“டியர் சொசைட்டி! டிஃபரண்ட்லி ஏபிள்ட் பீபிளை பாத்தா தயவு பண்ணி பரிதாபம் காட்டி அவங்க கழிவிரக்கத்தைத் தூண்டிடாதிங்க… உங்களோட பரிதாப வார்த்தைகள் அவங்களுக்கு மனவருத்தத்தையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சையும் உருவாக்கும்… அவங்க எப்பவும் டிப்ரசன்லயே இருப்பாங்க, சோகமா இருப்பாங்கனு நீங்களே ஒரு கற்பிதத்தை உருவாக்காதிங்க…. அவங்களும் மத்தவங்க மாதிரி ஜாலியா இருப்பாங்க, ஜோக் அடிப்பாங்க, சண்டை போடுவாங்க, கலாய்ப்பாங்க… தே ஆர் ஆல்சோ நார்மல் ஹியூமன் பீயிங்ஸ்… நீங்க அவங்க கூட ஜோவியலா பழகி உங்கள்ல ஒருத்தரா ஃபீல் பண்ண வைங்க… அதை விட்டுட்டு ஐயோ பாவமேனு பார்வையிலயும் பாடி லாங்வேஜ்லயும் இரக்கத்தைக் கொட்டாதிங்க… அதே நேரம் உதாசீனப்படுத்துற வேலையையும் செய்யாதிங்க… God is counting our sins… அதை மட்டும் மறந்துடாதிங்க”
-நித்திலா
சாகர் குழுமத்தின் தலைமை அலுவலகம், சாகர் டவர்ஸ், எம்.ஆர்.சி நகர், ராஜா அண்ணாமலைபுரம்…
ஆனந்த் சாகர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அவரது பி.ஏ ரகுராமன் அன்றைய வணிக செய்திகளில் இடம்பெற்ற சாகர் எண்டர்டெயின்மெண்டின் புதிய ஒப்பந்தத்தைப் பற்றி அவரிடம் கூறியிருந்தார்.
கிருஷ்ணராஜசாகரிடம் ஸ்ரீநயனி எச்சரித்தது உண்மை தான் போல. நிஹாரிகாவோடு சேர்ந்து சந்தீப் ஏதோ செய்கிறான். அதன் ஆரம்பம் தான் ஹாலிவுட் திரைப்பட நிறுவனத்தோடு சேர்ந்து கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம்.
ஏற்கெனவே சந்தீப் முதலீடு செய்த நான்கைந்து தொழில்கள் நஷ்டத்தைச் சந்திந்திருந்தன. அவனது முதலீட்டு முடிவுகளில் நிஹாரிகாவின் தலையீடு இருப்பதாகக் கிருஷ்ணராஜசாகர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வணிகத்தில் அனுபவமுள்ளவர்களே சில தொழில்களில் சறுக்கி அவர்களின் பிசினஸ் சாம்ராஜ்ஜியம் ஒன்றுமில்லாமல் போன வரலாறெல்லாம் உள்ளது.
அப்படி இருக்கையில் வெறும் எம்.பி.ஏ டிகிரியை வைத்துக்கொண்டு இளையமருமகள் விளையாடும் விளையாட்டில் அடிக்கடி சந்தீப் பலியாகிறானோ என்ற ஐயம் ஆனந்த் சாகருக்கு வந்துவிட்டது.
விசயம் அறிந்து சிரஞ்சீவியும் அங்கே வந்து விசாரித்தார்.
“நான் அப்பவே சொன்னேன் மாமா… நீங்க தான் பெருசா எடுத்துக்கல… அந்தப் பொண்ணு நம்ம சந்தீப்பை ஆட்டிவைக்கிறா… பொண்ணுங்க பிசினஸுக்கு வரக்கூடாதுனு சொல்லுற அளவுக்கு நான் பத்தாம்பசலி இல்ல… ஏன்னா எங்க அக்கா கொஞ்சவருசம் சாகர் குரூப்பை திறமையா நிர்வகிச்சதை நான் பாத்திருக்கேன்… ஆனா நிஹாரிகா எங்க அக்கா மாதிரி திறமைச்சாலியும் இல்ல, புத்திசாலியும் இல்ல… நம்ம கிட்ட இருக்குற பணம் அவ கண்ணை மறைக்குது… முன்ன பின்ன இவ்ளோ வசதி வாய்ப்புகளை பாக்காதவ இல்லையா?”
அந்தச் சமயத்தில் சிரஞ்சீவியின் உதாசீன வார்த்தைகளைக் கேட்டபோது ஆனந்த் சாகருக்குக் கோபம் வரவில்லை. முழு கோபமும் சந்தீப் மீதல்லவா திரும்பிவிட்டது!
“இதை இப்படியே விட்டா சரியா வராது மாமா… சந்தீப் எப்ப இந்தியா வர்றான்னு கேளுங்க”
“வர்றப்ப வரட்டும் சிரஞ்சீவி… அவன் வந்ததும் நான் கொஞ்சம் பெரிய முடிவை எடுக்கப்போறேன்… கிரிஷும் நீங்களும் என்னை எச்சரிச்சப்ப நான் இக்னோர் பண்ணுனது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்… அந்த முட்டாள்தனதுக்கு விலை குடுக்கவேண்டிய கட்டாயத்துல நான் இப்ப இருக்குறேன் சிரஞ்சீவி”
ஆனந்த் சாகர் எதைப் பற்றி பேசுகிறார் என புரியாமல் சிரஞ்சீவி குழம்பினார்.
ஏற்கெனவே அம்ரித்தின் வருகையால் குடும்பத்தில் குழப்பம்! இப்போது சந்தீப் தொழிலில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டான். தனது தமக்கைக்கு இரு புதல்வர்களும் சரியில்லை.
சிரஞ்சீவி தனது அலுவலக அறைக்கு வந்ததும் உடனே மொபைலில் அழைத்தது அவரது மனைவி காவேரியை தான்.
“சந்தீப் ஒரு பக்கம் மாமாக்கு குடைச்சல் குடுக்குறான்… கிரிஷ் வேற அவன் மகன்னு ஒரு பையனை வீட்டுல கொண்டு வந்து வச்சிருக்கான்… இப்பிடியே போச்சுனா நம்ம கதி அதோகதி ஆகிடும் காவேரி… ரெண்டு பேர்ல ஒருத்தனையாச்சும் நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்… என் ஒன்னுவிட்ட தம்பி பொண்ணு ஒருத்தி இருக்கால்ல, அவளைப் பத்தி அக்கா காதுல போட்டு வை… லேட் பண்ணாத… இன்னைக்கு இப்பவே வேலைய ஆரம்பி… கிரிஷ்சோட மகனை வச்சே காயை நகர்த்துவோம்”
மனைவியிடம் கட்டளையிட்டுவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் சிரஞ்சீவி.
சாகர் குழுமம் பரந்து விரிந்த வியாபாரக்கடல். அந்தக் கடலில் ஒரு பகுதி தான் சிரஞ்சீவியின் மேலாண்மைக்குக் கீழே இருக்கும் சில்லறை வணிகம்.
சாகர் குழுமத்தின் கால்கள் எண்ணெய் சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழிலில் ஆழப் பதிந்திருந்தன. அதன் மேலாண்மையை ஆனந்த் சாகர் கவனிக்கிறார்.
சில்லறை வணிகம் சிரஞ்சீவியின் பொறுப்பின் கீழ் இயங்குகிறது. டெலிகம்யூனிகேசனையும், மீடியா சார்ந்த தொழில்களையும் கிருஷ்ணராஜசாகரிடம் ஒப்படைத்த போது அவன் பணிவாக மறுத்துவிட்டான். அதை தான் சந்தீப் சாகர் நிர்வகித்து வருகிறான்.
சாகர் குழுமத்தின் அடையாளத்தில் வாழ்வதை விட தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவேண்டுமென்பதே அவனது விருப்பம். ஆனந்த் சாகரும் அவனுக்கு ஓராண்டு அவகாசம் கொடுத்தார். அப்படி அவன் உருவாக்கிய நிறுவனம் தான் ‘ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டட்’. இன்று மாபெரும் தென்கொரிய சரும பாதுகாப்பு நிறுவனத்தோடு இணையுமளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
அதற்காக அவன் சாகர் குழுமத்தின் பக்கம் திரும்பவேயில்லை என்று அர்த்தமில்லை.
ஒட்டுமொத்த சாகர் குழுமத்திலும் ஆனந்த் சாகருக்கு அடுத்து பெரும்பான்மை பங்கு அவனிடம் தான் உள்ளது. சாகர் குழுமத்தின் இயக்குனர் போர்டை கேள்வி கேட்கும் உரிமையும் அதன் தொழில் முடிவுகளை மாற்றியமைக்கும் உரிமையும் அவனுக்கு இருக்கிறது.
அதனால் தான் நிஹாரிகாவின் தலையீட்டால் சந்தீப் எடுக்கும் தவறான முதலீட்டு முடிவுகள் பற்றி கிருஷ்ணராஜசாகர் அடிக்கடி கேள்வி எழுப்புவான்.
சிரஞ்சீவிக்கு அவனைத் தனது மருமகனாக்கிக்கொள்ளும் எண்ணமிருந்தது. அவரது மகள் சைந்தவிக்கும் கிருஷ்ணராஜசாகரைப் பிடிக்கும். ஆனால் அவனை விட அவனது தோழன் ராகுலை மிகவும் பிடித்துவிட அனைவரின் சம்மதத்தோடு சைந்தவிக்கும் ராகுலுக்கும் திருமணம் நடந்தேறியது.
சரி! உறவினர் வீட்டுப்பெண்களையாவது அவனுக்கு மனைவியாக்கலாம் என சிரஞ்சீவியும் காவேரியும் கனவு கண்டபோது அவன் நித்திலாவைப் பிடித்திருக்கிறதென சொல்லி திருமணம் செய்துகொண்டான். அந்தத் திருமணமும் நிலைக்கவில்லை. அவள் மாயமாக மறைந்த பிறகு இன்னொரு திருமணத்துக்கும் மறுத்துவிட்டான்.
அவன் இப்படியென்றால் சந்தீப் நிஹாரிகாவுக்கு அடிமையே ஆகிவிட்டான். இந்த இருவராலும் தனது இடம் பறிபோய்விடுமோ என சிரஞ்சீவி பயந்துகொண்டிருக்க அந்நேரத்தில் அவரது மனைவி காவேரி சாகர் நிவாசில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேர்க்காணலை எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
பிள்ளையைப் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டாமா என்று சொல்லி திருமணத்திற்கு அடிபோடலாமென வந்தவர் கிருஷ்ணராஜசாகர் முன்னெச்சரிக்கையாக நானி ஒருவரை ஏற்பாடு செய்ய ஆயத்தமானதை அறிந்ததும் எரிச்சலுறுவது இயல்பு தானே!
நடுத்தரவயது பெண்கள் தான் வருகை தந்திருந்தார்கள். அனைவரும் படித்தவர்கள். நாகரிகமான பழக்கவழக்கம் உள்ளவர்கள். ஏஜென்சியினர் காமாசோமாவென அனுப்பி வைக்கவில்லை என நிம்மதியுற்ற நர்மதா அவர்களில் ஒருவரை அம்ரித்தின் நானியாகத் தேர்ந்தெடுத்தார்.
சம்பள விவகாரத்தைப் பேசி முடித்துவிட்டு நாளையிலிருந்து பணியில் சேரும்படி கூறிவிட்டார்.
அப்பெண்மணியின் பெயர் ரஜீஷா. பூர்வீகம் கர்நாடகா. கவர்னெஸ் பணியில் ஏற்கெனவே அனுபவமுள்ளவர் என ஏஜென்சியில் கூறியிருந்தார்கள். அம்ரித்தை அவரிடம் அறிமுகப்படுத்தவும் சினேகமாகப் புன்னகைத்தவர் அவனிடம் அன்பாக உரையாடவும் நர்மதாவுக்கு நிம்மதி.
அவர் சென்ற பின்னர் காவேரி நர்மதாவிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார்
“சம்பளத்துக்கு வேலைக்கு வர்றவங்களை நம்பி நம்ம வீட்டுப்பையனை ஒப்படைக்க முடியுமாண்ணி? என்ன இருந்தாலும் அம்மா இருந்து கவனிச்ச மாதிரி வருமா?”
அங்கலாய்த்த நாத்தனாரை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?
“கிரிஷோட முடிவு இது… யாரும் அவன் முடிவை கேள்வி கேக்கமுடியாது காவேரி”
மகன் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொண்டார்.
“அவன் சின்னபையன் அண்ணி… நீங்க தான் எடுத்துச் சொல்லணும்… இந்த நானி கவர்னெஸ் இதெல்லாம் விட்டுட்டு அழகா கல்யாணம் பண்ணி குடும்பமா வாழ்ந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?”
“அவனுக்கு ஏற்கெனவே பொண்டாட்டி இருக்கா காவேரி”

“க்கும்! இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம கிரிஷ் வேண்டாம்னு விட்டுட்டு ஓடுனவ தானே? அவளை டிவோர்ஸ் பண்ணிட்டு நம்ம ஸ்டேட்டசுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்கண்ணி”
நாத்தனாரின் பேச்சில் நர்மதாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நித்திலா இருக்கும் போது இன்னொருத்தியை கிருஷ்ணராஜசாகர் மணக்கச் சம்மதிப்பானா என்ன?
நேற்றைய இரவு எவ்வளவு கலங்கிப்போனான்? அவனா இன்னொருத்தியை மணப்பான்?
காவேரியின் பேச்சை ஒதுக்கித் தள்ளியவர் இன்னொரு திருமணம் என்ற பேச்சைத் தவிர்த்தார்.
அதே நேரம் சந்தீப்பின் வணிக ஒப்பந்தம் கிருஷ்ணராஜசாகரின் செவியையும் அடைந்திருந்தது. இப்ராஹிம் சொன்னதுமே இகழ்ச்சி முறுவல் பூத்தவன்
“யானை தன் தலையில மண்ணை வாரிப்போட்டுக்குற மாதிரி அப்பா கிட்ட கெட்டப்பேர் வாங்குறதுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்யுறான் சந்தீப்… அவன் செய்யுற ஒவ்வொன்னும் எனக்குச் சாதகம் தான்” என்றான்.
இப்படியே போனால் தந்தை சந்தீப்பை நம்புவதை விடுத்து தன் மீது நம்பிக்கை வைப்பார். சாகர் குழுமத்தின் அதிகாரத்தைத் தன்வசப்படுத்தும் நாள் வெகுதூரமில்லை.
தன்வசப்படுத்திய பிறகு என்ன செய்யவேண்டுமென முன்பே யோசித்து வைத்திருந்தான் கிருஷ்ணராஜசாகர். அதை யாரிடமும் கூற மனமில்லை. சொல்லுமளவுக்கு யாரையும் நம்பவில்லை அவன்.
அப்போது தான் ஆனந்த் சாகரின் பி.ஏ ரகுராமனிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனந்த் சாகர் அவனுடன் அலுவல்ரீதியாகப் பேச விரும்புவதால் அவரது அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.
ஆனந்த் சாகர் ஆலோசிக்க விரும்பும் அலுவல் என்னவென கிருஷ்ணராஜசாகருக்குப் புரிந்துவிட்டது.
“நான் ரொம்ப பிசி ரகு சார்… ரெண்டு ஆபிசுக்கும் இடையில ஜஸ்ட் த்ரீ ஹண்ட்ரட் மீட்டர்ஸ் டிஸ்டன்ஸ் தானே… க்ரீன்வேஸ் ரோட் தாண்டுனா ஆபிஸ் வரப்போகுது… சேர்மன் இப்ப ஃப்ரீயா இருந்தார்னா என்னோட ஆபிசுக்கு அவர் வரலாம்”
காலையில் ஆனந்த் சாகரின் முகத்தில் விழிக்க அவன் தயங்கியதற்கு காரணம் தந்தை – மகன் உறவு. நித்திலாவைப் பற்றிய பேச்சு தங்களுக்குள் எழுவதை அவன் தவிர்க்க விரும்பினான்.
இப்போது அவன் திமிராக அவரை வரச் சொல்லக் காரணம் மாபெரும் குழுமத்தின் சேர்மன் இத்தனை நாட்கள் அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைத்த நிறுவனத்தின் இயக்குனர் ஒருவனை சந்திக்க அவசரப்படுவதால்.
இப்போது அவனுக்கும் ஆனந்த் சாகருக்குமிடையே இருப்பது சேர்மன் – இயக்குனர் உறவு தானே! அவருக்குக் காரியம் ஆகவேண்டுமென்றால் அவரே நேரில் வரட்டும் என்ற அலட்சியம்.
தொழிலையும் சொந்த வாழ்க்கையையும் திறமையாகப் பிரித்து கையாளும் கலையில் கிருஷ்ணராஜசாகர் மன்னன்.
தன் மகனாக அல்லாமல் சாகர் குழுமத்தின் இயக்குனராக கிருஷ்ணராஜசாகர் அளித்த தகவலை ஆனந்த் சாகர் ஏற்றுக்கொண்டார்.
அவன் சொன்னது போல ஆர்.எஸ் டவருக்கும் சாகர் டவர் அமைந்திருக்கும் எம்.ஆர்.சி நகருக்கும் இடையே தூரம் ஒன்றும் அதிகமில்லையே.
ரகுராமனோடு ராந்த்வா தலைமை அலுவலகத்துக்குக் காரில் சென்று இறங்கியவரை இப்ராஹிம் பணிவோடு வரவேற்று மேலாண்மை இயக்குனரின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்கு வெளியே ரகுராமனும் இப்ராஹிமும் நின்றுகொள்ள ஆனந்த் சாகர் கிருஷ்ணராஜசாகரின் அலுவலக அறைக்குள் பிரவேசித்தார்.
அவரைக் கண்டதும் மரியாதைநிமித்தம் எழுந்தவன் “உக்காருங்க” என்றான்.

அவர் அமர்ந்ததும் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி தம்ளரை அவர் புறம் நகர்த்தி வைத்தான். ஆனந்த் சாகர் தண்ணீர் குடிக்கும் மனநிலையில் இல்லை.
தனது மனதிலுள்ளதை அவசரமாக மைந்தனிடம், இல்லையில்லை, சாகர் குழுமத்தின் இயக்குனர்களில் பெரும்பான்மை பங்கு வைத்திருப்பவனிடம் கூறினார்.
கிருஷ்ணராஜசாகர் அவர் கூறியதை கவனமாகக் கேட்டுக்கொண்டான்.
“உங்க ப்ளான்ல சின்னதா ஒரு சேஞ்ச்… இது என்னோட சஜசன்” என்றான்.
என்னவென கேட்டவரிடம் தனது மனதில் நீண்டநாட்களாக இருந்த எண்ணத்தை வெளியிட்டான் கிருஷ்ணராஜசாகர். ஆனந்த்சாகர் அதைக் கேட்டதும் கொஞ்சம் யோசித்தார்.
“யோசிக்காதிங்கப்பா… உங்களுக்கு அடுத்து சாகர் குரூப்பை சரியான பாதைக்குக் கொண்டு போக திறமையான ஆள் வேண்டாமா?” என்றான்.
ஆனந்த்சாகரும் மைந்தனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். கிருஷ்ணராஜசாகர் அவனது மனதில் பட்டதை வெளிப்படையாகக் கேட்டான்.
“எல்லாம் சரி தான்… இதை அபிஷியலா பாக்காம பெர்ஷ்னலா யோசிச்சு ஒரு கேள்வி கேக்குறேன்… இந்த முடிவால உங்க மனசு கஷ்டப்படுதா?”
ஆனந்த் சாகர் நெடிய மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டார். கண்ணாடியைக் கழற்றியவர் அண்ணாந்து அந்த அறையின் ரூஃபை வெறித்தார்.
“ரொம்ப கஷ்டமா இருக்கு கிரிஷ்… சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் முழுசா காணாம போகக்கூடாதுனா இந்த முடிவை நான் எடுத்துத் தான் ஆகணும்… அஸ் அ சேர்மன், ஐ நீட் யுவர் சப்போர்ட்… அஸ் அ ஃபாதர், ஐ வாண்ட் டு அப்பாலஜைஸ்”
“அப்பா”
கிருஷ்ணராஜசாகருக்குள் இருந்த அலட்சியம் மறைந்து ஆனந்த்சாகரின் மைந்தனாக தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான் அவன்.
“யெஸ்… சந்தீப்போட உன்னைக் கம்பேர் பண்ணி எவ்ளோ திட்டிருப்பேன்? என்னை எதிர்த்து பேசுனாலும் என் கிட்ட சஜசன் கேக்காம நீ எதையும் செஞ்சதில்ல… ஆனா அவன்… ப்ச்…. என்னை மன்னிச்சிடுடா கிரிஷ்… பந்தபாசம் உள்ளவன் தப்பு பண்ணமாட்டான்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்”
கிருஷ்ணராஜசாகரால் அவர் அவ்வாறு பேசுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவரது கையை இறுக்கமாகப் பற்றினான்.
“ஐ ப்ராமிஸ் யூ டாட், நீங்க எடுத்த முடிவுக்கு நான் துணையா நிப்பேன்… ஐ டோண்ட் ஹேவ் எனி சில்லி செண்டிமெண்ட்ஸ்… பட் குடுத்த வாக்கை காப்பாத்துவேன்… நீங்க என்னை முழுசா நம்பலாம்”
“இது போதும் கிரிஷ்” என்றவர் கண்ணாடியை மீண்டும் அணிந்துகொண்டார்.
“சந்தீப் யூ.எஸ்ல இருந்து திரும்பி வரட்டும்… எல்லாத்தையும் அனவுன்ஸ் பண்ணிடலாம்” என்றார்.
“இப்ராஹிம் விசாரிச்ச வரைக்கும் இன்னும் ஒரு மாசத்துக்கு அவன் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்ல டாட்… நம்ம நயனிய இங்க வரவைப்போம்”
“அவளா?”
ஆயாசமாக இருந்தது ஆனந்த்சாகருக்கு. அவளிடம் பேசி நான்காண்டுகள் ஆகிறது. நித்திலாவுக்கு மொத்தக்குடும்பமும் துரோகம் இழைத்துவிட்டதென கூறி அமெரிக்காவுக்குப் பறந்துபோனவளுக்கு இந்த ஏற்பாட்டில் சம்மதம் இருக்குமா என சந்தேகம் அவருக்கு. எந்தத் தந்தைக்கும் பெண்பிள்ளையின் புறக்கணிப்பு அதிகபட்ச வேதனையை அளிக்கத் தானே செய்யும்!
கிருஷ்ணராஜசாகர் அவளிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்றான். கையோடு அவளது மொபைல் எண்ணுக்கு அழைத்தவன் நிலவரத்தைக் கூற முதலில் பிகு செய்தாலும் பின்னர் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டாள் ஸ்ரீநயனி.
அவன் அழைக்கவே இல்லையென்றாலும் அவள் இந்திய வருகை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான். அவளும் நித்திலாவும் கூட்டு சேர்த்து போட்ட திட்டத்துக்காக எப்படியும் அவள் இந்தியாவுக்கு வந்து தான் ஆகவேண்டும்.
அவள் நிறுவனத்தில் ராஜினாமா கடிதத்தை மெயிலில் அனுப்பிவிட்டாள். இதையெல்லாம் அண்ணனிடம் சொல்லாமல் அவனது கட்டாயத்திற்காக சம்மதிப்பதாக திறமையாக நடித்தாள்.
கிருஷ்ணராஜசாகரும் அவள் சொன்னதை நம்பிவிட்டான். ஆளுக்கொரு பக்கம் திட்டம் தீட்ட நாட்களும் வேகமாக நகர்ந்து ஒரு மாதம் ஒரு நொடியைப் போல கடந்து போனது. நித்திலாவின் அறுவை சிகிச்சை காயமும் ஆறியது. மனதிற்குள் இருந்த வைராக்கியம் அவளை பழையபடி எழுந்து நடக்க வைத்திருந்தது. இதோ இன்னும் இரண்டே தினங்களில் ஸ்ரீநயனி வந்துவிடுவாள்! அவளது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தாள் நித்திலா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

