“அதிகாரத்தால ஒருத்தரை எரிக்க முடியும். ஆனா அன்பால மட்டும்தான் அவங்களை உருக வைக்க முடியும். அன்பால உண்டாகுற ஆதிக்கம் கூட அழகு. அதே நேரம் அதிகாரத்தால வளைக்க நினைக்குற ஆதிக்கம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆதிக்கத்தை ஏத்துக்குறப்ப கிடைக்கிற அமைதியை விட நிமிர்ந்து நின்னு போராடுறப்ப கிடைக்குற பதற்றமும், கோவமும் ரொம்ப அற்புதமா இருக்கும் தெரியுமா?”
-ஈஸ்வரி
“பொண்ணா மலர்? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மகாலெட்சுமியே ஆதிராவுக்கு மகளா பிறந்திருக்கா”
மொபைலில் மலர்விழியோடு பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தபடியே சுடிதார் துப்பட்டாவுக்குப் பின் குத்திக்கொண்டாள் ஈஸ்வரி.
“அப்பிடியா? ஈஸ்வரி அப்பா அவளை அங்க போகச் சொல்லிட்டாவ. அவளுக்கும் பிள்ளைய பாக்கணும்னு இருக்குதாம். அதான் பவி தம்பி கிட்ட அனுமதி வாங்கிட்டு மதியமே அம்பாசமுத்திரத்துக்குக் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தா”
ஆதிராவுக்கு அன்று காலையில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மலர்விழியிடமிருந்து ஈஸ்வரிக்குச் செய்தி வந்திருந்தது. அவளுக்குக் குழந்தையைப் பார்க்கும் ஆர்வம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆனால் மகளைத் தனியே அம்பாசமுத்திரம் வரை அனுப்புவதற்கு இளவரசிக்குத் தயக்கம். தட்சிணாமூர்த்தியும் யோசித்தாற்போல தான் தெரிந்தது.
ஆனால் ஈஸ்வரி பிடிவாதம் பிடித்து எப்படியோ தந்தையின் சம்மதத்தை வாங்கிவிட்டாள்.
“மதியம் நான் பஸ் ஏறிடுவேன். அங்க போய் ஆதி அக்காவையும், குழந்தையையும் பாத்துட்டுச் சாயந்திரம் இருட்டுறதுக்குள்ள திருநெல்வேலிக்கு வந்துடுவேன்” என்று அவள் சொல்லவும் தட்சிணாமூர்த்தியும் சம்மதித்தார்.
அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது மலர்விழியிடமிருந்து மொபைலில் அழைப்பு வரவும் அன்னையிடம் கொடுத்துவிட்டாள் ஈஸ்வரி.
அவர் பேசுவதைக் கேட்டபடியே உடை மாற்றி சாப்பிட்டும் முடித்தாள்.
“சாயந்திரம் புவன் மாமா வீட்டுக்கு வருவார். அப்ப ஈஸ்வரிய அவர் கூட அனுப்பி வச்சிடுறேன் அத்தை” என்று போனில் மலர்விழி சொல்ல இளவரசிக்கும் நிம்மதி.

“பேசிட்டியாம்மா? நான் கிளம்புறேன்” என்ற ஈஸ்வரியிடம் மொபைலைக் கொடுத்த இளவரசி ஆயிரம் எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் கூறி வழியனுப்பி வைத்தார்.
“குழந்தைக்கு யார் யார் என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கனு சொல்லு மலரு. யாரும் வாங்காததை நான் வாங்கிட்டு வர்றேன்”
மொபைலில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் மகளைப் பார்த்து பெருமூச்சு விட்டவர் வீட்டுக்குள் போய்விட்டார்.
ஈஸ்வரியும் பேருந்திலேறி பாளை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள்.
அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தவளிடம் அன்றைய தினம் வங்கிக்குச் செல்ல வேண்டுமென நினைவுறுத்தினார் சுமதி.
“நாளைக்குச் சம்பளம் குடுக்கணும் சைட்டுல”
“அக்கா நான் இன்னைக்குப் பேங்குக்குப் போறது டவுட். என் சொந்தக்கார அக்காக்குக் குழந்தை பிறந்திருக்கு. மதியத்துக்கு மேல பெர்மிசன் வாங்கிட்டு அம்பாசமுத்திரம் போறதா இருக்குறேன். இந்த ஒரு தடவை நீங்க பேங்குக்குப் போயிட்டு வந்துடுறிங்களா?”
“சரி! ஒன்னும் பிரச்சனை இல்ல. அம்பை வரைக்கும் தனியாவா போவ?”
“அம்பாசமுத்திரம் என்ன அமெரிக்காலயா இருக்கு? புது பஸ் ஸ்டாண்டுல ஏறுனா அம்பைல இறங்க போறேன். ஒன்னும் பயமில்ல”
“இருந்தாலும் அவ்ளோ தூரம்….”
சுமதி பேசும்போதே பவிதரன் வந்து சேர்ந்தான். மரியாதைநிமித்தம் அனைவரும் வணக்கம் சொல்ல பதிலுக்குத் தலையசைத்துவிட்டு அவனது அலுவலக அறைக்குள் போய்விட்டான்.
அவனிடம் அனுமதி பெறுவதற்காக எழுந்தாள் ஈஸ்வரி.
“நான் போய் சார் கிட்ட பெர்மிசன் வாங்கிடுறேன். அவருக்கும் அந்த அக்கா உறவுக்காரங்கதான்”
“ம்ம்”
சுமதி அவரது வேலையில் ஆழ்ந்துவிட பவிதரனின் அலுவலக அறைக்கதவைத் தட்டினாள் ஈஸ்வரி.
“உள்ள வா”
உள்ளே சென்றவள் “ஆதியக்காக்கு…” என்று ஆரம்பிக்கும்போதே
“பொண்குழந்தை பிறந்திருக்கு. அதானே?” என்று முடித்து வைத்தான் பவிதரன்.
அவனுக்கும் செய்தி தெரிந்துவிட்டதில் ஈஸ்வரிக்கு மகிழ்ச்சி!
“ஆமா! இன்னைக்குக் காலைல பிறந்திருக்கு. நான் அவங்களையும் பிள்ளையையும் போய் பாக்கலாம்னு இருக்கேன். எனக்கு மதியம் பெர்மிசன் வேணும்”
“இன்னைக்கு நீ பேங்குக்குப் போகணும்ல?”
“சுமதியக்கா போறதா சொல்லிட்டாங்க”
“அப்ப எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு என் கிட்ட வந்து பெர்மிசன் கேக்குற?”
“ஆமா! நான் போறதால எந்த வேலையும் பாதிக்கக்கூடாதுல்ல”
பவிதரனின் பார்வையில் மெச்சுதல் பாவனை!
“நீங்க எப்ப போறதா இருக்குறிங்க?”
“நான் ஞாயிறு போகலாம்னு இருந்தேன். நீ இன்னைக்குப் போறதா சொன்னதால உன் கூடவே வந்துட்டா என்னனு தோணுது”
ஈஸ்வரி ‘ஙே’ என்று விழித்தாள்.
“தனியா போக ஒரு மாதிரியா இருக்கும்மா” என்றவன் பளீரெனப் புன்னகைக்க, பார்வை மாறி அவளும் புன்னகைத்தாள்.
“நானே தனியா போறப்ப உங்களுக்கு என்னவாம்? காரை எடுத்துட்டுப் போகலாமே? ஒரு லாங் ட்ரைவ் போன மாதிரி திருப்தியா இருக்கும். அடிக்கடி விர்ருனு ஸ்ரீவைகுண்டத்துக்குக் கார்ல பறக்குற ஆளுக்கு இதுவும் ஒரு நல்ல அனுபவமா இருக்குமே?”
“ம்ம்! ஆனா தனியா போய் போய் லாங் ட்ரைவ்னாலே சலிப்பா இருக்கு. கூட ஒருத்தி இருந்தா வந்தா சுவாரசியமா இருக்கும்னு தோணுது”
பவிதரன் குறும்பாய்ச் சொல்லவும் ஈஸ்வரியின் பார்வை ஆராய்ச்சியாய் அவனை அலசியது.
“நீங்க பேசுறது லாங் ட்ரைவைப் பத்தி தானே?”
ஒரு பக்கத்துப் புருவத்தை மட்டும் உயர்த்தி வினவினாள் அவள்.
“வேற எதைப் பத்தி பேசுறதா உனக்க்ச் சந்தேகம் வருதோ அதையும் சேர்த்துக்க” என்றவனின் குரலில் இருந்த துள்ளலுக்கானக் காரணத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏதோ இரட்டை அர்த்தத்தில் பேசுகிறான் என்றளவுக்கு மட்டும் இப்போது புரிந்தது.
“எதிர்ல இருக்குற ஆளுக்குப் புரியாத மாதிரியே பேசணும்னு சபதம் எதுவும் போட்டிருக்கிங்களோ?”
“எதிர்ல நின்னா புரியாது. ஒருவேளை பக்கத்துல உக்காந்து கேட்டா புரியலாம்”
இப்போது ஈஸ்வரியின் இரு புருவங்களும் உயர்ந்தன. கண்கள் சந்தேகமாய் குறுகி பவிதரனை நோட்டம் விட்டன.
“பக்கத்துல உக்காரணுமாம். விட்டா மடியில உக்கார சொல்லுவான் போல” கடித்த பற்களிடையே முணுமுணுத்தாள் அவள்.
அவள் சொன்னதுமே புரிந்துகொண்டவனின் முகத்தில் மந்தகாசப் புன்னகை.
“ஆசையா இருந்தா வந்து உக்காந்துக்க. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்”
தான் பேசியதை அறிந்துகொண்டவனை வெம்மையான விழிகளோடு ஏறிட்டவளுக்கு மூக்கில் புகை வராதக் குறை.
“இப்ப எதுக்கு என் கிட்ட எசலுறிங்க? (கேலி பேசுவது). முதலாளிங்கிற மரியாதை எல்லாம் ஒரு அளவுக்குத்தான்! கவனமா இருந்துக்கோங்க”
விரல் நீட்டி எச்சரிக்க மட்டும்தான் செய்யவில்லை அவள்.
“சரி சண்டைக்காரி! நான் பயந்துட்டேன்” சிரிப்பை அடக்கியபடி சொன்னவன் “நீ மதியம் தானே பெர்மிசன் கேட்ட? நானும் வர்றேன். நாம சேர்ந்தே போய் குழந்தைய பாத்துட்டு வந்துடுவோம்” என்றான் இலகுவாய்.
ஈஸ்வரி பதில் சொல்லாமல் நிற்கவும் தோள்களைக் குலுக்கி என்னவென்பது போல உடல்மொழியால் வினவினான்.
“அதில்ல… நீங்க எதுக்கு என் கூட வரணும்?”
“அதான் சொன்னேனே! தனியா போய் போரடிக்குது. ஜோடியா போனா நல்லா இருக்கும்னு…” சீண்டும் தொனியில் அவன் சொல்லவும் மீண்டும் ஈஸ்வரியின் மூக்கிலிருந்து புகை வராதக் குறை.
“ஜோடியா போக ஆசையா இருந்தா உங்க அம்மை கிட்ட பொண்ணு பாக்கச் சொல்லுங்க. வந்துட்டாரு என் கிட்ட வம்பிழுக்க”
“பொண்ணெல்லாம் எதுக்குப் பாக்கணும்? அதான் நீ இருக்கியே”
ஈஸ்வரி அதிகம் யோசிக்கவில்லை. மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டை எடுத்தவள் அதைப் பவிதரனுக்குக் குறி பார்த்தாள்.
“இன்னொரு தடவை இப்பிடி எடக்கு மடக்கா பேசுனிங்கனா மண்டைய உடைச்சிடுவேன். முதலாளினு கூட பாக்கமாட்டேன்.”
பவிதரன் சத்தமாக நகைத்தான். அவள் அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததால் வந்த சிரிப்பு அது.
“சிரிக்காதிங்க” முறைத்தபடி மீண்டும் டேபிள் வெயிட்டை மேஜை மீதே வைத்தாள் அவள்.
“சரி சிரிக்கல. இன்னைக்கு மதியம் பன்னிரண்டுக்கு நாம கிளம்புறோம். நீயும் என் கூட வர்ற. டாட்”
ஈஸ்வரிக்கு இப்போதும் அவன் தன்னுடன் வர விரும்புவதற்கான காரணம் பிடிபடவில்லை.
“நான் உங்களோட ஸ்டாஃப். நீங்க என் கூட எதுக்கு வரணும்?”
பவிதரன் தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் மேஜையின் மறுபக்கம் நின்றவளிடம் வந்தான்.

அவள் வைத்த டேபிள் வெயிட்டை எடுத்தவன் ஈஸ்வரி அவனிடமிருந்து இரண்டு அடிகள் பின்னே எடுத்து வைக்க முயலவும் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான்.
“எந்த ஸ்டாஃபையும் இவ்ளோ தூரம் என் கிட்ட வம்பு பேச நான் அனுமதிச்சதில்ல. அதுக்கான உரிமைய நான் குடுத்ததும் இல்ல. இப்ப நீ பேசுனல்ல, அந்த நேரத்துல நீயா அந்த உரிமைய எடுத்துக்கிட்ட. அப்ப என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“நீ வெறும் ஸ்டாஃப் இல்லனு அர்த்தம். எம்.டி – ஸ்டாஃப் இந்த உறவைத் தாண்டுன உரிமைய நீ சுவாதீனமா எடுத்துக்கிட்ட. நான் அதை ஜஸ்ட் உறுதிபடுத்துறேன். அவ்ளோதான்”
ஈஸ்வரி பேச்சிழந்து நின்றாள்.
‘நான் போட்ட வேலியை நானே தாண்டிவிட்டேனோ?’
விழிகளால் அவனை அளவிட்டவள் “சரி! போகலாம்” என்றாள்.
பின்னர் அவனது கரம் இன்னும் தனது முழங்கையைப் பற்றியிருப்பதை இமைகளால் சுட்டிக் காட்ட, பவிதரன் தனது கரத்தை விலக்கிக்கொண்டான்.
அவனருகே நிற்கையில் மூச்சு விட மறந்துவிட்டோமோ என்ற சந்தேகம்.
உடனடியாகத் தள்ளி நின்றவள் “குழந்தைய பாக்க வெறுங்கையோட போக முடியாது. குழந்தைய வச்சு தூக்குவோமே சின்னதா ஒரு மெத்தை, அதை நான் வாங்கப் போறேன். நீங்க என்ன வாங்குறதா இருக்குறிங்க?” என வினவினாள்.
“தெரியல. நீயே எதாச்சும் யோசி”
சொன்னவன் மீண்டும் அவனது இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.
“ம்ம்! சரி! அப்ப பன்னிரண்டு மணிக்கு சரவணா ஸ்டோர்ஸ் போவோம். அங்க குழந்தைகளுக்கு வேண்டிய எல்லாம் இருக்கும். போய் பாத்தா ஒரு ஐடியா கிடைக்கும்”
“உன் இஷ்டம்”
அதோடு விட்டால் போதுமென அவனது அறையை விட்டு வெளியேறி தனது மேஜைக்கு வந்தவள் அடுத்த இரண்டு மணி நேரம் வேலையில் மூழ்கிவிட்டாள்.
இடையிடையே அலுவலக அறை கதவுக்கு வெளியே வந்து ஜீவனிடம் பேசுவது போல பவிதரனின் விழிகள் அவளை வருடிச் சென்றதை எல்லாம் ஈஸ்வரி அறியவில்லை.
பன்னிரண்டு மணி ஆனதும் சுமதியிடம் சொல்லிவிட்டு எழுந்தாள் அவள். பவிதரனும் வந்துவிட இருவரும் சேர்ந்து அலுவலகத்திலிருந்து கிளம்பினார்கள்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சரவணா ஸ்டோர்சை அடைந்தவர்கள் குழந்தைகளுக்கான பிரிவை நோக்கி சென்றார்கள்.
“குறிப்பா இங்க வாங்கணும்னு என்ன அவசியம்? வண்ணாரப்பேட்டையிலயே கடை இருக்குதே?”
“மலரோட மகனுக்கு நான் இங்கதான் வாங்குனேன். ஒரு செண்டிமெண்ட்னு வச்சுக்கோங்களேன்”
பிறந்த குழந்தைகளுக்கான உடைகள், குட்டியாய் கை கால் உறைகள், பருத்தி துணியாலான ரீ-யூசபிள் டயப்பர் மாடல் உடை என அனைத்தும் இருந்தன.
ஈஸ்வரி முன்பே சொன்னது போல குழந்தையை அணைவாய் வைத்துத் தூக்கிச் செல்லும் மெத்தை ஒன்றை வாங்கிக்கொண்டாள்.

பவிதரன் என்ன வாங்கலாமென கண்களைத் தேடலில் ஆழ்த்தியபோதே குழந்தையை உறங்க வைக்கும் கொசுவலையுடன் கூடிய மெத்தை ஒன்று கண்களில் பட்டது.
அதை விரித்து அதற்குள் குழந்தையைப் படுக்க வைத்து ஜிப்பர் மூலம் கொசுவலையை மூடிவிட்டால் உருண்டாலும் புரண்டாலும் குழந்தை அதற்குள்ளேயே இருக்கும். கொசு தொல்லை இல்லாமல் நிம்மதியாய் உறங்கும்.
மற்ற நேரங்களில் கொசுவலை ஜிப்பரைத் திறந்து இருப்பக்கமும் அதை மடித்துக்கொள்ளலாம். தலையணைகள் கொடுத்திருந்தார்கள் அந்த மெத்தையுடன்.
“பேஸ்டல் க்ரீன் வாங்குங்க. கண்ணுக்கு இதமா இருக்கும்” என்று ஈஸ்வரி சொல்ல அதே நிறத்தில் வாங்கிக்கொண்டான் அவனும்.
பில்லுக்கு அவள் பணம் செலுத்தப் போக இருவருக்கும் சேர்த்து பவிதரனே பணம் கொடுத்தான்.
“எதுக்கு நீங்க குடுத்திங்க?”
சண்டை பிடித்தவளிடம் “சம்பளத்துல பிடிச்சுக்குறேன்” என்றான் அவன் சன்னச்சிரிப்போடு.
அந்தச் சிரிப்பே ‘அவன் சம்பளத்தில் பிடிக்கப்போவதில்லை’ என்பதைச் சொல்லிவிட ஈஸ்வரியிடம் தடுமாற்றம்.
இருவருமாய் சேர்ந்து அந்தத் தளத்திலிருந்து வெளியேறினார்கள்.
அமைதியாய் நடந்தவர்கள் திடுமெனப் பவிதரனை யாரோ அழைக்கவும் நின்றார்கள்.
பவிதரன் யார் அழைத்ததென அறிய திரும்பிப் பார்த்தான்.
முப்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவன் அவர்களை நோக்கி வந்தான் புன்னகையோடு.
“எப்பிடி இருக்குறிங்க ஆகாஷ்?” என பவிதரன் புன்னகையோடு அவனிடம் கை குலுக்கினான்.
“நான் நல்லா இருக்குறேன். ரவி சொன்னான், மதுக்குக் கல்யாணம்னு. அதுக்குப் பர்சேஷா?” என்று கேட்டான் அவன்.
அவன் ரவியின் உறவுக்காரன். ஷண்மதியின் திருமணத்திலிருந்தே பவிதரனிடம் நல்ல பழக்கம் அவனுக்கு.
“அதெல்லாம் அம்மாவும் மதுவும் போன வாரமே முடிச்சிட்டாங்க. நாங்க வந்தது வேற விசயமா” என்றவன் புவனேந்திரனுக்குப் பெண் குழந்தை பிறந்த தகவலைக் கூறினான்.
“குழந்தைய பாக்க ஹாஸ்பிடலுக்குப் போறோம். அதுக்கான பர்ஷேஸ் இது”
அந்த ஆகாஷின் விழிகள் ‘ஈஸ்வரி யார்’ என்று வினவ அவளோ தான் நிற்பது அவர்களுக்குச் சங்கடமாய் இருக்குமோ என்ற எண்ணத்தில் விலக எத்தனித்தாள்.
சட்டென அவளது கரத்தைப் பற்றியது பவிதரனின் கரம். திரும்பிப் பார்த்தவள் “நீங்க பேசுங்க” என்கையிலேயே ‘நீயும் நில்லு’ என்றன அவனது விழிகள்.
ஆகாஷின் பார்வையில் விசமம் தொனித்தது இந்தப் பரிபாஷையைக் கவனித்த பிறகு.
“மேடம் யாரு?” என்று வினவினான்.
“ஃபேமிலி”
எத்துணை இறுக்கமாய் பவிதரனின் கரம் ஈஸ்வரியின் கரத்தைப் பற்றியிருந்ததோ அதே அளவு அழுத்தமாய் அவனது குரல் ஒலித்தது.
ஈஸ்வரி முகம் அவளை அறியாமல் விகசிக்க, ஆகாஷோ ஏதோ புரிந்தாற்போல புன்னகையோடு விடைபெற்றான்.
காரிலேறியதும் “ஃபேமிலினா?” என்று அவனிடம் மெல்ல வினவினாள் ஈஸ்வரி.
“நீ மலரோட ஃப்ரெண்ட். மலர் என் ஃபேமிலினா அவ ஃப்ரெண்டும் என்னோட ஃபேமிலிதானே?”
புருவத்தை உயர்த்திக் கேட்டவன் காரைக் கிளப்பினான்.
ஈஸ்வரி நம்ப முடியாதவளாய் “அந்த அர்த்தத்துலதான் சொன்னிங்களா?” என்று கேட்டாள்.
காரை ஓட்டியவனின் வதனத்திலோ உறுதி தெரிந்தது. கூடவே கொஞ்சம் கனிவும்.
“உனக்கு வேற எதுவும் அர்த்தம் புரிஞ்சுதுனா அதையும் வச்சுக்கலாம். நான் மறுக்கப் போறதில்ல. நீ என் ஃபேமிலிங்கிறதையும் சேர்த்து”
அதோடு வாயை மூடியவள்தான்! அம்பாசமுத்திரத்தில் சென்று இறங்கும்வரை பேசவில்லையே!
மகப்பேறு வார்டில் வசதியானத் தனியறையில் ஆதிராவை வைத்திருந்தார்கள். சுகப்பிரவசம் என்றாலும் கொஞ்சம் சோர்ந்து போய் தெரிந்தவள் பவிதரனையும் ஈஸ்வரியையும் ஒருசேரப் பார்த்ததில் முகம் மலர்ந்தாள்.
“வாங்கண்ணா! வா ஈஸ்வரி”
அவன் குழந்தையைத் தூக்கச் செல்லும் முன்னர் “நாம ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடுவோமா?” என்று ஈஸ்வரி கேட்க அவனும் சரியென்றான்.
கிருமிநாசினி கலந்த ஹேண்ட்வாஷில் கை கழுவி துடைத்த பிறகு குழந்தையைத் தூக்கிக்கொண்டான் பவிதரன். சற்றுத் தள்ளி நின்று அவன் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிக்கவும், ஆதிராவின் படுக்கை அருகே இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டாள் ஈஸ்வரி.
மலர்விழியிடம் “ஆதியக்கா ஏன் டயர்டா தெரியுறாங்க? இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்க
“இப்ப தான் சொந்தக்காரங்க வந்துட்டுப் போனாங்க. குழந்தைக்குப் பால் பத்தலயானு குற்றம் சொல்லுற மாதிரி கேட்டுச்சு ஒரு அம்மா. குழந்தை அழுதாலே பசினு அர்த்தம் எடுத்துக்குறாங்க. பால் பத்தலனா அது அம்மாவோட குற்றம்னு சொல்லாம சொல்லிடுறாங்க. இது ரொம்ப மனவுளைச்சலைக் குடுக்கும் ஈசு. எனக்கும் இது நடந்துச்சு கதிர் பிறந்தப்ப. நம்ம குழந்தைக்குப் பசியாத்த கூட முடியலங்கிற குற்றவுணர்ச்சில தள்ளிடுவாங்க. அவங்க பேசுனதுல இருந்து அக்கா முகம் சரியில்ல” என்றாள் மலர்விழி சோகத்தோடு.
“எவ அவ அப்பிடி சொன்னது?” எனச் சீறிய ஈஸ்வரி ஆதிராவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“குழந்தைக்குப் புது ஆளுங்க, இந்த வெளிச்சம் எல்லாம் பழக டைம் எடுக்குமாம். அதனால கூட குழந்தை அழும்னு படிச்சிருக்கேன்கா. எந்த ஊர்க்கெழவியோ எதுவோ சொன்னானு சோர்ந்து போயிடுவிங்களா? இப்ப நாங்க கிளம்புனதுக்கு அப்புறம் கூட குழந்தை அழும். அதுக்கு இப்ப உங்களைத் தவிர யாரையும் தெரியாது. புது ஆளுங்களோட ஸ்பரிசம் அதுக்குப் புரியாது. இனிமே யார் என்ன சொன்னாலும் கலங்காதிங்க. பெத்த அம்மாவ தவிர யாராலயும் ஒரு குழந்தைய நல்லபடி கவனிக்க முடியாது”
அவள் படபடவெனப் பொரிந்து தள்ள ஆதிராவின் முகச்சுணக்கம் மாறி புன்னகை துளிர்த்தது அவளது வதனத்தில்.
“நான் போறதுக்கு முன்னாடி புவன் சார் வந்துடுவார்ல. இருங்க, அவர் கிட்ட அவங்க சொந்தக்காரங்களைப் பத்தி போட்டுக் குடுத்துட்டுப் போறேன்”
ஈஸ்வரி சொல்லவும் “அட சாத்தான் குட்டி” என்று சொல்லி சிரித்தாள் ஆதிரா.
மலர்விழிக்கு அவள் இயல்பானதே பெரும் மகிழ்ச்சியாய்!
அவர்கள் உரையாடட்டுமெனப் பவிதரனிடம் வந்தவள் “நீங்களும் ஈசும் ஒன்னா வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்” என்றாள் அமைதியாய்.
குழந்தையை அணைவாய் பிடித்திருந்தவனின் முகத்தில் சன்னப்புன்னகை.
“எப்பவுமே நாங்க ஒன்னா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா உன் ஃப்ரெண்ட்… அவ கிட்ட ஏதோ ஒரு தயக்கம் தெரியுது. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதுல்ல மலர்?”
“புரியுதுண்ணா! எனக்குள்ள இருந்த அதே தயக்கம் அவளுக்குள்ளவும் இருக்கு. பணக்காரங்க எல்லாரும் ஒரே மாதிரி இல்லனு எனக்கு மகிழ் மாமா புரியவச்சார். இது உங்க டர்ன்.”
“நீ சொல்பேச்சு கேக்குற பொண்ணு. மாறன் சொன்னதும் புரிஞ்சிக்கிட்ட. ஆனா அவ அப்பிடி இல்லையே?”
“ம்ம்! கொஞ்சம் பிடிவாதக்காரிதான்” கிண்டலாய்ச் சொன்னாள் மலர்விழி.
“சண்டைக்காரியும் கூட”

பவிதரன் அழுத்திச் சொல்லவும் சிரித்தே விட்டாள்.
அவளது சிரிப்பில் இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
“என்ன?” என்று ஈஸ்வரி வினவ
“ஒன்னுமில்ல” எனத் தோள்களைக் குலுக்கினான் பவிதரன். அந்தக் கண்களில் இருந்த விசமம் அவனது பதில் பொய்யென அவளுக்குப் புரியவைக்காதா என்ன?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

