பின்னர் ஒவ்வொருவராக காம்ப்ரமைஸ் மெமோவில் கையெழுத்திட்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்த பவிதரன், ஞானபிரகாசத்தோடு மீண்டும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினான்.
அங்கே ஆய்வாளர் எஃப்.ஐ.ஆர். போடும் அவசரத்தில் இருந்தார். இருவரையும் கண்டதும், “வாங்க! சமாதானப் பேச்சுவார்த்தை முடிஞ்சுதா?” எனக்கேட்டார்.
ஞானபிரகாசம் அவரிடம் ஒரு கோப்பினை நீட்டினார்.
“சார்… இது கம்ப்ளைண்ட் கொடுத்த நாப்பத்தெட்டு பேர்கிட்ட கையெழுத்து வாங்குன ‘Compromise Deed’. எல்லாரும் பெட்டிஷனை வாபஸ் வாங்கிட்டாங்க. இனிமே இது ‘Civil Dispute’. நீங்க எஃப்.ஐ.ஆர். போடத் தேவையில்ல.”
காவல்துறை ஆய்வாளர் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி கோப்பினைப் பத்திரப்படுத்தினார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மனுஷனுக்குப் பணத்தை விட நம்பிக்கை முக்கியம். அதை பவிதரன் குடுத்தார். அவங்க கம்ப்ளைண்டை வாபஸ் வாங்க சம்மதிச்சிட்டாங்க,” என்றார் ஞானபிரகாசம்.
அடுத்தச் சில நிமிடங்களில் தர்ஷனையும் மாணிக்கவேலுவையும் விடுவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் பவிதரனின் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. மாணிக்கவேலு குனிந்த தலையை நிமிர்த்தினாலே ஆச்சரியம்தான்!
பவிதரனுக்கும் அவர்களிடம் பேச விருப்பமில்லை.
“இன்னைக்குக் கம்பெனி பத்தி பேச்சுவார்த்தை நடத்தியே ஆகணும் சார். அவங்க கிட்ட சொல்லிடுங்க. நான் என் சார்பா பேச எனக்கு வேண்டியவங்களை வரச் சொல்லிடுறேன். வீட்டுல வச்சு பேசி முடிச்சிடலாம்.”
மாணிக்கவேலு என்ன சொல்வார்? தர்ஷனால்தான் என்ன செய்துவிட முடியும்? தலையாட்டி வைத்தார்கள் இருவரும்.
சொன்னபடி மாலையில் ரங்கநல்லூர் வீட்டுக்கு ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்தான் பவிதரன். அவன் வந்து சில நிமிடங்களில் புவனேந்திரனும் மகிழ்மாறனும் வந்தார்கள்.
“ஞானபிரகாசம் வந்துட்டாரா?” – மகிழ்மாறன்.
“வந்துட்டார் மாறன். நாம போய் பேசிட்டா போதும்,” – பவிதரன்.
“உனக்கு இதுல மாற்றுக்கருத்து எதுவும் இருந்தா சொல்லிடுமா,” இது புவனேந்திரன்.
ஈஸ்வரி மூவரையும் ஊன்றிப் பார்த்தவள், “இவருக்கு உரிமைப்பட்டதை இல்லன்னு சொல்ல இவரோட அப்பாக்கே ரைட்ஸ் இல்ல சார். நான் என்ன சொல்லுறது? என் புருஷன் என்ன செஞ்சாலும் எனக்குச் சம்மதம்,” என்றாள்.
நால்வரும் வீட்டுக்குள் வந்ததும் அங்கே அமர்ந்திருந்தவர்களில் நிலவழகியும் மதுமதியும் முகம் மலர்ந்தார்கள்.
“வாண்ணா!” என எழுந்த மதுமதியை முறைத்தவண்ணம் வந்து கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் ஷண்மதி. ஆம்! அவளையும் அழைத்திருந்தான் பவிதரன்.
“என் தம்பி அவன். அண்ணா நொண்ணானு உறவு கொண்டாடி அவன் தலையில தீயை அள்ளிக் கொட்டிடாத. போய் உன் புருஷன் பக்கத்துல நில்லு.”
விலக்கி நிறுத்தியவள், “இங்க பாரு பவி! நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம்,” என்று சொல்லிவிட்டாள்.
ஞானபிரகாசம் அனைவரும் வந்ததை உறுதிபடுத்திக்கொண்டவர், மாணிக்கவேலுவிடம் பவிதரன் பேச விரும்பியதைக் கூற ஆரம்பித்தார்.
“இந்த வீடு உங்கப்பா கட்டுனது. தாத்தாவோட சொத்துல பேரன் பேத்திகள் எல்லாருக்கும் பங்கு இருக்கு. இதுல பவிதரன் தன்னோட பங்கை விட்டுக் குடுத்துட்டு அதுக்குப் பதிலா உங்க மேலாண்மைல இருக்கிற மேரு பில்டர்ஸ்ல உங்க குடும்பத்து நபர்கள் எல்லாருக்கும் இருக்கிற பங்குகளைத் தன்னோட பேருக்கு மாத்தணும்னு கேக்குறார். உங்க மூத்தமகள் ஆல்ரெடி அவங்க பங்கை பவிதரனுக்குக் குடுக்கச் சம்மதிச்சிட்டாங்க. இப்ப நீங்க, உங்க மனைவி, உங்க இளையமகள் மூனு பேரும் பதில் சொல்லணும். உங்க மருமகனுக்கு நீங்க ட்ரான்ஸ்ஃபர் பண்ணுன ஷேர் அவரோடதாவே இருக்கட்டும். மிச்சமிருக்கிற உங்க எல்லாரோட பங்கும் தனக்கு வேணும்னு பவிதரன் கேக்குறார்.”
தர்ஷன் அதிர்ந்துபோய் மனைவியையும் மாமனாரையும் பார்த்தான். அனைத்து பங்குகளும் பவிதரன் வசம் போய்விட்டால் அவன் ‘டம்மி’ ஆகிவிடுவான். நிறுவனமே பவிதரனுடையதாகிவிடும்.
கலக்கத்தோடு அவன் இருக்கும்போதே நிலவழகியும் மதுமதியும் பங்குமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த அதிரடி திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“இன்னைக்கு இந்தக் குடும்பத்துக்கு வர இருந்த சீரழிவைத் தடுத்தவன் என் மவன். அவனுக்கு இந்த முழுச்சொத்தையும் எழுதி வச்சாலும் தகும்,” எனச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார் நிலவழகி.
தன்னிடம் ஏதோ பேச வந்த தர்ஷனைப் பார்வையால் பஸ்மமாக்கிய மதுமதியோ, “எந்தக் காலத்துலயும் இனி என்னால உனக்குத் தொந்தரவு வராதுண்ணா. நானும் அத்தையும் இவரோட திருவனந்தபுரத்துக்கே போயிடலாம்னு இருக்கோம். போறதுக்கு முன்னாடி நான் செஞ்ச தப்பு… ஒன்னா ரெண்டா? நிறைய பண்ணிருக்கேன். உன்னையும் மத்தவங்களையும் சிரமப்படுத்திருக்கேன்,” என்று நிறுத்தியவள், அங்கே தமையனுக்குத் துணையாய் நின்ற புவனேந்திரனை மெய்யான வருத்தத்தோடு பார்த்துவிட்டு, “அதுக்கான பிராயசித்தமா என் பங்கு எல்லாத்தையும் உனக்குக் குடுக்க சம்மதிச்சிருக்கேன். இந்தச் சொத்து பங்கை விட என் பிள்ளைக்குத் தாய்மாமனா நீ இருந்தா போதும்ணா,” என்று சொல்ல தர்ஷன் கப்சிப்.
பவிதரனிடம் சின்னதாய் ஒரு ஆசுவாசம்!
தங்கையை ஆதுரமாய்ப் பார்த்தவன், “நீ தனியா போகணும்னு அவசியமில்ல,” என்க,
“இங்க இருந்தா இவர் உன்னை…” என்று சொன்னவள் முகம் கசங்க அமைதியானாள்.
பவிதரனால் அதற்குமேல் வீம்பு பிடித்துக்கொண்டு நிற்க முடியவில்லை.
“இங்க வா,” என்று அவன் அழைத்ததும் அவனருகே வந்தாள் மதுமதி.
அவளது சிகையை வருடிக்கொடுத்தவன், “இனிமே என்னை யாராலயும் எதுவும் பண்ணிட முடியாது. என்கிட்ட காம்ப்ரமைஸ் மெமோ இருக்கு. அதை வச்சு என்னால இவங்க ரெண்டு பேர்ல யார் என்கிட்ட வாலாட்டுனாலும் உள்ள தள்ள முடியும். நான் அன்பால உறவுகளைக் கட்டுப்படுத்த முடியும்னு நினைச்சேன். பணமும் அதிகாரமும் அன்பை விட பெருசுனு என் நினைப்பைப் பொய்யாக்கி என்னை பக்கா பிஸ்னஸ்மேன் ஆக்கிட்டாங்க உன் அப்பாவும் புருஷனும். நீ இங்கயே இருக்கலாம். உன் புருஷன் எனக்குக் கீழ என் கம்பெனில வேலை பாத்தே ஆகணும். அவனால கம்பெனிக்கு வந்த நஷ்டத்தை ஈடு கட்டணுமே! உடம்பைக் கவனிச்சுக்க மது. என் மருமகப்புள்ளை நல்ல குணத்தோட பிறக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க,” என்றான்.
தர்ஷன் ஆடு திருடிய கள்ளனாய் விழித்தான். மகிழ்மாறனும் புவனேந்திரனும் மாணிக்கவேலுவிடம் பேச ஆரம்பித்தார்கள்.
“சொந்த தம்பி, பெத்த மகன்னு எல்லாரையும் ஒதுக்கி வச்சு இந்த மாதிரி பணத்தாசை பிடிச்சவனை கோபுரத்துல உட்கார வச்சீங்க. அதோட பலனா போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சீங்க. இப்ப பவிதரன் சொல்லுறதுக்கு நீங்க ஒத்துக்கலனா உங்க தம்பியை ஏமாத்துன விவகாரத்தையும் நாங்க கோர்ட் வரைக்கும் கொண்டு போக வேண்டியதிருக்கும். கையெழுத்து போடுங்க.”
மாணிக்கவேலு காவல்நிலையத்தில் இருந்த மணித்துளிகளை எண்ணி உடல் குறுகிப்போனவர், காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டார்.
சகுந்தலா பவிதரனிடம் கை கூப்பினார். மன்னிப்பும் வேண்டினார். கூடவே மகனைப் பிடித்து அவனது காலில் தள்ளியும் விட்டார்.
“நீ செஞ்ச வேலைக்கு வேற ஒருத்தன் தம்பியோட இடத்துல இருந்திருந்தா ஜெயில்ல கிடந்து சாக விட்டிருப்பான். மன்னிப்பு கேளுடா அவர்கிட்ட.”
சரியாக பவிதரனின் செருப்பு தர்ஷனின் முகத்தில் பட்டது. அவமானம்தான்! ஆனால் அதற்குத் தகுதியானவன் தானே தர்ஷன்.
பவிதரனுக்கு அவனை மன்னிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் தங்கையின் வாரிசை மனதில் வைத்து அவனை எழுப்பிவிட்டான்.
“நாளைக்குக் காலைல பத்து மணிக்கு சைட்டுக்கு வரணும். கோட் சூட் போட்டுட்டு ஏசி கார்ல இல்ல. ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் போட்டுட்டு பைக்ல வா. இனி நீ எம்.டி கிடையாது., சூப்பர்வைசர். வெயில்ல நின்னு, ஒவ்வொருத்தர் வேலையையும் மேற்பார்வை செஞ்சு, ஒவ்வொரு கஸ்டமருக்கும் பதில் சொல்லி உன்னால கெட்டுப் போன எல்லா வேலையையும் முடிச்சுக் கொடுக்கணும். நீ தொலைச்சது பணம் மட்டும் இல்ல. இதுவரைக்கும் தொழில்ல நாங்க கட்டிக் காப்பாத்துன எங்க மானத்தையும் எங்க கிளையண்ட்ஸ் எங்க மேல வச்சிருந்த நம்பிக்கையையும். அதை மீட்கற வரைக்கும் உனக்கு ஓய்வு கிடையாது. புரியுதா?”
மரக்கட்டையில் சொருகியிருந்த ஆப்பில் தனது வாலை மாட்டிக்கொண்ட குரங்கின் நிலை தர்ஷனுடையது. மறுக்கும் ஆப்சனே அவனுக்கு இல்லாதபோது அவனது பதிலை மட்டும் யார் பெரிதாகக் கண்டுகொள்ளப்போகிறார்கள்? தலையாட்டிவைத்தான், கொஞ்சம் பயத்தோடும் நிறைய மனச்சங்கடத்தோடும்.
ஒன்றுமறியாத ராமசாமியையும் அப்பாவி வட இந்திய இளைஞர்களையும் தனது திமிரால் காவல் நிலையத்தில் உட்காரவைத்ததன் பலனை இன்று அவனும் அனுபவித்திருக்கிறானே!
“எல்லாரும் கையெழுத்து போட்டாச்சு பவிதரன். மேரு பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் கம்பெனியோட பெரும்பான்மையான பங்கு இனிமே உங்களோடது. உங்களைமீறி யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நீங்க இந்தக் கம்பெனி சார்பா எந்த முடிவையும் தன்னிச்சையா எடுக்கலாம். உங்களைத் தடுக்குற அதிகாரம் இனிமே யாருக்கும் கிடையாது. பேப்பர்ஸ் சீக்கிரம் ரெடியாகிடும். எம்.சி.ஏ. ரிப்போர்ட் தயார் பண்ண ஆடிட்டர் கிட்ட சொல்லிடுறேன். இவங்க எல்லாரும் ஆடிட்டர் ஆபீஸுக்கு ஒரு நாள் போகவேண்டியது இருக்கும். நீங்களும் வந்துடுங்க.”
ஞானபிரகாசம் சொன்னதும் பவிதரனின் முகத்தில் கர்வம்! அவனது பார்வை ஈஸ்வரியிடம் தாவியது. இங்கே நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்தவளுக்குள் இத்தனை நாட்கள் ‘தன்னால்தான் பவிதரன் கஷ்டப்படுகிறான்’ என்று உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்ச்சி விடைபெற்றது.
நிலவழகி மகனிடம் ஏதோ பேச வர, அவனோ கையுயர்த்தித் தடுத்தான்.
“இப்பவும் இந்தக் குடும்பத்தோட உறவு கொண்டாட எனக்கு விருப்பமில்ல. எனக்கான குடும்பத்துல நானும் என் பொண்டாட்டியும் எங்க குழந்தையும் மட்டும் இருந்துக்குறோம். இதோ எனக்குத் துணையா மாறன், புவன், ஷண்மதிக்கா, ரவி மாமா மாதிரி அன்பானவங்க எப்பவும் இருக்காங்க. நான் எப்பவும் மாணிக்கவேலு மகனா இருக்கப்போறதில்ல.”
நிலவழகி கலங்கிய விழிகளோடு நிற்கும்போதே மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறினான் பவிதரன். மகிழ்மாறனுக்கும் புவனேந்திரனுக்கும் நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தவன், ஷண்மதியிடம், “உன் மாமியார் கிட்ட என்ன சொல்லுவ? உன் பங்கு எல்லாத்தையும் என்கிட்ட குடுத்துட்டனு அந்தம்மாக்குத் தெரிஞ்சா கத்துமே?” என்று கேட்டான் கவலையோடு.
“உங்க பேரனுக்குத் தாய்மாமன் உறவு வேணுமா வேண்டாமானு கேட்டா அந்தம்மா கப்சிப்னு வாயை மூடிக்கும். ரவி இருக்கார். அவர் பாத்துப்பார்டா,” என்றாள் அவள் நிமிர்வோடும் நம்பிக்கையோடும்.
கூடவே, “இன்னும் ரெண்டு வாரத்துல உன் பொண்டாட்டிக்குக் கருப்பு வளையல் போடணும். அதுக்குச் சேலை வாங்கணும்னு மலரையும் சித்தியையும் கூப்பிட்டிருந்தேன். நான் அந்த வேலையைப் பாக்கப்போறேன்,” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள் அவள்.
அவள் சென்றதும் பவிதரனோடு பைக்கில் ஏறிக்கொண்டாள் ஈஸ்வரி.
பைக்கைக் கிளப்பியவன் செல்லும்போதே, “இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி கம்பெனி ஷேரை எழுதி வாங்குன நான் உனக்கு பேராசைக்காரனா தெரியலையா?” என்று வினவ,
“அந்தக் கம்பெனி இப்ப காலி பெருங்காய டப்பா. அதை சும்மா குடுத்தா கூட எவனும் வாங்கி நடத்தமாட்டான். எல்லாத்தையும் அந்தக் கரிமுடிவான் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டான். ஒன்னுமில்லாத கம்பெனியை வாங்குனதுக்கு உங்க மேல எனக்கு இரக்கம்தான் வருது முதலாளி,” எனச் சலித்துக்கொண்டாள் அவள்.
பவிதரன் சத்தமாக நகைத்தான்.
“மேருவோட ஸ்டாஃப்சை நினைச்சுப் பாத்தேன். என்னால மேருவை லாபகரமா நடத்த முடியாது. ஆனா தர்ஷனால வந்த கெட்டப்பேரை சரி பண்ணி இந்தக் கம்பெனியை இந்த வருஷக் கடைசிக்குள்ள ஓரளவுக்கு நஷ்டத்துல இருந்து மீட்க முடியும். கூடவே இந்த நஷ்டம் எல்லாம் சரியானதும் மேருவை என் தொழிலுக்காக நான் ஆரம்பிச்ச கம்பெனியோட மெர்ஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.”
“கம்பெனி ரிஜிஸ்ட்ரேஷன் எப்ப பண்ணுனீங்க? என்கிட்ட சொல்லவேயில்லை,” பரபரத்தாள் ஈஸ்வரி.
“போர்ட் கூட ரெடி பண்ணிட்டேன். வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்.”
“என்ன பேர் வச்சிருக்கீங்க கம்பெனிக்கு?”
“போர்ட் ரெடியானதும் பாத்துக்க.”
பவிதரன் அமர்த்தலாகச் சொல்ல, அவனது பின்னந்தலையில் குட்டினாள் ஈஸ்வரி. பின்னர் அவனது முதுகில் தலைசாய்த்துக்கொண்டாள்.
“நீங்க இழந்ததை எல்லாம் திரும்ப குடுத்துட்டார் அந்தக் கடவுள். ஆனா ஒன்னு, தர்ஷன் செஞ்ச தப்பால வந்த நஷ்டத்தை அவன்தான் சரி கட்டணும். அதுக்கு முன்னாடி கம்பெனியை மெர்ஜ் பண்ணிடாதீங்க.”
“சரிங்க மேடம்! ஒரு காமர்ஸ் கிராஜுவேட்டோட அட்வைஸை நான் அலட்சியம் பண்ணுவேனா?” கிண்டலாய்ச் சொன்னவன் அவளது இரு கரங்களையும் தனது வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொள்ள வைத்தான்.
ஈஸ்வரி கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து அவனது தோள்பட்டையில் மோவாயைப் பதித்துக்கொள்ள, ஜில்லென்று வீசிய காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாகப் பறந்தது அந்த பைக்.

காலமும் கடவுளும் ஆகச்சிறந்த நீதிபதிகள்! யாருமே பார்க்கவில்லை என்ற அலட்சியத்திலும், யார் என்ன செய்துவிட முடியும் என்ற அகங்காரத்திலும், மனிதர்கள் செய்கிற ஒவ்வொரு கள்ளத்தனத்திற்கும் தகுந்த ‘பொயட்டிக் ஜஸ்டிஸ்‘ வாழ்வில் என்றேனும் ஒரு நாள் கிடைத்தே தீரும்.
பேராசைக்கான பலனை அனுபவிக்க தர்ஷன் தயாரானபோது, வாழ்க்கை பவிதரனின் தொழில் வளர்ச்சிக்கு மலர் தூவி வாழ்த்தியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

