“உங்க கிட்ட அதிகமா பணம் புழங்குதுனா உங்க மூளைல Empathyஐ உணர வைக்குற பகுதியோட வேலை குறையும்னு ஆய்வுகள் சொல்லுது. அதனால தான் பணம் படைச்சவங்க பொருளாதாரத்துல தங்களை விட கீழ்நிலைல இருக்குறவங்களை மோசமா நடத்துறப்ப அவங்களுக்குக் குற்றவுணர்ச்சியே வர்றதில்ல போல”
–ஈஸ்வரி
நிலவழகி காலையிலேயே பரபரப்பாக இருந்தார். ஏன் என்று புரியாமல் மதுமதி குழப்பத்தோடு அவரைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
வெள்ளித் தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ கூடவே ஏதோ நகைப்பெட்டி எல்லாம் எடுத்து வைத்திருந்தார்.
“என்ன மசமசனு நிக்குற? போய் நல்லதா சேலை ஒன்னை எடுத்துக் கட்டு. தலையை பின்னல் போட்டு பூ வச்சுக்க” என்று அவளை விரட்டினார்.
மாணிக்கவேலு மனைவியின் செயல்பாடுகளில் உள்ள வித்தியாசத்துக்கான காரணம் புரியாமல் குழப்பத்தோடு செய்தித்தாளில் மூழ்கியிருந்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பவிதரன் சற்று முன்னர்தான் அலுவலகத்துக்குக் கிளம்பியிருந்தான். அவன் கிளம்பியதும் இந்தக் கூத்தை ஆரம்பித்துவிட்டார் நிலவழகி.
பெண்கள் இருவரும் கிளம்பியதும் செய்தித்தாளை மடித்துவைத்து விட்டு நிமிர்ந்தார்.
“எங்கதான் கிளம்புற அழகி?” கணவர் கேட்கவும் நிலவழகி புன்னகைத்தார்.

“எல்லாம் நல்ல காரியமாதான். திரும்பி வர்றப்ப நல்லச்சேதியோட வருவேன்.”
இப்போதும் மாணிக்கவேலுவின் குழப்பம் தீர்ந்தபாடில்லை.
“என்னமோ சொல்லுற. போயிட்டு வா” என்று சொல்லி வழியனுப்பிவைத்தார்.
அம்மாவும் மகளும் காரிலேறினார்கள்.
“நதியூருக்குக் காரை விடு” நிலவழகி ஓட்டுனருக்குக் கட்டளையிட மதுமதியோ திகைத்தாள்.
“அங்க ஏன்மா போறோம்?”
“உன் அண்ணனுக்குப் பொண்ணு பாத்திருக்கேன். இன்னைக்குப் பூ வச்சிடலாம்னு ஜோசியர் சொன்னார். அதுக்குத்தான் போறோம்.”
“என்ன?” மதுமதி திகைத்துப்போனாள். தமையன் ஈஸ்வரியைக் காதலிக்கிறான். அதில் அவன் பிடிவாதமாய் இருக்கிறான். ஆனால் அன்னை அவனுக்குப் பெண்ணே பார்த்துவிட்டார்.
அதிர்ச்சி வடிவதற்குள் நதியூரும் வந்துவிட்டது.
“நம்ம தட்சிணாமூர்த்தி வீட்டுக்குப் போ.”
இப்போது இரட்டை அதிர்ச்சி மதுமதிக்கு. ஈஸ்வரியை மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாதென அண்ணனிடம் வாதாடிவிட்டு இப்போது அவளது வீட்டுக்கே ஏன் போகவேண்டும்?
கார் ஈஸ்வரியின் வீட்டு முன்னே நின்றது.
நிலவழகி காரிலிருந்து இறங்கி ஒரு தாம்பளத்தை எடுத்துக்கொண்டு மதுமதியிடம் இன்னொன்றை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.
“ம்மா! நீ என்ன பண்ணுற?” அவரிடம் இரகசியம் பேசினாள் அவள்.
“நான் ஒன்னு செஞ்சா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் மது. வாயை மூடிக்கிட்டு நான் சொல்லுறதை மட்டும் செய்டி.”
திடுமென நிலவழகி காட்டமாய்க் கட்டளையிடவும் முகம் சுணங்க தாம்பளத்தை எடுத்துக்கொண்டாள் அவள்.
இருவருமாய் சேர்ந்து தட்சிணாமூர்த்தியின் வீட்டுக்குள் வந்தார்கள்.
“மூர்த்தியண்ணே! இருக்கியளா வீட்டுல?” நிலவழகியின் குரலில் அத்துணை உற்சாகம்.
அவர் அழைத்தது என்னவோ தட்சிணாமூர்த்தியை. ஆனால் வந்ததோ ஈஸ்வரி. அலுவலகம் கிளம்பத்த் தயாராகி ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு வந்தவள், வீட்டின் நடுக்கூடத்தில் கைகளில் தாம்பளங்கள் சகிதம் நிலவழகியும் மதுமதியும் நிற்பதைக் கண்டதும் திகைத்துப் போனாள்.
“அட! சம்பந்தி வருவார்னு பாத்தா மருமகளே வந்துட்டா” நிலவழகி பூரிப்போடு அவளது மோவாயைக் கிள்ளி முத்தமிட, மதுமதிக்கு இதயமே வெடித்தது இந்தக் காட்சியில்.
அவரது கணீர் குரலைக் கேட்டு இளவரசியும் தட்சிணாமூர்த்தியும் நடுக்கூடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நிலவழகியும் மதுமதியும் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
“என்ன விவகாரம்மா? நீங்க வீடு தேடி வந்திருக்கிங்க” தட்சிணாமூர்த்தி பதபதைத்து விட்டார்.
நிலவழகியின் முகத்தில் பணச்செருக்கு குடியேறியது அந்தக் கணத்தில்.
ஒரு நபரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை எப்போதும் அவரது எதிரிக்குச் சாதகமாகிவிடும். தன்னை விட வசதியில் பல படிகள் மேலே இருக்கும் நிலவழகி தனது வீட்டில் வந்து நின்றதே தட்சிணாமூர்த்தியின் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டப் போதுமானதாய் இருந்தது!
“எல்லாம் நல்ல விசயமாதான் வந்திருக்கோம்ணே” என்றவர் எள்ளலான தொனியில், “என்னடா இவ அண்ணன்னு சொல்றாளேனு அதிர்ச்சியா இருக்குதா? நாம சம்பந்தி ஆகப்போறோம்ணே. அப்ப முறைய சரியா சொல்லி கூப்பிடணும்ல?” என்றார்.
தட்சிணாமூர்த்தியும் இளவரசியும் குழப்பத்தில் ஆழ்ந்தபோதே நிலவழகியின் எள்ளல் தொனியைக் கண்டுகொண்ட ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தாள்.
“எங்க வீட்டுல வந்து ட்ராமா பண்ண வேண்டிய அவசியம் என்ன இருக்கு?”
மதுமதி சீற்றத்தோடு ஏதோ சொல்ல வர அவளைக் கையமர்த்தினார் நிலவழகி.
“சூ! அமைதியா இருடி. என்ன இருந்தாலும் நாளை பின்ன உன் மதினியாகப் போறவ. என் மருமவ. கொஞ்சம் கோவக்காரி. அப்பிடித்தான் பேசுவா” என்று நிறுத்திவிட்டு ஈஸ்வரியைத் தலை முதல் கால் வரை துச்சமாய் பார்த்தார்.
“கோவத்தோட சேர்த்து கொஞ்சமாவது ரோசம் இருக்கும்னு எதிர்பார்த்தேன். த்சூ! உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகளுக்கு அதெல்லாம் இருக்காதுனு நீ புரியவச்சிட்ட மருமவளே.”
இது போதாதா ஈஸ்வரியைக் கொதிப்படையச் செய்வதற்கு? நிலவழகி எதிர்பார்த்தது போலவே அவளது முகம் கோபத்தில் சிவந்தது.
“ஒழுங்கு மரியாதையா இந்தக் கோமாளிக்கூத்தை நிறுத்திட்டு அம்மையும் மவளும் வந்த வழியா திரும்பிப் போயிடுங்க. இல்லனா ஒன்னு கிடக்க ஒன்னு பேசிடுவேன்.”
“அட! பேசும்மா! நீ பேசணும்னுதானே நான் இங்க வந்து நிக்குறேன். கண்ணே மணியேனு ஒத்தைக்கு ஒத்தை ஆம்பளை புள்ளைய பெத்து கருத்தா வளர்த்து வச்சிருக்கேன். அவனை நீ மயக்கிடலாம்னு கனவு கண்டா பெத்தவ நான் வேடிக்கை பாக்கணுமா? நீ என் மவன் ஆபிசுக்கு வேலைக்குப் போறதா சீவி சிங்காரிச்சிட்டு போறது எல்லாம் அவனை உன் கைக்குள்ள போட்டுக்கத்தானே? இந்த அசிங்கமெல்லாம் எங்க வீட்டுக்குப் பழக்கமில்ல. தகுதில குறைஞ்ச குடும்பமா இருந்தாலும் எங்க குடும்ப மானம் போயிடக்கூடாதுனு உன் வீட்டுப்படி ஏறி வந்திருக்கேன். நீ என்னை வெளிய போனு விரட்டுற. இந்த நாடகம் எல்லாம் எதுக்கு? வந்து நில்லு. தலைல பூ வச்சு கல்யாணத்தை உறுதி பண்ணிடலாம். நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்லு மாதிரி நிக்குறிய? பணக்காரவீட்டுப்பையனை வளைச்சுப் போடச் சொல்லிக் குடுத்து ஊர் மேய விட்டுட்டு இப்ப திகைச்சுப் போய் பாத்தா என்ன அர்த்தம்? நீங்க குடுத்த வேலைய முடிச்சிட்டா உங்க மவ. வாங்க! வந்து தாம்பளத்தை வாங்கிக்கோங்க.”
தட்சிணாமூர்த்திக்கும் இளவரசிக்கும் நெஞ்சில் யாரோ தீக்கங்கால் சூடு போடுவது போல இருந்தது. வார்த்தைக்கு வதைக்கும் வலிமை இருக்கிறதே!
அவர்கள் கலங்கி நின்றதைப் பார்த்ததும் ஈஸ்வரி பொறுமையின் எல்லையைக் கடந்துவிட்டாள்.
“வாயை மூடுங்க! எங்க வீட்டுல நின்னுக்கிட்டு என் பேரண்ட்சை அசிங்கமா பேசுவிங்களா? யாரும்மா உங்க மகனைக் காதலிச்சது? நானா? நான் எப்ப அப்பிடி சொன்னேன் அவர் கிட்ட? இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று சீறிவிட்டாள்.
இப்போது மதுமதியின் முறை.
“ஓஹ்! நீ காதலிக்காமதான் எங்கண்ணன் உனக்காக எங்கம்மாவ எதிர்த்துப் பேசுனானா? நடிக்காதடி.”
“ஏய்! உன் கிட்ட நான் பேசவேல்ல. நீயெல்லாம் காதல், ஒழுக்கத்தைப் பத்தி பேசாம இருக்குறது நல்லது. வாயை மூடுறியா? இல்ல பொளீர்னு ஒன்னு வாங்கிக்கிறியா? நான் மலரும் இல்ல, ஆதியக்காவும் இல்ல. அசிங்கமா பேசுன, வாயை உடைச்சு அனுப்புவேன். ஜாக்கிரதை.”
ஈஸ்வரி எச்சரித்ததும் மதுமதியின் முகம் கறுத்தது.
“என் மவ வாயை அப்புறமா உடைச்சுக்கலாம். ஆனா என் மவனை வளைச்சிருக்கியே. அதை நிறுத்திக்க. உனக்கு என் வீட்டு மருமகளாகுற தகுதியே கிடையாது. இங்க பாரு, இந்த நகையோட விலை என்ன தெரியுமா? உன் அப்பன் ஆத்தா உன்னோட கல்யாணத்துக்குச் சேர்த்து வச்ச மொத்த காசையும் குடுத்தா கூட இந்த நகைய வாங்க முடியாது. இது மாதிரி ஏகப்பட்ட நகை பணத்தோட என் மவனுக்கு நல்ல இடத்துல இருந்து சம்பந்தம் வருது. உன்னால அவன் எல்லாத்தையும் அலட்சியப்படுத்துறான். அவனுக்கு நாலு வருசத்துக்கு முன்னாடியே ஏழரை சனி முடிஞ்சிடுச்சுனு ஜோசியர் சொன்னார். ஆனா உன் ரூபத்துல அது ஜென்மச்சனியா திரும்பி வரும்னு சொல்லாம விட்டுட்டாரே.”
நிலவழகி பேசப் பேச ஈஸ்வரிக்கும் அவளைப் பெற்றவர்களுக்கும் குற்றம் செய்யாமல் தூக்குமேடை மீது நிற்கும் உணர்வு.
தட்சிணாமூர்த்தி இம்மாதிரி பேச்சுகளை எல்லாம் விரும்பும் மனிதர் அல்ல. குணவானும் கூட. சட்டென ஒரு பெண்மணியைத் திட்டவோ வார்த்தைகளை அம்பாக எய்யவோ தெரியாதவர். இளவரசி கொஞ்சம் சுதாரிப்பானவர் என்றாலும் இத்தகைய நெஞ்சை உடைக்கும் வார்த்தைகள் எல்லாம் அவருக்கு அறிமுகமானவை இல்லை.
கோபத்தை விட மகளை இப்படி அவமானப்படுத்துகிறாரே என்ற ஆதங்கமும், கையாலாகாத்தனமும் அவர்களை வதைத்தது.
“இங்க பாருங்கம்மா…” என தட்சிணாமூர்த்தி கலங்கிய குரலில் ஆரம்பிக்கையிலேயே நிலவழகியின் கையிலிருந்த தாம்பளம் தரையில் உருண்டது.
அவர் திகைக்கும்போதே, “எல்லாத்தையும் பொறுக்கிட்டு ஓடுறதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் அஞ்சு நிமிசம்தான் டைம். அதுக்குள்ள இடத்தைக் காலி பண்ணலனா வயசான பொம்பளைனு கூட பாக்கமாட்டேன். உங்க மகளை என்ன செய்வேன்னு சொன்னேனோ அதை உங்களுக்குச் செஞ்சு வழியனுப்பி வைப்பேன். கிளம்புங்க” என்று ஈஸ்வரி கர்ஜிக்கவும், மதுமதி அவசரமாய் தரையில் உருண்ட பழங்கள் பூச்சரத்தை எடுத்துக்கொண்டாள்.
நிலவழகியின் முகத்தில் வெற்றிப்புன்னகை. தன்னை விட இளைய தலைமுறையிடம் அவமானப்பட்ட வருத்தம் துளி கூட அவருக்கு இல்லை. இனி இந்தப் பெண் தனது மகனைக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாள் என்ற திருப்தி அவருக்கு.
எள்ளல் புன்னகையோடு மகள் கொடுத்த தாம்பளத்தை வாங்கிக்கொண்டார்.
“ஒரு நிமிசம்.”
போகிறவரை விரல் சொடுக்கி தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தாள் ஈஸ்வரி.

“மாணிக்கவேலுவோட மகனைக் கட்டிக்க கோடி ரூபாய் குடுத்தாலும் நான் சம்மதிக்கமாட்டேன். உங்களுக்குத் திராணி இருந்தா இன்னொருத்திய உங்க மகனுக்குக் கட்டி வைங்க. இங்க பேசுன வாயை அவன் கிட்ட போய் பேசுங்க. இன்னொரு தடவை என் வீட்டுப்பக்கம் உங்க கால் வந்துச்சுனா முழங்காலோட தறிச்சிடுவேன்! ஜாக்கிரதை!”
இப்போது நிலவழகியின் முகம் மாறியது. அவர் தாண்டியது பாதிக் கிணறைத் தானே! பவிதரன் இன்னொருத்தியை மணக்கச் சம்மதித்தால்தானே முழு வெற்றி.
இறுகிய முகத்தோடு அவர்கள் வெளியேறியதும் இளவரசி வாயில் சேலையைப் புதைத்தபடி அழ ஆரம்பித்துவிட்டார். தட்சிணாமூர்த்தியும் ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்.
ஈஸ்வரிக்குத் தனது பெற்றோரை இந்தக் கோலத்தில் பார்ப்பது பெரும் வேதனையாய் இருந்தது!
மற்ற பெற்றோரைப் போல ‘எங்களைத் தலைகுனிய வைத்து விட்டாயே’ என்று திட்டியிருந்தாலோ, அடித்திருந்தாலோ கூட அவளுக்கு இவ்வளவு தூரம் வலித்திருக்காது. இப்படி உடைந்து போய் அமர்ந்த கோலம் தான் அவளது நெஞ்சைத் துளைத்து பெரும் வேதனையைக் கொடுத்தது.
தொண்டையைச் செருமியவள் “இப்ப… நான் என்ன சொன்னாலும் உங்க கஷ்டம் மாறப்போறதில்ல. ஆனா இந்தம்மா சொன்ன மாதிரி நான் எந்தக் கெட்ட எண்ணத்தோடவும் அவங்க… பவிதரன் கூட பழகல. அவங்க என் முதலாளிங்கிற விசயத்தைத் தாண்டி என் மனசுல வேற எந்த எண்ணமும் அவங்க மேல இல்ல. இப்ப நான் வேலைக்குப் போகட்டுமா? வேண்டாமா? நீங்க என்ன சொன்னாலும் எனக்குச் சம்மதம்” என்றாள்.
தட்சிணாமூர்த்தி மகளை நிமிர்ந்து பார்த்தார். அவருக்குத் தெரியும் நிலவழகி தனது மகள்மீது சுமத்திய பழி உண்மையற்றது என.
பணக்காரர்கள் தங்கள் பக்கம் இருக்கும் தவறை எப்போதுமே சரி செய்ய முயலமாட்டார்கள். அதை விட எதிராளியை அடித்து நொறுக்குவது அவர்களுக்குச் சுலபமான வேலை. எந்த அநியாயம் செய்தாலும் சரிகட்டுவதற்குத் தேவையான பணமும் இருக்கிறது என்ற தலைக்கனம். ஆனால் அனைத்தையும் ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற பயமில்லை. தவறுக்கான தண்டனையை வழங்க அவன் தயங்கமாட்டான் என்ற உண்மையைப் புரிந்துகொள்வதில்லை.
தட்சிணாமூர்த்தி தடுமாறியபடியே எழுந்தார்.
“என் மவளைப் பத்தி எனக்குத் தெரியாதா?”
அவர் வெள்ளந்தியாய் சொல்லும்போதே ஈஸ்வரியின் கண்கள் கலங்கின.
மனமறிந்து பொய் சொல்லியிருக்கிறாளே! நிலவழகி சுமத்திய பழி வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம். ஆனால் அவளது நேசம் உண்மை அல்லவா!
அவள் சொன்ன பொய் அவளைச் சுடவும் கண்கள் கண்ணீரைப் பிரசவித்தன.
“அழாதல! யார் என்ன சொன்னாலும் என் மவ பணத்துக்காக அப்பிடியெல்லாம் போகமாட்டானு நான் நம்புறேன். பவி தம்பியும் தப்பானவர் இல்ல. நான் பாத்து வளர்ந்த புள்ளை. சிகாமணி சொன்ன வார்த்தைக்காக உனக்கு வேலை குடுத்த தம்பி ஆச்சே! தப்புனு வந்ததும் தகப்பன்னு கூட பாக்காம சித்தப்பாக்குச் சேர வேண்டியதைக் குடுத்துடனும்னு நியாயமா நின்னவர் அந்தத் தம்பி. ஒருவேளை அவருக்கு உன் மேல விருப்பமிருந்தாலும் நம்மளால எதுவும் பண்ண முடியாதுல. அவங்க உயரம் அதிகம்.”
“எனக்கு அது புரியுதுப்பா. நான் இனி அவர் கிட்ட வேலைக்குப் போகல.”
தட்சிணாமூர்த்தி ஏதோ சொல்ல வர, அதற்குள் குறுக்கே புகுந்தார் இளவரசி.
“அவ முடிவுதான் சரி! இனிமே அங்க வேலைக்குப் போகவேண்டாம். பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கு வேண்டாம்ங்க. கஞ்சியோ கூழோ கௌரவமா வாழ்ந்துட்டிருக்கோம். இவங்க இன்னும் நம்ம சேற்றை வாரியிறைச்சா பிள்ளைய பத்தி ஊருல தப்பு தப்பா பேச ஆரம்பிச்சிருவாங்க.”
ஒரு அன்னையின் பயம் மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்ததாக மட்டுமே இருக்கும். இளவரசியின் பயமும் கண்ணீரும் தட்சிணாமூர்த்திக்குப் புரிந்தது. இருப்பினும் மகளின் விருப்பமென ஒன்று இருக்கிறது அல்லவா!
“உன் முடிவுதான் எங்க முடிவுல. நீ என்ன செஞ்சாலும் சம்மதம்” என்று சொல்லி மகளின் தோளில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார்.
இருவரையும் அழவேண்டாமென ஆறுதல்படுத்திவிட்டு ஈஸ்வரி பேருந்து ஏறினாள். அவளின் ஒட்டுமொத்தக் கோபமும் இப்போது பவிதரனின் மீது திரும்பியிருந்தது.
மேரு பில்டர்ஸ் அலுவலகத்துக்கு வந்தவள், “ஏன் ஈசு லேட் இன்னைக்கு?” என்று விசாரித்த சுமதியைக் கூட கவனிக்கவில்லை.
விறுவிறுவென பவிதரனின் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டாள். அவளது நடவடிக்கையில் ஏதோ வித்தியாசம் தெரியவும் சுமதியோடு மற்ற ஊழியர்களும் குழம்பினார்கள்.
அதே நேரத்தில் அவள் அலுவலக அறைக்குள் நுழைந்த வேகம் பவிதரனையும் கேள்வியில் ஆழ்த்தியது.
வந்தவள் அவனைப் பார்த்த பார்வையில் அத்துணை கோபம்.
“இனிமே நான் இந்த ஆபிசுக்கு வேலைக்கு வரப்போறதில்ல. என் இடத்துல வேற யாரையாச்சும் வேலைக்கு வச்சுக்கோங்க.”
தடாலடியாக அவள் பேச பவிதரனின் குழப்பமோ இன்னும் அதிகரித்தது. தண்ணீர் தம்ளரை அவள் பக்கம் நகர்த்தியவன் குடிக்குமாறு சைகை காட்ட அதை அவள் கண்டுகொள்ளவில்லை.
“ஆபிசுக்குனு சில வழிமுறைகள் இருக்கு. திடுதிடுப்புனு எல்லாம் நீ வேலைய விட்டு போகமுடியாது. அதுக்கு நீ முறைப்படி ரிசைன் பண்ணனும்.”
“என்ன செய்யணும்னு சொல்லுங்க. செய்யுறேன்.”
“எதுக்கு இவ்ளோ கோவம்? என்னாச்சு?”
ஈஸ்வரி அவனை நம்பாதப் பார்வை பார்த்தாள்.
“உங்களுக்கு எதுவுமே தெரியாதுல்ல?” என்று சந்தேகத்தோடு வினவ பவிதரன் தெரியாதெனத் தலையசைத்தான்.
பெருமூச்சை எடுத்துவிட்ட ஈஸ்வரி, நிலவழகியும் மதுமதியும் தங்கள் வீட்டுக்கு வந்து நடத்திய நாடகத்தை ஒரு வரி விடாமல் சொல்லி முடித்தாள். அவள் உதிர்த்த ஒவ்வொரு வாக்கியத்துக்கும் பவிதரனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கடினமாகி இறுகி கறுத்தே போனது.
“நான் சொன்னேன்ல, உங்களுக்கும் எனக்கும் எப்பவும் சரிவராதுனு. இனியாச்சும் நான் போகலாமா?”
பவிதரன் தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் ஈஸ்வரியிடம் வந்தான். அவளது கையைப் பற்றிக்கொண்டவன் அவள் உதற முற்படும்போது இன்னும் இறுக்கமாகப் பற்றினான்.
ஈஸ்வரி அவனை நிமிர்ந்து பார்த்தபோது அவளது விழிகள் செவ்வரியோடி கண்ணீருடன் கலங்கியிருந்தன. அது கோபச்சிவப்பு இல்லை. அடாத பழியால் உண்டான அவமானத்தின் சிவப்பு.

“என் கையை விட்டுருங்க. பிடிச்சிருக்குறது வேஸ்ட். உங்க ஆசை, கனவு எல்லாத்தையும் இப்பவே அழிச்சிடுங்க. ஏன்னா அதுக்கு எதிர்காலமே கிடையாது.”
இம்முறை அவள் கோபத்தில் தத்தளிக்கவில்லை. அவளது குரலிலும் வெறுப்பின் கனல் இல்லை. மாறாக ஆற்றாமையும் ஏமாற்றமும் கொட்டிக் கிடந்தது.
சாத்தியமற்றதாக நினைத்த நேசத்தில் அவளுக்கும் சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இன்றைய தினம் நடந்த சம்பவம் அவளுக்குள் இருந்த எதிர்பார்ப்பை முற்றிலுமாக அழித்துவிட்டது.
“நான் உன்னைதான் என்னோட எதிர்காலம்னு நினைச்சேன்” சொல்லும்போதே பவிதரன் தடுமாறினான்.
“விட்டுருங்க ப்ளீஸ்.”
தலைகுனிந்து சொன்னவளின் கண்ணீர்த்துளிகள் சூடாய் அவனது புறங்கையில் தெறித்தன. அவளது கையை மெல்ல விடுவித்தான் பவிதரன்.
ஏமாற்றத்தை விழுங்கியவனின் ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்கிய விதம் அவனது சிரமத்தை அவளுக்கு எடுத்துக்காட்டுவதாய் இருந்தது!
“நான் கிளம்புறேன்! இனிமே வரமாட்டேன்! சாரி!”
குரல் உடையச் சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டாள் ஈஸ்வரி.
வெளியே வந்தவளை ஊழியர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
“என்னால எதையும் இப்ப விளக்கமா சொல்ல முடியாது. சாரை பாத்துக்கோங்க. அவரைச் சுத்தியிருக்கவங்க சரியில்ல. இப்போதைக்கு என்னால இதை மட்டும்தான் சொல்ல முடியும்.”
விறுவிறுவென அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியவளுக்கு எப்படி பாளை பேருந்து நிலையம் வந்தோம், எப்படி பேருந்து ஏறினோமென்றே தெரியவில்லை.
நதியூருக்கு வந்து சேர்ந்தவள் வீட்டுப்படியை மிதிக்கும்போதே உள்ளிருந்து ஆதங்கமாய் குழலியின் குரல் கேட்டது.
“இவ்ளோ கீழ்த்தரமா நடந்துக்கிட்டவங்களை ஏன் சும்மா விட்டிய மதினி? நம்ம வீட்டுப் பிள்ளைய யார் தப்பா பேச நினைச்சாலும் அவங்களுக்கு அந்த இடத்தை நாம குடுத்துடக் கூடாது.”
“எங்களுக்கும் சேர்த்து ஈஸ்வரி பேசிட்டா மதினி.”
வீட்டுக்குள் அமைதியாய் வந்து நின்றவளின் கலங்கிய முகத்தைப் பார்த்ததும் குழலிக்கு மனபாரமாகிவிட்டது.
எழுந்து அவளது முகத்தை வருடியவர் சட்டென அவளது கண்கள் கண்ணீரைப் பிரசவிக்கவும் கலங்கிப் போனார்.
“அழக்கூடாது! நீ என்ன தப்பு பண்ணுனனு கண்ணீர் விடுற? அழாத” என அவளை அணைத்துக்கொண்டார்.
ஈஸ்வரி அவரது தோளில் முகம் பதித்தவள் கண்களை இறுக மூடி அழ ஆரம்பித்தாள்.
“அவங்களை நான் தனியா விட்டுட்டு வந்துட்டேன் அத்தை. அனாதரவா துணைக்கு யாருமில்லாம அவங்க நிக்குறாங்க. இனி எதுவும் சரியா நடக்காதுனு தெரிஞ்சும்….”
மகள் அழும்போது உதிர்த்த வார்த்தைகளில் இருந்து அவளது மனதை அறிந்துகொண்ட இளவரசிக்கு அதிர்ச்சியோடு வேதனையும் சேர்ந்துகொண்டது.
அவள் அழட்டுமென இரு பெண்களும் விட்டுவிட்டார்கள்.
அதே நேரம் நிலவழகி மாணிக்கவேலுவிடம் பவிதரனின் காதலைப் பற்றி சொல்லிவிட்டார். தட்சிணாமூர்த்தியின் வீட்டுக்குப் போனது, அங்கே நடந்தது என அனைத்தையும் ஒப்பித்து முடிக்கையில் மாணிக்கவேலுவின் முகத்தில் அத்துணை ரௌத்திரம்.
“உன் காலைத் தறிச்சிடுவேன்னு சொல்லிச்சா அந்தக் கழுதை? சும்மா விட்டுட்டு வந்தியா நீ?” என கர்ஜித்தார்.
“விடுங்க! தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சு. இனிமே பவிக்கு நம்ம அந்தஸ்துக்கு ஏத்த நல்ல குடும்பத்துப்பொண்ணு ஒருத்திய தேடி கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என அவரைச் சமாதானம் செய்தார் நிலவழகி.
மாணிக்கவேலுவுக்கு மனம் ஆறவில்லை. தங்களது தகுதிக்குக் குறைந்த இடத்தில் உறவு கொண்டாட நினைத்திருக்கிறானே என்ற எண்ணி எண்ணி மாய்ந்தார் மனிதர்.
“குடும்ப மானத்தைச் சந்தி சிரிக்க வைக்குற மாதிரி உன் மவன் நடந்துக்கக்கூடாது அழகி. பொட்டப்புள்ளையோ ஆம்பளைப்புள்ளையோ, என் கௌரவத்தைக் கெடுக்குற மாதிரி நடந்துக்கிட்டா அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன். சொல்லிடு உன் மகன் கிட்ட.”
அவர் கத்தித் தீர்த்துவிட்டுப் போக அங்கே நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சகுந்தலாவுக்கு மனக்கலக்கம். ஆனால் அவரோடு நின்றுகொண்டிருந்த தர்ஷனுக்கோ குதூகலம்.

‘ஆக பவிதரனின் காதலியை ஒரேயடியாக அவனை விட்டு விலக்கி வைத்துவிட்டார்கள். இதற்கு அவன் அமைதியாய் இருக்கமாட்டான். நிச்சயம் பிரளயம் வெடிக்கும். அதில் எனக்கான ஆதாயம் கண்டிப்பாக இருக்கும்.’
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்களே! அது போல அந்த வீட்டில் இருப்பவர்களோடு பவிதரனுக்கு இருக்கும் உரசல்கள் பூதாகரமானால் தனக்கு ஆதாயம் என கணக்கு போட்டான் அவன்.
ஆனால் அந்தப் பிரச்சனையே அவன் உருவில் தான் வரப்போகிறது. அதுவும் இன்னும் சில மணித்துளிகளில்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

