துச் சென்று அமரவும் வைத்தான்.
“என்ன சாப்பிடுறிங்க? காபி சொல்லட்டுமா?”
“அதெல்லாம் எதுக்குத் தம்பி?”

“இது எங்க எல்லாருக்கும் டீ டைம் மாமா” என்றவன் தொலைபேசியில் வரவேற்பு பெண்ணிடம் ஆறு தேநீர், ஒரு காபி என்று சொல்லிவிட்டு அழைப்பை முடித்தான்.
“ஈஸ்வரி வேலைக்குப் போகணும்னு ஆசைப்படுது தம்பி. அதுவும் ஒவ்வொரு இடமா இண்டர்வியூக்குப் போகுது. ஒன்னு சம்பளம் கம்மியா இருக்கு. இல்லனா வேலை நேரம் அதிகமா இருக்கு. பொட்டப்புள்ளை எட்டு மணிக்காச்சும் வீட்டுக்கு வரலனா ஊருக்குள்ள வேற மாதிரி பேசுவாங்களே. அதான் உங்களுக்குத் தெரிஞ்ச இடம் எதுலயாச்சும் வேலைக்கு ஏற்பாடு பண்ணுனிங்கனா நல்லா இருக்கும்”
பவிதரன் யோசித்தான். அவனது தொழில்முறை நட்புகளிடம் வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்தான். ஆனால் தட்சிணாமூர்த்தி சொன்னது போல அங்கேயும் அனுபவமில்லாதவர்களுக்குச் சம்பளம் குறைவு. வேலைநேரமும் அதிகமாக இருக்கும்.
பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் திரும்பும் இடங்களில் எல்லாம் பள்ளிகளும் கல்லூரிகளும் இருப்பது ஒரு வகையில் வரமாக இருந்தாலும் பட்டதாரிகளும் படித்தவர்களும் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கான ஊதியம் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கும் இங்குள்ள சிறு குறு நிறுவனங்களில்.
ஊதியம் அதிகமாக எதிர்பார்த்தால் வேலைநேரமும், வேலைச்சுமையும் அதிகமாக இருக்கும்.
இதெல்லாம் அறிந்தவன் என்பதாலேயே பவிதரன் யோசித்தான். இடையே காபியும் வந்துவிட அவரிடம் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டுத் தானும் அருந்தினான்.
அவன் முன்னே இருந்த மேஜையில் சற்று முன்னர் அக்கவுண்டண்ட் சுமதி வைத்துவிட்டுப் போன அந்த மாதத்துக்கான ஊழியர்கள் ஊதியக்கணக்கு குறித்த கோப்பு இருந்தது. அதைப் பார்த்ததும் புருவம் சுழித்தவனுக்குக் கடந்த வாரம் சுமதி சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.
“சைட்ல வேலை பாக்குறவங்களுக்கு வாரவாரம் சம்பளம் குடுக்குறோம்ல சார். அந்தக் கணக்குவழக்கைப் பாக்க ஒருத்தர் எனக்கு உதவியா இருந்தா நல்லா இருக்கும்”
சுமதியின் மைந்தன் பத்தாவது பொதுத்தேர்வுக்குத் தயாராகிறான். அவனுக்குப் பாடம் சொல்லித் தரும் பொறுப்பு அவருடையது. எனவேதான் பணிச்சுமையைப் பகிர இன்னொரு ஆள் தேவை என்றார்.
பவிதரன் பேசாமல் யோசனையில் இருப்பதைக் கவனித்தபடி காபியைக் காலி செய்தார் தட்சணாமூர்த்தி. அவன் எப்போதும் அதிகம் பேசமாட்டான் என்று சிகாமணி சொல்லியிருக்கிறார். அதே நேரம் அமைதியும் அழுத்தமும் பொறுமையும் கொண்டவன் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
அதனால் அவன் கட்டாயம் தங்களுக்கு உதவுவான் என்று நம்பினார் அவர்.
பவிதரன் மேஜையில் விரல்களால் தட்டியவன் “வேற எங்கயோ வேலைக்குப் போறதுக்குப் பதிலா இங்க என் ஆபிசுக்கு வரட்டுமே மாமா. இங்க வேலை நேரம் பத்து டூ ஆறுதான். சம்பளமும் அக்கவுண்ட் அசிஸ்டெண்டுக்கு என்ன குடுக்குறேனோ அதே சம்பளம் குடுக்குறேன். இங்க அக்கவுண்டண்ட் லேடிதான். ஈஸ்வரிக்கு அவங்க எல்லாமே கத்துக் குடுப்பாங்க. உங்களுக்குச் சம்மதம்னா ஈஸ்வரி கிட்ட பேசிட்டு நாளைக்கு ஆபிசுக்கு வரச் சொல்லிடுங்க” என்றான்.
தட்சிணாமூர்த்திக்கு நிம்மதியாக இருந்தது. யாரிடமோ பெண்ணை வேலைக்கு அனுப்பி அவளது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதை விட சிறுவயதிலிருந்தே தன் கண் முன்னே வளர்ந்த பவித்ரனிடம் அனுப்பினால் அவளது பாதுகாப்புக்கான உறுதி கிடைத்துவிடும்.
“சரிங்க தம்பி! அப்ப நாளைக்கே வரச் சொல்லிடுறேன். முதல்ல சிகாமணிக்குப் போன் போட்டுச் சொல்லணும். அவருதான் உங்க கிட்ட பேசி பெரிய உதவி பண்ணுனவர்”
“சரி மாமா! நீங்க பாளை மார்க்கெட் தானே போகணும்? நம்ம கம்பெனி இப்ப கே.டி.சி நகர்ல வீடு ஒன்னு கட்டிட்டிருக்கோம். தூத்துக்குடியோட முன்னாள் மேயரோட வீடு. நான் சைட்டுக்குத்தான் கிளம்புறேன். வாங்களேன்! உங்களை மார்க்கெட்ல ட்ராப் பண்ணிடுறேன்”
சொன்னபடியே தட்சிணாமூர்த்தியைப் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இறக்கிவிட்ட பிறகு கே.டி.சி நகருக்குக் கிளம்பினான் அவன்.
தட்சிணாமூர்த்தி அரிசி மொத்த வியாபாரக் கடையில் வேலை பார்க்கிறார். மகளின் வேலை விவகாரம் பற்றி அங்கே சொல்லிவிட்டுத்தான் போயிருந்தார்.
“என்னவே மக வேலை விசயம் என்னாச்சு? காயா பழமா?”
விசாரித்தார் அவருடன் பணியாற்றுபவர்.
“நமக்குத் தெரிஞ்ச தம்பி ஆபிசுலயே வேலை கிடைச்சிருக்கு கந்தா. இப்பதான் நிம்மதியா இருக்கு. அந்தத் தம்பி நல்ல மாதிரி”
“நல்லதுதான். இனிமே நீரு கொஞ்சம் ரிலாக்ஸா இரும். சும்மா பிள்ளை கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதவே. மரத்த வச்ச ஆண்டவன் தண்ணி ஊத்தமலா போயிடுவான்?”
“ஹூம்! அதுவும் சரிதான்”
கையோடு சிகாமணியின் எண்ணுக்கு அழைத்து மகளுக்குப் பவிதரனின் அலுவலகத்தில் வேலை ஏற்பாடாகிவிட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் தட்சிணாமூர்த்தி.
அவரிடம் பேசிவிட்டுப் போனைப் பார்த்தவர் அது உயிரை இழந்ததும் திடுக்கிட்டார். சில நாட்களாகவே போன் அடிக்கடி பிரச்சனை செய்கிறது. அவரும் போன் பேட்டரியை மாற்றியும் பார்த்துவிட்டார்.
“நமக்குத் தெரிஞ்ச பய போன் ரிப்பேர் பாக்குற கடை வச்சிருக்கான். அங்க குடுத்துப் பாரும் சாயந்திரம்”
கந்தன் சொன்னபடியே போனைப் பழுதுபார்க்கும் கடையில் கொடுத்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகளிடம் விவரத்தைப் பகிரும் முன்னரே அவளுக்குச் செய்தி தெரிந்துவிட்டதென அறிந்துகொண்டார்.
ஈஸ்வரி மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல ஆர்வமாய் தயாரானாள்.
அவள் முந்தைய தினம் குழலியிடமிருந்து வாங்கி வந்த எலுமிச்சையை வைத்து எலுமிச்சை சாதம் கிளறி நார்த்தை ஊறுகாயோடு மணக்க மணக்க டிபன் பாக்சில் வைத்து நீட்டினார் இளவரசி.
காலையுணவை நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுப் பேருந்து நிறுத்தத்துக்குக் கிளம்பியவளுக்கு முதுகின் பின்னே பூஞ்சிறகு முளைத்தாற்போல ஒரு உணர்வு.

பாளை பேருந்து நிலையத்தில் இறங்கி தனியே போய்விடுவாயா என்று ஆயிரம் முறை கேட்டுவிட்டுத் தனது டி.வி.எஸ் ஸ்கூட்டரில் கிளம்பிப் போனார் தட்சிணாமூர்த்தி.
அவளுக்குப் பவிதரனின் அலுவலகம் இருக்கும் இடம் தெரியும். அவளும் மலர்விழியும் ஈகிள் புக் செண்டரில் வேலை பார்த்த நாட்களில் அவனது அலுவலகத்துக்குச் சில நேரங்களில் அழைத்துப் போயிருக்கிறாள் மலர்விழி.
அதே இடத்தில்தான் இப்போதும் இருப்பதாக தட்சிணாமூர்த்தி சொல்லியிருந்தார். அந்த இடம் ஆட்கள் அடிக்கடி வந்து போகுமிடம். எனவே தனியாகச் செல்வதில் எந்த பயமும் இல்லை.
பேருந்தில் ஏறி பாளை பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து மேரு பில்டர்ஸ் நிறுவனத்தை அடைந்தபோது சொல்லவொண்ணா பரபரப்பு ஈஸ்வரியிடம்.
“ஹலோ மேடம்! நான் புதுசா ஜாயின் பண்ண வந்திருக்கேன். ப… பவிதரன் அவர் கிட்ட பேசணும்”
தட்டுத்தடுமாறி வரவேற்பு பெண்ணிடம் பவிதரனின் பெயரைச் சொல்லி முடித்தாள் அவள்.
அந்தப் பெயரை வைத்து அடிக்கடி மலர்விழியிடம் அவள் கிண்டல் செய்தது உண்டு.
“அது என்னலா பவிதரன்? நான் பவித்ரன் கேள்விப்பட்டிருக்கேன். இது வித்தியாசமா இருக்கு. ஸ்கூல் டைம்ல எல்லாம் ரிஜிஸ்டர்ல பேர் எழுதுறப்ப குழப்பம் வந்திருக்கும்ல”
“பெரியப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தரோட பேர் அது. அவர்தான் பெரியப்பாக்குத் தொழில்ல நெளிவு சுளிவு கத்துக் குடுத்தாராம். அந்த நன்றிக்காக வச்சது. ஷண்மதிக்கா சொன்னா இந்த ஃப்ளாஷ்பேக்கை”
வரவேற்பு பெண் அவனிடம் பேசிவிட்டு அவனது கேபினைக் காட்டினாள்.
கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது ஈஸ்வரிக்கு. அங்கே அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்த நால்வரைப் பார்த்ததும் ‘நானும் இவர்களைப் போல வேலை செய்யப்போகிறேன்! ஜாலி’ என்று குதூகலமும் உண்டானது.
கேபின் கதவை அவள் தட்டவும் “உள்ள வாம்மா” என்று அமைதியாய் அதே நேரம் அழுத்தமாய் கேட்டது பவிதரனின் குரல்.
உள்ளே போனவள் மேஜைக்குப் பின்னே அமர்ந்திருந்தவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“உக்காரு”
நாற்காலியைக் காட்டினான் பவிதரன்.
‘Er.Pavitharan – Chief Engineer’ பெயர்ப்பலகையை வாசித்தபடியே அமர்ந்தாள் ஈஸ்வரி.
“எனக்கு என்ன வேலைனு சொல்லுறிங்களா?” என ஆர்வமாய்க் கேட்டாள் அவள்.
“உனக்கு அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை. அதுக்கு முன்னாடி நம்ம கம்பெனி என்ன மாதிரியான பிசினஸ்ல இருக்குனு உனக்குத் தெரியும்ல? நாம வீடு, கமர்ஷியல் காம்ப்ளக்ஸ், சின்ன சின்ன கவர்மெண்ட் கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்துப் பண்ணிட்டிருக்கோம். நீ எம்.காம் முடிச்சிருக்க. உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் பெருசா இல்ல. இந்தக் கம்பெனில நீ அக்கவுண்ட்ஸ் பத்தி நிறைய கத்துக்கலாம். முதல்ல நீ பாக்க வேண்டியது வவுச்சர்சை செக் பண்ணுறது. இப்போதைக்கு உனக்கு வேலை அதுதான்”

ஈஸ்வரி வெளிப்படையாகவே அதிர்ந்து போனாள். அவள் கண்ட கனவு என்ன? இங்கே இவன் கொடுக்கும் வேலை என்ன?
“எதே இந்த வேலையா?” திகைத்து விழித்தாள் ஈஸ்வரி.
“ஆமா! வெளிய அக்கவுண்டெண்ட் சுமதி மேடம் இருப்பாங்க. அவங்க உனக்கு எல்லாமே கத்துக் குடுப்பாங்க” என்றவன் ரசீதுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கோப்பு ஒன்றை அவள் பக்கம் நகர்த்தினான்.
“இதை எடுத்துட்டுப் போ”
ஈஸ்வரிக்கு வருத்தமோ வருத்தம்! வேலை என்றதும் கணினி, டேலி என்று என்னென்னவோ கற்பனை செய்திருந்தாள். இப்போது ரசீதுகளைச் சரிபார் என்று பவிதரன் சொன்னதும் உற்சாகம் வடிந்து போனது அவளுக்கு.
முகத்தைத் தூக்கிக்கொண்டு எழுந்தவளைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக்கொண்டான் பவிதரன். ஆனால் முதலாளி ஆயிற்றே! கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள் என்று மூளை அறிவுறுத்தியதும் தனது தொனியை மாற்றிக்கொண்டான்.
“இங்க பாரு! மூர்த்தி மாமா சொல்லிட்டார்னுதான் உன்னை வேலைக்குச் சேர்த்திருக்கேன். ஒழுங்கா வேலை பாக்கணும். கட்டுமான வேலைக்கு வாங்கக் கூடிய ரா-மெட்டீரியல்சோட வவுச்சர்ஸ் எல்லாத்தையும் நீதான் மெயிண்டெயின் பண்ணப்போற. கவனம்”
கறாராகச் சொல்லிய பவிதரன் ‘போ’ என்று சைகை காட்ட ஈஸ்வரி நெஞ்சுக்கு நேரே கோப்பினைப் பிடித்தபடி நின்றவள் நகரவில்லையே!
“உன்னைப் போகச் சொன்னேன்”
“இந்த இத்துப்போன நாலு பில்லை ஃபைல்ல வைக்குற வேலைக்கா நான் இங்க வந்தேன்? அக்கவுண்ட்ஸ் செக்சன்லதானே வேலைனு சொன்னிங்க?” என்று மனத்தாங்கலோடு கேட்டாள் அவள்.
பவிதரன் நெற்றியை நீவிக்கொண்டான். கடந்த மாதம்தான் முதுகலை வணிகவியல் தேர்வை எழுதி முடித்திருக்கிறாள். இன்னும் கன்சாலிட்டேட்டட் மதிப்பெண் பட்டியல் கூட கைக்கு வரவில்லை.
தட்சிணாமூர்த்தி சொன்னாரே என்று கணக்குவழக்குகளைப் பார்க்கும் அக்கவுண்டெண்ட் சுமதிக்கு உதவியாளாகப் பணிக்கு அமர்த்தினால், முகத்தைத் தூக்குகிறாள் இவள்!
“மேடம்கு அக்கவுண்ட்ஸ்ல எத்தனை வருச எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கு?” கிண்டலாய்க் கேட்டான் அவன்.
“வேலை செஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் இல்ல! நீங்க வேலை குடுத்திங்கனா அது தானா வந்துட்டுப் போகுது” என்றாள் அவள்.
“உன் கையில அக்கவுண்ட்ஸ் செக்சனைக் குடுத்துட்டு நான் கம்பெனிய இழுத்து மூடிட்டுப் போயிடட்டுமா? இங்க பாரு, கத்துக்குட்டி கையில எல்லாம் கணக்குவழக்கை ஒப்படைக்குறது எனக்குப் பழக்கமில்ல. முதல்ல நீ ட்ரெய்ன் ஆகு. அப்புறம் பாக்கலாம்” என்று அவன் கறாராகச் சொன்னதும்
“இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கு இவ்ளோ பில்டப்!” என அவள் சத்தமில்லாமல் உதடுகள் அசையும் வண்ணம் முணுமுணுக்க
“அப்ப பொடிநடையா சென்னைக்குப் போய் பெரிய மல்டிநேஷனல் கம்பெனில ஜாயின் பண்ணிக்க” எனப் பவிதரன் சொல்லவும் திடுக்கிட்டாள்.
“நான் சத்தமா பேசவேல்லயே! உங்களுக்கு எப்பிடி கேட்டுச்சு?”
“என் காதை விட கண்ணு ரெண்டும் ரொம்ப ஷார்ப். உன் உதடு அசையுறதை வச்சே என்ன சொல்லுறனு கண்டுபிடிச்சிடுவேன்”
சாவகாசமாகச் சொல்லிக்கொண்டு சுழல்நாற்காலியில் சாய்ந்தவனின் பார்வையில் முதலாளி பாவனை விடைபெற்றிருந்தது.
இன்னும் கண்களைத் தனது முகத்திலேயே நிலைத்திருப்பவனின் செய்கையில் கொஞ்சம் திணறிப்போனவள் “நான்… சுமதி மேடம் கிட்ட போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற எத்தனிக்க
“ஓய் சண்டைக்காரி! வெக்கமெல்லாம் பட்டு வைக்காத! அப்புறம் பூகம்பம், நிலநடுக்கம், சுனாமினு எதுவும் வந்து தொலைக்கப் போகுது” எனக் கிண்டல் செய்தான் பவிதரன்.
ஈஸ்வரி இடுப்பில் கையூன்றி அவனை முறைக்கவும் சிரித்தவன் “இயற்கைக்கு விரோதமா நீ நடந்துக்கிட்டா அதுக்குக் கோவம் வரும்னு சொல்ல வந்தேன்” என்று அப்பாவி போல சொல்ல
“நீங்க இப்பிடியே பேசுனா எனக்குத்தான் கோவம் வரும்” என்றாள் அவள்.
“ஹான், இதுதான் ஈஸ்வரி! இப்பிடியே இரு. அதை விட்டுட்டு அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு தேவையில்லாதப் பக்கம் போயிடாத. அது உனக்குச் செட் ஆகல”
கண்களைச் சுருக்கி கையை அசைத்து ‘இல்லை’ என்று அவன் சொல்ல, ஏகத்துக்கும் அவனை முறைத்துவைத்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்து கணக்காளர் சுமதியின் அருகே இருந்த மேஜையில் அமர்ந்த ஈஸ்வரிக்குப் படபடப்பு அடங்குவதற்கு அதிகநேரம் ஆனது.
இருவரும் முன்பின் அறியாதவர்கள் இல்லை. சொல்லப்போனால் இம்மாதிரியான ஏட்டிக்குபோட்டியானப் பேச்சுகளும் அவர்களுக்குள் புதிதில்லை. ஆனால் இன்றைய தினம் ஏன் இந்த பரபரப்பும் படபடப்பும்?
“இங்க பாரும்மா! ஒரு வவுச்சர்ல என்ன எல்லாம் முக்கியமா செக் பண்ணனும்னா…”
சுமதி வேலையைக் கற்றுக்கொடுக்க அதன் பின்னர் பவிதரனையும் அவனது பேச்சால் உண்டான பரபரப்பையும் விலக்கிவைத்துவிட்டுப் பொறுப்பான ஊழியையாக அதைக் கவனிக்க ஆரம்பித்தாள் ஈஸ்வரி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

