மாணிக்கவேலு, நிலவழகி, சகுந்தலா எனப் பெரியவர்கள் ஆடிப்போக மதுமதியோ தனது கணவனைத் தமையன் அடித்துவிட்டானே என்று தீப்பிழம்பாய் வெடித்தாள்.
“இன்னொரு வார்த்தை ஈஸ்வரிய பத்தி தப்பா பேசுன, பேசுறதுக்கு நாக்கு இருக்காது உனக்கு.”
இந்த எச்சரிக்கை தர்ஷனுக்கும் மட்டுமானது இல்லை என்று தோன்றும்விதமாய் பவிதரனின் கோபச்சிவப்பு பூசிய விழிகள் அவனது குடும்பத்தினர் அனைவரையும் அக்னியாய்ச் சுட்டெரித்தது.
மதுமதி வேகமாய் வந்து தனது கணவனை விலக்கி நிறுத்தினாள் தமையனிடமிருந்து.
“நீ எப்பவுமே மாறமாட்டல்ல? அடுத்தவங்களுக்கு ஏந்தி பேசி வீட்டாளுங்களை அசிங்கப்படுத்துறதை எப்பவுமே நீ விடமாட்டல்ல?” கேட்டவளின் விழிகளில் பரிபூரண வெறுப்பு!
கிட்டத்தட்ட அவளது மனநிலையையே பிரதிபலித்தார்கள் நிலவழகியும் மாணிக்கவேலுவும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீங்க தப்பு பண்ணுனா அதை நான் வேடிக்கை பாத்துட்டு நிக்கணுமா மது?” பவிதரனும் சீறினான்.
“அடேங்கப்பா! நாங்க எல்லாம் கேடுகெட்டவங்க, நீ ஒருத்தன் தான் நல்லவன். அப்பிடித்தானே? சித்தப்பாவுக்காக அப்பாவ அவமானப்படுத்துன. அந்த மலர்விழிக்காக அம்மாவ அவமானப்படுத்துன. யாரோ ஒருத்தி அந்த ஆதிரா. அவளுக்காக நீ என்னை அவமானப்படுத்துன. இப்ப ஒன்னுக்கும் வழியில்லாத ஒருத்திக்காக என் புருஷனை அசிங்கப்படுத்துற. என்ன மனுசன் நீ? நீ நல்ல மனுசனா இருக்கலாம். ஆனா மோசமான மகன்! உன்னை மாதிரி ஒரு அண்ணன் எந்தப் பொண்ணுக்கும் வாய்ச்சிடக்கூடாது.”
அழுகையோடு வெடித்தாள் மதுமதி. தர்ஷன் அங்கே நடப்பதற்காக வருத்தப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்குக் கொண்டாட்டம்தான்!
‘அண்ணனும் தங்கையும் முதலில் அடித்துக்கொள்ளட்டும். பின்னர் அப்பனும் மகனும் அடித்துக்கொள்வார்கள்.’
தர்ஷனின் காத்திருப்புக்குப் பலனாய் மாணிக்கவேலு வாய் திறந்தார்.
“மருமகன் மேல கை வைக்குறது என்ன பழக்கம்? வீட்டோட மாப்பிள்ளையா அழைச்சுட்டு வந்து அசிங்கப்படுத்துறோம்னு நினைக்கமாட்டாரா?”
பவிதரன் பேசவில்லை. அவனுக்கு தர்ஷனை அடித்ததில் எந்த வருத்தமும் இல்லை.
“அவர் கிட்ட மன்னிப்பு கேளு பவி,” இது நிலவழகி.
இப்போதுதான் பவிதரனின் உடல் இன்னும் இறுகிப்போனது.
“உழைக்குற வர்க்கத்து மக்கள் மேல இல்லாதப் பழிய போட்டு போலீஸ் கிட்ட மாட்டிவிட்டிருக்கான் உங்க மருமகன். அது போதாதுனு ஈஸ்வரியைப் பத்தி அசிங்கமா பேசுறான். இவன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணுமா? ஹான்!” என்று உறுமினான் அன்னையிடம்.
அவனது உறுமலில் நிலவழகியின் கண்களில் பயத்தின் ரேகைகள்!
“கேக்கணும். கேட்டுத்தான் ஆகணும். ஏன்னா அவர் நம்ம மதுவோட வீட்டுக்காரர். ஏதோ ஒரு கழுதைக்காக..” மாணிக்கவேலுவின் பேச்சு பாதியில் நின்றது.
காரணம் பவிதரன் அவரது முகத்தின் முன்னே எச்சரிப்பது போல கை ஓங்கியிருந்தான்.
“ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா வந்தாலும் நல்லா இருக்காது.”
மாணிக்கவேலு ஆடிப் போய்விட்டார். நிலவழகியும் மதுமதியும் அதிர சகுந்தலா ஒருவர் மட்டுமே அவனை அமைதியாய் இருக்குமாறு வேண்டிக்கொண்டார்.
“இன்னைக்கு எதுவுமே நல்லதா நடக்கல தம்பி. ஆனா நீங்க பொறுமையானவர். கொஞ்சம் நிதானமா…”
“இல்ல அத்தை. இன்னைக்கு என் முதுகுக்குப் பின்னாடி நடந்த ரெண்டு சம்பவமும் என் குடும்பத்தாளுங்க எப்பிடிப்பட்டவங்கனு எனக்குக் காட்டிக் குடுத்துடுச்சு. ஒவ்வொரு தடவையும் இவங்களுக்காக, இவங்க செஞ்ச தப்புக்காக நான் சபை முன்னாடி சொந்தக்காரங்க கூனி குறுகி நின்னிருக்கேன். இவங்க செஞ்ச பாவத்துக்குப் பிராயசித்தம் தேடி நான் ஓடியிருக்கேன். ஆனா இவங்க யாருக்குமே நான் முக்கியமானவனா தெரியல. என் ஸ்டாஃப்ஸ் எப்பிடிப்பட்டவங்கனு எனக்குத் தெரியும். என்னைக் கேக்காம என் கம்பெனி விவகாரத்துல மூக்கை நுழைக்குற அதிகாரத்தை யார் உங்க மகனுக்குக் குடுத்தது அத்தை? வரம்பு மீறி நடந்தது உங்க மகன். அவர் ஒரு பொண்ணைப் பத்தி தப்பா பேசுறார். அந்தப் பொண்ணு என்னோட மனசுல இன்னும் இருக்கா. எப்பவும் இருப்பா. அவளைத் தப்பா பேசுறதைக் கேட்டுட்டு நான் சும்மா இருக்கணுமா?”
பொறுமையும் அழுத்தமும் கொண்டவனின் இந்த ஆவேசம் வீட்டையே அதிர வைத்தது.
சம்பந்தியும் மருமகனும் இருக்கும்போது மகன் கை ஓங்கிவிட்டானே என்ற ஆத்திரத்தில் மாணிக்கவேலு கண் மண் தெரியாமல் வசைபாட ஆரம்பித்தார்.
“உன் கம்பெனியா? அங்க இன்னும் நான் தான் அதிகமா ஷேர் வச்சிருக்கேன். அதை மறந்துடாத. இப்ப நினைச்சாலும் என் பங்கு எல்லாத்தையும் மருமகனுக்கு எழுதி வைப்பேன். உன்னை ஒரு அணா கூட இல்லாம தெருவுல தள்ள என்னால முடியும். அப்பனுக்கு மரியாதை தராத புள்ளை இருந்தா என்ன? ஒழிஞ்சா என்ன?”
மாணிக்கவேலுவும் மதுமதியும் வாய் திறந்து பேசிவிட்டார்கள். நிலவழகி பேசாமல் அமைதியாய் இருந்து அவர்களின் பேச்சு சரியென அவனுக்குத் தோன்ற வைத்தார். பவிதரனுக்கு அங்கேதான் மனம் விட்டுப் போனது.
“இப்ப மருமவன் கிட்ட மன்னிப்பு கேக்கப்போறியா இல்லையா?”
பவிதரன் நிமிர்வாய் கொஞ்சம் திமிராய் அவரைப் பார்த்தான்.
“முடியாது,” என்றான் அழுத்தமாய்.
“பவி…” நிலவழகி குறுக்கிட்டார்.
“பேசாதிங்கம்மா! நீங்க ஈஸ்வரி வீட்டுல என்னவெல்லாம் பேசுனீங்கனு எனக்குத் தெரியும்,” என அவரது வாயை அடைத்தான்.
“மருமவன் கிட்ட மன்னிப்பு கேளு. உனக்கேத்த ஒருத்திய நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடத்துல தேடி நாங்க கட்டி வைப்போம். கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடும்ப கௌரவத்தைக் காப்பாத்து. ஊருக்கு நல்லவனா இருந்தது போதும். இனி பெத்த அப்பன் ஆத்தாக்கு நல்லவனா இரு.”
“நீங்க சொன்ன எதையும் என்னால செய்யமுடியாது.”
ஸ்திரமாய் பதில் வந்தது பவிதரனிடமிருந்து.
“அப்ப நீ இந்த வீட்டுல இருக்க முடியாது. என் பேச்சைக் கேக்காதவங்க மகனோ மகளோ யாரா இருந்தாலும் இந்த வீட்டுல என் சொத்துல என் தொழில்ல அவங்களுக்கு உரிமை கிடையாது. இப்பவே வீட்டை விட்டு வெளிய போ. ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க, இனி உனக்குனு எந்த ஆபீஸும் இல்ல. சொல்பேச்சு கேக்காத மவன் கிட்ட ‘நம்ம இரத்தம்’னு அசிங்கப்படுறதை விட என் மனசறிஞ்சு நடந்துக்குற மருமவன் கிட்ட என் தொழிலை குடுக்குறதை நான் சந்தோசமா நினைக்குறேன்.”
தர்ஷன் வலித்த கன்னத்தைத் தடவியபடி பவிதரனைக் கீழ்க்கண்ணால் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது நடந்துவிட்டது அல்லவா!
பவிதரன் மாணிக்கவேலுவை ஊன்றிப் பார்த்தவாறு “இந்த வீடு, தொழில், சொத்து இதெல்லாம் விட எனக்கு என்னோட சுயம் முக்கியம்,” என்று சொன்னவன் விறுவிறுவெனத் தனது அறைக்குப் போனான்.
திரும்பி வந்தவனின் கையில் ஒரு கோப்பு மட்டும் இருந்தது.
“இதுல இருக்குறது என்னோட அகாடெமிக் சர்டிபிகேட்ஸ். உங்க கம்பெனில நான் வேலை பாத்ததுக்கு வந்த சம்பளத்தைப் போட்டு வச்சிருக்குற பேங்கோட பாஸ்புக் இது. இதை மட்டும்தான் எடுத்துட்டுப் போறேன். இனிமே இங்க நான் வரமாட்டேன். யார் வந்து கூப்பிட்டாலும் இந்த வீட்டுல இனிமே என் காலடி படாது.”
வைராக்கியமாய் உரைத்தவன் அவர்கள் யாரையும் பார்க்க விருப்பமில்லாமல் வெளியேறினான்.
அவன் போய் வெகுநேரமாகியும் வரவில்லையே என்று காருக்குள் காத்திருந்த ஈஸ்வரி கையில் கோப்போடு பவிதரன் வந்து காருக்குள் அமரவும் “என்னாச்சு?” என மெதுவாய் விசாரித்தாள்.
முகம் மாறிப்போனது பவிதரனுக்கு.

குரல் கரகரக்க “என் கூட ஒரு இடத்துக்கு வருவியா?” என்று கேட்டான்.
ஈஸ்வரியால் அந்தக் குரலை மறுக்க முடியவில்லை.
“ம்ம்”
கார் உடனே அங்கிருந்து விரைந்தது.
பவிதரனின் கார் அங்கிருந்து செல்வதை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு நின்றார்கள் மதுமதியும் நிலவழகியும். இனி அவன் இங்கே வரவே போவதில்லை என்ற உண்மையை அறியுமளவுக்கு இப்போது அவர்களின் மனங்களில் தெளிவில்லை.
என் கணவனை அறைந்துவிட்டானே என்ற ஆத்திரம் மதுமதிக்கு. பெற்ற தகப்பனிடம் கை ஓங்கிவிட்டானே என்ற கோபம் நிலவழகிக்கு.
இந்த ஆத்திரமும் கோபமும் வடிந்து ‘பவிதரன் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?’ என்று அவர்கள் வேதனைப்படப்போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

