“இப்ப எல்லாம் என் மனசு புதுசா பூஞ்சிறகு முளைச்ச பறவையாட்டம் சிறகடிச்சிட்டே இருக்கு. இன்னும் கொஞ்சம் நாள்தான். அப்புறம் நிரந்தரமா என் உலகத்துக்குள்ள புவன் வந்துடுவார். நட்பா, விளையாட்டா பேசி சிரிச்ச பொழுதுகளை விட என் ஆன்மாவோட பாதியா அவர் கூட பார்வையில பேசிக்கிற தருணங்கள் இன்னும் அழகா இருக்கு. எப்பவுமே அவரோட குரல் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. சிரிக்குறப்ப அவரோட கண்ணோரம் சுருங்குமே, அதுல என்னோட மொத்த காதலும் ஜீவிச்சிருக்குறதா தோணுது. என் அன்பான சாம்ராஜ்ஜியத்தோட ராஜாவா, என் அழகான மனவானத்துல புதுசா மின்னி மின்னி ஜொலிக்கிற குட்டி நட்சத்திரமா அவர் வரப்போற நாளுக்கான கவுண்ட் டவுன் எனக்குள்ள நடந்துட்டிருக்கு. எதையும் லாஜிக்கோட அணுகுற ஆதிராவை எமோசன்ஸ் கூட உறவாட விட்டுட்டார் இந்த புவன்”
-ஆதிரா
காருகுறிச்சி களக்கோடி சாஸ்தா கோவில் அன்று திருவிழா கோலம் கொண்டிருந்தது. அன்றைய தினம் சாஸ்தாவுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருந்தது அங்கே.
மக்கள் பயபக்தியோடு சந்தன காப்பு அலங்காரத்தில் மலர்மாலைகளுடன் காட்சியளித்த சாஸ்தாவைப் வணங்கிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களில் வினாயகத்தின் குடும்பமும் அடக்கம். வினாயகம் எழிலரசியோடு ஆதிராவும் மருதநாயகியும் அமர்ந்து லட்சார்ச்சனையைக் கண் குளிரப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் மந்திர உச்சாடனங்களும், மறுபக்கம் நாதஸ்வரம் தவிலும் முழங்க கோவிலில் தெய்வீகமணம் கமழ்ந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அப்போது கோவில் சேவா கமிட்டி உறுப்பினர் ஒருவர் வினாயகத்தைத் தனியே அழைத்துப் போனார்.
அங்கே கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த பேச்சு கோவில் சேவா கமிட்டியினர் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
களக்கோடி சாஸ்தாவைக் குலதெய்வமாக வணங்கும் குடும்பத்தார் பட்டியல் அவர்களிடமிருந்தது. கோவிலைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்த முப்பது இலட்சம் வரை செலவாகும் எனக் கணக்கிட்டிருந்தார்கள்.
அதன்படி ஒவ்வொரு குடும்பத்திடமும் பத்தாயிரம் வரி வசூலிக்கலாமெனப் பேசிக்கொண்டிருந்தார்கள் சேவா கமிட்டியினர்.
“அப்பவும் நம்ம போட்ட கணக்குல துண்டு விழும்” என சேவா கமிட்டியின் தலைவர் சொல்ல

“பத்தாயிரம் வரி பொதுவானது. அதைத் தாண்டி நன்கொடை குடுக்கத் தயாரா இருக்குறவங்க கிட்டவும் தகவல் சொல்லி கேட்டுப் பாக்கலாம்” என்றார் சேவா கமிட்டியின் உறுப்பினர் ஒருவர்.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கவனித்த வினாயகம் “என் பொறுப்புக்கு ஐந்து இலட்சம் குடுத்துடுறேன்” என்று சொல்ல அங்கே இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி.
“உங்க மனசு எல்லாருக்கும் இருந்தா ஜூன் மாசமே கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கலாம் வினாயகம்” என்றார் சேவா கமிட்டி தலைவர்.
“நம்மளை வாழ வைக்குறவர் அவர்தானே? அவரோட அருளால மகன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது. மகளுக்கும் நல்ல இடத்துல கல்யாணம் நடக்கப் போகுது. அவருக்கு என் நன்றிய வேற எப்பிடி காட்டுவேன் முத்தரசன்? எப்ப குடுக்கணும்னு சொல்லுங்க! குடுத்துடுறேன்” என்றார் வினாயகம் மகிழ்ச்சியோடு.
அந்நேரம் இன்னொரு சேவா கமிட்டி உறுப்பினர் வைத்தியநாதனைக் குடும்பத்தோடு அழைத்து வர வினாயகத்தின் முகத்தில் அத்துணை அதிருப்தி.
“சார்வாளோட மகன் விக்கிரமசிங்கபுரத்துல தொழில் ஆரம்பிச்சிருக்கான். அடுத்த வெள்ளி பொங்கல் வைக்க வர்றதா பேசிக்கிட்டிருந்தார்”
வைத்தியநாதனின் முகத்திலும் தர்மசங்கடம்!
வினாயகத்துக்கு அங்கே நிற்க பிடிக்கவில்லை.
“சரிங்க முத்தரசன்! நம்ம பேசுனபடி டொனேசனையும் வரியையும் நானே கோவில் கமிட்டி ஆபிசுல வந்து குடுத்துடுறேன்” என்று சொல்லி கரங்கூப்பி வணங்கி விடைபெற்றார் அங்கிருந்து.
மனைவியிடம் வைத்தியநாதன் குடும்பம் வந்திருப்பதைச் சொல்லவும் எழிலரசியின் முகத்தில் கோபத்தின் தீற்றல்!
“அவங்களுக்கும் சாஸ்தாதானே குலதெய்வம்? அதனால வந்திருப்பாங்க” என்று சொன்னாலும் எழிலரசியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
சுஜாதா கொஞ்சநஞ்சமா பேசினாள்? அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?
“ஆதி கிட்ட எதையும் காமிச்சுக்காத. கோவில்ல நம்ம உறவுக்காரங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க முன்னாடி தேவையில்லாத பேச்சு எதுவும் வேண்டாம் எழில்”
“சரிங்க! பூஜை முடிஞ்சதும் கிளம்பிடலாம்”
“ம்ம்”
நல்லவேளையாக ஆதிராவும் மருதநாயகியோடு அங்கே நடந்துகொண்டிருந்த லட்சார்ச்சனை பற்றி பேசிக்கொண்டிருந்ததால் இவர்களின் பேச்சை அவள் கவனிக்கவில்லை.
லட்சார்ச்சனை முடிந்ததும் கோவில் கமிட்டி சார்பில் கோவிலுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்யும் பக்தர்களின் குடும்பங்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு சாஸ்தாவின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பூக்கள், அவரது திருவுருவப்படத்தோடு அங்கவஸ்திரம் ஒன்றும் தாம்பாளத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அது சிறிய கோவில்தான் என்பதால் ஒருவர் பார்வைக்கு இன்னொருவர் படாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆதிராவும் வைத்தியநாதனும் அலமேலுவும் தாம்பாளத்தை வாங்குவதைப் பார்த்துவிட்டாள்.
பார்த்தவளிடம் பெரிதாக எந்த எதிர்வினையுமில்லை. தனக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என ஆகிவிட்டது. இனி அவர்கள் எங்கே வந்தாலும் போனாலும் தனக்கென்ன என்ற மனநிலை.
அவர்களுக்குத்தான் அவளைக் கடக்க சங்கடமாக இருந்தது.
அலமேலு கணவரிடம் கண் காட்டியவர் “அந்தப் பொண்ணு கிட்ட பேசிட்டு வந்துடட்டுமா?” என்று கேட்க
“இப்ப எதுக்கு அனாவசியமா பேசணும்? இது சரியான சமயம்னு தோணல” என்று மறுத்தவர் அலமேலுவைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டார்.
மருதநாயகி காரில் போகும்போது கூட இதைக் குறிப்பிட்டார்.
“தப்பு செஞ்ச குற்றவுணர்ச்சி இன்னும் தீரல” என்று அவர் சொல்ல
“சரியா சொன்னிங்க அத்தை. அவங்க மக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனப்ப வேடிக்கை பாத்தாங்கல்ல, அந்தக் குற்றவுணர்ச்சி இன்னும் அவங்களைச் சங்கடப்படுத்துது” என்றார் எழிலரசி.
ஆதிரா எதுவும் பேசவில்லை. வினாயகமும் அவளிடம் எதையும் விசாரிக்கவில்லை.
சொன்னபடி ஒரு வாரம் கடந்ததும் களக்கோடி சாஸ்தா கோவில் சேவா கமிட்டியிடம் வரியோடு சேர்த்து நன்கொடை தொகையையும் கொடுத்தார் வினாயகம்.
திருமணத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்க ஒவ்வொரு நிகழ்வாக சந்திரவிலாசத்திலும், என்.எஸ்.என் நிவாசத்திலும் வரிசையாக நடந்தேறியது.
திருமணத்துக்குப் பட்டு வாங்குவதற்கு ஆரெம்கேவிக்குச் சிவகாமியும் மலர்விழியும் ஆதிராவின் குடும்பத்தை அழைத்திருந்தார்கள்.
ஒவ்வொருவருக்கும் விருப்பமான வண்ணத்தில் பட்டுப்புடவைகள் எடுத்தாயிற்று. மிருணாளினியிடம் முந்தைய நாள் இரவே ஆதிரா என்ன நிறத்தில் புடவை எடுக்கவேண்டுமெனக் கேட்டிருந்தாள்.
அவளுக்கு, மலர்விழிக்கு, ஸ்வேதாவுக்கு ஒரே வண்ணத்தில் வாங்கிக்கொண்டார்கள். மலர்விழியின் அன்னை, சிவகாமி, எழிலரசி, உலகம்மை நால்வருக்கும் ஒரே வண்ணம். தலைமுறைகளைக் கண்டறிய இந்த ஏற்பாடாம்!
பேசி வைத்தவர்கள் மலர்விழியும் மிருணாளினியும் ஆதிராவும்தான்.
மணப்பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை என்ன நிறமெனத் தேடிக்கொண்டிருக்கையில் அழகான கிரிம்சன் வண்ண பட்டு ஆதிராவின் பார்வையில் விழுந்தது.
இயற்கை முறையில் சாயமேற்றப்பட்ட பட்டுப்புடவையாம் அது உப்படா பாணியில் ஜரிகையால் உடலெங்கும் ஜம்தானி வடிவமைப்பு நிரம்பியிருக்க, இருப்பக்க பார்டரின் அருகேவும் மீனாகாரி பாணி கிளிகள் கொஞ்சுவது போல நெய்யப்பட்டிருந்த அந்தப் புடவையிலிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை ஆதிராவால்.
உடலெங்கும் கிரிம்சன் சிவப்பும், ஜரிகை பார்டரின் வெளிப்புற ஓரத்தில் மட்டும் சிறிய கோடாக அடர்ப்பச்சை நிறமும் இருந்த புடவைக்கு ப்ளவுசும் அடர்ப்பசையில் ஜரி வேலைபாட்டுடன் அமைந்தது.
விற்பனைப்பெண் அந்தப் ப்ளவுஸ் துணியை வைத்து புடவையை ஆதிராவின் உடலில் கட்டுவது போல வைத்துக் காட்டினார். கண்ணாடியில் தெரிந்த பிம்பம் அத்துணை அழகு!
“ரொம்ப அழகா இருக்கு ஷேரி”
அனைவர் கண்களும் அவள்மீதுதான்!
அந்த நேரத்தில் ஆதிராவோடு சேர்த்து அந்தக் கண்ணாடியில் இன்னொரு பிம்பமும் விழுந்தது.
மஞ்சள் கலந்த வெண்மையில் ஃபார்மல் ஷேர்ட்டும், சேஜ் பச்சையில் சினோசும் அணிந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தது அந்தப் பிம்பம்.
“புவன்”
கண்களில் ஆச்சரியமும் நாணமும் குடியேற ஆதிரா சிரிக்க அங்கிருந்தவர்களுக்கோ பூரிப்பு அடங்கிய பாடில்லை.
“மலர் பொண்ணே! இங்க பாரு” என்று சொல்லி மூத்த மருமகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டார் சிவகாமி.
பெரியவர்களின் கவனம் மாறியதும் புதியதொரு சுதந்திர உணர்வு ஆதிராவுக்கும், அவளருகே நின்று கொண்டிருந்த புவனேந்திரனுக்கும்.
“புடவை ரொம்ப அழகா இருக்கு. உனக்காகவே நெய்த மாதிரி” அவளது உயரத்துக்குத் தலையைச் சரித்து காதருகே அவன் சொன்னதும் செந்தூரம் பூசிக்கொண்டன ஆதிராவின் கன்னங்கள்.
சொன்னவனின் கண்கள் சொன்ன செய்திக்கு அந்த வெட்கப்பூச்சில் சரிபாதி பங்குண்டு.

யாரையும் கண்ணோடு கண் பார்க்கும் பெண்ணவளின் விழிகள் மெதுவாகத் தாழ நோக்கியதும் புன்சிரிப்பு அவனிடம்.
இந்த வெட்கத்துக்குப் பரிசு கொடுக்க வேண்டாமா? வில்லங்கமாக யோசித்தவன் அதைச் சொல்லவும் செய்ய சட்டென விழிகளை உயர்த்திக் கண்ணாடியில் தெரிந்த இருவரது பிம்பங்களையும் பார்த்தாள் ஆதிரா.
“எ… என்ன?”
கண்கள் சுற்றியிருப்பவர்களைச் சுற்றிக் காட்ட அதைப் பற்றியெல்லாம் தனக்கென்ன கவலையென தோள்களைக் குலுக்கினான் புவனேந்திரன்.
“புவன்…” கட்டுப்படுத்த முயன்றாள் அவள்.
“ம்ஹூம்” என்றவனின் உதடுகள் அவளது செவிமடலில் குட்டியாய் முத்தமொன்றை பதித்து மீள, ஆதிராவோ மீள முடியாத இடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள்.
யாரும் பார்ப்பதற்குள் நொடிப்பொழுதில் நடந்தேறிய குட்டி முத்தத்தில் யுத்தகளம் கண்டது போல பரபரப்புற்றது அவளது இதயம்.
உணர்ச்சி பிரவாகங்களில் தத்தளித்தவளின் முகபாவனையில் இன்னுமே சிக்கிக்கொண்டான் புவனேந்திரன்.
“நான் விலகிக்கிறேன். இல்லனா கஷ்டம்”
அவன் சொன்ன வார்த்தைகளின் பொருள் உணர்ந்தவள் பக்கவாட்டில் தலையைத் திருப்பி இப்போது அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
“விலகிடுவிங்களா நீங்க?” கண்களில் மிரட்டல் பார்வை.
“இப்ப நான் விலகலனா உனக்குத்தான் சங்கடம்டி” குழைந்த குரலில் சிரிப்பும் கலந்துகொள்ள மிரட்டல் பார்வை மாறி நாணப்பார்வையானது ஆதிராவிடம்.
“முகூர்த்தப்புடவை மட்டும் தனியா செலக்ட் பண்ணிருக்கேன். நீங்க கூட இருந்திங்கனா ரெண்டு பேரும் சேர்ந்து மத்த ட்ரஸ் எல்லாம் செலக்ட் பண்ணலாம். என்ன சொல்லுறிங்க?”
தன்னை வெட்கத்தில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டவனை இயல்பான உரையாடலுக்கு இழுத்து வந்தாள் ஆதிரா.
அவனும் சம்மதித்தான். இருவருமாய்ச் சேர்ந்து மற்ற உடைகள் அனைத்தையும் தேர்வு செய்தார்கள்.
தினசரி அணிவதற்கு சந்தேரி சில்க் காட்டன் சேலைகள், காட்டனில் ப்ரிண்டட் சூட் செட்கள், உடலை உறுத்தாத மங்கலகிரி காட்டன் சேலைகள் என ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து தேர்வு செய்தார்கள்.
புவனேந்திரன் ரிசப்சனுக்கு அணியவிருக்கும் உடையைத் தேர்வு செய்ய ஆதிராவைத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
ப்ளேஸர்கள் அனைத்துமே கச்சிதம்தான். ஆனால் அவனுக்குப் பொருந்துவதை வாங்க அவள் வந்தாக வேண்டுமே!
இருவரும் சேர்ந்து ப்ளேசரைத் தேர்வு செய்துகொண்டிருந்த சமயத்தில் இக்காட்சி ஒரு நபரின் பார்வையில் விழுந்து வைத்தது.
அந்நபர் அவினாஷ்! ஆம்! உடைகள் வாங்கலமென எதேச்சையாக ஆரெம்கேவிக்கு வந்தவன் ஆதிராவையும் புவனேந்திரனையும் ஜோடியாகப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனான்.
“லினன்ல ஷேர்ட் வந்திருக்கு பாருங்க புவன். அதை எடுங்க. இந்த அமேதிஸ்ட் கலர் ஷேர்ட் கூட ப்ளாக் பேண்ட் போட்டா சூப்பரா இருக்கும்”
ஆர்வமாய் அவள் புவனேந்திரனுக்கு ஆடைகளைத் தேர்வு செய்ததைப் பார்த்தவனுக்குள் ஒருவித அலைக்கழிப்பு.
மஸ்டர்ட் மஞ்சளில் கருப்பு பார்டர் வைத்த அழகான காட்டன் சில்கில் அத்துணை கச்சிதமான அழகோடு மிளிர்ந்தவளை மயிரிழையில் தவறவிட்டவனுக்குள் அலைக்கழிப்பும் ஆற்றாமையும் வருவது இயல்புதானே!
இருக்கும்போது தெரியாத மதிப்பு இழந்தபோது தெரிவதுதானே வாடிக்கை! அவினாஷும் வாடிக்கைக்கு அப்பாற்பட்டவன் இல்லையே!
புவனேந்திரனையும் ஆதிராவையும் ஒருசேர பார்த்தவனுக்குத் தனது பாதிப்பின் தீவிரம் இன்னும் அதீதமாய், வேதனையாய் தெரிந்தது.
‘என்னுடன் ஒரு நாள் கூட இப்படி இயல்பாக அவள் உரையாடியதில்லையே!’ மனம் காந்தியது அவனுக்கு.
“இந்த காக்கி பேண்ட் பாருங்க, இதை ஐவரி கலர் ஷேர்ட் கூட சேர்த்துப் போட்டா இன்னும் அட்டகாசமா இருக்கும் புவன்”
“நீ என்னைக் கலர் கலரா ட்ரஸ் போட வைக்க ப்ளான் பண்ணுற”

“எல்லா கலரும் உங்களுக்குச் செட் ஆகும். ட்ரையல் ரூம் போய் போட்டுட்டு வாங்க. அப்பதான் தெரியும்” என்று சொல்லி அவனை ட்ரையல் ரூமுக்குள் தள்ளிவிட்டு மீண்டும் ஆடைகளைத் தேர்வு செய்ய வந்துவிட்டாள்.
வந்த இடத்தில் “எப்பிடி இருக்க ஆதிரா?” என்ற கேள்வியோடு தன்னை எதிர்கொண்ட அவினாஷை ஏறிடக் கூட பிடிக்காமல் விலகப் போனவளை இன்னொரு கேள்வியால் தடுத்து நிறுத்தினான் அவன்.
“ஒரு நாள் கூட இந்த அன்னியோன்யம் உனக்கு என் கூட வந்திருக்குமா?”
‘என்னவொரு அர்த்தமற்ற கேள்வி இது! சொல்லப்போனால் இப்போதைய சூழலுக்கு அவசியமற்ற கேள்வியும் கூட’
எரிச்சல் மூள அவனை உறுத்து விழித்தவள் “தன்னோட இயல்பை அப்படியே ஏத்துக்குற ஆண் கிட்ட மட்டும்தான் ஒரு பொண்ணால அன்னியோன்யத்தோட பழக முடியும் அவினாஷ். இதெல்லாம் உங்களுக்குப் புரியாத விசயம்.” என்று சூடாகப் பதிலடி கொடுத்தாள்.
“அதே போல ஒரு ஆணை அவனோட இயல்போட ஏத்துக்குற கடமை பொண்ணுக்கும் இருக்குதானே?”
ஆதிராவிடம் மெல்லிய கர்வச்சிரிப்பு.
“இப்ப கூட நீங்க அதைக் கடமையா திணிக்கப் பாக்குறிங்க. காதலுக்குள்ள கடமை எங்க இருந்துங்க வருது? எதுவுமே இயல்பா வரணும் அவினாஷ். கடமையாவோ பொறுப்பாவோ யாரோ ஒருத்தர் நம்ம மேல திணிக்கக்கூடாது. நானும் புவனும் இந்தப் புள்ளில ஒரே மாதிரி சிந்திக்குறவங்க. அதனால எங்களுக்குள்ள வைப் செட் ஆகிடுச்சு. நீங்க உங்களை மாதிரி எல்லாத்தையும் கடமையா நினைக்கக் கூடிய ஒருத்தியைச் சீக்கிரமே சந்திக்க வாழ்த்துகள்.”
பேசி முடித்த பிற்பாடே ‘காதல்’ என்ற வார்த்தையை உச்சரித்தது ஆதிராவின் புத்தியில் உறைத்தது. மெல்லிய வெட்கம் அவளைச் சூழ்ந்துகொண்ட நொடியில் ட்ரையல் ரூமிலிருந்து புவனேந்திரனும் வந்துவிட்டான்.
‘ஐயோ அவினாஷுடன் என்னைச் சேர்த்துப் பார்த்துவிடுவானோ?’ என்ற பயமெல்லாம் ஆதிராவுக்குத் துளியும் இல்லை.
‘என்னைத் தெரியும் என்னவனுக்கு’ என்ற கர்வம் முகத்தில் ஜொலிக்க “வாவ்! நான் சொன்னேன்ல இந்தக் கலர் காம்பினேசன் நல்லா இருக்கும்னு. சூப்பரா இருக்கிங்க புவன்” என்று ஆர்ப்பரிப்போடு அவனை வரவேற்றாள்.
அவளது விழிகளில் அவனது கச்சிதமானத் தோற்றத்தை மெருகூட்டிக் காட்டிய ஆடைகளை ரசிக்கும் பாவனை குடியேறிவிட இனி அவினாஷைக் கவனிக்க அவளுக்கு நேரமேது?
ஆனால் புவனேந்திரனின் கழுகு கண்களுக்கு அவன் தப்பவில்லை. ஏதோ ஒரு அசௌகரியம் அவனைத் தன்வசப்படுத்த முயன்றது. அதை விலக்கித் தள்ளிவிட்டு “ஹலோ அவினாஷ்” என்றான்.
அவினாஷும் முகம் மாறியவன் சங்கடத்தோடு “ஹாய்” என்றான். சிரிக்க முயன்று பரிதாபமாகத் தோற்றான். சற்று முன்னர் ஆதிராவிடம் குற்றவுணர்ச்சியை வரவழைக்க முயன்றவனுக்குப் புவனேந்திரனிடம் பேச திராணியற்றுப் போனது.
ஆனாலும் விட மனமில்லை.
“நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே நெருக்கமான உறவுல்ல?” என்று இரட்டை அர்த்தத்தோடு அவன் விஷச்சிரிப்பைப் பூசிக்கொண்டு கேட்டதில் புவனேந்திரனின் தாடை இறுகியது. ஆனால் கோபத்தைக் கொட்டி அவனை ஜெயிக்க வைக்கும் விருப்பமில்லை.
அவினாஷை விடவும் சற்று அகலமாகப் புன்னகைத்தவன் ஒரு கரத்தால் ஆதிராவை உரிமையோடு இழுத்துத் தோளோடு அணைத்துக்கொண்டு இன்னொரு கரத்தைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏறிட்டான்.
‘யூ ஆர் அ லூசர்’ என்று சொல்லாமல் சொன்னது புவனேந்திரனின் பார்வை.

அதில் அவினாஷின் முகம் கறுத்தது. விஷச்சிரிப்பு போன இடம் தெரியவில்லை.
“நீங்க சொன்னது சரிதான்! நாங்க தூரத்து உறவுக்காரங்களா இருந்தாலும் முன்னாடி எங்களுக்குள்ள இருந்த நட்பும் நெருக்கமானதுதான். இப்ப எங்களுக்குள்ள இருக்குற காதலும் நெருக்கமானதுதான். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு என் குடும்பத்துக்கு வரப்போறவளை, என்னை நேசிக்கிறவளைத் தூரமா தள்ளி நிறுத்தி, மத்தவங்களுக்கு முக்கியத்துவம் குடுக்குற முட்டாள்தனத்தை நான் செஞ்சேன்னா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போயிடுமே! அப்பிடி செஞ்சா எங்கப்பாவே என் ஷேர்ட் காலரைப் பிடிச்சு என் கிட்ட கேள்வி கேப்பார். வரப்போற மருமகளுக்கும் மகனுக்கும் இடைல வேற ஒரு நபர் நுழையுறதுங்கிறது அவரைப் பொறுத்தவரைக்கும் அசிங்கம். அந்த மாதிரி குடும்ப பின்னணில வந்த நாங்க ரெண்டு பேரும் நெருக்கமா இல்லனாதான் நீங்க ஆச்சரியப்படணும் அவினாஷ்”
‘வெர்பல் செருப்படி என்பது யாதெனில்….’ என்ற வாக்கியத்தைத் தனது கச்சிதமானப் பேச்சால் முடித்துவைத்தான் புவனேந்திரன்.
அவினாஷின் முகத்தில் உணர்ச்சியே இல்லை! அதில் வெட்கி, வெளிறிப்போன பாவனையே!
“ஓ.கே! எங்களுக்கு இன்னும் பர்சேஸ் முடியல. யூ கேரி ஆன் யுவர் ஷாப்பிங்” என்று அவினாஷிடம் சொல்லிவிட்டு ஆதிராவைத் தோளோடு அணைத்தபடியே கேசுவல்ஸ் பக்கம் அழைத்துச் சென்றுவிட்டான் புவனேந்திரன்.
அவனது வலிய கரத்தால் வளைக்கப்பட்டவளுக்குப் புளகாங்கிதத்தில் சிரிப்பு அடங்கவில்லை.
“நல்லா பேசுறிங்க” என்று அவள் பாராட்ட, புவனேந்திரனின் முகத்தில் சிரிப்பு இன்னும் அதிகமாய்!
“உன் கிட்ட கத்துக்கிட்டதுதான்” என்று தலைகுனிந்து சொன்னபோது அவனது கண்களில் காதல் அதீதமாய்!
அவனது அதீதங்களில் ஆழ்ந்து போக பிடித்தமும் பித்தும் கொண்டவளுக்கு இப்போது மட்டும் கசக்கவா செய்யும்! உரிமையாய் அவனது கன்னம் கிள்ளி உதட்டில் முத்தமாய் ஒற்றிகொண்டாள் விரல்களை.
“அதை டேரக்டா இங்கயே குடுக்கலாம்” எனக் கன்னத்தைத் திருப்பிக் காட்டி அவளை நாணக்கடலில் மூழ்கடித்தான் புவனேந்திரன்.
அவன் கன்னத்தில் தன் கரத்தால் செல்லமாய்க் குத்தியவள் “ஆசைதான்” என்று போலியாய் அலுத்துக்கொள்ள அங்கே காதலின் பிரவாகம் இன்னும் கூடுவதாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

