“ரொம்ப பிடிச்ச ஒருத்தரை விட்டு விலகி நிக்குறது கஷ்டமான விசயம். அதைச் செய்ய மனவுறுதி தேவை. எல்லா உறவுலயும் தனிப்பட்ட மனுசங்களோட உணர்வுகள் மட்டும் அந்த உறவோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும், கணவன் மனைவி உறவைத் தவிர. ஏன்னா நம்ம சமுதாயம் இதை குடும்பம் சார்ந்த உறவா கட்டமைச்சு வச்சிருக்கு. ஒரு குடும்பத்தோட உணர்வுகள் மொத்தமும் இந்த உறவோட பிணைக்கப்பட்டிருக்கு. இதுல நாம எடுக்குற முடிவுகளை நாம மட்டுமே தீர்மானிக்க முடியாது.
-ஈஸ்வரி
மதுமதி – தர்ஷனின் திருமணம் முடிந்த நாளில் இருந்து தர்ஷனைத் தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லலானார் மாணிக்கவேலு.
அவன் திருவனந்தபுரத்தில் இருந்த ஃப்ளாட்டை விற்று வந்த பணத்தை அப்படியே மாமனாரிடம் கொடுத்துவிட்டான்.
“இதை என்னோட முதலீடா வச்சுக்கோங்க மாமா. நீங்க தனியா எனக்குனு ஒரு தொழில் ஆரம்பிச்சுத் தர்றதுக்குப் பதிலா இதை உங்க தொழில்ல என்னோட முதலீடா போட்டு என்னையும் ஒரு ஷேர்ஹோல்டரா சேர்த்துக்கோங்க.”
பணத்துடன் வரும் மருமகனை மறுக்க மாணிக்கவேலுவுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? சந்தோசமாகத் தங்களது தொழிலில் அவனையும் ஒரு பங்குதாரனாக ஏற்றுக்கொண்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனது பங்கு முதலாக தொண்ணூறு இலட்சம் மாணிக்கவேலுவின் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது. தர்ஷனின் இந்த வெளிப்படையான செயல்பாட்டால் பவிதரனுக்கும் அவன்மீது நன்மதிப்பு வந்தது.
தனியே தொழில் ஆரம்பித்தால் வளர்வதற்கு வருடங்கள் ஆகும் என்பதால் இந்த வழிமுறையை அவன் கையாளுகிறான் என்று புரிந்தாலும் அவனிடம் நேர்மை இருப்பதாகவே தோன்றியது பவிதரனுக்கு.
அவ்வப்போது அவன் மேருவுக்கும் வந்து போவதுண்டு. அது யாருக்குப் பிடித்ததோ இல்லையோ ஈஸ்வரிக்குப் பிடிக்கவில்லை.
எப்போது அவன் பவிதரனின் நாற்காலியில் அதிகாரமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தாளோ அப்போதே அவன் மீது அவளுக்கு நல்லெண்ணம் இல்லை.
அதனால் அவன் வந்தாலே அவளது முகம் இஞ்சி தின்ற மனிதரின் மூதாதையர் போல அமர்ந்திருப்பாள். பவிதரன் அவளது மேஜையில் தட்டும்வரை அந்த முகபாவனை மாறாது.
அவனே வந்தாலும் முறைப்புதான். தனிமையில் சந்திக்க நேர்ந்தால் தனது அதிருப்தியைச் சொல்லிவிடுவாள்.
“எங்களுக்கு நீங்க மட்டும்தான் முதலாளியா இருக்கணும். அதை மனசுல வச்சுக்கோங்க”
இம்மாதிரி நாட்கள் கடந்தபோது ஒரு நாள் மேரு பில்டர்ஸ் அலுவலகத்துக்கு வருகை தந்தான் புவனேந்திரன். அவனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றாள்.
“வாங்க புவன் சார்! ஆதியக்கா வீட்டுக்கு வந்தாச்சுனு கேள்விப்பட்டேன்”
“ஆமாம்மா. நேத்து அழைச்சிட்டு வந்தேன். ஒரு முக்கியமான விசயம். நீ இங்க இருக்குறதும் நல்லதா போச்சு. வாயேன், உன் கிட்டவும் பவி கிட்டவும் ஒரே நேரத்துல சொல்லிடுறேன்”
என்ன விசயமாக இருக்குமென யோசித்தபடி புவனேந்திரனைத் தொடர்ந்தவள் பவிதரனின் அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.
“புவன்! வாங்க வாங்க” பவிதரனின் முகத்தில் மெய்யான சந்தோசம்.
“ஆதி வீட்டுக்கு வந்துட்டானு கேள்விப்பட்டேன்” என்றவன் புவனேந்திரன் அமரவும் ஈஸ்வரியையும் அமருமாறு கண் காட்டினான்.
ஈஸ்வரி மறுப்பாய்த் தலையசைத்தாள். இன்னும் புவனேந்திரன் அவளுக்குக் கரெஸ்பாண்டெண்ட் புவனேந்திரனாகத்தான் தெரிந்தான்.
அவனுக்கும் அது புரிந்தது போல. “உக்காரும்மா” என ஆதுரமாய் அவனே சொன்னதும் தயக்கத்தோடு அமர்ந்தாள்.
“இந்த வாரம் புதன்ல எங்க பொண்ணுக்குப் பேர் வைக்குறதா இருக்குறோம். ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். இன்னைக்கு ஈவ்னிங் ஆதி உங்களுக்குக் கால் பண்ணுவேன்னு சொன்னா”
ஈஸ்வரி முகமெல்லாம் புன்னகை ததும்ப வருவதாகச் சொல்லிவிட்டாள். பவிதரனும்தான்.
பின்னர் புவனேந்திரனும் பவிதரனும் அலுவலகத்திலிருந்து எங்கோ கிளம்பிவிட ஈஸ்வரி தனது இருக்கைக்கு வந்து சேர்ந்தாள்.
குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் என்றால் ஏதாவது வாங்கி செல்லவேண்டும். என்ன வாங்கலாமென்ற யோசனையில் ஆழ்ந்தபடியே வேலையில் மூழ்கிவிட்டாள்.
மதியவுணவு நேரத்தில் சுமதி மெதுவாக ஈஸ்வரியிடம் தர்ஷனைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.
“என்ன இருந்தாலும் அவர் நம்ம பவி சாரோட மச்சான் ஆச்சே. உன்னோட நடவடிக்கை அவருக்கு மரியாதை குறைவா தெரிஞ்சா அது உன் வேலைக்கு நல்லதில்ல ஈஸ்வரி”
“அப்பிடியா? அவன் யாரா வேணாலும் இருக்கட்டும். நம்ம சாரோட சீட்ல உக்காந்த அப்புறம் அவனுக்கு என்ன மரியாதை? இதால வேலையே போனாலும் ஐ டோண்ட் கேர்க்கா. இந்தக் கம்பெனி இல்லனா வேற கம்பெனி”
“இருந்தாலும் இவ்ளோ வாய் ஆகாதுடி உனக்கு”
“வாய் உள்ள பிள்ளைங்க தான் பொழைக்கும்கா”
மதியவுணவுக்குப் பிறகு வேலையில் நேரம் பறந்தபோது சைட்டிலிருந்து அலுவலகத்துக்குத் திரும்பிய பவிதரன் ஊழியர்கள் அனைவரிடமும் பேசவேண்டும் என்றான்.
அனைவரும் அவனது அலுவலக அறையில் ஆஜரானதும் முன்னாள் மேயரின் வீட்டுக் கட்டுமானம் முடிவடைந்து அடுத்த வாரம் புதுமனைப் புகுவிழா நடைபெறப் போகிற தகவலைக் கூறினான்.
“சைட்டுல வேலை பாத்தவங்க, ஆபிஸ் ஸ்டாஃப்னு எல்லாரையும் அவங்க வீடு பால் காய்ச்சுற நிகழ்வுக்கு அழைச்சிருக்காங்க. அடுத்த வெள்ளி நம்ம ஆபிஸ்ல இருந்து எல்லாரும் அங்க போறோம். யாருக்கும் ஆட்சேபனை இல்லையே?”
“இல்ல சார். போகலாம்” என ஒருமித்தக் குரலில் அனைவரும் சொல்ல முன்னாள் மேயர் கொடுத்த பணக்கவர்களை வினியோகிக்குமாறு ஈஸ்வரியிடம் குறிப்பிட்டான் அவன்.
“இது எதுக்கு சார்?” ஜீவன் கேட்க
“அவங்களோட கிப்ட் இது. நான் மறுப்பு சொல்ல முடியாதுல்ல? க்ளையண்ட் அன்போட குடுக்குறாங்க. சைட்ல வேலை பாத்த எல்லாருக்கும் புது ட்ரஸ், இந்த போனஸ் ரெண்டையும் குடுத்தாச்சு. அவங்க சந்தோசத்துக்காகச் செய்யுறப்ப மறுப்பு சொல்லுறது நல்லா இருக்காதுல்ல ஜீவன்” என்றான் பவிதரன்.
சுமதி அந்தக் கவர்களை அனைவருக்கும் வினியோகித்தார். அனைவரையும் போகச் சொன்னவன் ஈஸ்வரியை மட்டும் அங்கேயே இருக்குமாறு பணித்தான்.
மற்றவர்களின் பார்வை வித்தியாசமாக மாறுவதை அவன் உணரவில்லை. ஆனால் ஈஸ்வரி கண்டுகொண்டாள்.
“என்ன விசயம்? எதுவா இருந்தாலும் எல்லார் முன்னாடியும் சொல்லலாமே?”
“ஆதியோட மகளுக்குத் தங்கத்துல செயின் போடலாம்னு இருக்கேன். குழந்தைக்கு எப்பிடி செயின் வாங்கணும்னு எனக்குத் தெரியாது. நீ வாயேன்! போய் வாங்கிட்டு வந்துடலாம்” என்றான் சாதாரணமாக.
“எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்?” அங்கலாய்த்தாள் அவள்.
“லேடீஸ் தான் நகை வாங்குறதுல எக்ஸ்பர்ட். ப்ளீஸ்!”
அவன் ப்ளீஸ் போடவும் அவளால் முறுக்கிக்கொண்டு இருக்க முடியவில்லை.
“ஆபிஸ் டைம் முடிஞ்சதும் போகலாம்” என்று சொல்லிவிட்டாள்.
தனது இருக்கைக்கு வந்ததும் அன்னைக்கு மொபைலில் அழைத்து விவரத்தைக் கூறினாள்.
“அந்தத் தம்பி கூடவா போற?” என்றவரின் குரலில் தயக்கம்.
“ஏன்மா? எதுவும் பிரச்சனையா?”
“அதில்ல ஈஸ்வரி. வண்ணாரப்பேட்டை போறேன்னு சொல்லுற. அங்க நம்ம ஊராளுங்க வர்றதும் போறதுமா இருப்பாங்க. உன்னையும் அந்தத் தம்பியையும் சேர்த்து வச்சு பாத்துட்டா எதாச்சும் கதை கட்டி விடுவாங்க. நமக்கு எதுக்குப் பெரியாளுங்களோட பொல்லாப்பு?”
இளவரசியின் கவலை அவளுக்கும் புரிந்தது. அவளது தயக்கத்துக்கும் அதுவே காரணம். ஆனால் பவிதரன் மனக்கண்ணில் வந்து மீண்டும் ப்ளீஸ் போடவும் தயக்கத்தைத் துறந்தாள்.
“ஊர்க்காரங்க எப்ப தான் அமைதியா இருந்தாங்க? அவங்களுக்கு எப்பவும் ஏதோ ஒன்னைப் பேசிப் பொழுதைப் போக்கணும். நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தப்பவே நான் வீட்டுக்கு லேட்டா வர்றேன்னு வடிவு கிழவி ஊர் முழுக்க தண்டோரா போட்டிருக்கு. இப்ப என்ன புதுசா சொல்லிடப் போறாங்க? விடும்மா. இதெல்லாம் யோசிக்காத”
அன்னையிடம் பேசிவிட்டு அவள் ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டபோது பவிதரனும் வந்துவிட்டான்.
“கிளம்பலாமா?” என்றவனின் முகத்திலிருந்த மந்தகாசப்புன்னகைக்கான அர்த்தம் ஈஸ்வரிக்கு அப்போது புரியவில்லை. ஆனால் காரிலேறி வண்ணாரப்பேட்டையில் இருக்கும் பிரபல தங்கநகைக்கடையை அடைந்ததும் கொஞ்சமாய் புரிந்தது.
“நீ ஏன் மோதிரம் போடுறதில்ல?”
“இது என்ன கேள்வி? மோதிரம் இல்ல. போடல”
“ஓஹ்!”
தரிப்பிடத்தில் காரை நிறுத்தியவன் கடைக்குள் போனதும் ஈஸ்வரி செயின் செக்சனை நோக்கி நகர அவனோ மோதிரம் இருக்கும் செக்சனில் நின்றுவிட்டான்.
ஈஸ்வரி திரும்பி அவனைப் பார்த்தாள்.
“அங்க ஏன் நிக்குறிங்க? செயின் செக்சன் இதுதான். இங்க வாங்க”
அவன் பதில் பேசாமல் ‘நீ இங்கே வா’ என்று கைகளால் சைகை காட்டவும் அவனை நோக்கி வந்தாள்.
“என்ன?” என்றவளிடம் விதவிதமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மோதிரங்களைக் காட்டினான்.
ஈஸ்வரிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
“இதுல உனக்குப் பிடிச்ச டிசைனை எடுத்துக்க”
திகைப்பில் கண்கள் பெரிதாக விரிய முகமோ முறைப்பைத் தத்தெடுத்துக் கொண்டது.
“நாம இங்க ஆதியக்காவோட மகளுக்குச் செயின் வாங்க வந்தோம்.”
“அது ஞாபகம் இருக்கு. இப்ப நான் சொன்னது கேட்டுச்சுல்ல? உனக்குப் பிடிச்ச டிசைனை எடு”
“நான் உங்க கிட்ட கேட்டேனா?”
“உன் விரல் வெறுமையா இருக்கு. அதனால கேட்டேன்”
“என் கழுத்து கூட தான் வெறுமையா இருக்கு” கடுப்பில் என்ன பேசுகிறோமெனப் புரியாமல் அவள் கேட்டுவிட்டாள்.
“விரலைக் கவனிச்சவன் கழுத்தைக் கவனிக்காம இருப்பேனா? உனக்கு ஓ.கேனா இப்பவே தாலி கட்ட நான் ரெடி”
“மண்ணாங்கட்டி” உறுத்து விழித்தவள் பின்னர் நிதானமாகி “நீங்க நினைக்குற மாதிரி அது ஈசியில்ல” என்றாள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவளாய்.
“ஈசினு நானும் சொல்லலையே! முதல் தடையே நீதான்”
ஆட்காட்டிவிரலால் அவளைச் சுட்டிக்காட்டியவன் விற்பனை பெண்ணிடம் மோதிரங்களை எடுத்து வைக்குமாறு சொன்னான்.
“எனக்கு வேண்டாம். நீங்க வாங்கி குடுத்தாலும் நான் போட்டுக்க மாட்டேன். எங்கம்மா மோதிரத்தைக் காட்டி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுறது?”
“நான் வாங்கிக் குடுத்தேன்னு சொல்லு”
“எனக்கு வாங்கிக் குடுக்க நீங்க யாருனு அவங்க கேட்டா?”
“அவங்களோட வருங்கால மருமகன்னு சொல்லு”
இவன் எப்போது விடாக்கண்டன் ஆனான் என ஈஸ்வரி திகைக்கையிலேயே ஒரு மோதிரத்தை எடுத்து அவளது விரலில் போட்டுப் பார்த்தான் பவிதரன்.
கையை விலக்கிக்கொள்ள முயன்றவளுக்கோ அவனது பிடி இறுக்கமாய் இருக்கவும் சங்கடம்.
“எல்லாரும் பாக்குறாங்க. இதுல நம்ம ஊராளுங்க இருந்தாங்கனா நான் செத்தேன். இந்த வாரம் முழுக்க வாய்க்கால் படித்துரைல என்னைப் பத்தி தான் பேச்சு ஓடும்”
பதறியபடி அவள் சொல்ல பவிதரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ சும்மா இருந்தாலும் பேசுவாங்கதானே? ஏதாச்சும் பண்ணிட்டுப் பேச்சு வாங்கலாம். தப்பில்ல”
“எவ்ளோ சுயநலம் உங்களுக்கு”
காட்டமாய் அவள் குற்றம் சாட்டவும் பவிதரன் முகம் மாறிப்போனது.
அவளது விரலில் போட்டுக்கொண்டிருந்த மோதிரத்தைப் பாதியில் கழற்றிவிட்டான்.
“எ..என்ன? ஏன் உங்க முகம் மாறி…”
அவன் அவளிடம் பேசவில்லை. விற்பனை பெண்ணிடம் அங்கிருந்த மோதிரங்கள் எதுவும் ஈஸ்வரியின் விரலுக்குப் பொருத்தமில்லை என்று சொல்லிவிட்டு செயின் இருக்கும் செக்சனை நோக்கி நடந்தான்.
ஈஸ்வரி அவன் பின்னே ஓடினாள்.
“குழந்தை கழுத்தை உறுத்தாத மாதிரி ஒரு செயினை எடு. டாலர்ல முருகன் இல்லனா ஓம் இருக்கணும்”
கட்டளை போல சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டான்.
ஈஸ்வரிக்கு முதல் முறையாக அவனிடம் கண்ட இந்த முகமாற்றமும் ஒதுக்கமும் விசித்திரமான வகையில் வேதனையூட்டுவதாய்!
இருப்பினும் அதை ஒதுக்கிவிட்டு செயின்களைப் பார்க்கலானாள்.
முடிவில் அவன் எதிர்பார்த்தபடி குழந்தையின் சருமத்தை உறுத்தாத வடிவமைப்பில் தங்கச் செயினும், ஒரு பக்கம் முருகனும் மறுபக்கம் ஓம் எழுத்தும் இருக்கும் டாலரும் கிடைத்தது.
அவனிடம் காட்டினாள் ஈஸ்வரி.
“ம்ம்! இதையே பில் போட்டுருங்க”
சொன்னவன் பில் கவுண்டருக்குச் சென்றுவிட்டான். ஈஸ்வரியும் பின்னே சென்றாள்.
பில் போட்டு செயினை வாங்கியவன் வெளியே வந்ததும் அவளிடம் செயின் அடங்கிய பையைக் கொடுத்தான்.
“எங்க வீட்டாளுங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவங்க ஆதிராவை விரோதியா பாக்குறவங்க. நீயே வச்சுக்க. புதன்கிழமை ஆபிசுக்கு எடுத்துட்டு வா.”
“முடியாது”
“முதலாளி குடுத்துவிட்டார்னு சொல்லு. உங்கம்மா கேள்வி கேக்க மாட்டாங்க. உனக்கும் நான் முதலாளியா இருக்குறது மட்டும்தானே பிடிக்குது?”
சுள்ளென்று சொல்லிவிட்டு காரை நோக்கி அவன் சென்றுவிட ஈஸ்வரி கடுப்போடு நகைக்கடைப் பையை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
“ஒன்னு தேன் வடியுற மாதிரி இனிப்பா பேசுறது. இல்லனா பச்சைமிளகாயைக் கடிச்ச மாதிரி காட்டமா எரிஞ்சு விழுறது. என்ன மனுசனோ?”
மனதுக்குள் அவள் கரித்துக் கொட்டுகையில் கார் வந்து நின்றது அவளருகே. அந்தப் பக்கம் சரிந்து கார்க்கதவைத் திறந்துவிட்டான் பவிதரன்.
“நாங்க பஸ்ல போயிப்போம்”
முரண்டு பிடித்தாள் ஈஸ்வரி.
கண்களில் கனலுடன் திரும்பியவன் “போன வாரம் மட்டும் அந்த பஸ் ஸ்டாண்டுல ரெண்டு பேர் நகைய பறிக்குடுத்தாங்க. நியூஸ் பேப்பர்ல வந்துச்சே! மறந்துட்டியா?” என்று கேட்க சத்தமில்லாமல் வந்து அவனருகே இருக்கும் சீட்டில் அமர்ந்துகொண்டாள்.
கார் நதியூரை நோக்கி வேகமெடுத்தது. கனத்த மௌனம் அங்கே!
எதிரில் வரும் வாகனங்களின் பளிச் ஒலியும் இருளும் மட்டுமே சாலையின் இரு ஓரங்களிலும்.
ஈஸ்வரிக்கு அந்த அமைதி பிடிக்கவில்லை. அவனது முகத்திருப்பல் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஒரு பெண்ணாகத் தனது நிலையைப் பற்றி அவன் யோசித்திருக்க வேண்டும். அவன் நினைப்பது போல அவ்வளவு சுலபத்தில் நகை பரிசுகளை எந்தப் பெண் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இதெல்லாம் அவனுக்குப் புரியவைத்தாகவேண்டுமென்ற வேகம் அவளுக்குள்.

கார் ஓட்டிக்கொண்டிருந்தவனின் பக்கம் திரும்பியவள்,
“உங்க கோவத்துல கொஞ்சம் கூட நியாயமில்ல. நீங்க நினைக்குற மாதிரி எங்க வீட்டுல நீங்க வாங்கி குடுக்குற நகைய சாதாரணமா எடுத்துக்கமாட்டாங்க. முதல்ல அதை நீங்க புரிஞ்சிக்கணும்” என்றாள் நிதானமாக.
பவிதரன் காரை ஓட்டிபடியே புருவங்களை மட்டும் ஏற்றியிறக்கினான்.
“புரிஞ்சுதா புரியலையானு சொல்லுங்க”
அவனது முகம் இறுகியது.
“ஏதாச்சும் பேசுங்க”
“என்ன பேசணும்?” இரும்பின் கடினத்தோடு கேட்டான்.
இப்போது ஈஸ்வரியின் வாய் பூட்டு போட்டுக்கொண்டது.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கும் என்னைப் பிடிக்கும். ஆனா நீ தேவையில்லாம என்னைக் காக்க வைக்குற. உன் தயக்கம், பயம் எல்லாம் பத்து பைசாக்குப் பிரயோஜனமில்ல. எல்லா பணக்காரனும் ஆசைக்குக் காதலிச்சு ஆசை தீர்ந்த அப்புறம் உதறிட்டு ஓடுறவன் இல்ல. முக்கியமா நான் அப்பிடிப்பட்டவன் இல்ல. எனக்கு உன் கூட வாழணும்ங்கிற ஆசை ரொம்ப அதிகமா இருக்கு. நீ யோசிக்க யோசிக்க அது இன்னும் தீவிரமாதான் மாறுமே தவிர குறையாது”
“நான் எப்ப உங்களைப் பிடிக்கும்னு சொன்னேன்?”
வேண்டுமென்றே கேட்டாள் ஈஸ்வரி.
“உனக்கு ஒத்துக்க மனசில்லனு சொல்லு. உன் குரலே உனக்கு ஒத்துழைக்கலடி.”
இன்னும் எரிச்சல் அடங்கவில்லை பவிதரனின் குரலில்.
“உங்க வீட்டுப்பொம்பளைங்க சரியில்ல.”
“நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போற”
“ஆனா வாழப்போறது அந்த வீட்டுலதானே? பணமும், திமிரும் நிரம்பியிருக்குற அந்த வீடு என்னைக்குமே எனக்குச் சந்தோசத்தைக் குடுக்காது”
“அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எல்லாரையும் நான் உதறணுமா?”
“நான் அப்பிடி சொல்லவேல்ல. அது என்னோட எதிர்பார்ப்பும் இல்ல. ஒரு விசயம் சரிவராதுனு தோணுச்சுனா நான் அதைப் பத்தி அதிகமா யோசிக்கமாட்டேன். உங்களோட விருப்பம் என்னனு எனக்குத் தெரிஞ்சும் நான் தயங்குனதுக்குக் காரணம் எப்பவுமே உங்களுக்கும் எனக்கும் சரிவராதுங்கிற உண்மையாலதான். நிதர்சனம் என்னவோ அதை நான் ஏத்துக்கிட்டேன். நீங்களும் ஏத்துக்கிட்டா இந்த ஆதங்கம், கோவம் எல்லாம் எந்தளவுக்கு அர்த்தமில்லாததுனு உங்களுக்குப் புரியும்”
“ஈஸ்வரி! நீ செய்யுறது நியாயமே இல்லடி. நீ உதாசீனப்படுத்துறது என்னோட உண்மையானக் காதலை”
சொல்லும்போதே குரல் கரகரத்தது பவிதரனுக்கு.
“நான் உதாசீனப்படுத்தலங்க. எனக்கு வேண்டாம்னு விலகி நிக்குறேன். புரிஞ்சிக்கோங்க”
அமைதியாய்ச் சொன்னவள் வெளியே வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்ய ஆரம்பித்தாள்.
இதே பாவனை நதியூரில் கார் நிற்கும்வரை தொடர்ந்தது.
கார்க்கதவைத் திறந்துவிட பவிதரன் சரியவும் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
யாரை விட்டு விலகி ஓட அவள் நினைக்கிறாளோ அவனது அண்மையில் அவளது மனம் வெட்கம் கெட்டுப் போகிறது. அவளது உடலும் சிலிர்த்துத் தொலைக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனால் ஈஸ்வரி அவளுக்கே அநியாயம் செய்துகொண்டிருக்கிறாள். அவளது மனதுக்கும் அவளது வாழ்க்கைக்கும் சேர்த்தே இந்த அநியாயத்தைச் செய்துகொண்டிருக்கிறாள்.
கதவு திறந்ததும் இறங்கியவள் திரும்பிக் கூட பார்க்காமல் வேகநடை போட்டுச் செல்ல பவிதரனுக்குள் இருந்த இரத்தமும் சதையுமான இதயம் கண்ணாடியாய் மாறி நொறுங்க ஆரம்பித்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

