“கௌரவமும் பணமும் பிரதானம்னு நினைக்குற குடும்பங்கள்ல உண்மையான நேசமும் மனநிறைவான வாழ்க்கையும் என்னைக்குமே சாத்தியமில்ல. வாழ்க்கைய நல்ல மாதிரி கொண்டு போறதுக்குப் பணம் வேணும். சமுதாயத்துல தலை நிமிர்ந்து வாழ கௌரவம் வேணும். ஆனா அந்த பணமும் கௌரவமும் ஒருவிதமான வெறியா மாறி ஆட்டிப் படைக்குறப்ப அங்க நிம்மதியான வாழ்க்கை கேள்விக்குறியாகுது”
–பவிதரன்
வீடு திரும்பிய பவிதரனுக்குக் கோபமும் ஆற்றாமையும் இன்னும் அடங்கவில்லை. பெற்ற தந்தையில் ஆரம்பித்து உடன்பிறந்த தங்கை வரை அவனை வெவ்வேறு காரணங்களுக்காகத் தூற்றி வெறுத்தது உண்டு. அவனது அன்னையே சில நேரங்களில் அனைவரின் பார்வையில் நல்லவனாகத் தெரிய அவன் போராடுவதாகக் கூறுவதுண்டு.
அவனது இயல்பைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றதே இல்லை. அவர்கள் சூட்டிய பட்டங்களுக்குச் சற்றும் குறைவில்லாதது இன்று நகைக்கடையில் ஈஸ்வரி சொன்ன ‘சுயநலவாதி’ என்ற சொல்.
‘நான் சுயநலவாதியா?’
நதியூருக்கும் ரங்கநல்லூருக்குமிடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது. அதைக் காரில் கடப்பதற்குள் ஆயிரம் முறை ஈஸ்வரியின் குரல் அவனது காதில் ஒலித்து அடங்கியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீட்டுக்கு வந்தவனுக்கு எதிலும் நாட்டமில்லை. வழக்கமாய் ஷூக்களை அவற்றுக்குரிய பகுதியில் கழற்றி வைத்துவிட்டுப் போகிறவன் அன்று காலை உதறிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் நிலவழகிக்கே ஏதோ சரியில்லை என்று புரிந்துவிட்டது.
கொஞ்சம் அவன் சாந்தமடையட்டுமெனக் காத்திருந்து பின்னர் அவனது அறைக்குப் போனவர் கதவு மூடி விளக்குகள் அணைந்திருக்கவும் சாப்பிடாமல் படுத்துவிட்டானே என்ற கவலையோடு கதவைத் தட்டினார்.
“சாப்பிடாம உறங்காத பவி. நைட் அடிக்கடி முழிப்பு வரும். வா! கொஞ்சம் தயிர் சாதமாவது சாப்பிட்டுட்டுப் படு”
ரெண்டு முறை தட்டியதும் கதவு திறந்து பவிதரனின் அமைதியற்ற வதனம் காட்சி தந்தது. நிலவழகிக்கு மகனை இவ்வாறு கண்டதும் மனம் தாங்கவில்லை.
“என்னய்யா ஆச்சு? எதுவும் பிரச்சனையா ஆபிசுல? எதுவா இருந்தாலும் தூக்கிப் போடு. இப்ப வந்து சாப்பிடு”
பவிதரனுக்கு அன்னையிடம் மறுப்பு சொல்லும் எண்ணமில்லை. மறுத்தால் காரணத்தைச் சொல்லவேண்டும். அது ஒருவேளை அன்னையின் மனதுக்கு வருத்தத்தைத் தரலாம்.
அமைதியாக உணவு மேஜைக்குப் போனவன் நிலவழகி பரிமாறிய இட்லிகளை விழுங்கி வைத்தான். எப்போதுமே அவர்கள் வீட்டு இட்லி மென்மையாகத்தான் இருக்கும். அன்று ஏனோ அரிசிக்குப் பதிலாக கல்லை வைத்து அரைத்து இட்லி அவித்தது போல அத்துணை கடினமாக அவனது தொண்டைக்குள் இறங்கியது.
அதையும் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளியிருந்தான் பவிதரன். மகனுடைய மனதை ஏதோ ஒரு வருத்தம் ஆட்டிவைக்கிறதென நிலவழகி கண்டுகொண்டார். கேட்டாலும் அவன் சொல்லமாட்டான் என்பதால் பொதுவான அறிவுரை ஒன்றை கூறினார்.
“உனக்கு என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியலய்யா. ஆனா எல்லா பிரச்சனைக்கும் உன் கிட்ட தீர்வு இருக்கும். இதுவரைக்கும் நம்ம குடும்பம் சார்ந்து எத்தனை பிரச்சனைய நீ சமாளிச்சிருக்க? மனசைப் போட்டுக் குழப்பிக்காம தூங்குய்யா”
பவிதரனின் இதழில் விரக்தி இழையோடிய புன்னகை ஒன்று உதயமானது.
“நீங்க சொல்லுற பிரச்சனைக்கும், இந்தப் பிரச்சனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்மா. இது சரியாகும்னு எனக்கு நம்பிக்கை இல்ல”
கை கழுவித் தட்டை எடுத்துக்கொண்டு போனவனை வருத்தத்தோடு பார்த்தார் நிலவழகி.
அன்றிரவு பவிதரனுக்கு உறக்கமே இல்லை. மறுநாள் விடியலில் சின்னதாய் ஒரு தெளிவு.
‘என் மனமும் அவள் மனமும் விரும்புவது உண்மை. ஆனால் அவள் விலகி நிற்பதன் காரணமும் சரியானதே! எந்நிலையிலும் நான் ஈஸ்வரிக்குத் துணையாய் இருப்பேன் என்ற உறுதியைக் கொடுத்துவிட்டால் அவளது இந்தத் தயக்கம் உடையும். அந்த உறுதியை அவளுக்குக் கொடுக்கும் விதத்தில் இனி நான் நடந்துகொள்வேன்’
இந்த நிலைப்பாட்டோடு மேரு பில்டர்ஸ் அலுவலகத்தில் நுழைந்தவனுக்கு ஈஸ்வரியின் வாட்டமான தோற்றம் மனதை உறுத்தியது.
‘நேற்று நான் கொஞ்சம் கடினமாக நடந்துகொண்டேன் போல’
அவளது மேஜையில் ஆட்காட்டிவிரலால் தட்டியவன் தனது அலுவலக அறைக்குள் வருமாறு சைகை காட்டிவிட்டுப் போக ஈஸ்வரியோ முந்தைய தினத்தில் அவனது பேச்சை அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.

அந்த நினைவுகளுக்குச் சொந்தமானவனே யோசனை சங்கிலியை அறுத்து விடவும் எரிச்சலோடு அவனது முதுகை உற்று விழித்தாள்.
அருகிலிருந்த சுமதி அவளது புஜத்தைச் சுரண்டி “எதுவும் பிரச்சனையா ஈஸு?” என்று வினவும் வரை அவள் முகபாவனையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பாருங்கள்!
சுமதி இவ்வாறு கேட்டதும் சட்டென முகத்தை இயல்பாக்கிக்கொண்டாள். “ஒன்னுமில்லக்கா! நான் வந்துடுறேன்”
அலுவலக அறைக்குள் வந்து நின்றவள் அவனை நேருக்கு நேராய் பார்க்க பவிதரனின் பார்வையும் அவளது பார்வையும் ஒன்றாய் சந்தித்துக்கொண்டன. சந்தித்த பார்வைகள் வெட்டிக்கொள்ள அதில் அந்த அறை ஒளிராத குறை!
“எதுக்கு வரச் சொன்னிங்க? ஆபிஸ் விசயம்னா நின்னு பேசுவேன். உங்க சொந்தக் கதை சோகக்கதைய பேசி என்னைக் கரிச்சுக் கொட்டப் போறிங்கனா காது குடுத்துக் கேக்குற ஐடியா இல்ல”
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசினாள் ஈஸ்வரி. பவிதரன் புருவத்தை மட்டும் ஏற்றியிறக்கவும் காட்டமாய் முறைத்தாள்.
“நீங்க புருவத்தைத் தூக்குறது, தோளைக் குலுக்குறதுக்கெல்லாம் என்னால தனியா அர்த்தம் யோசிக்க முடியாது.”
“நீ கவனிக்குறதே எனக்குப் போதும்” சிரிப்பு எட்டிப் பார்த்தது அவனது முகத்தில். அதுவே ஈஸ்வரியின் சிடுசிடு மனநிலையை மாற்ற வல்லதாய்!
“சரி! எதுக்குக் கூப்பிட்டிங்கனு சொல்லுங்க”
“புதன்கிழமை குலவணிகர்புரம் போகணும். அதை ஞாபகப்படுத்த கூப்பிட்டேன்”
“என் கூடவா வர்றிங்க?”
“தனியா போற ஐடியாவே இல்ல”
“நான் நேத்து அவ்ளோ தூரம் சொல்லியும்…”
“நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்துனேனா? நான் சொன்னதைக் கேளுனு வற்புறுத்துனேனா? உன் நிலைப்பாட்டுல நீ ஸ்ட்ராங்கா இருக்குறனா என் கூட வர்றதுல உனக்கு என்ன சங்கடம்?”
எந்தப் பக்கமும் செல்லவிடாமல் சுற்றியும் அணை கட்டி வைத்த நிலை ஈஸ்வரிக்கு. எனவே அவனோடு செல்ல சம்மதித்தாள்.
“நான் உங்க வீட்டுக்கே வந்து…”
சட்டெனக் கை குவித்தாள் ஈஸ்வரி.
“வேண்டாத வேலை எதையும் செஞ்சு என்னைச் சங்கடப்படுத்திடாதிங்க. எங்கம்மா அப்பா ஊர்க்காரங்களுக்குப் பதில் சொல்லணும்”
பவிதரன் அப்பாவிபோல தலையாட்டினான்.
“நான் ஆபிசுக்கு வந்துடுறேன். இங்க இருந்து சேர்ந்து போகலாம்”
இருவரும் பேசி முடிவெடுத்தது போல புதன்கிழமை அலுவலகத்துக்கு வந்த ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு குலவணிகர்புரத்துக்குக் கிளம்பினான் பவிதரன்.
கோரல் வண்ணமும் பீச் வண்ணமும் கலந்த ஆர்கன்சா புடவை அவளது மாநிறத்துக்கு அத்துணை பாந்தமாய் இருந்தது. பின்னலாய்ப் பக்கவாட்டில் கிடந்த கூந்தலைத் தழுவியிருந்த மல்லிகைச்சரத்தின் நறுமணம், காருக்குள் பெண்ணொருத்தியின் பிரசன்னத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்வதாய் இருந்தது!
ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய், அன்றைய தினம் பவித்ரன் அணிந்திருந்த சட்டையும் பீச் வண்ணம்தான். நிற ஒற்றுமையில் மனம் குளிர்ந்தவனுக்கு, ஈஸ்வரியின் அழகைப் புடவை இன்னும் அதிகமாக்கிவிட்டதாய் ஓர் எண்ணம்.
கார் ஓட்டுபவனின் பார்வை தன்னை அளவிடுவதைக் கவனிக்காத மாதிரி காட்டிக்கொண்டு மொபைலைப் பார்த்தாள்.

“நீ சாரில அழகு”
சுருக்கமானப் பாராட்டு! தலையை உயர்த்தியவள் “தேங்க்ஸ்” என்றாள் அதைவிட சுருக்கமாய்!
“கழுத்துல ஏதோ செயின் மினுங்குது. டெய்லியும் போட்டுக்கலாமே?”
“உங்க பார்வைய ரோட்டுல வைங்க”
விறைப்பாகச் சொன்னவள் “முதல் நாளே தங்க நகை போட்டா எவனும் கொள்ளையடிப்பான்னு பயம் காட்டிட்டு இப்ப டெய்லி செயின் போட்டுக்கணுமாம்” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“அன்னைக்குச் சொன்னது நீ கவனமா இருக்கணும்ங்கிறதுக்காக. மத்தபடி உன் கழுத்து வெறுமையா இருக்குறது நல்லா இல்ல”
‘நிச்சயம் நான் பேசியது இவனுக்குக் கேட்டிருக்காது. வழக்கம் போல லிப் ரீடிங் என்பான்.’
“நான் உங்களை ரோட்டைப் பாத்து ஓட்டுங்கனு சொன்னேன்”
“கஷ்டம்”
“அப்ப நான் காரை விட்டு இறங்கவா?”
“கதவைக் கூட திறக்க முடியாது உன்னால”
ஈஸ்வரி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“நேராவே பாத்துப் பேசு சண்டைக்காரி”
சட்டெனச் சிரித்துவிட்டாள் அவள்.
“நகைக்கடைல வச்சு என்னைக் கழுவி ஊத்துனதை யார் கிட்டவாச்சும் சொல்லிப் பாருங்க. நான் சண்டைக்காரியா நீங்க சண்டைக்காரனானு தெரியும்”
இறுக்கம் தளர்ந்து இலகுவான நிலை இருவருக்கிடையே பிறந்தது.
என்.எஸ்.என். நிவாசத்தை அடைந்தபோது அது முழுமையாகியிருந்தது. புவனேந்திரன் – ஆதிராவின் புத்திரி தேஜஸ்வினியின் பெயர்ச்சூட்டும் விழாவுக்கு உறவுக்காரர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
ஈஸ்வரியையும் பவிதரனையும் மலர்விழி வரவேற்றாள்.
“இந்த சாரி அழகா இருக்கு ஈசு. எப்ப வாங்குன? என் கிட்ட சொல்லவேல்ல?”
அவர்கள் பேசும்போதே ஆதிராவின் அண்ணன் மனைவி மிருணாளினி அங்கே வந்து சேர்ந்தாள்.
“நல்லா இருக்குறிங்களா அக்கா?” என ஈஸ்வரி கேட்க, “ரொம்ப நல்லா இருக்குறேன்” என்றவள் பவிதரனிடம் குசலம் விசாரித்தாள்.
ஈஸ்வரியும் அவனும் ஒன்றாய் வருகை தந்ததைக் குறிப்பிட்டு அவள் பேசவும் “ஈசு இப்ப அண்ணாவோட கம்பெனிலதான் வேலை பாக்குறா மதினி” என்றாள் மலர்விழி.
மிருணாளினி குறுகுறுவென பவிதரனை நோட்டம் விட்டாள். அவனது பார்வையும் கவனமும் சுற்றியிருப்பவர்களை விட ஈஸ்வரியின் மீதே அதீதமாய் குவிவதைக் கண்டுகொண்டாள். கூடவே இருவரது உடைகளும் ஒரே வண்ணத்தில் இருந்தது அவளுக்கு ஏதோ ஒரு செய்தியை அறிவிப்பதாய்!
சிவகாமி ஈஸ்வரியிடம் பேச ஆரம்பித்தபோது மலர்விழியைத் தனியே அழைத்துக்கொண்டவள் விசாரித்தாள்.
“பவி அண்ணா ஈசுவ விரும்புறார். அவளுக்கும் விருப்பம்தான். ஆனா எங்க பெரியம்மாக்குக் குணம் பத்தாதுனு தயங்குறாளாம். அண்ணா சொன்னார்” என்றாள் அவள்.
மிருணாளினிக்குச் சந்தோசத்தில் மனம் குளிர்ந்து போனது. முன்னொரு காலத்தில் அவளது கணவன் கர்ணனுக்காக ஈஸ்வரியைப் பெண் கேட்டிருந்தார்களாம். அவனுக்கும் அவள்மீது ஒருதலைக் காதல் இருந்தது.
அனைத்தையும் கடந்து இப்போது கர்ணனும் மிருணாளினியும் அழகான தம்பதிகளாகி விட்டார்கள். ஆனாலும் பெண்களுக்குத் தனது கணவனின் முன்னாள் காதலியைக் கண்டுவிட்டால் சின்னதாய் ஒரு பாதுகாப்பின்மை வந்துவிடும். ஈஸ்வரியும் பவிதரனும் விரும்புவதைக் கேள்வியுற்றதுமே மிருணாளினிக்குக் குதூகலத்தில் பேச்சு வரவில்லை.
அதே நேரம் தாய்மாமாவையும் அத்தையும் புரோகிதர் அழைக்கவே அவள் போய்விட்டாள்.
குழந்தைக்குப் பெயர் சூட்டி தொட்டிலில் படுக்க வைத்தார்கள். தாய்மாமா கர்ணன் குழந்தையின் கழுத்தில் செயினை அணிவித்தான். அத்தை அவளது குட்டிக் கால்களில் தண்டைகளைப் போட்டுவிட அடுத்து மலர்விழியும் மகிழ்மாறனும் வளையல்களை அணிவித்தார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் பரிசுகளைக் கொடுக்க அடுத்து பவிதரனின் முறை. அவனுக்கு மலர்விழியும் ஆதிராவும் ஒன்றுதான். அதனாலேயே சிவகாமி புவனேந்திரனை நேரில் அனுப்பி அவனை அழைத்திருந்தார்கள் இந்த வைபவத்துக்கு.
“நான் குடுத்தேனே அந்தச் செயினை எடு”
ஈஸ்வரியிடம் அவன் கூற அவளும் தனது ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த தங்கச் செயினை எடுத்துக்கொடுத்தாள். இந்தக் காட்சியும் யார் பார்வைக்கும் தப்பவில்லை.
பவிதரன் அன்போடு அதைக் குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டான்.
ஈஸ்வரி கையோடு கொண்டு வந்த பணம் அடங்கிய கவரை ஆதிராவிடம் கொடுத்தாள்.
“என்னோட பரிசு இது. நான் பெரிய வேலைக்குப் போனதும் இதை விட பெருசா கிப்ட் பண்ணுவேன்” என்றாள்.
“பரிசுல சின்னது பெருசுனு என்ன இருக்கு? அதைக் குடுக்குறவங்களோட அன்புதான் பிரதானம்.”
ஆதிரா மனம் நிறைய கூறினாள். பவிதரனைப் பார்த்தபடியே “மலர் என்னமோ சொன்னா. அது நிஜமானா சந்தோசப்படுவேன்” என்றாள் பூடகமாய்.
அது ஈஸ்வரிக்குப் புரியாமல் இல்லை. மலர்விழி, மிருணாளினி, ஆதிரா என பெண்கள் மட்டுமே குழுமியிருந்த நேரம் அது.
“சாத்தியப்படும்னு நினைக்குறிங்களா அக்கா?”
“ஏன் சாத்தியமில்ல? பவி அண்ணா எல்லா சூழ்நிலைலயும் உண்மைக்குப் பக்கத்துலதான் நின்னுருக்கார். அவரை மாதிரி ஒருத்தர் லைஃப் பார்ட்னரா வர்றதுல உனக்கு என்ன சங்கடம்?”
“அவங்கம்மா சரியில்லக்கா. அவங்க தங்கச்சி – அது மனுசியே இல்ல. இப்ப புதுசா ஒருத்தன் வேற அந்தக் குடும்பத்துல நுழைஞ்சிருக்கான். அவன் பார்வை எல்லாம் அவங்களோட சேர் மேலதான் இருக்கு. இப்பிடி நெகடிவிட்டி மட்டுமே நிறைஞ்சிருக்குற குடும்பத்துல என்னால எப்பிடி வாழ முடியும்?”
மிருணாளினிக்கு உண்மையான பிரச்சனை என்னவெனத் தெரியாது. ஆதிரா வாயிலாக பவிதரனின் குடும்பத்தாருடைய லீலைகளை அறிந்தவள் என்றாலும் தர்ஷன் பற்றிய செய்தி எதுவும் அவளது செவிகளை எட்டவில்லை.
ஈஸ்வரியின் தயக்கம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றினாலும் இந்த விசயத்தில் அவள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்பதே மிருணாளினியின் எண்ணம்.
“இவ்ளோ நெகடிவிட்டி இருக்குற இடத்துல அவரைத் தனியா விடுறோமேனு உனக்கு வருத்தம் இல்லையா?” என்று வினவினாள் அவள்.
ஈஸ்வரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் யோசிப்பது போல தெரிந்ததும் மூன்று பெண்களும் மெல்ல நழுவினார்கள். பவிதரனை அவளிடம் அனுப்பியும் வைத்தார்கள்.
அவனும் அவளும் புன்னகை முகமாய்ப் பேசுவதை வேடிக்கை பார்த்தவர்களில் சிலர் பவிதரனின் குடும்பத்துக்கு உறவினர்கள். பார்த்ததோடு விடுவார்களா?
என்.எஸ்.என் நிவாசத்தில் நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் நிலவழகியிடம் சொல்லிவிட்டார்கள்.
கேட்ட நொடியில் மனம் பதபதைத்துப் போனார் அந்தப் பெண்மணி. மதுமதியோ சிறிய யோசனையோடு நகர்ந்துவிட்டாள். மாணிக்கவேலு எப்பேர்ப்பட்ட கௌரவப்பித்து பிடித்த மனிதர் என அவள் அறிவாள். கௌரவத்துக்காகத் தனது வாழ்க்கையைப் பற்றி கூட சிந்திக்காமல் முரளி போன்ற பெண் பித்தன் ஒருவனை அவளது தலையில் கட்டியவராயிற்றே!
அவர் எப்படி ஈஸ்வரியை மருமகளாக ஏற்றுக்கொள்வார்? ஆனால் அதற்கு மேல் மதுமதியும் அலட்டிக்கொள்ளவில்லை. நிலவழகியின் நிலைதான் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பவிதரன் வீட்டுக்கு வருவதற்காகக் காத்திருந்தார்.
அவர் ஹாலில் குட்டி போட்ட பூனையாக அங்குமிங்கும் நடமாடுவதைக் கவனித்த மதுமதி கூட அறைக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு சொல்லிப் பார்த்தாள்.
“அவன் வரட்டும். இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரியலனா என்னால தூங்க முடியாது மது. நீ போ! மாப்பிள்ளைக்குத் தொந்தரவா இருக்கும்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டார்.
தங்களது அறைக்கு வந்த மதுமதி இன்னும் தனக்காக தர்ஷன் தூங்காமல் இருக்கவும் “சாரிங்க! அம்மா இன்னும் டென்சனா இருக்காங்க. அவங்ககிட்ட பேசப் போனேன்” என்க
“எதுக்கு சாரி எல்லாம்? இப்பிடி வந்து உக்காரு” என்றான் தர்ஷன் ஆதுரத்தோடு.
அவளும் அமர்ந்தாள். கலைந்திருந்த கூந்தலை அவளது காதோரம் ஒதுக்கிவிட்டான்.
“பவி ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. அவருக்குப் பிடிச்சதைச் செய்ய முழு உரிமை இருக்குற அடல்ட். அதைப் புரிஞ்சிக்கணும் நீங்க ரெண்டு பேரும்”
“அதுக்குனு தகுதிக்குக் குறைஞ்ச ஒருத்தியோட அவன் இப்பிடி குடும்ப ஃபங்சன்ல கலந்துக்கலாமா தர்ஷன்? எங்க சொந்தக்காரங்க எல்லாம் பாத்துட்டு அம்மாக்குப் போன் மேல போன். உங்க மகனுக்கு தட்சிணாமூர்த்தி மகளைப் பேசி முடிச்சிருக்கிங்களானு விசாரிக்குறாங்க. உங்களுக்கே எங்கம்மாவ பத்தி தெரியும்ல?” என்றாள் மதுமதி ஆதங்கத்தோடு.
“ஏன் டென்சன் ஆகணும்? அவருக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடவேண்டியதுதானே?”
சர்வசாதாரணமாக தர்ஷன் சொல்லிவிட்டான். ஆனால் மாணிக்கவேலு, நிலவழகி, மதுமதி மூவரும் அத்துணை எளிதில் தங்களை விட வசதியில் குறைந்த குடும்பத்தை உறவினர்களாக ஏற்றுகொள்வார்களா என்ன? அதை இழுக்காகக் கருதுபவர்களாயிற்றே!
“இது சின்ன ஊர் தர்ஷன். இங்க சில விசயங்களை அவ்ளோ ஈசியா சாத்தியமாக்கிட முடியாது” என்று தனது மனதிலுள்ள எண்ணத்தைப் பூசி மெழுகி வெளியிட்டாள் அவள்.
தனது பேச்சில் அவளுக்கு உடன்பாடில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் சிரித்தான். அவன் மனதுக்குள் சில கணக்குகள் இருக்கின்றன. அதன்படி பார்த்தால் பவிதரன் – ஈஸ்வரியைப் பற்றி இங்கே பேசப்படும் வதந்தி உண்மையாக வேண்டும். உண்மையாகிவிட்டால் அவனது வழியில் குறுக்கிட யாரும் இருக்கமாட்டார்களே!
அதே நேரம் மதுமதிக்கும் ஒரேயடியாகக் கணவனை எதிர்த்துப் பேசும் எண்ணமில்லை. முந்தைய வாழ்க்கையில் அவளுக்குக் கிடைக்காத மரியாதையும், அவள் ஏங்கிய அன்பும் தர்ஷனிடம் அளவில்லாமல் கிடைக்கிறது. அன்னையின் பேச்சுக்கு ஆதரவாக நின்று அவனிடம் ‘குறுகிய புத்தியுடையவள்’ என்ற பட்டத்தை வாங்க அவளுக்கு விருப்பமில்லை.
எனவே அத்தோடு அந்தப் பேச்சை விட்டாள். ஆனால் ஹாலில் நடமாடிக்கொண்டிருந்த நிலவழகியால் அத்துணை எளிதில் விடமுடியவில்லை.
வெளியே கார் சத்தம் கேட்டதும் மகன் வந்துவிட்டான் என உறுதிபடுத்திக்கொண்டார். பவிதரன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் “பேர் வைக்குற ஃபங்சன் எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா பவி? பிள்ளைக்கு என்ன பேர் வச்சாங்க?” என்று இயல்பாகக் காட்டிக்கொண்டு வினவினார்.
சிவகாமி கொடுத்துவிட்ட தாம்பூலப்பையை அன்னையிடம் கொடுத்தான் பவிதரன்.
“தேஜஸ்வினினு வச்சிருக்காங்கம்மா. ஃபங்சன்ல எந்தக் குறையும் இல்ல”
“சந்தோசம்! நீ ஏதோ தங்கத்துல வாங்குனியே? குடுத்திட்டியா?”
இப்போது அன்னையின் குரலில் ஒலித்த உணர்வு பேதத்தைப் புரிந்துகொண்டான் பவிதரன்.
“குடுத்துட்டேன்மா. ரொம்ப நேரமாச்சே! உங்களுக்குத் தூக்கம் வரலையா?” என்றபடி தனது அறைக்குள் போக எத்தனித்தான்.
“நீ தட்சிணாமூர்த்தி மகள் கூட போனதா கேள்விப்பட்டேன்”
சட்டென நின்றவன் “ஆமா! அதுல என்ன இருக்கு? அவ என்னோட…” என்று ஆரம்பிக்க
“இனிமே அவ கூட பழக்கத்தைக் குறைச்சுக்க பவி. உனக்கு நான் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்கேன். உன் பெரியம்மா கிட்ட சொல்லி வச்சிருக்கேன். நாளை பின்ன பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம குடும்பத்தைப் பத்தி விசாரிக்குறப்ப இதெல்லாம் தெரிய வந்தா நல்லா இருக்காது” என்றார் கண்டனமாய்.
பவிதரன் புருவம் சுருக்கினான்.
‘முதலில் யாரைக் கேட்டுப் பெண் தேடுகிறார்கள்?’
எரிச்சலோடு அன்னையை நோக்கினான்.
“எனக்குப் பொண்ணு பாக்கவேண்டிய அவசியமில்ல” என்றான் சுருக்கமாக.
“ஏன்? நீயே பாத்து வச்சிட்டியா?” குத்தலாக வினவினார் நிலவழகி.
“பாத்தா என்ன தப்பு? நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்ல, ஒவ்வொன்னையும் நீங்க பாத்து வைக்குறதுக்கு. இனிமே பொண்ணு பாக்குற வேலை எல்லாம் வேண்டாம். சரியான டைம் வரட்டும்! நான் விரும்புற பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பேன்”
“யாரு? தட்சிணாமூர்த்தி மகளா?” அத்துணை கோபம் நிலவழகிக்கு.
“இருந்தா என்ன தப்பு?”
நிலவழகி மைந்தனின் கேள்வியால் விக்கித்துப்போனார். அப்படி என்றால் உறவுக்காரர் சொன்ன எதுவும் பொய்யில்லை. இவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. பொண்டாட்டி போல அவளிடம் தங்கச் செயினைக் கொடுத்து வைத்திருக்கிறான் என்றால் பிடித்தம் இல்லாமலா செய்திருப்பான்?
மனம் கொதித்தது நிலவழகிக்கு. மாணிக்கவேலுவுக்குத் தகவல் போனால் வீடே தலைகீழாகிவிடும். நிச்சயம் அவரால் தங்களது தகுதிக்குக் குறைவான ஒருத்தியை மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது.
சும்மாவே தந்தைக்கும் மகனுக்கும் ஏழாம்பொருத்தம். மகனின் இந்த முடிவால் இன்னும் அவர்களின் உறவு மோசமாகிவிடக்கூடுமே என்ற கவலை.
நிலவழகி கலங்கிய விழிகளோடு மகனை ஏறிட்டார்.

“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கும்மா. புரிஞ்சிக்கோங்க”
சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு அவனது அறைக்குள் போய்விட்டான் பவிதரன்.
நிலவழகிக்கு இந்த முடிவால் என்னென்ன அனர்த்தங்கள் நேருமெனத் தெரிந்ததால் மனக்கலக்கத்தின் உச்சத்தில் அவரது ஆதங்கம் கோபமாக உருவெடுத்தது. அந்த ஆதங்கத்தால் அவர் செய்ய யோசிக்கும் காரியம் ஈஸ்வரிக்கும் பவிதரனுக்கும் இடையே நிரந்தர பிளவை உண்டாக்க காத்திருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

