“போராடி ஜெயிக்கிற மனுஷன் பெரும்பாலும் தனிமைவாதியாத்தான் இருப்பான். அந்தத் தனிமை அவனுக்குப் பல நேரங்கள்ல வரம். ஆனா, அப்பேர்ப்பட்ட மனுஷனும் தனக்கான போராட்டத்துல துணையா நிக்க ஆட்களைத் தேடுவான். யாருக்கும் தன்னை நிரூபிக்க அவன் போராடுறதில்ல. தனக்குத் தானே செஞ்சுக்குற ‘Self validation’ தான் அவனுக்குப் பிரதானம். அது ஒருத்தனுக்குக் கிடைச்சிடுச்சுன்னா, அவன் ‘எனக்குப் புகழ் கிடைக்கலையே’னு புலம்பமாட்டான். ‘நான் இதெல்லாம் பாத்துட்டேன்டா’ங்கிற மெச்சூரிட்டி அவனுக்கு வந்துடும். தன்னோட வெற்றிய ஊரே கொண்டாடனும்ங்கிற எண்ணமே அவனுக்குத் தோணாது. அதை அற்பத்தனம்னு ஒதுக்குற அளவுக்கு அவனால முதிர்ச்சியா யோசிக்க முடியும். சுருக்கமா சொல்லணும்னா, அவனோட உலகமே பத்தி எரியுறப்ப, அதைத் தனக்கான பாதைக்கு வெளிச்சம்னு நினைச்சுப் பயணிக்கிற மனநிலை அவனுக்கு வந்திருக்கும். அதுதான் ஒரு மனுஷனோட உண்மையான வெற்றி.”
-பவிதரன்.
அன்னையும் தங்கையும் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற கோலத்தைக் கண்டதும், பவிதரனின் மனம் ஒரு கணம் அவனை மீறி வேதனையுற்றது. பின்னர் நிதர்சனத்தை உணர்ந்து மனதைக் கல்லாக்கிக்கொண்டவன், “எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” என்றான் இளக்கமற்ற குரலில்.

அவன் வரவேற்று உபசரிப்பான் என்ற எதிர்பார்ப்பில் நிலவழகியும் மதுமதியும் வரவில்லைதான். ஆனால், இந்தக் கடினமான கேள்வியையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலவழகி அந்தக் கேள்வியில் வாயடைத்துப் போய்விட, மதுமதி ஓடோடி வந்து சகோதரனின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“அப்பாவையும் அவரையும் போலீஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்கண்ணா. அவர் எல்லா பணத்தையும் கிரிப்டோல போட்டுக் கரியாக்கிட்டாரு. பணம் குடுத்தவங்க எல்லாம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க. நானும் அம்மாவும் ஞானபிரகாசம் சாரை கான்டாக்ட் பண்ணலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணினோம். ஆனா, அவரும் எங்க காலை அட்டென்ட் பண்ணல. எங்களுக்கு உன்னை விட்டா யாருண்ணா இருக்காங்க?”
ஈஸ்வரிக்கு அவள் மீது இரக்கம் வரவில்லை. ஏனோ சிலரின் கண்ணீரோ, உடைந்த குரலோ நமக்குள் இருக்கும் நல்லவர்களைத் தொடுவதேயில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இதுல நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற?” பவிதரன் உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.
“என் கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் என் தொழில்ல போட்டிருக்கேன். இன்னும் நாலு மாசத்துல எனக்குப் பிறக்கப்போற பிள்ளைக்கான பிரசவச் செலவைக் கூட என் பொண்டாட்டிதான் பண்ணப்போறா. நான் எடுத்திருக்கிற புராஜெக்ட், டெண்டர் எல்லாம் ஜெயிச்சா நான் ஜெயிப்பேன். ஒருவேளை சிக்கல் வந்துச்சுன்னா நான் மறுபடி முயற்சி பண்ணுவேன். என் நிலைமை இதுதான். சொந்தத் தொழில் ஆரம்பிச்ச அண்ணன் கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு நினைச்சு வந்தியா நீ?” என்றான் இளக்கமின்றி.
மதுமதிக்குத் தொண்டை அடைத்துப் போனது. ஒரு காலத்தில் குடும்பத்தினரின் நலனையும், மரியாதையையும் காத்து அரணாய் நின்றவனிடம் இப்படியொரு பதிலை அவள் முன்னரே எதிர்பார்த்திருக்க வேண்டும். தங்களது கயமைத்தனத்தால் அவனைத் தூற்றிய தருணத்தை ஒருமுறை நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
அவனது அன்னையும் சகோதரியும் அமைதியாகிவிட, அப்போதுதான் மூன்றாவதாகச் சகுந்தலாவின் குரல் அங்கே கேட்டது.
“உங்கம்மா, தங்கச்சிக்காக இல்லன்னாலும் உங்க தங்கச்சி வயித்துல இருக்கிற பிள்ளைக்காகவாச்சும் ஏதாச்சும் செய்யுங்க தம்பி.”
ஈஸ்வரியும் பவிதரனும் குரல் வந்த திசையை நோக்கினார்கள்.
மெய்யாகவே நொடிந்துபோன மனதோடு நின்ற சகுந்தலாவின் முகத்தில் நாடகத்தனமான உணர்வுகள் இல்லை. அவமானத்தில் குன்றிப் போய் நின்ற அப்பெண்மணியின் கரங்கள் பவிதரனை நோக்கிக் கூப்பின.
“என் மகனை நம்புனதைத் தவிர மாணிக்கம் அண்ணன் எந்தத் தப்பையும் செய்யல. அவரையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்காங்க. தர்ஷன் அவன் செஞ்ச தப்புக்காக உள்ள இருக்கட்டும். உங்கப்பா இந்த ஊருல கௌரவமா நடமாடுனவர் தம்பி. அவரையாச்சும் வெளிய கொண்டு வாங்க. நீங்க நினைச்சா கோவமா இருக்கிற கிளையண்ட் எல்லாரையும் சமாதானப்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். என் மகன் செஞ்ச தப்பை நீங்க சரி பண்ணனும்னு நான் எதிர்பார்க்கிறதே அநியாயம்னு தெரியும் தம்பி. ஆனா நாங்க வேற யார்கிட்ட போவோம்? எங்களுக்குனு இருக்கிறவர் நீங்க மட்டும்தானே?”
பவிதரன் எந்த உறுதியையும் அவரிடம் கொடுக்கவில்லை. ஈஸ்வரியைப் பார்த்தான். அவளது முகத்தில் யோசனையின் ரேகைகள்.
“கொஞ்சம் உள்ள வாங்க.”
பவிதரனின் கையைப் பற்றி வீட்டுக்குள் அழைத்துப் போனவள், “என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்க,
“இங்க நடந்திருக்கிறது பணமோசடி. எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? ஒன்னு நாம பணமா திருப்பிக் குடுக்கணும். இல்லன்னா பணத்தை இழந்தவங்க கிட்ட என்ன சொல்லி பணம் வாங்குனாங்களோ அந்த வேலையை முடிச்சுக் குடுக்கணும். ஆனா அந்த வேலையை முடிக்கிறதுக்கான பணமும் கம்பெனில இருக்காதுங்கிற மாதிரிதான் தோணுது. ஏன்னா அப்படி பணம் இருந்திருந்தா தர்ஷன் இவ்ளோ தூரம் இந்தப் பிரச்சினையை போக விட்டிருக்கமாட்டான். ஒரேயடியா எல்லா பணத்தையும் சுருட்டிருக்கான் அவன்,” என்றான் பவிதரன் கசப்போடு.
பின்னர் அவளிடம் திரும்பி, “உனக்கு என்ன தோணுது? நான் அவங்களுக்கு உதவி செய்யட்டுமா? வேண்டாமா?” என்று கேட்டான்.
ஈஸ்வரியின் புருவங்கள் ஏறியிறங்கின. அவளது இதழ்கள் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாத வகையில் சிரிப்பை உதிர்த்தன.
“உண்மையைச் சொல்லட்டுமா? என் புருஷனைத் தவிக்க வச்சவங்க இன்னைக்குக் கண்ணீர் விடுறப்ப எனக்குச் சந்தோஷமா இருக்கு. ஹூம்! ஆனா எனக்குள்ளவும் மனுஷத்தனம் மிச்சமிருக்குதே! இதுவரை அந்தக் குடும்பத்துக்காக நீங்க என்னென்னவோ செஞ்சிருக்கீங்க. ‘One last dance, One last fight, One last adventure’ மாதிரி ‘One last help’ – இதைப் பண்ணிட்டு வாங்க. ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க. அவங்க கையாடல் பண்ணுன பணத்துக்காக நீங்க ஜாமீன் கையெழுத்து எங்கேயும் போடக்கூடாது. அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க.”
அவனது குடும்பத்தினரின் குணத்தை அறிந்தவள் என்பதால் இந்த எச்சரிக்கையை விடுத்தாள் ஈஸ்வரி. பவிதரன் அவள் சொன்ன அனைத்துக்கும் சரியென ஆமோதித்துவிட்டு வெளியே வந்தான்.
“எந்த போலீஸ் ஸ்டேஷன்?” தங்கையிடம் விசாரித்தான்.
அவளும் சொல்ல, மூன்று பெண்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தான்.
“என்னால முடிஞ்சவரை முயற்சி பண்ணுறேன். ரொம்ப நம்பிக்கை வச்சிடாதீங்க,” என்று சொல்லித் தான் அனுப்பிவைத்தான் அவர்களை.
அவர்கள் சென்றதும் அவனும் காவல் நிலையத்திற்குக் கிளம்பினான். பைக்கில் கிளம்பும் முன்னர் ஞானபிரகாசத்தின் எண்ணுக்கு அழைத்துப் பேசினான்.
அவனது குடும்பத்தார் யாரிடமும் பேசாதவர், பவிதரனுக்கு மட்டும் மரியாதை கொடுத்து அழைப்பை ஏற்றதோடு, அவனது தந்தைக்கும் தர்ஷனுக்கும் உதவக் காவல்நிலையம் வரவும் சம்மதித்தார். அவரும் பவிதரனும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்தார்கள்.
சிறைக்கம்பிகளுக்குப் பின்னே நின்ற மாணிக்கவேலுவும் தர்ஷனும் பவிதரனைப் பார்த்ததும் கண்ணீர் விடாத குறை. அவர்களிடம் பேசும் எண்ணமில்லாதவன், காவல்துறை ஆய்வாளரிடம் புகாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
“சார், பணம் குடுத்துச் செட்டில் பண்ணுற நிலைமைல அவங்க கம்பெனில எதையும் விட்டு வைக்கல. என்கிட்ட இருந்த பணம் முழுக்க இப்ப என்னோட தொழில்ல முதலீடு பண்ணியாச்சு. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு யோசிச்சிருக்கேன். நானும் சாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டு உங்களை மீட் பண்ணுறோம். அதுவரை எஃப்.ஐ.ஆர். போடாம கொஞ்சம் ஹோல்ட் பண்ணி வைங்க சார். இது என்னோட ரெக்வஸ்ட்.”

“இங்க பாருங்க தம்பி! இது விளையாட்டு இல்ல. கம்ப்ளைண்ட் குடுத்தவங்க பணத்தை இழந்து கொலைவெறில இருக்காங்க,” என்று ஆய்வாளர் எச்சரித்தார்.
“பணம் குடுத்ததுக்கு வேலை முடியும்ங்கிற உறுதி கிடைச்சா அவங்க சமாதானம் ஆகிடுவாங்க சார்.”
ஞானபிரகாசம் இப்போது வாயைத் திறந்தார்.
“கம்ப்ளைண்ட் குடுத்தவங்களை மீட் பண்ணி ‘Compromise Memo’ ரெடி பண்ணிட்டோம்னா பிரச்சினை இவங்களுக்குள்ளவே முடிஞ்சிடும் சார். அதுக்குக் கொஞ்சம் மனசு வைங்க.”
ஆய்வாளரும் சரியெனச் சம்மதிக்க, தந்தையை மட்டும் ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு ஞானபிரகாசத்தோடு கிளம்பினான் பவிதரன்.
செல்லும்போதே, “நாம எல்லாரையும் மேரு ஆபீஸுக்கு வரச் சொல்லிடுவோம் பவிதரன். அங்க அவங்களைச் சமாதானம் செஞ்சு காம்ப்ரமைஸ் மெமோல கையெழுத்து வாங்கிட்டோம்னா இது ‘Civil Dispute’ ஆகிடும். உங்கப்பாவும் மச்சானும் வெளிய வந்துடலாம். ஆனா இழந்த பணத்துக்கான நஷ்டத்தை தர்ஷனும் மாணிக்கவேலுவும்தான் ஈடு கட்டணும். அதுக்கேத்த மாதிரி பிசினஸ் முடிவுகளை எடுங்க,” என்றார் ஞானபிரகாசம்.
“கண்டிப்பா சார்.”
இருவரும் மேரு பில்டர்ஸ் அலுவலகத்தை அடைந்தபோது, அங்கே ஊழியர்கள் சோகமயமாய்த் தத்தம் வேலைகளில் ஆழ்ந்திருந்தார்கள். பவிதரனைக் கண்டதும் அவர்களின் முகங்களில் நம்பிக்கை ஒளி.
அவன் அதிகம் தாமதிக்கவில்லை.
“யாரெல்லாம் நம்மகிட்ட கன்ஸ்ட்ரக்சன் டீல் பேசுனாங்களோ அவங்க லிஸ்டைக் குடுங்க ஜீவன். அப்படியே நம்ம ரியல் எஸ்டேட் ஆபீஸுக்குக் கால் பண்ணி எந்த நிலம் எல்லாம் அவங்க லே-அவுட் போட ரெடியா வச்சிருந்தாங்களோ அந்த லேண்ட் ஓனர்ஸ், அட்வான்ஸ் குடுத்தவங்க லிஸ்டை வாங்குங்க. அரைமணி நேரத்துக்குள்ள எல்லாம் எனக்கு வேணும்.”
பவிதரன் கட்டளையிடவும் மடமடவென அங்கே வேலை நடக்க ஆரம்பித்தது. இடையிடையே புவனேந்திரனுக்கும் மகிழ்மாறனுக்கும் அழைத்துப் பேசினான் அவன்.
“இது குடும்ப விவகாரம். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வந்ததும் என் சார்பா பேச நீங்க ரெண்டு பேரும் வரணும்.”
அவர்களும் சம்மதித்தார்கள்.
அவர்களிடம் பேசி முடித்த பிறகு, தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த நில உரிமையாளர்களிடம் பேசிச் சரிகட்டினான். இதற்கிடையே பவிதரனின் மேஜைக்கு அவன் கேட்ட நபர்களின் விபரங்கள் வந்து சேர்ந்தன.
அதிகம் யோசிக்கவில்லை. அவனும் ஞானபிரகாசமும் அதில் குறிப்பிடப்பட்ட நபர்களின் மொபைல் எண்ணுக்கு அழைத்துப்பேசி, அவர்களை மேரு பில்டர்ஸின் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். அவர்களும் பணத்துக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து சேர்ந்தார்கள்.
வந்ததும் சிலர் எகிறினார்கள். சிலர் திட்டினார்கள். சிலரோ சமரசமாய் பேசலாமென்ற முடிவில் அமைதி காத்தார்கள். அனைவரின் உணர்வுகளையும் மதித்தார்கள் பவிதரனும் ஞானபிரகாசமும்.
அவர்கள் பணத்தை இழந்தவர்கள்; கொந்தளிக்கத்தான் செய்வார்கள். அவர்களைச் சமாதானம் செய்வது தனது பொறுப்பு என்று தீர்மானித்த பிறகுதானே பவிதரன் அவர்களை அலுவலகத்துக்கே வரவைத்திருந்தான்?
அவர்கள் அமைதியடைந்ததும் அவன் பேச ஆரம்பித்தான். கிட்டத்தட்ட போர்க்களத்தில் தனியொருவனாய் நிற்கும் வீரனின் மனநிலைதான் அவனுக்கு.
“நீங்க யாரை நம்பிப் பணத்தைக் குடுத்தீங்களோ அவங்க ரெண்டு பேரும் இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க. மாஜிஸ்திரேட்டைப் பாத்துட்டாங்கனா அடுத்து ஜெயில்தான். அவங்களோட உங்க பணமும் போயிடுச்சுனா என்ன பண்ணுவீங்க?”
அவன் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு. ஒரு ரூபாய் இரண்டு ரூபாயா? லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இழந்திருக்கிறார்களே!
ஒருவர் மட்டும் எழுந்து பேச ஆரம்பித்தார். “அப்ப எங்க பணத்துக்கு என்ன பதில் தம்பி? ரிட்டயர்மெண்ட் பணத்தை மொத்தமா குடுத்துட்டேனே!” அவர் குரல் தழுதழுத்தது.
பவிதரன் அவரை அமருமாறு சொன்னவன், “உங்களுக்கு இப்ப அவங்களைப் பழிவாங்கணுமா? இல்ல உங்க பணத்துக்கான விடை தெரியணுமா?” என்று கேட்டான்.
“அதைத்தான் தர்ஷன் ஏமாத்திட்டானே தம்பி.”
“உண்மைதான். கம்பெனி அக்கவுண்ட்ல காசு இல்ல. ஆனா… கம்பெனி பேர்ல சில சொத்து இருக்கு. நான் உங்களுக்கு ரெண்டு வழி சொல்றேன். முடிவு உங்க கையில.”
அனைவரும் அவனைக் கூர்ந்து கவனித்தார்கள்.
“முதல்ல ரியல் எஸ்டேட் கஸ்டமர்ஸ்… தர்ஷன் உங்ககிட்ட வாங்கின பணத்தை, லேண்ட் ஓனர்ஸ் கிட்ட குடுக்கல. இன்னும் இருபது நாள்ல அக்ரிமெண்ட் முடியுது. பணம் குடுக்கலைன்னா, ஓனர்ஸ் நிலத்த வேற யாருக்காவது வித்துட்டுப் போயிட்டே இருப்பாங்க. அப்ப உங்களுக்கு நிலமும் கிடைக்காது, பணமும் கிடைக்காது.”
“அப்ப நாங்க என்னதான் பண்றது?”
“நான் லேண்ட் ஓனர்ஸ்கிட்ட பேசிட்டேன். நீங்க எல்லாரும் அட்வான்ஸ் குடுத்த நிலங்களை வேற யாருக்கும் விலைக்கு வாங்க வேண்டாம். லேண்ட் ஓனர்ஸ் கூட மேரு பில்டர்ஸும் சேர்ந்து ‘Joint Venture’ பண்ணலாம்னு சொல்லிருக்கேன். வர்ற லாபத்துல அறுபது சதவிகிதம் அவங்களுக்கு. மிச்சமிருக்குற நாப்பது எங்களுக்கு. இதால மேரு பில்டர்ஸுக்குப் பெரிய நஷ்டம்தான். ஆனா நஷ்டத்தை விட எங்களை நம்பி வந்தவங்க பரிதவிக்கக் கூடாதுனு நான் யோசிக்கிறேன். உங்க பணம் உங்களுக்கு நிலமா பத்திரப் பதிவு செய்யப்படும். ஆனா, லே-அவுட் போட்டு முடிக்க மூணு மாசம் ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருக்கணும். இதுக்குச் சம்மதம்னா, இந்த பேப்பர்ல கையெழுத்துப் போடுங்க.”
சிலர் யோசித்தார்கள். ஆனால் ஒருவர் எழுந்து இதையும் விட்டால் தங்களது பணம் கிடைக்காது என அறிவுறுத்தியதும், ஞானபிரகாசம் தயாரித்துக் கொடுத்த காம்ப்ரமைஸ் மெமோவில் கையெழுத்திட்டார்கள்.
அடுத்து பவிதரன் பேசியது, மேரு பில்டர்ஸ் மூலமாகத் தங்களது வீடு, வணிகவளாகங்கள், அலுவலகங்களைக் கட்டப் பணம் கொடுத்தவர்களிடம். அவர்கள் அனைவரும் தங்களுக்குப் பணம் வேண்டும் அல்லது வேலை முழுவதுமாக முடியவேண்டுமென்பதில் உறுதியாக நின்றார்கள்.
“உங்க பயம் எனக்குப் புரியுது. இனிமே தர்ஷன் கையில நீங்க ஒரு ரூபா கூட கொடுக்க வேண்டாம். ஆனா உங்க புராஜெக்டை அவர் முடிச்சுக் குடுப்பார். உங்க எல்லார் கூடவும் மேரு பில்டர்ஸ் சேர்ந்து பேங்க்ல ஒரு ‘Joint Account’ (Escrow) ஓபன் பண்ணிக்கலாம். நீங்க போடுற செக், நேரா சிமெண்ட், கம்பி, செங்கல்னு ரா மெட்டீரியல் வாங்குற டீலருக்கும், மத்த வேலைகளைச் செய்யுறவங்களுக்கும் போகும். வேலை நடந்தா மட்டும் பணம் அந்த ஜாயிண்ட் அக்கவுண்டுல இருந்து ரிலீஸ் ஆகும். தர்ஷனால தொடக்கூட முடியாது உங்க பணத்தை. அது முழுக்க முழுக்க உங்க கண்ட்ரோல்லயே இருக்கும். ஓகேவா?”

கூட்டத்திலிருந்து, “இது நல்ல ஐடியாவா இருக்கே. நமக்கு வேலையும் முடியும். அடுத்தக் கட்ட வேலைக்கான பணத்தையும் தர்ஷனால கையாடல் பண்ண முடியாது,” என்று ஒரு குரல் கேட்டது.
ஞானபிரகாசம் இப்போது இடையிட்டார்.
“இப்ப அவங்க ஜெயிலுக்குப் போனா, கம்பெனி முடங்கிடும். இந்தத் தீர்வு எதுவும் நடக்காது. அவங்க வெளிய வந்தா மட்டும்தான் கையெழுத்து போட முடியும். நாளைல இருந்து வேலை நடக்கும். இப்ப சொல்லுங்க. அவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இல்ல வெளிய வந்து உங்களுக்கு வேலை செஞ்சு தரணுமா?”
அப்போது அனைவரும் எழுந்தார்கள். “உங்களையும் தம்பியையும் நம்புறோம் சார்.”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

