“காதல் நமக்குள் வரும்போது எவ்வித எச்சரிகை அறிவிப்புகளோடும் வருவதில்லைனு ஜாக்கி காலின்ஸ் சொல்லிருக்காங்க… இந்தக் காதல் நமக்குள்ள வர்றதுக்கு ஒரு ஸ்பார்க் வேணும்… பாக்குற எல்லார் கிட்டவும் ஸ்பார்க் ஃபீலிங் வராது… சம்பந்தமே இல்லாத நபர் மேல வர்ற மெஸ்மரிசமான ஃபீல் தான் லவ்… அதை நீங்களோ நானோ தடுக்க முடியாது… சப்போஸ் அந்தக் காதல் நம்மளை விட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டா அதை நிறுத்தவும் முடியாது”
-சரபேஸ்வரன்
திருப்பதி மைன்ஸ் அலுவலகம், ஸ்ரீபுரம்…
ஐம்பதாண்டுகளுக்கு மேல் சுண்ணாம்பு குவாரி தொழிலில் நிலைத்திருக்கும் நிறுவனம் அது.
ஸ்ரீபுரத்தில் அமைந்திருக்கும் அதன் மூன்று மாடிகளைக் கொண்ட அலுவலகத்தின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள் சங்கவி.
கேட் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த காவலாளியிடம் ஆடிட்டர் முரளி மனோகரின் அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறவும் அவர் உள்ளே அனுமதித்தார்.
வரவேற்பிலிருந்த ரிசப்சனிஸ்ட் பெண்ணிடம் அக்கவுண்ட்ஸ் மேனேஜரைச் சந்திக்க ஆடிட்டர் முரளி மனோகர் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறிவிட்டு பதில் வரும் வரை காத்திருந்தாள் சங்கவி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ரிசப்சனிஸ்டும் அக்கவுண்ட்ஸ் மேனேஜரிடம் பேசிவிட்டுச் சங்கவியை அழைத்தாள்.
“சாரோட கேபின் தேர்ட் ஃப்ளோர்ல இருக்கு மேடம்” என்றவளிடம் நன்றி கூறிவிட்டு படி இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.
ஏனோ அவளுக்கு மின்தூக்கியில் பயணிக்கப் பிடிக்காது. வீணாய் சில வேண்டாத நினைவுகளைக் கிளறிவிடும் எதையும் அவள் இப்போது செய்வதில்லை. அவற்றில் மின்தூக்கி மற்றும் எஸ்கலேட்டரும் அடங்கும்.
படியேறி அவள் மூன்றாம் தளத்தை அடைந்தாள்.
அந்தத் தளம் நிதிப்பிரிவுக்கானது போல. கணினிகளுடன் சில மேஜைகள் கிடக்க அதன் முன்னே மும்முரமாக அமர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர் நிறுவனத்தின் ஊழியர்கள்.
அக்கவுண்ட்ஸ் மேனேஜரின் கேபினுக்கு வெளியே நின்றவள் கதவைத் தட்டி அனுமதி கேட்கப் போன தருணத்தில் உள்ளிருந்து யாரோ கதவைத் திறந்தார்கள்.
அந்த இளைஞனின் முகம் சோர்ந்திருந்தது. சங்கவி என்ற ஒருத்தி நிற்பதையே கவனிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
இப்போது சங்கவியின் முறை.
“மே ஐ கமின் சார்?”
“யெஸ்”
பதில் வந்ததும் ஒரு நொடி திடுக்கிட்டாள் சங்கவி. இந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் அவன் அல்லவா?
யோசித்தபடி அவள் நிற்கையிலேயே தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது.
“உள்ள வாங்க… கதவு பக்கத்துல நிக்க வச்சு பேசி அனுப்புனா உங்க ஆடிட்டர் கோச்சுப்பார்ல”
இது அவனே தான்! சங்கவியின் முகம் கடுப்பில் சிவந்தது.
இரு இரு! ஏன் இவ்வளவு கடுப்பு! நிதானமாக உள்ளே போய் அலுவல்ரீதியான பேச்சை மட்டும் பேசி முடித்துவிடு!
மனசாட்சி அறிவுரை வழங்கியது.
சங்கவிக்கும் அமைதியாய் பேச்சுவார்த்தை கழியவேண்டுமென ஆசை தான். நடக்குமா? நடப்பது அவள் கையில் மட்டுமா இருக்கிறது?
இதற்கு மேலும் தாமதித்தால் அவனைக் கண்டு பயந்ததாக எண்ணிக்கொள்வானென விறுவிறுவென உள்ளே நுழைந்தவளின் பார்வை கண்ணெதிரே கிடந்த மேஜையையும் அதன் மீது ‘சி.எம்.ஏ சரபேஸ்வரன், அக்கவுண்ட்ஸ் மேனேஜர்’ என்ற பெயர்ப்பலகையையும் தாண்டி உயரவேயில்லை.

“ப்ளீஸ் சிட்”
அமைதியாக அமர்ந்தவள் பேச்சை ஆரம்பிக்க ஆயத்தமானாள்.
“என் ஃபேமிலி உன்னைப் பொண்ணு கேட்டு வந்தப்ப கூட நீ இவ்ளோ வெக்கப்படல”
சீண்டியது அவனது குரல்! மனசாட்சி கூறிய அறிவுரையைக் கேட்கும் எண்ணத்தை அப்போதே கைவிட்டவள் நிமிர்ந்து அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
அதே உயரம், அதே புன்னகையோடு திருப்பதி மைன்சின் சீருடையான ட்ராபிக்கல் ப்ளூ சட்டை அடர்நீலவண்ண பேண்டில் அம்சமாகவே இருந்தான் சரபேஸ்வரன்.
தோற்றத்தில் மட்டும் கொஞ்சம் மாறுதல்! அடர்த்தியான மீசையும் அது கோடாய் மாறி ட்ரிம் செய்யப்பட்ட தாடியோடு இணைந்த விதமும் அவனைக் கொஞ்சம் முதிர்ச்சியாகக் காட்டியது.
“எப்பிடி இருக்க கவி?”
குரலில் மட்டுமல்ல கண்களிலும் டன் கணக்கில் கனிவு சொட்டியது. அது சங்கவியின் மனதைத் தொடவில்லை.
அவனோடு பேச்சை வளர்க்க விருப்பமின்றி வந்த விசயத்தை ஆரம்பித்தாள் சங்கவி.
“மூனு வருசமா நான் எந்தப் பிரச்சனையும் வராம உங்க கம்பெனியோட டி.டி.எஸ் அண்ட் ஜி.எஸ்.டி ஃபைலிங்கை பாத்துக்கிட்டேன் சார்… இப்ப திடீர்னு நீங்க ஜூனியர் அக்கவுண்டண்ட் கிட்ட அந்தப் பொறுப்பை ஒப்படைக்கப்போறதா சந்தானம் சார் சொன்னாங்க… அது சம்பந்தமா பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்”
“அது முடிஞ்சு போன விசயம்… இனிமே அதைப் பத்தி பேசிப் பிரயோஜனமில்ல… ஜூனியர் அக்கவுண்டண்டுக்கு ஃபைலிங் பத்தி சொல்லிக் குடுக்கத் தான் உன்னை இங்க வரச் சொன்னேன்”
“நான் கத்துக்குடுக்குறேன்னே வச்சுக்கோங்க… உடனே அவரால ஃபைலிங்ல எக்ஸ்பர்ட் ஆகிட முடியாது… சின்ன சின்ன டீடெய்ல்ல கூட மிஸ்டேக் வரலாம்… அந்த மிஸ்டேக்கால ரீ-ஃபைலிங், பெனால்டினு ஏகப்பட்ட பிரச்சனை வரும்”
“வரட்டும்… இப்பிடி ஒருத்தரை அப்பாயிண்ட் பண்ணுனதுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விரயத்தை ஏத்துக்கிட்டுத் தானே ஆகணும்”
விடாக்கண்டனாகப் பதிலளித்தவனிடம் வாதிடுவதில் பயனில்லை என்ற முடிவுக்குச் சங்கவி வந்துவிட்டாள்.
“சரி! உங்க ஜூனியர் அக்கவுண்டண்டுக்கு நான் ஃபைலிங் பத்தி சொல்லிக் குடுத்துடுறேன்”
பதில் சொல்லிவிட்டு எழுந்தாள்.
“எங்க போற?”
இதென்ன கேள்வி என்பது போலப் பார்த்தவள் “எங்க ஆபிசுக்கு” என்றாள்.
“அக்கவுண்டண்டுக்கு ஃபைலிங் பத்தி டீடெய்ல்டா சொல்லிக் குடுக்குற வரைக்கும் நீ இங்க தான் இருக்கப்போறனு ஆடிட்டர் சார் சொன்னாரே”
சங்கவியின் பொறுமை தூள் தூளாகப் பறந்தது.
“அப்பிடி டீடெய்ல்டா பாடம் நடத்தணும்னா மினிமம் ஒன் வீக் தேவைப்படும் சார்… அதுவரைக்கும் நான் இங்க இருக்கணும்னா ஆபிஸ்ல என் வேலைய யார் பாப்பாங்க?”
“ஆடிட்டர் சார் கிட்ட நான் பேசிக்கிறேன்”
உடனே ஆடிட்டர் முரளி மனோகரை அழைத்துப் பேசினான். அவரது சம்மதத்தையும் வாங்கினான்.
கல்லுளிமங்கன்! பற்களைக் கடித்தாள் சங்கவி.
“உங்க ஸ்டாஃப் கிட்ட நீங்களே சொல்லிடுங்க சார்” என்றபடி மொபைலை நீட்டினான்.
சங்கவி வாங்கிக்கொண்டதும் மறுமுனையில் பேசிய முரளி மனோகர் ஒரு வாரம் திருப்பதி மைன்ஸ் அலுவலகத்துக்குச் சென்று ஜூனியர் அக்கவுண்டண்டுக்கு வரி தாக்கல் பற்றி கற்றுக்கொடுத்துவிட்டு வரும்படி கூறிவிட்டார்.
சங்கவியும் சரியென்றாள். அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மொபைலைக் காதிலிருந்து எடுத்தவள் தொடுதிரையில் தெரிந்த வால்பேப்பரைப் பார்த்துவிட்டாள்.
பிங் வண்ண பின்னணியில் ‘INFINITE LOVE – I will love you endlessly’ என்று எழுதப்பட்டு ஒரு ஆணும் பெண்ணும் தங்களது விரல்களை இன்ஃபினிட்டிவ் சிம்பலைப் போல் வைத்திருக்கும் படம் அது.
இன்னும் வால்பேப்பரை மாற்றாமல் வைத்திருக்கிறான்.
மனதில் மெல்லிய கிலேசம் எழுந்தது. எதையும் வெளிக்காட்டாமல் அவனிடம் மொபைலைக் கொடுத்தாள்.
“நீ போய் வேலைய கவனிக்கலாம்… ஆபிஸ் பாய் உனக்கு லஞ்ச் வாங்கிட்டு வந்துடுவார்… ஜானகிராம்ல சாம்பார் சாதம் வாங்க சொல்லிருக்கேன்”
அவள் மறக்க நினைப்பதை நினைவுபடுத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான் போல!
“வேண்டாம்… எங்க ஆபிஸ்ல இருந்து என் ஹேண்ட் பேக்கை எடுத்துட்டு வரச் சொல்லிருங்க… நான் லஞ்ச் கொண்டு வந்துட்டேன்… இப்ப நான் கிளம்பட்டுமா?”
“உங்கப்பா தவறிட்டார்னு கேள்விப்பட்டேன்… சாரி, அப்ப நான் கோயம்புத்தூர்ல இருந்ததால வர முடியல”
அவனது வருத்தம் சங்கவியின் மனதைத் தொடவில்லை. மாறாகக் கோபம் தான் வந்தது அவளுக்கு.
“இங்க இருந்திருந்தா மட்டும் வந்திருப்பிங்களா? உங்களை வரத் தான் விட்டிருப்பாங்களா? எங்கப்பா, ,எங்கம்மா என் குடும்பம் இது எதுலயும் நீங்க தலையிடாதிங்க… நீங்க எப்பவுமே எங்களுக்கு மூனாவது நபர் தான்… ஒரே ஆபிஸ்ல இருபத்து நாலு மணிநேரமும் உங்க மூஞ்சிய பாத்துக்கிட்டிருந்தா ஏழு நாள்ல உங்க கிட்ட மயங்கிடுவேன்னு தப்புக்கணக்கு போட்டுட்டிங்க போல… நான் எதையும் மறக்கல சரபன்… மறக்கவும் மாட்டேன்… தேவையில்லாம பழசை ஞாபகப்படுத்தி வாங்கி கட்டிக்காதிங்க… இப்ப நான் கிளம்பலாமா?”

பெருமூச்சை வெளியிட்டவன் சங்கவியைச் செல்லும்படி கூற அவளும் ஜூனியர் அக்கவுண்டண்டின் இடத்துக்குப் போய்விட்டாள்.
கேபினின் கதவு மூடியதும் கண் மூடித் தனது இருக்கையில் சாய்ந்துகொண்டான் சரபேஸ்வரன்.
முழுவதுமாக ஓராண்டு ஆகியிருக்குமா சங்கவியைச் சந்தித்து? இருக்கும்.
ஒரு வருடத்தில் அவனது நிலைப்பாட்டில் வந்த மாற்றத்தை அவளிடமும் எதிர்பார்த்தது, அதுவும் இவ்வளவு விரைவில் எதிர்பார்த்தது தர்க்கரீதியாகத் தவறாகிவிட்டது.
இன்னும் சங்கவிக்குள் இருக்கும் கோபம் குறையவில்லை.
குறைந்திருக்கும் என்ற நப்பாசையில் கல் எறிந்து பார்த்தான்.
கோவையில் உள்ள நிறுவனத்திலிருந்து வெளியேறி அவன் திருநெல்வேலிக்கு வந்து ஆறு மாதங்கள் ஓடியிருந்தன. இந்த ஆறு மாதங்களில் சங்கவியின் வீடும், அவளது பணியிடமும் அவனுக்குத் தெரியாமல் இல்லை.
முறிந்த உறவைப் புதுப்பிக்க எண்ணினால் குடும்பத்தில் மீண்டும் குழப்பங்கள் வரலாம்! அந்த ஒரு பயம் மட்டுமே அவனை விலகியிருக்க வைத்திருந்தது.
எப்போது சந்தானத்தின் மொபைலில் ஆயுதபூஜையன்று முரளி அண்ட் அசோசியேட்சில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சங்கவியைப் பார்த்தானோ அப்போதே தனது விலகல் அர்த்தமற்றது என்பது புரிந்துபோனது.
உப்புக்குப் பெறாத காரணத்தைக் கூறி அவளை இங்கே வரவழைத்துச் சங்கவியின் மனநிலை என்னவெனப் பேச்சினூடே ஆராய்ந்தவனுக்கு எந்த மாற்றமும் இல்லையெனப் புரிந்தது.
முன்பை விட அவளது கோபம் இன்னும் அதிகமாகியிருப்பதை பேச்சினிடையே அவள் பற்களைக் கடித்தபோதே தெரிந்துவிட்டது.
அவனது பேச்சினால் அவள் காயப்பட்டதை எப்போது மறக்கிறாளோ அப்போது தான் கோபமும் மறையும்.
அவளைப் பற்றியே யோசித்தால் வேலையை யார் கவனிப்பது என மனசாட்சி இடிக்கவும் வேலையில் ஆழ்ந்தான் சரபேஸ்வரன்.
கேபினுக்கு வெளியே சங்கவியின் நிலையும் இது தான்.
அன்றும் இன்றும் கடைந்தெடுத்த சுயநலவாதியாக நடந்துகொள்கிறான். இவனெல்லாம் என்ன மனிதப்பிறவியோ?
குமுறியபடி ஜூனியர் அக்கவுண்டண்ட் வேல்ராஜுக்கு வரி தாக்கல் பற்றிய விவரங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள் சங்கவி.
மதியவுணவு இடைவேளை நேரத்தில் சரியாக மேஜை மீது அவளது ஹேண்ட்பேக்கை வைத்தான் ஆபிஸ் பாய்.
“மேனேஜர் சார் குடுக்கச் சொன்னாங்க அக்கா”
ஹேண்ட்பேக்கில் இருந்த டிபன் பாக்சை எடுத்தவள் கூடவே சின்ன டப்பர்வேர் டப்பாவைக் கண்டதும் திகைத்தாள்.
அவளுக்காகச் சொதியை ஊற்றிக் கொடுத்திருந்தார் சீதா.
புன்னகை அரும்பியது இதழில்.
சரபேஸ்வரனை சந்தித்தபோது உண்டான கோபம் மட்டுப்பட்டது.
உலகில் சீதா மாதிரி பிறர் நலன் பேணும் மனிதர்களும் இருக்கிறார்களே!
கொண்டு வந்திருந்த சாதத்தில் சொதியை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவளுக்கு பின்னர் வேலையைத் தவிர வேறேதும் மனதில் பதியவில்லை.
மாலையில் கிளம்பியபோது ஹேண்ட்பேக்கோடு கேட்டைத் தாண்டிச் சென்ற சங்கவியின் அருகே வந்து நின்றது பல்சர் பைக் ஒன்று.
சங்கவி எதிர்பார்த்தது போலவே ஹெல்மெட்டுக்குள் தெரிந்த தலை சரபேஸ்வரனுடையது தான்.
அவள் முறைக்கவும் “ஸ்கூட்டிய ஆபிஸ் பாய் உங்க ஆபிசுக்கு எடுத்துட்டுப் போயிட்டான்… நீ ஜங்சனுக்குப் போய்த் தானே பஸ் ஏறுவ? வா, நான் ட்ராப் பண்ணிடுறேன்” என்றான் அவன்.

“உங்க வேலைய மட்டும் பாத்துட்டுக் கிளம்புங்க… உங்க ஆபிஸ் முழுக்க என்னைப் பத்தி வதந்தி பரவணுமா?”
அலுவலக ஊழியர்களைக் கண்களால் காட்டியபடி கேட்டாள் சங்கவி.
அவன் இப்போது தான் கவனித்தான்.
“சாரி”
“எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்காம செல்ஃபிஷா நடந்துக்கிறது உங்களுக்குப் பழக்கம் தானே சரபன்… புதுசா என்ன மன்னிப்புலாம் கேக்குறிங்க?”
குத்தலாகக் கேட்டதும் சரபேஸ்வரனின் முகம் வேதனையில் சுருங்கியது.
அதைத் திருப்தியாகப் பார்த்துவிட்டு இடத்தைக் காலி செய்தாள் சங்கவி.
அவள் சென்றதும் பைக்கைக் கிளப்பியவன் எஸ்.என் ஹைரோடில் விரைந்தான்.
அவனது வீடு இருப்பது திருநெல்வேலி டவுண் பகுதியில் உள்ள கோடீஸ்வரன் நகரில்.
வீட்டை அடைந்ததும் பைக்கை நிறுத்தியவன் இறங்கி கேட்டைத் திறந்தபோதே வீட்டிற்குள் இருந்து கேட்டது அவனது அக்காவின் கணவர் மூர்த்தியின் குரல்.
கேட்டதும் மனமெங்கும் கசப்பு பரவியது.
இந்த மனிதர் இருப்பார் எனத் தெரிந்திருந்தால் சற்று தாமதித்து வந்திருக்கலாமே!
அவன் ஆதங்கத்துடன் பைக்கை வீட்டின் போர்டிகோவுக்குள் ஏற்றி ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுப் பூட்டினான்.
மார்பின் குறுக்காகப் போட்டிருந்த அலுவலகப்பை மற்றும் மில்டன் லஞ்ச் பேக்கோடு ‘ஸ்கந்தபவனம்’ என்ற அந்த 3BHK வீட்டுக்குள் பிரவேசித்தான் சரபேஸ்வரன்.
“இதுல்லாம் சரியில்ல மாமா… அந்தப் பொண்ணு என்னை எப்பிடி அசிங்கப்படுத்துனானு மறந்துடுச்சா உங்க மகனுக்கு? எதேச்சையா ஸ்ரீபுரம் போனப்ப என் கண்ணுல அங்க நடந்த கண்றாவிலாம் பட்டுத் தொலைச்சிடுச்சு”
ஓ! சற்று முன்னர் அலுவலக வாயிலில் சங்கவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கார் கிளம்பியதே! அதில் இந்த மனிதர் இருந்தார் போல!
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவனை அங்கிருந்த மூவரில் இருவரின் அதிருப்தி பார்வைகள் குளிப்பாட்டின.
சரபேஸ்வரனைக் கண்டதும் எழுந்தார் மூர்த்தி.
“நான் இன்னும் நடந்ததை உமா கிட்ட சொல்லல… சொன்னா அவ வேதனைப்படுவா… ஏற்கெனவே தைராய்டுல கஷ்டப்படுறவ கிட்ட இதை வேற சொல்லி வேதனைப்படுத்தணுமானு பாக்குறேன்… ஈஸ்வரன் கிட்ட சொல்லி வைங்க மாமா”
அவனது தீப்பார்வையைச் சமாளிக்க முடியாதவராகக் கிளம்பினார் மூர்த்தி.
அவர் சென்றதும் சரபேஸ்வரனின் தந்தை சாரங்கபாணி மைந்தனிடம் என்னடா இதுவெனப் பேச்சை ஆரம்பித்தார்.
“இந்தாளை பத்தி நான் அவ்ளோ சொல்லியும் நீங்க நம்பலல்ல… இப்ப இவன் என்னைப் பத்தி சொன்னதும் விசாரிக்க வர்றிங்க… ஏன்பா இப்பிடி?”
“என்ன இருந்தாலும் அவருக்கு நம்ம வீட்டுப்பொண்ணைக் கட்டிக்குடுத்திருக்கோம் ஈஸ்வரா… சட்டுபுட்டுனு விலக்குற பந்தமா இது?”
இப்படி சொன்னது சாரங்கபாணி இல்லை. அவரது மனைவியும் சரபேஸ்வரனின் அன்னையுமான குழலி.
“என்னமோ நேத்து கட்டிக் குடுத்த மாதிரி பேசுறம்மா நீ… அக்காவுக்குப் பையன் பிறந்து அவனும் டென்த் படிக்குறான் இப்ப… இன்னும் இந்தாளுக்குப் பயப்படணுமா?”
“உன் அக்காவ நினைச்சுப் பாருய்யா”
சரபேஸ்வரனின் கோபம் குறைந்தது. அவனுக்கு உமாவின் மீது அவ்வளவு பாசம். அவளுக்காகத் தான் கண்ட கழுதையை எல்லாம் அவன் மாமா உறவுமுறை கொண்டாடி தொலைய வேண்டியுள்ளது. இல்லையேல் இந்நேரம் மூர்த்தியை அவன் ஒரு மனிதனாகக் கூட மதித்திருக்க மாட்டான்.
இருப்பினும் தனது பெற்றோர் எப்போதும் உமாவுக்காக மட்டுமே யோசிப்பதாகத் தோன்றியது.
“அக்கா மட்டும் தான் உங்க வயித்துல பிறந்தாளாம்மா? நான் உங்க பிள்ளை இல்லையா? என் சந்தோசம் துக்கத்தைப் பத்தி இங்க யாருக்குமே கவலை இல்லையா?”
கசந்த குரலில் கேட்டவனை எப்படி சமாதானப்படுத்துவது எனக் குழலிக்கும் சாரங்கபாணிக்கும் தெரியவில்லை.
மருமகன் சொன்னபடி அவன் மீண்டும் சங்கவியிடம் பழக ஆரம்பித்திருக்கிறான் என்றால் கட்டாயம் மகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சனை செய்வாள். குடும்பத்தின் நிம்மதி பறிபோய்விடும்.
அவர்கள் கவலையில் ஆழ்ந்துவிட தனது அறைக்குள் போன சரபேஸ்வரனோ அலுவலகைப்பையை படுக்கையில் வீசிவிட்டு அமர்ந்தான்.
என்னென்னவோ யோசனைகள்! ஏதேதோ வருத்தங்கள்! வரிசைக்கட்டி மனக்கண்ணுக்குள் வரப் பெருமூச்சோடு எழுந்தான்.
ஓராண்டாகச் சீண்டிக் கூடப் பார்க்காத பெட்டி ஒன்று அவனது படுக்கைக்குக் கீழே இருக்கும். அதை எடுத்துத் திறந்தவன் பொக்கிசமான நினைவுகளைத் தேக்கி வைத்திருந்த லாங் சைஸ் நோட்டு ஒன்றை எடுத்தான்.
எஸ்.பி. சரபேஸ்வரன்
சி.எம்.ஏ இண்டர்
எகனாமிக்ஸ் நோட்
முன்பக்கத்தை விட்டுப் பின்னாலிருந்து புரட்டினான். நான்காண்டுகளுக்கு முன்னர் கவிதையென நினைத்து அவனது பேனா பிரசவித்த கிறுக்கல்கள் அங்கே இருந்தன.
நெஞ்சோடு அந்தக் கவிதை பக்கங்களைச் சேர்த்தணைத்து படுக்கையில் விழுந்தவனின் கண்கள் அந்நாளின் நினைவுகளில் கலங்கிப் போயின.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

