“காலையில ரஷ் அவர்ஸ்ல பஸ்ல போயிருக்கிங்களா? சில பேருக்குச் சீட் கிடைக்கலனு வருத்தம்… இன்னும் சில பேருக்குச் சீட் கிடைச்சும் அது விண்டோ சீட்டா இல்லையேங்கிற வருத்தம்… கண்டக்டருக்குக் கால் வைக்க இடமில்லனு வருத்தம்… வருத்தமில்லாம பஸ்ல போறதை என்ஜாய் பண்ணுறவங்க ஃபூட்போர்ட்ல நிப்பாங்க… வாழ்க்கையும் இப்பிடி தான்… எல்லாம் கிடைச்சவங்களுக்கு இதை விட பெஸ்ட் வேணும்னு ஆசை வரும்… எதுவுமே கிடைக்காதவங்களுக்குப் பொறாமை வரும்… வாழ்க்கைய அதோட போக்குல வாழுறாங்கல்ல, அவங்க தான் கிடைச்சதை ரசிச்சு வாழத் தெரிஞ்சவங்க”
–சங்கவி
பருவமழை ஆரம்பித்ததன் அறிகுறியாக மூன்று நாட்கள் வானம் சூரியனை மறைத்துக் கருமேகப்புடவை கட்டியிருந்தது. மூன்று நாட்களாக மெல்லிய தூறலாகப் பெய்து கொண்டிருந்த மழையின் விளைவால் ஜில்லிட்டுப் போயிருந்தது நதியூர்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆர்ப்பாட்டமற்ற கிராமம். காலை எட்டு மணி எனக் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாதளவுக்கு மழையின் ஆக்கிரமிப்பு சூழ்நிலையை மாற்றியிருந்தது.
கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு வேலைக்குச் செல்லும் மக்கள், அங்குள்ள பள்ளிகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களால் நிரம்பியிருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள் சங்கவி.
அளவெடுத்துத் தைக்கப்பட்ட காட்டன் சுடிதார், வரிவரியாய் விரித்துப் பின் செய்யப்பட்டிருந்த துப்பட்டாவில் அழகியாகத் தெரிந்தாள். நெற்றியில் புருவமத்தியில் கருப்பாய் சிறிய பொட்டு, காதில் பட்டாம்பூச்சி வடிவத்தில் சிறிய தங்கத்தோடு, இடது கை மணிக்கட்டில் அவளது தந்தை கல்லூரி படிக்கும்போது வாங்கி கொடுத்த இளம் ரோஜா வண்ண மெட்டல் ஸ்ட்ராப் டைட்டன் கடிகாரம், தோளில் பெரிய ஹேண்ட் பேக் இவ்வளவு தான் அவளது அலங்காரம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கம்மல் தவிர வேறு நகைகள் அணிய அவள் பிரியப்படுவதில்லை. எனவே அவளுக்காக அவளது அன்னை ஆசையாக வாங்கி வைத்த வளையல்களும், கால் கொலுசும் வீட்டிலிருந்த பீரோ லாக்கரில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

தூறல் தலைமீது படாதவண்ணம் குடை பிடித்தபடி பேருந்து நிறுத்தத்துக்குள் வந்தவள் குடையை மடக்கியபோது அருகிலிருந்த பெண்மணி நேரம் என்ன என்று கேட்டார்.
“எட்டு பத்துக்கா”
பதிலளித்தபடி ஹேண்ட்பேக்கில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
வால்பேப்பராகத் தரிசனம் கொடுத்த திருப்பதி பாலாஜியைப் பார்க்கும்போது பாசிட்டிவிட்டி பரவியது அவளுக்குள்! இஷ்ட தெய்வத்தைப் பார்த்தால் அனைவருக்கும் உண்டாகும் உணர்வு தானே இது!
முகப்புத்தகத்தில் ‘Tamilnadu Weatherman’ பிரதீப் ஜானின் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் பருவமழை குறித்த பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தாள்.
பேருந்து வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. நகரப்பேருந்துகள் மட்டுமே நிற்கும் கிராமம் அது. விருட் விருட்டெனப் பச்சைவண்ணத்தில் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையேயான புறநகரப் பேருந்துகள் கடந்து போனாலும் அங்கே நிற்பதில்லை.
வெறுமெனே நின்று வேடிக்கை பார்ப்பதை விட முகப்புத்தகத்தில் மூழ்கிவிடலாமென முடிவு செய்தவளின் செவிகள் மட்டும் சுற்றி கேட்கும் பேச்சுகளைக் கவனித்தன.
“இன்னைக்கு லீவ் விட்டா நல்லா இருக்கும்”
“திருநெல்வேலி கலெக்டர் விடமாட்டாருல… நம்ம பேசாம திருவைகுண்டம் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கலாம்… தூத்துக்குடி கலெக்டர் ரொம்ப நல்லவரு… லைட்டா மழை பெஞ்சாலும் லீவ் விட்டுருவாரு”
மாணவர்களுக்கு மழைக்கான விடுமுறை இல்லையே என்ற வருத்தம்.
வேலைக்குச் செல்லும் பெண்மணிகளில் பலர் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இருக்கும் வசதியான வீடுகளில் வீட்டுவேலை பார்ப்பதற்காகச் செல்பவர்கள்.
இன்னும் சிலர் பாளை மார்க்கெட் மற்றும் டவுன் மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், மீன் விற்க செல்பவர்கள்.
சங்கவி திருநெல்வேலி சந்திப்பில் கைலாசபுரத்தில் இருக்கும் பட்டயக்கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். அவளைப் போல அலுவலக வேலைக்குச் செல்லும் இளம்பெண்களும் பேருந்து எப்போது வருமென வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
இவர்களுக்கெல்லாம் நகர பேருந்து வரப்பிரசாதம். இலவச பயண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அதைத் தான் குறி வைத்து ஏறுவர்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாகப் பேருந்தும் வந்து சேர்ந்தது.
முன்பக்கம் இளம்ரோஜாவண்ணம் பூசிய மகளிருக்கு மட்டும் இலவசமாக இயங்கும் பேருந்து அது.
அதில் மாணவர்களும் வேலைக்குச் செல்லும் பெண்களும் ஏறிக்கொண்டனர்.
சங்கவி அடுத்து வரும் தனியார் பேருந்துக்காகக் காத்திருந்தாள்.
அரசுப் பேருந்தை விட விரைவாகப் போய்ச் சேர்த்துவிடுவதால் அதில் தான் அவள் பதிவாகப் பயணிப்பாள்.
ஐந்து நிமிட இடைவெளியில் ‘ஜங்சன் டூ ஆழியூர்’ என்ற போர்டுடன் தனியார் பேருந்து வந்துவிட மற்ற பெண்களோடு சேர்ந்து ஏறினாள்.
ஆழியூர் நதியூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் கிராமம். நதியூரை விட மக்கள் தொகையும் வசதிகளும் அங்கே அதிகம்.
அரசாங்கம் இயக்கும் இரண்டு நகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் எனப் போக்குவரத்து வசதி நிறைந்த ஊர் அது.
ஆனால் சங்கவிக்கு ஆழியூரின் மலைமீது இருக்கும் சீனிவாச பெருமாளைத் தவிர வேறு எதன் மீதும் யாரின் மீதும் பெரிதாக நல்லெண்ணம் இல்லை.
பேருந்தில் இருக்கையில் அமரப்போனவளைக் கைப்பற்றித் தடுத்தாள் ஒரு பெண்.
“ஜன்னல் வழியா மழைத்தண்ணி தெறிச்சு சீட் ஈரமா இருக்குக்கா”
சங்கவி அப்போது தான் கவனித்தாள்.
“டிக்கெட் டிக்கெட்”
நடத்துனர் வந்துவிட இருவரும் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டனர்.
சங்கவி ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த காட்டன் துணியால் சீட்டைத் துடைத்துவிட்டு ஜன்னலோரம் போய் அமர்ந்தாள்.
அந்தப் பெண்ணையும் அமரச் சொன்னாள்.
“ஆழியூர்ல செம மழை போலக்கா”
பேசியபடியே அமர்ந்தாள் அப்பெண்.
“ம்ம்ம்”
அவ்வளவு தான் பேச்சுவார்த்தை!
மொபைலில் மூழ்கிப்போனாள் அந்தப் பெண்.
“நீங்க கேட்டுக்கிட்டிருக்கிறது சூரியன் எஃப்.எம் 93.5 நெல்லை… கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க… நான் உங்க…”
பேருந்தில் பண்பலை ரேடியோ ஓடிக்கொண்டிருந்தது. ஆர்.ஜே பெண் மழையைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசுவதைக் கேட்டபடி வெளியே தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கவி.
“ரங்கநல்லூர் இறங்க வேண்டியவங்க இறங்குங்க”
நதியூரை அடுத்த கிராமம் ரங்கநல்லூர். ஆழியூரை விடவும் சற்று பெரிய கிராமம் எனலாம். மூன்று கிராமங்களையும் சுற்றியுள்ள குக்கிராமங்களையும் உள்ளடக்கியது ரங்கநல்லூர் ஊராட்சி.
அங்கே மட்டும் புறநகரப்பேருந்துகள் நிற்கும். எனவே நகர பேருந்துகளில் அவ்வளவாகக் கூட்டம் ஏறாது.
‘என்மேல் விழுந்த மழைத்துளியே’ என ஜெயச்சந்திரனும் சித்ராவும் பாடிக்கொண்டிருந்தனர்.
போகப்போக மழை வேகம் எடுத்தது. பேருந்திலும் மக்கள் கூட்டம் ஏறியது. நிற்பவர்களின் பார்வையில் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இரக்கமற்றவர்களாகத் தோன்றினர்.
அதிலும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இந்தப் பேருந்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் வெளியே அடித்து ஊற்றும் மழையை ரசித்தபடி பயணித்த சங்கவி மாபெரும் பாவியாகத் தோன்றினாள்.
மழைக்கால பேருந்து பயணங்களின் ரசிகை அவள். ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் போதும். வேறெதிலும் அவளது கவனம் பதியாது.
எனவே தான் ஆடிட்டர் முரளி அவளது மொபைலுக்கு அழைத்ததையும் கவனிக்கவில்லை சங்கவி.
கிருஷ்ணாபுரம், வி.எம் சத்திரம் எனப் பேருந்து ஒவ்வொரு ஊராக நின்று கிளம்பி திருநெல்வேலி ஜங்சனில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தின் வெளியே நின்றபோது மணி ஒன்பது.
பேருந்து நிலையத்திலிருந்து நயினார் காம்ப்ளக்ஸ் வழியே செல்லும் சாலையில் நடந்து இரட்டைப்பாலத்தின் அடிப்பகுதியைக் கடந்து ‘முரளி அண்ட் அசோசியேட்ஸ்’ நிறுவனம் அமைந்திருக்கும் கைலாசபுரத்தை அவள் அடைந்தபோது மணி ஒன்பது ஏழு.
இரண்டு மாடிகளுடன் பளபளத்த கட்டிடத்தின் மேல்தளம் முழுவதும் முரளி அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கானது.
ஒன்பதரைக்குத் தான் நிறுவனம் ஆரம்பிக்கும். சீக்கிரமாக வரும் சங்கவி கையோடு கொண்டு வந்த காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு தனது இருக்கையில் அமர்வது வழக்கம்.
வருமானவரி தாக்கல், டி.டி.எஸ் மற்றும் ஜி.எஸ்.டி வரி தாக்கல்களின் இறுதி நேரங்களில் மட்டும் காலை ஏழு மணிக்கு நிறுவனம் ஆரம்பித்துவிடும்.
என்ன செய்வது? கிளையண்டுகளுக்கு கடைசி நேரத்தில் தான் வரிகளைப் பற்றிய ஞாபகம் வரும்!
நிறுவனத்திற்குள் சங்கவி நுழைந்தபோது அங்கே கணக்காளராகப் பணியாற்றும் சீதா வந்திருந்தார்.
“என்னக்கா சீக்கிரமே வந்துட்டிங்க?”
ஹேண்ட்பேக்கைக் கழற்றியபடி கேட்டாள் சங்கவி.
“இன்னைக்குச் செவ்வாய்கிழமைல்ல… அதான் சாலைக்குமாரசாமி கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் சங்கவி… விபூதி எடுத்துக்க”
விபூதியை பூசிக்கொண்டவளிடம் அன்று மதியம் அவளுக்குச் சொதி சாப்பாடு என விளையாட்டாகக் கூறினார் சீதா.
தேங்காய் பாலின் தித்திப்போடு இருக்கும் சொதி திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற உணவு. அது சங்கவிக்குப் பிடித்தமானதும் கூட.
“எப்பவும் வெள்ளிக்கிழமை தானே சொதி இருக்கும்? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”

“என் நாத்தனார் தூத்துக்குடில இருந்து வந்திருக்குது… காத்தாலயே என் மாமியாருக்குக் கால் தரையில நிக்கல… இன்னைக்கும் சாம்பாரை வச்சேன்னா இதை மனசுல வச்சுக்கிட்டு அந்தம்மா சண்டை போடும்… எதுக்கு வம்புனு காலையில எழுந்திருச்சு சொதி செஞ்சிட்டேன்… ஏன் சீக்கிரம் வந்தேன்னு கேட்டல்ல? டாண்னு எட்டரைக்கு என் நாத்தனாரும் அவ புருசனும் வந்தாச்சு… இனிமே அங்க இருந்தோம்னா அம்மையும் மவளும் அடிக்கிற லூட்டிய பாக்க என்னால முடியாதுனு சீக்கிரமா கிளம்பி வந்துட்டேன்… நம்ம புகுந்தவீடுனு பேரு தான், நாத்தனார் வந்துட்டா மருமகள் சொல்லு எடுபடாது அங்க”
சங்கவிக்கு அந்த வார்த்தை எதையெதையோ நினைவூட்டியது.
தலையை உலுக்கி அந்நினைவுகளைத் துரத்தியவள் “நீங்க சொல்லுறது சரி தான்கா… கல்யாணம் ஆகி புகுந்தவீட்டுக்குப் போனாலும் பிறந்தவீட்டுல உடன்பிறந்தான் பொண்டாட்டி நிம்மதியா இருந்தா நாத்தனார் வர்க்கத்துக்கு மூக்கு வேர்த்துடும்” என்றாள் கசப்புடன்.
“நூத்துல ஒரு வார்த்தை சங்கவி… சரி அதை விடு… ஆடிட்டர் சார் உன் கிட்ட முக்கியமா பேசணும்னு கால் பண்ணுனாராம்… நீ அட்டெண்ட் பண்ணலையாமே”
“அச்சோ”
பதறிப்போய் சைலண்டில் கிடந்த மொபைல் திரையை உயிர்ப்பித்தாள் சங்கவி.
அதில் ஆடிட்டர் முரளி மனோகரனிடமிருந்து இரண்டு தவறிய அழைப்புகள் வந்திருந்த நோட்டிபிகேசன் இருக்கவும் தாமதிக்காமல் அவரது எண்ணுக்கு அழைத்தாள்.
“குட் மானிங் சார்… போன் சைலண்ட்ல கிடந்துச்சு… அதான் நீங்க கால் பண்ணுனது தெரியல”
“இட்ஸ் ஓ.கேம்மா… நீ ஆபிஸுக்கு வந்துட்டியா?”
“ஆமா சார்”
“அவசரவேலை ஒன்னு இருக்கு சங்கவி… நீ தானே திருப்பதி மைன்ஸோட டி.டி.எஸ், ஜி.எஸ்.டி எல்லாம் பாக்குற?”
“ஆமா சார்… எதுவும் பிரச்சனையா?”
“பிரச்சனை தான்மா… திருப்பதி மைன்சுக்குப் புதுசா ஒரு அக்கவுண்ட்ஸ் மேனேஜர் வந்திருக்கார்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சந்தானம் சார் சொன்னார்ல.?”
“ஆமா சார்”
“அந்த மனுசன் இனிமே டி.டி.எஸ், ஜி.எஸ்.டி ஃபைலிங் எல்லாமே அவங்க ஆபிஸ்ல உள்ள ஜூனியர் அக்கவுண்டண்ட் தான் பாக்கணும்னு சொல்லிட்டாராம்… எதுக்குத் தண்டமா நமக்கு ஃபீஸ் குடுக்கணும்னு கேட்டிருக்கார்”
சங்கவி திகைத்துப் போனாள்.
“அக்கவுண்டண்டுக்கு ஃபைலிங் பத்தி பெருசா நாலெட்ஜ் இல்லனு சந்தானம் சார் சொன்னாரே?”
“ஆமாம்மா… டேக்ஸ் ஃபைலிங் பத்தி தெரியாம ஏன் அக்கவுண்டண்டா வந்திங்கனு அக்கவுண்ட்ஸ் மேனேஜர் திட்டுறாராம்… வயசானவர்லாம் இல்ல… பையன் சி.எம்.ஏ முடிச்சிட்டு அக்கவுண்ட்ஸ் மேனேஜரா வந்திருக்கான் போல… அவன் எதிர்பாக்குற பெர்ஃபெக்சனை ஜூனியர் அக்கவுண்டண்டால குடுக்க முடியல… ஃபைலிங் ஃபீஸ்னு வருசம் இவ்ளோ அமவுண்ட் வெளிய போகுதுனு திட்டுனானாம்”
“இப்ப நான் என்ன செய்யணும் சார்?”
“நீ அபிஷியலா அவனை மீட் பண்ணி நம்ம இத்தனை வருசம் எவ்ளோ பெர்ஃபெக்டான சர்வீசை குடுத்தோம்னு பேசிப் பாரு… அப்பிடியும் அவன் ஒத்துக்கலனா அங்க இருக்குற ஜூனியர் அக்கவுண்டண்டுக்கு எப்பிடி ஜி.எஸ்.டி, டி.டி.எஸ் ஃபைல் பண்ணணும்னு சொல்லிக் குடுத்துடு”
“சார்?”
“வேற என்னம்மா செய்யுறது? ஃபைலிங் ஃபீஸ் பத்தி யோசிச்சோம்னா திருப்பதி மைன்ஸ் மாதிரி பெரிய கிளையண்டை நம்ம இழந்துடுவோம்… பேசிப் பாரு… ஒத்து வந்தா நல்லது… இல்லனா அவங்க அக்கவுண்டண்டுக்குச் சொல்லிக் குடுத்துடு… நம்ம மேல அவங்களுக்கு நல்ல அபிப்பிராயம் வரணும்… அவ்ளோ தான்”
“சரி சார்”
பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சங்கவி.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகத் திருப்பதி மைன்ஸ் எனும் சுண்ணாம்பு குவாரி நிறுவனத்தின் டி.டி.எஸ், ஜி.எஸ்.டியோடு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவருடைய வருமானவரி கணக்குப்பதிவையும் அவள் தான் கவனித்து வருகிறாள்.
இதுவரை ஒரு தவறு கூட நேர்ந்ததில்லை.
ஆடிட்டர் முரளி மனோகர் தன்னிடம் பணியாற்றும் உதவியாளர்களிடம் கிளையண்ட் நிறுவனங்களைப் பகிர்ந்துகொடுத்துவிடுவார்.
அப்படி தான் சங்கவியிடம் திருப்பதி மைன்ஸ் போலக் கிட்டத்தட்ட பத்து நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் வரிதாக்கல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஒரு நிறுவனத்தை இழப்பது அவளுக்கு எத்துணை பெரிய இழப்பு!
அவளைப் போல அங்கே பணியாற்றும் இதர ஐந்து உதவியாளர்கள் வந்து துக்கம் விசாரிப்பது போலப் பேசவும் சங்கவியால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.
வெளிவேலைகளை முடிக்க நியமிக்கப்பட்டிருந்தவரான சாந்தமூர்த்தியிடம் அலுவலகத்தில் பொது உபயோகத்துக்காக இருக்கும் ஸ்கூட்டி சாவியை வாங்கிக்கொண்டவள் திருப்பதி மைன்சின் அலுவலகம் இருக்கும் ஸ்ரீபுரத்துக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.
“ஹெல்மெட் போட்டுக்கம்மா… ஸ்பீடா ஓட்டாத”
அக்கறையுடன் ஹெல்மெட்டைக் கொடுத்தார் சாந்தமூர்த்தி.
சீதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் வரவேற்பை அடைந்தபோது ரிசப்சனிஸ்டான பூரணியைக் காண நேர்ந்தது.
“நீ போற வேகத்தைப் பாத்தா அக்கவுண்ட்ஸ் மேனேஜரோட சட்டையைப் பிடிச்சுக் கேள்வி கேப்ப போலயே”
விளையாட்டாகக் கேட்டாள் அவள். முந்தைய தினத்தன்று மாலை திருப்பதி மைன்சின் பொதுமேலாளர் சந்தானம் அனைவரின் முன்னிலையில் தானே அக்கவுண்ட் மேனேஜரின் தீர்மானத்தைப் பற்றி ஆடிட்டரிடம் பேசினார்.
அந்நேரத்தில் அனைவருக்கும் பப்ஸ் வாங்குவதற்காக அரசன் பேக்கரிக்குச் சீதாவோடு போயிருந்த சங்கவி, அன்னைக்கு உடல்நலக்குறைவு எனப் பக்கத்துவீட்டு லெட்சுமி மொபைலில் தகவல் சொன்னதும் பதறிப்போனாள்.
வீட்டுக்குக் கிளம்புபவளை வருத்தப்படவைக்க விரும்பாமல் யாரும் அவளிடம் சந்தானத்தின் பேச்சைக் கூறவில்லை.
“நான் இங்க உருப்படியா வேலை பாக்குறது உனக்குப் பிடிக்கலயா பூரணி?”
“நீ என்ன செஞ்சாலும் நம்ம ஆடிட்டர் சார் உனக்குச் சப்போர்ட் பண்ணுவார் சங்கவி… எதுவா இருந்தாலும் நிதானமா பேசு”
“சரிங்க மேடம்”
முரளி அண்ட் அசோசியேட்சின் பணியாளர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே பழகி வருவதால் இம்மாதிரியான விளையாட்டுப்பேச்சுகள் அவர்களுக்குள் சகஜம்.
எப்படியாவது அக்கவுண்ட்ஸ் மேனேஜரின் மனதை மாற்றியே தீருவேன் எனச் சபதம் எடுத்த சங்கவி ஸ்கூட்டியின் சாவியைத் திருகி ஸ்ரீபுரத்துக்குக் கிளம்பினாள்.

அவளை அங்கே வரவழைக்கத் திட்டம் போட்டவன் எப்படி சங்கவியின் பேச்சைக் கேட்பான்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

