சைக்கோபாத்கள் என்றாலே கொலைகாரர்கள், குற்றவாளிகளாகத் தான் இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைக்கோபாத்கள் வன்முறையோடு இன்னும் பல குற்றவியல் செயல்களிலும் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதீத மனக்கிளர்ச்சி, பழியைத் திசை திருப்பும் போக்கு, இதற சமூகவிரோதபோக்குகள் இவையனைத்தும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை மற்ற குற்றங்கள் செய்பவர்களை விட அபாயகரமானவனாகக் காட்டுகின்றன. இருப்பினும் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கும், வன்முறை மனப்பான்மைக்கும் இடையே சில விசயங்கள் ஒத்துப்போகலாம். எல்லா சைக்கோபாத்களும் கொலைகாரர்கள் குற்றவாளிகளாக மாறுவதில்லை. அவர்களின் மூர்க்கத்தனத்தைத் தணிக்கவும் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள் வன்முறையான சைக்கோபாத்களாக உருவெடுப்பதில்லை.
– An article from Psychology today
ஜான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முத்துவைத் தேடி கொல்லத்திற்கு காவல்துறையினர் விரைந்தார்கள். அதில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அடக்கம்.
முரளிதரனும் இதன்யாவும் பொன்மலையில் இருந்தார்கள். காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பங்களையும், முன்னேற்றத்தையும் பற்றி அறிக்கை கொடுக்கும் வேலை அவர்களுக்கு இருக்கிறது. கூடவே முத்துவைப் பொன்மலைக்கு அழைத்து வந்ததும் அவனையும் ஜானையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன.
இதையெல்லாம் செய்து கொண்டிருந்தாலும் முத்துவை இவ்வளவு எளிதாகத் தப்பிக்கவிட்டிருக்கிறோமே என்ற இயலாமையோடு விசாரணை அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே களைத்தாள் இதன்யா.
தன்னைப் போலவே அன்று அவனைப் பார்த்தவர் பாதிரியார் பவுலும் தான். சாத்தான் வழிபாட்டில் மூழ்கியிருந்தவனுக்குத் தேவாலயத்தில் என்ன வேலை? அவன் பாவமன்னிப்பு கேட்க வந்ததாக பாதிரியார் சொன்னாரே! ஒரு முதியவரை ஆசிட் ஊற்றி, முகத்தில் தோலை உறித்து கழுத்தை நெறித்துக் கொன்ற மூர்க்கன் இரண்டு நாய்களை விபத்து செய்தற்காக பாவமன்னிப்பு கேட்டானாம்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சாத்தான் வழிபாட்டுக்குழுவிலிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தால் தனது ஜீவனத்திற்கு ஆபத்தென்பதால் அவனது மேக்கப் திறமையால் மாறுவேடத்தில் பொன்மலையில் நடைபெற்ற சாத்தான் வழிபாட்டுக்கு வந்திருப்பானோ?
ரோஷணுக்கு மரணம் குறித்த எண்ணங்களைக் கூட செங்கோடனாக வந்த முத்து தான் உருவாக்கியிருக்கவேண்டும். என்ன சொன்னால் அவன் கட்டாயம் செத்துப்போவான் என்பதை உறுதியாகத் தெரிந்துகொண்ட பிற்பாடு தான் ஹாக்சா ப்ளேடையும் கூடவே கொடுத்திருக்கான்.
இதன்யாவுக்குப் புரியாத ஒன்று என்னவென்றால் சாத்தான் வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களுக்கும் பாதிரியார் பவுல் நன்கு பழக்கமாகியிருந்தது தான்.
ரோஷண், ராக்கி, முத்து மூவரையும் அவர் குறைவாக எங்கேயும் சொல்லவில்லை. ஒருவேளை அவர்கள் தங்களது சாத்தான் வழிபாட்டு நம்பிக்கையை அவரிடம் மறைத்திருக்கலாம் அல்லவா!
இனி எந்த ‘கலாம்’களையும் ஏற்க அவள் தயாராக இல்லை. பாதிரியாரிடம் ஏதோ உண்மை மறைந்திருக்கிறது. அதனால் தான் வழக்கோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் அவர் காப்பாற்ற நினைக்கிறார் போல.
இம்முறை அவரைக் குறைவாக எடை போட இதன்யா தயாராக இல்லை. முத்துவை இங்கே அழைத்து வந்த பிறகு அவரையும் காவல்துறை கஷ்டடிக்கு எடுத்தேயாக வேண்டுமென முரளிதரனிடம் கூறிவிட்டாள்.
“என்ன அடிப்படைல அவரை நம்ம விசாரிக்க முடியும் மேடம்?”
“கொலைகாரன் கூட அவர் பேசுனதை நானே கண்ணால பாத்தேன்… அந்த அடிப்படைல விசாரிக்கலாமே சார்… அதுவும் இல்லனா சாத்தான் வழிபாட்டுல நம்பிக்கை உள்ளவன் சர்ச்சுக்குப் பாவமன்னிப்பு கேக்க வந்தான்னு சொன்னாரே, அந்த ஸ்டேட்மெண்ட்ல சந்தேகம் இருக்குனு விசாரிக்கலாம்… ஏதோ ஒன்னு செஞ்சு அவர் கிட்ட விசாரிக்கணும்… இன்னும் என்னென்ன உண்மைய அவர் மறைச்சிருக்கார்னு தெரியணும்”
பாதிரியார் பவுலை காவல்நிலைய விசாரணைக்கு உட்படுத்தியே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள் இதன்யா.
இந்நிலையில் மகேந்திரனும் மார்த்தாண்டனும் முத்துவைக் கொல்லத்தில் கைது செய்து பொன்மலைக்கு அழைத்து வந்தார்கள்.
வந்தவனின் முகத்தில் துளியும் குற்றவுணர்ச்சி இல்லை. ஜானும் முதலில் இப்படித் தானே இருந்தார். போகப்போக எல்லாம் வருமென இதன்யா அலட்சியமாக நினைத்துக்கொண்டாள்.
மார்த்தாண்டனிடம் பூங்குன்றத்தில் இருக்கும் முத்துவின் வீட்டை சோதனை போடும்படி கட்டளையிட்டவள் முத்துவிடம் விசாரிக்கையில் பாதிரியார் பவுலும் விசாரணைக்குக் காவல் நிலையம் வந்தே தீரவேண்டும்மென சொல்லிவிட்டாள் அவள்.
முத்து விசாரணை அறையிலும் அசரவில்லை. எதையோ சாதித்த கர்வத்தோடு அமர்ந்திருந்தான் அவன்.
ஜான் முடித்த இடத்திலிருந்து முத்துவிடம் விசாரணையை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு எதிரே அமர்ந்தாள் இதன்யா.
அவளைப் பார்த்த பிறகும் அவனிடம் சலனம் இல்லை.
“நான் உன்னை ஃபாதர் பவுல் கூட சர்ச்ல பாத்தேன்” என மெதுவாக ஆரம்பித்தாள் அவள்.
முத்துவிடம் எந்தவித அதிர்வும் இல்லை. நிச்சலனமாக இருந்தது அவனது வதனம்.
“சாத்தான் வழிபாட்டுக்குப் போன அப்புறமும் ஃபாதர் கிட்ட போய் பாவமன்னிப்பு வாங்குற அளவுக்கு நீ இறங்கி வந்திருக்க… நாட் பேட்… பட் பாவமன்னிப்பு கேட்டது நாய்களைக் கொன்னதுக்காகவா? இல்ல இனியாவையும் முருகையாவையும் கொன்னதுக்காகவா?”
இப்போது அவனது முகத்தில் மூர்க்கத்தனம் குடியேறியது. பற்களைக் கடித்தவன்
“நான் ஒன்னும் இனியாவ கொல்லலை… நான் கொன்னது முருகையாவ மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு எதிரே கிடந்த மேஜையில் ஓங்கியடித்தான்.
அடுத்த நொடியே இதன்யாவின் கரம் அவனது கன்னத்தில் அதை விட மூர்க்கமாகவும் வேகமாகவும் படிந்து மீண்டது.
திடகாத்திரனான முத்துவே அந்த அறையில் கொஞ்சம் தடுமாறிவிட்டான். ரௌத்காரத்துடன் நின்ற இதன்யாவோ
“ஆப்டர் ஆல் ஒரு கில்லர் உனக்கு அவ்ளோ கோவம் வருதா? அதுவும் போலீஸ் ஆபிசர் முன்னாடியே மேஜைய தட்டி கோவப்படுறிங்களோ? அமைதியா நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லணும்… இல்லனா விசாரணைக்கு ஒத்துழைக்காம என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கப் பாத்தத்தால தற்காப்புக்கு உன்னைச் சுட்டுக் கொன்னதா நாளைக்கு எல்லா நியூஸ் சேனல்லயும் உன்னை ப்ரைம் டைம் நியூஸ்ல வர வச்சிடுவேன், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கவும் திடுக்கிட்டுப் போய் அமர்ந்தான் அவன்.
பெண் காவல் அதிகாரி என்பதால் எளிதில் அவர்களைச் சமாளித்துவிடலாமென மனக்கோட்டை கட்டியவனுக்கு இப்போது இதன்யா துப்பாக்கிச்சூட்டுக்குத் தயங்கமாட்டேன் என்றதும் மரணபயம் பீடித்தது.
இதன்யாவும் தனது கோபத்தைக் குறைத்துக்கொள்ளாமல் அமர்ந்தாள்.
“ஜான் எங்க விசாரணைல உன்னை பத்தி எல்லா உண்மையையும் சொல்லிட்டான்… நீயும் அவனும் தான் முருகையாவ கொன்னிங்கங்கிறதுக்கு சாலிடான எவிடென்ஸ் எங்க கிட்ட இருக்கு… பட் என்ன காரணத்துக்காக நீ ஜான் கூட கூட்டு சேர்ந்து அந்தப் பெரியவரைக் கொலை பண்ணுனனு எனக்குத் தெரியணும்… ரோஷணுக்கு எதுக்காக ஹைடோஸ் மருந்தும், ஹாக்சா ப்ளேடும் குடுத்தனு தெரியணும்… உனக்கும் இனியா மர்டருக்கும் எதாச்சும் சம்பந்தம் இருக்கானு நான் தெரிஞ்சிக்கணும்… உண்மைய மறைக்காம சொன்னா உனக்கு நல்லது”
“இனியாவ நான் கொல்லல மேடம்”
“சரி! அப்ப ஏன் முருகையாவ ஏன் கொலை பண்ணுன? அவருக்கும் உனக்கும் என்ன விரோதம்? ரோஷணைக் கொல்ல சொல்லி உன்னை அனுப்புனது யாரு? இல்ல நீயே விரும்பி தான் அவனைத் தற்கொலைக்குத் தூண்டுனியா?”
முத்து அமைதியாகத் தனது வாக்குமூலத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.
இளம்பிராயத்தில் பெற்றோரை இழந்து பூங்குன்றத்தில் தாய் மற்றும் தந்தைவழியில் நெருங்கிய உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை அவனது தூரத்து உறவு மாமா ஒருவர் மும்பைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே தரமான நிறுவனமொன்றில் அவனை அழகுக்கலை பட்டப்படிப்பு படிக்கவும் வைத்தார். அவனுக்கும் முக அலங்காரத்தில் ஆர்வம் இருந்தது. அதை அவன் ஒரு தொழிலாக அல்லாமல் கலையாகப் பார்க்கத் துவங்கினான்.
இந்நிலையில் அவனது படிப்பு பாதியில் இருக்கும்போது அந்த மாமாவும் இறந்துவிட வேறு வழியின்றி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். நண்பன் ஒருவனின் உதவியால் இந்தி சீரியல்கள் தயாரிக்கும் ஸ்டூடியோ ஒன்றில் மேக்கப் மேன் வேலை கிடைத்துவிட ஆர்வமாக அந்த வேலையைச் செய்து வந்தான்.
இருப்பினும் தனக்கு இருக்கும் திறமைக்குப் பாலிவுட்டில் மேக்கப் மேனாக வாய்ப்பு கிடைக்குமென அழுத்தமாக நம்பினான்.
நெப்போடிசம் மலிந்த இந்தி திரையுலகத்தில் அவனைப் போன்ற வெளியாட்களை அவ்வளவு எளிதில் நுழைய விடமாட்டார்கள் என்பதைப் போக போக தெரிந்துகொண்டான் முத்து.
திறமை மட்டும் இருந்தால் போதாது, பிரபலங்களுடன் பழக்கம் வேண்டும். அடிக்கடி அவனைப் பற்றிய செய்திகள் ஏதாவது ஒருவகையில் பரவுவதற்கு வழி செய்யும் பி.ஆர் குழுவினர் வேண்டும்.
இப்படி இருந்தால் திறமை இல்லை என்றால் கூட பாலிவுட்டில் கோலோய்ச்சலாமென்ற கசப்பான உண்மை அவனுக்குப் புரியவந்தபோது முத்து நொந்து போனான்.
பெற்றோரின் இழப்பு, உறவினர்களின் புறக்கணிப்பு, அன்பான மாமாவின் அகால மரணத்தை விட திறமைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், அதற்கான கதவு இழுத்துச் சாத்தப்பட்டபோதும் அவன் அதிகப்படியாக நொறுங்கிப்போனான்.
சிறுவயதிலிருந்தே அவனுக்கு அழகான பொருட்கள் எதையும் கண்டால் திருடவேண்டுமென்ற தூண்டல் உண்டு. பணத்திற்கான திருட்டு என அதைக் கூற முடியாது. அழகான பொருளைத் திருடும் போது கிடைக்கும் த்ரில் உணர்வும், சந்தோசமும் அவனுக்குப் போதை போல.
இப்படி தான் சீரியல் ஷூட்டிங்கின் போது நடிகை ஒருவரின் விலைமதிப்பற்ற மோதிரம் ஒன்றை கேரவனிலிருந்து திருடிவிட்டான். அதை கண்டறிந்த ஸ்டூடியோ நிர்வாகம் அவன் மீது காவல்துறையில் புகாரளித்ததோடு மட்டுமின்றி வேலையை விட்டும் அனுப்பிவிட்டது.
வாழ்க்கையை வெறுத்தவனை ஜெயிலில் கழித்த நாட்களின் விரக்தியும், வேலை கிடைக்காத ஏமாற்றமும் மீண்டும் சொந்த ஊருக்கே அனுப்பிவைத்தன.
பூங்குன்றத்தில் எவ்வித பராமரிப்புமின்றி நின்ற வீட்டைக் கண்ணீரோடு அவன் பார்த்தபோது தான் “ஏ முத்து… நீ துரைசாமியண்ணன் மகன் முத்து தானே?” என விசாரித்தபடி வந்து கட்டியணைத்துக்கொண்டார் ஜான்.
தனக்கென யாருமில்லை என்று நொந்து போய் தவித்த மனதுக்கு ஜானின் பாசம் இதமாக இருக்கவே முத்துவும் ஜானுடன் நன்றாகப் பழக ஆரம்பித்தான். அவரிடம் தனது சூழ்நிலையை மறைக்காமல் உரைத்தான்.
தனக்கு வேலை கட்டாயம் வேண்டுமென கூறினான். ஜானும் அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார். மும்பையில் சம்பாதித்த பணம் அனைத்தையும் வைத்து கார் ஒன்றை வாங்கி அவன் கால்டாக்சியாக ஓட்டவும் வழி செய்து கொடுத்தார்.
முத்துவும் ஜானை தனது சகோதரராகவே பாவிக்க ஆரம்பித்தான். அப்போது தான் சோபியாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்தது. மருத்துவமனைக்கும் சாந்திவனத்துக்குமிடையே ஜான் அல்லாடினார்.
முத்து அவனால் இயன்ற உதவியை அவருக்குச் செய்துவந்தான். தனது வருமானம் போகிறதே என்ற கவலையின்றி மருத்துவமனையில் சோபியாவுக்குப் பகல் முழுவதும் துணையாக இருந்தான்.
மாலையில் ஜான் வேலையிலிருந்து வந்ததும் சவாரிக்குக் கிளம்புவான் அவன்.
இதற்கிடையே அவன் கவனிக்கத் தவறிய விசயம் தான் ஜான் – நவநீதத்தின் உறவு மற்றும் சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இருவரும் இணைந்தது.
பணம் கிடைக்காமல் அவர் திண்டாடியபோது காரை விற்று பணம் தரட்டுமா என கேட்டவன் தான் முத்து.
“சோபி பாப்பாக்குச் சரியானா போதும்ணே… பணம் என்ன பணம், அதை இன்னும் ரெண்டு வருசத்துல சம்பாதிச்சிடுவேன்… உயிர் போனா வருமாண்ணே?”
ஜானுக்கு முத்துவின் நிலை நன்கு தெரியும். அவனது உதவி மனப்பான்மையில் நெகிழ்ந்தாலும் காரை விற்க சம்மதிக்கவில்லை.
“கர்த்தர் எனக்கும் சோபிக்கும் வழிகாட்டுவார் முத்து” என நம்பிக்கையோடு உரைத்தார் ஜான்.
சோபியாவின் உடல்நிலை நலிவடைய ஆரம்பிக்கவும் ஜானின் நம்பிக்கையும் ஊசலாடத் தொடங்கியது.
என்ன செய்தால் மகளைக் காப்பாற்றலாமென அல்லாட ஆரம்பித்தார் ஜான்.
அப்போது தான் ரோஷணின் சாத்தான் வழிபாட்டு குழுவைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அதில் அவரும் நவநீதமும் இணைந்தார்கள்.
கிளாராவின் சதியால் இனியாவிடம் திருட்டுப்பட்டம் வாங்கினாலும், கலிங்கராஜன் கொடுத்த தொகையை உண்மையறிந்து இனியா அவரிடமே ஒப்படைத்துவிட சோபியாவின் அறுவைச்சிகிச்சை நல்லபடியாக முடிந்து அவள் தேறினாள்.
அந்தச் சந்தோசத்தில் வாரச்சந்தையில் ஆடு ஒன்றை வாங்கினார் ஜான். அவரது உற்சாகத்தைக் கவனித்த முத்து “ஆடு வளக்கப் போறியாண்ணே?” என விசாரித்தான்.
“இல்லடே… இங்க வா… உன் காதுல சொல்லுறேன்” என அழைக்கவும் அவரருகே போனான்.
“என் மவளுக்கு ஆபரேஷன் நல்லபடி முடிய அந்தச் சாத்தான் தான் காரணம்… அவர் மேல நம்பிக்கை வச்சு கூட்டத்துல கலந்துகிட்டேன்… இப்ப சோபி உடம்பு தேறிட்டா… அவருக்குப் பலி குடுக்க ஆடு வாங்கிருக்கேன்… ரோஷணுக்கு காணிக்கையா குடுக்க ஐநூறு ரூவா தனியா வச்சிருக்கேன்”
அவனது காதில் இரகசியம் பேசினார் ஜான்.
“சாத்தான் கும்பலா? இதுல்லாம் சரியா வருமாண்ணே? அவங்கலாம் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, கண்டதையும் சாப்பிடுவாங்கனு கேள்விப்பட்டேன்” என முத்து தயங்க
“அப்பிடி இப்பிடி இருந்தாலுமே என்னடே தப்பு? வாழ்க்கை வாழுறதுக்குத் தானே? இந்த ஒரு வாழ்க்கைல கலாச்சாரம், கட்டுப்பாடு, ஒழுக்கம்ங்கிற பேருல எத்தனை தடை? இதெல்லாம் சாத்தானால மட்டும் தான் உடைக்கமுடியும்… உண்மைய சொல்லவா முத்து? சாத்தான் வழிபாட்டுக்குப் போனதுல இருந்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்… இதை நம்ம ஊர்க்கார பயலுவ கிட்ட சொல்லிடாத… இங்க எவனுக்கும் நம்ம சந்தோசமா வாழ்ந்தா பிடிக்காது” என்று சொல்லிவிட்டு ஆட்டை இழுத்துக்கொண்டு சென்றார் ஜான்.
முத்துவுக்கு சாத்தான் என்ற பெயரைக் கேட்டாலே பயம் வந்தது. அவனது ஓங்குதாங்கான உருவத்துக்குப் பயப்படுபவர்கள் அதிகம். இங்கே அவனே பயப்பட்டான். ஆனால் இந்தப் பயம் தயக்கம் எல்லாம் உடைந்து அவனும் துணிந்து சாத்தான் வழிபாட்டு குழுவில் இணைந்த நாளும் வந்தது.
தன்னை விட திறமை குறைந்தவனுக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்த செய்தி அறிந்தபோது திறமையை விட அதிர்ஷ்டமே வாய்ப்பைப் பெற்றுத் தருமென நம்ப ஆரம்பித்தான் முத்து. அந்த அதிர்ஷ்டத்தைத் தனக்குச் சாத்தான் கொடுப்பாரென நம்பி ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இணைந்தான்.
அங்கே இணைந்த பிறகு தான் வெள்ளந்தியான ஜானுக்குள் கபடமும், அன்பான முத்துவுக்குள் மூர்க்கமும் முளைத்தன. அவர்கள் இருவரும் பின்னாட்களில் குற்றவாளிகள் ஆனதற்கு காரணமான மனச்சிதைவின் முதல் அடி ஆரம்பித்த இடம் பொன்மலை காட்டு குகை. அத்தி
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


 Written by
Written by