“சாதகமான சூழல்ல எல்லாம் நல்லவிதமா நடக்குறப்ப ஒருத்தருக்குத் துணையா இருக்குறதைவிட, அவங்க சங்கடத்துல இருக்குறப்ப துணையா நிக்குறதுதான் முக்கியம். அதை எத்தனை பேர் செய்ய முன்வருவாங்க? ஆதாயமில்லாம பழகுறவங்க இப்ப குறைவு. பழக்கத்துக்கு மட்டுமில்ல, காதலுக்கும் நட்புக்கும் இது பொருந்தும்.”
-ஈஸ்வரி
பவிதரன் காரை விரட்டிய வேகத்தில் கொஞ்சம் பயந்துதான் போய் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி. வீட்டுக்குள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையை மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
இதுபோல அவனது கார் அதிவேகத்தில் சாலையில் செல்வதைச் சில நேரம் அவளும் கவனித்திருக்கிறாள். அப்போதெல்லாம் பவிதரனின் கார் எந்த அசம்பாவிதத்திலும் சிக்கிக்கொள்ளக்கூடாதெனக் கடவுளிடம் வேண்டிக்கொள்வாள்.
இப்போதும் அதே போல வேண்டிக்கொண்டாள்.
எங்கே போகிறோம்? ஏன் இந்த வேகம்? இப்படி எந்தக் கேள்விகளும் இல்லை ஈஸ்வரியிடம். துயரத்தில் இருப்பவர்களுக்குத் தேவை தர்க்கரீதியான கேள்விகளும், ஆறுதல்களும் இல்லை. உணர்வுரீதியாய் ‘உன்னுடன் நான் இருக்கிறேன்’ என்ற பிணைப்பு மட்டுமே! அதை அவளால் பவிதரனுக்குக் கொடுக்க முடியுமே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கார் போய் நின்ற இடம் பெருங்குளத்தின் அதே மூன்று சாலைகள் சந்திக்குமிடம். இம்முறை பவிதரன் காரை ஆலமரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளேயே அமர்ந்துவிட்டான்.
மாயக்கூத்தர் கோவிலின் கோபுர விளக்கும் சாலையோர விளக்குகளும் ஆரஞ்சுவண்ண ஒளியை அந்த இடத்தில் பரவ விட்டிருந்தன.
சில நிமிடங்கள் அமைதி காத்தவள் மெதுவாக அவனது புஜத்தைத் தொட்டாள்.
“இப்ப உங்களுக்குப் பரவால்லையா?”
அந்தக் கேள்வியில் அவள் பக்கம் திரும்பியவனின் விழிகளில் கண்ணீர் பளபளத்தது. முதல் முறையாக வாழ்க்கையில் ஒரு ஆண் கண் கலங்குவதைப் பார்த்திருக்கிறாள்.
“என்னைத் தப்பா நினைச்சிடாத.”
ஏன் என்று ஈஸ்வரி கேட்பதற்குள் அவளது வலது தோளில் முகம் மறைத்துச் சாய்ந்துகொண்டான் பவிதரன். கரம் என்னவோ ஆதரவுக்கு அவளது கரத்தைத் தேடிப் பிடித்துக்கொண்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளது துப்பட்டா அவனது கண்ணீரைச் சுமக்கவும்தான் பவிதரன் அழுவதே ஈஸ்வரிக்குத் தெரிந்தது.
ஏனென்று தெரியவில்லை. காரணமும் கேட்கவில்லை. ஆனால் அவளது கண்ணீர் சுரப்பிகளும் வேலை செய்ய ஆரம்பித்தன.
கண்களை இறுக மூடிக்கொண்டவள் அவன் அழட்டுமென விட்டுவிட்டாள்.
சில நொடிகள் நிமிடங்களாக நீண்டு பவிதரனின் வேதனையும் ஆற்றாமையும் கண்ணீரில் கரைய, கண்களைத் திறந்தாள் ஈஸ்வரி.
இடக்கரத்தால் அவனது மோவாயைப் பற்றி முகத்தைத் தன்பக்கம் திருப்பியவள், “என்னதான் ஆச்சுங்க?” என்று மென்மையாய்க் கேட்க,
“எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லவா? இல்ல எல்லாத்தையும் பிடுங்கிட்டுத் துரத்திட்டாங்கனு சொல்லவா? புரியல ஈஸ்வரி,” என்றான் அவன்.
ஈஸ்வரிக்கு அதிர்ச்சி! எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அவனது குடும்பத்தில் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி அவர்களை அவன் உதறியதில்லை. அவர்கள் செய்த தவறைக் கூடச் சரிசெய்து, குடும்பத்தினரையும் தனது பேச்சாலும் நியாயபுத்தியாலும் கட்டிப் போட்டவன். இப்போது மட்டும் என்னவாயிற்று?
“ஏன்?” கண்களில் தனது தேடலுக்கான ஏக்கத்தோடு கேட்டாள் ஈஸ்வரி.
“தர்ஷன்! அவனை நான் அறைஞ்சிட்டேன்.”
“அதுக்குத் தகுதியான ஆள்தான் அவன். ராமசாமியண்ணனும் அந்தப் பசங்களும் அவ்ளோ கெஞ்சுனாங்க. கொஞ்சம் கூட அவன் மனசு இரங்கல. அதோட…”
“அவன் உன்னைப் பத்தி தப்பா பேசுனான்.”
பவிதரனின் குரலில் இம்முறை ஆத்திரம் குடியேறியிருந்தது. ஈஸ்வரியின் கண்களில் மெல்லிய ஆச்சரியம். கூடவே கொஞ்சம் குற்றவுணர்ச்சியும்.
“நான் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு வந்தவ. எனக்காக ஏன்…”
“அதுக்காக நான் உன்னைக் காதலிச்சது இல்லனு ஆகிடுமா? காதலோ நட்போ முறிஞ்சாலும் சம்பந்தப்பட்ட நபரைத் தேவையில்லாதவங்கனு ஒதுக்கிட முடியாது ஈஸ்வரி. ஏதோ ஒரு விசயத்தால ஈர்க்கப்பட்டுத்தானே காதல்ல விழுறோம். அதை ஒருத்தர் வேண்டாம்னு மறுத்த காரணத்தால அந்த ஈர்ப்பும், காதலிச்சப்ப அவங்க மேல வச்ச மரியாதையும் மாறிடுமா?”
காதலி ஏதோ ஒரு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்தால் அவளை ‘slut shame’ செய்வது, அவளுக்குச் சாபங்களை வாரி வழங்கி அவளை ‘வில்லியாகச்’ சித்தரிப்பது போன்ற காரியங்களைச் செய்யும் ஆண்களை மட்டுமே கொண்டதல்ல இந்தச் சமூகம்.
பிரிந்தாலும் காதலுக்கும் காதலிக்குமான மரியாதையை உறுதி செய்யும் பவிதரன் போன்ற ஆண்களும் ஆண் இனத்தில் அடக்கம்.
ஈஸ்வரிக்கு அவன் சொன்னபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் அவனே உடைந்திருக்கிறான், அவன் முன்னிலையில் கண்ணீர் விட்டு அவனது துயரத்தை இன்னும் வேதனைக்குரியதாக மாற்றவும் அவள் விரும்பவில்லை.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“அடுத்து என்ன செய்யப்போறிங்க?”
“இப்போதைக்கு என் படிப்பு, என் பேங்க் பேலன்ஸ், என்னோட கார் – இதுதான் எனக்குனு இருக்குற உடைமைகள். இது கூட இல்லாத எத்தனையோ பேர் சொந்தக்கால்ல நின்னிருக்காங்க. அட்லீஸ்ட் எனக்கு இதெல்லாம் ப்ரிவிலெஜா கிடைச்சிருக்குனு சந்தோசப்படுறேன்.”
ஈஸ்வரியின் முகத்தில் புன்னகையின் சாயல்!
“நல்லா பேசுறிங்க.”
“சிலர் கிட்ட மட்டும்தான் எந்தக் கால்குலேசனும் இல்லாம பேச முடியும். அதுல நீயும் ஒருத்தி.”
“இதையே உங்கப்பா கிட்ட பேசிச் சூழ்நிலையைப் புரியவச்சிருக்கலாமே?”
பவிதரன் கொஞ்சம் இளகியிருந்தான். இந்தக் கேள்வி வந்ததும் அவனது உடல் இறுகிவிட்டது.
“சொல்லிப் புரியவைக்குற நிலைமைய அவர் தாண்டிட்டார். இன்னொரு விசயம், அவரோட மக வாழ்க்கை செட்டில் ஆயாச்சு. இனி இந்த ஊர்ல யாரும் அவரைக் கேலி பேசப் போறதில்ல. பேரண்ட்சுக்கு மகள்களைச் செட்டில் பண்ணுறதுல இருக்குற அக்கறையில பாதிகூடப் பசங்களோட எதிர்காலத்துல இருக்காது. ஆம்பளை பையன் தானே! பொழைச்சுப்பான்னு சின்னதா ஒரு அலட்சியம். என் விசயத்துல அதுகூட வெறுப்பையும் சேர்த்துக்க. எங்க இருந்து அவருக்குப் புரியவைக்குறது?”
வாஸ்தவம்தான்! சும்மாவே தலைக்கனம் பிடித்த மனிதர் மாணிக்கவேலு. இப்போது ஈஸ்வரியை வைத்தே பிரச்சனை வந்திருக்கிறது. கௌரவம் கௌரவமென மாய்பவருக்குத் தனது நிலையைவிடக் குறைந்த இடத்தில் பெண் எடுப்பதை அவமானமாகக் கருதுவார்.
மகன் வேறு எச்சரிக்கவும், தனது செயல்களுக்கு ஒத்தூதும் மருமகன் அவருக்கு நல்லவனாகத் தெரிகிறான்.
“கார் எப்பவும் வீடா ஆகிடாதுல்ல,” அக்கறையாய் சொன்னவள் அவனது கையைப் பிடித்தாள்.
முதல் முறை அவளே விரும்பி கரம் பிடிக்கிறாள். அதுவே பவிதரனுக்குப் பெரும் ஆறுதல்.
“சிகாமணி மாமா வீட்டுக்கு வாங்க. அவங்க இருக்காங்க உங்களுக்கு.”
“சித்தப்பாக்கு என்னால சிரமம் எதுக்கு? இதனால அப்பாவோட விரோதத்துக்கு அவர் ஆளாவார் ஈஸ்வரி.”
“உங்கப்பாக்கு ரெண்டு கொம்பும் ஒரு வாலும் முளைச்சிருக்கா? அவருக்கு ஒருத்தர் வேண்டாம்னா எல்லாருக்கும் அந்த ஆளு வேண்டாதவரா போயிடுவாரா? சொன்னதைக் கேளுங்க. அங்க வாங்க. உங்க கிட்ட படிப்பும் அனுபவமும் இருக்கு. அதை வச்சு ஒரு வேலையைத் தேடுங்க. முதலாளியா இருந்து பழகுனவருக்கு இன்னொருத்தர்கிட்ட வேலை பாக்குறது சங்கடமாதான் இருக்கும். ஆனா கொஞ்சநாள் இந்தச் சங்கடத்தைச் சகிச்சுக்கோங்க.”
“அப்புறம்?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.”
பவிதரன் ஒரு நொடி அதிர்ந்தான். பின்னர் ‘என்ன பேச்சு இது’ எனும் பாவனையில் அவளைப் பார்த்தான்.
“நான் சீரியசா பேசுறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்,” ஆணித்தரமாக அவள் சொல்லவும்தான் ஈஸ்வரி விளையாடவில்லை என்பதே பவிதரனுக்குப் புரிந்தது.
இருக்கையில் சாய்ந்தவன் காரின் மேற்பகுதியில் கண்களைத் திருப்பினான்.
“தங்குறதுக்கு வீடு கூட இல்லடி என் கிட்ட.”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.”
“விளையாடாத ஈஸ்வரி. நீ என்னை ரிலாக்ஸ் ஆக்குறதுக்காகப் பேசுறனு புரியுது. ஆனா வேண்டாம்.”
“நான் சீரியசாதான் பேசுறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சும் ஏன் தவிர்க்குறிங்க? நான் உங்களை அவாய்ட் பண்ணுனதுக்குப் பழி வாங்குறிங்களோ?”
“ப்ச்! இவ ஒருத்தி,” சின்னதாய் ஒரு சலிப்பு அவனிடம்.
சட்டென அவள் பக்கம் திரும்பினான்.
“என் கிட்ட வேலை இல்ல. நீ என்னைக் கல்யாணம் பண்ணுனா நாம தங்குறதுக்கு ஒரு ஓட்டுவீடு கூட இல்ல. காரையும் என் பேங்க் பேலன்சையும் என்னால கரைச்சிட முடியாது. எனக்குனு ஒரு கனவு இருக்கு. அதுக்கான முதலீடா இதெல்லாம் எனக்கு வேணும். இந்தச் சூழ்நிலைல நான் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது?”
“நீங்க வச்சுருக்குற காசுல ஒரு பட்டுப்புடவையும் தாலியும் வாங்குனா எத்தனை கோடி குறைஞ்சிடப்போகுது?”
அவளிடமும் எரிச்சல் பரவியது. சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறானே என்ற எரிச்சல்.
“சொத்துபத்து வீடு இல்லனாலும் நிலையான வேலை மட்டும் இருந்தா கூட உன் அப்பா கிட்ட என்னால வந்து பேச முடியும். எதுவுமே இல்லாம…”
“அதனாலதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொல்லுறேன். இப்ப நீங்க வெறும் பவிதரன். மாணிக்கவேலு நிலவழகியோட மகன்ங்கிற அடையாளம் உங்களுக்கு இல்ல. நான் தவிர்க்க நினைச்சது அவங்க மகனைத்தான். பவிதரனா உங்களை எப்பவுமே நான் விலகணும்னு நினைச்சதில்லங்க,” என்றவள் ஆதரவாய் அவனது கரத்தைப் பற்றியபோது கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன.
“தேஜு பாப்பாக்குப் பேர் வைக்குற ஃபங்சன்ல மிருணாளினி அக்கா ஒன்னு சொன்னாங்க. பவிதரனைப் புரிஞ்சிக்காத ஆளுங்க மத்தியில அவரைத் தனியா விடுறோம்ங்கிற வருத்தம் உனக்கு இல்லையானு கேட்டாங்க. என்னால அப்ப பதில் சொல்ல முடியல. உங்கம்மா பேசுனதுக்கு அப்புறம் உங்களைத் தனியா அவங்க கிட்ட விட்டுட்டு வந்துட்டேன்னு குழலி அத்தை கிட்ட நான் அழுதேன். இப்ப நீங்க எனக்கு மறுபடி கிடைச்ச மாதிரி இருக்கு. வெறும் பவிதரனா, என்னோட பவிதரனா எனக்கு நீங்க கிடைச்சிருக்கிங்க. இப்ப உங்களுக்கு ஒரு துணை தேவை. அது நானா மட்டும்தான் இருக்கணும். புரிஞ்சிக்கோங்க.”
அழுகை எட்டிப் பார்த்த குரலில் குழந்தைக்குச் சொல்லிப் புரியவைப்பது போல ஈஸ்வரி பேச, பவிதரனுக்கு அவளது அக்கறையே மூச்சை அடைத்தது.
அவனது மௌனமே அவளுக்குச் சம்மதமாய்த் தோன்றியது.
“பெருசா மண்டபம் பார்த்து ஆடம்பரமா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்ல. எனக்கு அந்த ஆசையுமில்ல. சின்னதா ஒரு கோவில்ல வச்சு தாலி கட்டுனா கூட போதும். எங்கப்பாக்கும் செலவும் குறையும்.”
ஓரக்கண்ணால் பார்த்தபடி அவள் இவ்வாறு சொல்லவும் பவிதரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“சண்டைக்காரி, கணக்கு போட்டுக் காய் நகர்த்துற.”
“எனக்குப் பதில் வேணும்.”
பவிதரன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“உங்கப்பா அம்மா சம்மதிச்சா எனக்கும் சம்மதம்.”
“இது போதும்! அவங்களை நான் சம்மதிக்க வைப்பேன். நீங்க காரை நதியூருக்கு விடுங்க. சிகாமணி மாமா வீட்டுல இருங்க. அவங்களுக்கு ஆம்பளை பிள்ளை இல்லயேங்கிற குறைய உங்களால தீர்க்க முடியும். அவங்க உங்களை எப்பவும் பாரமா சிரமமா நினைக்கமாட்டாங்க. இன்னொரு விசயம், எப்ப சொத்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துச்சோ அப்பவே உங்கப்பாவுக்கும் சிகாமணி மாமாக்கும் ஒட்டாம போயிடுச்சு. சோ புதுசா எந்த விரோதமும் முளைக்கப் போறதில்ல.”
பவிதரனுக்கும் ஈஸ்வரியின் பேச்சு சரியாகவே தோன்றியது.
காரைக் கிளப்பினான் நதியூருக்கு. காரில் பயணிக்கிறபோதே மலர்விழியின் எண்ணுக்கு வாட்ஸப் செய்தாள் ஈஸ்வரி.
மாணிக்கவேலுவின் குடும்பம் அன்றைய தினம் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
“பவி அண்ணாவ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ. நாளைக்கு நாங்க வர்றோம் அங்க. அப்பிடி எல்லாம் ஒன்னுமில்லாம அவரைப் பெரியப்பா வெளிய அனுப்பிட முடியாது,” என்றாள் மலர்விழி வாட்ஸப்பில்.
“அவருக்கு இப்ப சொத்து, தொழில் எதுவும் தேவையில்ல மலர். அவருக்குத் துணையா நாலு நல்ல மனுசங்க வேணும். அந்த நல்ல மனுசங்க நீயும் உன் புகுந்த வீட்டாளுங்களும் தான். நாளைக்கு வாங்க. பேசிக்கலாம்.”
அவள் படபடவெனத் தொடுதிரையில் தட்டச்சு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தவன் “யார் கிட்ட இவ்ளோ மும்முரமா சாட் பண்ணுற?” என வினவினான்.
“மலர் கிட்ட.”
“போச்சு போ! ஏன் இப்பவே அவ கிட்ட சொல்லி…”
“இதெல்லாம் எங்க ஃப்ரெண்ட்சுக்குள்ள நடக்குற விசயம்.”
பின்னர் பவிதரன் ஏன் பேசப்போகிறான்?
கார் நதியூரில் சிகாமணியின் வீட்டின் முன்னே வந்து நின்றது.
சிகாமணியும் குழலியும் திண்ணையில் அமர்ந்து ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரில் அன்றைய தினம் நடந்த அனைத்தும் அவர்களுக்குத் தெரியும், பவிதரன் வீட்டை விட்டு வெளியேறிய துயரத்தைத் தவிர.
அதை இப்போது ஈஸ்வரி சொல்லிவிடக் குழலிக்கு மனம் தாங்கவில்லை.

“இங்க வர ஏன் யோசிக்குற? இது உன் வீடுய்யா. உன் இடத்துல வேற யார் இருந்திருந்தாலும் உன் சித்தப்பனை ஏய்ச்சிருப்பாங்க. நீ இவருக்கு உரிமையான சொத்தை மீட்டுக் குடுக்க உதவுனவன். சொத்தே இல்லனாலும் நீ எங்களுக்கு மகன் தானே? வயசான காலத்துல தனியா கிடக்கோமேனு நினைக்காத நாளில்ல. நீ வந்ததே எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு,” என்ற குழலி அவனை வீட்டுக்குள் அழைத்துப் போனார்.
சிகாமணி ஈஸ்வரியையும் அழைக்க, “எங்கம்மா என்னைத் தேடும் மாமா. நீங்களும் அத்தையும் அவங்களைப் பாத்துக்கோங்க. அவங்க இன்னைக்கு முழுக்க சாப்பிட்ட மாதிரி தெரியல. சாப்பிட வைங்க. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்றாள்.
“சரில!”
சிகாமணியும் வீட்டுக்குள் செல்ல பெருமூச்சும் மனபாரம் அகன்ற நிம்மதியுமாய் தங்கள் வீட்டுக்கு நடந்தாள் ஈஸ்வரி.
திடுமென வாட்ஸப்பில் செய்தி வரவும் மொபைலைப் பார்த்தாள்.

“எனக்குத் துணையா இருந்ததுக்கு தேங்க்ஸ்.”
பவிதரன்தான் அனுப்பியிருந்தான்.
சிரித்தபடியே, “இருந்ததுக்கு மட்டும்தானா? இருக்கப்போறதுக்கும் சேர்த்துச் சொன்னா சந்தோசப்படுவேன்,” என்று பதிலுக்கு அனுப்பிவைத்தாள் அவள்.
அவனது பதிலாய் வந்தது என்னவோ கை கூப்பும் எமோஜி தான்! ஒரேயடியாக அவனுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பாதவள் “குட் நைட்! நல்லா சாப்பிட்டுத் தூங்குங்க” என்று அனுப்பிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

