“உளி தன்னை அடிக்கடி அடிக்குறதால பாறைக்கு அது மேல செம கோவமாம். கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் உளி தன்னைச் சிலையா செதுக்குறதுக்கு வடிவம் குடுக்க இசையுமாம் அந்தப் பாறை. அதே மாதிரிதான் உனக்குத் துணையா நிக்கப் போறதில்லனு சொல்லிக்கிட்டே என்னோட புதுத் தொழிலுக்குச் சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டிருக்கா ஈஸ்வரி. அவளோட கோவத்துக்கும், அவ செயலுக்கும் சம்பந்தமேயில்ல. உதடு தான் கடுகடுனு வார்த்தைய விடுதே தவிர மனசு முழுக்க பாசம் நிறைஞ்சிருக்கு என் சண்டைக்காரிக்கு”
–பவிதரன்
ஈஸ்வரியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ரங்கநல்லூரில் இருந்து திரும்பிய பிறகு குழலியின் வீட்டுக்குப் போய் அங்கே நடந்ததைக் கடுஞ்சீற்றத்தோடு எடுத்துரைத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்ட பிறகு இளவரசி அவளைத்தான் கண்டித்தார்.
“இடம் பொருள் ஏவல்னு ஒன்னு இருக்கு ஈஸ்வரி. ஊரார் பாக்க நீ மருமவனோட அப்பா அம்மாவ பேசலாமா முதல்ல?”
“உலகத்துல இல்லாத அப்பா அம்மா வாய்ச்சிருக்கு பாரு உன் மருமவனுக்கு. போம்மா! உங்க யாருக்கும் என் ஆதங்கம் புரியாது.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அங்கே கத்திவிட்டு வீட்டுக்குள் வந்து கதவை அடைத்துக்கொண்டவள் பின்னர் யார் அழைத்தாலும் திறக்கவேயில்லை.
குழலியும் ஷண்மதியும் கதவைத் தட்டி அழைத்து ஓய்ந்து போனார்கள்.
சரியாக அந்நேரத்தில் பவிதரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
சித்தியும் தமக்கையும் வீட்டு வாசலில் நிற்பதைக் கவனித்துவிட்டு “என்னாச்சு? ஏன் கதவு பூட்டியிருக்கு?” என விசாரித்தான்.
ஷண்மதி அதிருப்தியோடு இளைய சகோதரனை நோக்கினாள்.
“வாடா! அவ ரொம்ப கோவமா இருக்கா. நியாயமான கோவம் வேற. போ! போய் சமாதானப்படுத்து” என்றவள், “வாங்க சித்தி! இவங்க அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்களுக்குள்ளவே இருக்கட்டும். நமக்கு எதுக்கு மண்டை இடி?” என்று குழலியைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டாள்.
அவர்கள் சென்றதும் பவிதரன் கதவின் மீது கை வைத்தவன் தட்டவே யோசித்தான் எனலாம். ஆனால் இப்படியே நிற்பதால் எதுவும் முடிவுக்கு வரப்போவதில்லையே!
ஓங்கிக் கையை கதவில் வைக்கப் போனவன் அதற்குள் கதவு திறந்து கொள்ளவும் கையை இறக்கிக்கொண்டான்.
இன்னும் கோபம் தீராமல் நின்று கொண்டிருந்தாள் ஈஸ்வரி. அவளை எப்படி சமாதானம் செய்வதெனத் தெரியாமல் திகைப்போடு பார்த்தான் பவிதரன்.
“இங்க எதுக்கு வந்திங்க?” வீட்டுக்குள் அவன் போய்விடக்கூடாதென நிலையில் கை வைத்து மறித்தவண்ணம் வினவினாள் அவள்.
“இங்க வராம வேற எங்க போறது?”
“யாரைப் பத்தி பேசுனா கோவம் பொத்துக்கிட்டு வருதோ அவங்க வீட்டுக்குப் போகணும். என் வீட்டுக்கு வரக்கூடாது.”
“உன் வீடா?” பவிதரன் இரு புருவங்களையும் உயர்த்தி வினவ,
“ஆமா! என் ஃப்ரெண்ட் எனக்காகப் பேசி முடிச்ச வீடு. அட்வான்சும் வாடகையும் குடுத்ததால மட்டும் இந்த வீடு உங்க வீடாகிடாது. ஈஸ்வரியைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்லித்தான் இந்த வீட்டை வாடகைக்குப் பிடிச்சிங்க. அதை மறந்துடாதீங்க. நீங்க உள்ள வரக்கூடாது” என்றாள் அவள் பிடிவாதமாய்.
பவிதரன் தோள்களைக் குலுக்கினான்.
“சரி! நான் இந்த திண்ணைல தங்கிக்கிறேன்.”
சொன்னதோடு திண்ணையில் போய் அமரவும் செய்தான். ஈஸ்வரி ஒரு கணம் திகைத்தாள். இன்னுமே கோபத்தின் வெம்மை அவளது மனதை விட்டு அகலவில்லை.
எரிச்சலோடு கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
வீட்டுக்குள் குறுக்கும் மறுக்கும் கால் ஓய நடந்தவளுக்குக் கோபம் கொஞ்சம் குறைந்ததும் கதவைத் திறந்தாள்.
இன்னும் அசையாமல் திண்ணையில் அமர்ந்திருந்தவன் மீது ஒரு நொடி பரிதாபம் பிறந்தாலும் அடுத்த நொடியே, “அந்தக் கருமாந்திரம் புடிச்ச குடும்பம் முன்னாடி என்னைப் பேசுனான்ல. இவனுக்கு என்ன பரிதாபம் வேண்டியது கிடக்கு?” என்று பிடிவாதத்தை விடாமல் பிடித்துக்கொண்டாள்.
அவள் கதவைத் திறந்த அரவம் கேட்டவன் பொறுமையாய் திரும்பிப் பார்த்தான்.
“வீட்டுக்குள்ள வரலாமா?”
“வந்து என்ன பண்ணப்போறீங்க?”
“குடும்ப விவகாரத்தைத் தெருவுல வச்சுப் பேசுறது எனக்குப் பழக்கமில்ல.”
ஒரு நொடி சூடாய் அவனை முறைத்தவள் கதவை அடைக்காமல் விசுக்கெனத் தலையைத் திருப்பிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
திண்ணையிலிருந்து எழுந்தவன் அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான். ஹாலில் ஈஸ்வரி தரையில் அமர்ந்திருந்தாள். அவன் சாதாரணமாய் போய் அருகில் அமர்ந்து அவள் கையைப் பற்றிக்கொள்ள எத்தனிக்க, அவள் கையை உதறிக்கொண்டாள்.
“பேசணும்னு சொன்னிங்கல்ல. பேச மட்டும் செய்யுங்க” என்றாள் விறைப்பாக.
“சரி! முதல்ல நீ இந்தக் கோபத்தைத் தூக்கியெறி. ரெண்டாவது நான் அங்க உன்னை உதாசீனப்படுத்தல. அதை நீ புரிஞ்சிக்கணும்.”
“என் நெத்தியில கிறுக்குனு எழுதி வச்சிருக்கா?” நெற்றியைத் தடவிக்காட்டி ஈஸ்வரி கேட்கவும் பவிதரன் சட்டெனச் சிரித்துவிட்டான்.
அவன் சிரிக்கவும் அவளது விழிகள் கோபத்தில் கொந்தளித்தன.
“சை! சிரிக்கிறீங்க! வெக்கமா இல்ல அங்க வச்சு என் கிட்ட கத்துனதுக்கு? இப்ப மட்டும் வந்து பம்முறிங்க! உங்க வீட்டாளுங்க முன்னாடி என் பொண்டாட்டிய நான் பொட்டிப்பாம்பா அடக்கி வச்சிருக்கேன்னு சீன் போடுறதுக்கு நான்தான் கிடைச்சேனா? நான் என்ன ஊரானுக்காகவா பேசப் போனேன்? உங்களுக்காகத்தானே போனேன். அதுக்கு நல்ல மரியாதை பண்ணிட்டிங்க. தள்ளி உக்காருங்க. இல்லனா காலை உடைச்சிடுவேன்.”
பேச்சுவாக்கில் சம்மணமிட்ட அவனது நீளமான கால் விரல்கள் அவளது உள்ளங்காலில் உரசவும் எரிச்சலுற்று கடைசி வாக்கியத்தைக் கடித்துத் துப்பினாள் ஈஸ்வரி.
பவிதரன் விலகி அமரவும் தொண்டையைச் செருமிக்கொண்டாள். கத்திக் கத்தித் தொண்டை வலித்தது.
“குரலே மாறிடுச்சு பாரு. ஏன் இப்பிடி கத்துற? உனக்கு நான் வச்ச செல்லப்பெயரை நீ இன்னைக்கு நிரூபிச்சிட்ட.”
பேசியபடியே சமையலறைக்குச் சென்றவன் திரும்பி வந்தபோது அவனது கையில் சொம்பு நிறைய தண்ணீர் இருந்தது. அதை ஈஸ்வரியிடம் நீட்டினான்.
“எனக்கு ஒன்னும் தேவையில்ல. என்னை அசிங்கப்படுத்துன ஆள் கையால தண்ணி குடிக்குறதை விட தொண்டை வலியில சாவலாம்.”
சுள்ளென்று அவள் எரிந்துவிழவும் பவிதரனின் முகம் கலங்கிப்போனது. சொம்பினைத் தரையில் வைத்தவன் “தண்ணி குடி” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.
அவனது முகம் மாறியதில் ஈஸ்வரியின் மனமும் காயப்பட்டுப்போனது. ஆனால் அதை வெளிக்காட்ட அவளுக்கு விருப்பமில்லை.
மதியம் இளவரசி வந்து இருவரையும் வற்புறுத்தி சாப்பிட அழைத்துப் போனார். சாப்பாட்டுக்குப் பிறகு ஈஸ்வரிக்கு அறிவுரை சொல்லும் படலம் ஆரம்பித்தது.
“முன்னாடி இருந்த மாதிரி இப்பவும் இருக்கமுடியாது ஈஸ்வரி. கல்யாணம் முடிஞ்ச பொண்ணுக்குனு சில குணாதிசயம் இருக்கணும். நீ கொஞ்சம் பொறுமையா இருக்கப் பழகு.”
இளவரசி சொன்ன எதையும் அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவளிடமிருந்து நூல் பிடித்து இடைவெளி விட்டு அமர்ந்திருந்த பவிதரனோ அவள் தன்னைப் புரிந்துகொள்ளமாட்டாளா என்ற தவிப்பில் இருந்தான்.
அதைக் கண்டுகொள்ளாமல் எழுந்தவள் “நான் வீட்டுக்குப் போறேன்மா” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
உண்ட மயக்கத்தில் கண்ணுறங்கியபோதும், மாலையில் எழுந்து முகம் கழுவி விளக்கேற்றி சாமி கும்பிட்டபோதும், ஷண்மதி அவளது வீட்டுக்குக் கிளம்பியபோதும் இந்த மௌனயுத்தம் அவர்களிடையே தொடர்ந்தது.
அவள் கிளம்பியபோது “சின்னப்பிள்ளைங்க மாதிரி முறைச்சுக்காம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு வாழப் பாருங்கடா” என்று அறிவுரை சொல்லிவிட்டுத்தான் போனாள்.
அறிவுரையைக் கேட்க பவிதரனுக்கு விருப்பமிருந்தாலும் ஈஸ்வரிக்கு உடன்பாடு இருக்கவேண்டுமே?
அன்றைய இரவில் ஹாலில் பாய் விரித்துத் தனியே உறங்கியவளிடம் போய் தமக்கையின் அறிவுரையை நினைவுறுத்த அவனுக்கே தயக்கம்தான்.
இப்படியே அன்றைய நாள் கழிய மறுநாள் காலையில் தண்ணீர் மோட்டர் ஓடும் சத்தத்தில் கண் விழித்தான் பவிதரன்.
விழிக்கும்போதே நாசியில் குழம்பு தாளிக்கும் நறுமணம் ஏறியது.
மெதுவாக எழுந்து சமையலறைக்கு வந்தாலோ அவனது மனைவி அங்கே குழம்பு தாளிப்பது, பொரியலுக்குக் காய்கறி நறுக்குவது, காலையுணவுக்கான ஆயத்தங்களைச் செய்வதென தனியொருத்தியாக அஷ்டாவதானம் செய்துகொண்டிருந்தாள்.
“நான் ஏதாச்சும் பண்ணட்டுமா?” மெல்ல அவன் வினவவும் சட்டெனத் திரும்பியவள்,
“இதெல்லாம் நான் பாத்துக்குறேன். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்குற வேலைய மட்டும் பாருங்க” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்துபோனாள்.
“தனியா சிரமப்படுறியேன்னு கேட்டேன்.”
காய்கறி நறுக்குவதை நிறுத்திவிட்டுத் திரும்பினாள் ஈஸ்வரி.
“என்னோட சிரமத்தைப் பத்தி நீங்க யோசிக்கவேண்டிய அவசியமில்ல. நானும் உங்களோட சிரமம், கஷ்டம்னு எதைப் பத்தியும் இனி யோசிக்கப்போறதில்ல. உங்க வீட்டு வாசல்ல சொன்னதுதான் இனிமே இந்த வீட்டுல, நமக்குள்ள நடைமுறை. அதை மறந்துடாதீங்க.”
பவிதரன் ஆற்றாமையோடு நெற்றியை வருடிக்கொண்டான். மேற்கொண்டு பேசினால், அவிழ்க்க முயலும்போதெல்லாம் இன்னும் இறுகிப்போகும் பட்டுநூல் முடிச்சைப் போல அவளது பிடிவாதமும் அதிகமாகும் என்பதால் அமைதியாய் தலையாட்டினான்.
“காலை, மதியத்துக்குச் சமைச்சு வச்சிடுறேன். உங்களுக்குக் காபி நீங்கதான் போட்டுக்கணும்.”
சுருக்கமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டாள் ஈஸ்வரி.
பின்னர் சமையலை முடித்து குளித்து வேலைக்குச் செல்லத் தயாரானவள் போவதற்கு முன்னே, “எதுக்கும் மாறன் சார் கிட்ட பேசிப் பாருங்க” என்று எங்கோ பார்த்தபடி சொல்ல,
“நம்ம சுமைய நாமதான் சுமக்கணும். மாறன் அவரால முடிஞ்ச உதவிய ஒரு தடவை பண்ணிட்டார். மறுபடி அவரைத் தொந்தரவு செய்ய விருப்பமில்ல. நானே பாத்துக்குறேன்” என்றான் பவிதரன்.
உனது பிரச்சனைக்குள் இனி தலையிடமாட்டேன் என்று சொன்னாலும் தனக்காக யோசிப்பதை ஈஸ்வரியின் மனம் நிறுத்தாததே அவனுக்குப் பெரும் ஆறுதலாய்!
கணவன் மனைவிக்கிடையே வரும் கருத்து மோதல்களும் வாக்குவாதங்களும் கண்ணாடி முன்னே நின்று மூச்சு விடும்போது அதில் படிந்து பிம்பத்தை மறைக்கும் புகை போலத்தான்.
ஒரு நொடிக்கு மேல் அந்தப் புகையால் பிம்பத்தை மறைக்க முடியாது. அது போலத்தான் கணவனும் மனைவியும் என்னதான் பிடிவாதமாய் முறுக்கிக்கொண்டு நின்றாலும் அவர்களிடையே இருக்கும் ஊடலானது அவர்களின் நேசத்தை முழுவதுமாக மறைத்துவிடாது.
ஈஸ்வரியும் ஈகிள் புக் சென்டருக்கு வந்து சேர்ந்தாள். பழைய வேலைதான். ஆனால் இப்போது முழுநேரமாகி இருக்கிறது. அதுமட்டுமே வித்தியாசம்.
புத்தகங்களைப் படிக்கிறோமோ இல்லையோ அவற்றின் நடுவே உலாவினால் கிடைக்கும் பாசிட்டிவ் வைப் உலகில் வேறு எதற்கும் இணையில்லை எனலாம்.
பேரலைகளுடன் கொந்தளிக்கும் கடலாய் இருந்த அவளது மனம் புதிய புத்தகங்களின் நறுமணத்தால் மெல்ல மெல்ல சாந்தமடைந்தது.
“எனக்கு அந்த பாப் அப் புக் வேணும்” ஒரு சிறுவனும் அவனது அன்னையும் வந்து நிற்க புன்னகையைப் பூசிக்கொண்டு வேலையில் ஆழ்ந்து போனாள் அவள்.
அதே நேரம் வீட்டில் இருந்த பவிதரன் அடுத்து என்ன செய்யலாமென யோசித்துக்கொண்டிருந்தான்.
தனது கல்வி சான்றிதழ்கள், அரசாங்கத்திடம் பதிவு செய்த சில ஆவணங்கள் அடங்கிய பட்டன் ஃபைலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனின் பார்வையில் விழுந்தது அதற்குள் இருந்த ரப்பர் ஸ்டாம்பும், வட்டவடிவ சீலும்.
அதைக் கவனித்தவனின் பார்வை கூர்மையுற ரப்பர் ஸ்டாம்பையும் சீலையும் எடுத்துப்பார்த்தான். அந்தச் சீல் மற்றும் ரப்பர் ஸ்டாம்பில் எழுதப்பட்டவற்றை வாசித்தான்.
Er. M. PAVIDHARAN, B.E., (Civil) Registered Engineer (Grade-II) Reg No: RE/Gr-II/DTCP(TKY)/2025/042 No. 3/15, Kovil Street, Ranganallur, Thoothukudi Dist – 628 001. Mob: 98765xxxxx | Email: pavi.builds@gmail.com (கதைக்காகச் சித்தரிக்கப்பட்டது)
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் இருக்கும் DTCPயின் கீழ் அரசாங்கத்தில் பதிவு பெற்ற கிரேட் இரண்டு வகையறா கட்டிடப் பொறியாளனாக தன்னைப் பதிவு செய்திருந்தான் அவன்.
ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் ப்ளானை அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதற்குப் பதிவு பெற்ற கட்டிடப் பொறியாளர் சான்றளித்த கட்டிட வரைபடம் தேவை. அதைச் சரிபார்த்து கட்டிடப் பொறியாளர் சான்றளித்த பிற்பாடே கார்பரேசன் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கும்.
இவ்வாறு சான்றளிக்கும் பதிவு செய்த கட்டிடப் பொறியாளர்கள் அதற்காக சதுர அடிக்கு இவ்வளவு என தொகையை நிர்ணயிப்பார்கள்.
அது போக வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றாலும் இத்தகைய பதிவு பெற்ற கட்டிடப் பொறியாளரிடம் எஸ்டிமேட் மற்றும் கட்டிடம் கட்டுவதற்கான ப்ளூ ப்ரிண்டை வாங்கி வரச் சொல்வது வழக்கம்.
அந்த எஸ்டிமேட் மற்றும் ரிப்போர்ட் தயார் செய்வதற்கு இத்தனை சதவிகித கமிஷன் என்று பொறியாளர்கள் வாங்கிக்கொள்வார்கள்.
அது போல வீட்டை, அல்லது கட்டிடத்தை விற்பதற்காக வீட்டின் மதிப்பை அளவிடும் வேல்யூசன் ரிப்போர்ட் தயார் செய்து கொடுப்பதும் இத்தகைய பதிவு பெற்ற கட்டிடப் பொறியாளர்களின் பணிக்குள் அடங்கும்.
எந்த நிறுவனத்தின் கீழும் இயங்காமல் இவ்வாறு சம்பாதிக்கும் வழி சட்டரீதியாக அவர்களுக்கு இருக்கிறது. அதிலும் பவிதரன் ஐந்தாண்டுகள் மட்டுமே அனுபவமுடையவன் என்பதால் கிரேட் இரண்டில் பதிவு செய்திருந்தான்.
கிரேட் இரண்டு என்றால் பெரிய பெரிய புராஜெக்டுகளை அவனால் அங்கீகரிக்க இயலாது. ஆனால் நான்கு மாடி கட்டிடங்கள், இருபதாயிரம் சதுர அடிக்குள் வரும் கட்டிடங்களுக்கு அவனால் எஸ்டிமேட், ப்ளான் அப்ரூவல் செய்ய முடியும்.
திக்கற்ற காட்டில் கண்களைக் கட்டித் தனித்து விட்டாற்போல அன்று காலை வரை உணர்ந்தவனுக்கு இப்போது புது நம்பிக்கை பிறந்தது. அடுத்த நொடி அவன் அழைத்தது மணிபாரதியைத்தான்.
“உங்களால எனக்கு இந்தச் சூழ்நிலைல உதவ முடியும்னு நினைக்குறேன் சார்” என்று ஆரம்பித்தவன் தனது திட்டத்தைச் சொல்ல முதலில் தயங்கியவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.
“சரி பவிதரன்! இனி வர்ற சின்ன சின்ன ப்ளான் அப்ரூவல், எஸ்டிமேட் எல்லாம் உங்க கிட்ட குடுக்குறேன். எனக்குத் தெரிஞ்ச பேங்க் மேனேஜர் ஒருத்தர் உண்டு. அவர் கிட்டவும் சொல்லி வைக்குறேன். லோன் அப்ளை பண்ணுறவங்களுக்கு அவர் உங்களை சஜஸ்ட் பண்ணுவார். இன்னும் நமக்குத் தெரிஞ்ச பில்டர்ஸ் வட்டாரத்துல என்னால முடிஞ்சவரைக்கும் பேசி உங்களுக்கு டீல் வாங்கி தர முயற்சி பண்ணுறேன். உங்களைத் திடுதிடுப்புனு வேலைய விட்டு அனுப்புனதுல எனக்கும் மனவருத்தம்தான். நீங்க இந்த ஃபீல்டுல வளர என்னால என்ன செய்ய முடியுமோ அதைக் கட்டாயம் செய்வேன். நீங்க என்னை நம்பலாம்” என்று உறுதியளித்தார் அவர்.
அவரிடம் பேசிய பிற்பாடு பவிதரனுக்கு அடுத்த அடி என்ன என்று ஒரு தெளிவு கிடைத்தது. மனைவி சமைத்து வைத்திருந்த உப்புமா கூட தேவாமிர்தமாய் இனித்தது அவனுக்கு.
அவனுக்கு இப்போது சில வேலைகள் இருக்கிறது. ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் சீலில் அவனது முகவரியை மாற்றவேண்டும். ப்ளான் போடுவதற்கு ஒரு கணினி வாங்க வேண்டும்.
இவ்வாறு திட்டமிட்டபடி மாலையில் ஈஸ்வரி வீட்டுக்கு வரும் வரை காத்திருந்தான் அவன்.
வந்தவள் முகம் கழுவி விளக்கேற்றியதும் அவளைத் தன்னருகே வந்து அமருமாறு கேட்டுக்கொண்டான். அவளும் பிகு செய்யாமல் அமர்ந்தாள்.
அமரும்போதே காலை நீவிவிட்டவளை யோசனையோடு பார்த்தான்.
“கால் வலிக்குதா?” கரிசனமாய் வினவினான்.
“ம்ம்! ரொம்ப நாள் கழிச்சு நிக்குறேன்ல. உக்காந்து வேலை பார்த்த உடம்பு சொகுசு கண்டிருச்சு போல.”

பவிதரன் அதிகம் யோசிக்காமல் அவளது கால்களைத் தனது மடியில் எடுத்துவைத்து இதமாக அழுத்திவிட முதலில் திகைத்தவள் பின்னர் அலட்சியம் போல காட்டிக்கொண்டாள்.
“நேத்து அந்த வீட்டு வாசல்ல என் கிட்ட கத்துனல்ல. நல்லா காலை அமுக்கு. இதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்.”
வாய்க்குள் அவள் முணுமுணுத்ததை உதடுகள் அசைவதை வைத்துக் கண்டுகொண்டவன் சிரித்தான் அவளது சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் முறையை எண்ணி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

