“சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் அப்பிடினா என்னனு தெரியுமா? ‘நீ என்னுடையவள்’னு சொல்லுறதில்ல அது. ‘நீதான் நான்’னு சொல்லுறோமே அதுதான் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப். ஒருத்தரைப் பத்தி யாருக்குமே தெரியாத நுணுக்கமான விசயங்கள் கூட நமக்குத் தெரிஞ்சிருக்கும். அவரைப் பத்தி நமக்கு எல்லாம் தெரியும்ங்கிற எண்ணமே அவங்க மேல எனக்கு எல்லாவித அதிகாரமும் இருக்குங்கிற விசயத்தை உலகத்துக்கு இன்டைரக்டா சொல்லும். அப்ப அந்த நபர் மேல நமக்குச் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப் இருக்குனு அர்த்தம். உதாரணமா நீங்களும் உங்க லைஃப் பார்ட்னரும் ஒரு பங்ஷன்ல சாப்பிட உக்காருறிங்கனு வச்சுக்கோங்க. திடீர்னு அவங்களுக்குப் பிடிக்காத ஒரு டிஷ்சை அவங்க இலையில வைக்குறப்ப ‘இது வைக்காதிங்க., அவங்களுக்குப் பிடிக்காது’னு சடன்னா நீங்க சொல்லுவிங்க. அதுதான் சைக்காலஜிக்கல் ஓனர்ஷிப்”
–பவிதரன்
“நேத்துதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இன்னைக்கு அவன் வேலைக்குப் போகப்போறானா? என்னடி இது?”
ஷண்மதி அதிருப்தியாய்க் கேட்டபடி சாம்பாருக்குக் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். ஷண்மதி மட்டும் தங்கிவிட்டாள். அனைவரும் காலையில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தார்கள்.
காலையிலேயே கண்விழித்துக் குளித்துப் பாந்தமாய் ஒரு புடவையை அணிந்து குழலியின் வீட்டில் வந்து, பவிதரன் வேலைக்குச் செல்லப்போகும் விவரத்தைச் சொன்ன ஈஸ்வரியோ தோள்களைக் குலுக்கினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இப்ப ஒரு பங்களா வேலை போகுது மதினி. இவங்க போகலனா அங்க வேலை நடக்காது.”
“பாருங்க சித்தி! இப்பவே எவ்ளோ சப்போர்ட்டுனு,” என்று குழலியிடம் அங்கலாய்த்த ஷண்மதி, “இன்னைக்கு மறுவீடு வைக்கலாம்னு எல்லாரும் பேசியிருந்தோம். போச்சா? மலரும் ஆதியும் கூட இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாங்கடி,” என்றாள்.
“நான் அவங்களுக்குப் போன் பண்ணி எல்லாத்தையும் ஞாயித்துக்கிழமை வச்சுக்கலாம்னு சொல்லிடுறேன் மதினி. வேலை முக்கியம்ல?”
ஷண்மதி திகைத்த பார்வையோடு ஈஸ்வரியை நோட்டமிட்டாள்.
“நீ எப்ப இந்த மாதிரி மாறுன? ஓவர் சப்போர்ட்டா இருக்கே?”
“என் புருசனுக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேற யாரு பண்ணுவாங்களாம்?”
இருவரும் பேசுவதைக் கேட்டபடியே, அடுப்பிலிருந்த இட்லிக் கொப்பரையிலிருந்து அவிந்த இட்லிகளைத் தட்டோடு எடுத்துக்கொண்டிருந்த குழலியின் இதழ்களில் மனம் நிறைந்த புன்னகை. அவருக்குமே பவிதரனின் வேலையுடைய முக்கியத்துவம் தெரியும். எனவே ஹால் பக்கம் எட்டிப் பார்த்தார்.
“மருமவ சொல்லுறது சரிதானே? அவன் இன்னைக்கு வேலைக்குப் போகட்டும். ஞாயித்துக்கிழமை மறுவீடு வச்சுக்கலாம்னு இளவரசி மதினி கிட்ட நான் சொல்லிடுதேன்.”
“தேங்க்ஸ் அத்தை.”
தாமதிக்காமல் மலர்விழியின் மொபைல் எண்ணுக்கு அழைத்து மறுவீடு, விருந்து என அனைத்தையும் வாரவிடுமுறையில் வைத்துக்கொள்ளலாமெனச் சொல்லிவிட்டாள்.
அவள் மலர்விழியிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடியில் பவிதரனிடமிருந்து அழைப்பு வந்தது அவளது மொபைலுக்கு.
ஷண்மதி மொபைலின் தொடுதிரையை எட்டிப் பார்த்துவிட்டுக் கேலியாய்ப் பார்த்தாள் ஈஸ்வரியை.
“என்னடி இங்க இருந்து ரெண்டு எட்டு எடுத்து வச்சா வீடு. துரை போன் பண்ணுறாரு?”
“என் புருசனுக்கும் வெக்கமா இருக்கும்ல.”
“ஹான்! சரிதான்! நல்ல புருசன் கோண்டு நீ. போம்மா. உன் புருசன் சார் எதுக்குக் கூப்பிட்டார்னு போய் கேளு.”
அவள் கிளம்ப எத்தனிக்கையில் குழலி ஒரு எவர்சில்வர் சொம்போடு வந்தார்.
“இதுல காபி இருக்கு. ரெண்டு பேரும் குடிங்க. அவன் குளிச்சு ரெடியானதும் சாப்பிட வந்துடுங்க. இட்லி சூடா இருக்கு. சாம்பாரும் அதுக்குள்ள ரெடியாகிடும்.”
“சரித்தை.”
சொம்போடு அவள் வீட்டை நெருங்கியபோது கதவு திறந்திருந்தது. தண்ணீருக்காக பவிதரன் மோட்டர் போட்டிருந்தான். அதன் தடதட சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
‘குளிக்கப் போயிருப்பானோ?’
யோசனையோடு தங்களது அறையை எட்டிப் பார்த்தாள். அங்கே அவன் இல்லை என்றதும் குளிக்கப் போய்விட்டான் என்று உறுதி செய்தாள்.
வீட்டின் பின்வாயிலில் பக்கவாட்டில் குளியலறையும் கழிவறையும் இணைந்தே இருந்தன. பின்வாயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டவள் அங்கே இருந்தபடியே, “குளிக்க ஆரம்பிச்சிட்டிங்களா? அத்தை காபி குடுத்து விட்டிருக்கு,” என்று கத்த,
“ப்ரஷ் பண்ணிட்டிருக்கேன். இதோ வர்றேன்,” என்று பவிதரனின் குரல் கேட்டது.
சில நொடிகளில் கதவு திறந்து அவனும் வெளியே வந்தான்.
“குட்மானிங்,” என்றபடி அவளருகே அமர்ந்தவனின் கையில் காபி ததும்பத் ததும்பத் தம்ளர் கொடுக்கப்பட்டது.
“நீ எப்ப முழிச்ச? நான் எழுந்திரிச்சதும் உன்னைத் தேடுனேன். அப்புறம் நீ மலர் கிட்ட போன் பேசுன சத்தம் சித்தி வீட்டுல இருந்து கேட்டதும் அங்க போனது தெரிஞ்சுது.”
“நான் ஆறு மணிக்கே முழிச்சிட்டேன். நீங்க நல்ல உறக்கத்துல இருந்திங்க. கொஞ்சநேரம் உங்களையே பாத்துட்டிருந்தேன். உறங்குறவங்களை ரசிக்கக்கூடாதுனு எங்கம்மா சொன்னது ஞாபகம் வந்ததும் குளிச்சிட்டு அங்க போயிட்டேன்.”
பவிதரன் படபடவெனப் பேசிக்கொண்டிருப்பவளையே பார்த்தான்.
“இன்னைக்கே நான் வேலைக்குப் போறதுல உனக்கு வருத்தம் ஒன்னுமில்லையே?”
அவளது முகத்தைத் தொட்டு உறவாடிய கூந்தல் இழையைக் காதோரம் ஒதுக்கிவிட்டபடி வினவினான்.
“ம்ஹூம்! மறுவீட்டை ஞாயித்துக்கிழமைக்கு ஒத்திவச்சிட்டு வந்திருக்கேன் நான். எனக்குமே உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். மலரும் நானும் புக் சென்டர்ல வேலை பாத்தோம்ல, அங்க கால் பண்ணி பேசுனேன். வேலைக்குப் போகட்டுமா அங்க? அந்தச் சம்பளம் வந்துச்சுனா ஓரளவுக்கு நம்ம செலவுகளைச் சமாளிச்சுக்கலாம். நீங்களும் மாசச் சம்பளத்தை விட்டுட்டு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி தொழிலை ஆரம்பிக்கலாம்ல?”
பெரிய கண்களை உருட்டி அவள் கேட்ட விதத்தில் பவிதரனின் விழிகளில் மென்மை பரவியது. தனது நிறுவனத்தில் வேலை செய்தவளுக்குப் புக் சென்டர் வேலை என்பது கிட்டத்தட்ட குறைவான வேலைதான். அக்கவுண்ட்சில் வேலை பார்த்தவள் மீண்டும் பழைய வேலைக்குச் செல்வதைத் தகுதிக்குறைவாக எண்ணவில்லையே!
தனது கரத்தால் அவளது ஒரு பக்கத்துக் கன்னத்தைத் தாங்கியவன், “உன் இஷ்டம்டி. ஆனா உனக்குப் பிடிச்சா மட்டும் தொடர்ந்து போ. இல்லனா வேற எங்கயாச்சும் அக்கவுண்ட்ஸ்ல ஜாயின் பண்ணு.”
ஈஸ்வரி கண்களை மூடி அவனது கரத்தின் வெம்மையைத் தலை சாய்த்து அனுபவித்தவள் சரியென்பது போலத் தலையசைத்தாள்.

நீட்டியிருந்த அவனது கரத்தில் ஆங்காங்கே பிறைநிலா வடிவத்தில் சிவப்புத் தடங்கள்.
விழிகளைத் திறந்தவள் அந்தத் தடங்களையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க, “எல்லா இடத்துலயும் நீ சண்டைக்காரிதான்,” என்றவனின் விஷமக்குறிப்பில் ஈஸ்வரியின் முகம் செஞ்சாந்தைக் குழைத்துப் பூசினாற்போல மாறிப்போனது.
அதைச் சமாளித்தபடியே, “இந்த வாய் இருக்கே வாய்! இது வெவஸ்தை கெட்டத்தனமா பேசுது,” என்று அவனது உதட்டைக் கிள்ளிவைத்தாள் பொய்யானக் கோபத்தோடு.
பவிதரன் அமர்த்தலாகச் சிரிக்க, “ஷேர்ட்டை முழங்கை வரைக்கும் மடிக்காம இங்க வரைக்கும் போட்டுக்கோங்க. இன்னைக்கு மட்டும்,” என்று உதவிக்குறிப்பு வேறு சொன்னாள்.
“அப்புறம்?”
“அப்புறம் என்ன? சம்சார வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம். நம்ம கல்யாண வாழ்க்கைல நீங்க வாங்குன மெடல் இதெல்லாம். பெருமைப்படுங்க.”
“அடியேய்! இப்ப யாரு வெவஸ்தை கெட்டத்தனமா பேசுறது?”
பவிதரன் கிண்டல் செய்ய வெட்கம் பூசிய தனது வதனத்தை அவனது புஜத்தில் புதைத்துக்கொண்டாள் ஈஸ்வரி.
திருமண வாழ்க்கையின் முதல் காலை வேளை செல்லச்சீண்டல்களோடும், இதயம் நிறைந்த உரையாடலோடும் இதமாய் நகர்ந்தது.
பவிதரன் குளித்து அலுவலகத்துக்குத் தயாரானதும் கணவன் மனைவி இருவரும் சிகாமணியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
“உக்காருங்க ரெண்டு பேரும். நான் இலை போடுறேன்,” என ஷண்மதி மும்முரமாய்க் காலையுணவு பரிமாற ஆயத்தமானாள்.
“நீயும் உக்காருக்கா.”
“அட சும்மா இருடா. இதெல்லாம் ஒரு அக்காவா என்னோட கடமை.”
குழலியின் தோட்டத்திலிருந்து வெட்டி எடுத்து வந்த வாழையிலைகளில் தண்ணீர் முத்துகளாய் உருண்டோட, ஆவி பறக்க இட்லிகளும், கமகமவென நறுமணத்தோடு சாம்பாரும், துணைக்குத் தேங்காய் சட்னியும் வைக்கப்பட, கபகபவெனப் பசித்த வயிற்றுக்குள் அவற்றை அனுப்ப ஆரம்பித்தார்கள் கணவனும் மனைவியும்.
சாப்பிட்டபடியே, “நீ இன்னைக்கு ஊருக்குக் கிளம்புக்கா. வீக்கெண்ட்ல மறுவீடு வச்சுக்கிட்டா போதும்., அப்ப நீ வா. மாமாவும் குட்டிப்பையனும் நீ இல்லனா சிரமப்படுவாங்க,” என்றான் பவிதரன் தமக்கையிடம்.
“சரிடா,” என்றவள் இருவரின் இலைகளிலும் குழலி சூடாய்ப் பொரித்துக் கொடுத்த உளுந்தவடைகளை வைத்தாள்.
“ஒன்னு போதும்கா. காலையிலயே வயிறு ஃபுல் ஆச்சுனா சைட்டுக்குப் போனதும் தூக்கம் வந்துடும்.”
“அதை இங்க வைங்க மதினி.”
ஷண்மதி கூடுதலாய் இரண்டு வடைகளை ஈஸ்வரியின் இலையில் வைத்துவிட்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள்.
“எதுக்கு இப்ப சிரிக்குறிங்க?”
“அதில்லடி! கல்யாணம் ஆன முதல் நாள் நானெல்லாம் யார் கிட்டவும் பேசவே தயங்குனேன். அவரோட ரூமை விட்டு வெளிய வர அவ்ளோ வெக்கமா இருந்துச்சு. நீ வளைச்சு வளைச்சு இட்லியையும் வடையையும் கூச்சமில்லாம சாப்பிடுற. காலம் மாறிப்போச்சு.”
“கண்ணு வைக்காதிங்க மதினி. நான் வெக்கப்பட்டா உங்க தம்பியே சிரிச்சிடுவாப்ல,” என்றவள், “அப்பிடித்தானே முதலாளி?” என்று அவனது புஜத்தில் தனது புஜத்தால் இடிக்க,
“உண்மைக்கா! இந்தச் சண்டைக்காரிக்கு வெக்கம் எல்லாம் செட் ஆகாது,” என்றான் பவிதரன் சிரிப்போடு.
ஷண்மதிக்கு அவர்களின் இந்த அழகான உரையாடலில் மனம் நிறைந்து போனது. அதே நேரத்தில் டிபன் கேரியரோடு வந்து சேர்ந்தார் இளவரசி.
“மாப்பிள்ளை மதியத்துக்குக் கொண்டு போற சாப்பாடு இதுல இருக்கு.”
ஞாயிறில் மறுவீடு வைத்துக்கொள்ளலாமெனக் குழலி சொன்னதும் அன்றைய தினம் வாங்கிய ஊளி மீனையும் நாட்டுக்கோழியையும் காலையிலேயே சமைத்துவிட்டார் இளவரசி.
“அப்ப எங்களுக்குக் கிடையாதா அத்தை?” என்று ஷண்மதி சீண்ட,
“எல்லாருக்கும் சேர்த்துத்தான் சமைச்சிருக்கேன் மதி. இது மாப்பிள்ளைக்கு,” என்றார் அவர்.
காலையுணவை முடித்துக்கொண்டு பவிதரன் வந்தபோது, “மீன் குழம்பும், கோழி பெப்பர் ஃப்ரையும் இருக்கு. ஷேர் பண்ணி சாப்பிடுங்க. ஒரு ஆளால இவ்ளோ சாப்பிட முடியாது,” என்றபடி டிபன் கேரியரை அதற்குரிய பேக் ஒன்றில் வைத்து அவனிடம் நீட்டினாள் ஈஸ்வரி.
பவிதரனின் பைக் சிகாமணியின் வீட்டு முன்வாயிலில்தான் நின்றது.
அதிலேறியவனிடம், “இன்னைக்கு நான் புக் செண்டர்ல போய் பேசிடட்டுமா?” எனக் கேட்டாள் அவள்.
“இன்னைக்கேவா?”
“ஏன் லேட் பண்ணணும்னு நினைச்சேன். புதுப்பொண்ணுனா அடை காக்குற கோழி மாதிரி வீட்டுக்குள்ளவே இருக்க முடியுமா?”

“சரிடி சண்டைக்காரி! போயிட்டு வா. இல்லனா என் கூடவே வா. உன்னை ஈகிள் முன்னாடி ட்ராப் பண்ணிடுறேன்.”
ஈஸ்வரி தன்னை மேலும் கீழும் பார்த்துக்கொண்டாள்.
“நான் இன்னும் ரெடியாகல. எட்டே முக்காலுக்குப் பஸ் வரும். அதுல போய்க்கிறேன்! நீங்க பாத்துக் கவனமா போங்க.”
பவிதரன் டாட்டா காட்டியபடி பைக்கைக் கிளப்பிச் செல்ல, ஈஸ்வரி அவனது பைக் சாலையின் திருப்பத்தில் மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தவள் பின்னர் வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள்.
வேலை விவகாரம் பற்றி அவள் சொன்னதும் முதல் அதிருப்திக் குரல் எழுந்தது இளவரசியிடமிருந்தே!
“கல்யாணம் ஆகி இன்னும் உன் தாலிக்கயிறு மஞ்சள் கூடக் காயல. அதுக்குள்ள வேலைக்குப் போகணுமா? இன்னைகே நீ பஸ் ஏறி போனனா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?”
“யாரும் எதுவும் நினைக்கட்டும். எனக்கென்ன? என் புருசனுக்குச் சொந்தத் தொழில் ஆரம்பிக்கணும்னு ஆசை. ஆனா குடும்பத்தை நடத்தக் காசு வேணுமேனு வேலைக்குப் போறாங்க. நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சா குடும்பத்தை என் சம்பளத்துல நடத்திட்டு அவங்களைத் தொழில் ஆரம்பிக்கச் சொல்லிடலாம்ல. எப்பவும் ஈஸ்வரியக் கட்டிக்கிட்டதால என் தொழில் கனவு தேங்கி நின்னுடுச்சுங்கிற எண்ணம் அவங்களுக்கு வரக்கூடாதுனு நினைக்குறேன். புரியுதாம்மா உனக்கு?”
ஷண்மதிக்கு ஈஸ்வரியின் மனம் புரிந்தது. இப்போது தம்பியின் நிலை சரியில்லை. அதைச் சீராக்க அவளால் இயன்ற அளவுக்கு முயலுகிறாள். ஏன் தாங்கள் தடைக்கல்லாய் நிற்கவேண்டும்?
“அவ போயிட்டு வரட்டும் அத்தை. யார் என்ன சொல்லிடப்போறாங்க? எப்பிடியும் நம்ம எதிர்ல பேசுற தைரியம் புறணி பேசுறவங்களுக்கு இருக்காது. பின்னாடி பேசுறவங்களுக்காக நாம் ஏன் யோசிக்கணும்?”
ஷண்மதியே பச்சைக்கொடி காட்டவும் இளவரசி அமைதியாகிவிட்டார்.
நாத்தனார்கள் கலகமூட்டிகளாக இருந்து சகோதரர்களின் வாழ்க்கையில் கதகளி ஆடும் கதைகள் அனேகம் அவர் அறிந்ததுண்டு. மதுமதி எப்படியோ, ஷண்மதி அன்பானவள். புரிந்துணரும் திறனுடையவள். கால ஓட்டத்துக்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் குணமுடையவள். அவள் எப்போதும் மகளைக் குற்றம் சொல்லப்போவதில்லை என்றதும் தாய் மனம் அமைதியானது.
இளவரசியும் ஷண்மதியும் சொன்ன பிற்பாடு குழலி மட்டும் என்ன சொல்லிவிடப்போகிறார்?
“மூர்த்தி அண்ணன் கூட பைக்ல போ. பஸ்ல போனாதானே பேசுவாவ,” என்று உபாயம் கூறினார் அவர்.
ஈஸ்வரிக்கும் அவரது யோசனை பிடித்தது. மடமடவென வீட்டுக்குச் சென்றவள் காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டு தந்தையை அழைத்தாள்.
“என்னை ஈகிள் புக் செண்டர் வரைக்கும் கூட்டிட்டுப் போப்பா.”
முதலில் தயங்கிய தட்சிணாமூர்த்தி பின்னர் மகிழ்ச்சியோடு மகளை வரச் சொல்லிவிட்டார்.
ஈஸ்வரியும் தட்சிணாமூர்த்தியும் பைக்கில் பயணித்த அதே நேரத்தில் ஸ்கைலைன் இன்ஃப்ரா ப்ரைவேட் லிமிட்டடின் அலுவலகத்தில் மணிபாரதியின் முன்னே கலக்கத்தோடு அமர்ந்திருந்தான் பவிதரன்.
“எனக்கு வேற வழி தெரியல பவிதரன். உங்களை மாதிரி டேலண்டான ஒருத்தரை இழக்க எனக்கு மட்டும் விருப்பமா என்ன? உங்கப்பாவும் ப்ரதர் இன் லாவும் வந்துட்டுப் போன ரெண்டு நாள்ல நாம வழக்கமா ஜல்லி வாங்குற இடத்துல பிரச்சனை பண்ணுறாங்க. அதுதான் பிரச்சனைனு சரிகட்டுனா அடுத்து சிமெண்ட் கொடவுன்ல இன்னொரு பிரச்சனை. அவங்க டீலர் கிட்ட போய் கலகம் பண்ணுறாங்க பவிதரன். இது என் தொழிலுக்கு நல்லதில்ல. கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ்ல இருந்தவர்ங்கிற முறையில இந்தத் தேக்கம் என் தொழிலை எப்பிடி பாதிக்கும்னு உங்களுக்குப் புரியும்.”
மணிபாரதியின் குரலில் அத்துணை தயக்கம். பவிதரனுக்கு அவருடைய நிலைமை புரிந்தது.
சரியாய் இருபத்தைந்து நாட்கள்! அற்புதமான வேலை அனுபவம் கிடைத்திருந்தது அவனுக்கு. அதை இழப்பது அவனுக்கு மானசீகமாய் மிகப்பெரும் அடி. அதைவிடப் பொருளாதார ரீதியில் அவனுக்கு இது மிகவும் பெரிய நெருக்கடியை உருவாக்கும்.
திருமணமான முதல் நாளே வேலையை இழந்து நிற்கிறான். முதல் முறையாகத் திடுமென வேலையை இழப்பதன் வலியை உணர்ந்தவன் அதை மறைத்தபடி எழுந்தான்.
முயன்று முறுவலித்தவன் மணிபாரதியிடம் மரியாதைப்பூர்வமாகக் கைகுலுக்கினான்.
“உங்க கிட்ட வேலை பாத்ததுல ரொம்ப சந்தோசம் சார். என்னால உங்க நிலமைய புரிஞ்சிக்க முடியுது. உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்பேன். உங்களை நம்பி ஏகப்பட்ட ஸ்டாஃப்ஸ் இருக்காங்க. அவங்க குடும்பங்கள் இருக்கு. என் ஒருத்தனுக்காக நீங்க யாரையும் பகைச்சுக்க வேண்டியதில்ல. நான் கிளம்புறேன்.”
அவனது கையை விட்டபோதே, “சாரி பவிதரன்! ரியலி சாரி,” என்றார் மணிபாரதி.
தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து பைக் சாவியை எடுத்து அவரது மேஜையில் வைத்தவன் புன்னகையோடு விடைபெற்றான்.
அலுவலகத்தை விட்டு வெளியேறியவனின் மனதில் தந்தையும் தர்ஷனும் செய்த துரோகம் உண்டாக்கிய வாதை அதீதமாய்!
தனது நிழலைத் தாண்டி மகன் ‘சர்வைவ்’ ஆகி வாழ்வது அவனது தந்தைக்கு ஈகோவைக் கிளப்புமா? தாய் தந்தை என்றாலே புனிதர்கள் என்று சொல்லிச் சொல்லி அல்லவா இந்தச் சமுதாயம் ஒவ்வொரு குழந்தையையும் வளர்க்கிறது. ஆனால் நிதர்சனத்தில் தாயும் தந்தையும் கூடத் தங்களது வாரிசுகளின் மகிழ்ச்சிக்கு எதிரான ‘டாக்சிசிட்டியை’ மனதில் கொண்டு நடமாடுகிறார்களே!
இதை வார்த்தையால் எழுதுவதைவிட அனுபவத்தில் உணரும்போது அந்த மகனோ மகளோ அனுபவிப்பது வேதனை மட்டுமில்லை, இத்தனை ஆண்டுகள் அந்தத் தாயோ தந்தையோ காட்டிய அன்பும் ஆதுரமும் பொய்யா என்ற சந்தேக எண்ணத்தையும்தான்.
அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவன் தனது பாக்கெட்டிலிருந்து பர்சை எடுத்தான். சில ரூபாய் நோட்டுகள், சில்லறைகள், ஏ.டி.எம் கார்டு, இதர ஆதார அட்டைகளுடன் சிரித்தது ஈஸ்வரியின் புகைப்படம்.
இந்த மாபெரும் துரோகச்சு(சூ)ழலில் அவனுக்குத் துணையாய் இருப்பவள் அவள் மட்டுமே!
அப்படியே நிற்கப் பிடிக்காமல் நடந்தான் பவிதரன். நடந்தே திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தவன், திருவைகுண்டம் மார்க்கமாய்த் திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தான்.
பயணச்சீட்டு வாங்கி இருக்கையில் சாய்ந்தவனின் மொபைலுக்கு ஈஸ்வரியின் மொபைலில் இருந்து வாட்சப் செய்தி வந்திருந்தது.
“எனக்கு வேலை கிடைச்சிடுச்சு! நாளைக்கு வரச் சொல்லிட்டாங்க.”
வாசித்தவனின் இதழ்களில் புன்னகையின் கீற்று!

அவனை அறியாமல் “கங்கிராட்ஸ்” என்று தட்டச்சு செய்தன பவிதரனின் விரல்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

