“இப்ப எல்லாம் நான் கடிகாரம் ஓடுறதைக் கவனிக்குறதே இல்ல. அன்பான உலகத்துல நேரக்கணக்குக்கு அவசியமில்லனு நினைக்குறேன். சிலரோட செலவளிக்குற நேரம் நம்ம வாழ்க்கைய அழகாக்குதுனா அங்க கடிகாரத்துக்கு ஓய்வு குடுக்குறது நல்லதுதானே?”
-பவிதரன்
அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்க அட்சதை மழையில் நனைந்தபடி அதை மதுமதியின் கழுத்தில் கட்டினான் தர்ஷன்.

இருவரது மனமும் அம்மனிடம் வேண்டிக்கொண்டது என்னவோ ஒரே ஒரு விசயத்தைத்தான்.
“இந்த வாழ்க்கை எங்களுக்கு எந்தச் சோதனையையும் குடுத்துடாம காப்பாத்துங்க. நாங்க இனியாச்சும் இயல்பான வாழ்க்கைய வாழணும்”
வாழ்க்கையில் உதாசீனத்தையும் புறக்கணிப்பையும் மட்டுமே சந்தித்த இரு மனங்களில் மறுமணம் கலக்கத்தை உருவாக்குவது இயல்புதானே! என்ன ஒன்று, இணைந்த இரு மனங்களில் ஒன்று சுயநலத்தின் மறுவுரு. மற்றொன்றோ கணக்குப் போட்டு காய் நகர்த்தும் சூத்திரதாரி. ஆனால் இரு மனங்களும் ஒன்றாய் ஏங்கியது என்னவோ நல்லதொரு இல்லற வாழ்க்கைக்கே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இரு குடும்பத்துப் பெரியவர்களும் இனியாவது அந்த நல்வாழ்க்கை உங்களுக்கு வாய்க்கட்டுமென அட்சதை தூவி ஆசிர்வதித்தார்கள்.
“மச்சினன் எங்க? மாப்பிள்ளையோட கையைப் பிடிச்சு வலம் வாங்க”
பவிதரன் தர்ஷனின் வலது கரத்தைப் பிடித்துக்கொண்டான். கோவிலை வலம் வந்த பிறகு தங்க பிரேஸ்லெட் ஒன்றை தர்ஷனின் கரத்தில் போட்டுவிட்டான் பவிதரன்.
“இதெல்லாம் எதுக்கு பவி?” என தர்ஷன் தவிர்க்கப் பார்த்தாலும்,
“எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க. உங்களுக்கு எந்தவிதத்துலயும் மரியாதை குறைஞ்சுடக் கூடாது. இது சம்பிரதாயம். அதே நேரம் என்னோட பரிசாவும் நினைச்சுக்கோங்க. இந்தத் தடவை உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்ல மாதிரி அமைய வாழ்த்துகள்” என மனம் நிறைய வாழ்த்தினான் அவன்.
தர்ஷனோடு நின்றுகொண்டிருந்த மதுமதியின் கண்கள் அந்தக் கணத்தில் கலங்கிப்போயின.
பவிதரன் தன்னைவிட மலர்விழியையும் ஆதிராவையும் முக்கியமாக நினைக்கிறான் என்ற வருத்தத்தோடும், அவனுக்குத் தன்னைப் பிடிக்காது என்ற கற்பனையோடும் இருந்தவளுக்கு அவனது தூய அன்பை நேரில் கண்டதும் நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிப்போயின.
“அண்ணா!” என அவள் குரல் உடைய அழைக்கவும்,
“இது உனக்குச் செட் ஆகலடி. நீ எப்பவும் போலவே பேசு” எனப் பின்னே நின்று கிண்டல் செய்தாள் ஷண்மதி.
அவளும் ரவியும் வந்திருந்தார்கள். கூடவே ரவியின் பெற்றோரும். மாணிக்கவேலுவே நேரில் வந்து அழைப்பு வைத்ததால் சிகாமணியும் குழலியும் வருகை தந்திருந்தார்கள்.
அவர்களும் மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்கள். சிகாமணி கொடுத்த மொய்க்கவரை எந்தச் சுணக்கமுமின்றி வாங்கிக்கொண்டாள் மதுமதி. இப்போது சித்தப்பாவின் நிலை உயர்ந்துவிட்டது அல்லவா! அதற்கேற்ற மரியாதையைக் கொடுக்கவேண்டுமே!
மாணிக்கவேலு அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் புத்தாடைகளும், போனஸ் பணமும் கொடுத்து திருமணத்துக்கு அழைப்பு வைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள். மணமக்களை வாழ்த்தினார்கள்.
அவர்களில் ஒரே ஒருத்தி மட்டும் புத்தாடை, போனஸ், திருமண அழைப்பிதழ் என எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. அவள் திருமணத்துக்கு வரவும் இல்லை.
அவள் ஈஸ்வரி. அவள் வரமாட்டாள் என்று பவிதரனுக்கும் நன்றாகவே தெரியும். மலர்விழியின் தோழி வருவாள் என்று எதிர்பார்ப்பது மடமை என அறிந்தவனாயிற்றே!
சிவகாமி மட்டும் காலையிலேயே அவனது மொபைலுக்கு அழைத்து மதுமதிக்குத் தனது ஆசிர்வாதத்தைச் சொல்லுமாறு கூறியிருந்தார்.
யாருக்கும் மதுமதி நன்றாக வாழக்கூடாது என்ற எண்ணமில்லை. அவள் நல்ல மனமுடையவளாக மாறவேண்டும் என்ற ஆசையே! அந்த ஆசை இம்முறை நிறைவேறும் என்ற நம்பிக்கை பவிதரனுக்கு.
திருமணத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால் காலை உணவை ரங்கநல்லூர் வீட்டில் வைத்தே பரிமாறிவிடலாமென மாணிக்கவேலு மகனிடம் சொல்லிவிட்டார்.
திருமணத்துக்கு வந்திருந்த ஊழியர்களுக்காக தனி வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தான் அவன். நெருங்கிய உறவுகளுக்குத் தனி கார்கள். அனைவரும் ரங்கநல்லூர் வீட்டை அடைந்ததும் விருந்து பரிமாறத் தயாராய் இருந்தார்கள் கேட்டரிங் குழுவினர்.
விருந்து பரிமாறப்பட தர்ஷனையும் மதுமதியையும் ஒன்றாய் அமர வைத்து உணவு பரிமாறி, அதை புகைப்படங்களாவும் வீடியோவாகவும் பதிவு செய்தார்கள் புகைப்படக் கலைஞர் குழுவினர்.
நடப்பவை அனைத்தையும் மனம் நிறைய பார்த்துக்கொண்டிருந்தார் நிலவழகி. இனி மதுமதியைப் பற்றிய கலக்கம் அவருக்கு அவசியமில்லை. கிட்டத்தட்ட சகுந்தலாவின் மனநிலையும் அதுவே.
அவர்களின் தொழில் நிறுவனங்களின் ஊழியர்களுக்குத்தான் விடுமுறை. மற்றபடி கட்டுமான சைட்டுகளில் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன.
காலை உணவை முடித்துக்கொண்ட பவிதரன் கே.டி.சி நகர் சைட்டுக்குக் கிளம்பினான்.
“ஏன்டா இன்னைக்குக் கூட வீட்டுல இருக்கமாட்டியா?” ஷண்மதி அங்கலாய்த்தாள்.
“என் கல்யாணம் அன்னைக்கு வேலை இருந்தா கூட நான் போய்தான் ஆகணும்கா”
“அது சரி! வாய் வார்த்தையா கல்யாணம்னு சொன்னா போதுமா? அம்மாவ பொண்ணு பாக்க வேண்டாம்னு சொல்லிட்டியாமே? ஒரே வருத்தம் அம்மாக்கு” ஷண்மதியின் கண்களில் குறுகுறுப்பு.
அதைக் கண்டுகொண்டவன் சிரித்தான்.
“சிரிக்காத! என் மகன் மணமேடைல உக்காருறதுக்கு முன்னாடியாச்சும் கல்யாணம் பண்ணிடுவியா?”
“ரொம்ப கவலைப்படாத. உனக்கு என் பொண்ணு தான் மருமகள். இது பவிதரனோட ப்ராமிஸ்” சிரித்தபடியே ஸ்லீவை மடித்துவிட்டுக் கொண்டான் அவன்.
“அதுக்கு உன் பொண்டாட்டி சம்மதிக்கணுமே?”
“அவ இதுக்கெல்லாம் மறுப்பு சொல்லமாட்டா” உறுதியான குரலில் பவிதரன் சொல்லவும் ஷண்மதியின் விழிகள் பளிச்சிட்டன.
“அப்ப யாரோ இருக்காங்க. சொல்லு! யாருடா அந்தப் பொண்ணு? சும்மா ஆலமரத்தைச் சுத்தி வந்து அடிவயித்தைத் தொட்டுப் பாத்த கதை எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு என் தம்பி மனசுல யார் இருக்காங்கனு தெரியணும்” எதிர்பார்ப்புடன் வினவினாள் அவள்.
பவிதரனின் இதழ்கள் நிரந்தரமான புன்னகை ஒன்றை ஈன்றன.
“இன்னும் அவ மனசுல என்ன இருக்குனு தெரியலயே, அதுக்கு முன்னாடி அவ பேர எப்பிடி சொல்லுறது?”
“உன்னை யாருக்குடா பிடிக்காம போகும்?”
தம்பியின் மோவாயைக் கிள்ளி கேலியாய்ச் சொன்னாலும் ஷண்மதிக்குத் தம்பியின் குணநலன், தோற்றம் என அனைத்தின் மீதும் கர்வமுண்டு. எந்தப் பெண்ணாலும் அவனை மறுக்க முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கை அவளுக்கு.
“அவ மட்டும் சரினு சொல்லட்டும். முதல்ல உன் முன்னாடிதான் அவளைக் கொண்டு வந்து நிறுத்துவேன். ப்ராமிஸ். இப்ப நான் கிளம்பணும். ராமசாமியண்ணன் இதோட நாலு தடவை போன் பண்ணிட்டார்க்கா”
“சரிடா! ஆனா உன் ப்ராமிசை மறந்துடாத”
தமக்கை வழியனுப்ப காரிலேறியவன் தன்னை அதிருப்தியுடன் பார்த்த தந்தையைக் கவனிக்கத் தவறிப்போனான்.
“இன்னைக்குத்தான் என் மகள் வாழ்க்கைல ஒரு வெளிச்சம் வந்திருக்கு. இன்னைக்கும் வேலைக்குப் போகனுமா? தங்கச்சி வாழ்க்கை மேல அக்கறை இருக்குற அண்ணன் இப்பிடி செய்வானா?”
அவர் வெளிப்படையாகப் பொரும அங்கே நின்றுகொண்டிருந்த சிகாமணிக்கு மனம் பொறுக்கவில்லை. குழந்தையிலிருந்து அவர் பவிதரனைப் பார்க்கிறார். பணத்துக்கும் அந்தஸ்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவனில்லை அவன்.
‘ஏதோ முக்கியமான வேலை இருப்பதால்தான் அவன் இப்படி ஓடுகிறான். இதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன் அண்ணன் அவனைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்?’
“பவி மாதிரி பிள்ளை ஒருத்தன் இருக்கப் போய்தான் இன்னைக்கும் உங்க தொழில் ஆலமரம் மாதிரி நிலைச்சு நிக்குதுண்ணே! ஏதோ முக்கியமான வேலை இருக்கப் போய்தான் அவன் போறான். அவனை விட்டு விலகி நிக்காதிங்க. அப்பா மகனுக்கு இடையில இருக்குற விலகல் வெளிய தெரிய வந்துச்சுனா அது சிலருக்கு ஆதாயமா மாறிடும்.”
சிகாமணி மெய்யான அன்போடு சொன்ன அறிவுரை அது. வினோதத்திலும் வினோதமாக அது நிலவழகிக்கும் சரியென்றே தோன்றியது.
மகனின் அருமை அவருக்கு நன்றாகவே தெரியும். மதுமதியின் ஒவ்வொரு பிழைக்கும் அவன் சந்தித்த அழுத்தங்கள், தானும் கணவரும் சிகாமணியின் குடும்பத்துக்குச் செய்த அநீதிக்கு அவன் எடுத்த கடினமான முடிவுகள் எல்லாம் வேறொருவன் எதிர்கொள்ள வேண்டியிருந்தால் கட்டாயம் அவன் பெற்றோரையும் உடன்பிறந்தவளையும் ஒதுக்கியிருப்பான்.
ஆனால் பவிதரன் தங்களையும் இந்தக் குடும்பத்தையும் விட்டு விலக என்றுமே எண்ணியதில்லை. அவன் நல்ல மைந்தன். அற்புதமான சகோதரன். அதை யாராலும் மாற்ற முடியாது என்று எண்ணிக்கொண்டார் நிலவழகி.
அதே நேரம் அவரது மைந்தன் ரங்கநல்லூர் பஜாரை அடைந்திருந்தான் காரில்.
காரை கே.டி.சி நகருக்குச் செல்வதற்கான பாதையில் திருப்பியபோது கையில் பெரிய பிளாஸ்டிக் கூடையோடு ஈஸ்வரி எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அன்று அலுவலகத்துக்கு விடுமுறை! ரங்கநல்லூரைச் சுற்றியிருக்கும் சிறு கிராமங்கள் அனைத்துக்கும் நியாயவிலைக்கடை ரங்கநல்லூரில்தான் இருக்கிறது. அன்றைய தினம் அரிசியும், சீனியும் போடுவதாக பக்கத்துவீட்டு அக்கா சொன்னதும் கூடையோடு கிளம்பி வந்துவிட்டாள் ஈஸ்வரி.
நியாயவிலைக்கடையில் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வாங்கிக்கொண்டால் இட்லி, தோசை மாவு அரைத்துக்கொள்ளலாம். அது போக சர்க்கரை, சோப்பு, டீ தூள் எல்லாம் குறைந்த விலைக்குக் கிடைக்கும்.
இட்லி அரிசி கடையில் வாங்கினால் கட்டுப்படி ஆகாது என்று எப்போதுமே நியாயவிலைக் கடையில்தான் அரிசி வாங்குவார்கள் ஈஸ்வரியின் வீட்டில்.
“உருட்டு அரிசி இருக்குதாம். இட்லி, தோசை ரெண்டுக்கும் நல்லா இருக்கும். பாத்து வாங்கு ஈஸ்வரி. அரிசிய வாங்கி நம்ம சரவணன் கடைல வச்சிடு. முப்பத்தைஞ்சு கிலோவ உன்னால தூக்க முடியாது. சீனியும் பருப்பும் மட்டும் வாங்கிட்டு வா” என்று சொல்லிதான் அனுப்பியிருந்தார் இளவரசி.
நியாயவிலைக்கடையில் பணியாற்றும் சண்முகத்தை அவளுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால் வழக்கம் போல அவரிடம் சிறிது நேரம் வாயாடிவிட்டு பருப்பும் சீனியும் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தவள் எதிரே வந்த பவிதரனின் காரைப் பார்த்ததும் சின்னதொரு எதிர்பார்ப்போடு நோக்கினாள்.
கார் நின்றது. அவனும் இறங்கி வந்தான்.

“என்ன இது?” என்று கூடையைக் காட்டி வினவினான்.
“ரேஷன்ல சீனியும் பருப்பும் வாங்கிட்டு வர்றேன்”
“எப்பிடி இவ்ளோ வெயிட்டைத் தூக்கிட்டுப் போவ?” அக்கறையில் குளித்த குரல் அவளைத் தடுமாறச் செய்தது.
சமாளித்துக்கொண்டவள் “இதெல்லாம் ஒரு வெயிட்டா? எங்க வீட்டுல கேஸ் சிலிண்டரையே நான் தான் மாட்டுவேன்” என்றாள் பெருமிதமாய்.
“தரையில உருட்டி கொண்டு போறதுக்கும், கையில இவ்ளோ வெயிட்டைத் தூக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குதே”
“ரெண்டும் சேர்ந்து ஆறு கிலோ கூட இருக்காது. இருந்தாலும் உங்க அக்கறைக்குத் தேங்க்ஸ். கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” என விசாரித்தாள்.
“ம்ம். நான் சைட்டுக்குப் போயிட்டிருக்கேன். அங்க ஏதோ பிரச்சனைனு ராமசாமியண்ணன் வரச் சொன்னார்”
“அச்சோ! நான் உங்க டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேனா? நீங்க கிளம்புங்க”
“உன் கூட பேசுற நேரம் எனக்கு வேஸ்டா தோணாது. என் வாழ்க்கைல நான் செய்யுற ரொம்ப பெரிய இன்வெஸ்மெண்ட் உன் கூட பேசுற இந்த நிமிசங்கள்தான். இந்த முதலீடு வருங்காலத்துல எனக்கு நல்ல ரிட்டர்னை குடுக்கும்னு என் மனசு நம்புது”
கண்கள் பளபளக்க அவன் சொன்னதும் முகம் மாறிப் போனாள் ஈஸ்வரி. இது முதல் முறை அல்ல! இதோடு பல முறைகள் நேரடியாகவும் மறைமுகமாவும் அவன் தனது மனதிலிருப்பதைச் சொல்லிவிட்டான். ஆனால் அவள்?
இதோ இப்போது நிற்பது போல தயங்கி, தடுமாறி, மலைத்துப் போய் நிற்கிறாள் எப்போதுமே!
அன்பான இதயம் கொண்ட ஆண்மகனால் நேசிக்கப்படுவது ஒரு பெண்ணுக்குப் பெரிய வரம். அந்த வரத்தை மறுக்கும் அளவுக்கு எந்தப் பெண்ணும் முட்டாளாக இருக்கமாட்டாள்.
ஆனால் ஈஸ்வரி தயங்கினாள். இது சரியாக வருமா என்று ஒவ்வொரு முறையும் அவள் மனம் கேட்கிறது.
அவனைச் சந்தேகிக்கவில்லை அந்த மனம். ஆனால் ஏதோ ஒரு தடையை உணர்கிறது.
மறுக்கும் வலிமையற்ற ஈஸ்வரியின் மனதுக்கு அவனது நேசத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவும் வரவில்லை.
தன்னை சமனப்படுத்திக்கொண்டவள் முறுவலித்தாள்.
“பிசினஸ்மேன் இல்லையா? இன்வெஸ்ட்மெண்ட், ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்டுனு கணக்குல சரியா இருக்குறிங்க” என்று கேலி போல பேச்சை மாற்ற முயன்றாள்.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லலைனு உனக்கும் தெரியும். நீயே உன் வாயைத் திறந்து எல்லாத்தையும் ஒத்துக்குற நாளுக்காகக் காத்திருக்குறேன். பாத்து கவனமா போ. பஸ்சுக்கு வெயிட் பண்ணாம ஆட்டோல போயிடு. இப்ப தான் மாரியண்ணன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்ததைப் பாத்தேன்”
“இங்க இருந்து ஊருக்குப் போக அந்தண்ணன் எண்பது ரூவா கேக்கும். அதுக்கு நான் பஸ்சுலயே போயிடுவேன்” என்று முறுக்கிக்கொண்டாள் அவள்.
“எண்பது ரூபாயை மிச்சம் பிடிச்சு எத்தனை பவுன் வாங்கப் போற நீ?”
“எண்பது ரூவாய்க்குப் பவுன் வாங்க முடியும்னா நாங்க எதுக்கு ரேஷன்ல அரிசியும் சீனியும் வாங்குறோமாம்? ஆம்பளைங்க பேச்சு பவுசா இருக்கும். ஆனா கல்யாணம்னு வந்துட்டா பவுசு எல்லாம் பவுனா மாறிடுமே!”
“எனக்கு எந்தப் பவுனும் தேவையில்ல. அதனால மிச்சம் பிடிக்காம ஆட்டோல போ”
அவன் பேசும்போதே மொபைல் இசைக்கவும்
“நீங்க முதல்ல கிளம்புங்க. இல்லனா ராமசாமியண்ணன் நேரா இங்க வந்து குதிச்சிடப் போகுது” என்று கேலிச்சிரிப்போடு சொன்னாள் ஈஸ்வரி.
பவிதரன் சரியெனத் தலையசைத்தவன் காரில் ஏறினான். அவளிடம் கையசைத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.
ஈஸ்வரியின் கை அனிச்சையாக உயர்ந்து அவனுக்கு ‘டாட்டா’ காட்டியது. மென்னகை அவளது இதழில்.
மறுக்கவும் மறைக்கவும் தெரியாத அவளுடைய இதயத்தின் ஆசைகள் அங்கே வெளிவந்தன புன்னகையின் ரூபமாய்! பார்க்கத்தான் பவிதரன் இல்லை அங்கே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

