“பொண்ணுங்களுக்குள்ள ஒரு Defensive mechanism இருக்கும். அந்தத் தற்காப்பு வளையம் அவளுக்குள்ள இருந்தா மட்டும்தான் சமுதாயத்துல அவளை மொய்க்குற ஆபத்தான பார்வைகள்ல இருந்து அவ தன்னைத்தானே பாதுகாத்துக்க முடியும். அந்தத் தற்காப்பு வளையத்தை ஒரே ஒரு ஆணோட நெருக்கத்துல அவளே உடைக்குறது எப்ப தெரியுமா? இவன் என்னைத் தப்பா நினைக்கமாட்டான், இவன் எப்பவும் என்னோட உணர்வுகளை நிராகரிக்க மாட்டான்ங்கிற உறுதியும், அந்த ஆணோட அண்மையில அவளுக்குள்ள வர்ற பாதுகாப்பு உணர்வும் அவளுக்குள்ள ஆக்கிரமிக்குறப்பதான்.”
–ஈஸ்வரி
“நீங்க நல்லா கவனிச்சீங்களா மாப்பிள்ளை? அது நம்ம பவியா?”
நம்ப முடியாமல் கேட்டார் மாணிக்கவேலு. தர்ஷன் சோகமாய் முகத்தை வைத்திருந்தவன் ஆமெனத் தலையசைத்தான்.

“வேலைக்குப் போறான்னு சொல்ல வர்றீங்களா?”
“அவர் போட்டிருந்த ட்ரஸ் ஆபிசுக்குப் போற மாதிரிதான இருந்துச்சு மாமா. ஃபார்மல்ஸ் போட்டுட்டு யாரும் சும்மா ஊர் சுத்த மாட்டாங்களே.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தர்ஷன் சொல்லவும் யோசனையில் ஆழ்ந்தார் மாணிக்கவேலு. பவிதரன் சிகாமணியின் வீட்டில் இருப்பது அவருக்குச் செவிவழிச் செய்தியாக வந்திருந்தது. இதிலென்ன இருக்கிறது என்று அச்செய்தியை ஒதுக்கிவிட்டார்.
செய்தியைச் சொன்னவரிடம், “ஒரு சின்ன உரசல். அதனால என் தம்பி வீட்டுல என் மவன் இருக்குறான். சித்தப்பா வீட்டுக்குப் பிள்ளைங்க போறதுல என்ன ஆச்சரியம் இருக்கு?” என்று கூறிவிட்டார்.
இப்போது வேலைக்குச் செல்கிறான் என்கிறானே மருமகன்.
“நான் வேணும்னா விசாரிக்கட்டுமா மாமா?”
தலையை உலுக்கிக்கொண்டார் மாணிக்கவேலு. நிச்சயம் விசாரித்தாக வேண்டும். மாணிக்கவேலுவின் மகன் யாரிடமோ கைகட்டிச் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான் என்ற செய்தி இந்த வட்டாரத்தில் பரவினால் அது தனது கௌரவத்துக்கே இழுக்கு.
“விசாரிங்க மாப்பிள்ளை.”
அவர் சொன்னதுமே இந்த பதினைந்து நாட்களில் தனது கட்டுப்பாட்டின் கீழ் சிலரைக் கொண்டு வந்து, நாய்க்குப் பிஸ்கெட் போடுவது போல பணத்தை விட்டெறிந்து சில காரியங்களைச் சாதித்துக்கொண்டிருந்தான் தர்ஷன். அதில் ஒருவரிடம் சொல்லி இப்போது பவிதரன் எங்கே வேலை செய்கிறான் என விசாரிக்கச் சொன்னான்.
“இன்னைக்குச் சாயங்காலம் அவரைப் பெருமாள்புரம் பக்கத்துல பாத்தேன். கொஞ்சம் சீக்கிரமா விசாரிச்சுச் சொல்லுப்பா.”
மாமனாரை ஓரக்கண்ணால் பார்த்தபடி இந்தக் கட்டளையை விதித்திருந்தான் அவன். அவர் மனதுக்குள் பொருமிக்கொண்டிருப்பதை அவரது முகமே காட்டிக்கொடுத்தது அவனுக்கு.
இந்தக் குடும்பத்தோடு இணைந்திருந்த இந்தச் சில நாட்களிலேயே இங்குள்ள ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும் ஓரளவுக்குப் பகுப்பாய்வு செய்திருந்தான் தர்ஷன்.
குடும்பத்தலைவரான மாணிக்கவேலுவுக்குத் தனது கௌரவமே பிரதானம். பிள்ளைகளை விட அந்த வெட்டிக் கௌரவத்துக்கு முக்கியத்துவம் தருபவர். மாமியாரான நிலவழகிக்கு ஏதோ நிலவிலிருந்து இறங்கி வந்தது போலக் கர்வம். அதற்குக் காரணம் அவரது கணவர் சேர்த்து வைத்திருக்கும் பணமும் சொத்துகளும். தங்களுக்கு இணையாகப் பணம் படைத்தவர்களை மட்டுமே மதிக்கும் ஓரவஞ்சனையுள்ள குணம்.
அவனது மனைவி மதுமதியிடமும் சிற்சில குறைகள் இருப்பதை அறிந்துகொண்டான். யார் எப்படிப் போனால் என்ன? நான் நிம்மதியாகச் சொகுசாக இருக்கவேண்டும் என்ற மனப்பாங்கு உள்ளவள். தவறே என்றாலும் தனக்கு வேண்டியதை அடைய எந்த எல்லைக்கும் செல்கிறவள் என்பதையும் புரிந்துகொண்டான். அவனை மணந்த பிற்பாடு அவளை வில்லியாக மாற்றக்கூடிய எந்தக் காரியமும் நடந்தேறாததால் சுமுகமாக வாழ்க்கை செல்கிறது.
இந்த மூவரையும் சமாளிப்பது, அவர்களின் மூளையைச் சலவை செய்வது ஒன்றும் அவனுக்குப் பெரிய சவாலாக இல்லை. எதிர்மறையான குணநலன்களை வைத்திருப்பவர்களின் மனதைக் கலைப்பது எளிது. அவர்களுக்கு மனவலிமையும் சுயக்கட்டுப்பாடும் இருக்காது. அதையே கருவியாக வைத்து அவர்களது மனதை மாற்றித் தன் பக்கம் இழுத்திருந்தான் தர்ஷன்.
அவன் விசாரிக்கச் சொன்ன நபர் எப்படியும் காலையில் தகவலோடு வருவார் என்ற நம்பிக்கையோடு அவனது இரவு நகர்ந்தது. மறுநாள் விடியலில் அவனுக்கு நற்செய்தி கிடைத்ததோ என்னவோ பவிதரனுக்குக் கிடைத்தது.
பவிதரன் – ஈஸ்வரியின் திருமணத் தேதியைக் குறிக்க ஜோதிடரைப் பார்க்கச் செல்வதற்காகத் தயாரானார்கள் குழலியும் இளவரசியும். இன்னும் சிறிது நேரத்தில் ஷண்மதியும் வந்துவிடுவாள். அவர்கள் தேதி குறித்ததும் மடமடவெனக் கல்யாண வேலைகளைச் செய்யத் தயாராய் இருந்தார்கள் மலர்விழியும் ஷண்மதியும்.
அவன் வேலைக்குச் செல்ல ஆயத்தமானபோதே அவனுக்காக அரக்கப் பறக்க சமைத்துக் கொண்டிருந்தார் குழலி.
“இன்னைக்கு ஒரு நாள் வெளிய சாப்பிட்டுக்குறேன் சித்தி. ஏன் அவசரமா செய்யுறீங்க? கையைக் காலைச் சுட்டுக்கப் போறீங்க.”
“கையைக் காலைச் சுட்டுக்காமச் சமைக்குறதுங்கிறது ரொம்ப கஷ்டம்யா.” சமையலறையில் இருந்தபடியே குரல் கொடுத்தார் குழலி.
வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குக் கவாத்து செய்துகொண்டிருந்த சிகாமணியின் காதில் இந்த உரையாடல் விழுந்தது. பவிதரன் இப்போது தங்கியிருக்கும் ஜன்னல் வழியே அந்தத் தோட்டம் தெரியும்.
“பாத்தியாய்யா, வெளிய எதுவும் சோலியா போனா என்னை வெளிய சாப்பிட்டுக்கச் சொல்லுவா உன் சித்தி. மவனுக்கு மட்டும் அவதி அவதியா சமைக்குறா பாரு.”
அவர் கிண்டல் செய்யவும், “அவன் வெளிய சாப்பிட்டுப் பழகாதவன். வெளிச்சாப்பாடு ஒத்துக்கலைன்னா என்ன செய்ய?” என்ற குழலியின் குரலில் அத்துணை ஆதுரம்.
பவிதரன் சிரித்தபடியே உடை மாற்றினான். உடை மாற்றிக்கொண்டிருந்தபோதே அவனது மொபைல் இசைத்தது. அதில் ஈஸ்வரியின் பெயர் வருவதற்குப் பதிலாக நிலவழகியின் பெயர் வரவும் கொஞ்சம் தடுமாறினான் அவன். என்ன இருந்தாலும் அவனது பெற்ற அன்னை அல்லவா! ஆயிரம் கோபங்கள், மனஸ்தாபங்கள் இருந்தாலும் தாய் – மகன் என்ற உறவை யாரால் சிதைத்துவிட முடியும்!
அழைப்பை ஏற்றான்.
“நல்லா இருக்கியா பவி? நேரத்துக்குச் சாப்பிடுறியா?” குரல் தழுதழுக்க வினவினார் நிலவழகி.
“நல்லா இருக்கேன். சித்தி எனக்கு வேளாவேளைக்குச் சமைச்சுக் குடுக்குறாங்க. பாசமா பாத்துக்குறாங்க. எனக்கு எதுக்கும் குறைச்சல் இல்ல.” அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்தான் பவிதரன்.
“நீ வேலைக்குப் போறனு மாப்பிள்ளை சொன்னாரு.”
“சொல்லிட்டானா உங்க மருமகன்?” புகைந்தான் அவன். ஏனோ அவனால் தர்ஷனை நல்லவிதமாக நினைக்கவே முடியவில்லை.

“நீ எங்களை விட்டுப் போயிட்டனு நாங்க சும்மா இருந்துட முடியுமா பவி? உன்னைப் பத்தி விசாரிக்கணும்னு நாங்க நினைக்கக்கூடாதா?”
“தாராளமா நினைக்கலாம். இந்த நியூஸ் மட்டும்தான் உங்களுக்கு வந்துச்சா? என் கல்யாணச்சேதி இன்னும் வந்து சேரலையா?” சிடுசிடுவெனக் கேட்டான் பவிதரன். மறுமுனையில் நிலவழகி அவனது இரண்டாவது கேள்வியைக் கேட்டதும் உறைந்து போனார். பெற்ற மகனுக்குத் திருமணம் என்பதை யாரோ ஒருத்தி போலக் கேட்க நேர்ந்தால் எந்தத் தாயும் உறைந்துதானே போவாள்!
தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “என்னய்யா சொல்லுற? கல்யாணமா?” என்று வினவினார்.
“ஆமா! ஈஸ்வரியும் நானும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம். என் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி வைக்க என் அக்காவும் தங்கச்சியும் இருக்காங்க. எனக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல என் சித்தியும் சித்தப்பாவும் இருக்காங்க. கல்யாணத் தேதியை இன்னைக்குக் குறிக்கப் போறாங்க. போதுமா செய்தி?”
முழுவதும் கேட்டதும் நிலவழகிக்குக் கண்ணீரே வந்துவிட்டது. மனம் வலித்தது அவருக்கு.
“இவ்ளோ நடந்திருக்கு. ஒரு வார்த்தை பெத்தவங்க கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோணலையா?” அழுதே விட்டார் அவர்.
பவிதரனும் அந்த இடத்தில் கொஞ்சம் தடுமாறினான் எனலாம். அவரை அழவைக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. ஆனால் தந்தை சொன்ன அனைத்துக்கும் தலையாட்டியது, ஈஸ்வரியின் வீட்டுக்கு வந்து அவர் போட்ட ஆட்டம் எல்லாம் அவனை இறுக்கமாக்கியது.
“தோணலம்மா. இன்னொரு சேதி. மாணிக்கவேலு மகனா என்னை நிராகரிச்ச அதே ஈஸ்வரி இன்னைக்கு வெறும் பவிதரனா என்னைக் கல்யாணம் பண்ணிக்க முழு மனசோட சம்மதிச்சிருக்கா. உங்க சொத்துபத்து, பணம் எதுவும் எனக்கு வருங்காலத்துல வர வாய்ப்பில்லனு கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டுத்தான் அவ பேரண்ட்ஸும் சம்மதிச்சிருக்காங்க. பணத்தைத் தவிர உலகத்துல கொண்டாடுறதுக்கும், மதிக்குறதுக்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கும்மா. என் கல்யாணம் எனக்கு அதைப் புரியவச்சிடுச்சு. ஈஸ்வரியோட நான் வாழுறதை வச்சு நீங்களும் அதைப் புரிஞ்சிப்பீங்க. நிஜமா என் மேல பாசம்னு ஒன்னு இருந்துச்சுனா என் கல்யாணத்துக்கு வந்து என் பொண்டாட்டியையும் என் சொந்தங்களையும் அசிங்கப்படுத்திடாதீங்க.”
சொன்னதும் அழைப்பைத் துண்டிக்கவும் செய்தான். இதற்கு மேல் பேசினால் அவனை அறியாமல் நிலவழகியைக் காயப்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே பாதியிலேயே அழைப்பைத் துண்டித்தான்.
சட்டெனக் கட்டிலில் அமர்ந்தவன் தன்னைச் சமனப்படுத்திக்கொண்டான். அவன் கடினமான முடிவுகளை எடுத்த தருணங்களில் கூடக் கடினமான வார்த்தைகளைப் பேசியதில்லை. இன்று பெற்ற அன்னையிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை வீசியெறிந்திருக்கிறான். எப்படி அவனால் நிதானமடைய முடியும்?
“பவி! இட்லி ரெடி. சாப்பிட வரியாய்யா?” குழலியின் குரல் கேட்டதும் கண்களை அழுந்த மூடித் திறந்தவன், “வர்றேன் சித்தி” என்றபடி உடையைச் சரிசெய்துகொண்டான்.
அடுத்தச் சில நிமிடங்களில் அவன் முன்னே எவர்சில்வர் தட்டு ஒன்றில் ஆவி பறக்க இட்லியும், தேங்காய் சட்னியும் தயாராய் இருந்தன. மடமடவென விழுங்கியவனுக்கு சூட்டோடு விழுங்கிய இட்லி சரியாக உணவுக்குழலில் நெஞ்சு பக்கம் வந்ததும் சுட்டுவிட்டது. கொஞ்சம் காந்தல் எடுத்தது நெஞ்சு. தண்ணீரைக் குடித்தாலும் அந்த எரிச்சல் அடங்கவில்லை. அவன் நெஞ்சைத் தடவிக்கொள்ளவும் குழலி என்னவென விசாரித்தார்.
“ஒன்னுமில்ல சித்தி,” என்றவன் வேகமாகத் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தட்டோடு எழுந்தான். உள்ளே பட்ட சுடுகாயம் எரிந்துகொண்டே இருந்தது அவனுக்கு. அப்படியே வேலைக்குக் கிளம்பியும் விட்டான்.
வேலைக்கிடையே ஈஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது. “நமக்கு இன்னும் ரெண்டே வாரத்துல கல்யாணம்,” என்றவள் துள்ளிக் குதிக்காத குறை.
“இப்ப தான் எல்லாரும் ஜோசியரைப் பாத்துட்டு வந்து உக்காந்திருக்காங்க. அவங்க யாரும் சொல்லுறதுக்கு முன்னாடி நான் சொல்லணும்னு அவசரமா கால் பண்ணுனேன்.” பவிதரனுக்கும் சந்தோசத்துக்குக் குறைவில்லை.
“என்ன பதிலே இல்ல?”
“அதில்லடி! காலைல இட்லிய ரொம்ப சூடா சாப்பிட்டுட்டேன். அது நெஞ்சு பக்கம் சுட்டுருச்சு. ஒரு மாதிரி காந்திக்கிட்டே இருக்கு.”
“அச்சோ! ஃபுட் டியூப்ல சுட்டிருக்கும்னு நினைக்கேன். அப்பிடி ஏன் அவசரமா சாப்பிடணும்?” ஈஸ்வரி கவலையோடு படபடத்தாள்.
“அம்மா கால் பண்ணுனாங்க.” அவனது பதிலில் அவள் அமைதியடைந்தாள். பெற்ற அன்னையிடம் பேசிவிட்டு உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்திருப்பான், அந்த மனநிலையோடு இட்லியின் சூட்டை உணராமல் மென்று தின்னாமல் விழுங்கியிருப்பான். அது உணவுக்குழாயில் நெஞ்சு பக்கம் சுட்டுவிட்டது போல.
“எதுவும் கோபமா உங்களுக்கு?”
“கோவம் இல்ல ஈஸ்வரி. இது மனத்தாங்கல். அப்பா என்னை தர்ஷன் கிட்ட மன்னிப்பு கேக்கச் சொன்னப்ப அவங்களோ மதுவோ ஒரு வார்த்தை மறுத்துப் பேசலடி. இப்ப கால் பண்ணி நல்லா இருக்குறியா சாப்பிடுறியானு விசாரிக்காங்க. எனக்கு இதெல்லாம் நாடகமா தோணுது. எரிச்சல்ல கத்திட்டேன்.”
“சூ! நாடகம்னு சொல்லாதீங்க. எந்த அம்மாவும் மகன் கிட்ட நடிக்கமாட்டாங்க. அவங்க நிஜமான அக்கறையிலதான் பேசிருப்பாங்க. உங்க மனத்தாங்கல் நியாயமானதுதான். நீங்க வீட்டுக்கு வாங்க. அப்புறம் பேசிக்கலாம்.”
மாலையில் அவன் வீடு திரும்பியபோது வீட்டில் யாருமே இல்லை. விளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. அவனது பைக் வரும் சத்தம் கேட்டதும் ஈஸ்வரி ஓடோடி வந்தாள். கையில் ஒரு சொம்பு.
“என்ன இது? எல்லாரும் எங்க போனாங்க?”
“மலரும் ஷண்மதி அக்… மதினியும் பெரியவங்களை மலர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன விவகாரம்னு என் கிட்ட சொல்லலை! சரி! நீங்க கை கால் கழுவிட்டு வாங்க. நான் தேங்காய்ப்பால் எடுத்துட்டு வந்திருக்கேன். இதைக் குடிச்சா வயித்துப்புண்ணே சரியாகிடும். நெஞ்சுல பட்ட புண்ணு ஆறாம போயிடுமா என்ன?”
சொன்னபடியே தன்னிடமிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே போனவளைத் தொடர்ந்து நடந்தான் பவிதரன். அவனது அறைக்குள் போனவனின் முதுகைப் பார்த்தவள் சமையலறைக்குள் போய் தம்ளரை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குள் போனாள்.
சட்டையைக் கழற்றி லுங்கிக்கு மாறியிருந்தவன் அவளைப் பார்த்ததும், “இங்க வச்சிடு ஈஸ்வரி. நான் போய் முகம் கழுவிட்டு வந்துடுறேன்,” என்க சரியெனத் தலையசைத்தவளின் முகத்தில் செந்தூரத் தீற்றல்.
அவனது வெற்று மார்பும், வடிவான புஜங்களும் அவளைத் திணறச் செய்ய போதுமானதாய்!
அவளைக் கடந்து அவன் போன கணத்தில் எம்பிக் குதித்த அவளது இதயம் மீண்டும் கை கால்களைக் கழுவிவிட்டுத் துண்டு ஒன்றில் முகம் துடைத்தபடி வந்தவனைக் கண்டதும்தான் மீண்டும் சரியான இடத்தில் போய் அமர்ந்தது.
பவிதரன் அவளது செந்தூரம் பூசிய கன்னங்களை ரசனையோடு பார்த்தபடி டம்ளரிலிருந்த தேங்காய்ப்பாலைக் காலி செய்தான்.
“ஏலக்காய் போட்டியா?”
“ம்ம்! இல்லனா தேங்காய் பால் எதுக்களிக்கும் (குமட்டும்).” சொன்னபடியே அவனைப் பார்க்காமல் தம்ளரில் மிச்சமிருந்த தேங்காய் பாலையும் ஊற்றினாள்.
“குடிங்க.”
“தலைநிமிர்ந்து பேசுடி சண்டைக்காரி.” கிண்டலாய் ஒலித்த அவனது குரல் இன்னுமே அவளைத் தவிப்பில் ஆழ்த்துவதாய்! சில அடிகள் அவளை நோக்கி வந்தபடியே தம்ளரிலிருந்த மிச்சமீதி தேங்காய் பாலையும் குடித்து முடித்தான் பவிதரன்.
கட்டிலில் இடித்துக்கொண்டவள் சட்டென அமர்ந்துவிட, விலகியவன் அவளது கையிலிருந்த சொம்பை வாங்கிக்கொண்டான்.
“கழுவப் போட்டுட்டு வர்றேன்.” அவன் சென்றதும் தனது தலையில் நறுக்கெனக் குட்டிக்கொண்டாள் ஈஸ்வரி.
“மூஞ்சிய பாத்தா என்னடி உனக்கு?” தன்னைத் தானே திட்டிக்கொண்டாள் அவள். அவள் திட்டும்போதே உள்ளே வந்தவன் டீசர்ட் ஒன்றை அணிந்துகொண்டான். மெதுவாகத் தலையையும் பார்வையையும் உயர்த்தினாள்.
“இப்ப நெஞ்சு எரிச்சல் பரவால்லையா?”
“ம்ம்! கொஞ்சம் பரவால்ல,” என்றபடி அவளருகே அமர்ந்தவன் நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டான்.
“இங்கயா சுட்டுச்சு?” டீசர்ட்டின் மேல் கை வைத்து வினவினாள் அவள்.
“ம்ம்! காந்துது.” நெஞ்சுக்குள் எறும்பு கடிப்பது போல வலித்ததை முகத்தில் காட்டினான் பவிதரன். மெதுவாக வருடிக்கொடுத்தவள் குனிந்து டீசர்ட்டின் மேலே முத்தமிடவும் செய்தாள். மெல்லிதழ்களின் ஈரம் டீசர்ட்டைக் கடக்கவில்லை என்றாலும் அந்த இதழ்கள் கொடுத்த முத்தத்தின் அதிர்வுகள் பவிதரனின் உடலெங்கும் பரவுவதாய்!

“இனிமே வலிக்காது,” என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க பவிதரனின் பார்வை தடுமாறியது. தடம் மாறியது. எந்த மெல்லிதழ்கள் அவனது நெஞ்சில் பட்ட புண்ணுக்கு முத்த மருந்திட விரும்பியதோ அதே மெல்லிதழ்களில் அவனது பார்வை அழுத்தமாகப் பதிவதாய்!
அவள் இருந்த நிலையில், அவனது விழிகளின் தீட்சண்யம் அவளை மூழ்கடித்த தருணத்தில், பவிதரன் அவளது இதழை நெருங்கியபோதே ஈஸ்வரியின் மொபைல் இசைத்தது.
“முத்தாரமே! முத்தாரமே!
தள்ளாடுதே! என் நெஞ்சமே!
காதல் எனும் நோய் வந்ததே!
இன்னும் ஏன் சந்தேகமே!”
சைந்தவியின் குரல் செவிகளை வருடியதும் கண்களின் கருவிழிகள் விரிய, வெட்கம் மின்சாரமாய் உடலுக்குள் பரவ, சட்டென விலகிக்கொண்டாள் ஈஸ்வரி. அவளது விலகலில் பவிதரனின் முகத்தில் ஏமாற்றத்தின் வரிகள் தோன்றுவதாய்!
எழுந்து நின்றவள் குழந்தையைக் கொஞ்சுவது போல அவனது இரு கன்னங்களையும் இழுத்து, “முதலாளிக்கு எல்லாத்துலயும் அவசரம்!” என்று சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து மொபைலோடு ஓடி மறைந்தாள்.
அவளது கரத்தின் ஸ்பரிசம் பதிந்த கன்னத்தைத் தனது கையால் தடவிக்கொண்ட பவிதரனின் முகம் மந்தகாசப் புன்னகையை ஏந்திக்கொண்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

