“ஆம்பளைங்களுக்கு ‘The Sandwich Syndrome’னு ஒன்னு பிறவிலயே உண்டு. அது கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தீவிரமாகிடும். நல்லா கவனிச்சிங்கனா, ‘எங்கம்மாக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நான் சிக்கித் தவிக்குறேன்’னு நிறைய ஆம்பளைங்க சொல்லுறதைக் கேட்டிருப்பிங்க. அது பொய் இல்ல. ஜோக்கும் இல்ல. இது அவங்களோட இயல்பான மனநிலை. மகன், கணவன்ங்கிற ரெண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவுல என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம அவங்க தவிப்பாங்க. அதனால ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க லேடீஸ், அவங்க குடும்பத்துக்குள்ள ஒரு தகராறு வருதுனா கண்டும் காணாம ஒதுங்கிடுங்க. நீங்க புருசனுக்காகப் பேசுறேன்னு போய் நின்னு, உங்க புருசனே உங்களை வாயடைக்க வைக்குற மாதிரி சூழல் உருவாச்சுனா புகுந்த வீட்டுல நீங்க ஈசி டார்கெட் ஆகிடுவிங்க. இவளை என்ன பண்ணுனாலும் மகன் கேக்கமாட்டான்ங்கிற எண்ணம் அவங்களுக்குள்ள வந்துடும். அவங்க குடும்ப விவகாரத்தை அவங்களே பேசிக்கட்டும்னு ஒதுங்கிடுங்க. இது சுயநலமில்ல. அவங்க சண்டைக்குள்ள போய் நாம தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி ஆகிடக்கூடாதுங்கிற முன்ஜாக்கிரதை.”
-ஈஸ்வரி
தட்சிணாமூர்த்தியும் ஈஸ்வரியும் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இளவரசி அங்கே இல்லை. ஒருவேளை குழலியுடன் இருப்பார் என்ற ஊகத்தில் குழலியின் வீட்டுக்கு வந்தவர்களுக்குத் திண்ணையில் யோசனையோடு அமர்ந்திருந்த பவிதரன்தான் முதலில் பார்வைக்குக் கிடைத்தான்.
காலையிலேயே சுறுசுறுப்பாகக் கிளம்பி வேலைக்குச் சென்றவனுக்கு என்னவாயிற்று? யோசனையோடு அவனை நோக்கி வந்த ஈஸ்வரிக்கு வீட்டின் ஹாலில் சோகவயப்பட்ட முகங்கள் தென்பட்டன.
“போன விசயம் என்னாச்சு ஈஸு?” என்று ஷண்மதிதான் விசாரித்தாள் முதலில்.
“வேலை கிடைச்சிடுச்சு மதினி. நாளையில இருந்து போகணும்” எனப் பதிலளித்தவள், “நீங்க எல்லாரும் ஏன் ஒரு மாதிரி இருக்குறிங்க? இவங்களுக்கு என்னாச்சு?” என்று பவிதரனைக் கைகாட்டி விசாரித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஷண்மதியால் பதிலளிக்க முடியவில்லை. இளவரசியும் குழலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்களேயொழிய பதில் சொல்லவில்லை.
ஈஸ்வரி கணவனருகே அமர்ந்தாள். அவனது கரத்தைப் பற்றியவள், “என்னாச்சு? வேலைக்குப் போனவர் ஏன் இவ்ளோ சீக்கிரமா வந்திருக்கிங்க? இன்னைக்குச் சைட்ல வேலை இல்லையா?” என ஆதுரமாகக் கேட்க,

“எனக்கு வேலை இல்ல,” என்றான் சுருக்கமாக.
ஈஸ்வரிக்கு முதலில் அவன் சொன்ன வாக்கியத்தின் பொருள் விளங்கவில்லை. அவளது பார்வையில் குழப்பம் தெரிந்தது.
அதைக் கண்டுகொண்டவன், “மணிபாரதி சார் இன்னைக்குச் சைட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஆபிசுக்கு வரச் சொன்னார். நானும் போனேன். அங்க போனதும் இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டார்,” என்றான்.
பவிதரன் என்னவோ நிதானமாகத்தான் சொன்னான். ஆனால் அவன் முடித்ததும் ஷண்மதி கோபத்தோடு பேச ஆரம்பித்துவிட்டாள்.
“எங்கப்பாவும் மதுவோட வீட்டுக்காரரும் இவன் அங்க வேலைக்கு வர்றதை வச்சு அவர் கிட்ட பிரச்சனை பண்ணிருக்காங்க. ஆபிசுக்கே போய் இவனை வேலைய விட்டு நிறுத்தச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்திருக்காங்க. அதோட கட்டுமான வேலைக்கு பொருள் சப்ளை பண்ணுற டீலர்ஸ்கிட்ட இந்தக் கம்பெனிக்குப் பொருள் குடுக்காதிங்கனு மிரட்டிருக்காங்க. எந்த முதலாளி தொழில் தேங்கி நிக்குறதை விரும்புவான்?”
ஷண்மதி படபடவெனத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டாள். அவள் சொன்னது அனைத்தையும் கேட்ட ஈஸ்வரிக்கு ஏதோ திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது.
முதலில் அவளால் எதையும் நம்ப முடியவில்லை. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு தந்தை தனது மகனுக்கு இந்தளவுக்கு இடைஞ்சல் கொடுப்பாரா என்ற எண்ணமே அவளது மூளையில் முதலில் தோன்றியது.
அடுத்த நொடியே தர்ஷனின் முகம் நினைவுக்கு வந்தது. மகாபாரதச் சகுனியைப் போல ஆயிரம் சகுனிகளுக்குச் சமமானவன் அவன். அவனால் மாணிக்கவேலுவின் மனமும் திரிந்திருக்கும்.
“எதுவுமே வேண்டாம்னு விலகி வந்தவனை ஏன் இப்பிடி பாடாப்படுத்துறாங்கனு புரியல. பெத்த மகன்ங்கிற இரக்கம் கூடவா அத்துப்போயிடும்?” ஷண்மதி வாய்விட்டே புலம்பினாள்.
ஈஸ்வரிக்கு அவள் பேசப் பேச மனம் தாங்கவில்லை. அவளுக்குள் சுறுசுறுவெனக் கோபம் ஏறியபோது பவிதரன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாய் இருப்பது இன்னுமே அந்தக் கோபத்தை அதீதமாக்குவதாய்!
“இப்ப என்ன பண்ணப்போற பவி?” ஷண்மதி ஆதங்கத்துடன் கேட்க பவிதரனுக்கே அது மாபெரும் புதிராய் இருந்தது.
“தெரியலக்கா,” என்றான் தளர்வாய்.
மெதுவாய் எழுந்தவன், “நான் கொஞ்சநேரம் தனியா இருக்கணும்,” என்றபடி அவர்களின் வீட்டை நோக்கி நடந்தான்.
நிச்சயம் அவனுக்குத் தனிமை தேவை! எத்தனையோ அழுத்தங்களைச் சமாளித்த ஆண்மகனாய் அவன் எப்போதும் இம்மாதிரி சூழல்களில் பிறர் தோளில் சாய்ந்து ஆறுதலுக்கோ தேறுதலுக்கோ ஏங்கியதில்லை. தனிமை! அது மட்டுமே அவனது மனவுளைச்சலுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது. அந்தத் தனிமையே அவனுக்கு அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான உபாயத்தையும் கற்றுத் தந்திருக்கிறது. அதை நாடி அவன் போய்விட இங்கே ஈஸ்வரியோ கொதிநிலையின் உச்சத்தில் இருந்தாள்.
“அடுத்து இன்னொரு வேலை தேடுனாலும் அதை நிலைக்க விடுவாங்களா?” இளவரசி மனம் பொறுக்காமல் அரற்றினார்.
திருமணமாகி ஒரு நாளில் மருமகன் வேலையை இழந்த தகவல் ஊருக்குள் பரவுமானால் அது மகளின் ராசியை அல்லவா நகைப்புக்கிடமாக்கும்.
ஈஸ்வரி யாரிடமும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் குழலி அவளது தோளைத் தொட்டார்.
“பவி ஏதாச்சும் பண்ணுவான். நீ கவலைப்படாத.”
“அவர் பண்ணுவார்னு எனக்கு நம்பிக்கை இருக்குத்தை. ஆனா அவருக்கு இப்பிடிப்பட்ட அநியாயத்தைப் பண்ணுனவங்களை யார் கேக்குறது?”
“நீதான் கேக்கணும்டி. அவனை வீட்டை விட்டு அனுப்புனப்ப ஒரு அக்காவா நான் அவங்க எல்லாரையும் நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்டுட்டு வந்தேன். அப்ப அவன் என் தம்பி. இப்ப உனக்குப் புருசன். நீதான் உன் புருசனுக்கு இவ்ளோ பெரிய அநியாயம் பண்ணுனவங்க சட்டையைப் பிடிச்சு நியாயம் கேக்கணும்.”
ஷண்மதி ஆதங்கத்தோடு சொல்லவும் குழலி அவளை அமைதியாக்கினார்.
“அவ கோவக்காரி. நீ சொல்லி ஒன்னுக்கிடக்க ஒன்னு ஆச்சுனா அது சொந்தத்துக்குள்ள நிரந்தரமான முறிவை உண்டாக்கிடும்.”
தட்சிணாமூர்த்தியோ என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றார்.
ஈஸ்வரி திண்ணையிலிருந்து எழுந்தவள் அங்கிருந்து கிளம்ப, மகளைத் தடுத்தார் அவர்.
“விடுப்பா என்னை. உனக்கு ஒன்னுனா அம்மா வந்து நிக்காது? என் புருசனை இப்பிடி விடாம துரத்துறவங்க இன்னைக்கு எனக்குப் பதில் சொல்லியே ஆகனும்! யாரும் என் கூட வராதிங்க. எனக்கு ரங்கநல்லூர் போற பாதை ஒன்னும் மறக்கல.”
தந்தையின் கையை உதறிவிட்டுக் கடுங்கோபத்தோடு நடக்க ஆரம்பித்தவளைப் பின்தொடரும் தைரியம் அங்கே யாருக்குமில்லை எனலாம்.
இளவரசியும் குழலியும் நினைத்தால் தடுத்திருக்கலாம். ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்னர் பவிதரன் ஆய்ந்து ஓய்ந்து வந்த தோற்றத்தைப் பார்த்ததும் உண்டான ஆதங்கம் அவர்களைத் தடுக்க விடவில்லை.
ஷண்மதிக்குத் தடுக்கும் எண்ணமில்லை. ஈஸ்வரி போய் அவர்களை வசைபாடினால்தான் தம்பி இன்றைய தினம் அடைந்த மனவேதனைக்கு ஈடு கட்டுமென எண்ணிவிட்டாள்.
தட்சிணாமூர்த்தி அமைதியிழந்து அங்குமிங்கும் அலைந்தார்.
அவர் அலைந்த நேரத்தில் நடந்தே ரங்கநல்லூருக்கு வந்து சேர்ந்த ஈஸ்வரி மாணிக்கவேலுவின் வீட்டையும் அடைந்துவிட்டாள்.
அவளுக்கு அந்த வீட்டுக்குள் செல்ல கால் கூசியது.
வெளியே நின்றபடியே, “வீட்டுல யாராச்சும் உயிரோட இருக்குறிங்களா? இருந்தா வெளிய வாங்க,” என்றாள் உச்சஸ்தாயியில்.
அவளது சத்தம் கேட்டுப் பக்கத்து வீடுகளில் சில தலைகளும் கண்களும் கண்காணிக்கத் தொடங்கியபோதே மதுமதியும் சகுந்தலாவும் வந்தார்கள். மதுமதி ஈஸ்வரியைத் திகைப்போடு பார்த்தவள், “எதுக்கு இங்க நின்னு கத்துற? என்ன விசயம்?” எனச் சிடுசிடுக்க,
“அதை உன் புருசன் கிட்ட கேளு. எங்க உன் அப்பனும் புருசனும்? எங்க போய் ஒளிஞ்சிருக்கானுங்க? தைரியமான ஆம்பளைங்களா இருந்தா வெளிய வரச் சொல்லு,” என்றாள் அவள்.
அவளது சினம் வயதுக்கு, உறவுக்கு எல்லாம் மரியாதை கொடுக்கும் நிலையில் அவளை விட்டுவைக்கவில்லை.
மதுமதிக்கோ தனது தந்தையையும் கணவனையும் அவள் ஒருமையில் பேசிய எரிச்சல்!
“வார்த்தைய அளந்து பேசு. மதினியா போச்சேனு…”
“அடச்சீ! உனக்கு மதினியா இருக்க நான் தவம் கிடக்குறேன் பாரு!” என அவளை அலட்சியம் செய்தவள், “யோவ் பெரிய மனுசா! வீட்டுக்குள்ள இருக்குறியா? இல்லனா ஒரேயடியா போய் சேர்ந்துட்டியா? வெளிய வாங்கய்யா மாமனும் மருமவனும்,” என்று மீண்டும் உச்சஸ்தாயியில் கத்த, சகுந்தலா இம்முறை அவளிடம் சமாதானம் பேச வந்தார்.
“கோவத்துல நீ என்ன பேசுறோம்னு புரியாம பேசுறம்மா. சம்பந்திக்கு உங்கப்பா வயசு,” எனப் பொறுமையாக அவர் எடுத்துச் சொல்ல ஏளனச்சிரிப்பு ஈஸ்வரியிடம்.
“எங்கப்பாவும் அந்தாளும் ஒன்னா? கோடி ரூபா குடுத்தாலும் அடுத்தவன் குடிய எங்கய்யா கெடுக்கணும்னு நினைக்கமாட்டாரு. உங்க சம்பந்தியும் நீங்க பெத்த கோடாரிக்கொம்பும் இன்னைக்கு என் புருசன் வேலைக்கு உலை வச்சிருக்குதுங்க. அதுக்கு என்ன பதில் சொல்லப் போறிங்க? ஹான்…”
பேசப் பேச அவளது குரலில் கோபம் ஏறியது. ரௌத்திரமாய் அவள் கத்துவதைச் சகிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் மாணிக்கவேலுவும் தர்ஷனும் வெளியே வந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது ஈஸ்வரிக்கு.
“இந்தா இப்ப எதுக்கு வந்து கத்திட்டிருக்க?” என்று மாணிக்கவேலு கை நீட்டி அதிகாரமாய்ப் பேச ஆரம்பிக்கவும்,
“இவ்ளோ நேரம் எந்தக் குதிருக்குள்ள ஒளிஞ்சிருந்தீரு மாமனாரே? கையைக் கீழப் போடும் முதல்ல. இல்லனா மரியாதை கெட்டுரும்.”
மாணிக்கவேலுவின் முகம் கறுத்துப்போனது. தர்ஷன் இந்தச் சண்டையைச் சுவாரசியமாய் வேடிக்கை பார்ப்போமென நினைக்க, ஈஸ்வரியின் கண்கள் அவனது முகத்திலிருந்த கயமையைக் கண்டுகொண்டன.
அதிகம் யோசிக்கவில்லை அவள். விறுவிறுவென படிகளில் ஏறியவள் அவனது சட்டை காலரைப் பற்றிப் பளாரெனக் கன்னத்தில் அறைந்தாள்.
இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. தர்ஷனும் கூட!
“நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சா அது வீட்டுச் சொந்தக்காரனையே கடிக்க பாய்ஞ்சுதாம். எங்க இருந்தோ வந்து இங்க ஒட்டிக்கிட்டு என் புருசனை வீட்டை விட்டுத் துரத்துனதோட மட்டுமில்லாம அவங்க வேலைக்கும் உலை வைக்குறியா நீ?” என்றவள் அடுத்த கன்னத்திலும் அறைய மதுமதி அவளை இழுக்க வந்தாள்.
தீயாய் அவளை முறைத்த ஈஸ்வரி, “தள்ளிப் போயிடு. இல்லனா மூஞ்சி முகரைய எல்லாம் பேத்திடுவேன். நான் மலர்விழியோ ஆதிராவோ இல்ல. எனக்குச் சபை நாகரிகம், வயசுக்கு மரியாதைங்கிற மண்ணாங்கட்டிய பத்தி எல்லாம் கவலையும் இல்ல. என் புருசனுக்கு ஒன்னுனா உன் புருசனையும் உங்கப்பனையும் கொன்னு பொலி போடக்கூடத் தயங்க மாட்டேன். தள்ளுடி,” என்று சீற, பயந்துபோய் பின்னடைந்தாள் மதுமதி.
இத்தனை கலவரங்கள் நடந்தாலும் நிலவழகி வெளியே வரவேண்டுமே! அவரது மனமும் புண்பட்டுப் போயிருந்தது. மகனின் எதிர்காலத்தை நாசமாக்கிவிட்டார்களே என்று கணவர் மீதும் மருமகன் மீதும் அத்துணை ஆதங்கம் அந்தப் பெண்மணிக்கு. அவர் பேச முடியாததை மருமகள் பேசட்டுமென அறைக்குள் முடங்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.
மாணிக்கவேலு கோபத்தோடு ஏதோ சொல்ல வர, “யோவ்! மாமனார்னு ஒரு அளவுக்கு மரியாதையோட விலகி நிக்குறேன். இந்த ரெண்டாவது அறை உம்ம கன்னத்துல விழவேண்டியது. அடி தாங்கமாட்டீருனு அதையும் உம்ம மருமவன் கணக்குல எழுதிருக்கேன். வீணா என் கிட்ட வாங்கி கட்டிக்காதீரு,” என்று கை நீட்டி எச்சரித்தாள் அவள்.
தர்ஷன் வலுவான உடல் கொண்டவன். ஆனால் ஈஸ்வரியை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவன் கொண்ட வஞ்சகமும் கயமையும் அவனது உடல் வலுவைக் குன்றச் செய்தது. அதே நேரம் நியாயமான கோபமும் தைரியமும் ஈஸ்வரியின் உடலை வலுவாக்கிவிட்டது.
சட்டென அவனை அவள் தள்ளிவிட அதே இடத்தில் விழுந்தான் தர்ஷன். சகுந்தலாவும் மதுமதியும் அவனிடம் ஓடிப்போனார்கள்.
மாணிக்கவேலு மட்டும் சுற்றியுள்ள ஊரார் இங்கே நடப்பதைப் பார்க்கிறார்களே என்ற அவமானத்தில் முகம் கறுக்க நின்றார்.
“சொந்தத் தம்பியவே ஏய்ச்சுச் சொத்து சேர்த்த உமக்கு மகன் எல்லாம் எம்மாத்திரம்? உம்ம தம்பியும் தம்பி பொண்டாட்டியும் நீரு செஞ்ச அநியாயத்தைப் புரிஞ்சிக்காத அப்பாவியா இருந்திருக்கலாம். ஆனா நான் அப்பிடி இல்லவே. இன்னொரு தடவை என் புருசன் வாழ்க்கைல நீரும், இந்தக் கரிமுடிவானும் குறுக்க வந்திய, ஒன்னுக்கு ரெண்டு கருமாதி இந்த வீட்டுல விழும். ஜாக்கிரதை!”
அவள் கடுஞ்சீற்றத்தோடு எச்சரிக்கையில், “ஈஸ்வரி!” என்று கோபத்தோடு கேட்டது பவிதரனின் குரல். திரும்பிப் பார்த்தவள் அங்கே தட்சிணாமூர்த்தியும் பவிதரனும் நிற்பதைப் பார்த்தாள்.
அவன் வேகமாக அவளிடம் வந்து அவளது கையைப் பற்றினான்.
“இங்க எதுக்கு வந்த? வா!” என அவளைத் தன்னோடு இழுக்க,
“இவங்க என்ன வேணாலும் செய்வாங்க, கேக்க நாதியில்லனு நினைச்சுக்கக்கூடாதுல்ல. அதான் வந்தேன். என்னைத் தடுக்காதிங்க,” என அவனது கையை உதறினாள் ஈஸ்வரி.

“அவங்க கிட்ட பேசுறேன்னு நீ உன் தரத்தை இறக்கிக்கிற.”
“இவங்க செய்யுற எல்லாத்தையும் நான் வேடிக்கை பாத்து ஒதுங்கி நிக்குறதுதான் தரம்னா எனக்கு அப்பிடிப்பட்ட தரமே தேவையில்ல.”
“எல்லாரும் பாக்குறாங்க! வா வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்.”
“இந்தப் பெரிய மனுசனோட பவுசு எல்லாருக்கும் தெரியட்டும். சொந்த மகனை வீட்டை விட்டு விரட்டுனது, அவன் எங்கயும் போய் வாழ்ந்துடக்கூடாதுனு கங்கணம் கட்டிட்டு அலையுறதுனு எல்லாம் இந்த ஊர்க்காரங்களுக்குத் தெரியட்டும்ங்க. இத்தனை நாள் இந்தக் குடும்பத்துல நடந்த எல்லா கேவலத்தையும் யாருக்கும் தெரியாம மறைக்குற அரணா நீங்க இருந்திங்க. அந்த நன்றி கொஞ்சமாவது இதுங்களுக்கு இருக்குதா?”
பவிதரன் தட்சிணாமூர்த்தியைப் பார்த்தான்.
“இவளைக் கூட்டிட்டுப்போங்க மாமா,” அவர் வரவும்,
“நீ போப்பா! இந்தப் பிரச்சனைக்குள்ள நீ வராத,” என அவரையும் தள்ளி நிறுத்தினாள் ஈஸ்வரி.
பவிதரனுக்கும் இப்போது கோபம் வந்துவிட்டது. இம்மாதிரி இரசபாசங்கள், சண்டைகள் எல்லாம் அவனுக்கு என்றுமே பிடிக்காதவைதான்.
அவனது பொறுமையும் பறந்துவிட, “இப்ப நீ போகப்போறியா இல்லையாடி?” என்று தன்னை மறந்து கத்திவிட்டான் அவளிடம்.
இவ்வளவு நேரமிருந்த ரௌத்திரம் அடங்கி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஈஸ்வரி.
“போகச் சொன்னேன் உன்னை,” என்றவன் விழிகளால் மாமனாரை அழைக்க அவரும் வந்தார்.
“வாம்மா! இது அவங்க குடும்ப விவகாரம். அவர் பேசிடுவாரு,” என்றார் தன்மையாய்.
ஈஸ்வரி பவிதரனைச் சூடாய் முறைத்தாள்.
“அப்ப நான் யாருப்பா? என்ன மண்ணாங்கட்டிக்குத் தாலினு ஒன்னைச் சுமந்துக்கிட்டு இந்தாளு கூட நிக்குறேன்?” என அவரிடம் வெடித்தாள்.
“நான் உன்னைப் போகச் சொன்னேன்.” பவிதரனின் குரல் காட்டமாய் கேட்க கடுப்பாய் அவனைப் பார்த்தவள் முகத்தில் அத்துணை கோபம்.
“போகத்தான் போறேன். நீங்க இடிதாங்கியா வாழ்ந்து பழகிட்டீங்க. இந்த வஞ்சகம்பிடிச்ச குடும்பம் இன்னும் பத்து இடிய இறக்குனாலும் வாயைத் திறக்காம நின்னு வாங்கிக்கோங்க. ஐயோ பவிதரனா அவன் சொக்கத்தங்கம்னு ஊரு மெச்சட்டும். மனுசனா பிறந்தா ரோசம்னு ஒன்னு இருக்கணும்வே. அது இல்லனா வெறும் சதைப்பிண்டம்தான் நாம. இவ்ளோ பண்ணியும் உங்க குடும்பத்தை நான் எதுவும் கேக்கக் கூடாதுனு வந்து காப்பாத்துறிங்களே! என்ன மனுசன் நீங்க? இங்கயே கடைசி காலம் வரைக்கும் கிடந்து லோல்படுங்க. மறந்து கூட என் வீட்டுப்பக்கம் வந்துடாதிங்க. என்னைக்குமே நீங்க மாணிக்கவேலு மகன்தான், என் கழுத்துல தாலி கட்டுனதால மட்டும் எதுவும் மாறாதுனு புரிஞ்சிக்கிட்டேன். உமக்கு நியாயம் கேக்க வந்தேன் பாரு, என் புத்திய இந்தச் செருப்பாலயே அடிச்சிக்கணும்.”
சொன்னவள் செருப்பையும் கழற்ற பவிதரனும் தட்சிணாமூர்த்தியும் அவளது கையைப் பிடித்தார்கள்.
“என்ன பண்ணுற நீ? கோவத்துல நீ என்னென்னமோ செய்யுறடி.”
“கையை விடுவே முதல்ல,” என்று அவனை உதறியவள் எரிச்சலோடு அவனது மார்பில் கை வைத்துத் தள்ளவும் செய்தாள்.
விழாமல் சமாளித்து நின்றவனிடம், “இனி எந்தக் காலத்துலயும் உமக்கு நான் துணையா நிப்பேன்னு கனவு கூட காணாதீரும்,” என்று வைராக்கியம் போல சொன்னவள் அங்கே நிற்கப் பிடிக்காதவளாய், “வாப்பா! போகலாம்,” என்று தந்தையின் கையைப் பற்றிக்கொண்டு அவரோடு கிளம்பிவிட்டாள்.
கணவனுக்குத் துணையாய் நின்று அவனது பிறந்தவீட்டாரிடம் நியாயம் பேசும் பெண்களுக்கு என்ன கிடைக்குமோ அதுவே ஈஸ்வரிக்கும் கிடைத்தது எனலாம். இதனால்தான் பெரும்பாலான பெண்கள் கணவனுக்கும் அவனது குடும்பத்தினருக்குமான கருத்து மோதல்களை யாரோ போல பார்த்துவிட்டுக் கடக்கிறார்கள் போல!
மாமனாரும் மனைவியும் செல்லும் வரை காத்திருந்த பவிதரன் நிதானமாய் தந்தையையும் இதர நபர்களையும் நோக்கினான்.
அவனது இதழில் விரக்திப் புன்னகை!
“இப்ப உங்க ஈகோ திருப்தி ஆகிடுச்சா? வேற எதுவும் குழி வெட்டி வச்சிருக்கிங்களா?”
கேட்டவனின் குரலில் கோபமில்லை.
அவனது கேள்வியே ஈஸ்வரி சொன்ன அனைத்தும் உண்மையென மதுமதிக்கும் சகுந்தலாவுக்கும் புரியவைத்துவிட்டது.
இருவரும் தர்ஷனை அதிர்ச்சியோடு பார்க்க அவனோ வலித்த கன்னத்தைத் தடவிக்கொள்வது போல நடித்தான்.
மாணிக்கவேலு பதில் சொல்ல முடியாமல் நின்றார்.
“உங்க பேச்சைக் கேக்கலனு உங்களுக்கு ஈகோ. அவ பேசுறதை நிறுத்துனேன்னு அவளுக்கு ஈகோ. பேசாம நானும் உங்க எல்லாரை மாதிரியும் ஈகோயிஸ்டா பிறந்திருக்கலாம். எது எப்பிடியோ, ஒன்னு மட்டும் தெளிவா சொல்லிக்கிறேன். கடைசியாவும் சொல்லிக்கிறேன். என்ன நிலமை வந்தாலும் மறுபடி நான் உங்க கிட்ட வந்து நிக்கமாட்டேன்.”
பொறுமையாய் ஆனால் உறுதியான தொனியில் சொன்ன பவிதரன் அங்கிருந்து கிளம்பினான், இனி எக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டின் படியை மிதிக்கக்கூடாதென்ற வைராக்கியத்தோடு.
அவனிடமே வைராக்கியமாய் பேசிவிட்டுப் போன மனைவியை அவன் எப்படி சமாளிக்கப் போகிறான்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

