“சைக்காலஜில ‘The Jar Concept’-னு ஒன்னு உண்டு. கிட்டத்தட்ட இது ஒரு மெட்டாஃபர் (Metaphor-உவமை) அது. நீங்க ரொம்ப அழுத்தமான ஆளா இருந்தீங்கனா நீங்க சந்திக்குற மனுஷங்க, அவங்க குடுக்குற உணர்வுகள், உங்களோட கோபம், அழுகை, ஆத்திரம், இயலாமைனு எல்லாத்தையும் உங்களுக்குள்ள மறைச்சு வச்சுப்பீங்க. இதை ‘Emotional Suppression’-னு சொல்லுவாங்க. மனசை ஒரு கண்ணாடி ஜார் மாதிரி நினைச்சு அதுக்குள்ள இத்தனை உணர்ச்சிகளையும் பூட்டி வச்சிடுவீங்க. ஒரு கட்டத்துல அந்த ஜாடி நிரம்பிடும். அப்ப உங்களால மேற்கொண்டு எந்த அழுத்தத்தையும் தாங்கிக்க முடியாது. அந்த நேரத்துல உங்களுக்கு ஆதரவா ‘நான் இருக்கேன்டா உனக்கு’னு ஒருத்தர் வந்து நின்னா, அந்த ஒருத்தர் உங்களுக்கு எல்லாவுமா மாறிடுவாங்க. ஈஸ்வரி எனக்கு அப்படித்தான் எல்லாவுமா ஆகிப்போயிருக்கா. இனி அந்த ஜாருக்கான தேவை எனக்கு இல்ல.”
-பவிதரன்
“இங்க பாருங்க மாமா! இந்தக் கல்யாணத்துல எந்தக் குறையும் இருக்காது. நான் எவ்ளோவோ சொல்லியும் உங்க மக கோவில்ல சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கிட்டா போதும்னு சொல்லிட்டா. நீங்க அவளுக்கு இதைச் செய்யுங்க அதைச் செய்யுங்கனு நான் கேக்கமாட்டேன். என் தம்பிக்கு நல்ல துணையா அவ இருப்பா. அது போதும்.”
ஷண்மதி கறாராய்ப் பேச இளவரசிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் இன்னும் தயக்கம் தீரவில்லை. மலர்விழியையும் சிவகாமியையும் அவர்கள் பார்க்க இருவரும் புன்னகைத்தார்கள். மலர்விழியின் மாமியார் சிவகாமி அனுபவஸ்தர் ஆயிற்றே!
“உங்க தயக்கத்துக்குக் காரணம் புரியுது. இந்தக் கல்யாணம் எப்பவும் சிறுபிள்ளை வெள்ளாமையா ஆகாது. பெரியவங்க நம்ம பாத்து அவங்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்குறோம். யாரும் இதுக்குக் குறுக்க வரமாட்டாங்க,” என்றார் அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாய்.
இளவரசி வாய் திறந்தார். “அதில்லங்க அக்கா, மாப்பிள்ளையோட அப்பா அம்மாக்குச் சொல்லாம இப்பிடிக் கல்யாணம் பண்ணுறது நல்லா இருக்காதே. என்ன இருந்தாலும் அவங்க பெத்தவங்க.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அதுக்கேத்த மாதிரி அவங்க நடந்துக்கலத்தை. என் தம்பிய வீட்டை விட்டு அவங்க அனுப்பி இன்னையோட பதினைஞ்சு நாளாகுது. அவன்கிட்ட போன் இருக்கு. என்கிட்டவும் இருக்கு. ஒரு கால், ஒரு மெசேஜ் வந்துச்சா? எங்க போனான், என்ன செய்யுறான்னு ஒரு வார்த்தை கேக்கலத்தை. அவங்களுக்கு இளைய மருமகன்தான் இப்ப முக்கியமா படுறான். இருக்கட்டும்.”
“வயசுல பெரியவங்க ஷண்மதி,” தட்சிணாமூர்த்தி சொல்ல,
“வயசுல பெரியவங்கனா அவங்களுக்குத்தானே பெருந்தன்மை இருக்கணும் மாமா?” என்று சொல்லி அவரது வாயை அடைத்தாள் ஷண்மதி.
மலர்விழி பேசுமாறு தனது அன்னைக்குக் கண் காட்டினாள். அதைப் புரிந்துகொண்ட குழலியும் இளவரசியிடம் ஆதுரமாகப் பேசினார்.
“இங்க பாருங்க மதினி. பவிய என் மகன்னு நினைச்சுக்கோங்க. நினைக்குறது என்ன? அவன் என் மகன்தான். யாரும் உங்களை எதுவும் பேசமாட்டாவ. நான் பேசவும் விடமாட்டேன்,” என்றவர், “ஏட்டி இங்க வா! மதி, நீ அவ தலையில பூ வை. இன்னைக்கு நாம கல்யாணத்தை உறுதி பண்ணிடுவோம். கல்யாணத்துக்கு நாளைக்கு நாள் குறிச்சிடலாம்,” என்றார்.
ஈஸ்வரி முகமெல்லாம் ஜொலிக்க ஓடோடி வரவும், “இன்னைக்கே கல்யாணம் இல்ல ஆத்தா. நீ மெதுவாவே வா,” என்று கிண்டல் செய்தபடியே அவளது தலையில் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தைச் சூடினாள் ஷண்மதி.

நாத்தனார் கேலி இப்போதே ஆரம்பித்துவிட கையோடு தான் கொண்டு வந்த வளையல்களை அவளது கரத்தில் போட்டுவிட்டாள்.
ஈஸ்வரி வேண்டாமெனச் சொல்வது எப்படியெனத் தெரியாமல் திகைக்கும்போதே வளையல்கள் அவளது கரத்தில் ஏறியமர்ந்து கொண்டன.
“எதுக்கு ஷண்மதி இப்பவே?”
“என் தம்பிக்கு இவதான் பொண்டாட்டி. அந்த உரிமைல நான் போட்டு விடுறேன்.”
ஈஸ்வரி அவளை அக்காவென விளிக்கப் போக அதற்குள் முந்திக்கொண்டார் சிவகாமி. “இங்க பாருடி, அக்கா அக்கானு சொல்லுறதை நிறுத்து. மதினினு சொல்லிப் பழகு,” என்றார் கிண்டலாய்.
மலர்விழி மட்டும் தட்சிணாமூர்த்தியிடம் தனியே சென்று பேசினாள். “ஏன் மாமா யோசனைல இருக்குறீங்க?”
“அம்மா அப்பா மனசு நொந்தா நல்லா இருக்காதுல்ல மலர்?”
“உண்மைதான் மாமா. ஆனா அதுக்கு அந்தப் பெத்தவங்க மனசு நல்ல எண்ணங்களால நிரம்பியிருக்கணும்.”
“புரியுதுல…”
“அப்ப சந்தோசமா இருங்க. பவியண்ணா உங்களைச் சிரமப்படுத்தாம கல்யாணத்தை முடிச்சிடணும்னு நினைக்குறார். கல்யாணத்தைச் சிம்பிளா பண்ணுனா போதும்னு ஈஸ்வரி நினைக்குறா. நீங்க முழு மனசோட கல்யாணத்தை நடத்தி வைங்க. இவ்ளோ பேரோட ஆசீர்வாதம் அவங்க ரெண்டு பேரையும் நல்லா வாழவைக்கும் மாமா.”
மலர்விழி நிதானமாய் எடுத்துரைக்க தட்சிணாமூர்த்தியின் மனபாரம் சற்று குறைந்தாற்போல இருந்தது.
அதே நேரம் பெருமாள்புரம் ஏ காலனி பகுதியில் கட்டிடம் கொஞ்சம் மேலெழும்பியிருந்தது. அங்கே ஆட்கள் பரபரப்பாய் வேலை செய்வதை மேற்பார்வையிட்டபடி நின்று கொண்டிருந்தான் பவிதரன்.
வெயில் கொஞ்சம் அதிகம்தான். சின்னதாக அருகே ஒரு ஷெட் (Shed) போட்டிருந்தார்கள். அங்கே போய் அமருமாறு மேஸ்திரி கேட்டுக்கொண்டாலும் பவிதரன் நகரவில்லை. ஒரு பக்கம் சிமெண்ட் நிரம்பிய இரும்புச் சட்டிகளைத் தலை மேல் தூக்கிக்கொண்டு செல்லும் ஆட்கள், இன்னொரு பக்கம் அந்தச் சிமெண்ட் கலவையைச் செங்கற்களுக்கு இடையே நிரப்பிப் பூசும் ஆட்கள்! அவர்களைக் கவனித்தபடி நிற்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
சரியாக அந்நேரத்தில் அவனது மொபைல் இசைக்க தொடுதிரையில் ஈஸ்வரியின் பெயரைக் கண்டதும் உற்சாகத்தோடு அழைப்பை ஏற்றான்.
“கல்யாணப்பேச்சு முடிஞ்சுதா?” விசாரித்தவனின் குரலில் இருந்த சந்தோசத்துக்குச் சிறிதும் குறைவில்லாத சந்தோசம் ஈஸ்வரியிடமும்.
“நான் உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் வாட்சப்ல. அதை நீங்க பாக்கல. அதான் கால் பண்ணுனேன்,” என்றாள் அவள்.
“அப்பிடியா? கொஞ்சம் இரு.”
வாட்சப்பைத் திறந்து பார்த்தவன் அதில் வளைகரத்தின் படத்தை அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்தவனின் இதழ்களில் முறுவல். “ரொம்ப அழகா இருக்கு.”
“ஷண்மதிக்கா போட்டு விட்டாங்க.”
“அக்காவா?”

ஈஸ்வரி நறுக்கென நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“சின்ன வயசுப் பழக்கம்.”
“சீக்கிரம் மாத்திக்க,” அவன் அமர்த்தலாய்ச் சொல்லவும் சரியென்றாள்.
“நமக்குக் கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க. உங்க அக்கா எனக்குப் பூ வச்சு வளையல் போட்டுவிட்டுட்டாங்க. முதலாளி என்ன தருவீங்க எனக்கு?”
உரிமையாய் ஈஸ்வரி கேட்க அவளது பேச்சிலிருந்த உரிமையே பவிதரனின் இதயத்தை மயிலிறகாய் வருடுவதாய்!
“ஐஞ்சடி பத்தங்குலத்துக்கு எழுபத்தைஞ்சு கிலோ வெயிட்ல என்னையவே நான் உனக்குத் தரப்போறேன். அதை விட வேற என்ன வேணும் சண்டைக்காரிக்கு?”
அவனது சீண்டலில் ஈஸ்வரியின் முகத்தில் அவளையறியாது வந்து ஒட்டிக்கொண்டது நாணம். செந்தூரமாய்க் கன்னங்கள் பூசிக்கொண்ட நாணத்தில் பெண்கள் பேரழகாய் ஜொலிப்பார்கள். ஈஸ்வரி மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆனால் நாணம் வந்தால் அதனோடு உடல் சில இயக்கங்களுக்கு உட்படும். உணர்ச்சிகளை உணரும் லிம்பிக் சிஸ்டம் மூளையில் அதிகமாய் வேலை செய்வதால் மொழிக்கும் சிந்தனைக்கும் காரணமான ஃப்ராண்டல் கார்டெக்ஸ் தற்காலிகமாக வேலைநிறுத்தம் செய்யும். ஒரு பெண்ணின் நாணம் அவளுக்குள் உடலியல் ரீதியாக இத்தகைய மாற்றங்களை உண்டாக்கிவிடும். எப்பேர்ப்பட்ட பெண்ணும் இதைத் தவிர்க்க முடியாது என்கையில் ஈஸ்வரி எம்மாத்திரம்?
அதே நேரம் அதிகம் பேசாத இன்ட்ரோவெர்ட் (Introvert) ஆணுக்கோ வேறுவிதமாய் உடலும் மூளையும் செயல்படும். காதலிக்கும் பெண்ணுடன் பேசும்போது அவனுக்குச் சுரக்கும் டோபமைனும், லவ் ஹார்மோனான ஆக்சிடோசினும் அவனை அப்பெண்ணுடன் அதீதமாய் நெருக்கமாக்கிவிடுகிறது. உடலின் இறுக்கங்கள், புதியவர்களிடம் உண்டாகும் தடைகள் யாவும் நேசிப்பவளிடம் மட்டும் விடைபெற்றுவிடும் அவனுக்கு.
பவிதரன் ஈஸ்வரியிடம் மட்டும் அதிகமாய் அதீதமாய் நெருங்குவதன் ரகசியமே இதுதான். என்ன வேண்டுமெனக் கேட்கத் தெரியாமல் அவள் தவிக்க அவனோ அவள் வாய் திறந்து கேட்டால் உலகையே அவளுக்காக ஜெயிக்கத் தயாராய் இருந்தான்.
“ஏதாச்சும் சொல்லுடி.”
“ம்ம்! இதெல்லாம் சொன்னாதான் தெரியுமா?”
“பின்ன? சாட்ஜிபிடியே நாம பேசுறதை வச்சுதான் நம்ம டிமாண்ட் என்னனு தெரிஞ்சிக்குமாம். அப்பேர்ப்பட்ட ஏ.ஐ-க்கே ஒரு ஆள் பேசுனாதான் அவருக்கு வேண்டியதைக் குடுக்க முடியும். நான் சாதாரண மனுசன்.”
“இந்த விளக்கமெல்லாம் யாருக்கு வேணும்? எனக்கு என்ன வாங்கி குடுத்தா நான் இம்ப்ரெஸ் ஆவேன்னு நீங்களே கெஸ் பண்ணி வாங்கிட்டு வாங்க. க்ளூ வேணும்னா தர்றேன். இதுக்கு அதிகமா காசு செலவளிக்க வேண்டாம். செல்ஃப் லைஃப் ரொம்ப கம்மியான கிப்ட். இவ்ளோ தான் க்ளூ.”
“இதெல்லாம் ஒரு க்ளூனு… அநியாயம் பண்ணுறடி சண்டைக்காரி.”
“அப்பிடித்தான் பண்ணுவோம். கல்யாணத்துக்கு அப்புறம் இதை விட ஆயிரம் மடங்கு அநியாயமா நடந்துப்பேன். அதையும் நீங்கதான் தாங்கிக்கணும். என்ன? தாங்கிப்பீங்கதானே?”
“உன்னையும் நீ செய்யுற, செய்யப்போற எல்லா அநியாயத்தையும் நான் தாங்கிப்பேன்டி. இன்னும் ஒரே ஒரு க்ளூ குடேன்.”
“சொல்லமாட்டேன்! நீங்களே யோசிச்சு வாங்கிட்டு வாங்க.” ராகமாய்ப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
பவிதரனுக்கு அன்று மாலை வரை எந்த யோசனையும் வரவில்லை. விலை மலிவு என்கிறாள். அதே நேரம் ஆயுட்காலம் குறைவானப் பரிசு என்றும் சொல்கிறாள். என்னவாக இருக்கும்?
யோசித்தபடியே மாலையில் சைட்டிலிருந்து கிளம்பினான் பவிதரன். போகிற வழியில் எண்ணற்ற காட்சிகள் கண்களில் பட்டன. எல்லாம் வழக்கமானக் காட்சிகள்தான். ஆனாலும் இன்று ஏனோ ஊன்றிக் கவனிக்கத் தோன்றியது அவனுக்கு.
அவனது கண்களுக்குத் தப்பிய ஒரு காட்சி அந்தப் பக்கம் காரில் கடந்து போன தர்ஷன் மட்டுமே! அவனது மேலாண்மையின்கீழ் இருக்கும் மேரு பில்டர்ஸ் கட்டுகிற புதிய வணிக வளாகத்தின் கட்டுமானம் பெருமாள்புரத்தில்தான் நடக்கிறது. அதை மேற்பார்வையிட வந்தவனின் பார்வையில் பைக்கில் செல்லும் பவிதரன் பட்டுவிட்டான்.
அவனது தோற்றமே சும்மா வெளியில் சுற்றுகிறான் என்ற எண்ணத்தை உருவாக்கவில்லை. அலுவலகத்துக்குச் செல்பவனின் தோற்றத்தைக் கண்டுகொண்டவன் “இவனுக்கு எவன் வேலை குடுத்திருப்பான்?” என்ற யோசனையோடு ரங்கநல்லூருக்குக் காரில் சென்று கொண்டிருந்தான். இது குறித்து விசாரிக்க வேண்டுமென மனதில் குறித்துவைத்துக் கொண்டான்.
அதே நேரம் பவிதரனின் பார்வையில் பட்டதோ ஆங்காங்கே தென்பட்ட பூக்கடைகள். சிலர் நின்று பூ வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவனின் செவிகளில் ஈஸ்வரி கொடுத்த ‘க்ளூக்கள்’ ரீங்காரமிட்டன.
‘விலை அதிகமிருக்காது; செல்ஃப் லைஃப் கம்மி.’ விடை கிடைத்துவிட்டது.
உற்சாகமாய் பூக்கடைக்காரரிடம் பூ வேண்டுமென வினவினான்.
“என்ன பூ வேணும்பா?”
“தலையில வைக்குற பூ.” பாவம்! அனுபவமில்லாத வேலை அல்லவா!
“தலையில வைக்குறதுக்கு நிறைய பூ உண்டு தம்பி. மல்லி, பிச்சி, கதம்பம், இது கனகாம்பரம். என்ன வேணும் உனக்கு?”
பவிதரன் கண்களை இறுக மூடி யோசித்தான். மேரு பில்டர்சில் பணியாற்றிய காலகட்டத்தில் வெள்ளிக்கிழமை என்றால் தவறாமல் ஈஸ்வரியின் பின்னலில் பூச்சரம் இருக்கும். அவள் ஏதேனும் கோப்பில் கையெழுத்து வாங்க வருவாள். அவள் வந்து போன ஐந்து நிமிடங்களுக்கு பவிதரனின் அலுவலக அறையே மலரின் நறுமணத்தில் மூழ்கியிருக்கும். அந்த வாசனையை நினைவு கூர்ந்தவன் அங்கே நீளமான மலர்களோடு நெருக்கமாய்க் கோர்த்து வைக்கப்பட்டிருந்த பிச்சி சரத்தைக் காட்டினான்.
“அதுதான்.”
பூவை வாழையிலையில் வைத்துக்கட்டி நீட்டினார் பூக்கடைக்காரர். இதை மட்டும் வாங்கிக்கொண்டு போனால் குழலி அவனைக் கேலி செய்வார். இப்போதெல்லாம் சித்திக்குப் பார்வை கூர்மையாய் வேலை செய்கிறது என்று நினைத்தவன் சாமி படங்களுக்குச் சிறிய அரளிப் பூச்சரமும், சித்திக்கு மல்லிகைச் சரமும் சேர்த்தே வாங்கிக்கொண்டான்.
வாங்கிக்கொண்டு பைக்கில் அமர்ந்தவன் உற்சாகமாய் நதியூருக்கு வந்து சேர்ந்தான். வந்ததும் “கை கால் அலம்பிட்டு வா பவி. காபி போடுறேன்,” என்ற குழலியிடம் பூச்சரங்கள் இருந்த பாலிதீன் கவரைக் கொடுத்தான்.
“சித்தி இதுல சாமி படத்துக்குச் சரம் இருக்கு. உங்களுக்கும்.” குழலி அவனைக் குறும்பாய் பார்த்தவர் “அந்த இலையில என்ன இருக்கு?” என்று வினவ சன்னப் புன்னகை பவிதரனின் வதனத்தில்.
“ஈஸ்வரிக்கு…” என்றவன் முடிக்கும் முன்னரே தலையாட்டினார் அவர். “சரி சரி! இதை எப்பிடி குடுக்கப் போற அவகிட்ட?” “தெரியல சித்தி!”
கொஞ்சம் இரு என்று சைகை காட்டியவர் தனது வீட்டின் முன்வாயில் திண்ணையில் நின்றபடி “மதினி என் மருமவளைக் கொஞ்சம் அனுப்பிவிடுறியளா?” என்று சத்தமாய் கத்த அந்தத் தகவல் தவறாமல் இளவரசியின் செவிகளை அடைந்தது.
“என் சின்னக்கா மவன் திருச்செந்தூர் போயிட்டு இலை விபூதி கொண்டு வந்தான். சில்லுக்கருப்பட்டி அவளுக்குப் பிடிக்குமே! அனுப்பிவிடுங்க.”
பவிதரன் தனது சித்தி சரளமாய்ப் பொய் சொல்வதைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய் பொத்திச் சிரித்தான். “சித்தி அவ வீட்டுக்குப் போனதும் இலை விபூதி எங்கனு கேப்பாங்களே!”
“அதெல்லாம் இருக்குய்யா. மலர் மாமியார் இன்னைக்குக் காலையில வந்தாவல்ல. ரெண்டு நாளுக்கு முன்னாடி குடும்பத்தோட திருச்செந்தூர் போயிட்டு வந்தப்ப நமக்கும் சேர்த்து இலை விபூதி சில்லுக்கருப்பட்டி எல்லாம் வாங்கிட்டு வந்தாவ. அது இருக்கு. அதைக் குடுத்துட்டா போச்சு.”
பவிதரன் அவரது புத்தி சாதுரியத்தைப் பாராட்டும்போதே “சில்லுக்கருப்பட்டி எங்கத்தை?” என உற்சாகமாய் வந்து நின்றாள் ஈஸ்வரி.
“வந்ததும் என்னட்டி சில்லுக்கருப்பட்டி? என் மவன் இப்பதான் வந்திருக்கான். காபி போட்டுட்டு எடுத்துத் தாரேன்,” என மெதுவாக அவர் கழன்றுகொள்ள இருவரும் மட்டும் தனியே அறையில் நின்றிருந்தார்கள் எதிரெதிரே!
ஈஸ்வரி சுடிதார் துப்பட்டாவைச் சுழற்றியபடியே உள்ளங்கையை அவனிடம் விரித்துக் காட்டினாள். “எங்க என் கிப்ட்?”

பவிதரன் அதிகம் பேசாமல் பூச்சரம் இருக்கும் இலையை அவளது கையில் வைத்தான். “பூவா?” கேட்டபடியே இலையைப் பிரித்தவள் அதில் அவளுக்குப் பிடித்த பிச்சிப்பூ இருக்கவும் கூடுதலாய் பூரித்தாள்.
அவளுக்கு மல்லியை விட பிச்சி மீது அதீதக் காதல். எப்படி இவன் கண்டறிந்திருப்பான் என்று யோசித்தபடியே “அத்தை அப்பிடியே ஹேர்பின் இருந்தா குடு” என்று கேட்டாள்.
“அந்த ஜன்னலோரம் இருக்கும்டி.”
குழலி வருவதாய் இல்லை. ஜன்னல் பக்கம் இருந்த கொண்டை ஊசிகளை எடுத்துப் பூவைச் சூடிக்கொண்டவள், “எனக்குப் பிச்சிப்பூ பிடிக்கும்னு எப்பிடி தெரியும் முதலாளிக்கு?” என்று வினவ,
“வெள்ளிக்கிழமை ஆச்சுனா உன் பின்னல்ல பிச்சிப்பூ தவறாம இருக்கும். என் ஆபிஸ் ரூமுக்குள்ள நீ வந்தா என் பார்வை உன்னை மட்டும்தானே சுத்தி வரும். இந்தப் பூ மட்டும் என் பார்வைக்குத் தப்புமா?” என்றான் அவன் தலையைச் சரித்துப் பார்த்தவனாய்.
தொடர்ந்து “பிடிச்சிருக்கா கிப்ட்?” என்று கேட்க “ரொம்ப்ப்ப்ப்ப” என்றாள் ஈஸ்வரி மனம் நிறைந்து. அவளது கரத்தில் இருந்த வளையலை வருடிவிட்டவன் அவளது கையைப் பிடிக்க வரவும் “ச்ச்! அத்தை வருது” என்று முட்டைக் கண்களை உருட்டி எச்சரித்தாள் அவள்.
சொன்னபடியே வந்தார் குழலி. கையில் காபி டபராவில் ததும்பிக் கொண்டிருந்தது. ஈஸ்வரியின் தலையிலிருந்த பிச்சிப்பூ அவருக்கு மனநிறைவைக் கொடுத்தது.
“எங்க சில்லுக்கருப்பட்டி?”
“இந்தா எடுத்துத் தாரேன்.”
அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த குத்துவிளக்கின் பக்கத்தில் இலை விபூதியும் சில்லுக்கருப்பட்டியும் இருந்தன. அவற்றை எடுத்து ஈஸ்வரியிடம் கொடுத்தவர் அவளது கன்னத்தை வருடினார் ஆதுரத்தோடு.
“என்னத்தை கண்ணு கலங்குது?” கிண்டலாய்க் கேட்டவளிடம் “க்கும்! உன் கண்ணுக்குத் தப்புமா எதுவும்?” என்று போலியாகச் சலித்துக்கொண்டார்.
ஒரு கையால் அவளது முகத்தைத் தாங்கியவர் இன்னொரு கையால் பவிதரனின் கரத்தைப் பிடித்துக்கொண்டார்.
“இதே போல எப்பவும் சந்தோசமா இருக்கணும். காசு பணம் இல்லனா கூட பரவால்ல. புருசனுக்குப் பொண்டாட்டியும் பொண்டாட்டிக்குப் புருசனும்தான் காலத்துக்கும் துணை. உன் மாமாவ கட்டிக்கிட்ட அப்புறம் நான் படாத துன்பமா? ஆனா அந்த வெள்ளந்தி மனுசன் ஒரு நாள் கூட என்னைக் கண் கலங்க விட்டதில்ல. நாங்க ஒன்னா கஷ்டப்பட்டோம். காலம் கடந்து போனாலும் இன்னைக்கு ஒன்னா சௌக்கியமா வாழுறோம். கஷ்டப்பட்ட காலத்துல எங்க கிட்ட என்ன இருந்துச்சோ இல்லையோ, நிறைய அன்பு இருந்துச்சு. இன்னைக்கு அதுதான் சுலபத்துல கிடைக்காது ஈசு. நிறைய சங்கடத்துக்கு நடுவுல உங்க கல்யாணம் நடக்கப்போவுது. அதை மனசுல வச்சுக்கிட்டு புத்தியோட பிழைச்சுக்கணும் ரெண்டு பேரும்.”
இருவரும் சரியெனத் தலையசைத்தார்கள்.
குழலிக்கு இருக்கும் பெருங்கவலை மாணிக்கவேலு! உடன்பிறந்த சகோதரனை ஏய்த்தவர்! கௌரவத்துக்காகப் பெற்ற பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பியவர்! அத்துணை எளிதில் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். கூடவே அவர் சோதனைகளைக் கொடுக்கவும் தயங்கமாட்டார். அதை எதிர்கொள்ளும் தைரியத்தை ஈஸ்வரிக்கும் பவிதரனுக்கும் அந்தச் செந்திலாண்டவன்தான் கொடுக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார் குழலி.
அவரது கலக்கத்தை உண்மையாக்கும் வண்ணம் மாணிக்கவேலுவின் வீட்டில் கலகத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருந்தான் தர்ஷன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

