“இன்னிக்குப் புவன் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்குப் பொண்ணு பாக்க சங்கரன்கோவில் போன கையோட இங்க அத்தையும் மாமாவும் வருவாங்கனு மானிங்கே அம்மா சொன்னாங்க. வந்தவர் கிட்ட எப்பவும் போல நிறைய பேசுனேன். அப்ப நான் ஒரு விசயத்தைக் கவனிச்சு ரசிச்சேன். நான் ஏதாவது பேசிட்டே இருப்பேன்ல? அப்ப திடீர்னு நிப்பாட்டிட்டு அவரையே பாத்தேன். அவர் என்னைப் பாத்தபடியேதான் இருந்தார். என் கண்ணையே பாத்துக்கிட்டு, நான் சொல்றதைக் கூர்ந்து கவனிச்சார். ஒரு வார்த்தை கூட மிஸ் பண்ணாம, அவ்ளோ ஈடுபாட்டோட கேட்டுக்கிட்டு இருந்தார். அவர் முகத்துல அவ்ளோ அமைதி. உதட்டோரத்துல, கண்ணுல ஒரு மெல்லிய புன்னகை, ஆனா, அதுல அவ்ளோ ரசிப்பு! நான் இவ்வளவு நேரம் பேசுறது அவருக்கு சலிக்கவே இல்லையான்னு தோணுச்சு. அவர் வேற எங்கயும் பாக்கல. போனை எடுக்கலை, சுத்தி இருக்கிறவங்களை கவனிக்கலை. என் மேல மட்டுமே மொத்த உலகமும் சுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்கைக் குடுத்தார். நாம ஒருத்தருக்கு இவ்ளோ முக்கியமான ஆளா இருக்குறோமேங்கிற கர்வம் எனக்குள்ள ஒரு பூ மாதிரி பூத்துச்சு அந்த நொடியில”
-ஆதிரா
சிவகாமியும் மலர்விழியும் தோட்டத்திலிருந்து பூ பறித்துக்கொண்டிருந்தார்கள். வெகு நேரம் சிவகாமி மொபைலில் எழிலரசியுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்த மலர்விழி என்ன விவகாரமென அவரே சொல்லட்டுமெனக் காத்திருந்தாள்.
அதற்கேற்றாற்போல சிவகாமியும் மலர்விழியை பூ பறிக்க அழைத்து வந்துவிட்டார்.
“அத்தை..” என அவள் மெதுவாக ஆரம்பிக்கவும் எழிலரசி மொபைல் அழைப்பில் பேசிய விவகாரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
“அந்தச் சுஜாதா மூஞ்சி சரியில்லனு நான் நினைச்சேன். ஆனா அவ புத்தி கூட சரியில்லனு நிரூபிச்சிட்டா பாரு. நம்ம புவனையும் ஆதியையும் இணைச்சு வச்சு சந்தேகப்பட்டு அதை எல்லா முன்னாடியும் விசாரிக்க வேற வந்தாளாம். நான் மட்டும் எழில் மதினி இடத்துல இருந்திருந்தேன்னா அவ கன்னத்தைப் பழுக்க வச்சு அனுப்பியிருப்பேன்” என்றார் அவர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

மலர்விழிக்கு நிச்சயதார்த்தத்தில் சுஜாதா பண்ணிய அலம்பல் எல்லாம் கண் முன் வந்து போனது. அப்போதே ‘இந்தச் சிலுப்பட்டையை ஆதிரா எப்படி சமாளிக்கப் போகிறாள்?’ என்று அவளுமே கவலைப்பட்டாள்தான்.
புண்ணியவதி அவளே வாயைக் கொடுத்து நடக்கவிருந்த அபாயத்திலிருந்து ஆதிராவைக் காப்பாற்றிவிட்டாள். நிம்மதி பெருமூச்சு பிறந்தது மலர்விழியிடம்.
“எழில் மதினி என் கிட்ட ஒரு விசயம் சொன்னாங்க பொண்ணே! அது சரியா வருமானு தெரியல.” எனச் சிவகாமி சொல்லவும்
“அப்பிடி என்ன சொன்னாங்க?” என ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.
“நம்ம புவனுக்கும் ஆதிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாமானு…”
அவர் முடிக்கக் கூட செய்யவில்லை! மலர்விழியின் முகம் சந்தோசத்தில் ஜொலித்தது.
“வாவ்! செமல்ல. நீங்க அதுக்கு என்ன சொன்னிங்க?” என வினவினாள் சிவகாமியிடம்.
“எனக்குக் குழப்பமா இருக்கு”
“என்ன குழப்பம்? ஆதியக்கா மாதிரி ஒரு பொண்ணுதான் புவன் மாமாக்குப் பொருத்தமா இருப்பாங்க. அவரோட கம்பீரத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமான ஆள் ஆதியக்கா மட்டும்தான். கல்யாண மண்டபத்துல அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஜோவியலா பேசிக்கிட்டாங்க தெரியுமா?”
மலர்விழி ஆர்வமாய்ச் சொல்ல “எதுக்கும் புவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்னு சொல்லிருக்கேன் மலர்” என்றார் அவர்.
“புவன் மாமா சந்தோசமா சம்மதம் சொல்லுவார் பாருங்க”
“அவன் சம்மதிச்சிட்டா அதை விட பெரிய நிம்மதி வேற என்ன இருக்கு சொல்லு. ஆதிய நினைச்சாலும் கவலையா இருக்கு. மூனு மாசத்துல கல்யாணம்னு பேசியாச்சு. சொன்ன தேதில கல்யாணம் நடக்கலனா சொந்தக்காரங்களுக்குப் பதில் சொல்லணும். பாவம் வினாயகம் அண்ணனும் எழில் மதினியும்”
மாமியாரும் மருமகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டே பூவைத் தொடுத்து முடித்தபோது ஆண்கள் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்.
வந்தவர்களிடம் எழிலரசி கூறிய அனைத்தையும் சொல்லிவிட்டுப் புவனேந்திரனுடைய முகத்தைப் பார்த்தார் சிவகாமி.
அவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். மகிழ்மாறன்.
மலர்விழிக்கோ அவன் உடனே சம்மதித்துவிடமாட்டானா என்ற ஆர்வம். அவளுக்கு அதை விட ஆதிராவை இந்த வீட்டுக்கு மருமகளாக்கி விடும் ஆர்வம்தான் அதிகம் எனலாம்.
மகிழ்மாறனின் அருகே சென்றவள் அவனது புஜத்தில் கிள்ளி தன்னோடு வருமாறு சைகை காட்டினாள்.
புஜத்தைத் தடவிக்கொண்டே வந்தவன் என்னவென வினவ “புவன் மாமாவ சம்மதிக்க வைங்களேன்” என்று ஆசையாய்க் கேட்டாள் அவள்.
“கல்யாண விசயத்துல எல்லாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது மலர்” என அவனது கறார்க்குரல் சொல்லவும்
“இதை யார் சொல்லுறது? நீங்களா? நம்ம கல்யாணம் எப்பிடி நடந்துச்சுனு மறந்துடுச்சா?” என அவள் கண்களை உருட்டவும், சட்டென நகைத்துவிட்டான் அவன்.

“சரிதான்! ஆனா உன் அளவுக்குப் புவன் அண்ணா என்னைப் பாத்துப் பயப்படமாட்டானே!”
மலர்விழி முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.
“என் கிட்ட மட்டும்தான் உங்க அதட்டல் உருட்டல் மிரட்டல் எல்லாம். நான் ஒருத்திதான் அடிக்க வசதியா இருக்கேன்ல”
அவளது நாசியை நிமிண்டியவனோ “அப்பிடி இல்லடி பொண்டாட்டி. நீ ஒருத்திதான் சொல்பேச்சு கேக்குற புள்ளை” என்று சொல்ல, அவனது கேலியில் கடுப்பாய் உறுத்து விழித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் ஹாலுக்குப் போய்விட்டாள்.
மகிழ்மாறன் அவளைத் தொடர்ந்து வந்தவன் இதழில் சிரிப்போடு தமையனின் அருகே அமர்ந்தான்.
“ரொம்ப யோசிக்கிறியேண்ணா” என்றவனை முந்திக்கொண்டு மலர்விழி குறுக்கிட்டாள்.
“நான் நேத்து இன்ஸ்டால ஒரு ரீல்ஸ் பாத்தேன் புவன் மாமா. நம்ம வாழ்க்கைல நாம சந்திக்குற எல்லாரும் நமக்கான சோல்-மேட்டா ஆகிடமாட்டாங்களா. சிலர் நம்மளோட கர்மிக் பார்ட்னரா வருவாங்களாம். கர்மிக் பார்ட்னர் நம்ம செஞ்ச கர்மாவோட பலனை நமக்குக் குடுத்துட்டு வாழ்க்கைல நாம கத்துக்க வேண்டிய பாடத்தையும் கத்துக் குடுத்துட்டு வாழ்க்கைய விட்டு போயிடுவாங்களாம். ஆனா சோல்-மேட் நம்மளை ஹீல் பண்ணி நம்பிக்கை குடுப்பாங்களாம். அவங்க நம்ம வாழ்க்கைல வந்த அப்புறம் நம்ம வாழ்க்கையில வர்ற பிரச்சனைகளுக்கான தீர்வா மாறிடுவாங்களாம். எனக்கு என்னவோ ஆதியக்கா தான் உங்களோட சோல்-மேட்னு தோணுது”
மலர்விழி நீளமாகப் பேசுவதே அபூர்வம். அவள் இத்துணை தூரம் பேசுகிறாள் என்றால் ஆதிராவை அவளுக்கும் பிடித்திருக்கிறது என்றுதானே அர்த்தம்!
புவனேந்திரனுக்குமே ஆதிராவை நிரம்ப பிடிக்கும். அவளிடம் தன்னையே பார்ப்பது போன்ற பிரமை அவனுக்கு.
அவள் பேசும்போது சுற்றியிருக்கும் உலகம் ஃப்ரீஜ் ஆவது போல தோன்றும். படபடக்கும் விழிகளை எப்போதுமே அவள் தாழ்த்துவதில்லை. அந்த விழிகளில் செவ்வரியொடு சில சமயங்களில் நாணமும் படருகையில் ரசிக்கப் பிடிக்கும் அவனுக்கு.
புடவை அணிந்திருக்கையில் அதன் முந்தானையை ஒற்றையாய் பின் குத்தி பின்னர் ஒரு முனையை மட்டும் அள்ளிப் போட்டிருக்கும்போது அத்துணை பிடிக்கும் அவனுக்கு.
அவளது வார்த்தைகள் யாவும் அவளுடைய எண்ணவோட்டங்களின் பிரதி பிம்பங்களாக அமைவது மிகவும் பிடிக்கும்.
அந்தக் கணத்தில் சம்மதிக்க தயக்கமில்லை புவனேந்திரனுக்கு. ஆனால் ஆதிராவுக்கும் சம்மதமாய் இருக்கவேண்டுமே!
பிடித்தங்கள் யாவும் வாழ்க்கையில் இணைவதற்கான வலுவானக் காரணங்களாக அமையாது. இரு ஜீவன்களை ஒரு உறவில் இணைக்க, பிடித்தத்தைத் தாண்டி நேசம் வேண்டும். நேசத்தால் பிணைக்கப்பட்ட ஜீவன்கள் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க புரிதல் வேண்டும். இதெல்லாம் தனக்கும் ஆதிராவுக்கும் இடையே இருக்க வேண்டும்.
இருக்குமா? ஐயம் முளைத்தது அவனுடைய மனதில்.
“என்ன புவன் யோசிக்குற?” சிவகாமி வாஞ்சையோடு கேட்டதும்
“ஆதிராவ யாருக்குப் பிடிக்காம போகும்மா?” என்றான் அவன்.

அதைக் கேட்டதும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி!
“இப்பதான் நிம்மதியா இருக்கு” என ஒரே குரலில் சொன்னார்கள் சிவகாமியும் மலர்விழியும்.
“அவசரப்படாதிங்க. ஆதிராவோட சம்மதமும் முக்கியம்” எனப் புவனேந்திரன் சொல்லவும்
“ஆதியக்கா கண்டிப்பா சம்மதிப்பாங்க” என்றாள் மலர்விழி நம்பிக்கையோடு.
“உன் நம்பிக்கை ஜெயிச்சா நான் அதிர்ஷ்டசாலி மலர்”
புவனேந்திரனை மகிழ்மாறன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஏன்டா அப்பிடி பாக்குற?”
“அவருக்கு வராத எல்லாம் உங்களுக்கு வருதுல்ல. அந்த ஆச்சரியம்”
மலர்விழி எடுத்துக் கொடுக்க மகிழ்மாறனின் பார்வை வீச்சு அவளிடம் பாய்ந்தது.
“என்ன பாக்குறிங்க? நான் பொய் சொல்லலையே”
மெதுவாய்க் கேட்டபடி அங்கிருந்து நழுவிவிட்டாள் அவள்.
நரசிம்மன் மூத்த மகனின் தோளில் தட்டியவர் “வினாயகம் கிட்ட உன் சம்மதத்தைச் சொல்லிடுறோம் புவன். ஆதியும் சம்மதிப்பானு நம்பிக்கை எனக்கு” என்றார்.
அதே நேரம் சந்திரவிலாசத்தில் ஆதிராவிடம் இச்செய்தி சொல்லப்பட்டது. அவளுக்கும் புவனேந்திரனின் மனநிலையே. புவனேந்திரன் சம்மதித்துவிட்டான் என்ற தகவலும் அவளிடம் பகிரப்பட்டிருந்தது.
அமைதியாய் தனது அறைக்குள் சென்று முடங்கிகொண்டவளின் மனதில் ஆயிரம் கேள்விகள்! அவற்றில் பிரதானக் கேள்வி ‘ஒருவேளை தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டதில் இரக்கப்பட்டுத் தனக்கு வாழ்க்கை கொடுக்க புவனேந்திரன் சம்மதித்திருப்பானோ?’ என்பதே!
அடுத்த நொடியே அவளது மனசாட்சி மறுப்புரை வாசித்தது.
‘உன்னைக் காணும்போது அவனது விழிகளில் வந்த ரசனையும், நீ பேசுகையில் உன் மீது மட்டுமே கவனத்தைக் குவிக்கும் அவனது விழிகளும் எப்போது உன் மீதான இரக்கத்தைக் காட்டின பெண்ணே? பிடித்தமும், ரசனையும், அக்கறையும் கொண்ட ஆண்மகன் அவன்! அவற்றை உன்னைக் கண்டால் வெளிப்படையாகக் காட்டுபவனும் கூட. அவனை எப்படி இரக்கப்பட்டு வாழ்க்கை தருபவனாக எண்ணுவாய்?’
ஆதிராவின் மூளைக்குள் “சியர் அப் லேடி” என்று சொல்லிவிட்டுப் போனான் புவனேந்திரன்.

ஆம் இல்லை என்று பதில் சொல்ல முடியாத தவிப்பு அவளுக்குள் வியாபித்தது. முடிவெடுக்கத் தயங்க வைத்தது. சின்னதாய் ஒரு தயக்கம்! குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி அவசரமாய்ச் சொந்தக்காரன் தலையில் கட்டிவிட்டதாக எதிர்காலத்தில் ஒரு முறை அவள் எண்ணினால் கூட அவர்களின் உறவின் அடித்தளம் அங்கே கேலிக்கூத்தாகுமே! அந்த யோசனையால் வந்த தயக்கம் அவளைப் பீடித்துக்கொண்டது. கூடவே உறக்கமும்!
மறுநாள் அவள் விழித்து மில்லுக்குத் தயாரானபோதே முடிவைச் சொல்ல ஆதிரா தயங்கும் செய்தி எழிலரசி மூலமாக சிவகாமிக்குத் தெரிவிக்கப்பட்டு புவனேந்திரனின் செவியைத் தீண்டியிருந்தது.
“நீங்க கவலைப்படாதிங்கம்மா. நான் ஆதிரா கிட்ட பேசுறேன்” என்றவன் ஹோட்டலுக்குச் சென்று அன்றாட அலுவல்களை இரண்டு மணி நேரத்தில் முடித்துக்கொண்டு கிளம்பியதென்னவோ அம்பாசமுத்திரத்துக்குத்தான்.
உலகம் எண்ணெய் மில் எங்கே இருக்கிறதென அவனுக்குத் தெரியும். சிறுவயதில் வந்து போன இடம்தான். காரை அங்கே விட்டவன் மில்லை அடைந்ததும் முதலில் சந்தித்தது என்னவோ தங்கவேலுவைதான்!
“வணக்கம் சித்தப்பா!”
“வாங்க வாங்க! சந்தோசமான விசயம் ஒன்னு கேள்விப்பட்டேன். அதுக்குதானே வந்திருக்கிங்க” என்று உற்சாகமாக வரவேற்றார் அவர்.
“அதேதான்! ஆனா மேடம் இன்னும் சம்மதிக்கல”
“அட! ஆதிம்மாவ நான் சின்னக்குழந்தைல இருந்து பாக்குறேன். எந்த முடிவையும் அவசரகதியில அவ எடுக்கமாட்டா. தீர யோசிச்சு முடிவெடுக்குறவ கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கிட்டாலும் நல்ல முடிவை எடுத்துடுவா. போய் பாருங்க தம்பி” என மில்லுக்குள் இருக்கும் ஆதிராவின் அலுவலக அறைக்குப் புவனேந்திரனை அனுப்பி வைத்தார் தங்கவேலு.
புவனேந்திரன் மில்லில் வேலை நடப்பதைப் பார்த்தபடியே சென்றவன் ஆதிராவின் அலுவலக அறைக்கும் வந்துவிட்டான்.
“புவன்?”
மில்லின் அலுவலக அறைக்குள் நுழைந்தவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் ஆதிரா.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா நான்?” என்று கேட்டபடி அவளுக்கு எதிரே நாற்காலி ஒன்றை போட்டு அமர்ந்தான் புவனேந்திரன்.
“சேச்சே! இன்னைக்குப் பெருசா வேற வேலை எதுவும் இல்ல.” என்றவள் “உங்களுக்குக் காபியா? டீயா?” என்று கேட்க
“காபியும் டீயும் திருநெல்வேலியிலயே கிடைக்குமே! அதுக்கு நான் ஏன் இவ்ளோ தூரம் வரணும்?” என்றான் அவன் சிரிப்போடு.
“அப்ப டிஸ்கவுண்ட் வேணுமா? அக்ரிமெண்ட்ல எதுவும் சேஞ்ச் பண்ணனுமா?”
“இதெல்லாம் தவிர வேற காரணம் இருக்கலாம்னு ஏன் யோசிக்கமாட்ற நீ?”
இந்தக் கேள்விக்கு இமைகளை அடிக்க மட்டுமே முடிந்தது ஆதிராவால். முந்தைய இரவில் குடும்பத்தினர் பேசிய விவகாரம் அவளை இயல்புக்கு மீறி தடுமாற வைத்தது. புவனேந்திரன் அவளது விழிகளையே உற்று நோக்கினான்.
“நீ எப்பிடி இருக்குறனு பாத்துட்டுப் போக வந்தேன்.” என்றவன் “நீ ட்வின் ஃப்ளேம் தியரி (twin flame theory) கேள்விப்பட்டுருக்கியா?” என்று வினவ அவளோ இல்லையெனத் தலையை ஆட்டினாள்.
“ஒரு சோல் (soul) ஏதோ ஒரு காரணத்துக்காக ரெண்டா பிரிஞ்சு ரெண்டு வேற வேற மனுசங்க உடம்புல இருக்குமாம். அவங்க சந்திச்சு சில நிமிசங்கள் பேசுனாலே ரொம்ப வருசம் பழகுன உணர்வு வந்தும். அந்த ட்வின் ஃப்ளேம் யாருக்குள்ள இருக்குதோ அந்த ரெண்டு நபர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப இணக்கமா இருப்பாங்க. அவங்களோட பிணைப்பு ரொம்ப தீவிரமா இருக்கும். அவங்கள்ல ஒருத்தர் மனரீதியா ஏதோ ஒரு சம்பவத்தால பாதிக்கப்பட்டா இன்னொருத்தர் அந்தக் காயத்துக்கு மருந்தா மாறுவாங்க. ஏனோ தெரியல, கல்யாண மண்டபத்துல உன் கூட பேசுன கொஞ்ச நிமிசத்துல நான் இதெல்லாம் ஃபீல் பண்ணுனேன். சின்ன வயசுல நான் உன்னை அதிகமா பாத்ததோ பேசுனதோ ஞாபகமில்ல. ஆனா கல்யாண மண்டபத்துல நீ பேசுனப்ப ரொம்ப வருசம் பழகுன உணர்வு எனக்குள்ள. எனக்குள்ள இருந்த ட்ராமாவ (trauma) உன் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமா போக வச்சதை நான் உணர்ந்தேன் ஆதிரா. இப்ப நீ சஞ்சலத்தோட இருப்பனு எனக்குள்ள ஒரு குரல். அதான் என்னோட மிரர் சோல் (mirror soul) தேடி வந்துட்டேன்”
அவன் பேச பேச ஆதிராவின் கண்கள் ஏனோ கலங்கின. எதற்காக என்றே தெரியாமல் கண்ணீர் பெருகியது அவளது விழிகளில். அது வருத்தத்தில் பெருகிய கண்ணீர் இல்லை.
புவனேந்திரன் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றினான்.
“இது வருத்தத்துல வந்த கண்ணீரா இருக்காது. சரிதானே?” என இதமாய்க் கேட்டான் அவளிடம்.
ஆதிரா தலையை மேலும் கீழுமாக ஆட்டவும் “சியர் அப் லேடி” என்றான்.
அவள் சிரித்தபடியே கண்ணீரைத் துடைத்தவள் “இந்த டயலாக்கை அடிக்கடி சொல்லுறிங்க” என்க
“கொஞ்சம் மாத்தி சொல்லலாம்னு நினைக்குறேன்! சியர் அப் மை லேடி” என்றவன் ஓரிரண்டு நொடிகள் இடைவெளிவிட்டு “மை லேடினு சொல்லலாம் தானே? வில் யூ பி மை லேடி?” என்று அழுத்தமாக வினவினான்.
ஆதிராவின் இதழில் உறைந்திருந்த புன்னகை அழகானச் சிரிப்பாக மாறியது.
“என்ன கேட்டிங்க?” என்று கேட்டாள் பரபரப்புடன். அவன் சம்மதித்ததை அன்னையின் வாயால் கேட்டதை விட நேரில் அவன் மூலமாகக் கேட்பது மெல்லிய பதற்றத்தை அவளுக்குள் விதைத்தது.
“இங்கிலீஸ் தெரியாதா உனக்கு? சரி, தமிழ்லயே கேக்குறேன், முழு இதயத்தோட கேக்குறேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு அவளது கையைத் தனது கரத்துக்குள் பொதிந்துகொண்டான் புவனேந்திரன்.

என்ன சொல்வதெனப் புரியாமல் திகைக்கும் அளவுக்கு கோடைமழையாய் சந்தோசம் கொட்டித் தீர்த்தது ஆதிராவின் மனதுக்குள்.
கோடைமழை எப்போது வருமென யாராலும் ஆருடம் சொல்ல முடியாதே! அதே போலதான் இந்தச் சந்தோசமானத் தருணமும் அவளுக்கு! எதிர்பாராதச் சந்தோசம் இது! இரக்கப்பட்டு மணக்க நினைத்தானோ என்ற அவளது தயக்கத்தை உடைத்து விரும்பி மணக்க கேட்கிறானே புவனேந்திரன்! அவள் இரவு முழுவதும் தவித்தது இப்போது அவசியமில்லை என ஆகிவிட்டதே! இனி மகிழ்ச்சிக்கு என்ன குறை அவளிடம்! முகம் விகசிக்க, கண்கள் கலங்க சம்மதமாய் தலையசைத்தாள் ஆதிரா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

