“முதல் தடவையா தொழில்ல வர்ற அழுத்தங்களோட பாரத்தைத் தாங்க முடியாம அந்த மனுசன் தவிக்குறதை நான் என் கண்ணால பாத்தேன். ஏதோ ஒரு விதத்துல அவர் இந்தப் பாரத்தை என் கிட்ட பகிர்ந்துக்கோங்கனு சொன்னாலும் கேக்கமாட்டார். எனக்கு ப்ரஷர் ஏறிடுமாம். இங்க சாம்ராஜ்ஜியம் ஒன்னும் சரிஞ்சிடலையே. அப்பிடியே சரிஞ்சாலும்தான் என்ன? இவரால அதை மறுபடி கட்ட முடியாதா என்ன? கொந்தளிக்குற மனசை அமைதியாக்குற சின்ன பொறுப்பைக் கூட எனக்கு இந்த மனுசன் குடுக்குறதில்ல. எனக்கு ரொம்ப வருத்தம்பா”
-ஈஸ்வரி
“சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க தம்பி. நான் இப்ப உங்கப்பாவோட கம்பெனில வேலை பாக்குறேன். உங்க கிட்ட கான்ட்ராக்டுக்கு வேலை பாக்க வர விசயம் அவிய காதுக்குப் போனா என் நிலைமை கஷ்டமாகிடும்”
மேரு பில்டர்சில் முன்பு தனக்குக் கீழ் பணியாற்றிய கொத்தனார் ஒருவரிடம் பேசச் சென்றிருந்தான் பவிதரன். அவனிடமிருந்து கிடைத்த பதில் இதுவே!
தன்னால் அடுத்தவர் சிரமத்துக்கு ஆளாவதில் அவனுக்கும் இஷ்டமில்லை.
“பரவால்லண்ணே! நான் வேற ஆள் பாத்துக்குறேன்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கிளம்பப் போனவனைத் தயக்கத்தோடு நிறுத்தினார் அந்நபர்.
“யார் கிட்டவும் சொல்லிக்க வேண்டாம்! நீங்க யூனியன் ஆபிசுல கான்ட்ராக்ட் வாங்க போற விவகாரம் உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு எப்பிடியோ தெரிஞ்சு போச்சு. உங்க கிட்ட யாரையும் வேலைக்குப் போகக்கூடாதுனு சொல்லிட்டாருங்க தம்பி. அது மட்டுமில்ல, கம்பெனிய தாண்டி வேற யாரும் உங்க கிட்ட வேலைக்கு வர விரும்புனாலும் அவங்க மனசைக் கலைச்சு விடுறார்னு கேள்விப்பட்டேன். நீங்க கொஞ்சம் கவனமா இருங்க”
அவனிடம் கை நீட்டிச் சம்பளம் வாங்கிய நன்றிக்கடனுக்காகத் தனக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார் அந்தக் கொத்தனார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த பவிதரனுக்கு அன்றிரவு உறக்கமே இல்லை.
“ஏன் ஒரு மாதிரி இருக்குறிங்க? எதுவும் பிரச்சனையா?” சன்னக்குரலில் வினவினாள் ஈஸ்வரி.
அவளை நோக்கித் திரும்பிப் படுத்தவன் கொத்தனார் சொன்ன அனைத்தையும் ஒருவரி விடாமல் கூறிவிட்டான். அதைக் கேட்டு முடித்ததும் ஈஸ்வரிக்கு மனம் தாங்கவில்லை.
“நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அவன் மறுபடி உங்க வழிக்கு வர்றான்னா எவ்ளோ பெரிய கேவலவாதியா இருக்கணு” என்று வெடிக்க ஆரம்பித்தாள் அவள்.
பவிதரன் சட்டென எழுந்து அமர்ந்தான். அவன் கண்களில் மெல்லிய கவலை. ஈஸ்வரிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லை என்று நான்காம் மாதத்துக்கான மாதாந்திர பரிசோதனைக்குச் சென்றபோதே மகப்பேறு மருத்துவர் கூறியிருந்தார்.
“அவங்க கோவப்படுற மாதிரி, ஸ்ட்ரெஸ் ஆகுற மாதிரியான சூழல் உருவாகாம பாத்துக்கோங்க” என்று எச்சரித்திருந்தார்.
அவனும் முடிந்தவரை அவள் கோபம் கொள்வதற்கான சூழல் உருவாகாமல் கவனமாய் நடந்துகொண்டான். வேலையிடத்திலும் அம்மாதிரியான சிக்கல்கள் இல்லை.
‘இப்போது தர்ஷனைப் பற்றி தேவையில்லாமல் இவளிடம் சொல்லிவிட்டோமோ?’
அவனது கவலையைப் புரிந்துகொண்டவளாய், படுத்திருந்தவாறே அவனது கரத்தைப் பற்றியவள் உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டாள்.
“கவலைப்படாதிங்க. நான் டென்சன் ஆகல. உங்க பிரச்சனைக்குச் சீக்கிரமே தீர்வு கிடைக்கும்” என நம்பிக்கையாய்ப் பேசியவள் இரு கரங்களையும் விரிக்க, அவளது கழுத்தில் முகம் பதித்துக் கண் மூடிக்கொண்டான் பவிதரன். பறவையின் சிறகுகளாய் அவளது கரங்கள் அவனை அணைத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டன.
அன்னையின் அரவணைப்பை ஒத்த பாதுகாப்பான அணைப்பு அது. காமத்தின் கலப்பில்லாத அந்த அணைப்பில் அலைபாயும் அவனது மனம் மெல்ல மெல்ல அடங்குவதாய் இருந்தது! தாயின் மடியில் கிடைக்கும் நிம்மதியை அவன் ஈஸ்வரியிடம் உணர, கொந்தளித்த அவன் மனம் சாந்தமாவதை, அவனது சிரம் தோளிலும் கழுத்திலும் அழுத்தமாய் பதிந்து பின்னர் தளர்வதன் மூலம் அவள் உணர்ந்தாள்.
எப்போதுமே அடுத்தவர் தோள்களில் தனக்கான ஆறுதலைத் தேடாதவனுக்கு அன்று ஏனோ ஈஸ்வரியின் அணைப்பும், அவளது தோளும் தேவைப்பட்டது.

பவிதரனின் முதுகைத் தட்டிக்கொடுத்தவளுக்கோ உறக்கமில்லை. கர்ப்பக்காலத்தில் இது சாதாரணமாய் நடப்பதுதான். பின்னாட்களில் இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைக் கவனிக்கத் தாய்மாருக்கு இயற்கை அளிக்கும் பயிற்சி என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
ஈஸ்வரிக்குக் கூடுதலாய் கணவனின் சொந்தத் தொழில் முயற்சிகளைப் பற்றிய கவலையும் சேர்ந்துகொண்டது. அடுத்தடுத்து வந்த நாட்களிலும் அவனுக்கு ஊழியர்கள் வாய்க்கவில்லை. ஆனால் அலுவல்ரீதியான வேலைகளில் ஆழ்ந்திருந்தான்.
அவனது கவலையைக் கூடவே இருந்து கவனித்தவளுக்கு மனதில் ஒரு உபாயம் தோன்ற, ஞாயிறன்று காலையில் பவிதரன் உறங்கும்போது சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் அவள்.
நேரே அவள் போனது மேஸ்திரி ராமசாமியின் வீடு. அங்கே யாரும் விழிக்கவில்லை என்றதும் காலை வெயில் சுள்ளென முகத்தில் அடிப்பது கூட உணர்வின்றி அந்த வீட்டின் வாயிலில் காத்திருந்தாள் ஈஸ்வரி.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரமே பி.டி.ஓ.வைச் சந்தித்து Class IV தர ஒப்பந்ததாரராகப் (காண்ட்ராக்டராகப்) பதிவு செய்துவிட்டான் பவிதரன். இன்னும் இரு தினங்களில் இணையத்தில் டெண்டர் ஆரம்பித்துவிடும். அதில் விண்ணப்பிக்க வேண்டுமென்றால் ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் பட்டியல் கட்டாயம் அவசியம்.
அவனும் அங்கே இங்கே அலைந்துவிட்டான். மேருவின் திருவிளையாடலால், குறிப்பாக தர்ஷனின் தலையீட்டால் யாருமே அவனிடம் பணியாற்ற முன்வரவில்லை. சோர்ந்து போய் முந்தைய இரவில் உறங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்க்க அத்துணை கஷ்டமாக இருந்தது ஈஸ்வரிக்கு.
அதனால்தான் காலையில் விடிந்ததும் வேலைகளை மடமடவென முடித்துவிட்டு இங்கே வந்து காத்திருக்கிறாள் அவள்.
வீட்டின் கதவு திறந்து கைலி, தோள்களில் பூப்போட்ட துண்டு சகிதம் பல் தேய்க்க வெளியே வந்த ராமசாமி ஈஸ்வரியைப் பார்த்ததும் திகைத்துப் போனார்.
“ஏத்தா எம்புட்டு நேரமா இப்பிடி நிக்குற? புள்ளத்தாய்ச்சிப் பொண்ணு வெயில்ல நிக்கலாமா? வந்ததும் கதவைத் தட்டிக் கூப்பிடுறதுக்கென்ன?” எனக் கடிந்தவர், “எம்மா சௌந்தரி! ஈஸ்வரி வந்திருக்கு பாரு” என்று மனைவியை அழைத்தார்.
சௌந்தரவல்லி அவரது மனைவி. ஈஸ்வரியைப் பார்த்ததும் புன்சிரிப்பை உதிர்த்தார்.
“உள்ள வா” என்று அழைத்துச் சென்றார்.
ராமசாமி பல் துலக்கிவிட்டு வந்தபோது ஈஸ்வரிக்கு உளுந்தங்கஞ்சியை டம்ளரில் கொடுத்துக்கொண்டிருந்தார் அவரது மனைவி.
“கருப்பட்டி போட்டுக் காய்ச்சுனது. வயித்துப்புள்ளைக்காரிக்கு நல்லது. குடி. எம்புட்டு நேரம் நின்னியோ?”
வாஞ்சையோடு அவர் கொடுத்ததை அவள் அருந்தத் தொடங்கியபோதே பல் துலக்கிவிட்டு வந்து சேர்ந்தார் ராமசாமி.
“அண்ணே!..” என அவள் ஆரம்பிக்க,
“குடிச்சு முடிச்சிட்டுப் பேசுத்தா. நான் எங்கயும் போயிட மாட்டேன். இன்னைக்கு வேலை சோலினு எதுவுமில்ல” என்றவர் துண்டை தரையில் அடித்துவிட்டுச் சம்மணம் போட்டு அமர்ந்தார்.
ஈஸ்வரி மடமடவென உளுந்தங்கஞ்சியைக் குடித்து முடித்துவிட்டுத் டம்ளரை சௌந்தரவல்லியிடம் கொடுப்பதற்காக அவள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க,
“நீ உக்காருத்தா. டம்ளரைக் குடு” என்று ராமசாமியே வாங்கிப் போய்க் கொடுத்துவிட்டு வந்தார்.
“சொல்லுத்தா! என்ன விசயம்?”
“என் புருசன் வீடு கட்டுற காண்ட்ராக்டரா தொழில் ஆரம்பிச்சது தெரியும்லண்ணே?”
“தெரியுமே! தம்பி மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்”
“நடக்கணும்னுதான் எனக்கும் ஆசைண்ணே! ஆனா விட்ட குறை தொட்டக் குறையா அவங்க வீட்டு ஆளுங்க அவரை வளர விடமாட்றாங்களே?”
“என்னல சொல்லுத?” ராமசாமியின் முகத்தில் கவலை குடியேறியது.
“அவங்க, அதான் என் புருசன், நம்ம புளியமரத்துப் பக்கம் இருக்குற தாம்போதி, வயக்காட்டுப் பக்கம் இருக்குற தாம்போதிய கட்டுறதுக்கு யூனியன் ஆபிசுல ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்க. ஆனா வேலையாள் கிடைச்சாதான் டெண்டருக்கு அப்ளை பண்ண முடியும். அவங்களும் அலைஞ்சு திரிஞ்சு பாக்காங்க. அவங்க வீட்டு மாப்பிள்ளைனு ஒரு கரிமுடிவான் இருக்கானே., அவன் யாரையும் எங்க கிட்ட வேலைக்குச் சேரவிடமாட்டேங்கிறான். அவங்க பாவம்! நைட்டெல்லாம் தூங்காம முழிச்சிக்கிட்டே உக்காந்திருந்தாங்க. அவங்க அதிகமா பேசமாட்டாங்கண்ணே! என் கிட்ட இப்ப இதெல்லாம் சொல்லி வருத்தப்படவைக்கக் கூடாதுனு நினைக்குறாங்க. என்னால எப்பிடி சும்மா இருக்க முடியும்? அதான் உங்களைத் தேடி வந்திருக்குறேன். நீங்க அவங்க கிட்ட கொத்தவேலைக்கு (கட்டுமானவேலை) வர்றிங்களா?”
ராமசாமி யோசித்தார். அவர் திசையன்விளையில் ஒரு பாலிடெக்னிக் கட்டுமானத்தில் பிசியாக இருந்தார். தெரிந்த பொறியாளர்தான். அங்கே வேலை செய்யும்போது இங்கே எப்படி வரமுடியும்?
“இல்லத்தா! திசையன்விளைல வேலை நடக்குது. நானும் பசங்களும் அங்க போறோம்ல. தம்பி கிட்ட எப்பிடி வாரது?”
“நீங்க ஞாயித்துக்கிழமை மட்டும் வந்தா போதும்ணே. இன்னார் மேஸ்திரினு சொல்லி கிருஷ்ணாபுரம் பக்கத்துல கொஞ்சம் ஆளுங்களை வேலைக்கு ஏற்பாடு பண்ணிடுவோம். உங்களுக்கும் தெரிஞ்ச கொத்தனார், சித்தாள் இருந்தா சொல்லுங்கண்ணே! இந்த உதவிய நீங்க பண்ணுவிங்கனு நம்பி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் கையோட அனுப்பிடாதிங்க. கம்பெனில வேலை பாத்தப்ப சைட்டுல உங்க ஒருத்தரை மட்டும்தான் எனக்குத் தெரியும். அதனால வந்தேன். வேற யாரும் மேஸ்திரி தெரிஞ்சா கூட..”
“அட சும்மா இருத்தா. எல்லா பயலுவளும் ஒன்னு போல இருக்கமாட்டானுவ. இப்ப என்ன? வாரநாள்ல வேலை பாக்க ஆளுக வேணும். நான் ரெடி பண்ணுறேன். தம்பி கிட்ட சொல்லிடு. இன்னைக்குச் சாயந்திரம் ஆளுக ரெடியா இருப்பாங்க. நான் ஞாயித்துக்கிழமை மட்டும் வந்துக்குறேன்.”
ராமசாமி உறுதியளித்ததும் கண்கள் கலங்க எழுந்தாள் ஈஸ்வரி. பவிதரனிடம் வேலை பார்த்தவருக்கு இருக்கும் இந்த அக்கறை கூட உறவுக்காரர்களுக்கு இல்லாமல் போனது எத்துணை பெரிய வேடிக்கை!
கையெடுத்துக் கும்பிடப் போனவளைத் தடுத்தார் ராமசாமி.
“நம்ம பயலுவளையும் என்னையும் எப்பேர்ப்பட்ட விவகாரத்துல போலீஸ் கிட்ட இருந்து தம்பி காப்பாத்துனாருனு நான் இன்னும் மறக்கலத்தா. நீ தைரியமா போ. சாயந்திரம் நான் ஆளுங்களோட வர்றேன்”
“சரிண்ணே! நான் வாரேன்”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

