“Balance and reciprocity – ஒரு உறவுல முக்கியமான ஒன்னு. விருப்பத்தைப் பதிவு பண்ண ஒரு உறவுல உரிமை இருக்குற மாதிரி மறுப்பைப் பதிவு பண்ணவும் உரிமை இருக்கணும். ஒரு பார்ட்னர் தன்னோட மறுப்பைச் சொன்னா அதை இன்னொரு பார்ட்னர் மதிக்கணும். இந்தப் பரஸ்பர புரிதல் இருந்தா மட்டுமே அந்த உறவை ரெண்டு பேராலயும் சரியா கொண்டு போக முடியும். அப்பிடி இருந்தா மட்டுமே அந்த உறவுல நம்மளால ரிலாக்சா ஃபீல் பண்ண முடியும். இல்லனா உறவே சுமையா மாறி நம்மளை நசுக்கும்”
-ஆதிரா
தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்தார்கள் ஆதிராவும் மலர்விழியும். ஆதிரா மூன்று நாட்கள் மில்லுக்கு விடுமுறை எடுத்திருந்தாள். புதுமணப்பெண்ணாயிற்றே! அவளும் புவனேந்திரனும் நதியூரிலிருந்து குலவணிகர்புரத்துக்கு வந்து மூன்று நாட்கள் ஓடியிருந்தன.
மலர்விழிக்கு முதுகலை வணிகவியல் இறுதியாண்டின் இறுதி செமஸ்டருக்கானத் தேர்வுக்குத் தேதி அறிவித்தாயிற்று.
தேர்வு கால அட்டவணையும் வந்துவிட்டது. அவளும் மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கிறாள்தான். அவளுக்குப் பிரச்சனை கதிர்காமனை விட்டுவிட்டுத் தேர்வெழுதப் போவதுதான்.
வகுப்புக்குச் செல்லாமல் அபராதம் கட்டி பரீட்சை எழுதுவது கூட பிரச்சனையாகத் தெரியவில்லை அவளுக்கு. தனது மைந்தனை விட்டுச் செல்லவேண்டுமே, அவன் தன்னைத் தேடுவானே என்ற கவலைதான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதை ஆதிராவிடம் அவள் குறிப்பிட்டாள்.
“இதுக்கு ஏன் கவலைப்படுற? உனக்கு எக்சாமுக்கு ஒரு மாசம் டைம் இருக்குல்ல? நீ படி. எக்சாமுக்குப் போ. கதிரை நானும் அத்தையும் பாத்துப்போம்” என்றாள் அவள்.
“அத்தையால அவனைத் தனியா சமாளிக்க முடியாதுக்கா. இப்ப தட்டுத்தடுமாறி நடக்கவும் ஆரம்பிச்சிட்டானே! எங்கயும் இடிச்சுப்பானோனு…”
மலர்விழி கவலையோடு சொல்லவும் “நான் பாத்துக்குறேன் அவனை. நான் மில்லுக்குப் போறப்ப அவனைக் கூட்டிட்டுப் போயிடுறேன். அங்க தங்கவேலு மாமா கிட்ட சொல்லி என்னோட ஆபிஸ் ரூம்ல கொஞ்சம் டாய்ஸ் வாங்கிப் போடச் சொல்லிடுறேன். அவன் விளையாடுவான், நான் அவனைக் கவனிச்சுக்கிட்டே வேலைய பாப்பேன்” என்றாள் ஆதிரா.
“ஆனா அக்கா உங்க வேலைக்கு இதுல்லாம்..”

“கம் ஆன் மலர்! நான் அங்க மேற்பார்வை பண்ணப்போறேன். மத்தபடி பெருசா வேலை இல்ல. முடிஞ்சவரைக்கும் எல்லா டீலையும் மேரேஜ்கு முன்னாடியே பேசி முடிச்சாச்சு. ஆன்லைன் ஆர்டர்ஸ் எல்லாம் சரியா நடக்குதானு பாக்கனும். இவ்ளோதான். இந்த வேலை எதுவும் கதிரால பாதிக்காது”
“தேங்க்யூ அக்கா”
“இதுக்கு ஏன் தேங்க்ஸ்? நீ லைப்ரரியன் ஆகனும்னு ஆசைப்படுறனு புவன் சொல்லிருக்கார். அதுக்கு இந்த ஃபேமிலியும் சப்போர்ட் பண்ணனும்ல. என்னோட சப்போர்ட்டை நான் இப்பிடி குடுத்துட்டுப் போறேன்”
“மறுபடியும் தேங்க்யூ சொன்னா திட்டுவிங்களோ?”
“கண்டிப்பா திட்டுவேன்” என்றவள் “ஹான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்! மறுவீடு போனோம்ல, அப்ப நானும் புவனும் உங்க தோட்டத்துக்குப் போனோம். சூப்பரா இருந்துச்சு மலர். சித்தப்பா உழைப்பாளி”
“அடுத்து தென்னங்கன்னு வாங்கப் போறதா அப்பா சொன்னார்க்கா. அவர் கைராசிக்கு என்ன செடி வச்சாலும் செழிச்சு வளருது. வாழைத்தோப்பு வைக்கலாம்னு அப்பா சொன்னப்ப நானும் அம்மாவும் பயந்தோம். எங்க ஊர்ப்பக்கத்துல காத்துல வாழை சரியுறது ரொம்ப சாதாரணம்கா. சில நேரம் நட்டம் தான் விவசாயிக்கு. ஆனா அப்பா நம்பிக்கையா வச்சாரு”
தோட்டத்தில் இருக்கும் செடிகள், வாழைத்தோப்பு பற்றி எல்லாம் ஆதிராவிடம் மலர்விழி விளக்குகையிலேயே சிவகாமி அங்கே வந்து சேர்ந்தார்.
“நீயும் புவனும் நாளைக்கு ஊருக்குக் கிளம்புறிங்கல்ல? லக்கேஜ் எடுத்து வச்சாச்சா?”
“இல்லத்தை”
“முதல்ல அதை எடுத்து வை. மலர்! நீ என் கூட வாடி பொண்ணே”
மாமியாரும் மலர்விழியும் ஒரு பக்கம் சென்றுவிட ஆதிரா அவர்களின் அறைக்கு வந்தாள்.
புவனேந்திரன் அங்கில்லை. அவனும் நரசிம்மனும் ஏதோ தொழில்ரீதியான பேச்சை மாடியில் நடத்திக்கொண்டிருந்தார்கள். அவன் வருவதற்குள் உடைமைகளை எடுத்துவைத்து விடுவோமென வேலையில் ஆழ்ந்தாள்.
தேனிலவு செல்லவிருக்கிறார்கள் இருவரும். அதற்காகத் தான் ஆயத்தமாகச் சொன்னார் சிவகாமி.
அவள் இருவருக்குமான உடைகள் எடுத்து வைத்து பெட்டிகளைத் தயார் நிலையில் வைக்கவும் புவனேந்திரன் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
“ஹனிமூனுக்கு அவசரம்” என்று கிண்டல் செய்தபடி வந்தவன் உடல் அலுப்பாக இருக்கிறதெனச் சொல்லிவிட்டுக் குளிக்கப் போய்விட ஆதிராவும் காதில் இயர்பட்ஸ்களை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டபடி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
சிடு-சிடு என்றாலும், தினம் எனை கொன்றாலும்
என் காதல் மாறாதடி!
விடு-விடு என்றாலும், விலகிட சொன்னாலும்
என் ஆசை போகாதடி!
குளித்து முடித்து உடைமாற்றி வந்த புவனேந்திரன் என்ன பாடல் எனச் சைகையில் கேட்க அவனது காதில் குடியேறியது ஒரு இயர்பட்.
வான்வெளியில் பறப்பேன்
நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன்
நீ நெருங்கினால்
வேறுலகை எரிப்பேன்
நீ கலங்கினால்
கால் அடியில் கிடப்பேன்
நீ விரும்பினால்
எதிரெதிரே அமர்ந்து கண் மூடி பாடலைக் கேட்கையில் வெண்ணெய்யாய் கரைந்தது பாடகரின் குரல் இருவரது செவியிலும்.
“யார் இந்த சிங்கர்?”
“கபில் கபிலன். ரீசண்டா அவர் வாய்சுக்கு நான் அடிமை”
புவனேந்திரனுக்குள் சின்னதாய் ஒரு பொறாமை எட்டிப் பார்த்தது.

“ஜெலஸ் ஆகாதிங்க” நெற்றியை முட்டிப் பாடல் கேட்டுக்கொண்டிருந்த போது அவனது கன்னத்தில் கிள்ளினாள் ஆதிரா.
“ப்ச்! அதைக் கிள்ளாம சொல்லேன்டி. வரவர நீ ரொம்ப டொமஸ்டிக் வயலன்ஸ்ல இறங்குற. இதுக்குப் பேர் ‘விமன் ஹேண்ட்லிங்’. இன்னொரு தடவை கிள்ளு. அப்புறம் இருக்கு”
“என்ன பண்ணுவிங்களாம்?” பற்களைக் கடித்தபடி அவன் தலையில் தன் தலையால் விசையாக முட்டிக் கேட்டாள் ஆதிரா. அவளுக்கு வலிக்கவில்லை. ஆனால் எதிராளியின் நிலை பரிதாபம்.
“அவுச்”
தலையை அழுத்தியபடி படுக்கையில் உருண்டான் புவனேந்திரன்.
“பொய்யா நடிக்குறதுல உங்களை மிஞ்ச முடியாது”
“ஏய் நிஜமாவே வலிக்குதுடி. உன் மண்டை ஓடு ரொம்ப ஸ்ட்ராங்”
“அச்சோ”
நிஜமாகவே அவள் இடித்ததில் முன் நெற்றியில் புடைத்து வீங்கிவிட்டது அவனுக்கு.
“வீங்கிடுச்சே” கவலையோடு சொன்னவள் “இருங்க அயோடெக்ஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று நமட்டுச்சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு அயோடெக்சை எடுத்து வந்து அவனது நெற்றியில் தடவிவிட்டாள்.
“மனுசியா நீ?”
“ப்ச்! நான் லைட்டாதான் முட்டுனேன். உங்களுக்குப் பிஞ்சு உடம்பு புவன்”
சொன்னவள் அடக்கமாட்டாமல் நகைத்துவிட “சிரிப்பா இருக்கு உனக்கு? உன்னை …” என்றவன் தண்டனை கொடுத்த விதத்தில் அவன் முன்நெற்றியிலிருந்த அயோடெக்ஸ் ஆதிராவின் முன்நெற்றிக்கு இடம் மாறியது.
“ஆதி! இங்க வந்து பூ வாங்கிட்டுப் போ”
சிவகாமியின் குரல் கேட்டதும் ஆதிராவை விலக அனுமதித்தான் அவன். போகும் போது கூட நறுக்கென அவனது தலையில் குட்டிவிட்டு வெளியேறியவளைச் சிரிப்போடு பார்த்தவனுக்கு இன்னும் நெற்றியில் புடைத்த இடம் வலித்தது.
“ராட்சசி! என்னைப் புண்ணாக்குறா”
‘நீ மட்டும் சும்மாவா விட்டாய்?’ மனசாட்சி குறுக்கே புகுந்து கேள்வி கேட்க மீண்டும் சிரிப்பு அவனிடம்.
சிவகாமியிடம் வந்த ஆதிராவோ ஏன் நெற்றியில் அயோடெக்ஸ் தேய்த்திருக்கிறாய் என்ற அவரது கேள்வி பதிலளிக்கத் தெரியாமல் திணறினாள்.
“அது… வந்து… புவனுக்குத் தேய்ச்சு விட்டு அப்பிடியே அந்தக் கையை என் நெத்தில வச்சிட்டேன் போல” எப்படியோ சமாளித்து வைத்தாள்.
“புவனுக்கு என்னாச்சுடி?” சிவகாமி பதற
“ஒன்னுமில்லத்தை! சுவத்துல இடிச்சுக்கிட்டார். நெத்தில புடைச்சு வீங்கிடுச்சு. வேற ஒன்னுமில்ல” என்று சொல்லி அவரை அமைதியாக்கினாள்.
“இன்னும் சின்னக் குழந்தைனு நினைப்பு உன் புருசனுக்கு. பகல்லயே பசு மாடு தெரியல போ”
பேசியபடியே மூத்த மருமகளின் தலையில் பூவைச் சூடிவிட்டார்.
அதே நேரம் அவர்களின் அறையில் ஒரு காதில் மட்டும் இயர்பட் போட்டுப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த புவனேந்திரனின் அலுவல்ரீதியான மொபைலுக்கு அரவிந்திடமிருந்து அழைப்பு வந்தது.
“என்னாச்சு அரவிந்த்?”
“சார் நம்ம பி.எம்.எஸ் சாப்ட்வேர்ல காலையில இருந்தே சின்னதா ஒரு பிரச்சனை. என்ன பக்னு தெரியல. க்ளவுட் பீ டெக்னாலஜில இருந்து மதுமதி வந்திருக்காங்க. அவங்க போராடி சரிபார்த்துட்டிருக்காங்க. உங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம இருந்ததுக்குச் சாரி. நீங்க இன்னைக்கு உங்க அத்தை வீட்டுல விருந்துக்குப் போறதா சொன்னிங்க.”
மென்பொருள் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு என்.எச்.என் ஹோட்டல் கார்டனியாவில் புழக்கத்துக்கும் வந்துவிட்டது. ஒரு வாரமாக எந்தச் சிக்கலும் வரவில்லையே! இன்று மட்டும் என்ன?
“இங்க ரிசப்சன்ல திணறுறாங்க சார். எண்ட்ரிஸ் எதுவும் போட முடியல”
“இருங்க அரவிந்த். நான் உடனே வர்றேன்”
சட்டென உடைமாற்றியவன் அறையிலிருந்து வெளியே வரவும் மாமியாரும் மருமகளும் திகைத்தார்கள்.
“இப்ப எங்க கிளம்புற புவன்? சுவர்ல இடிச்சுக்கிட்டியாமே?”
சிவகாமி மைந்தனின் நெற்றியை ஆராய்ச்சிப்பார்வை பார்க்க ஆதிரா நெளிந்தாள் சங்கடத்தில்.
புவனேந்திரனுக்குப் பதற்றத்தை மீறிய சிரிப்பு வந்தது.
“ஒன்னுமில்லம்மா! அஞ்சரை அடி சுவர் இடிச்சதுல பொறி கலங்கி நெத்தி வீங்கிடுச்சு. மத்தபடி வலி எல்லாம் இல்ல”
“அஞ்சரடி சுவரா? ஏன்டி உன் புருசனுக்கு மண்டைல இடிச்சதுல மூளை குழம்பிடுச்சா? நம்ம வீட்டுச்சுவர் ஒவ்வொன்னும் எவ்ளோ உயரமா இருக்கு? இவனுக்கு மட்டும் அஞ்சரடியா தெரியுது போல”
அவன் ஆதிராவைச் சொல்கிறான் என்பது சிவகாமிக்கு எப்படி தெரியும்? ஆதிரா கண்களால் அவனை மிரட்டியவள் சிவகாமி அவள் பக்கம் திரும்பியதும் பார்வையை இயல்பாக்கிக்கொண்டாள்.
“நம்ம ஹோட்டலுக்குப் புதுசா சாப்ட்வேர் டெவலப் பண்ணுனோம்ல. அதுல சின்னதா ஒரு பிரச்சனை. அரவிந்த் இப்பதான் கால் பண்ணுனார். நான் போயிட்டு வந்துடுறேன்” என்றவன் ஏதோ யோசனையோடு “ஆதி நீயும் என் கூட வர்றியா?” என்று கேட்க அவளும் ஆர்வத்தோடு தலையசைத்தாள்.
“ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடட்டுமா?” என்றவளிடம்
“பத்தே நிமிசம். அதுக்குள்ள வரலனா அப்பிடியே அள்ளித் தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவேன்” என்றான் அவன்.
“ப்ச்! அத்தை இருக்காங்க” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அவனைக் கடந்த ஆதிரா சரியாய் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
பச்சையில் பிங்க் பூக்களிட்ட காட்டன் குர்தி, வெண்ணிற ஸ்ட்ரெய்ட் பேண்ட், க்ளட்சில் அடங்கியிருந்த கூந்தலில் சிவகாமி சூட்டிய மல்லிகைச்சரம் குளிர்ச்சியாய் சிரித்தது.
“போயிட்டு வர்றேன் அத்தை”
“பத்திரம்!”
காரிலேறி அமர்ந்ததும் “திடீர்னு ஏன் என்னைக் கூட்டிட்டுப் போறிங்க புவன்?” என்று தனது ஐயத்தைக் கேட்டாள் அவள்.
“காரணமாதான். அங்க போனதும் உனக்கே புரியும்”
புதிர் போட்டுக் காரை ஓட்டியவன் ஹோட்டலை அடையும்வரை சின்ன சின்ன கேலி பேச்சிலும், தொழில் சம்பந்தப்பட்ட பேச்சிலும் ஆதிராவை இனிமையாக உணர வைத்தான்.
எல்லா இனிமையும் ஹோட்டலுக்குச் சென்று அங்கே மென்பொருளில் என்ன பிழையென ஆராய்ந்துகொண்டிருந்த மதுமதியைக் கண்டதும் பறந்தோடிப் போனது ஆதிராவுக்கு.
‘பவிதரனிடம் அவ்வளவு தூரம் சொல்லியும் இவள் ஏன் இங்கே வந்து சட்டமாக அமர்ந்திருக்கிறாள்? இவளது நிறுவனத்தில் வேறு மென்பொருள் பொறியாளர்களே இல்லையா?’
எரிச்சலை மறைக்காமல் முகத்தில் காட்டினாள் ஆதிரா. அதைக் கவனிக்கவில்லை புவனேந்திரன்.
அவனுக்கு இப்போதைய டார்கெட் எப்படியாவது தன்னிடம் நெருங்க நினைக்கும் மதுமதியின் எண்ணுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே! தனக்கு உரிமையானவளோடு வந்து நிற்பதைப் பார்த்தாலாவது மதுமதிக்கு புத்தி வந்தால் சரிதான் என்ற எண்ணம்.
“என்ன பிரச்சனைனு தெரிஞ்சுதா?” என்று அலுவல் தொனியில் புவனேந்திரன் அவளிடம் கேட்க
“இன்னும் இல்ல புவன்! டெஸ்டிங் போகுது” என்றாள் மதுமதி திரையைப் பார்த்தபடி.
அவளது ‘புவன்’ என்ற அழைப்பில் ஆதிராவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. புவனேந்திரன் அவளது தோளை அழுத்தி அணைத்தான்.
“ஓ.கே! நீங்க வேலைய எப்ப முடிப்பிங்க? எங்களால ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது. கஸ்டமர்ஸ் எண்ட்ரி, செக் அவுட் எல்லாமே இதால பிரச்சனை ஆகும். எங்களால கஷ்டமர்ஸை காத்திருக்க வைக்க முடியாது.”
புவனேந்திரன் அதிகாரத்தோடு கட்டளையிடும் தொனியில் பேச மதுமதிக்கோ அவன் தன்னிடம் பேசியதிலேயே மனம் குளிர்ந்து போனது. ஆனால் மிளகாயை அரைத்துப் பூசியது போல உடனே எரிச்சலும் வந்தது. காரணம் அவன் ஆதிராவை அணைத்திருந்த விதம்.
‘அப்படியென்ன இவள் என்னை விட அழகி?’ என்ற பொறாமை!
கொண்டவனுக்கு அவனது மனைவியின் முன்னே உலக அழகி கூட சுமார்தான் என்று யார் மதுமதிக்குப் புரியவைப்பது? முரளியுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து வெளியே போனால் கூட அவனது விழிகள் பிற பெண்களை வெறிப்பதைக் கவனித்திருக்கிறாள்.
இன்று புவனேந்திரனுக்காகவே ஸ்ரதை எடுத்து அலங்கரித்து வந்தவளுக்கு அவன் தன்னை ஒரு ஊழியை என்ற அளவில் நடத்தியதும் அதிர்ச்சிதான்! ஏதோ அவனது தரிசனமாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் அவனது அணைப்பு கல்லை தூக்கிப்போட்டது.
புவனேந்திரன் ஆதிராவை அமரச் சொல்லிவிட்டு அவளுக்குக் குடிக்க பழச்சாறு எடுத்து வருமாறு கட்டளையிட்டான். அவளும் அவனது முகத்திலிருந்த வாட்டத்தைக் கவனித்து கையில் தட்டிக்கொடுத்தாள்.
“சரியாகிடும் புவன். அதான் பாத்துட்டிருக்காங்கல்ல?”

அவள் சாதாரணமாகச் சொல்லவும் அவனுக்குள் மெல்லிய ஆச்சரியம். தங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்தான் இருவரும் பேசிக்கொண்டார்கள்.
“நீ மதுமதியைப் பாத்ததும் கோவப்படுவனு நினைச்சேன் ஆதி”
‘நீ என்னைச் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறாய்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஆதிரா.
ஆனால் வெளிப்படையாகச் சொல்ல விருப்பமில்லை.
“எதுக்குக் கோவப்படணும்? சாப்ட்வேர்ல பிரச்சனைனா அதை டெவலப் பண்ணுனவங்கதானே சரி பண்ணனும்? எனக்கும் சில விசயங்கள் புரியும் புவன். அப்பிடியே கோவம் வந்தாலும் உங்க கிட்ட அந்தக் கோவத்தைக் காட்டுறது முட்டாள்தனம்னு எனக்குத் தெரியாதா?”
புவனேந்திரன் கர்வமாகப் புன்னகைத்தபோதே “டன்” என்ற குரல் கேட்டது. அது மதுமதியுடையது.
“முடிஞ்சுது புவன்” புன்சிரிப்புடன் எழுந்தவள் தன்னருகே வரும் முன்னரே “ஓகே. இன்னொரு தடவை இது போல பிரச்சனை வராதுதானே? செக்யூரிட்டி அப்டேட் எல்லாம் யார் பண்ணுவாங்க?” என்று கேட்டான் புவனேந்திரன்.
தன்னைத் தொழில் அளவில் நிறுத்தப் பார்க்கிறான் என்பது அவளுக்கும் புரிந்து போனது.
“செக்யூரிட்டி அப்டேட் எல்லாம் என்னோட பொறுப்புதான். அதை மன்த்லி ஒன்ஸ் நானே சர்வர்ல பண்ணிடுவேன் புவன். பட் அதோட ஃபீட்பேக் வாங்க இங்க நான் வரவேண்டியதா இருக்கும்”
“நல்லது. நீங்க கிளம்பலாம்” என்றவன் அரவிந்தைப் பார்க்க அவனும் மதுமதியைத் தன்னோடு வருமாறு அழைத்தான்.
அதே நேரம் பழச்சாறும் வர, அது ஆதிராவுக்காக வரவழைக்கப்பட்டது என்பதால் வேண்டுமென்றே போகிற சாக்கில் பழச்சாறு கொண்டு வந்த ஊழியரின் காலைத் தட்டிவிட்டுப் போனாள் மதுமதி.
இதை யார் கவனித்தார்களோ இல்லையோ ஆதிரா கவனித்துவிட்டாள்.
அந்த ஊழியரை அரவிந்த் தூக்கிவிடுகையில் ஆதிராவிடம் வில்லத்தனமான புன்னகையை வீசிவிட்டு அவள் வெளியேறினாள்.
“இதை க்ளீன் பண்ணிட்டு வேற ஜூஸ் எடுத்துட்டு வாங்க” என்று கட்டளையிட்ட புவனேந்திரனைக் கவலையோடு பார்த்தாள் ஆதிரா.
ஒருவர் இன்னொருவருடைய தொழில் முடிவுகளில் தலையிடமாட்டோமெனப் போட்டுக்கொண்ட டீல் அவளது நாவைக் கட்டிப்போடலாம். ஆனால் மனதைக் கட்டிப்போட முடியாதே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

