“வார்த்தைகள் குடுக்காத சிலிர்ப்பையும் இதத்தையும் அவளோட கைவிரல் உரசுன அந்த ஒரு நொடி குடுக்குது எனக்கு. எங்களுக்குள்ள மௌனச்சுவர் எழுறப்ப எல்லாம் இந்தச் சின்ன கெஸ்டர் தான் அதைச் சில்லு சில்லா உடைக்கும். ஒரு யுகப்பெருங்கோபத்தைத் தணிக்குறதுக்கு இந்தச் சின்ன தீண்டல் போதுமானது. இமயமலை அளவுக்கு இருக்குற ஈகோவ கூட நொறுக்கித் தள்ளிடும் அந்த ஸ்பரிசம்”
–பவிதரன்
மேரு பில்டர்ஸ் அலுவலகத்தில் தனது அலுவலக அறையில் பதற்றமாய் ஜூம் மூலம் வீடியோ அழைப்பில் தனது நண்பன் சாஜனுடன் பேசிக்கொண்டிருந்தான் தர்ஷன்.

“எடா சாஜன்! இது ஸ்டேபிள் காயின் ஆணு, இதின்டெ வில ஒரு டாலறில் தாழே போவல்லன்னு நீ பறஞ்ஞதல்லே. இப்போம் எங்கனடா குறைஞ்ஞு? அஞ்சு கோடியாணெடா. அத்ரயும் ரொட்டேஷனில் இட்ட பணமாணது. இப்போ மார்க்கெட் இடிஞ்ஞு, அஞ்சு கோடியுடெ வால்யூ இங்ஙனெ ஆயென்னு பறஞ்ஞால் எந்தா அர்த்தம்?”
அத்துணை பரிதவிப்பு தர்ஷனின் முகத்தில்!
மடிக்கணியின் திரையில் தெரிந்த சாஜனின் முகமும் சோர்ந்து போயிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஸ்டேபிள் காயின் சத்யமாயிட்டும் சேஃப் ஆணு தர்ஷன். பக்ஷே இது அல்காரிதம் ஃபெயிலியர் ஆணென்னா பறயுன்னே. பிட்காயினில் இட்டால் வில கூடியும் குறஞ்ஞும் நஷ்டம் வரும் என்னு கருதியிட்டாணு நிண்டெ பணம் இதில் இன்வெஸ்ட் செய்தது. ஈ மார்க்கெட்டில் குறே காயின் கையில் உள்ள ஒருத்தன் மொத்தம் விற்று. அது காயினின்டெ வில குறச்சதும் அல்காரிதம் ஃபெயிலாய். எல்லாரும் வில குறயுன்னு பேடிச்சு வில்க்கான் தொடங்ஙியப்போ வீண்டும் இடிஞ்ஞு. இப்போ வாங்கான் ஆளில்லாத கொண்டு கேறுன்னுமே இல்ல.”
“சரி! நீ இப்போ கையிலுள்ள ரண்டு கோடியுடெ ஸ்டேபிள் காயின் வில்க்கண்ட. எல்லா பியர் மார்க்கெட்டும் ஒரு திவசம் புள் மார்க்கெட் ஆவுமல்லோ. அதுவரெ வெயிட் செய்யு.”
“சரி தர்ஷன். இப்போ மார்க்கெட் அவ்வளவு சரியல்ல. நீ இத்திரி பணம் கூடி இட்டு ஆவரேஜ் செய்தால், மார்க்கெட் ஒன்னு கேறியால் தன்னெ கொள்ள லாபம் அடிக்காம்.”
அவனிடம் பேசிய பிறகு தர்ஷன் தனது தலையைப் பிடித்துக்கொண்டான்.
கிரிப்டோவில் முதலீடு செய்வது எந்தளவுக்கு அதிக இலாபத்தைத் தருமோ அதே அளவுக்கு அதிக அபாயத்தையும் கொண்டு வருமென அறிந்தவன் அவன்.
இருப்பினும் ஸ்டேபிள் காயினின் மதிப்பு எப்போதுமே ஒரு டாலருக்குக் குறையாது என்று சாஜன் சொன்னதன் அடிப்படையில் விள்ளாமல் விரியாமல் ஐந்து கோடியைத் தூக்கிக்கொடுத்திருந்தான். அத்துணையும் தொழிலில் ரொட்டேஷனில் இருக்கும் ‘ஒர்க்கிங் கேப்பிட்டல்’.
மூன்று மாதத்தில் ஐந்து கோடி ஏழாகவோ எட்டாகவோ குட்டி போடுமெனக் காத்திருந்தவனுக்கு, அதே மூன்று மாதத்தில் திடுமென ‘அல்காரிதம் தோல்வியால்’ ஸ்டேபிள் காயினின் மதிப்பு குறையத் தொடங்கியிருப்பதாக சாஜனிடமிருந்து வந்த செய்தி மாபெரும் இடியாய்!
பதறிப்போய் வீடியோ இணைப்பில் அவனோடு பேசியபோது சாஜனும் நிலைமையை விளக்கினான். அதிக அளவில் ஸ்டேபிள் காயின் இருப்பு வைத்திருந்த ஒருவன் மொத்தத்தையும் விற்றதால் மார்க்கெட்டில் இறங்குமுகமெனச் சொன்னவன், இன்னும் கொஞ்சம் பணத்தைப் போட்டு ஆவரேஜ் செய்தால் மார்க்கெட் ஏறுகிறபோது விட்ட பணத்தை எடுத்துவிடலாமெனக் கூறினான்.
பங்குச் சந்தையும் சரி, கிரிப்டோ கரன்சி சந்தையும் சரி – இறங்குமுகம் என்று ஒன்று வந்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சந்தை நிதானமடைந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கிச் செல்லும்.
அந்த நம்பிக்கையில் சாஜன் தனது முதலீட்டு அனுபவத்தை வைத்து இவ்வாறு சொல்ல, தர்ஷனுக்கும் விட்ட மூன்று கோடியைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலை வந்துவிட்டது இப்போது.
உடனடியாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அவன் நியமித்திருந்த உதவியாளனின் மொபைலுக்கு அழைத்தான்.
“நம்ம கிட்ட விக்காத நிலங்களோட டாக்குமெண்ட் இருக்குதா?”
“இருக்கு சார். தச்சநல்லூர் பக்கம் ஒரு லேண்ட் ரெண்டு கோடிக்கு வேல்யூ போட்டிருக்காங்க.”
தர்ஷனின் முகம் பளிச்சிட்டது.
“அந்த டாக்குமெண்டை எடுத்து வைங்க.”
அவன் மனதில் இந்த முறை தனது குறி தவறாது என்ற நம்பிக்கை பிறந்தது.
அவனது திட்டங்கள் யாவும் மூன்றே மாதங்களில் சரிவை நோக்கிச் சென்றபோது, கொஞ்சம் கொஞ்சமாய் பவிதரனின் தொழிலானது சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஏற்கெனவே கட்டுமானத்தொழிலில் அவனுக்கு இருந்த தொழில்ரீதியான நட்புகள் அவனது திறமையை அறிந்தவர்கள் என்பதால் வாய்ப்புக்குப் பஞ்சமில்லை.
அவன் ஒரு குறிப்பிட்ட நபரிடம் பணியாற்றவில்லை என்பதால் மாணிக்கவேலுவாலும் தர்ஷனாலும் அவனது புதிய தொழிலை கெடுக்கவும் முடியவில்லை.
அவன் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஆட்டோ, பேருந்தில் செல்வதைக் கவனித்த ஈஸ்வரி பைக் வாங்கிக்கொள்ளுமாறு சொல்லவும் முதலில் வேண்டாம் என்றே மறுத்தான் பவிதரன்.
“எனக்காக டிவி வாங்குன ஆளுக்கு இப்ப பைக் வாங்க மட்டும் ஏன் சுணக்கம்? டிவியா பைக்கானு கேட்டா என் ஆப்ஷன் பைக் தான். நான் சொல்ல சொல்ல கேக்காம டிவிய வாங்குனிங்க. பைக் அத்தியாவசியம்ங்க. நீங்க லோன்ல வாங்குங்க. ஈ.எம்.ஐ நான் கட்டுறேன்” என்று வற்புறுத்தி வாங்க வைத்தாள் அவள்.
ஈஸ்வரி வாங்கி வந்த ரோஜாப் பதியன்கள் எப்படி அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் வேர் விட்டுச் செழித்து வளர்ந்தனவோ, அதே போல அவனது தொழிலும் செழித்தது.
அந்த ரோஜாச் செடிகளில் அடர்சிவப்பு வண்ண ரோஜா மொட்டு விட்டபோது ஈஸ்வரியின் வயிற்றிலும் குட்டி ரோஜா ஒன்று உதித்தது.
இரு குடும்பத்துப் பெரியவர்களும் குதூகலமடைந்தார்கள் இந்நற்செய்தியை அறிந்ததும்.
செவ்வாய், வெள்ளியில் நதியூர் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து செல்லும் நிலவழகிக்கு இந்நற்செய்தி குழலியால் சொல்லப்பட்டது. மகனிடமும் மருமகளிடமும் பேசினால் கணவர் வருத்தப்படுவார், வீடு போர்க்களமாகுமே என்ற பயத்தில் அவர் குழலியிடம் இனிப்பு மட்டும் செய்துகொடுத்தார்.
“நான் குடுத்தேன்னு சொல்லிடாத குழலி” என்றும் சொல்லியிருந்தார்.
நாட்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது ஈஸ்வரிக்கு வேலைக்குச் செல்ல சிரமமாக இருந்தால் வேலையை விட்டுவிடுமாறு கூறினான் பவிதரன்.
“அப்பிடி ஒன்னும் கஷ்டமில்ல. நம்ம ராமசாமியண்ணன் கூட வேலை பாக்குற சித்தாளுல ஒன்னு கர்ப்பமா இருக்கப்ப வேலைக்கே போச்சு தெரியுமா? நான் என்ன கல்லும் மண்ணும் சுமக்கவா போறேன்? கம்ப்யூட்டர்ல பில் எல்லாத்தையும் ஏத்தப் போறேன். இதுல என்ன சிரமம் இருக்கு?”
அவளுக்குப் பிரசவ கால ஆயாசங்கள் எதுவும் அதிர்ஷ்டவசமாக இல்லை என்பதால் அவளது வேலை எந்தச் சிரமமுமில்லாமல் நகர்ந்தது.
பவிதரன் எஸ்டிமேட் போட்டுக் கொடுத்த வணிகவளாகத்தின் உரிமையாளர் ரங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் நல்ல பழக்கம் உள்ளவர்.
அவர் வாயிலாக ஒரு நற்செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது.
நதியூருக்கும் ரங்கநல்லூருக்கும் இடையிலான சாலைக்குக் குறுக்கே மழைநீர், வடிகால் நீர் செல்வதற்காக தாம்போதிகள் எனப்படும் சிறிய பாலங்கள் கட்டுவதற்கான டெண்டர் இன்னும் சில நாட்களில் விடப்படுமென்ற தகவலைக் கூறினார்.
“நீங்க யூனியன் ஆபிசுல கான்ட்ராக்டரா பதிவு பண்ணிட்டு ஆளுங்களை வச்சு வேலை பாத்திங்கனா போதும் தம்பி. உங்களுக்கு இந்த வேலைல அனுபவம் இருக்கு. உங்க கிட்ட முன்னாடி வேலை பாத்த ஆளுங்களைப் பாருங்க. அவங்க கட்டாயம் வருவாங்க.”
அவர் கொடுத்த நம்பிக்கையில் ஈஸ்வரியிடம் இந்த டெண்டர் விவகாரம் பற்றி பேசினான்.
“நல்ல ஐடியாவா இருக்கு. எத்தனை நாள் ப்ளூ ப்ரிண்ட், எஸ்டிமேட் மட்டும் போட்டுக்கிட்டிருப்பிங்க? இதையும் பண்ணிப் பாக்கலாமே? புதையல் காத்த பூதம் மாதிரி உங்க சேமிப்பை இன்னும் எத்தனை வருசத்துக்கு வச்சிருக்கப் போறிங்க?”
“அதில்லடி! பாப்பா பிறந்துச்சுனா…” குழந்தையை எண்ணி அவன் யோசித்தான்.
“அடேங்கப்பா பிரசவத்துக்கு எவ்ளோ செலவாகிடப்போகுது? சுகப்பிரவசம்னா முப்பது நாப்பது ஆகுமா? சிசேரியன்னா எண்பது தொண்ணூறு வரை ஆகும். உங்க கிட்ட இதை விட கம்மியாவா பணம் இருக்கு?” என்று கேட்டு அவனைக் குறுகுறுவெனப் பார்க்க பவிதரன் சிரித்தான்.
“என் கிட்ட எவ்ளோ சேமிப்பு இருக்குனு தெரிஞ்சே ஆகணுமா?”
“அதெல்லாம் வேண்டாம். இந்தப் பாப்பா வெளிய வர இன்னும் ஆறு மாசமாகும். அதுவரைக்கும் வர்ற வாய்ப்பை வேண்டாம்னு விடப்போறிங்களா?”
ஈஸ்வரி எடுத்துச் சொன்னதும் அவனும் தயக்கத்தைத் தொலைத்தான்.
ரங்கநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் தன்னை ஒப்பந்ததாரராகப் பதிவு செய்வதற்கான வேலைகளில் ஆழ்ந்தான்.
அதே நேரத்தில் கர்ணனின் மனைவி மிருணாளினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மலர்விழி மூலம் செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியோடு அச்செய்தியைத் தனது வீட்டாரிடம் பகிர்ந்துகொண்டாள் ஈஸ்வரி.
“தேஜூ பாப்பா பிறந்துச்சுல்ல, அதே ஹாஸ்பிட்டல்லதான் மிருணா அக்காவ சேர்த்திருக்காங்களாம். நேத்து நைட் ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தவங்களுக்கு இன்னைக்குக் காலைல ரெண்டு மணிக்குப் பாப்பா பிறந்திருக்காம்.”
குழலி எழிலரசியின் மொபைலுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
“மருமவளும் பிள்ளையும் வீட்டுக்கு வந்ததும் பாக்க வந்துடுறோம்.”
பவிதரனிடம் இச்செய்தியைச் சொன்ன ஈஸ்வரி “நாம போய் அந்தப் பாப்பாவ பாத்துட்டு வந்துடுவோமா?” என்று ஆசையாய்க் கேட்டாள்.
“மூனு மாசத்துல ட்ராவல் பண்ணலாமானு அத்தை கிட்ட சித்தி கிட்ட கேட்டுக்க” என்றான் அவன்.
“என் பிள்ளை என்னை மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கும் முதலாளி. உங்க அத்தையும் சித்தியும் எப்பிடியும் போகாதனு தான் சொல்லுவாங்க. ப்ளீஸ்! நாம போகலாம்பா. உங்க பைக்ல கூட்டிட்டுப் போங்க.”
பிடிவாதம் பிடித்தாள் ஈஸ்வரி. பவிதரன் தாடையைத் தடவி யோசித்தான்.
“சரி! போகலாம். நீ ரெடியாகு. நான் வந்துடுறேன்” என்று சம்மதத்தைச் சொல்லிவிட்டு எங்கேயோ கிளம்பிப் போய்விட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து வந்தவன் சும்மா வரவில்லை. ஒரு காலத்தில் அவனது காராக இருந்து பின்னர் அவனாலேயே விற்கப்பட்ட கருப்பு வண்ண காரோடு வந்திருந்தான். தொழிலுக்கான பணத்தேவைக்காக காரை நண்பன் ஒருவனிடம் விற்றிருந்தான்.
ஈஸ்வரி அந்தக் காரைப் பார்த்ததும் திகைத்துப்போனாள். அதை அவன் விற்றதே அவளுக்கு மனம் ஆறவில்லை. பவிதரனை நினைத்தாலே அந்தக் காரும் அவளது கற்பனைக்குள் வந்துவிடும். அதை அவன் விற்றபோது அத்துணை வருத்தம் அவளுக்கு. மீண்டும் அதைப் பார்த்ததும் வியப்பும் திகைப்பும் அவளை ஆக்கிரமித்தது.
“ரொம்ப தூரம் போறோம். பைக் சரியா வராது ஈஸு. அதான் சுகேஷ் கிட்ட காரை வாங்குனேன். பெட்ரோல் இருக்கு. நாம போற வழில டேங்க் ஃபிள் பண்ணிக்கலாம். வா!”
அவன் கை நீட்டி அழைத்ததோடு கார்க்கதவைத் திறந்தும் விட்டான்.
ஈஸ்வரி குதூகலமாய் காருக்குள் போய் அமர்ந்தாள்.
அடுத்து அமர்ந்த பவிதரனை அந்த இருக்கையில் பார்த்ததும் அவளது குதூகலம் அதீதமாகி கண்கள் குளமாயின.
“என்னாச்சு? ஃபீலிங்கா? விடு! இன்னும் ஒரு வருசத்துல இதே மாதிரி நம்ம புது கார் வாங்கிடலாம்” என்று நம்பிக்கையாய்ச் சொன்னவன் அவளது தோளை அணைக்கவும்,
“சில நேரம் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலனா இந்தக் கஷ்டமெல்லாம் உங்களுக்கு வந்திருக்காதேனு என்னை அறியாம யோசிச்சிருக்கேன். அது சரிதானோ?” என்று வினவினாள் அவள்.
பவிதரன் கடுமையாய் அவளை உற்று விழித்தவன், “புள்ளத்தாய்ச்சிப் பொண்ணை அறைஞ்சா பாவம்னு கையைக் கட்டிக்கிட்டு இருக்குறேன். இல்லனா ராஸ்கல் உன் கன்னம் வீங்கியிருக்கும்” என்றான் கோபத்தோடு.
ஈஸ்வரி அதில் கப்சிப்பாகிவிட்டாள்.
“ப்ரெக்னென்சில ஹார்மோன் ஏறியிறங்கத்தான் செய்யும். அதுக்காக என்ன வேணாலும் உளறலாமா? கிறுக்கி மாதிரி பேசி வைக்காத இன்னொரு தடவை.”
அவன் எச்சரிக்கவும் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள் பொம்மை போல.
பவிதரன் சட்டெனத் தணிந்தவன் அவளைத் தோளோடு அணைத்து உச்சி முகர்ந்தான்.

“நீ எனக்குக் கிடைச்ச பொக்கிஷம்டி. இந்தச் சண்டைக்காரிய விடவா காரும் பணமும் வசதியும் பெருசு? இனிமே இப்பிடி ஒரு நினைப்பே உனக்கு வரக்கூடாது. சரியா?”
அதற்கும் அவள் மௌனமாய் தலையசைக்கவும், “என்னை இனிமே கத்த வச்சிடாத. நீ ஒருத்தி இருக்கப்போய்தான் நான் மனுசனா நடமாடிட்டிருக்கேன். ரொம்ப சந்தோசமா எனக்கான அடையாளத்தை உருவாக்கிட்டிருக்கேன். எப்பவுமே நீ என்னோட பலம். அதை மட்டும் மறந்துடாத” என்றான் அழுத்தமாய்.
ஈஸ்வரி அவனை விட்டு விலகியவள் முகம் கனிய அகம் மலர முறுவலித்தாள்.
அதே நேரம் இளவரசியும் குழலியும் ஆயிரம் முறை கவனமாய் செல்லுமாறு அறிவுறுத்தி வழியனுப்பி வைத்தார்கள் இருவரையும்.
அம்பாசமுத்திரத்தில் மிருணாளினியை அனுமதித்திருந்த மருத்துவமனையை அவர்கள் அடைந்தபோது நல்லவேளை விசிட்டர்ஸ் நேரம் முடிவடையவில்லை.
மிருணாளினிக்குப் பத்தியச்சாப்பாட்டை ஊட்டிக்கொண்டிருந்த உலகம்மை பவிதரனையும் ஈஸ்வரியையும் சந்தோஷமாய் வரவேற்றார்.
“நாங்க ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வர்றோம்.”
கிருமிநாசினி கலந்த ஹேண்ட் வாஷில் கை கழுவிய பிறகு தொட்டிலில் கை கால்களை அசைத்துக்கொண்டிருந்த குழந்தையையும் மிருணாளினியையும் நலம் விசாரித்தார்கள் இருவரும்.
“அழகுப்பையன்” தொட்டிலில் கிடந்த குழந்தையை ஈஸ்வரி கொஞ்சும்போதே அங்கே வந்து சேர்ந்தான் கர்ணன்.
பவிதரனையும் ஈஸ்வரியையும் பார்த்ததும் முகம் மலர்ந்தான் அவன்.
“எப்பிடி இருக்குறிங்க? புதுசா பிசினஸ் ஆரம்பிச்சதா கேள்விப்பட்டேன். எப்பிடி போகுது?”
“நல்லா போகுது. உங்களுக்கு வாழ்த்துகள்.”
ஆண்கள் இருவரும் பேசிக்கொள்ள ஈஸ்வரியிடம் இது எத்தனையாவது மாதமென விசாரித்தார் உலகம்மை.
“மூனு நடந்திட்டிருக்குத்தை.”
உடனே சாதத்தை விழுங்கிய மிருணாளினி, “பாரும்மா! மூனு மாசத்துல இத்தனை கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி வந்திருக்கா. உன் மருமவன் வீட்டுல இருந்து ஆபிசுக்கு நான் ட்ராவல் பண்ணுனதுக்கு அவ்ளோ அலப்பறை பண்ணுனாரு” என்க,
“நானும் ரொம்ப கஷ்டப்பட்டுச் சம்மதிக்க வச்சு தான் இங்க வந்திருக்கேன்கா” என்றாள் ஈஸ்வரி.
“குழந்தைய சுமக்குற நமக்கு அதோட பாதுகாப்புல அக்கறையே இல்லாத மாதிரி பேசுவாங்க” மிருணாளினி சொல்லவும் சிரித்தார்கள் உலகம்மையும் ஈஸ்வரியும்.
“அக்கறைய விட பொண்ணுங்களுக்குக் கியூரியாசிட்டி அதிகம். அதான் நாங்க பயப்படுறோம்” என்றபடி வந்த கர்ணன், முந்தைய இரவில் பிரசவ வார்டுக்குள் செல்லும் முன்னர் அவனிடம் கொடுக்கப்பட்ட மிருணாளினியின் தாலி செயின், தோடு, வளையலை அவளை அணிவிக்க ஆரம்பித்தான்.
குழந்தைக்காக வாங்கிய பொருட்களை உலகம்மையிடம் கொடுத்தாள் ஈஸ்வரி.
“ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க. பிள்ளைத்தாய்ச்சிய வெறும் வயித்தோட அனுப்ப முடியாது. இன்னும் கொஞ்சநேரத்துல சம்பந்தியம்மாவும் ஆதியும் வந்துடுவாங்க. மாப்பிள்ளை நீங்க மிருணாவ பாத்துக்கோங்க.”
உலகம்மை பிடிவாதமாய் இருவரையும் தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்ல தனித்துவிடப்பட்டார்கள் மிருணாளினியும் கர்ணனும்.
அவளது காதில் தோடுகளைப் போட்டுவிட்டவனிடம் “ஈஸ்வரி மூனு மாசம் முழுகாம இருக்கு. தெரியுமா?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.
அவளது தலையில் நறுக்கெனக் குட்டப்போனவன் மகன் சத்தம் போடவும் கவனத்தை அவன் பக்கம் திருப்பினான்.
“இப்பவே உன் அம்மாக்குச் சப்போர்ட்டா நீ?”

தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்துக் கர்ணன் கொஞ்சவும் அவனது புஜத்தில் சாய்ந்துகொண்டாள் மிருணாளினி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

