அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி.
“இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார்.
ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்!
“சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி”
ஈஸ்வரி அசடு வழிந்தபடி “நீங்க முழிக்கிறதுக்குள்ள வந்துடலாம்னு நினைச்சேன். சரி விடுங்க! நான் ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்” என்றாள் பனம்பழங்கள் இருக்கும் பாலிதீன் பையை அவனிடம் கொடுத்தபடி.
பையை வாங்கிக்கொண்டவன் என்னவென்பது போல பார்த்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ராமசாமியண்ணே கூட பேசிட்டு வந்தேன். இன்னைக்குச் சாயந்திரம் வேலைக்கு ஆளுகளைக் கூட்டிட்டு வர்றதா சொல்லிருக்கார்”
பவிதரனின் கண்களில் இருந்த வாட்டம் மெல்ல மெல்ல விடைபெறுவதாய் இருந்தது! நீண்ட நெடியதொரு பெருமூச்சு அவனிடம். கடந்த ஒரு வாரம் அவன் அலைந்து திரிந்து பார்த்துவிட்டான். யாருமே அவனிடம் பணிக்கு வர ஒப்புக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் வாரவிடுமுறையில் மட்டும்தான் வேலையெனச் சொல்லியும் வர மறுத்தார்கள்.
சோர்ந்து போன மனதுக்குப் புதியதொரு உற்சாகம் பிறந்தது.
“எப்பிடி? அவர் வேற இடத்துல வேலைக்குப் போறாரே?”
“அவருக்குத் தெரிஞ்ச ஆளுக கிருஷ்ணாபுரத்துல இருக்காங்களாம். அவங்க வாரநாள்ல வருவாங்க. ராமசாமியண்ணே ஞாயித்துக்கிழமை மட்டும் வருவாராம்”
அவள் சொல்ல ஆச்சரியமும் ஆதுரமுமாய் மனைவியைப் பார்த்தான் பவிதரன்.
‘கற்றுக்குட்டியாக என்னிடம் பணிக்கு வந்தவளிடம் இப்படியொரு சாதுரியமும் சமயோஜிதமும் இருக்கிறதே!’
அவளது சிகையை வருடிக்கொடுத்தவன் “நீ வேலைய நல்லா கத்துக்கிட்டடி” என்றான் பெருமிதமாய்.

“எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான். நைட் முழுக்க தூங்காம உக்காந்திருந்திங்கல்ல, இப்ப போய் தூங்குங்க.” என்றவள் பனம்பழத்தைச் சுடுவதற்காக அவனிடமிருந்து வாங்கினாள்.
“எனக்குத் தூக்கம் வரல. அதைக் குடு. பழத்தைச் சுடுறேன்னு கையைச் சுட்டுக்கப் போறடி” என்றபடி அவனே வாங்கிக்கொண்டான்.
“ஆனா எனக்குச் சாப்பிடணும் போல இருக்கு… நானே…”
“உஷ்! நான் சுட்டுத் தர்றேன்”
“உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்?” ஆச்சரியமாய் கேட்டாள் ஈஸ்வரி.
“எங்க ஆச்சி சுட்டுத் தருவாங்க. சித்தப்பா வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் அவர் நிறைய தடவை சுட்டுக் குடுத்திருக்கார். அவர் கிட்ட கத்துக்கிட்டதுதான்”
பெரியதொரு பாரம் இறங்கியதும் பவிதரனின் மனம் இலேசாகிவிட்டது. பின்வாயிலில் இருக்கும் மண்ணடுப்பில் பனம்பழத்தைச் சுட கணவனும் மனைவியும் தயாரானார்கள்.
தீயில் வெந்த பனம்பழத்தின் நறுமணம் நாசியை நிறைத்து நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைத்தது.
“அத்தைக்குக் கொஞ்சம் எடுத்து வைங்க.”
குழலிக்குப் பனம்பழம் பிடிக்கும் என்பதால் தனியே எடுத்து வைத்த பவிதரன் மனைவியோடு சேர்ந்து சுவைத்தான் மனநிறைவோடு.
ராமசாமி ஈஸ்வரியிடம் சொன்னபடி மாலையில் ஆட்களோடு வந்து பவிதரனைச் சந்தித்தார்.
“நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க தம்பி. ஆளுங்க பேரைக் குடுத்து வேலைய முடிங்க.”
“டெண்டர் கிடைக்கணும்லண்ணே”
“உங்க நல்ல மனசுக்கு நீங்க தான் டெண்டரை எடுப்பிய.”
ராமசாமி அழைத்து வந்த ஊழியர்களின் விவரங்களைக் கொடுத்து டெண்டருக்கான வேலையை முடித்தான் பவிதரன்.
மறுநாள் ஈஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாள்.
நண்பனிடம் காரை வாங்கிக்கொண்டு வந்தவன் பாளை பேருந்து நிலையம் அருகே இருக்கும் மரியா சாமுவேல் மருத்துவமனையில்தான் தொடர்ந்து மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
அன்றைய தினம் வழக்கம் போல எடை பார்ப்பது, இரத்த அழுத்தத்தை அளவிடுவது, அவளுக்கு எதுவும் உபாதைகள் உள்ளதா என கேட்டு அதற்கான மருந்துகளை எழுதிக்கொடுப்பது என மாதாந்திர பரிசோதனை நல்லபடியாக முடிந்தது.
“அடுத்த வாரம் அனாமலி ஸ்கேன் எடுக்கணும்” என்று சொல்லி அனுப்பிவைத்தார் மருத்துவர்.
பரிசோதனைக்குக் காத்திருந்ததால் ஈஸ்வரிக்குக் கடும்பசி.
“சரவணாபவால சாப்பிட்டுட்டுப் போவோமா? ரொம்ப பசிக்குது”
அங்கே சென்றவனுக்கோ அவளோடு பானிபூரி சாப்பிட்ட நினைவுகள் நெஞ்சில் அலையாய் மோதின!
“எனக்கு வத்தக்குழம்பு வேண்டாம்” ஒதுக்கிவைத்துவிட்டாள் ஈஸ்வரி.
“கீரையும் வேண்டாம். இந்த மோர்மிளகா ரொம்ப காரம்”
ஒவ்வொன்றாக அவள் ஒதுக்கிவைக்க “பாதிக்குப் பாதி என் கிட்ட குடுத்துட்ட. இதுக்கு ஒரே ஒரு மீல்ஸ் வாங்கிருக்கலாம்” என்றான் பவிதரன் நமட்டுச்சிரிப்போடு.
இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு அடுத்த மேஜையில் அமர்ந்து சாப்பிடுபவர்களின் குரல் உரக்க ஒலித்தது.
“எப்ப மேனேஜ்மெண்ட் மாறுச்சோ அப்பவே அங்க எதுவும் சரியில்ல. நீங்க நிலம் வாங்குறதுக்கு முன்னாடி என் கிட்ட கொஞ்சம் பேசியிருக்கணும். அவரோட மகன் இருந்தவரைக்கும் அட்வான்ஸ் வாங்கி ரெண்டே வாரத்துல பத்திரம் முடிச்சுக் குடுத்துடுவார். ரியல் எஸ்டேட் மட்டுமில்ல, கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியும் கவிழ்ந்துடுச்சு. நேத்தே நாலு பேர் போய் கம்பெனிய அடிச்சு நொறுக்காதக் குறை. போலீஸ் கேஸ் ஆகிடுச்சு. மேருனு பேரை வச்சுக்கிட்டு குப்பைமேடு மாதிரி ஆக்கிட்டான் தொழிலை. பவிதரன் இருந்தவரைக்கும் அப்பிடி இருந்துச்சு கம்பெனி.”
“அந்த நம்பிக்கைலதான் நிலம் வாங்க அட்வான்ஸ் குடுத்தேன், இப்பிடி ஆகும்னு நான் நினைக்கல”
பவிதரனின் பெயர் அடிபடவும் கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒரு பெரியவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்.
“தம்பி நல்லா இருக்குறிங்களா?” என்று சினேகமாய் விசாரித்தவர், “சாப்பிட்டு முடிங்க. பேசுவோம்” என்றார்.
பவிதரனும் ஈஸ்வரியும் சாப்பிட்டு முடித்த பிற்பாடு அந்தப் பெரியவர் மாணிக்கவேலுவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தைத் தரைமட்டமாக்கும் செயல்களில் தர்ஷன் ஈடுபட்ட கதையை விலாவரியாகக் கூறினார்.
“உங்கப்பா உங்க மச்சானை ரொம்ப நம்புனார் தம்பி. ஆனா அவருக்குத் தொழிலை வளக்கணும்ங்கிற எண்ணத்தைவிட பணத்தை வளக்கணும்ங்கிற எண்ணம்தானே ஜாஸ்தியா இருந்துச்சு. ரொட்டேசன்ல விடுற பணம் முழுக்க கிரிப்டோல போட்டு கரியாக்கிட்டாரு உங்க மச்சான். அது போதாதுனு லேண்ட் பத்திரம் எல்லாத்தையும் வச்சு பேங்குல லோன் வாங்கி அதையும் கிரிப்டோல போட்டிருக்காரு. சந்தை மொத்தமா சரிஞ்சதால போட்ட பணம் எல்லாம் போச்சு. நேத்து நிலம் வித்த ஆளுங்க போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்துட்டாங்க. இவரு என் நண்பர். நிலம் வாங்க உங்க ரியல் எஸ்டேட் கம்பெனில அட்வான்ஸ் குடுத்திருக்காரு. இவர் பணமும் போச்சு தம்பி. கோடீஸ்வரன் நகர்ல முத்தையா பிள்ளை ஒரு பங்களாவும் கமர்ஷியல் காம்ப்ளக்சும் கட்டுறதா இருந்தார். அதுக்கான புராஜெக்டை மேரு கிட்ட குடுத்திருந்தாரு. பணத்தை வாங்கி மூனு மாசமாகியும் வேலை நடக்காததால அவரும் கமிஷனர் கிட்ட பணத்தை வாங்கிட்டு ஏமாத்துனதா புகார் குடுத்திருக்காரு. உங்க மச்சானும் அப்பாவும் தப்பிக்குறது கஷ்டம்”
நிலம் வாங்க முன்பணம் கொடுத்து ஏமாந்தவரோ கண்ணீர் விட்டார்.
“நிலத்துல முதலீடு பண்ணி வச்சா வருங்காலத்துல என் பிள்ளைங்களுக்கு உதவுமேனு நினைச்சேன் தம்பி. கிட்டத்தட்ட என்னோட சேமிப்புல பாதிய குடுத்திருக்கேன்”
பவிதரனால் அவருக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? எப்போதும் அவனது குடும்பத்தினரால் மற்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகையில் அவனால் முடிந்த வகையில் அந்தப் பாதிப்புக்கான பிராயசித்தத்தைச் செய்யவோ மன்னிப்பை வேண்டவோ செய்திருக்கிறான். இந்த முறை அவனால் பிராயசித்தம் என்று எதையும் செய்ய முடியாது. ஆனால் மன்னிப்பை வேண்டமுடியும்.
“என் கையில இருந்த பணத்தைத் தொழிலுக்குள்ள முதலீடு பண்ணிட்டேன். இல்லனா உங்களுக்கு வந்த நஷ்டத்தை என்னால முடிஞ்ச வகையில ஈடுகட்டியிருப்பேன்”
“பரவால்லங்க தம்பி. என் பணம் திரும்பக் கிடைக்க சட்டம் உதவி பண்ணும்னு நம்புறேன்”
அவரிடம் பேசிய பிறகு பவிதரனின் மனம் கனத்துப் போனது.
“நம்மளால எதுவும் பண்ண முடியாது. விட்டுருங்க. டெண்டர் வேலை இருக்கு. அது நமக்குக் கிடைக்கணும். இப்ப நம்ம கவலை அதைப் பத்தி மட்டும்தான் இருக்கணும்ங்க”
ஈஸ்வரி சொல்ல அவனும் அதன் பிற்பாடு தாம்போதி கட்டுவதற்கான டெண்டர் வேலைகளில் மும்முரமானான். அவனது அதிர்ஷ்டம், அந்த டெண்டர் அவனுக்கே கிடைத்தது. ராமசாமி ஏற்பாடு செய்த ஆட்களை வைத்து உள்ளாட்சி அமைப்புக்குக் கோட் செய்த தொகையில் அதைக் கட்டியும் முடித்தான் பவிதரன்.
இடையே ஐந்தாம் மாத அனாமலி ஸ்கேனை எடுத்துவிட்டு வந்தார்கள் ஈஸ்வரியும் அவனும். குழந்தையின் முக்கியமான உடலுறுப்புகள் வளர்ச்சி பெற்றுள்ளனவா என அந்த ஸ்கேனில் தெரியும். அதில் நல்ல முடிவே கிடைக்கவும் இருவருக்கும் மகிழ்ச்சி.
தாம்போதிக்கான கட்டுமான வேலை முடிந்ததும் சாலையோரங்களில் பேவர் ப்ளாக் (Paver block) கற்கள் பாதை போடும் வேலைக்கான டெண்டர் ஆரம்பிக்க, பவிதரன் முன்பு போல எஸ்டிமேட், ப்ளூ பிரிண்ட் போன்ற வேலைகளோடு அடுத்த டெண்டருக்காகவும் மும்முரமாய் தயாரானான்.
“இது கொஞ்சம் பெரிய வேலை தம்பி. ஆளுங்களும் அதிகம் தேவைப்படுவாங்க. சனி ஞாயிறுனு நாள் ஒதுக்கிச் செஞ்சா சரி வராது. நான் உங்க கிட்ட வேலைக்கு வர்றேன். என் பசங்களும் வருவாங்க.” என்று ராமசாமி சொல்ல,
“ஆனா டெண்டர் கிடைக்கணுமேண்ணே” என்றான் பவிதரன் யோசனையோடு.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்கப் பணி நடந்து முடிந்திருந்தது. சாலைகளின் இடப்பக்க ஓரத்தில் பாதசாரிகள் நடப்பதற்கான பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கும் வேலைக்கான தூரம் அதிகம். அதுவே பவிதரன் யோசிக்கக் காரணம்.
“உங்களுக்குக் கிடைக்காம வேற யாருக்குக் கிடைக்கும்னு நினைக்குறிங்க?”
“இதுல கொஞ்சம் பெரிய கான்ட்ராக்டர்கள் வர வாய்ப்பிருக்குண்ணே”
“நாங்க போன மாசம் திசையன்விளை பஸ் ஸ்டாண்ட்ல இதே வேலைய பாத்தோம் தம்பி. பெரிய கான்ட்ராக்டர் யாரும் இந்த வேலைக்கு வரமாட்டாங்க. நீங்க தைரியமா டெண்டர்ல கலந்துக்கோங்க. கவர்மெண்ட் டெண்டர்ல தொடர்ந்து கலந்துக்கிட்டு நீங்க கான்ட்ராக்ட் எடுத்திங்கனா அதுல நல்ல லாபம் சம்பாதிக்கலாம் தம்பி. வீடு, காம்ப்ளக்ஸ், மண்டபம்னு கட்டுனா பணம் நிறைய வரலாம். ஆனா கவர்மெண்ட் கான்ட்ராக்ட் எடுத்தாதான் நல்ல பேரைச் சம்பாதிக்க முடியும். அதுக்காக கன்ஸ்ட்ரக்சனையும் விட்டுடவேண்டாம். நீங்க அதுல சப் கான்ட்ராக்ட் எடுக்கலாம். உங்க கிட்ட வேலை பாக்க நாங்க தயாரா இருக்குறோம்”
ராமசாமி கொடுத்த ஊக்கத்தால் பேவர் ப்ளாக் பாதைக்கான டெண்டரிலும் கலந்துகொண்டான் பவிதரன். தொழிலுக்காய் அவன் சேர்ந்து வைத்திருந்த முதலீட்டை இந்த இரண்டு டெண்டர்களுக்காகவும் செலவளித்தான். கூடவே மணிபாரதியின் ஸ்கைலைன் இன்ஃப்ரா நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு சின்ன சின்ன கட்டுமான வேலைகளுக்கான ஒர்க் ஆர்டர்களை சப் கான்ட்ராக்ட் மூலம் எடுத்து அவற்றிற்கான கட்டுமானத்தையும் இடையிடையே கவனித்துக்கொண்டிருந்தான்.
தாம்போதி கட்டுமானத்திற்கானத் தொகையை பி.டி.ஓ. மூலம் வாங்கிய பிறகு அத்துணை மகிழ்ச்சி பவிதரனுக்கு. மாணிக்கவேலுவின் மகனாக அல்லாமல் பவிதரனாக அவன் கட்டுமானத்துறையில் சாதித்திருக்கிறானே!
அந்த உத்வேகத்தோடு பேவர் ப்ளாக் பாதைக்கான டெண்டரும் கிடைத்துவிடவே உச்சபட்ச மகிழ்ச்சியில் பவிதரனும் ஈஸ்வரியும் இருந்த நேரத்தில், ஒரு காலை வேளையில் மதுமதியும் நிலவழகியும் அவனது வீட்டு வாயிலில் வந்து நின்றார்கள். அதுவும் கண்ணீரும் கம்பலையுமாக!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

