“வயசுக்கோளாறுல எல்லாரோட மனசுலயும் சின்ன சலனம் வரலாம். ஏதோ ஒரு ஈர்ப்பு யாரை நோக்கியோ நம்மளை ஈர்க்க பார்க்கலாம். ஆனா, அந்த இடத்துல நம்மளோட சுயமரியாதை கொஞ்சமா குறைஞ்சிடும்னு தெரிஞ்சாலும், அந்த ஈர்ப்பை நான் வேரோட கிள்ளி எறிஞ்சிடுவேன். வசதிகளும் வெளிச்சங்களும் ஒருத்தரை அழகா காட்டலாம். ஆனா அந்த வெளிச்சம் என் கௌரவத்தைச் சுட்டெரிக்குற அளவுக்குப் போக நான் எப்பவுமே அனுமதிக்கமாட்டேன்.”
-ஈஸ்வரி
மதுமதியின் திருமணத்தை எளிமையாக வைத்துக்கொள்ளலாமென மாணிக்கவேலுவும் தர்ஷனின் அன்னையும் முடிவெடுத்திருந்தார்கள். பெரிய மண்டபம், சடங்கு சம்பிரதாயம், ஆடம்பர வரவேற்பு இதெல்லாம் தேவையில்லை என்று மணமுடிக்கப் போகிற இருவரும் சொல்லிவிட்டதால் இந்த ஏற்பாடு.
நதியூர் முத்தாரம்மன் கோவிலில் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த இரு மாதங்களில் செய்து முடித்தார் மாணிக்கவேலு.
திருமணப்பத்திரிகை எல்லாம் குறைவான எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வந்தாயிற்று.
கோவிலில் முதல் பத்திரிக்கையை வைத்து அம்மனுக்குப் பூஜைக்குக் கொடுக்க நதியூருக்குச் சம்பந்தியம்மாள், மகள், வருங்கால மருமகன் சகிதம் வந்தார்கள் மாணிக்கவேலுவும் நிலவழகியும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களது கார் ஊருக்குள் வரும்போதே தோட்டத்திற்கு கிளம்பிச் சென்றுகொண்டிருந்த சிகாமணியைக் கணவனும் மனைவியும் பார்த்து விட்டார்கள்.
“சிகாமணிக்குப் பத்திரிகை வைக்கலனா சொக்காரன் (நெருங்கிய உறவு) எல்லாம் நாக்கு மேல பல்லு போட்டுப் பேசுவான். என்ன பண்ணலாம் அழகி?”
“க்கும்! வேற வழியில்ல. வீட்டுல குழலி இருப்பா. அவ கிட்ட குடுத்துட்டுப் போவோம். கல்யாணத்துக்கு வர்றதும் வராமப் போறதும் அவங்க விருப்பம்”
காரின் பின்னிருக்கைகளை மதுமதி, தர்ஷனோடு சகுந்தலா ஆக்கிரமித்திருந்ததால் முன்னிருக்கைகளில் இருந்த கணவனும் மனைவியும் இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.
கார் கோவிலை அடைந்த சில நிமிடங்களில் பவிதரனும் அங்கே வந்துவிட்டான்.
சர்க்கரை பொங்கல் நைவேத்தியத்தைப் பூசாரியே கோவில் மடப்பள்ளியில் செய்து முடித்துவிட்டார். முத்தாரம்மன் சர்வலங்காரத்துடன் தெய்வீக அழகோடு மிளிர கண் குளிர தரிசித்தார்கள் பவிதரனின் குடும்பத்தார்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஊர் மக்கள் கோவிலுக்குச் சாமி கும்பிட வந்திருந்தார்கள்.
அம்மனுக்குத் தீபாராதனையோடு பூஜையும் நடந்தேறியது. திருமண அழைப்பிதழை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்துக்கொடுத்தார் பூசாரி.
பூ, அம்மனின் விபூதி குங்குமத்தோடு சர்க்கரை பொங்கல் பிரசாதமும் சேர்த்து திருமண அழைப்பிதழோடு ஒரு தாம்பளத்தில் வைத்து மாணிக்கவேலு – நிலவழகியிடம் கொடுக்கப்பட இருவரும் தலைகுனிந்து வணங்கி அவற்றை வாங்கிக்கொண்டார்கள்.
வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
சகுந்தலா நெற்றியில் கீற்றாகத் திருநீறைப் பூசிக்கொண்டவர் மைந்தனிடம் அந்தக் கோவிலைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
“எவ்ளோ நாளாகுது நம்ம ஆளுங்க முகத்தைப் பாத்து. இதுக்காகத்தான் நான் மருமக குடும்பத்தோட வந்துடலாம்னு சொன்னேன் தர்ஷன்”
“நான் கேட்டதுக்கு இன்னும் அவங்க எந்த ஸ்டெப்பும் எடுத்த மாதிரி தெரியலயே”
வருங்கால மனைவி, மாமனார் மாமியாருக்குக் கேட்காதவண்ணம் மெதுவானக் குரலில் கூறினான்.
“அவசரப்படாத தர்ஷன். மதுவும் அவ ஃபேமிலியும் சொன்ன வார்த்தைய காப்பாத்துறவங்க. எனக்கு அவங்க மேல நம்பிக்கை இருக்கு.”
“எனக்கும் நம்பிக்கை இருக்கும்மா. இந்தக் குடும்பத்துல நமக்கான இடம் உறுதியாகிடுச்சு. ஆனா அது நிரந்தரமாவும் ஆகணும். அதுக்காக நான் எதையும் செய்வேன்”
“தர்ஷன்”
சகுந்தலாவின் குரலில் சின்ன அழுத்தம். கண்களில் கண்டனம் தெரிந்தது.
“கவலைப்படாதிங்க. நான் யாரையும் ஹர்ட் பண்ணமாட்டேன். யாருக்கும் துரோகம் பண்ண மாட்டேன். எனக்கும் ஒரு புது வாழ்க்கைய வாழணும்னு ஆசை இருக்கு. நீங்க ஆசைப்பட்ட மாதிரி உண்மையான சொந்தங்கள் சிலர் கிடைச்சிட்டாங்க. அது போதும் எனக்கு. அதோட எனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக்க என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன்”
அன்னையும் மகனும் பேசும்போதே மதுமதி வந்துவிட்டாள்.
“எங்க ஊர் கோவில் பிடிச்சிருக்கா அத்தை?”
“ரொம்ப அழகா அமைதியா இருக்கும்மா.” என்று சுருக்கமாகச் சொன்னார் சகுந்தலா.
“எங்க வீட்டுல உங்களுக்கு எந்த வசதிக்குறைவும் இல்லையே?”
அவரது முகத்தில் கனிந்த புன்னகை.
“சம்பந்தி வீட்டுல இருக்கணும்னு சொல்றோமே, தப்பா நினைச்சுப்பங்களேனு யோசனையோட வந்த எனக்கு இப்ப நிம்மதியா இருக்கு மது. அந்த ஃப்ளாட்டுல தன்னந்தனியா பேச்சுத்துணைக்கு ஆளில்லாம தவிச்சதெல்லாம் நரகம்” என்றவர் மைந்தனிடம் அவர்களது ஃப்ளாட்டை வாங்க யாரேனும் தொடர்புகொண்டார்களா என விசாரித்தார்.
“தொண்ணூறுக்கு ஒருத்தர் கேட்டிருக்கார்மா” என்றான் அவன்.
“சீக்கிரமா அதை வித்துடு. சம்பந்தி கிட்ட தொழில் ஆரம்பிக்கணும்னு கேட்டிருக்கல்ல, அதுல உன் பங்கு முதலா அந்த தொண்ணூறு இலட்சத்தைப் போட்டுரு”
அன்னையும் மகனும் தொழில்ரீதியாகப் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மதுமதி.
அவர்கள் இருவரும் நிதர்சனத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். அன்பு பாசம் என்று அலங்கார வார்த்தைகள் பேசுவதில்லை. அதே நேரம் கணக்கு போட்டு இலாப நஷ்டம் பார்த்துப் பழகும் மனிதர்களும் இல்லை. சொல்லப்போனால் அவளை விடவும் கொஞ்சம் நல்லத்தனம் உள்ள மனிதர்கள் தான்.
தர்ஷனிடம் அவள் கண்டது எல்லாம் ‘Survival of the fittest’ என்ற தன்மையைத்தான். என்னவொன்று, அவனது பாதையின் நடுவே யாரும் வரக்கூடாதென விரும்புபவன்.
கொஞ்சம் சுயநலமும் இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த உலகில் பிழைக்கமுடியாதே! அதனால் சகுந்தலா – தர்ஷன் இருவரது குணங்களும் மதுமதிக்குப் பிடித்துப்போய்விட்டது.
பவிதரன் கிளம்ப எத்தனிக்கையில் “நில்லுப்பா. அப்பிடியே உன் சித்தப்பா வீட்டுல பத்திரிகை வச்சிட்டுப் போயிடலாம்” என்றார் மாணிக்கவேலு.
பவிதரன் வியப்போடு தந்தையை நோக்கினான்.
“என்ன பார்வை? என்ன நடந்தாலும் அவன் என் தம்பிங்கிறது மாறாது.” என்றார் அவர்.
“போகலாம்பா” என்றான் முறுவலோடு.
சில நிமிடங்களில் அனைவரும் சிகாமணியின் வீட்டின் முன்னே காரில் போய் இறங்கினார்கள்.
ஈஸ்வரிக்காக வேப்பம்பூவை முற்றத்தில் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த குழலி வந்தவர்களைப் பார்த்ததும் திகைத்து எழுந்தார்.
பின்னர் அவசரமாக “வாங்க வாங்க” என்றவர் வீட்டுக்குள் அழைத்துப் போனார்.
மாணிக்கவேலுவுக்குத் தம்பியின் வீட்டின் தோற்றத்தில் தெரிந்த மாற்றம் அவரது பொருளாதார நிலையில் வந்திருக்கும் ஏற்றத்தை எடுத்துரைப்பதாய்!
நாற்காலிகளை எடுத்துப் போட்ட குழலி “இருங்க காபி கொண்டாரேன்” என்று சமையலறையை நோக்கி செல்ல எத்தனிக்க
“அதுக்கு என்ன அவசரம்மா? உக்காரு” என்று இன்னொரு நாற்காலியைக் காட்டினார் மாணிக்கவேலு. நிலவழகி வாயைத் திறக்கவில்லை.
பவிதரனுக்குத் தந்தையின் இந்த அணுகுமுறையில் தெரிந்த முதிர்ச்சி ஒன்றே மனதை நிறைப்பதாய்!
“உக்காருங்க சித்தி” என்றான் அவன்.
குழலி அமர்ந்ததும் சகுந்தலாவையும் தர்ஷனையும் அறிமுகப்படுத்தி வைத்தார் மாணிக்கவேலு.
“நம்ம சம்பந்தியம்மா. இவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை”
“வணக்கம்ங்க” குழலி புன்னகைக்கவும் சகுந்தலாவும் தர்ஷனும் முறுவலித்தார்கள்.
“அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம். நம்ம முத்தாரம்மன் கோவில்ல வச்சு சிம்பிளா முடிச்சிடலாம்னு இருக்குறோம். நீயும் சிகாமணியும் கட்டாயம் வரணும்”
எழுந்து நின்று அவரும் நிலவழகியும் சேர்ந்து திருமண அழைப்பிதழைக் கொடுக்க குழலி வாங்கிக்கொண்டார். மனதுக்குள் சின்னதாய் ஒரு தயக்கம்.
இருப்பினும் “கண்டிப்பா வருவோம் மாமா” என்றவர் “ஒரு நிமிசம்” என்று சொல்லிவிட்டு அந்த அறையின் ஒரு ஓரமாக சுவாமி படங்களுடன் இருந்த விளக்கின் முன்னே இருக்கும் திருநீற்று மரவையை எடுத்து வந்தார்.
மதுமதியின் நெற்றியில் பூசியவர் “நீடுழி வாழணும்” என்று ஆசிர்வதித்துவிட்டு தர்ஷனின் நெற்றியிலும் விபூதியைப் பூசிவிட்டார்.
“எல்லாரும் இருந்து சாப்பிட்டுப் போகணும்” என்று அவர் சொல்ல
“இன்னும் சிலருக்குப் பத்திரிகை வைக்கணும் குழலி. கல்யாணம் ஆனதும் மதுவுக்கும் மாப்பிள்ளைக்கும் முதல் விருந்து வச்சிடு” என்று வாய் திறந்து முத்துகளை உதிர்த்தார் நிலவழகி.
தனது மகளைக் குழலி ஆசிர்வதித்ததில் கொஞ்சம் இளகியிருந்தது அவரது மனம். இதே போல நல்ல மனதுடன் ஒரு நாள் கூட நிலவழகி மலர்விழியை ஆசிர்வதித்தது இல்லை. அந்த உறுத்தல் எழுந்ததன் விளைவே இந்தக் கனிவு.
“சரிங்க அக்கா”
பின்னர் அனைவரும் கிளம்பினார்கள். பவிதரன் மட்டும் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொல்லவும் “மாமா இன்னைக்கு உங்க கூட கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு என்னைப் போகச் சொல்லிருக்கார் பவி” என்றான் தர்ஷன்.
பவிதரன் நெற்றியைக் கீறியவன் தங்கையைப் பார்த்தான்.
“நீ மாப்பிள்ளைய அங்க அழைச்சிட்டுப் போயேன். எனக்குச் சின்னதா ஒரு வேலை சைட்டுல இருக்கு மது”
“சரிண்ணா”
அவர்கள் அனைவரும் கிளம்பியதைக் காரின் உறுமல் உறுதி செய்ததும் சித்தியிடம் வந்தான் பவிதரன்.
“உங்களுக்குச் சங்கடமா இருக்கும்ல சித்தி. உங்க சம்பந்தி வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்கனு”
குழலியின் எண்ணவோட்டமும் அதுவே! மலர்விழியின் புகுந்தகத்தினருக்கு இன்னும் மதுமதி மீதானக் கோபமோ அதிருப்தியோ தீரவில்லை. இந்தத் திருமணத்துக்குப் போனால் அவர்கள் எங்கே தங்கள் மீது வருத்தப்படுவார்களோ என்ற தயக்கம்.
பவிதரனுக்கு இது குழலியின் கை திருமண அழைப்பிதழை வாங்கியபோது நடுங்கிய விதத்திலேயே புரிந்துவிட்டது.
ஒருவரது சந்தோசம் இன்னொருவரைச் சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாதென எண்ணுபவன் அவன்.
“நீங்க கவலைப்படாதிங்க. நான் இன்னைக்கே குலவணிகர்புரத்துக்குப் போய் சிவகாமி அத்தை கிட்ட பேசுறேன். அவங்க பெருந்தன்மையானவங்க சித்தி. தப்பா நினைக்கமாட்டாங்க. சொல்லப்போனா மது வாழ்க்கைல செட்டில் ஆகுறதை அவங்களும் விரும்புவாங்க”
“சரி பவி. சம்பந்தியம்மா புரிஞ்சிப்பாங்கங்கிற நம்பிக்கைலதான் நானும் பத்திரிகைய என் கையில வாங்குனேன்”
குழலியிடம் சொல்லிவிட்டு உடனடியாகக் குலவணிகர்புரத்துக்குக் கிளம்பினான் பவிதரன்.
என்.எஸ்.என் நிவாசம் – அதுதான் மலர்விழியின் புகுந்தகம்.
அவளது மாமியார் சிவகாமி அங்கே போயிறங்கிய பவிதரனை அன்போடு வரவேற்றார்.
“என்னடாப்பா இப்ப நீ இங்க வர்றதே இல்ல?” என்றபடி காபியைக் கொடுத்தார் அவர்.
மலர்விழி கல்லூரிக்குச் சென்றிருந்தாள் போல. அவளது மைந்தன் கதிர்காமன் புவனேந்திரனின் மனைவி ஆதிராவோடு சுற்றிக்கொண்டிருந்தான்.
“மில் வேலை எல்லாம் யார் கவனிச்சுக்குறா ஆதி?” வாஞ்சையோடு ஆதிராவிடம் விசாரித்தான் பவிதரன்.
அம்பாசமுத்திரத்தில் ஆதிராவின் குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கும் எண்ணெய் மில்லை அவள்தான் நிர்வகித்து வருகிறாள். அவளது தமையன் கர்ணனுக்குக் குடும்பத்தொழிலை நடத்த விருப்பமில்லை என்பதால் அவள் பொறுப்பேற்று நடத்துகிறாள்.
கருவுற்றதிலிருந்து மில்லின் பொறுப்பை அவள் கர்ணனின் மாமனாரான தங்கவேலுவிடம் ஒப்படைத்திருந்தாள். அவர் நீண்டகாலமாக அவர்களின் எண்ணெய் மில்லில் பணியாற்றி வருபவர். அந்தத் தொழிலில் அனுபவமும் அவருக்கு அதிகம்.
“தங்கவேலு மாமா இருக்குறதால நிம்மதியா வீட்டுல இருக்குறேன்ணா”
ஆதிராவுக்கு இது எட்டாவது மாதத்தின் இறுதி. இந்த நேரத்தில் பவிதரன் சொன்ன செய்தி அவளது செவிக்கும் மனதுக்கும் இதமாய் இருந்தது.
அவளது கணவன் புவனேந்திரன் மீது மதுமதிக்கு இருந்த ஆசைக்கு ஒரு முற்றுப்புள்ளியாய் இத்திருமணம் இருக்குமென்ற நிம்மதி.
“சித்திக்கு மதுவோட கல்யாணத்துல கலந்துக்க சங்கடமா இருக்குதாம். அதான் உங்க கிட்ட பேசிட்டு அப்புறமா முடிவெடுக்கலாம்னு நினைக்குறாங்க” என்றான் பவிதரன் சிவகாமியிடம்.
அவர் தயங்கவில்லை.
“இதுல என்ன இருக்கு? என்ன இருந்தாலும் இரத்த உறவு இல்லையா? சந்தோசமா கல்யாணத்துல கலந்துக்கட்டும். ஆனா மலர் வருவாளா இல்லையாங்கிறதை அவ கிட்ட கேட்டுக்கப்பா. நானே சொன்னாலும் அவ இந்த விசயத்துல என் பேச்சைக் கேக்கமாட்டா” என்றார் அவர்.
“மலர் வரமாட்டானு எனக்கும் தெரியும் அத்தை. நானும் அவளை வற்புறுத்த விரும்பல. சித்தியும் சித்தப்பாவும் வந்தா உங்களுக்கு எதுவும் சங்கடமில்லயானு கேட்டுத் தெளிவுபடுத்திக்க வந்தேன்.”
“எனக்கும் உன் மாமாக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா ஒன்னு, ஆதிராக்கு இன்னும் கொஞ்சநாள்ல வளைகாப்பு வைப்போம். அப்ப நீ வரணும். சாக்குபோக்கு எதுவும் சொல்லக்கூடாது” என்று அன்பாய் ஒரு நிபந்தனையும் விதித்தார் சிவகாமி.
“கண்டிப்பா அத்தை. நான் வராமலா?”
அவர்களிடமிருந்து விடைபெற்றவன் நேரே போனது மேரு பில்டர்சின் அலுவலகத்துக்குத்தான்.
மதுமதியும் தர்ஷனும் அங்கே இருப்பார்களே என்று ஆர்வத்தோடு போனவனுக்கு அலுவலகத்தின் அசாதாரணச் சூழல் ஒவ்வாமையைக் கொடுத்தது. ஊழியர்களின் முகங்களில் மெல்லிய வருத்தம்.
மதுமதியும் தர்ஷனும் அங்கில்லை.
அங்கிருந்தவர்களில் ஈஸ்வரியின் முகத்தில் மட்டும் கோபமும் ஆற்றாமையும் கலந்திருந்தது.
கடனே என விசைப்பலகையில் விரல்களை டப்டப்பென அடித்துக்கொண்டிருந்தவள் பவிதரன் தன்னைக் கடந்து செல்கையில் அவனை உறுத்து விழித்தாள்.
அவளது பெரிய கருவிழிகளில் இருந்தது கலப்படமற்ற ஆதங்கம்.
என்ன நடந்திருக்கும் இங்கே?
பெரியதொரு கேள்வி பவிதரனுக்குள்.
அனைவரின் முன்னிலையில் ஈஸ்வரியிடம் விசாரிக்க அவனுக்குச் சங்கடமாய் இருந்தது. எப்படி பார்த்தாலும் அவளை விட மூத்த ஊழியர்கள் இருக்கிறார்கள் அல்லவா!
ஜீவனைத் தனது அலுவலக அறைக்குள் அழைத்து நடந்தது என்னவென விசாரித்தான். அவன் சொன்ன செய்தியில் சிறிது நேரத்தில் பவிதரனின் முகமும் மாறியது.
“நீங்க போங்க ஜீவன். எதையும் மனசுல வச்சுக்காதிங்க. மத்தவங்க கிட்டவும் நடந்த எதையும் மனசுல வச்சுக்க வேண்டாம்னு சொல்லிடுங்க. இந்த ஆபிஸ்ல எந்த மாற்றமும் வராது. அதுக்கு நான் கேரண்டி. போங்க”
ஜீவனின் முகத்தில் தொலைந்து போன ஜீவன் மீண்டும் வந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சார். அப்புறம் இன்னொரு விசயம். நம்ம ஈஸ்வரிய…” என்றவன் தொடர்ந்து சொன்ன செய்தியின் பவிதரனின் உடலில் இறுக்கம் படர்ந்தது.
தாடை இறுக அனைத்தையும் கேட்டவன் வலுக்கட்டாயமாய் சம்பிரதாயப்புன்னகை ஒன்றை வரவழைத்துக்கொண்டான்.
“எல்லா ஸ்டாஃபும் ஜாப் செக்யூரிட்டிய விட வேலையிடத்துல நம்ம தன்மானத்துக்குப் பாதிப்பு வரக்கூடாதுங்கிறதைதான் முக்கியமா நினைப்பாங்க சார். நீங்க எப்பவும் எங்க தன்மானத்தைப் பாதிக்கிற மாதிரி பேசுனதோ நடந்துக்கிட்டதோ இல்ல. இந்தத் தடவை நடந்தது மறுபடியும் நடக்குறதுக்கு நீங்க விடமாட்டிங்கனு நம்பிக்கை இருக்கு”
தனது ஊழியர்களின் நம்பிக்கை இத்துணை அழுத்தமானதா என்று நெகிழ்ந்த அதே நேரத்தில் சற்று முன்னர் நடந்த சம்பவங்கள் கொடுத்த ஆத்திரமும் பவிதரனுக்குள் நிரம்பியிருந்தது.

தனது அலுவலக அறையின் கதவைத் திறந்து வெளியே வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களின் முகத்தை நோட்டமிட்டான். சின்னதாய் ஒரு நிம்மதி படர்ந்திருந்தது அவர்களின் வதனங்களில். ஈஸ்வரியின் வதனத்தைத் தவிர!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

