ஐந்தாண்டுகளுக்குப் பிறகு… என்.எஸ்.என் நிவாசம், குலவணிகர்புரம்…
“இன்னும் பெரிய சர்க்கிள் போடுங்கம்மா,”
மலர்விழியிடம் தனது உள்ளங்கையில் இருக்கும் மருதாணியால் போடப்பட்ட வட்டத்தை இன்னும் பெரிதாக்குமாறு கேட்டான் கதிர்காமன்.
“போதும்டா குட்டி. இதுக்கு மேல பெருசா போட்டா உள்ளங்கை முழுக்க ரெட்டிஷ் ஆகிடும்,”
மகனிடம் அவனைப் போலவே மழலையில் மிழற்றியபடி மருதாணி வட்டத்தைப் போட்டு முடித்தாள் மலர்விழி.
“ஐ! உங்க கை ஆரஞ்ச் கலர் ஆகிடுச்சு!”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
குழந்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் குதூகலமாய் சொல்லும்போதே, “உங்கம்மாவுக்குப் பித்த உடம்புடா குட்டி. அதான் மருதாணியத் தொட்டாலே கை சிவக்குது,” என்றபடி வந்தான் மகிழ்மாறன்.
“பித்த உடம்புனா என்னப்பா?”
கண்களை உருட்டி ஏழு வயது கதிர்காமன் கேட்கவும், மகிழ்மாறன் அவனது உயரத்திற்கு முழங்காலிட்டு, “அப்படின்னா என்னனு உன்னோட ஆச்சிக்குத்தான் நல்லா தெரியும். போய் அவங்ககிட்ட கேளு. நேத்து ஏதோ கதையப் பாதில முடிச்சாங்கனு சொன்னல்ல? இன்னைக்கு முழுக்கக் கதை கேட்டுட்டு ஆச்சி தாத்தா கூடவே குட்டி தூங்குவானாம்,” என்று சொன்னபடி அவனது நாசியோடு தனது நாசியை உரசினான்.
“அப்பா குத்துதுப்பா!”
சிறுவன் அவனது மீசையின் குறுகுறுப்பில் கூசிச் சிரிக்கவும், கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவனை அனுப்பிவைத்தான்.
“நான் ஆச்சி கூட தூங்கப்போறேன்!” கத்தியபடி அவன் ஓடுவதை மலர்விழி பார்க்கையிலேயே அறைக்கதவு சாத்தப்பட்டது.
கையில் மருதாணி விழுது ஒட்டியிருக்க, ஆரஞ்சு வண்ணம் பூசியிருந்தன மலர்விழியின் விரல்கள்.
“கதிரும் அவங்கம்மா மாதிரிதான்ல?” என்றபடி மலர்விழியின் அருகே அமர்ந்தவனின் விழிகளில் இருந்த உல்லாசம், அவன் அணிந்திருந்த ரிம்லெஸ் கிளாஸைத் தாண்டியும் அவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பை வரவழைத்தது.
மலர்விழி பதில் சொல்லாமல் விழிக்கும்போதே, அவனது கரம் அவளது மோவாயைப் பற்றித் தனது கன்னத்தோடு சேர்த்துக்கொண்டது.
கன்னத்து ரோமங்களின் ஸ்பரிசத்தில், “அவுச்! கூச்சமா இருக்கு மகிழ் மாமா. விடுங்க! நான் கை கழுவிட்டு வர்றேன். இல்லனா உங்க ஷேர்ட் முழுக்க மருதாணி கறை ஆகிடும்,” என்று அவள் விலக எத்தனிக்க, அவனுக்கோ அதில் விருப்பமில்லை.
அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “உன் கை மருதாணியால கறைபடணும்ங்கிறது என் ஷேர்ட்டுக்கு ரொம்ப நாள் ஆசை. இன்னைக்கு அந்த ஆசைய நிறைவேத்திடலாம்னு இருக்கேன்,” என்று அவளை நெருங்க, மலர்விழி அவசரமாய் அவனது மார்பில் கை வைத்துத் தடுத்தாள்.
“நாளைக்கு வெகேஷனுக்குப் போகணும். மறந்துட்டீங்களா? காலைல சீக்கிரமா முழிக்கணும்.”
அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை விட, சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகளின் அர்த்தம் மலர்விழியின் முகத்தில் நாணத்தீற்றலை ஏற்றியது. மகிழ்மாறன் மந்தகாசப் புன்னகையோடு நாணிச் சிவந்த மனைவியை ஏறிட்டான்.
“நமக்குக் கல்யாணமாகி ஏழு வருஷம் ஆயாச்சு. இன்னும் உன் வெக்கம் மட்டும் மாறலடி.”
மலர்விழி சட்டென எழுந்தவள், “நான்… நான் கை கழுவிட்டு வந்துடுறேன்,” என்று சொல்ல, “இதுதான் வேண்டாம்ங்கிறேன். உட்காரு,” என இழுத்துப் பிடித்து அவளைத் தன்னருகே அமர வைத்துக்கொண்டான் மகிழ்மாறன். அவனது இறுகிய பிடியை விலக்கி எழுந்திருக்க அவளால் முடியாமல் போகவும் பரிதாபமாய் விழித்தாள் மலர்விழி.
“ப்ளீஸ்,” அவள் கண்கள் இறைஞ்ச, “இந்த ப்ளீஸுக்கு நான் மசியமாட்டேன்,” என்றவன் கிண்ணத்தில் மிச்சமிருந்த மருதாணியை அவளது கரத்தின் நடுவே வட்ட வடிவமாய் வைத்துவிட, அதன் குளிர்ச்சியை விடத் தனது கன்னத்தில் மோதிய அவனது மூச்சுக்காற்றின் வெம்மையே மலர்விழியை அதிகம் சோதித்தது.
ஆயிற்று ஏழாண்டுகள்! அவளது மறுப்புகளைச் சம்மதங்களாக்கும் வித்தையை நன்கு கற்றறிந்திருந்தான் மகிழ்மாறன். தீப்பட்டால் உருகும் மெழுகினைப் போல அவனது தாபப் பார்வையில் உருகிப்போவதைத் தடுக்கும் வித்தையை மலர்விழிதான் கற்றுக்கொள்ளவில்லை. அவனது அண்மையில் அனைத்துமே மறந்துவிடும் அவளுக்கு – இப்போதும் போல!
விளைவு, அவள் கையில் வைத்த மருதாணியை அழகாய் உள்வாங்கிக்கொண்டது மகிழ்மாறன் அணிந்திருந்த சட்டை. ஏகபோகமாய் மோனநிலையொன்று அந்த அறையையும் அவர்கள் இருவரையும் ஆட்கொள்ள, ஜன்னலோரமாய்த் தெரிந்த நிலவு கூடக் குங்குமமாய்ச் சிவந்து மேகத்திடையே ஒளிந்துகொண்டது.
அதே நேரம் என்.எஸ்.என். ஹோட்டலில் புவனேந்திரனின் அலுவலக அறையில், அவன் கணினியில் எதையோ பிசியாகத் தட்டச்சு செய்துகொண்டிருக்க, இன்னொரு இருக்கையில் அவனருகே அமர்ந்திருந்தாள் ஆதிரா.
கன்னியாகுமரியில் அவர்களது ஹோட்டலின் கிளை திறந்து அன்றோடு ஐந்தாண்டுகள் முடிந்திருந்தன. அடுத்த கிளையை மதுரையில் திறப்பதற்கான ஆயத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக அங்கே வாங்கிய நிலத்தின் மதிப்பு, சட்டச் சிக்கல்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து ஒரு ‘Pitch Deck’ தயார் செய்து கொண்டிருந்தான்.
முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பிசினஸ் பிளானின் சுருக்கம்தான் அந்த ‘Pitch Deck’. மறுநாள் வங்கியில் அதைச் சமர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம். மறுநாள் காலையில் குடும்பத்தோடு வெகேஷனுக்காக வயநாடு கிளம்பத் திட்டமிட்டிருந்தார்கள். எனவே, இரவோடு இரவாக இதைத் தயார் செய்துவிட்டால் வங்கியில் சமர்ப்பிக்கும் வேலையைப் புவனேந்திரனின் உதவியாளன் பார்த்துக்கொள்வான்.
இதில் ஒரு சிறு தவறு நடந்தாலும் பல கோடி ரூபாய் கை நழுவிப்போகும் என்பதால், உறக்கத்தைக் கெடுத்துவிட்டு இங்கே அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறான். ஆதிரா மாலையில் அம்பாசமுத்திரத்தில் ஆயில் மில்லை மேற்பார்வை செய்துவிட்டு, நேரே ஹோட்டலுக்கு வந்தவள் அவனுடனே அமர்ந்துவிட்டாள். தேஜஸ்வினிக்கு மலர்விழியைச் சாப்பாடு ஊட்டச் சொன்னவள், குழந்தையைச் சிவகாமியோடு படுத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டாள்.
கணினியின் ஒளி முகத்தில் படர்ந்திருக்க மடமடவென வேலை பார்த்து முடிக்கவும் செய்தான். முடிந்ததும் விரல்களைச் சொடுக்கியவன், கன்னத்தில் கை வைத்துத் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஆதிராவை நோக்கினான் சன்னப் புன்னகையோடு.
“முடிஞ்சுதா புவன்?”
“ம்ம்! இந்தக்கைதான் வலிக்குது.”
“குடுங்க,” அவனது கையைப் பற்றியவள் விரல்களைச் சொடுக்கி நீவிவிட்டாள். “ஏன் அவதி அவதியா வேலை பாக்கணும் புவன்?”
“திடீர்னு பேங்க்ல இருந்து ரிப்போர்ட் கேட்டுட்டாங்க ஆதி. நாளைக்கு வெகேஷன் பிளான் பண்ணியாச்சு. அதை என்னால தள்ளிப் போட முடியாது. எல்லாருமா சேர்ந்து ரிலாக்ஸா வருஷத்துக்கு ஒரு தடவை போற ட்ரிப் இது. இதை மிஸ் பண்ண என் மனசு விரும்பல,” புவனேந்திரன் சொல்லவும் ஆதுரமாய் அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்வை இது? ஆறு வருஷத்துல இந்தப் பார்வையோட தாக்கம் குறையவே இல்ல,” குறும்பாய் வினவியவன், திடுமென ஏதோ ஞாபகம் வந்தது போலக் குனிந்து அவளது கால்களைப் பார்த்தான்.
கால்கள் வீங்கிப்போயிருந்தன ஆதிராவுக்கு. இப்படி ஒரே இடத்தில் நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்துவிட்டால் அவளது கால்கள் வீக்கம் கண்டுவிடுகிறது. தேஜஸ்வினி பிறந்ததிலிருந்து இப்படித்தான். புவனேந்திரன் அதிகம் யோசிக்கவில்லை. அவளது பாதங்களை மெல்லத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டான்.
“ஐயோ புவன்.. என்ன செய்றீங்க? ஆபீஸ் ரூம் இது!” ஆதிரா பதற, அதைக் காதில் வாங்காமல் அவளது கணுக்கால் பகுதியிலிருந்து முழங்கால் நோக்கி மென்மையாகப் பிடித்துவிட்டான்.
“ஆபீஸ் ரூம்னா என்ன? என் பொண்டாட்டி கால் வீங்கியிருக்கு. காலை மசாஜ் பண்ணுனா எனக்கென்ன கிரீடமா தலையில இருந்து இறங்கிடும்? நீ சும்மா இரு. இப்படி மெதுவா அமுக்கி விட்டா ரத்த ஓட்டம் சரியாகி வீக்கம் குறைஞ்சிடும்,” என்றான் அவளது கண்களைப் பார்த்து.
கொஞ்சம் கொஞ்சமாக அவளது கால் வீக்கம் குறைய, புவனேந்திரனின் கரம் அவளது காலில் இருக்கும் கொலுசுகளின் முத்துகளைச் சுண்டி விளையாடியபடியே, “உன் தூக்கத்தைக் கெடுத்துட்டேன்ல?” என இதமாய் கேட்க, “நீங்க முழிச்சிருந்து வேலை பாக்குறப்ப நான் மட்டும் எப்படி தூங்க முடியும்? எனக்காக நீங்க முழிச்சிருந்ததே இல்லையா?” என்றாள் ஆதிரா தலை சாய்த்து.
குடும்பத் தொழில்களை ஆளுக்கொரு பக்கம் நிர்வகித்து, அதில் வரும் அழுத்தங்களைச் சமாளித்து, பரஸ்பரம் தங்களது உறவை வலுவாக்குவதிலும் கவனமாயிருந்தார்கள் ஆதிராவும் புவனேந்திரனும். தேஜஸ்வினி பிறந்த பிறகு அவளுக்கு ஒரு சகோதரன் வேண்டாமா என்று சொந்தங்கள் எழுப்பும் முணுமுணுப்புகளை எல்லாம் கதிர்காமனைக் காட்டி அடக்கிவிடுவார்கள் இருவரும். அவர்களது அந்நியோன்யத்தின் அடையாளமாகத் தேஜஸ்வினி மட்டும் போதுமென்ற முடிவை எப்போதோ எடுத்துவிட்டார்கள்.
இதோ வேலை முடிந்தது. இனி வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான். வேலையினூடே அவனுக்குச் சாண்ட்விச்சை ஊட்டி விட்டிருந்தாள் ஆதிரா. அவளும் ஒரு சாண்ட்விச்சோடு இரவுணவை முடித்திருந்தாள். இருவரும் அலுவலக அறையை மூடிய கையோடு வீட்டுக்குக் கிளம்பினார்கள். அவர்களுக்கான உடைமைகளைக் காலையிலேயே எடுத்து வைத்துவிட்டார்கள் என்பதால், காலையில் எழுந்து கிளம்பினால் மட்டும் போதும்.
இரவு அழகாய்க் கழிந்து கதிரவன் பூமகளை முத்தமிடச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கையில், சந்திரவிலாசத்தின் பெரிய முற்றத்தை வெளிச்சக்கீற்றுகளால் தூவிக்கொண்டிருந்தது மஞ்சள் வண்ண விளக்கு ஒன்று. அந்த விளக்கின் ஒளியில் மஞ்சள் தேவதையாய் மிளிர்ந்த மிருணாளினி, தான் வைத்த புள்ளிகளைக் கோலமாய் இணைத்துக்கொண்டிருந்தாள்.
இந்த ஐந்து வருடத்தில் மென்பொருள் துறையில் அவளுக்குக் கிடைத்த பணியுயர்வுகள் எவ்விதத்திலும் அவளது இயல்பை மாற்றிவிடவில்லை. முக்கியமாக அவளுக்குள் இருந்த அம்பாசமுத்திரத்துக்காரி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறாள். வாசல் தெளிப்பதோ கோலமிடுவதோ தனது தகுதிக்குக் குறைவான வேலைகள் என இப்போதும் அவள் புகுந்தவீட்டுக்கு வரும்போது நினைப்பதில்லை.
தனது இயல்பை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளாதவளின் இந்தக் குணம்தான், இப்போது திண்ணையில் அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறானே கர்ணன், அவனை இன்னும் இறுக்கமாய் அவளோடு பிணைத்து வைத்திருக்கிறது.
அவள் கோலத்தை இறுதிக்கட்டத்தில் இணைக்குமிடத்தில் திணறவும், விசிலடித்தவன், “டெய்லி கோலம் போட்டா மறக்காது. நீ ஊருக்கு வர்றப்ப மட்டும்தான் கோலப்பொடி டப்பா பக்கமே போற. அதான் கோலம் கூட உன் பேச்சைக் கேக்காம அடம் பிடிக்குது,” என்றான் கிண்டலாய்.
மிருணாளினி கோலத்தை விடுத்து அவனை முறைத்தாள். “அப்ப நீ சென்னைல இதே மாதிரி ஒரு வீட்டை வாங்கு. டெய்லியும் கோலம் போடலாம்.”
“அடியே அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன்? இப்பதான் பிளாட் இ.எம்.ஐயே முடிஞ்சிருக்கு. போதாக்குறைக்கு உன் புள்ளைக்கு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுக்கே லட்சத்துல பீஸ் கட்ட வேண்டியதிருக்கு. நானே மாசக்கடைசில உன்கிட்ட வந்து செலவுக்குப் பணம் வாங்கிட்டிருக்கேன்.”
“செலவு பத்திப் பேசுனா அவன் என் புள்ளை. ஸ்கூல்ல மிஸ் பாராட்டுறப்ப மட்டும் ஜூனியர் கர்ணன். நல்லா இருக்கு உங்க டீலிங்!”
கணவனும் மனைவியும் மாறி மாறி ஒருவர் காலை ஒருவர் வாரிவிட, வீட்டினுள் இருந்து மருதநாயகியின் குரல் கேட்டது.
“ஏலேய்! ஆளுக்கு ஒரு மைக்கு வாங்கித் தரட்டுமா? காத்தால எழுந்திரிச்சதுல இருந்து கத்திக்கிட்டே இருக்கிய. ஊருல இருந்து வந்ததுதான் வந்திய, என் தூக்கம் போச்சு.”
கர்ணன் திண்ணையிலிருந்து எழுந்தவன், “நாங்க கத்துறோம்னு சொல்லிட்டு இப்ப நீதான் கத்துற கெழவி,” என்று பதிலுக்குக் கத்த, “வாவ்! நான் கோலத்தைப் போட்டு முடிச்சிட்டேன்,” என்று உற்சாகமாக எழுந்து வந்தாள் மிருணாளினி.
வந்தவளின் நைட்டியில் ஆங்காங்கே கோலப்பொடியின் தீற்றல். கூந்தல் இழையாய்க் கலைந்து கர்ணனுக்குப் பிடித்த அவளது பளபளத்த கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவனை மயக்கும் அந்தக் கன்னத்தின் பளபளப்பு இன்னும் அதீதமாய் ஆகியிருக்கிறதே தவிர, சிறிதளவும் குறையவில்லை. அது ஒன்றே போதும் கர்ணனை ஒரேயடியாய்ச் சாய்ப்பதற்கு.
கோலப்பொடி கிண்ணத்துடன் வந்தவள் வழிவிடுமாறு கண்களால் சைகை காட்ட, அவனோ மறுப்பாய்த் தலையசைத்தான்.
மிருணாளினி அவனது தாடியார்ந்த கன்னத்தைக் கிள்ளியவள்,
“என்ன வேணும் தாடிக்காரனுக்கு?” என கொஞ்சலாய் வினவ,
“தாடிக்காரனுக்கு எதுவும் வேண்டாம். அவன் பெத்த மகனுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேணும். என்ன சொல்லுறீங்க மேடம்?” என விஷமமாய்ப் பதிலளிக்க,
“சீ போ! எப்ப பாரு அதே நினைப்பு! வந்து உன் புள்ளைய எழுப்பு. இன்னும் கொஞ்ச நேரத்துல வெகேஷனுக்குக் கிளம்பணும். டைம் என்னனு ஞாபகம் இருக்குல்ல?” என்று அவனது தோளில் அடித்து அவனை விலக்கிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
ஓடுபவளைப் பார்த்தபடியே நின்ற கர்ணனுக்கு அவளைச் சீண்டுவதும், கொஞ்சுவதும் என்றுமே திகட்டுவதில்லை. ஒரே நிறுவனத்தில் இப்போதும் இருவரும் பணியாற்றுகிறார்கள். அவன் மேனேஜராகவும் அவள் டீம் லீடராகவும். பணி சார்ந்தும் குடும்பம் சார்ந்தும் இப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் வருவதுண்டு. ஆனால் அவை என்றுமே அவர்களது காதலைத் தாண்டி வெற்றியடைந்ததில்லை. அவர்களுக்கான இளைப்பாறுதல் இந்த வெகேஷன் மட்டும்தான். அதை எந்த வருடமும் அவர்கள் தவறவிடுவதில்லை.
கர்ணன் தனது மைந்தன் நிகிலனை எழுப்பப் போன அதே நேரத்தில், நதியூரில் ஈஸ்வரியும் பவிதரனும் அவர்களது மகள் பிரகதி அடிக்கும் லூட்டிகளைத் தலையில் கைவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“எனக்கு இது வேண்டாம். பிங்க் கலர்தான் வேணும்!”
அதென்னவோ குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறத்தின் மீது அப்படியொரு காதல். உடைகள், காலணிகள், கிண்டர்கார்டனுக்குப் போட்டுச் செல்லும் புத்தகப்பை, தண்ணீர் பாட்டில் என அனைத்திலும் அவளுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் இருந்தே ஆகவேண்டும்.
ஈஸ்வரி பொறுமையிழந்தவள், “பிங்க் கலர் வேணும்னா உங்கய்யாகிட்ட கேளு. கஷ்டப்பட்டு நேத்து லக்கேஜை எடுத்து வச்சிருக்கேன். அதுல கை வச்சீங்கனா ரெண்டு பேரையும் வீட்டை விட்டுத் துரத்திடுவேன்,” என்று கண்களை உருட்டி மிரட்டினாள்.
“ப்ச்! குழந்தைகிட்டவும் சண்டை போடுவியாடி?” பவிதரன் அவளிடம் கடிந்துகொண்டு பிரகதியைத் தூக்கிக்கொண்டான்.
“பிரகி குட்டி! பிங்க் கலர் டிரஸ் வேணுமா? இல்லனா நிக்கி அண்ணாவ பாக்கணுமா?” என்று கர்ணன் – மிருணாளினியின் மைந்தன் நிகிலனைக் குறிப்பிட்டு வினவினான்.
குழந்தையின் முகம் பளீரென ஜொலித்தது. “ப்பா, நிக்கி அண்ணா இல்ல,” என்று தந்தையின் கூற்றில் அண்ணனை மட்டும் எடுத்துவிட்டாள் பிரகதி.
ஈஸ்வரி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
“உங்க மவ பொழைச்சுப்பா,” கிண்டலாய் சொன்னவள், தோட்டத்தில் வளர்ந்த செடிகளுக்குப் பாய்ந்துகொண்டிருந்த தண்ணீரை நிறுத்தப் போனாள். ஒரு வார வெகேஷன். அதுவரை அவள் ஆசையாய் வளர்க்கும் வீட்டுத்தோட்டம் வாடிப்போய்விடக்கூடாதே!
பிரகதியை மாமியார் வீட்டில் கொண்டு போய்விட்டான் பவிதரன்.
“இவளைக் குளிப்பாட்டி டிரஸ் போட்டு விட்டுருங்கத்தை. நீங்களும் மாமாவும் ரெடியாகுங்க. சித்தப்பா சித்தி எப்பவோ ரெடி.”
நேரே வீட்டுக்கு வந்தவன், வீட்டின் வெளியே அறைந்திருந்த பெயர்ப்பலகையைப் பார்த்தான் ஆசையாய். அவனுக்கும் ஈஸ்வரிக்கும் மலர்விழி வாடகைக்குப் பிடித்துக்கொடுத்த வீட்டை உரிமையாளர் செந்திலிடமிருந்து விலைக்கு வாங்கிவிட்டான் பவிதரன். வீட்டின் பெயர் ‘ஈஸ்வரி பவனம்’. எங்கும் எதிலும் அவளையே முன்னிறுத்தினான் பவிதரன். ஈஸ்வரியும் கணவனின் நிறுவனத்திலேயே கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றுகிறாள். இருவரும் இணைந்தே தொழிலை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேருவை எப்போதோ ஈஸ்வரி பில்டர்ஸுடன் இணைத்துவிட்டான் பவிதரன். மேருவின் அடையாளத்தைச் சிதைக்க நினைத்த தர்ஷன் இன்னும் அங்கே ஊழியனாகத்தான் பணியாற்றுகிறான். அவன் வசமிருந்த பங்குகளையும் மதுமதி தமையனுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டாள். பிறந்தகத்தோடு பெரிதாக உறவு கொண்டாடவில்லை அவன். ஆனால் தங்கையின் மகள் சஹானா மீது அவனுக்குப் பிரியமுண்டு.
தாயோ தந்தையோ தங்கையோ பிரகதியைப் பார்ப்பதையோ வீட்டுக்கு வருவதையோ அவன் தடுப்பதில்லை. ஆனால் ரங்கநல்லூர் வீட்டுக்கு இப்போதும் அவன் போவதில்லை. அவனுக்காக அவனும் ஈஸ்வரியும் இணைந்து கட்டிய இந்தச் சிறு கூட்டில் அன்பும் அரவணைப்பும் காதலும் திகட்டத் திகட்டக் கிடைக்கையில், அவன் ஏன் சந்தர்ப்பவாதிகளைப் பற்றி நினைக்கப் போகிறான்!
வீட்டுக்குள் வந்ததும் ஈஸ்வரி தோட்டத்தில் ஹோஸ் பைப்பைச் சுருட்டிக்கொண்டிருப்பதை கவனித்து அவளிடமிருந்து அதை வாங்கிக்கொண்டான்.
“தண்ணிய வடிக்காம எடுத்திருக்க. பயங்கர வெயிட்டா இருக்கு. ஏன் வெயிட் தூக்குற?” செல்லமாய்க் கடிந்துகொண்டவனுக்கு மகிழ்மாறனிடமிருந்து அழைப்பு வந்தது.
“எல்லாரும் ரெடியா பவி? நாங்க ரெடியாயாச்சு. நீங்க இங்க வந்தீங்கனா கிளம்பிடலாம்.”
“இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்போம். என் கார்லயே எல்லாரும் வந்துடுறோம் மாறன்.”
வயநாடு செல்வதற்கான இந்த வெகேஷன் நான்கு ஜோடிகளுக்கும் வருடா வருடம் ஒரு ‘கெட்-டு-கெதர்’ போல. குறிப்பாகச் சொன்னால் அவர்களுக்கு அது ஒரு தேனிலவு பயணம்;
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்பச்சுற்றுலா. இதற்காகவே மகிழ்மாறனும் புவனேந்திரனும் ‘கேம்பர் வேன்’களை (Camper Vans) வாங்கியிருந்தார்கள். அதில் தத்தம் குடும்பத்தினரோடு, நட்பாய் இருந்து உறவுக்காரர்களாய் மாறிப்போன குடும்பத்தினரையும் சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வயநாடு செல்வதை வழக்கமாக்கியிருந்தார்கள்.
அங்கே போனதும் பெரியவர்கள் கோவில் குளம் என்று தத்தம் பேரப்பிள்ளைகளோடு கிளம்பிவிட்டால் இளையவர்களுக்குக் கொண்டாட்டம்.
தத்தம் இணைகளோடு நேரம் செலவழிப்பதற்கான அற்புதத் தருணங்கள் அங்கே வாய்க்கும்! இத்தருணங்கள் கிட்டத்தட்ட அவர்களது இல்வாழ்க்கை எனும் இயந்திரத்திற்கு அவர்கள் போடும் உயவு எண்ணெய் போல. அவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் சலிப்பும் விரக்தியும் தோன்றாமல் இருப்பதற்கு இந்த வெகேஷனும் ஒரு காரணி என்று சொல்லலாம்.
பவிதரனும் ஈஸ்வரியும் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் அவனது பெரிய காரில் குழந்தையோடு சிகாமணி – குழலி, தட்சிணாமூர்த்தி – இளவரசியை ஏற்றிக்கொண்டு என்.எஸ்.என் நிவாசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கே இரண்டு கருப்பு வண்ணக் கேம்பர் வேன்கள் பயணத்திற்காகத் தயாராய் நின்றன.
மகிழ்மாறன் தனது ரிம்லெஸ் கிளாஸைத் துடைத்தபடி சிரிப்புடன் வந்தான். ஒரு வேனை அவனும் பவிதரனும் ஓட்ட, இன்னொரு வேனை புவனேந்திரனும் கர்ணனும் மாற்றி மாற்றி ஓட்டுவதாகத் திட்டம். ‘செல்ஃப் டிரைவிங்’ என்பதால் அந்தப் பயணத்தின் சுவாரஸ்யமே தனி தான்.
வேனின் உள்ளே நுழையும்போதே அது ஒரு நடமாடும் வீடு போலவே இருந்தது. சிறிய சமையலறை, மடிக்கக்கூடிய படுக்கைகள், மற்றும் சோபாக்கள் என வசதிகள் வியக்க வைத்தன. புவனேந்திரன் முந்தைய இரவில் சரியாக உறங்கவில்லை என்பதால், அவனது கேம்பர் வேனை அம்பாசமுத்திரம் வரை தானே ஓட்டுவதாக பவிதரன் சொல்லிவிட்டான்.
“கர்ணா அப்புறமா ஓட்டட்டும். நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு மதியத்துக்கு மேல ஓட்டுங்க புவன். கண்ணு சிவந்து போயிருக்கு.”
பவிதரன் சொன்னதைப் புவனேந்திரனும் ஏற்றுக்கொண்டான். சிவகாமியும் நரசிம்மனும் பவிதரனோடு அந்த கேம்பர் வேனில் ஏறிக்கொண்டார்கள். கதிர்காமன் தேஜஸ்வினியோடும் பிரகதியோடும் சேர்ந்து வேனுக்குள் அமர்ந்து விளையாட ஆரம்பிக்க, சிகாமணி – குழலி, இளவரசி – தட்சிணாமூர்த்தியைத் தங்களோடு அழைத்துக்கொண்டார் சிவகாமி.
“அம்பாசமுத்திரம் போனதும் மாறிக்கலாம். இப்ப இந்த வேனுக்கு வாங்க! நாமெல்லாம் ஒண்ணா உட்கார்ந்து பேசி எவ்ளோ நாளாச்சு,” பெரியவர்களோடு புவனேந்திரன் – ஆதிராவும் ஏறிக்கொள்ள பவிதரன் வேனைக் கிளப்பினான். மகிழ்மாறனோடு இன்னொரு வேனில் ஏறினார்கள் ஈஸ்வரியும் மலர்விழியும்.
அம்பாசமுத்திரத்தில் சந்திரவிலாசத்தின் வாசலில் இரண்டு கேம்பர் வேன்களும் நிற்க, எழிலரசி – வினாயகம், தங்கவேலு – உலகம்மை எனப் பெரியவர்களும், மிருணாளினி – கர்ணன் ஜோடி அவர்களது புதல்வன் நிகிலனுடன் ஏறினார்கள். இருபத்து மூன்று பேருடன் அழகாய் ஆரம்பித்தது வயநாடு நோக்கிய அவர்களது பயணம்!
அம்பாசமுத்திரத்தைத் தாண்டி வேன்கள் நெடுஞ்சாலையில் ஏறியதும், வேனுக்குள் இருந்த மியூசிக் சிஸ்டத்தில் பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. காரணம் மருதநாயகி.
“டொம்மு டொம்முனு சத்தம் வர்ற பாட்டுகளைப் போட்டு என் காத புண்ணாக்கிடாதிய. இந்த வயசுல மிஷின் மாட்டுனா நல்லா இருக்காது,” என்று கேம்பர் வேனில் ஏறியதும் சொல்லிவிட்டார் அவர்.
அவரது ஆணைக்கிணங்க எம்.எஸ்.வியும் இளையராஜாவும் மட்டுமே அந்த வேன்களுக்குள் இசைரூபமாய் அனுமதிக்கப்பட்டார்கள்.
வேனைக் கர்ணன் லாவகமாய் ஓட்டுவதைப் பார்த்தபடி படுத்திருந்தான் புவனேந்திரன். தன்னருகே அமர்ந்திருந்த ஆதிராவின் கால்களைக் கவனித்தான். வீக்கமில்லை.
“ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்காத ஆதி. அந்த ‘Recliner’ சீட்ல காலை நீட்டிப் படுத்துக்க” என்றான் புவனேந்திரன்.
“அப்பப்ப வேனுக்குள்ள நடந்துக்கிறேன் புவன். நீங்க தூங்குங்க,” என்று அவனது கன்னத்தில் தட்டிக்கொடுத்தாள் ஆதிரா.
நடுவழியில் ஒரு அழகான நீரோடை அருகே வேனை நிறுத்தினார்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் என்று மலர்விழியையும் மிருணாளினியையும் வேனிலேயே சமைக்கச் சொல்லி அடம்பிடித்தான் கர்ணன். வேனில் இருந்த சிறிய கேஸ் ஸ்டவ்வில் மலர்விழி காபி போட, மிருணாளினி கர்ணனின் கையாலேயே உப்புமா கிளற வைத்தாள்.
“பழிவாங்கிட்டல்ல”
“நல்ல சாப்பாடு வேணும்னா கொஞ்சம் கஷ்டப்படலாம்” என அமர்த்தலாக மொழிந்தாள் அவள்.
“இதைக் கிண்டுறதை விட திங்குறது பெருங்கொடுமைடி” அழாத குறையாய் கிண்டி முடித்தான் கர்ணன்.
காய்கறிகள் போட்டு நெய் மணக்க உதிரி உதிரியாய் இருந்த உப்புமாவும், சூடான காபியுமாய் எளிமையான மதிய உணவை முடித்துக்கொண்டு வேன்கள் மீண்டும் பயணத்தைத் தொடங்கின. மலைப்பாதைகளின் கொண்டை ஊசி வளைவுகளில் (Hairpin bends) வேன்கள் லாவகமாக ஏறியபோது குழந்தைகள் குதூகலித்தார்கள்.
ஒவ்வொரு வளைவிலும் வேன் திரும்பும்போது, “அப்பா! அது… அது பாருங்க அருவி!” என்று கதிர்காமன் கத்த, தேஜஸ்வினி அடுத்த வேனில் இருந்தபடி கை அசைத்தாள்.
அந்த வளைவுகளில் வேன்கள் ஏறுவது உள்ளே இருப்பவர்களுக்கு ஒரு ராட்சத ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வைத் தந்தது.
உயரம் அதிகரிக்க அதிகரிக்க, ஏசியின் தேவையே இல்லாமல் போனது. வேனை ஓட்டிக்கொண்டிருந்த மகிழ்மாறனின் அருகே அமர்ந்திருந்த மலர்விழி குளிரைத் தடுக்க மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள்.
“ரொம்ப குளிருதுனா ஷாலை எடுத்துச் சுத்திப் போட்டுக்கோ.”
இது பவிதரன்!
ஈஸ்வரி குளிரவில்லை என்றதும் அவன் அந்த ஷாலை வாங்கிச் சுற்றிக்கொண்டான். அவள் முறைக்க,
“எனக்குக் குளிருதுடி சண்டைக்காரி,” என்றான் அவன் விஷமச் சிரிப்போடு.
இளையவர்களின் அந்நியோன்யமே பெரியவர்களின் மனதை நிறைத்துவிட்டது.
“இந்த வயசுல இதையெல்லாம் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கணும் சிவகாமி… புள்ளைங்க எல்லாம் ஒண்ணா இருக்குறதைப் பார்க்குறப்ப கண்ணும் மனசும் நிறைஞ்சு போகுது,” என்றார் மருதநாயகி பேரன் பேத்திகளைப் பார்த்தவராய்.
வெயில் மெல்லத் தாழத் தொடங்க, வேன்கள் வயநாடு எல்லைக்குள் நுழைந்ததும், சாலையின் இருபுறமும் பச்சைக் கம்பளம் விரித்தது போலத் தேயிலைத் தோட்டங்கள் காட்சியளித்தன. மலைச்சரிவுகளில் சீராக வளர்ந்திருந்த தேயிலைச் செடிகளின் மீது மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி ஓர் ஓவியரின் தூரிகை தீட்டிய அழகோவியமாய்!
தேன் மெழுகும், தேயிலையின் நறுமணமும் கலந்த ஒரு புதுவிதமான வாசம் காற்றில் தவழ்ந்தது.
“இங்கயே வேனை நிறுத்தி ஒரு போட்டோ எடுக்கலாமே புவன்!” என்று ஆதிரா உற்சாகமாகக் கேட்க, புவனேந்திரன் பாதுகாப்பான ஒரு இடத்தில் வேனை நிறுத்தினான்.
மகிழ்மாறன் ஓட்டி வந்த வேனும் நின்றுவிட, அனைவரும் அந்தத் தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் செல்ஃபி எடுக்க ஆயத்தமானார்கள். இருபத்து மூன்று பேரும் வேனை விட்டு இறங்கி அந்தப் பச்சைப் பசேல் தோட்டங்களுக்குள் நின்றபோது, அவர்களின் வண்ணமயமான உடைகள் அந்தப் பச்சை நிறத்திற்கிடையே அழகான முரணாய் அமைந்தன!
கிடைத்த இடைவெளியில் செல்ஃபி எடுத்த மிருணாளினியை, “இவ ஒருத்தி! தேயிலை விளம்பரத்துல வர்ற மாதிரி வளைச்சு வளைச்சு செல்ஃபி எடுத்துக்கிறா,” என்று சலித்துக்கொண்டான் கர்ணன்.
“ஓகே! எல்லாரும் இந்தச் சமதளத்துக்கு வாங்க! ஆச்சி நீ உட்காரு! பெரியவங்க எல்லாரும் ஆச்சியை நடுவுல வச்சு ரெண்டு பக்கமும் உட்காருங்க. டேய் குட்டீஸ்! போய் உங்க ஆச்சி தாத்தாக்கள் மடியில உட்கார்ந்துக்கங்க. வாங்கப்பா! நம்ம எல்லாரும் சேர்ந்து நிப்போம். செல்ஃபி ஸ்டிக்கை என் அருமை நெட்டைக் கொக்கு பிடிச்சுப்பா. அவ தான் செல்ஃபி எடுக்கிறதுல எக்ஸ்பர்ட்.”
கிடைத்த கேப்பில் விடாமல் சிக்சர் அடித்த கர்ணனை முறைத்தாலும் தனது செல்ஃபி எடுக்கும் திறமையை அவன் புகழ்ந்ததால் குளிர்ந்து போனாள் மிருணாளினி.
கர்ணன் சொன்னபடி பெரியவர்கள் மருதநாயகியை நடுநாயகமாக வைத்து அமர, குழந்தைகள் அவரவர் பாட்டி தாத்தா மடியைப் பிடித்துக்கொண்டார்கள். இளையவர்கள் பெரியவர்களின் பின்னே முழங்காலிட்டு ஸ்டைலாக நிற்க, “எல்லாரும் இங்க பாருங்க! ரெடி… ஒன்… டூ… த்ரீ… சீஸ்!” என்று மிருணாளினி சொன்னதும் அனைவரின் முகங்களிலும் புன்னகையின் வரிகள்!
அனைவரும் ஒருவித ஆசுவாசமான ஆனந்தத்தில் ஆழ்ந்தனர். நீண்ட தூரப் பயணம் கொடுத்த அசதி யாரிடமும் இல்லை. மாறாக, அடுத்த சில நாட்கள் அந்த வயநாட்டின் மடியில் தங்களது குடும்பத்தோடு கழிக்கப் போகும் தருணங்களுக்கான எதிர்பார்ப்பு அவர்களின் கண்களில்!
வயநாட்டின் மலைச்சரிவுகள் தேயிலைத் தோட்டங்களோடு, ஒருபுறம் பொன்னிறக் கதிர்களைத் தூவி விடைபெறத் தயாராக இருந்த அந்திச் சூரியன் சேர்ந்துகொள்ள, இயற்கையே அந்தப் பெரிய குடும்பத்திற்கு ஒரு அழகான பின்னணியை அமைத்துக் கொடுத்திருந்தது.
செல்ஃபி ஸ்டிக்கின் பட்டனைச் சொடுக்கினாள் மிருணாளினி.
அந்த ஒரு நொடிச் சொடுக்கலில், இருபத்து மூன்று வெவ்வேறு இதயங்களின் ஒரே மாதிரியான சிரிப்புச் சத்தம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நிரம்பி எதிரொலித்தது. கேமராவின் திரையில் தெரிந்த அந்தப் புகைப்படம் வெறும் உருவங்களின் தொகுப்பல்ல; அது நான்கு குடும்பங்களின் ஏழு ஆண்டுகாலப் பிணைப்பு! நான்கு ஜோடிகளின் மாறாத காதலின் சாட்சி.
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்த அன்பையும் நேசத்தையும் கடத்தும் கருவியாய் அந்தச் செல்ஃபி என்றென்றும் அழகான ஞாபகங்களின் தொகுப்பாய் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
விழிகளில் ஒரு பவனியாய் இவர்களின் பயணம், கொஞ்சும் மஞ்சள் பூக்கள் பாதையெங்கும் தூவியிருக்க, சங்கமித்த உறவுகள் சித்திரமாய்ச் செந்தேன் மலராய்ப் பரிமளம் வீச, அவரவர் அரண்களின் அகம் உறைந்தார்கள் அழகு பெண்கள்!

இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

