“தனிமைய போக்கிக்க சிறந்த கம்பேனியன் யார் தெரியுமா? புக்ஸ்… பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் சார்ந்த புக்ஸை மட்டும் நான் சொல்லல… தினசரி வாழ்க்கையில இருக்கிற பிரச்சனைகளை மறக்கடிச்சு வாசிக்கிற கொஞ்ச நேரத்துல நமக்கு ஆசுவாசத்தைக் குடுக்குற கதை புத்தகங்களையும் சேர்த்தே சொல்லுறேன்… முன்னூறு பக்கத்துல மூவாயிரம் தடவை அந்தக் கதையில வர்ற கதாபாத்திரங்களுக்காக நம்ம யோசிப்போம்… அந்தக் கொஞ்சநேரத்துல தற்காலிகமான திசைதிருப்பலை நமக்குக் குடுக்குற மாயாவிகள் தான் புத்தகங்கள்“
-சங்கவி
பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த சங்கவியின் மனம் ஒரு நிலையில் இல்லை. தெளிந்த நீரோடையாக இருந்த அவளது மனம் சரபேஸ்வரனைச் சந்தித்ததும் குழம்பிய குட்டை ஆகிப்போனது.
கண்களை மூடினால் பழைய நினைவுகளின் அணிவகுப்பு! கண்களைத் திறந்தாலோ காதுகளில் அவர்கள் பேசிய வார்த்தைகளின் எதிரொலி! என்ன முயன்றும் மனதைத் திசை திருப்ப முடியாமல் போகவும், மொபைலை எடுத்து வழக்கமாகப் படிக்கும் இணையதளத்தில் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தாள்.
இது ஒருவித திசைதிருப்பல் எனலாம். நிகழ்கால துயர்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அவள் உபயோகிக்கும் தற்காலிக வழிமுறை எனும் வைத்துக்கொள்ளலாம்.
படிக்கிற பத்து நிமிடங்களில் அந்த அத்தியாயத்தில் வந்து செல்லும் கதாபாத்திரத்திற்காக மனம் யோசிக்கும். ஏன் அவர்கள் இப்படி செய்தார்கள்? அதற்குப் பதிலாக அப்படி செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காதேயென மனம் அதன் போக்கில் கதையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடும்.
சிந்தனை முடியும்போது ஓரளவுக்கு மனம் பழையபடி தெளிந்த நீரோடையாய் மாறிவிடும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இங்கே நடந்ததும் அது தான். வெற்றிகரமாகச் சரபேஸ்வரனைப் பற்றிய சிந்தனைகளை ஒழித்துவிட்டு அவள் மனம் தெளிந்த நேரம் “நதியூர் இறங்குங்க” என நடத்துனரின் குரல் காதில் விழுந்தது.
ஹேண்ட்பேக்கோடு பேருந்திலிருந்து இறங்கிய சங்கவி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஆங்காங்கே நாய்கள் படுத்துக் கிடந்தன. ஊருக்குப் பொதுவான சமுதாய நலக்கூடத்தில் இளசுகள் முதல் பெருசுகள்வரை அமர்ந்து ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தனர்.
வீட்டுத்திண்ணைகளில் மூதாட்டிகளின் மன்றம் கூடியிருந்தது.
இளம்பெண்களை மொபைலும், நடுத்தரவயது பெண்களைத் தொலைகாட்சியும் தங்களது உலகத்துக்குள் இழுத்துப்போய்விட்டதால் அவர்களைக் காண முடியவில்லை.
டியூசனுக்குச் சென்று விட்டுச் சில குழந்தைகள் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
“நாளைக்கு எங்க மிஸ் செம்பருத்தி பூ கொண்டு வரச் சொல்லிருக்காங்க… பூவோட பாகங்களைக் கரெக்டா சொன்னா தனி மார்க் உண்டாம்”
ஒரு சிறுவன் பேசியவாறே சங்கவியைக் கடந்து போனான்.

அவள் மெதுவாக நடந்து வீட்டை அடைந்தபோது வெளிப்புற சி.எஃப்.எல் விளக்கில் ஈசல்களின் ஆட்டம் ஆரம்பித்திருந்தது.
மழை பெய்தால் இவற்றிற்கு இறக்கை முளைத்துவிடும். பின்னர் தெருவிளக்கு கம்பங்களிலும் வீடுகளில் எரியும் விளக்குகளிலும் மோதி மோதித் தங்கள் பலத்தை நிரூபித்து இரவு முழுவதும் ஆட்டம் போட்டுவிட்டு மறுநாள் விடியலில் இறக்கைகளை இழந்து இறந்தும் போய்விடும் அப்பாவி பூச்சிகள் அவை!
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் காது மூக்குகளில் பறந்தவாறு அவை போய்விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் தலையைச் சுடிதார் துப்பட்டாவால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள் சங்கவி.
வீட்டின் பின்வாசலில் உள்ள சி.எஃப்.எல் மட்டும் எரிந்தது. மற்றபடி வீட்டின் இரு அறைகளும் இருளில் மூழ்கிக் கிடந்தன.
“அம்மா… ஏன் லைட்டை ஆப் பண்ணி வச்சிருக்க?”
அவசரமாக ஸ்விட் போடச் சென்றவளை தடுத்தது அவளது அன்னை அழகுநாச்சியின் குரல்.
“ஆன் பண்ணிடாத கவி… ஈசலு முழுக்க வீட்டுக்குள்ள வந்துடும்”
“அட போம்மா”
ஸ்விட்சை தட்டினாள் அவள். குழல் விளக்கு பாலொளியை மூலை முடுக்கெங்கும் வாரி வழங்க ஆரம்பித்தது.
“அம்புட்டு ஈசலும் வீட்டுக்குள்ள வரப்போவுது பாரு”
அழகுநாச்சி நொடித்துக்கொண்டே முன்வாயில் கதவைப் பூட்டி உட்பக்கமாகத் தாழிட்டார்.
தனது அறைக்குள் வந்து ஹேன்ட்பேக்கிலிருந்து டிபன் பாக்சை எடுத்து வைத்துவிட்டு ஆணியில் பேக்கை தொங்கவிட்டாள் சங்கவி.
டிபன் பாக்சோடு அவள் சமையலறைக்குள் நுழைந்தபோது கேஸ் ஸ்டவ்வில் இஞ்சி மணத்தோடு தேநீர் தயாராகிக்கொண்டிருந்தது.
அடுப்பின் அருகே நின்று கொண்டிருந்த அழகுநாச்சியின் கரத்தில் ரங்கநல்லூர் கிளை நூலகத்திலிருந்து போன வாரம் சங்கவி எடுத்து வந்திருந்த நாவல் அமர்ந்திருந்தது.
“கேஸ் முன்னாடி நிக்கப்ப நான் போன் நோண்டுனா திட்டுவல்ல, நீ மட்டும் நாவல் படிச்சிட்டிருக்க?”
“புக்கும் போனும் ஒன்னா? நம்ம ஊர் வாய்க்கால்ல வெள்ள நேரத்துல சுழல் வருமே, அதை மாதிரி போனும் ஒரு சுழல்… அப்பிடியே உள்ள இழுத்துக்கும்… புக்கு அப்பிடியில்ல… என்ன தான் படிச்சாலும் நம்ம புத்திய விழிப்பா வச்சிருக்கும்”
“உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”
அலுத்தக் குரலில் சொன்ன சங்கவியின் கையில் வெங்காய போண்டாக்கள் அடங்கிய தட்டும் தேநீர் தம்ளரும் திணிக்கப்பட்டன.

“நைட் நான் தோசை ஊத்துறேன்… நீ போய் உன் புக்கை முடி”
“டீ பாத்திரம்??”
“அதை நான் கழுவிக்கிறேன்மா… நேத்து ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்திருக்க, அதை மறந்துடாத… பிரஷர் இப்பிடி ஏறி ஏறி இறங்குறது நல்லதில்லனு டாக்டர் சொன்னார்ல… இப்ப வெங்காய போண்டா இல்லைனு யார் அழுதாங்க?”
“பல்லாரி விலை குறைஞ்சிருக்குனு சந்தைல ரெண்டு கிலோ வாங்கிட்டு வந்தா லெட்சுமி… ஒரு கிலோவ என் கிட்ட குடுத்தா… உனக்கு வெங்காய போண்டா ரொம்ப பிடிக்குமேனு செஞ்சேன்… மழைக்கு இதமா இருக்கும் கவி… வயசுப்புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போடலனா அம்மைனு ஒருத்தி எதுக்கு இருக்கேன் சொல்லு”
“ஒரு வாரம் ஆனதுக்கு அப்புறம் நீ ஆக்கிப்போடு… நான் வேண்டாம்னா சொல்லப்போறேன்?”
பேசியபடியே அன்னையும் மகளும் நடு ஹாலுக்கு வந்தனர்.
சங்கவி தரையில் அமர்ந்துகொள்ள அறையின் ஓரமாகக் கிடந்த ஒயர் கட்டிலில் அமர்ந்தார் அழகுநாச்சி.
“இன்னைக்கு கருப்பசாமி அண்ணன் வந்திருந்தாங்க”
நாவல் படித்தபடியே மகளிடம் தூண்டில் வீசினார் அழகுநாச்சி.
“நாளைக்கு அவரைப் பாத்து இனிமே எங்க வீட்டுக்கு வராதிங்கனு சொல்லப்போறேன்”
வெங்காயபோண்டாவை விழுங்கியபடி கூறினாள் சங்கவி.
“என்னமோ போ! இன்னும் எத்தனை நாளுக்கு இப்பிடியே இருக்க போற?”
சங்கவி பதில் பேசவில்லை. இஞ்சி நறுமணத்தோடு தேநீரைச் சுவைத்து கசப்பை மறந்துகொண்டிருந்தாள் அவள்.
“கவி…”
அழகுநாச்சி இழுக்கவும் ஏறிட்டவள் “அதைப் பத்தி பேசாதம்மா… எனக்கு நீ இருக்க… அது போதும்” என்று சொல்லவும் அவர் முகம் வாட்டமுற்றது.
“ஊரு உலகம் இப்பவே தப்பா பேசுது கவி… இந்தா சுவர்ல சிரிச்சிக்கிட்டு இருக்காரே இந்த மனுசன் தப்பிச்சிட்டார்… என் காதுல தான் எல்லா பேச்சும் விழுது”
சங்கவியின் கண்கள் எதிர்புறமிருக்கும் சுவரில் புகைப்படச் சட்டத்துக்குள் சிரித்துக்கொண்டிருந்த தந்தை பொன்வண்ணனை நோக்கின.
“விடும்மா… எதையும் கண்டுக்காத”
முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள் அந்தப் பேச்சுக்கு. அழகுநாச்சியின் முகம் அவரது வருத்தத்தைக் காட்டியது.
சோகம் தான்! அதற்கு என்ன செய்வது?
சமையலறைக்கு வந்தவள் தேநீர் போட்ட பாத்திரம், தம்ளர், போண்டா சாப்பிட்ட தட்டைக் கழுவி கவிழ்த்தினாள்.
ஃப்ரிட்ஜில் இருந்த தோசை மாவை எடுத்து வெளியே வைத்தவள் சமையலறைக்குள் இருந்தபடியே
“உனக்குச் சின்ன வெங்காயம் போட்டுத் தோசை சுட்டுத் தரட்டுமா? தொட்டுக்க தக்காளி சட்னி” என்று கூவவும் அழகுநாச்சி அதிர்ந்தே போனார்.
“தக்காளி கிலோ நூத்தியிருவது ரூவா… சின்ன வெங்காயம் தங்கம் விலை விக்குது… ஒழுங்கா ஆளுக்கு நாலு தோசைய ஊத்தி தேங்காய் சட்னி அரைச்சு வை… விக்கிற விலைவாசில வெங்காய தோசையாம், தக்காளி சட்னியாம்… காசு என்ன கொல்லைப்புறதுல இருக்குற மரத்துலயா காய்க்குது?”
அழகுநாச்சி படபடக்கவும் சங்கவி சிரித்தாள். இனி தனது பேச்சு உண்டாக்கிய வருத்தம் மறைந்து சின்ன வெங்காயமும் தக்காளியும் விலையேறிப்போன சோகம் அவரை ஆட்கொண்டுவிடும்.
பின்னர் சங்கவி தோசை சுட்டு சட்னி அரைத்து முடிக்க இருவரும் இரவுணவைச் சாப்பிட்டனர்.
“இன்னைக்கு மதியம் கோமதிக்குத் திடீர்னு வயிறுவலி வந்துடுச்சு… லெட்சுமி ஹைகிரவுண்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கா”
அழகுநாச்சி கூறிய செய்தியில் அதிர்ந்தே போனாள் சங்கவி.
கோமதி சங்கவியின் உயிர்த்தோழி. போன வருடம் திருமணமாகி இருந்தது அவளுக்கு. இப்போது நான்கு மாத கரு அவளது வயிற்றில் வளருகிறது.
இந்நிலையில அவளுக்கு வயிறுவலி என்றால் பதற்றம் வருவது இயல்பு தானே?
“லெட்சுமியத்தை போன் பண்ணுனாங்களா? என்னாச்சு அவளுக்கு?”
“சூட்டுவலினு டாக்டர் சொல்லிட்டாங்களாம்… ஆனா கோமதி ரொம்ப பயந்து போயிருக்கா… நீ அவ கிட்ட பேசிக் கொஞ்சம் தைரியம் சொல்லு கவி”
“ப்ச்! அவ பாடுன பாட்டையே திரும்பப் பாடுவாம்மா”
சலித்துக்கொண்டாள் சங்கவி.
“அவ கவலைப்படுறதுல அர்த்தம் இருக்கு கவி… சொல்ல சொல்ல கேக்காம அவ புருசன் டாஸ்மாக் கான்ட்ராக்ட் எடுத்திருக்கான்… ஊரை அடிச்சு உலையில போட்ட காசு உடம்புல ஒட்டுமானு பயப்படுறா… அந்தப் பாவம் அவ புள்ளைக்குத் திரும்பிடுமோனு பயந்து அழுறா”
“எந்தக் காலத்துல இருக்கம்மா நீ? கொஞ்சம் கூடக் குற்றவுணர்ச்சி இல்லாம அடுத்தவங்க வாழ்க்கைய சீரழிக்கிறவங்க பொன்னும் பவுனுமா வாழுற காலம் இது… அவங்களை எல்லாம் தெய்வம் தண்டிச்சிடுச்சா என்ன? மாடிக்கு மேல மாடி கட்டி ஜாம்ஜாம்னு வாழுறாங்க… பாவம் பண்ணுனவங்களுக்குத் தண்டனை கிடைச்சதுலாம் ஒரு காலம்… இப்ப மனசாட்சிய அடகு வச்சிட்டு எந்தப் பழிபாவத்தையும் செய்யத் துணிஞ்சவங்க தான் சொகுசா வாழுறாங்க”
சாப்பிட்ட முடித்த தட்டோடு எழுந்தாள் சங்கவி.
மகளின் பேச்சில் உடன்பாடில்லை அழகுநாச்சிக்கு.
“தெய்வம் நின்னு கொல்லும் கவி… மனுசப்பயலுக்கு அந்தப் பயம் எப்பவுமே இருக்கணும்”
ஷிங்கில் தட்டைப் போட்டுவிட்டுத் திரும்பினாள் சங்கவி.
“என் விசயத்துல தெய்வம் யாரையும் தண்டிக்கலையே… எல்லாரும் ரொம்ப செழிப்பா வாழுறாங்க… சம்பந்தப்பட்ட மூனு பேரும் முன்னை விட இப்ப ரொம்ப கெதியா இருக்காங்க”
குத்தலாகச் சொன்னபடி அன்னையிடமிருந்து தட்டை வாங்கினாள்.
அழகுநாச்சி மறுத்தார்.
“உனக்கு விசயம் தெரியல… ஏகாதசிக்கு ஆழியூர் சீனிவாசப்பெருமாள் கோயிலுக்குப் போனேன்ல, அங்க உமா வந்திருந்தா”
“அவங்க பேச்சை எடுக்காதம்மா”
“சொல்லுறதை முழுசா கேளு கவி… அவளுக்குத் தைராய்டாம்… கிட்னிலயும் பிரச்சனைனு டாக்டர் சொல்லிருக்காங்க போல… வீட்டுக்குத் தூரம் வர்றப்ப உதிரபோக்கு ஜாஸ்தியா இருக்குமாம்… ரெண்டு தடவை ஆஸ்பத்திரில சேர்க்குற அளவுக்கு நிலமை மோசமாயிடுச்சாம்… உடம்பு சொகமாகி திரும்பி வந்தா பெருமாளுக்கு ஒரு சனிக்கிழமை கட்டளை பண்ணுறேன்னு வேண்டிக்கிட்டாளாம்… சரியானதும் வேண்டுதலைச் செய்ய வந்தப்ப சொல்லிக்கிட்டிருந்தா கவி… உனக்குச் செஞ்ச பாவத்துக்கு அந்தப் பெருமாளே அவளைத் தண்டிச்சிட்டார்”
“பெருமாளுக்குத் தண்டிக்கத் தெரியாதும்மா… அவங்க எப்ப யாரை கெடுக்கலாம்னு யோசிச்சு உடம்பைக் கவனிக்காம விட்டிருப்பாங்க”
“என்ன சொன்னாலும் கடவுள் அவங்கவங்க செஞ்ச நல்லது கெட்டதுக்குக் கணக்கு வச்சிருப்பார் கவி… அது எந்தக் காலத்துலயும் மாறாது”
அழகுநாச்சி தீர்மானமாக உரைத்துவிட்டுச் சென்றார்.
சங்கவியின் இதழில் விரக்தியான முறுவல். உமாவின் உடல்நிலை பாதித்துவிட்டால் மட்டும் நடந்த அனைத்தும் இல்லாது போய்விடுமா என்ன?
கிட்டத்தட்ட அவளைப் போன்ற மனநிலையோடு சப்பாத்தியைப் பிய்த்துக்கொண்டிருந்தான் சரபேஸ்வரன்.
“என்னய்யா பிச்சு விளையாடுற? சாப்பிடுப்பா”
மகனுக்குப் பட்டாணி குருமாவை அள்ளி வைத்தார் குழலி.

சாரங்கபாணி அவரிடம் கண் காட்டினார்.
“நீ ஆரம்பிக்கிறியா? இல்ல நான் பேசட்டுமா?”
“நானே பேசிக்கிறேன்”
இவை கண் பார்வை வழியாக நடந்தேறிய சம்பாஷணைகள்.
குழலி சாப்பிட்டுக்கொண்டிருந்த மகன் அருகில் தண்ணீர் தம்ளரை வைத்துவிட்டு அமர்ந்தார்.
“இன்னும் எத்தனை நாளுக்குப் பழசை யோசிச்சுக்கிட்டே இருக்கப்போற?”
சரபேஸ்வரன் அன்னையை புரியாத பார்வை பார்த்தான்.
“இல்ல… உமா வீட்டுக்காரர் இருக்கார்ல அவரோட தூரத்து சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காளாம்… பி.காம் முடிச்சிருக்காளாம்… அவங்க வீட்டுல நல்ல வசதினு வேலைக்கு அனுப்பலை போல… பொண்ணு நல்ல கலர்னு உமா சொன்னா… போன மாசம் ஆழ்வார் திருநகரில வளைகாப்பு வீட்டுக்குப் போனப்ப பாத்தாளாம்… உனக்குச் சம்மதம்னா வாட்சப்ல போட்டோ அனுப்பிவைக்குறேன்னு சொன்னா ஈஸ்வரா”
முடித்துவிட்டுக் கணவரைப் பார்த்தார் குழலி.
“நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க”
மனைவியின் கண்ஜாடையைப் பார்த்துவிட்டு அவரும் மைந்தனிடம் பேசினார்.
“உன் அக்கா உனக்கு நல்லது தான் நினைப்பா… அந்தப் பொண்ணை பாத்துட்டு வந்துடலாம் ஈஸ்வரா”
தட்டில் மிச்சமிருந்த சப்பாத்தியைச் சாப்பிட தோன்றாமல் அப்படியே வைத்துவிட்டு எழுந்தான் சரபேஸ்வரன்.
“என்னாச்சுப்பா? ஏன் சாப்பிடாம எழுந்திரிக்கிற?”
“போதும்பா”
சுருக்கமாகக் கூறிவிட்டு கை கழுவச் சென்றுவிட்டான்.
சாரங்கபாணிக்கும் குழலிக்கும் ஏன் மைந்தன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என புரிந்துவிட்டது.
கை கழுவிவிட்டு வந்தவனைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர் இருவரும்.
“பழசை மறந்துட்டு யோசி ஈஸ்வரா… எங்களுக்கும் வயசாகுது… ஒரே பிள்ளை தனிமரமா நிக்குறதை எங்களால தாங்கிக்க முடியாதுப்பா”
“இதை அக்கா கிட்ட சொல்லி சங்கவி குடும்பத்து கிட்ட அவளை பேசவைக்க முடியுமா?”
சாரங்கபாணியும் குழலியும் திகைத்துப் போய் நின்றுவிட்டனர்.
அவனது தமக்கை உமா நிச்சயம் அந்தக் காரியத்தைச் செய்யமாட்டாள். ஏனெனில் அவளது பிடிவாதம் அப்படிப்பட்டது. ஆனால் நான் மட்டும் இவர்கள் மூவரின் பேச்சுக்கும் தலையாட்டவேண்டும். இந்த எதிர்பார்ப்பு எந்த விதமானது என எரிச்சலுற்றான் சரபேஸ்வரன்.
“நீங்க ரெண்டு பேரும் ஒரு கண்ணுல வெண்ணெய்யையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வச்சிருக்கிங்களோனு தோணுது… அந்த மூர்த்திய பத்தி நான் எவ்ளோவோ எடுத்துச் சொல்லியும் வீட்டுக்கு வந்த மருமகன்னு சொல்லி தயங்குறிங்க… இதே விசயத்தைச் சொன்னதுக்காக சங்கவியை ஒதுக்கி வச்சிங்க… உங்களோட சேர்ந்து நானும் முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்… மருமகனுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயமா?”
மகன் பேச பேச குழலிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
எப்போதும் இப்படி எதிர்த்துப் பேசுபவனில்லை அவன். இன்று இவ்வளவு தூரம் பேசுகின்றான் என்றால் அதற்கு சங்கவியைத் தவிர வேறேன்ன காரணமாக இருக்கமுடியுமென அவர் யோசித்தார்.
சாரங்கபாணி மகனின் நியாயமான கேள்விக்கு முன்னே தலை குனிந்தார். மனசாட்சி குத்தியது அவரை.
சரபேஸ்வரன் போன பின்பு தங்களது அறைக்கு வந்த மனைவி சங்கவியால் தானே மகன் இப்படி பேசுகிறான் என புகார் கூற ஆரம்பிக்கவுமே தடுத்தார்.
“அவன் நியாயமா கேக்குறான்… நம்ம மேலயும் தப்பிருக்கு குழலி… மகளும் மருமகனும் சொன்னாங்கனு நம்பி, நம்ம மூனு பேரும் அந்தப் பொண்ணை அவமானப்படுத்திட்டோம்… மாப்பிள்ளை எப்பிடிப்பட்டவர்னு ஈஸ்வரன் சொல்லியும் நம்மளால உமா கிட்ட அதை சொல்ல முடியல… பொண்ணு வாழ்க்கைய பத்தி யோசிச்ச நம்ம ரெண்டு பேரும் மகனோட வாழ்க்கைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல குழலி… இந்தச் சம்பந்தத்தை பத்தி இனிமே ஈஸ்வரன் கிட்ட பேசாத… கொஞ்சம் நாள் போகட்டும்… கண்ணைத் துடைச்சுக்க”
கணவர் எடுத்துக் கூறியதும் புரிந்துகொண்ட குழலி கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ஆனால் அவரது மகள் இப்படி இலகுவாகப் புரிந்துகொள்ளும் ரகமில்லையே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

