“நேர்மையானவர்களிடம் கோபமும் பிடிவாதமும் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களது நிலைப்பாட்டைப் புரிய வைப்பதற்காக மெனக்கிடுவதில்லை. பிரச்சனைகள் வரும் போது அடுத்தவர்களின் ஆதரவுக்காக அவர்கள் காத்திருப்பதும் இல்லை. தங்களது செயல்களால் உண்டாகும் பின்விளைவுகளை நன்கு அறிந்த பிற்பாடே அவர்கள் காரியத்தில் இறங்குகின்றனர். தங்களது சுயநலத்துக்காக மற்றவர்களை பொம்மையாய் ஆட்டுவிக்கத் தெரியாதவர்கள் அவர்கள். ஆனால் இத்தகைய நேர்மைகுணம் கொண்ட மனிதகள் நம்மில் சிலரே. அந்தச் சிலரில் என் அன்னை தேவிகாவும் ஒருவர்.
-தக்ஷிண்யா
பிருந்தாவனம்…
சோம்பல் முறித்தபடி எழுந்த தக்ஷிண்யா இன்னும் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் ருத்ரதேவை தொந்தரவு செய்யாமல் பூனை போல நடந்து வார்ட்ரோபுக்குள் இருந்த தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் குளித்து உடை மாற்றிவிட்டு திரும்பி வந்த போது ருத்ரதேவ் அங்கில்லை. ஆனால் அவனுக்குப் பதிலாக அந்த அறையிலிருந்த விஷன் போர்டில் (Vision Board) பிங்க் வண்ண ஸ்டிக்கி நோட் குட் மானிங் என்றது.
புன்னகையுடன் அங்கே கிடந்த பேனாவை எடுத்தவள் ‘குட் மானிங், ஹேவ் அ நைஸ் டே’ என்று அதே ஸ்டிக்கி நோட்டில் எழுதி பக்கத்தில் ஸ்மைலியை வரைந்துவிட்டு கூந்தலை உலர்த்த ஆரம்பித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடுத்த சில நிமிடங்களுக்கு அந்த அறைக்குள் ஹேர் ட்ரையரின் ‘குர்’ சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. உலர்ந்த கூந்தலை க்ளச்சில் அடக்கிவிட்டு உடுத்தியிருந்த பாசிப்பருப்பு வண்ண ஃப்ளாரல் டிசைன் ஜார்ஜெட் சேலையை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் ஹாலை அடைந்த போது உடற்பயிற்சியை முடித்துவிட்டு வியர்வை வழிய வந்த மகாதேவ் “குட் மானிங் அண்ணி… அண்ணாக்கு இன்னும் பொழுது விடியலையா?” என்க
“அவர் ரூம்ல இல்லையே… நான் உங்க கூட ஒர்க் அவுட் பண்ண வந்திருப்பார்னு நினைச்சேன்” என்றாள் தக்ஷிண்யா.
“நீங்க வேற அண்ணி, அண்ணா கூட ஒர்க் அவுட் பண்ணுறது ஸ்கூலுக்கு லேட்டா போய் டீச்சர் கிட்ட மாட்டிக்கிறதுக்குச் சமம்” என்று சோகமாக சொன்னபடி வந்து நின்றாள் மாலினி.
கொழுந்தனாரும், நாத்தனாரும் தனது கணவனின் ‘ஸ்ட்ரிக்ட் சின்னப்பா’ அவதாரத்தால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொண்ட தக்ஷிண்யா நமட்டுப் புன்னகையுடன் நின்றாள்.
கூடவே “இதை நான் உங்கண்ணா கிட்ட மறக்காம சொல்லிடுறேன்” என்று சமையலறை பக்கம் நழுவினாள் அவள்.
மகாதேவும் மாலினியும் திருதிருவென விழித்தபடி நிற்கையிலேயே சசிகலாவுடன் பார்வதியும் மீனாட்சியும் கோவிலுக்குச் செல்வதற்காக தயாராகி வந்தனர்.
சசிகலா ருக்மணியிடம் காபி கொண்டு வருமாறு கூறிவிட்டு ஹால் சோபாவில் அமர அவரது மருமகளோ சமையலறையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்த ருக்மணி “நீங்களும் எழுந்திரிச்சிட்டிங்களாம்மா? ஹால்ல எல்லாரும் இருக்காங்க… நீங்களும் போங்க… நான் காபி கொண்டு வர்றேன்” என்க
“நோ ஆன்ட்டி… இன்னைக்கு நானே என் கையால காபி போட்டு எல்லாருக்கும் குடுக்கப் போறேன்… ப்ளீஸ் எனக்காக விட்டுக்குடுங்களேன்” என்றாள் தக்ஷிண்யா.
ருக்மணி சன்னப்புன்னகையுடன் சம்மதமாய் தலையசைக்க காபி பவுடர் எங்கே என்று தேடுதல் வேட்டையில் இறங்கினாள் அவள். சில நிமிடங்கள் பொறுத்துவிட்டு தானே காபி பவுடர் டப்பாவை அவளிடம் நீட்டினார் ருக்மணி.
“தேங்க்யூ” என்றவளிடம்
“எனக்கு ஏன்மா தேங்க்ஸ்லாம் சொல்லுறிங்க?” என்று நாணினார் ருக்மணி.
“ஒருத்தவங்க நமக்குச் சின்ன ஹெல்ப் பண்ணுனாலும் தேங்க்ஸ் சொல்லணும்னு எங்கம்மா சொல்லிருக்காங்க” என்றாள் தக்ஷிண்யா புன்னகையுடன்.
ருக்மணியும் முகமெல்லாம் ஜொலிக்க காபி பவுடரை அவளிடம் கொடுத்துவிட்டு காலையுணவுக்கான காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தார்.
காபி போட சென்ற தக்ஷிண்யா “இன்னும் என்னென்ன உங்கம்மா சொல்லி குடுத்தா?” என்ற லலிதாவின் குரலில் கையில் இருந்த காபி பவுடர் டப்பாவை டொம்மென்று சமையல் மேடையில் வைத்தவள் கேலிச்சிரிப்போடு திரும்பினாள்.
தன்னருகே வந்த லலிதாவை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தாள் அவள்.
“என்ன பதிலையே காணும்? நான் சொல்லட்டுமா? மகளே மகளே! நான் வசதியான வீட்டுப்பையனை தேடி வளைச்சுப் பிடிச்ச மாதிரி நீயும் பணக்கார இடமா பாத்து வளைச்சு கல்யாணம் பண்ணிக்கனு சொன்னாளா?”
தக்ஷிண்யா தனது முத்துப்பற்களைக் காட்டிச் சிரித்தவள் “இல்ல சின்னம்மா! தக்ஷி! தக்ஷி! நீ வளர்ந்து பெரிய பொண்ணு ஆனதுக்கு அப்புறம் நீ அழகா இருக்கனு வசதியான வீட்டுப்பசங்க உன் பின்னாடி சுத்துவாங்க… வீட்டுல பெர்மிசன் வாங்காம கல்யாணம் பண்ணிக்கக்கூட தயாரா இருப்பாங்க… ஆனா நீ அதுல மயங்கிடாம தீர யோசிச்சு லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுனு சொல்லிருக்காங்க…. ஹான்! இன்னொன்னும் சொன்னாங்க, அப்பிடி பணக்காரனா பாத்து கல்யாணம் பண்ணுனா, அவன் வீட்டுல அத்தை சொத்தைனு இருக்குற எக்ஸ்ட்ரா டிக்கெட் பேசுறதை காதுல போட்டுக்காம உன் வேலைய கவனினு சொன்னாங்க… இது போதுமா?” என்று எள்ளலாக கூறிவிட்டு காபி போடும் வேலையில் மும்முரமானாள்.
லலிதா முகம் கறுக்க வெளியேறி மீண்டும் ஹாலுக்கே வந்துவிட்டார்.
சில நிமிடங்களில் தக்ஷிண்யா காபி கோப்பைகள் அடங்கிய ட்ரேவுடன் வந்தவள் மாமியாருக்கும் பெரியவர்களுக்கும் காபி கோப்பைகளை கொடுத்தபடி லலிதாவின் அருகே வரும் போதே ராஜேந்திரனுடன் ஏதோ பேசியவாறு ஹாலுக்குள் பிரவேசித்தான் ருத்ரதேவ்.
ஒரே நேரத்தில் தக்ஷிண்யாவும் லலிதாவும் அவர்களைப் பார்த்தனர். லலிதா கணவருக்கு தனது கையால் காபியை எடுத்துக்கொடுக்க எழுந்திரிப்பதற்குள் தக்ஷிண்யா படுவேகமாக தனது கையிலிருந்த ட்ரேயை ராஜேந்திரன் முன்னே நீட்டினாள்.
“காபி எடுத்துக்கங்கப்பா”
அவளது அப்பா என்ற அழைப்பில் ராஜேந்திரனின் முகம் விகசிக்க லலிதாவின் முகமோ கூம்பியது. அந்த மனிதர் காபி கோப்பையை வாங்கி மடமடவென அருந்துவதை பொருமலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் தக்ஷிண்யா ருத்ரதேவிடம் அடுத்த கோப்பையை நீட்டவும் தொண்டையைச் செருமினார்.
“ருத்ராவுக்குக் காபி சுத்தமா பிடிக்காது… அவனுக்கு இஞ்சி டீ தான் ரொம்ப பிடிக்கும்” என்று மட்டம் தட்டும் குரலில் அவர் கூற
“அதுல்லாம் பழைய விசயம்… இப்ப எனக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாமே ருத்ராவுக்கும் பிடிக்கும்” என்று அமர்த்தலாக சொன்ன தக்ஷிண்யா காபி கோப்பையை ருத்ரதேவின் கையில் திணிக்க அவனும் சமத்தாக வாங்கி கொண்டான்.
“ருத்ரா உனக்குக் காபி பிடிக்காதுல்லப்பா?”
“இனிமே பிடிக்கும் அத்தை”
அவனது கண்கள் தக்ஷிண்யாவிடம் பேச ஆரம்பிக்க சசிகலாவோ இனி மகனை தக்ஷிண்யா மாற்றிவிடுவாள் என்ற நம்பிக்கை மிளிர தனது அன்னையை நோக்கி புன்னகைத்தார்.
“எப்பிடி என் மருமகள்?”
“உன்னை விட புத்திச்சாலி”
அன்னையும் மகளும் கண்களால் பேசிக்கொள்ளும் போதே ருக்மணி ஹாலுக்கு வந்தார்.
“இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும்மா?”
சசிகலா சொல்லுவதற்குள் லலிதா முந்திக்கொண்டார்.
“ருத்ராவுக்கு என்ன பிடிக்குமோ அதையே பண்ணிடு ருக்மணி”
“ஏன்? இந்த வீட்டுல ருத்ராவுக்கு மட்டும் தான் நாக்கு இருக்குதா?”
அவள் கேட்ட தொனியில், காபி குடித்துக் கொண்டிருந்த ருத்ரதேவுக்குப் புரையேறிவிட்டது. ராஜேந்திரன் அவன் முதுகில் தட்டிக்கொடுக்க லலிதாவோ தக்ஷிண்யாவை முறைக்க ஆரம்பித்தார்.
அவரது முறைப்பைக் கண்டுகொள்ளாமல் ருக்மணியிடம் அன்றைய தினம் மூன்று வேளைக்கான உணவு பட்டியலையும் வாசித்தாள் தக்ஷிண்யா.
“மானிங் கண்டிப்பா வேகவச்ச ஐட்டம்ஸ் இருக்கணும் ஆன்ட்டி… அதுல உப்பு காரம் புளிப்பு மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க… ஆளுக்கு ஒரு சாப்பாடுனு செஞ்சு வேஸ்ட் ஆகுறதை விட, பொதுவா எல்லாருக்கும் சமைக்கிறது பெஸ்ட்… லஞ்சுக்கும் இதையே ஃபாலோ பண்ணுங்க… டின்னருக்கு ரைஸ் இல்லாம பாத்துக்கோங்க… மாலினியும் சர்வாவும் சின்னப்பசங்க… என்னை பாக்குறதுக்கு ஹோட்டலுக்கு வந்தப்ப ரெண்டு பேரும் பாஸ்தா, பர்கர், நூடுல்ஸ்னு வெளுத்து கட்டுனாங்க… சோ அதை வீட்டுலயே பண்ணிக் குடுத்தா பெட்டர்… இங்க நீங்க ஸ்பெஷலா சமைக்க வேண்டியது அவங்களுக்கும் பெரியவங்களுக்கும் மட்டும் தான்… மிச்சம் இருக்குற நாங்க எல்லாரும் எதை குடுத்தாலும் சாப்பிட்டுப்போம்… இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… நான் ஏழு நாளுக்கு என்ன சமைக்கலாம்னு அத்தை கூட டிஸ்கஸ் பண்ணிட்டு ஒரு டேபிள் போட்டு தர்றேன்… அதையே இனிமே ஃபாலோ பண்ணிக்கோங்க”
மூச்சு விடாமல் அவள் கூற கூற லலிதாவின் இரத்த அழுத்தம் உயர ஆரம்பித்தது.
முன்கோபம் முகிழ்க்க “புருசனுக்கு எது பிடிக்குமோ அதை செஞ்சு குடுக்குறது தான் நல்ல பொண்டாட்டிக்கு அழகு” என்றார் உதாசீனமாக.
“பொண்டாட்டி என்ன சமைச்சுக் குடுத்தாலும் குறை சொல்லாம சாப்பிடுறது தான் நல்ல புருசனுக்கு அழகு… என் புருசன் ‘நல்ல’ புருசன் தான்… சோ நீங்க அவரைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்ல” என வேகமாக பதிலடி வந்தது தக்ஷிண்யாவிடமிருந்து.
இதை காணும் போது சசிகலாவுக்கு மருமகளை கட்டியணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது.
அவள் மீண்டும் ருக்மணியிடம் திரும்பியவள் “எப்போலாம் பாட்டிங்க விரதம் இருக்குறாங்களோ அன்னைக்கு வீட்டுச்சாப்பாட்டை அதுக்கேத்த மாதிரி சமைச்சிடுங்க ஆன்ட்டி… நமக்காக தானே அவங்க விரதம் இருக்குறாங்க… சோ அவங்க அன்னைக்கு என்ன சாப்பிடுறாங்களோ அதை நம்மளும் சாப்பிட்டா தப்பில்ல” என்று ஆணையிட்டுவிட்டு அவரை சமையலறைக்கு அனுப்பி வைத்தாள்.
இந்த மாதிரி காட்சி எல்லாம் குடும்பத்தில் இது வரை நடந்ததேயில்லை. லலிதா என்ன சொல்கிறாரோ அதையே வேதவாக்காக எண்ணி கடைபிடித்த குடும்பம் அது. இப்போது அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு இன்னொருத்தி கட்டளையிடுவதை ஆச்சரியத்துடன் அதே சமயம் ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
சசிகலா தனது மாமியாரையும் அன்னையையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல ஆயத்தமாக மாணிக்கவாசகமும் சதாசிவமும் கூட அவர்களோடு வருவதாக சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
லோகநாதன் ராஜேந்திரனோடு நகர்ந்துவிட சில நிமிட தாமதத்துக்குப் பின்னர் வந்தாலும் தங்களுக்காக பேசிய தக்ஷிண்யாவிடம் நன்றி சொல்லி அரட்டை அடித்துவிட்டு சென்றனர் சர்வானந்தும் மாலினியும்.
இவ்வளவையும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தவர்கள் லலிதாவும் ருத்ரதேவும் மட்டுமே.
தக்ஷிண்யா அவர்கள் இருவரையும் பார்ப்பதை தவிர்த்துவிட்டு “ஆன்ட்டி எதுவும் ஹெல்ப் வேணும்னா சின்னம்மா கிட்ட கேளுங்க… அவங்களுக்குச் சும்மா உக்காந்து சாப்பிட போரடிக்குதாம்” என்று சத்தமாக கூறியவள் லலிதாவின் முகம் கோபத்தில் சிவப்பதைக் கண்டு ரசித்துவிட்டு தனக்கும் ஒரு கோப்பை காபியை எடுத்துக்கொண்டு மாடியறைக்குச் சென்றாள்.
நேரே பால்கனிக்குச் சென்றவளின் மனம் சந்தோசத்தில் துள்ளியது. அது என்னவோ, எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குப் பதிலுக்குப் பதில் செய்யும் போது உண்டாகும் ஆனந்தத்தை யாராலும் அனுபவிக்காமல் இருக்க முடியாது. தக்ஷிண்யாவின் நிலையும் அதுவே.
இந்த வீட்டில் அவர் செய்யும் அட்டகாசங்களை ஏற்கெனவே சசிகலாவின் மூலம் அறிந்திருந்தாள் அவள். திருமணத்திற்கு பிறகு லலிதாவின் அதிகாரங்கள் அனைத்தையும் செல்லாக்காசு ஆக்கிவிடவேண்டுமென்ற வேகம் அப்போதே பிறந்தது.
அந்த வேகத்தில் பாதியைக் கூட இன்றைய உரையாடலில் அவள் காட்டவில்லை. ஆனாலும் மனம் இலேசாக உணர்ந்தது.
நாவில் தித்தித்த காபி அந்த உணர்வை இன்னும் அதிகரித்தது. கண்களை மூடி தித்திப்பும் கசப்பும் கலந்த காபி சுவையையும் அதன் நறுமணத்தையும் அனுபவித்தவள் திடீரென யாரோ வந்து தோளைத் தொடவும் திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள்.
அங்கே நின்று கொண்டிருந்தவன் ருத்ரதேவ்.
அவனைப் பார்த்ததும் “ஓ! நீங்க தானா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் காபியைச் சுவைக்க ஆரம்பித்தாள் தக்ஷிண்யா.
அவனோ உயர்த்திய புருவங்களுடன் அவளருகே நின்று கொண்டான்.
“இன்னைக்கு அத்தைய கடுப்பேத்துனதுல உன் மனசு நிறைஞ்சு போயிருக்குமே”
“ஆமா! அது என்னவோ தெரியல, பிடிக்காதவங்களை கடுப்பேத்துறப்ப ஒரு சந்தோசம் வரும் பாருங்க, அதுக்கு ஈடு இணை இந்த உலகத்துல எதுவுமில்ல”
ரசனையுடன் கூறியவள் அடுத்த நொடி சற்று தீவிரமான முகபாவத்துக்கு மாறினாள்.
“உங்களுக்குக் காபி பிடிக்காதாமே! உங்க அத்தை சொல்லுறாங்க”
“ஆமா! எனக்கு டீ தான் பிடிக்கும்… இனிமே காபியும் பிடிக்கும்”
“அப்பிடியா? உங்களுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது, என்ன செஞ்சா நீங்க சந்தோசப்படுவிங்க, எது உங்களை கஷ்டப்படுத்தும்னு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்காங்களே உங்க அத்தை”
குறை கூறுவது போன்ற குரல் அது. ருத்ரதேவ் அதை ஆமோதித்தான்.
“சின்ன வயசுல அத்தை மோஸ்ட்லி தனியா தான் இருப்பாங்க… அப்ப அவங்களுக்கு கம்பேனியனா இருந்தவன் நான் தான்… அவங்க கூட பேசி சிரிச்சிட்டு இருந்தா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுவாங்க… அதனாலேயே நான் எப்பவும் அவங்களுக்கு ஸ்பெஷல்”
“அதாவது உங்கம்மாவை மீறி உங்க கிட்ட உரிமை எடுத்துக்கிட்டாங்க, அப்பிடி தானே?”
“அப்பிடியும் வச்சுக்கலாம்… அதுக்காக அம்மாவ ஒன்னும் அவங்க டம்மி ஆக்கி உக்கார வைக்கலையே”
இப்போதும் லலிதாவுக்குப் பரிந்துகொண்டு அவன் பேசவும் தக்ஷிண்யாவின் முகத்தில் எரிச்சல் மண்டியது.
“அவங்க இந்த வீட்டுல இருந்த எல்லாரையும் டம்மியா தானே ட்ரீட் பண்ணிருக்காங்க… அது எல்லாமே தெரிஞ்சும் நீங்க எல்லாரும் சைலண்டா இருந்திருக்கீங்க… அந்தம்மா எங்கப்பாவ இழந்ததால மனரீதியா பாதிக்கப்பட்டதை காரணமா சொல்லி சொல்லியே உங்க எல்லாரையும் அவங்களோட அதிகார வளையத்துக்குள்ள கொண்டு வந்திருக்காங்க… அந்த வளையத்தை அழிக்குறது தான் என்னோட முதல் வேலையே”
“சோ இந்த கிச்சன் பாலிடிக்ஸ்லயே உன் டைமை வேஸ்ட் பண்ணப் போற?”
“அப்பிடி இல்ல… முதல்ல இந்த வீட்டை ஒழுங்காக்கிட்டு அதுக்கு அப்புறம் என்னோட புரொபசனை கவனிக்கலாம்னு இருக்குறேன்… பை த வே, எனக்காக நீங்க ஒன்னு பண்ணணும்”
என்ன என்பது போல அவன் பார்க்கவும் “வேற ஒன்னுமில்ல… இனிமே உங்க அத்தைக்கு பரிஞ்சு பேசிட்டு வராதிங்க… எனக்கு அது சுத்தமா பிடிக்கல” என்றாள் அவள்.
தொடர்ந்து “அவங்களை பாக்குறப்பலாம் நீயும் வில்லியா மாறிடு தக்ஷினு எனக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு… என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியுறதில்ல… அந்த மாதிரி நேரத்துல நீங்க அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு வந்திங்கனா என் நாக்கு உங்களையும் சேர்த்து காயப்படுத்தும்”
ருத்ரதேவ் பெருமூச்சு விட்டவன் “அத்தை பண்ணுனது பெரிய தப்பு தான் தக்ஷி… அதால நீயும் உன்னோட அம்மாவும்..” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
“கரெக்சன்… அவங்க என்னோட அம்மா மட்டுமில்ல, உங்களுக்கு மாமியாரும் தான்” என இடையில் வெட்டி திருத்தினாள் தக்ஷிண்யா.
“சரி! நீயும் என்னோட மாமியாரும் ரொம்ப பாதிக்கப்பட்டிங்க… அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்… பட் லலிதா அத்தைய நீ சொல்லுற மாதிரி ஒரேயடியா ஒதுக்கி தள்ளிட முடியாது தக்ஷி” என்றான் அவன் தீர்மானமாக.
தக்ஷிண்யாவுக்கு எரிச்சல் மறைந்து கோபம் வந்துவிட்டது.
“ஏன் முடியாது?” என்றாள் வேகமாக.
“நம்ம விரல்ல இருக்குற நகம் அளவை மீறி வளர்றப்ப கட் பண்ணலாம்… அதுக்காக நகத்தைப் பிடுங்கி எறிஞ்சிட முடியாது” என ருத்ரதேவிடமிருந்து நிதானமான விளக்கம் வரவும் அந்தக் கோபம் இன்னுமே அதிகரித்தது.
அதை மறைக்காமல் முகத்திலும் குரலிலும் காட்டியவள்,
“உங்களோட சோ கால்ட் அத்தை நகம் இல்ல… அவங்க உடம்பை அரிக்குற கேன்சர்… கேன்சர் வந்த பாகத்தை வெட்டி ஆபரேஷன் பண்ணலைனா அது உடம்பையே அழிச்சிடும்” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு காலியான காபி கோப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் சொன்ன வார்த்தைகளை மீண்டும் மீண்டும் யோசித்தபடி பால்கனியிலேயே நின்றான் ருத்ரதேவ்.
ஆண்டாண்டு காலமாய் அன்பு காட்டிய ஒருவரை விட்டு திடீரென விலகி நில் என்று கூறினால் யாருக்குத் தான் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ள மனம் வரும்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


