மறுநாள் அழகான நாளாகத் தொடங்கியது…..
வருணின் வீட்டில் அவனுக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் சுமித்ரா வந்து பூசிவிட அடுத்துப் பிரியா தன் மகனுக்குப் பூசிவிட்டு அவனை ஆசீர்வதித்தார்.
அடுத்து ஒவ்வொருவராக முடிக்க அங்கிருந்து பெண் வீட்டிற்கு மஞ்சளை அனுப்பக் கிஷோரை அழைத்தனர். அவன் அரண்மனைக்கு மஞ்சள் தட்டுடன் வரும்போதே அலங்காரத்தைப் பார்த்து மனதிலேயே பாராட்டிக் கொண்டான்.
காரிலிருந்து அவன் இறங்கவும் அவந்திகா வந்து அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டாள். அவளுடன் பேசியவாறே தோட்டத்தில் விழா நடக்குமிடத்துக்குச் சென்றான்.
“அண்ணி! டெக்கரேஷன்ஸ் செம.., டிசைன்ஸ் யாரோட ஐடியா?” என்று கேட்டபடி நடக்க அவந்திகா “எல்லாமே ரித்தியோட ஐடியாதான். அவ டிசைன்ஸ் வரைவா. நான் அதை லைவ்வா கொண்டு வருவேன்” என்று சொல்லிவிட்டுத் தட்டைக் கொண்டு சென்று மைதிலியிடம் கொடுக்க இனிதே விழா ஆரம்பமானது.
அவந்திகாவையும் அழைத்துப் பூசச் சொல்லவும் அவள் மகிழ்ச்சியுடன் உஷாவின் கன்னத்தில் பூசியவள் மீதமிருந்த மஞ்சளை ரித்திமாவின் கன்னத்தில் தடவிவிட்டு ஓட ரித்திமா மஞ்சளுடன் அவளைத் துரத்தியவள் கீழே இருந்த மேஜை தடிக்கிக் கிஷோரின் மேல் விழுந்தவள் அவள் கையிலிருந்த மஞ்சளை அவளறியாமல் அவன் கன்னத்தில் பூசிவிட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பூக்குவியலாய் மோதியவளைத் தாங்கியவன் “தேங்க்யூ பேபி! ஐ ஹோப் நெக்ஸ்ட் நம்ம மேரேஜ்தான்” என்று அவளைத் தாங்கிக்கொண்டே கண் சிமிட்ட ரித்திமா நேராக நின்றவள் அவனது கையைத் தட்டிவிட்டு முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.
இவ்வாறு சின்னச் சின்ன கலாட்டாக்களுடன் அந்த விழா முடிந்தது.
அடுத்து மாலையில் திருமணத்திற்கான அலங்கார வேலைகள் தொடங்கியது. அவர்கள் சம்பிரதாயப்படி மாலை நேரம் மகாலட்சுமி வரும் நேரம் என்பதால் அந்த நேரத்தில்தான் திருமணம் வைப்பது அவர்களின் வழக்கம்.
வருணின் வீட்டில் புது மருமகளை வரவேற்க ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் அனைவரும் ஜெகஜோதியாகத் திருமணத்திற்குத் தயாரானார்கள்.
முதல் காரில் மணமகனின் சகோதரிகள் மணமகனுடன் அமர கிஷோர் காரை ஓட்ட ஆரம்பித்தான். அடுத்த காரில் பெரியம்மா மற்றும் அன்னையுடன் பாட்டி இன்னும் சில முக்கிய விருந்தினர்களுடன் ராகவ் சென்றான். மற்றவர்கள் அனைவரும் தனித்தனிக் காரில் அழைத்து வரப்பட்டனர்.
வாத்தியங்கள் முழங்க உஷாவின் கஸின்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். எல்லா ஏற்பாடுகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த ரன்வீரையும் கையைப் பிடித்து அழைத்து வந்து ஆடவைக்க அவனுடன் சேர்ந்து ரித்திமா மற்றும் அவந்திகாவும் ஒரு ஆட்டம் போட்டனர்.
ஆனால் கூட்டத்தில் ஒருவன் கையில் எதனுடனோ அவந்திகாவை நெருங்க ராகவ் அதைக் கவனித்துவிட்டான். அவன் அவந்திகாவை நெருங்கும் முன் ராகவ் அவனை நெருங்கி அவன் கையைப் பிடித்து அவனிடமிருக்கும் கத்தியைப் பிடுங்கியவன் அவனுடைய குடும்பத்துக்குப் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருந்த ஆட்களை அழைத்தவன் அவனை அவர்களின் பங்களாவுக்குக் கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டு அவன் ஏதாவது விவரம் சொன்னால் தனக்கு அதைப் போனில் தெரியப்படுத்துமாறு சொல்லி அனுப்பி வைத்தான்.
அதே நேரம் நடனத்தை முடித்த அவந்திகாவும் ரித்திமாவும் உஷாவின் அறைக்குச் சென்றவர்கள் அவளது அழகில் மெய்மறந்து நின்றனர்.
“உஷா பேபி! உனக்கு என் கண்ணே பட்டுடும் போல” என்று சொல்லிக்கொண்டே அவளுக்குக் கண்மையால் திருஷ்டி பொட்டு வைத்தாள் ரித்திமா.
“இன்னைக்கு வருண் உன் அழகைப் பாத்து மயங்கி விழப் போறார். அழகே பொறாமைப்படும் பேரழகி பிரதியுஷா” என்று சொல்லி அவளைக் கட்டிக்கொண்டாள் அவந்திகா.
உஷா “ஹனிபி! நீ கிண்டல் பண்ணுறியா இல்ல நெஜமாவே சொல்லுறியா?“ என்று சந்தேகமாகக் கேட்க அவந்திகா புன்னகையுடன் “இதுல போய் நான் வெளையாடுவேனா உஷா? கண்ணாடி பொய் சொல்வதில்லை பேபிம்மா” என்று சொல்லி ரித்திமாவுடன் சேர்ந்து அவளைக் கட்டிக்கொண்டாள் அவள்.
அப்போது வெளியே கார்கள் வரும் ஓசை கேட்கவும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் அவந்திகா. முதல் காரிலிருந்து இறங்கிய வருணை உஷாவிற்குக் காட்டினாள்.
மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கௌசல்யா “ரித்தி நீ போய் ஆரத்தி எடுக்க ரெடியாகு. அவந்திகா நீ புரோகிதருக்கு வேண்டியதை எடுத்துக் குடுக்க மண்டபமேடையிலேயே இரு. இன்னைக்கு உஷா குட்டி கூட நான் இருக்கேன்” என்று சொல்ல இருவரும் கீழே விரைந்தனர்.
ரித்திமா ஆரத்தி எடுத்துவிட்டுப் பணம் கொடுத்தால்தான் உள்ளே விட முடியும் என்று கலாட்டா செய்ய வருண் அவள் தட்டில் சிரித்துக்கொண்டே நோட்டை வைத்தான்.
மைதிலியும் ராஜ்வர்தனும் வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னே அன்னைகளுடனும் பாட்டியுடனும் வந்த ராகவின் பார்வை மேடையிலிருந்த அவந்திகாவின் மீது பட்டு விலக மறுத்தது.
எப்போதும் மாடர்ன் டிரஸ்ஸிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவளைத் திடீரென்று பாரம்பரிய உடடையில் காணவும் அவனுக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றினாள் அவள்.
அவள் புரோகிதருடன் நின்று அவருக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்தபடியே தன்னை நோட்டம் விடும் ராகவை முறைத்துக்கொண்டிருந்தாள். பின்னர் புரோகிதர் மாப்பிள்ளையை அழைத்து வரச் சொல்லவும் அவள் சிரித்த முகத்துடன் வந்து வருணின் கைகளைப் பிடித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றாள்.
வருணுடன் அவனது தங்கைகளும் வந்து நின்றுகொண்டனர். அவன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடிக்கவும் மணமகளை அழைத்து வருமாறு புரோகிதர் கூறினார்.
படிக்கட்டுகளில் லெஹங்கா புரள, அங்கிருந்த விளக்குகளின் ஒளியும் அணிந்திருந்த அணிகலன்களின் ஜொலிஜொலிப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு அவளை மின்ன வைக்க, வானத்து தேவதை போல் இறங்கி வந்த பிரதியுஷாவைப் பார்த்த வருணின் கண்கள் அவன் அவள் மேல் வைத்திருந்த அளவுக்கடந்த காதலைச் சொல்லாமல் சொல்லியது.
முகத்தில் புன்னகை மின்ன வந்து அமர்ந்த உஷாவின் அழகில் உண்மையாகவே அன்று வருண் மயங்கித்தான் விட்டான். நேஹாவும் பிந்துவும் அவன் காதில் “பய்யா! புரோகிதர் சொல்லுற மந்திரத்தைச் சொல்லுங்க. அப்புறமா சைட் அடிக்கலாம்” என்று கூற ரொம்பச் சிரமப்பட்டு அவளிடமிருந்து தன் கவனத்தைத் திருப்பினான்.
நேஹா வந்து இருவரின் தோளிலிருந்த துணியின் நுனியை முடிச்சிட அடுத்துக் கன்னிகாதானம் செய்து கொடுத்தனர் மைதிலியும் ராஜ்வர்தனும்.
அடுத்து மணமக்கள் மாலையை மாற்றிக்கொள்ளப் புரோகிதர் அவர்களைச் சப்தபதி வைக்கச் சொல்ல வருணைத் தொடர்ந்தாள் உஷா. அது முடிந்ததும் புரோகிதர் மங்கலநாணை எடுத்துக் கொடுக்க அதை உஷாவின் கழுத்தில் பூட்டினான் வருண்.
அனைவரும் மலர் தூவி ஆசீர்வதிக்க அவந்திகாவும் ரித்திமாவும் ஆனந்தக் கண்ணீருடன் அட்சதையைத் தூவினர். நடந்த நிகழ்வுகளைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த ராகவின் முகம் அவனுக்கு வந்த போன் காலில் கோபத்தைத் தத்தெடுத்தது.
போனில் அவனது பாதுகாவலர்கள் அந்த ஆள் சிராஜ் மெஹ்ரா அனுப்பியவன் என்றும் அவந்திகாவைக் கொல்ல வந்தவன் என்றும் சொல்ல அவனைக் காவலர்களிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டான்.
பின்னர் அமைதியாகப் போனை வைத்துவிட்டு அவந்திகாவைப் பார்த்தான். அவளோ மணமேடையில் வருணிடம் குங்குமச்சிமிழ் இருந்த தட்டை நீட்ட அவன் உஷாவின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தான்.
திருமணம் இனிதே முடியப் புரோகிதர் மணமக்களை ஆசீர்வதித்தார். ரன்வீர் எல்லாருக்கும் இனிப்பு வழங்கப் பணியாட்களிடம் கூறினான்.
புரோகிதர் சுமித்ராவைப் பார்த்து “இன்னொரு ஜோடி எங்க?” என்று கேட்கவும் அவர் ஆளுக்கு ஒரு புறமாக நின்றுகொண்டிருந்த பேரனையும் அவன் மனைவியையும் காட்ட அவர்கள் அதிர்ந்தனர்.
அடுத்த நொடியே மணமக்கள் இருவரும் அவர்கள் கையைப் பிடித்து மணமேடையில் அமர வைக்க அவந்திகாவுக்கு நடந்தது புரியவே நேரம் எடுத்தது.
வருண் சொன்ன திட்டம் இதுதான். தங்களின் திருமணம் முடிந்த கையுடன் அவந்திகாவுக்கும் ராகவுக்கும் அனைத்துச் சம்பிரதாயத்துடன் திருமணத்தை அதே மேடையில் செய்துவிடலாம் என்றவன் இது அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட யாருமே இதைப் பற்றி மூச்சு விடவில்லை.
அவந்திகா இந்நிகழ்வுகளைக் கண்டு அதிர்ந்தவள் பின் சுதாரித்து ராகவின் காதில் “ராகவ்! வாட் இஸ் திஸ் டிராமா? ப்ளீஸ் ஸ்டாப் பண்ணச் சொல்லு” என்று பதற்றமாகக் கூறினாள். ஏற்கெனவே கடவுள் சன்னிதானத்தில் நடந்த திருமணத்தைத் தான் மறுக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியில் இருந்தவள் இன்று எல்லாச் சடங்குச் சம்பிரதாயங்களுடன் திருமணம் நடந்தால் அதிலிருந்து விடுதலை பெறுவது கடினம் என்று நினைத்துக் குழம்பினாள்.
ஆனால் ராகவோ அந்தப் போன் காலை நினைத்தவன் மனதில் ஒரு முடிவெடுத்துக்கொண்டே அவந்திகாவை நிதானமாகப் பார்த்தவன் “ஏன் நிறுத்தணும்? இந்த ரிச்சுவல்ஸ் நடக்கும்” என்று சொல்லிவிட்டுப் புரோகிதரை அழைத்தான். அவனைப் பொறுத்தவரையில் தேவையில்லாமல் அவனுக்கும் சிராஜுக்கும் நடக்கும் தொழில் போட்டியில் அவந்திகாவின் மானம் டிவி வரை போனதே அவனுக்கு மிகவும் தலைகுனிவாக இருக்க, அவன் இவளின் உயிருக்கும் குறி வைத்ததை அறிந்தும் எப்படியோ போ என்று அவளை அவனால் கைகழுவி விட முடியவில்லை.
அவந்திகாவுக்கு அவனது மனநிலை புரியாததால் இந்தத் திருமணம் நடைபெறுவதில் அவளுக்கு இஷ்டமில்லை. அவள் வேகமாக “ராகவ் உனக்குப் புரியல., நான் சொல்லுறதக் கொஞ்சம்..” என்று பேச முற்பட அவளை ஒரு சிரிப்பாலே தடுத்தான் ராகவ்.
அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியுமா என்ன? அவனது அந்தக் காந்தப்புன்னகையில் அவ்வளவு நேரம் இருந்த குழப்பம், தயக்கம், பயம் எல்லாம் மாயமாக அதில் கரையத் தொடங்கினாள் அவந்திகா.
ராகவ் மணமேடையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி, அம்மா, பெரியம்மா, கௌசல்யா மற்றும் ரகுவரனைப் பார்த்தான். அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க அவன் விரும்பவில்லை. மறுபுறம் அவனது தந்தை, பெரியப்பா மணமக்களுடன் சேர்ந்து இந்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
புரோகிதர் மந்திரத்தைச் சொன்னதையோ, தன் சித்தி சித்தப்பா வந்து கன்னிகாதானம் செய்ததையோ அவந்திகா உணரக் கூட இல்லை. கடமைக்காக எல்லாச் சடங்கையும் செய்து முடித்தாள். அடுத்துச் சப்தபதிக்காக நடக்க ஆரம்பிக்கையில் அவள் நடக்கச் சுணங்கவும் அவளைக் கையில் தூக்கிக்கொண்ட ராகவ் ஏழு சுற்றையும் அவனே முடித்தான். அவந்திகா அதை எப்படி உணர்ந்தாலோ அவர்களின் குடும்பத்தார் அதைக் கணவன் மனைவிக்கிடையே உள்ள அந்நியோன்யமாகவே அதைப் பார்த்தனர்.
அக்னிசாட்சியாக அவளுக்கு ஏழு வாக்குகளை அளித்தவன் அதை என்றும் காப்பாற்றுவேன் என்று மனதாரச் சொல்லிக்கொண்டான்.
அதன்பின் மணமேடையில் அமர்ந்தவள் கழுத்தில் ராகவ் மங்கலநாண் பூட்டவும் பெரியவர்கள் நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்த அவன் அவள் நெற்றியில் குங்குமம் வைத்துச் சாஸ்திரப்படியும் முறைப்படியும் அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். சகோதரனுக்கான சடங்கை ரன்வீர் வந்து மகிழ்ச்சியுடன் உஷாவிற்குச் செய்தது போலவே அவந்திகாவிற்கும் செய்தான்.
மணமக்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினர். கௌசல்யா அவந்திகாவை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு “கடவுள் எல்லா விஷயத்தையும் ஒரு காரணத்தோடதான் நடத்துவார். இதை நீ சீக்கிரமா புரிஞ்சுப்ப” என்று சொல்லவும் அவந்திகா தலையாட்டினாள்.
ராகவைப் பார்த்தவர் “நீங்க உங்க கடமைய ரொம்பச் சரியா பண்ணிட்டீங்க. உங்களுக்கு என் மேல கோவம் எதும் இருந்தா..” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் இடைமறித்த ராகவ் “இங்க பாருங்க கௌசிம்மா! நீங்க என்கிட்ட மன்னிப்புக் கேக்க வேண்டிய அவசியம் இல்ல. நீங்க இப்போ சந்தோஷமா இருக்கீங்கதானே! அது போதும்” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தான்.
அடுத்து ரகுவரனிடம் சென்ற அவந்திகா அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்ள அவரோ “குட்டிமா! என்னடா? என்னோட குட்டிமா ரொம்ப பிரேவ் கேர்ள். அவ எல்லாப் பிரச்சனையையும் ஈஸியா சமாளிப்பா” என்று அவளின் தோளில் தட்டிக்கொடுத்தார். ராகவையும் அவளையும் மனதார வாழ்த்தினார் அவர்.
எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கியவர்கள் கல்யாணி தேவியைப் பார்த்ததும் இரு பெண்களும் கண் கலங்கிவிட்டனர். அவர்களைத் தேற்றி அறிவுரை கூறி அவர்களைக் காரில் அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தவர் அங்கிருந்த துர்காதேவி கோயிலில் “இன்னைக்கு எங்க வீட்டுப் பொண்ணுங்க புகுந்த வீட்டுக்குப் போறாங்க. அங்க எந்தப் பிரச்சனையும் இல்லாம அவங்க சந்தோஷமா நூறு வருஷம் வாழணும்” என்று வேண்டிக்கொண்டார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


