“ஒருத்தரால நம்ம உடம்புக்கோ மனசுக்கோ பாதிப்பை உண்டாக்க முடியும்னு தெரிஞ்சுதுனா நாம செய்ய வேண்டிய முதல் வேலை அவங்களை நம்ம சரவுண்டிங்கில இருந்து விலக்கி வைக்குறது மட்டும்தான். இதை Self protection psychologyனு சொல்லுவாங்க. நம்மளோட மன ஆரோக்கியத்துக்காக இந்த ஸ்டெப்பை நாம எடுத்துதான் ஆகனும். உறவுரீதியா ஒருத்தர் நமக்கு நெருக்கமில்லாதவரா இருக்கலாம். ஆனா அவரால நம்ம மன அமைதி குலையுதுனா அவரைப் புறக்கணிக்குறது நமக்கு நாமளே செஞ்சுக்குற நன்மை. “
-ஆதிரா
ஆதிரா அவசரமாகப் புடவையின் கொசுவத்தைச் சரி செய்துகொண்டிருந்தாள். என்ன செய்தாலும் கீழே சரியாக வராமல் சோதித்தது புடவை.
கொசுவத்தை மட்டும் கொத்தாகக் கைகளில் அள்ளி கூட சரி செய்ய முயற்சித்தாலும் மடிப்பு கச்சிதமாக வராமல் இம்சித்தது.
அவள் புடவையோடு போராடுவதைக் கவனித்த புவனேந்திரன் “நான் ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க
“இல்ல! மலரைக் கூப்பிடுங்களேன்” என்றாள் அவனது மனைவி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் மெத்தையில் நிதானமாக அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவள் சிரமப்படுவதைப் பார்த்தானேயொழிய மலர்விழியை அழைக்கவில்லை.
“புவன் மலரைக் கூப்பிடுங்க”
“நான் ஒன்னும் கையில மருதாணி வைக்கலையே”
“அடடா! உங்க பதில்ல நான் அப்பிடியே அசந்துட்டேன் போங்க.”
சலித்துக்கொண்டவளிடம் எப்படி புடவை கொசுவத்தை மடிப்பதெனக் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப அவன் பிடிக்க, ஆதிராவும் பின்னர் சிரமமின்றி கொசுவம் எடுத்துக் கச்சிதமாகப் புடவையைக் கட்டி முடித்தாள்.
“எப்பவும் நீதானே ஷேரி கட்டுவ? இன்னைக்கு மட்டும் என்ன?”
“ஃபேப்ரிக் மாறுதுல்ல”
முடிந்தவரை இயல்பாக அவனிடம் பேச முயன்றாலும் இயல்பை மீறி நாணத்தால் கண்ணிமைகள் தாழ்ந்தன.

“நீ துலிப் பூ பாத்திருக்கியா ஆதி?”
இப்போது ஏன் இந்தக் கேள்வி? கண்களால் வினா தொடுத்தாள் அவள்.
“பாத்திருக்கியா இல்லையா?”
“இல்ல”
“வா! உனக்குக் காட்டுறேன்”
அவளைக் கைப்பிடித்து அழைத்துப் போய் கண்ணாடி முன்னே நிறுத்தியவன் அவளது கன்னக்கதுப்பில் ஆட்காட்டிவிரலால் வட்டமிட்டுக் காட்டினான்.
“இங்க தெரியுதா?”
ஆதிரா சட்டென இரு கரங்களால் கன்னங்களைத் தொட்டுப் பார்த்தவள் “ப்ளஷ் ஆகிடுச்சா? இப்பல்லாம் அடிக்கடி ஆகுது புவன்” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“அடிக்கடி?”
பொறுமையாக அவன் புறம் திரும்பியவள் அவனது சட்டையின் காலரைப் பற்றிக்கொண்டு “ஆமா! நீங்க ஏடாகூடமா பேசுனா ப்ளஷ் ஆகுது” என்று சொல்ல
“பேசுனா மட்டும் தானா?” என்றவனின் விழிகளில் ஆர்வம் மின்னியது.
“ப்ச்! போங்க” என அவனை விலக்கிவிட்டுப் போக முயன்றவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் புவனேந்திரன்.
“ஹனிமூன் போறதுல உனக்குச் சிரமம் எதுவுமில்லையே?”
“என்ன சிரமம்?”
“புதுசா ஒரு கம்பெனிகூட டீல் முடிஞ்சுதுனு சொன்னியே?”
“ஹனிமூன் என்ன நாளைக்கேவா போகப்போறோம்? இன்னைக்குச் சிம்பிளா மறுவீடை முடிச்சிட்டு நாளைக்கு மலர் வீட்டு விருந்துக்குப் போறோம். அடுத்த வாரம்தானே ஹனிமூன்! அதுக்குள்ள அபிஷியல் ஒர்க் எல்லாம் நான் முடிச்சிடுவேன். மீதிய தங்கவேலு மாமா பாத்துப்பார் புவன்”
“நமக்கு நேத்து தான் மேரேஜ் ஆச்சுனு யாராச்சும் சொன்னா நான் நம்பவேமாட்டேன்” என்றான் அவன்.
“ஏனாம்?”
“நீ அப்பிடி ஃபீல் பண்ண விடல பொண்டாட்டி”
“எப்பிடி?”
விளையாட்டாகக் கேட்டபடி தனது இரு கரங்களையும் கோர்த்து அவனது தோளின் மீது வைத்தாள் ஆதிரா.
“இவ்ளோ இயல்பா என் கூட பேசுறியே! அதை வச்சு சொல்லுறேன்”
“யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கன்னத்துல துலிப் பூவைக் காட்டுனாங்க”
“அது விதிவிலக்கு. மத்தபடி இவ்ளோ இயல்பான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமேயில்ல”
“நமக்குள்ள சாத்தியம்தான்! ஏன்னா நீங்க என் புவன்”
கால்களை எக்கி அவனது நெற்றியோடு தனது நெற்றியை முட்டிக்கொண்டவள் கண் மூடியபடியே “உங்களையும் என்னையும் என்னால வேற வேற ஆளா நினைக்க முடியல. நீங்க சொன்ன அந்த மிரர் சோல் பிலாசபி வேலை செய்யுதோ?” என்று கேட்க
“இருக்கலாம்” என்றவனின் விரல்கள் ஆதிராவின் இடையில் அழுத்தமாகப் பதியவும் மீண்டும் துலிப் பூக்களின் தரிசனம் அவனது கண்களுக்கு.
திருமணமாகி ஆதிராவுக்கு என்.எஸ்.என்.நிவாசத்தில் முதல் நாள். திருமதி புவனேந்திரனாக அவளிடம் கிஞ்சித்தும் தடுமாற்றம் இல்லை. ஏதோ அவனிடம் ஜென்மாந்திரமாய் பழகிய உணர்வு.
இருவரும் நெக்குருகிப்போய் நின்றபோது ஆதிராவின் மொபைல் இசைத்து இருவரையும் விலக வைத்தது.
அழைத்தவள் ஸ்வேதா.
“டி ஆதி! நீங்க எல்லாரும் கிளம்பியாச்சா? இங்க அம்மா பறக்குறாங்க”
“கிளம்பியாச்சுக்கா! இன்னும் பத்து நிமிசத்துல கார்ல இருப்போம்”
தமக்கையிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் “போகலாமா?” என்க சிறிது நேரத்தில் என்.எஸ்.என்.நிவாசவாசிகளோடு கார்கள் கிளம்பின.
சந்திரவிலாசம் மறுவீட்டு வைபவத்துக்காகக் காலையிலிருந்தே பரபரப்புடன் தயாராகிக்கொண்டிருந்தது.
வீட்டின் மருமகள் என்ற முறையில் மிருணாளினி மாமியாருக்கு உதவியாகச் சுழன்று கொண்டிருந்தாள்.
ஸ்வேதா தனது மைந்தனைக் கவினோடு அனுப்பிவிட்டுக் கர்ணனிடம் தனியே பேசிக்கொண்டிருந்தாள்.
“என்னடா நடக்குது உங்களுக்குள்ள? ஒரே ஊருக்குத் தனித்தனியா வந்து இறங்குறிங்க? ஆல்ரெடி ஆதி விசயத்துல சம்பந்தம் முறிஞ்சு அப்பா எவ்ளோ வருத்தப்பட்டார்னு தெரியும்தானே? நீ வேற உன் பங்குக்கு எந்தக் குண்டையும் தலையில தூக்கிப் போட்டுடாத கர்ணா. உனக்கேத்த பொண்ணு மிருணா. அவளுக்கென்னடா குறைச்சல்? என்ன சண்டையா இருந்தாலும் புருசனும் பொண்டாட்டியும் தனித்தனியா வர்றது, விரோதி மாதிரி முறைச்சுக்குறதை எல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு நிதானமா யோசிங்க. உங்க ரெண்டு பேர் பிஹேவியரும் ரொம்ப சந்தேகத்தைக் குடுக்குது. கவின் இதோட பத்தாவது தடவை விசாரிச்சிட்டார். அந்தாள் கிட்ட நான் என்னனு சொல்லுவேன்?”
கர்ணன் என்றால் ஸ்வேதாவுக்குத் தனிப்பிரியம் எப்போதும். அவளுக்கு அவனது வாழ்க்கையை நினைத்து கவலை இருக்கிறது. ஆதிராவுக்குப் புவனேந்திரன் இமாலயத்துணை. அவளை நினைத்து வருந்த இனி அவசியமில்லை. ஆனால் கர்ணனும் மிருணாளினியும் நடந்துகொள்ளும் விதம் குடும்பத்தினரைச் சந்தேகத்தில் ஆழ்த்தியது.
கர்ணன் தமக்கை சொன்னதைக் கேட்டவன் அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினான்.
“எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லக்கா. அவளுக்குக் கடைசி நேரத்துல புராஜெக்ட்ல ஒரு சிக்கல்னு டீம் மீட்டிங் வச்சிட்டாங்க. அதனால என்னை ஃப்ளைட்ல போகச் சொல்லிட்டா. அவ தனியா வந்ததுக்கு இதுதான் காரணம். நீ தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காதக்கா”
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? தங்கையை வரவேற்க தயாரானாள் ஸ்வேதா.
புவனேந்திரனின் குடும்பம் சந்திரவிலாசத்தில் வந்திறங்கியதும் உற்சாகம் இருமடங்கானது.
வரவேற்பு, சிற்றுண்டி, விருந்துபசாரம் என எதற்கும் குறைவில்லை.
உலகம்மையும் தங்கவேலுவும் கூட வந்துவிட்டார்கள்., தங்கவேலு ஆதிராவிடம் தனியே பேசவேண்டுமென்றார்.
அவரது முகமே சரியில்லை. இத்தனை ஆண்டுகள் அவரோடு இணைந்து வேலை செய்பவளுக்குத் தெரியாதா?
“என்ன மாமா? எதுவும் பிரச்சனையா?” எனத் தனியே அழைத்து விசாரித்தாள்.
“இன்னைக்குக் காலையில நம்ம மில்லுக்கு வைத்தியநாதன் மவன் வந்திருந்தான்”

அவினாஷைப் பற்றி கேள்வியுற்றதும் ஆதிராவின் முகம் மாறியது.
“எதுக்காக மாமா?”
“அவனோட சூப்பர் மார்க்கெட்டுக்கு நம்ம எண்ணெய்யை ஹோல்சேல்ல சப்ளை பண்ண முடியுமானு கேட்டு வந்தான்மா”
“நீங்க என்ன சொன்னிங்க?”
“முதலாளி கிட்ட கேக்காம எதையும் சொல்ல முடியாதுனு சொன்னேன்”
“மாமா உங்களுக்கு அங்க முடிவெடுக்குற அதிகாரம் இருக்கு”
“தெரியும்மா! ஆனா அவனுக்கு நீ பதிலடி குடுத்தா தான் சரியா இருக்கும்”
ஆதிரா தலையில் கைவைத்தபடி யோசித்தாள்.
‘அவினாஷ் ஏன் இப்போது குறுக்கே வருகிறான்? இந்த வட்டாரத்தில் அவர்களைத் தவிர எண்ணற்ற மில் முதலாளிகள் மொத்த விலைக்கு எண்ணெய் விற்பனை செய்கிறார்களே! அங்கெல்லாம் செல்லாமல் தங்களது மில்லுக்கு அவன் வந்திருக்கிறான் என்றால் ஏதோ அவன் மனதில் ஓடுகிறது என்றுதானே அர்த்தம்?’
யோசனையிலிருந்து விடுபட்டவள் “மறுபடி வர்றதா சொன்னாரா?” என்று வினவ
“இன்னைக்கு மதியம் வர்றதா சொன்னான்மா” என்றார் தங்கவேலு.
ஆதிரா யோசனையோடு புருவன் சுழித்தவள் “நம்ம சாப்பாட்டுக்கு அப்புறமா போகலாம் மாமா. போய் பேசி பாக்கலாம்” என்று சொல்ல
“என்ன பேசி பாக்கப் போறிங்க?” எனப் புவனேந்திரனின் குரல் கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
அவனை இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் அதிர்ச்சியே காட்டிக்கொடுத்துவிட்டது.
“எதுக்காக இவ்ளோ ஷாக்?” பேண்ட் பாக்கெட்டில் இரு கரங்களையும் வைத்தபடி நின்றவனின் கேள்வியே விசாரணையாகத் தெரிந்தது இருவருக்கும்.
இருப்பினும் இருவருக்கும் அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லை. எனவே தங்கவேலு நடந்ததை அவனிடம் சொல்லிவிட்டார்.
அனைத்தையும் கேட்டவன் “இன்னைக்கு மதியம் ஆதிராவுக்குப் பதிலா நான் உங்க கூட வர்றேன்” என்றதும் அவளிடம் பரபரப்பு.
“ஏன்? நானே போறேன் புவன்” என்றாள்.
“நீ ரிலாக்ஸா இரு ஆதி. நான் பாத்துக்குறேன்”
சொன்னது போல மதிய விருந்துக்குப் பிறகு தங்கவேலுவோடு உலகம் எண்ணெய் மில்லுக்குச் சென்றுவிட்டான் புவனேந்திரன்.
அங்கே என்ன நடக்குமோ எனப் பரிதவிப்புடன் இருந்த ஆதிரா கதிர்காமனைக் கண்டதும் அவனோடு விளையாடுவதில் மற்ற அனைத்தையும் மறந்தாள்.
மில்லுக்குச் சென்ற புவனேந்திரன் ஆட்களும், இயந்திரங்களும் அதிகமாகியிருப்பதைக் கவனித்தான்.
“கேரளா கம்பெனிக்கு மாசமாசம் எண்ணெய் அனுப்பனுமே தம்பி. அதுக்காக மிஷினை வாங்கிப் போட்டிருக்கோம். கொஞ்சம் ஆளும் எடுத்தோம். எல்லாம் ஆதிம்மா ஐடியாதான்”
மனைவியின் தொழில் திறமையை எண்ணி கர்வமுற்ற புவனேந்திரன் அவளது அலுவலக அறையில் வேறொரு இருக்கையில் அமரவும் “ஆதிம்மா சேர் தான் தம்பி. உக்காருங்க” என்றார் தங்கவேலு.
“இல்ல சித்தப்பா. இது வெறும் சேர் இல்ல. ஆதி தனக்காக உருவாக்குன இடம். அதுல அவ மட்டும்தான் இருக்கணும். ஒரு இடத்தோட மரியாதை அதை உருவாக்குனவங்களுக்கு அந்த இடம் சொந்தமா இருந்தா மட்டுமே நீடிக்கும்” என்றதும் தங்கவேலுக்குப் பெருமை தாங்கவில்லை.
ஆதிராவிற்கு ஏற்றவன் அவளுக்குத் துணைவனாகிவிட்டான் என்ற திருப்தி அவருக்கு.
அவரது மகிழ்ச்சியை அதிக நேரம் நீடிக்க விடாமல் வந்து சேர்ந்தான் அவினாஷ். வந்தவன் அங்கே புவனேந்திரனை எதிர்பார்க்கவில்லை போல.
அவனது முகத்தில் அந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளிப்படையாகத் தெரிந்தது.
“ஹலோ” புவனேந்திரன் தான் பேச்சை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
“ஹாய்! ஆதிரா தான் ஓனர்னு நினைச்சேன். நம்ம ஊருல பஞ்சாயத்து பிரசிடெண்ட் எலக்சன்ல பொண்டாட்டி ஜெயிச்சாலும் புருசன் தான் பிரசிடெண்ட் வேலைக்கான எல்லா வேலையையும் செய்வான். இங்கயும் அப்பிடித்தானா?”
கேலியாகப் பேசுவது போல காட்டிக்கொண்டு புவனேந்திரன் கை காட்டிய இருக்கையில் அமர்ந்தான் அவினாஷ்.
தங்கவேலுவுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. ஆனால் அவரைத் தன் பார்வையால் அடக்கினான் புவனேந்திரன்.
“சித்தப்பா நீங்க வேலை சரியா நடக்குதானு கவனிக்கப் போங்க. நான் சார் கூட பிசினஸ் பேசிட்டு வந்துடுறேன்” என்றான் அவன்.
அவர் சென்றதும் அவினாஷிடம் கவனத்தைக் குவித்தவன் “என்ன ப்ளானோட ஆதியோட மில்லுக்கு வந்திங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என நேரடியாக வினவினான்.
அவினாஷ் சிரித்தான். சிரிப்பில் அவன் மெய்யானக் காரணத்தை மறைக்க முயலுவதாகத் தோன்றியது புவனேந்திரனுக்கு.
“என்னோட சூப்பர் மார்க்கெட்ல விக்கப்படுற எல்லா பொருளும் தரமானதா இருக்கணும்னு நினைச்சதால தான் இங்க வந்து உக்காந்திருக்கேன். மத்தபடி எனக்கு வேற எந்த நோக்கமும் கிடையாது” என்றான் அவன்.
“தரமான எண்ணெய் இங்க மட்டும்தான் கிடைக்கும்னு நினைக்குறிங்களா? இதைவிட மொக்கையான காரணம் உங்களுக்குக் கிடைக்கலையா அவினாஷ்?”
“நீங்க பேசுறதைப் பாத்தா இந்த மில்லோட எண்ணெய் தரமானது இல்லனு சொல்ல வர்ற மாதிரி எனக்குத் தோணுதே”
எங்கே குத்தினால் ஈகோ கிளறப்படுமென அறிந்தே குத்தினான் அவினாஷ். தவறாமல் சிலிர்த்துக்கொண்டு நின்றது புவனேந்திரனின் ஈகோ.
“என் ஆதி தரமில்லாத எதையும் செய்யமாட்டா. அது தொழிலா இருந்தாலும் சரி! வாழ்க்கையா இருந்தாலும் சரி”
அவினாஷின் முகம் மாறுமென அவன் எதிர்பார்த்தான். ஆனால் மாறவில்லை. மாறாய் மெல்லிய முறுவலொன்று உதயமானது அவனிடம்.
“உங்க ஒய்போட செயல்கள், முடிவுகள் மேல அவ்ளோ நம்பிக்கை இருந்துச்சுனா எதுக்கு இவ்ளோ நீளமான குறுக்கு விசாரணை? இந்த மில்லுக்குனு இந்த வட்டாரத்துல ஒரு பேர் இருக்கு. அதனாலதான் இவங்களோட நான் டீல் பேச வந்தேன். என் சூப்பர் மார்க்கெட்ல விக்குற அப்பளம் கூட தரமானதா இருக்கணும்னு நினைக்குறவன் நான். இப்ப சொல்லுங்க! நான் உள்நோக்கத்தோட வந்ததா தோணுதா உங்களுக்கு?”
புவனேந்திரன் நிதானமாக அவனை ஏறிட்டான்.
‘இவனைப் பாம்பாகவும் நினைக்க முடியாது! பழுதாக நினைத்துக் கடக்கவும் முடியாது!’
“என்ன சார் இப்பவும் யோசிக்குறிங்களா? இது யோசனையா இல்ல பயமா? அந்தப் பயத்தாலதான் உங்க ஒய்ப் இங்க வராம உங்களை அனுப்பி வச்சிருக்காங்களா?”
அவினாஷ் கீழ்க்கண்ணால் பார்த்தபடி கேட்கவும் புவனேந்திரன் இருக்கையை விட்டு எழுந்தான்.
“நீங்க பயம்னு எதை மீன் பண்ணுறிங்கனு புரியுது மிஸ்டர் அவினாஷ். எப்ப உங்களுக்கும் ஆதிராவுக்குமான நிச்சயம் முறிஞ்சுதோ அப்பவே நீங்க அவளுக்கு மூனாவது மனுசன் ஆகிட்டிங்க. உங்களை நினைச்சு அவ ஏன் பயப்படணும்? உங்களுக்கு எண்ணெய் சப்ளை பண்ணுறதுல ஆதிராவுக்கு எந்தத் தயக்கமும் இல்ல. அவளுக்குப் பதிலா நான் இங்க வந்ததுக்கு ஆதிரா பயந்துட்டானு அர்த்தமில்ல. அவளை எதுவும் செய்யணும்னு நினைக்குறவங்க முதல்ல அவ புருசன் கூட மோதணும்னு புரியவைக்குறதுக்காக. உங்களுக்கு அது புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். இந்த டீல் முடிஞ்சதா நினைச்சுக்கோங்க. எப்ப உங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு எண்ணெய் வந்து சேரணும்ங்கிற விவரத்தைச் சித்தப்பா கிட்ட சொல்லிட்டுப் போங்க”

அவினாஷ் மெச்சுதல் புன்னகையோடு எழுந்தான். டீல் முடிந்ததன் அடையாளமாய் புவனேந்திரனிடம் கை குலுக்க கை நீட்டினான்.
அவனும் பற்றிக்கொண்டான்.
“வர்றேன் சார்”
அவினாஷ் வெளியேறியதும் புவனேந்திரன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.
இவ்வளவு நேரம் சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டிருந்த ஈகோ இன்னும் தணிந்த பாடில்லை.
இது ஆண்களின் குணாதிசயம். எதிரில் நிற்பவன் ‘பயமா?’ என்று கேட்டுவிட்டால் ஈகோ கிளர்ந்தெழுந்து அதை இல்லையென நிரூபிக்க முயலுவார்கள்.
பொதுவாக, ஆண்களின் சமூக கட்டமைப்பில், பயம் என்பது ஒரு பலவீனமாகக் (weakness) கருதப்படுகிறது. “பயமா?” என்று நேரடியாகக் கேட்பது, அவனது ஆண்மை (masculinity) அல்லது பலம், அவனைச் சார்ந்தோருடனான அவனுடைய உறவை நேரடியாக கேள்விக்குள்ளாக்குவது போலாகும்.
இந்தக் கேள்வியை ஒரு நேரடி சவாலாகவே ஆண் உணர்வான். குறிப்பாக, மற்றவர்கள் முன்னிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டால், தன் ஈகோவை நிரூபிப்பதற்காக, அவன் பயப்படவே இல்லை என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பொதுவாக, இந்தக் கேள்வியானது சவாலை விடுத்தவருக்கும், சவால் ஏற்க நேர்ந்தவருக்கும் இடையே ஒருவிதமான அதிகாரப் போராட்டத்தைத் (Power struggle) தொடங்கி வைக்கும். மேலும், இந்தக் கேள்வியை எப்போதாவது விளையாட்டாகவோ அல்லது அச்சுறுத்தும் தொனியிலோ கேட்பது அந்த ஆணை உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ செயல்பட வைக்கலாம்.
புவனேந்திரன், அவினாஷ் இருவருக்குமே இதெல்லாம் நன்கு தெரியும்.
புவனேந்திரனுக்கு ‘என் மனைவிக்கோ எனக்கோ உனது வருகையால் எந்தப் பயமும் இல்லை. நீ அவளுக்கு யாரோ ஒருவன்’ என்பதை அவினாஷின் மண்டையில் அடித்தாற்போல நிரூபித்துவிடும் வெறி.
அவினாஷுக்கோ இதைச் சாக்காக வைத்து ஆதிராவின் வாழ்க்கையில் புகுந்து குட்டையைக் குழப்பும் வெறி.
இரு ஆண்களின் எண்ணப்போக்கையும் அறியாமல் கதிர்காமனுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள் ஆதிரா.
புவனேந்திரன் எடுத்த முடிவு பற்றி அவளுக்குத் தெரிய வருகையில் வெடிக்கப் போகிற பூகம்பத்தின் சின்ன அறிகுறி கூட இல்லாமல் அத்துணை சந்தோசமாக இருந்தது சந்திரவிலாசம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

