“முன்னாடி எல்லாம் காலையில மொபைல்ல அடிக்குற அலாரம் சவுண்ட் ஏதோ ராட்சசியோட குரல் மாதிரி தோனும். இப்ப அப்பிடி இல்ல. காலையில சீக்கிரமா முழிச்சு புவனோட குட்மானிங் மெசேஜ் வர்ற வரைக்கும் கன்னத்துல கை வச்சு மொபைல் ஸ்க்ரீனையே பாத்துட்டிருக்குறது எனக்கு வழக்கமாகிடுச்சு. அது மட்டும் சரியான நேரத்துக்கு வந்துட்டா அன்னைக்கு முழுக்க ஆதிரா ஹேப்பி. அம்மாவோட சட்னில உப்பு தூக்கலா இருந்தாலும், மில் வேலைல சிக்கல் வந்தாலும், வேலை சுமைல தலை வலிச்சாலும் அந்த மெசேஜோட தாக்கத்தால அது எல்லாமே ஜுஜூபியா தோனும்.”
-ஆதிரா
புவனேந்திரன் – ஆதிராவின் திருமணத்துக்கு ஆடைகள் வாங்கும் வைபவம் இனிதே நிறைவுற்றது. அடுத்தடுத்த வேலைகளைப் பெரியவர்கள் கவனித்துக்கொண்டார்கள்.
இன்னும் பண்ட பாத்திரங்கள், சீர் வகைகள், நகை வாங்கும் வேலை இருந்தது. அந்நேரத்தில் கேரளாவில் இயங்கி வரும் ‘டேஸ்ட் பட்ஸ்’ என்ற ரெடி டூ ஈட் உணவு வகைகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் உலகம் ப்ராண்ட்டுக்கு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவரை கேரள உணவு வகைகளை மட்டும் தயாரித்து சந்தைப்படுத்தி வந்த அந்நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்க விரும்பியது. தமிழக மண் சார்ந்த சமையலுக்கான எண்ணெய் வகைகளை அங்குள்ள தயாரிப்பாளரிடமிருந்தே வாங்கிக்கொள்ளலாமென்ற முடிவை எடுத்த பிற்பாடு உலகம் ப்ராண்டை அணுகினார்கள்.
அவர்களது நிறுவனத்திலிருந்து ஒரு குழு வந்து எண்ணெய் மில்லை பார்வையிட்டது. கோல்ட் ப்ரஸ்ட் முறையில் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுவதை உறுதி செய்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதன் பின்னர் இரு நிறுவனத்தாரும் முறைப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.
உலகம் ப்ராண்டில் கிடைக்கும் எண்ணெய்களில் நூறு சதவிகிதம் மினரல் ஆயில் அல்லது பாமாயில் கலப்படம் இருக்காது. தரத்துக்குத் தான் உறுதியளிப்பதாக ஆதிரா கூறியிருந்தாள்.
சந்தையில் இருக்கும் பிரபல ப்ராண்டுகளின் எண்ணெய்யில் இந்த வகை கலப்படம் சாதாரணம் என்பது உலகம் அறிந்த உண்மை. அதனால் இந்தத் தனிப்பட்ட உறுதியை அவள் கொடுக்க வேண்டிய கட்டாயம்.
ஒப்பந்தம் கையெழுத்தானதும் உற்பத்தியளவை அதிகரிப்பதற்கான வேலையில் அவள் இறங்கினாள். கூடவே துணையாய் தங்கவேலு இருக்கிறாரே!
அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் என்னவென ஆதிராவுக்கு வழிகாட்டினார் அவர்.
“கல்யாணத்துக்கு நாள் கம்மிதான் ஆதிம்மா. இந்த மிஷின் வாங்குறது, கச்சாபொருளை கொண்டு வர்ற வேலை எல்லாம் நான் கவனிச்சிக்குறேன். நீ அலையவேண்டாம்” என்று சொல்லிவிட்டார் அவர்.

அவளும் தங்கவேலு சொல்வதைக் கேட்டுக்கொண்டாள்.
அதே நேரத்தில் புவனேந்திரன் கொடுத்திருந்த மென்பொருளுக்கான புராஜெக்டும் முடியும் நிலையில் இருந்தது. அதன் டெமோ வெர்சனைக் கொண்டு வந்து இயக்கிக் காட்ட தலைமை புராஜெக்ட் மேனேஜர் வந்திருந்தார்.
ஆதிரா பவிதரனிடம் பேசியதன் விளைவு மதுமதி அதன் பிற்பாடு எந்த சாக்கை வைத்துக்கொண்டும் ஹோட்டல் பக்கம் வரவில்லை. வந்தால் நிலமை மோசமடையுமென அவளுக்கும் புரிந்துவிட்டது.
ஆனால் ஆதிராவைக் காயப்படுத்தும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தாள் அவள். அத்துணை எளிதில் மதுமதி போன்ற நார்சிசிஸ்டுகள் மாறிவிடுவார்களா என்ன?
அவளது காத்திருப்புக்குப் பதில் கிடைக்குமோ என்னவோ, அவினாஷின் ஆற்றாமையும் மனக்காந்தலும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.
‘அப்படியென்ன ஒரு பொண்ணுக்கு வீம்பு? இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காததா என்ன? திருமணம் நிச்சயமாகிவிட்டால் பெண்ணானவள் கணவனின் உடைமையாகிவிடுவாள். புகுந்தவீட்டாருக்கு அவளை எதுவும் சொல்ல உரிமை இருக்கிறது. இப்படித்தானே பல நூற்றாண்டுகளாக இந்தியக் குடும்பங்கள் இயங்கி வருகின்றன. ஆதிரா மட்டும் என்ன அதில் சிறப்பு?’
இந்த எண்ணவோட்டம் அவனுக்கு. பாவம்! முக்கால்வாசி ஆண்களின் மனவோட்டம் திருமணத்துக்குப் பிறகுதான் இப்படி மாறும். அவினாஷுக்கு முன்னரே மாறிவிட்டது அவனது தமக்கையின் போதனைகளால்!
ஆணாதிக்கம், பெண்ணுரிமை போன்ற முழக்கங்கள் எல்லாம் ஒருவருக்குப் புரிந்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அவற்றை பெண்களே குடும்ப அமைப்புக்கு எதிரான கருத்தாக்கங்களாகப் பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
ஆனால் கொஞ்சம் போல மனிதாபிமானத்தோடு யோசிக்கலாமே! ஒருவர் மீது அடாத பழியொன்றை சுமத்தும் முன்னர் நம்மை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாமே!
இரக்கம், அனுதாபம், மனிதாபிமானம் இதெல்லாம் மனிதன் என்ற ஜீவராசிக்குக் கட்டாயம் இருந்தே ஆகவேண்டும். அதனால் மட்டுமே ஹோமோசேப்பியன் என்ற விலங்கினம் மற்ற விலங்குகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது.
அந்தோ பரிதாபம், மேற்சொன்ன மூன்று உணர்வுகளும் குடும்ப அமைப்பில் பெண்கள்மீது யாருக்கும் வருவதில்லை.
மாறாக அவர்கள் படும் சிரமங்கள் அனைத்தையும் ‘தியாகம்’ என்ற ஜிகினா பூச்சால் அலங்கரிக்கும் வெட்டி வேலைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். நகைச்சுவையாகவோ, சாதாரணமாகவோ கடக்கும் இல்லத்தரசிகளின் சிரமங்களை எப்போதுமே இந்தியச் சமுதாயமும், ஆண்பிள்ளைகளைப் பெற்ற குடும்பத்தினரும், ஆணாதிக்கத்தில் வாழ்வதைச் சுகமாக எண்ணும் பெண்களும் புரிந்துகொள்வதில்லை.
சுஜாதாவும் அவினாஷும் இந்தச் சமுதாயத்தின் பிரதிநிதிகளே! அவர்களை வெளியிலிருந்து பார்த்து கோபம் கொள்ளும் ஆணோ பெண்ணோ தங்களது வாழ்க்கையில் ஆதிரா போன்ற பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால் இன்னொரு சுஜாதாவாகவும் அவினாஷாகவும் மட்டுமே மாறுவார்கள். இதுதான் நிதர்சனம்.
தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வரப்பட்ட சில கருத்தாக்கங்களைத் தவறென ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அத்துணை எளிதில் நமக்கு வாய்ப்பதில்லை.
அவினாஷும் நம்மைப் போல ஒருவனே! அவனால் தனது தமக்கை செய்தது தவறென்று யோசிக்க முடியவில்லை. அவள் அவ்வாறு யோசிக்க வழிவகை செய்த ஆதிராவிற்கு முதிர்ச்சியில்லை என்று யோசித்தான்.
அவனது மனதில் அவளுக்காகத் தயார் செய்த இடத்தில் இப்போது வெறுமையும் வலியும் மட்டுமே இருப்பதை அவனது ஆண் என்ற ஈகோவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘உனக்கு இவள்தான்’ என்று நிச்சயமான கணத்திலேயே அவளை மனைவியாக மனதில் நிறுத்திக்கொண்டவன் அவன்.
சுஜாதா கேட்ட கேள்விக்கு ஆதிரா சூடாகப் பதிலடி கொடுத்திருக்கலாம். பின்னர் திருமணவேலைகளைக் கவனித்திருக்கலாம். திருமணத்தை நிறுத்தியது எல்லாம் அதீதமான செய்கை என நினைத்தான் அவன்.
இந்த நிலையில்தான் ஆதிரா – புவனேந்திரனின் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வந்துவிட்டது. அதைக் குலதெய்வக் கோவிலில் வைத்து வணங்குவது அவரவர் குடும்பத்தின் வழக்கம்.
சிவகாமி தனது குடும்பத்தோடு குலதெய்வக்கோவிலுக்குப் போய்விட, ஆதிராவின் குடும்பமும் களக்கோடி சாஸ்தா கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
சாஸ்தாவுக்குப் பொங்கல் வைத்து அவரது சன்னிதானத்தில் திருமண அழைப்பிதழை வைத்து வணங்கிய பிற்பாடு சொந்தக்கார குடும்பங்களுக்குக் கொடுப்பது காலங்காலமாக அவர்கள் குடும்பத்தில் வழக்கம்.
பொங்கலை ஆதிராவின் கையால் வைத்துவிட்டால் சிறப்பு என எழிலரசி கருத, அவளும் எண்ணெய் மில்லைத் தங்கவேலுவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வந்திருந்தாள்.
ஆலமரத்தின் அடியில் செங்கல்லை அடுக்கி பனையோலை கட்டு ஒன்றை வைத்த பிற்பாடு பொங்கல் வைக்கும் பித்தளை உருளியை அந்தச் செங்கல் அடுப்பின்மீது வைத்தாள் ஆதிரா.
அதில் சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு தண்ணீரை நிரப்பியவள் கற்பூரத்தால் ஆரத்தி காட்டிவிட்டு அந்தக் கற்பூரத்தை வைத்தே பனையோலையில் நெருப்பைப் பற்றவைக்க, பொங்கல் வைக்கும் பானையின் அடியில் பற்றியது நெருப்பு.
அரிசி கழுவிய தண்ணீரை பானையில் ஊற்றி அது பொங்கி வருவதற்காக காத்திருந்தாள் அவள்.
அந்த நேரத்தில்தான் வைத்தியநாதனின் குடும்பமும் அங்கே வந்தது. கூடவே சுஜாதாவும் அவளது கணவனும்.
அவளது கணவனுக்குப் பூர்வீகச் சொத்தில் பங்கு ஏதோ வந்திருக்கிறதாம். அந்தப் பங்கு கிடைப்பதில் சிக்கல் இருந்தபோது சுஜாதா சாஸ்தாவுக்கு வேண்டுதல் வைத்திருந்தாள். இப்போது கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்ற வந்துவிட்டாள்.
வினாயகத்தின் குடும்பத்தைப் பார்த்ததும் உதட்டைக் கோணி அழகு காட்டியவள் பொங்கல் வைக்கும் ஆயத்தத்தைச் செய்தாள்.
வைத்தியநாதனுக்கும் அலமேலுவுக்கும் சங்கடமாகிப் போனது. நல்லவேளையாக மகன் இங்கே வரவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் இருவரும்.
மகளும் மருமகனும் பொங்கல் வைக்கட்டுமென ஒதுங்கி நின்றுகொண்டார்கள்.
சுஜாதாவின் கணவன் பேசிய வார்த்தைகள் அரசல் புரசலாக ஆதிராவின் காதுகளில் விழுந்துவைத்தது.
“பொங்கலுக்கு இவ்ளோ அண்டிபருப்பு வாங்கிருக்க? விலைவாசி என்னனு தெரிஞ்சாதானே? எவனோ சம்பாதிச்சு கொட்டுறான்! நீ அள்ளிப் போடு. போறது என் காசுதானே?”
“சீக்கிரமா வேலைய பாரு. நீ வீட்டுல போய் நாலு பாத்திரத்தை உருடிட்டு டிவி முன்னாடி உக்காந்துடுவ. எனக்கு ஆயிரம் சோலி இருக்கு”
இதெல்லாம் குறை கூறல்கள் போலன்றி நகைச்சுவை போலதான் அவர் சொன்னார். ஆண்களைப் பொறுத்த வரை ஜோக்குகள் என்றால் ‘ஹோம்மேக்கர்’ மனைவிகளை மட்டும் தட்டுவதுதானே!
ஆனால் மனைவியை மட்டம் தட்டுகிறோமென்ற புரிதலே இல்லாமல் அதைச் செய்வார்கள். புரிந்தால் கூட ஊடகங்கள், சமூக வலைதள ரீல்ஸ்களில் ஆரம்பித்து தங்கள் குடும்பங்களில் பார்த்த சம்பவங்கள் வரை இம்மாதிரி மட்டம் தட்டுவது தவறில்லை என்ற எண்ணத்தைக் கொடுப்பதோடு அதை ஜோக் என்றே எண்ணவைக்கின்றன.
சுஜாதாவின் முகம் ஒவ்வொரு ஜோக்குக்கும் மாறுவதைக் கவனித்த ஆதிராவுக்கு ஏனோ அவள் மீது இரக்கமே வரவில்லை.
“இந்த நெய்யா கொண்டு வந்திருக்க? ஒரு கிலோ ஆயிரத்து ஐநூறு ரூபா. சுத்தமானப் பசு நெய் இது. பாத்து அளந்து ஊத்து சுஜாதா. வேலைக்குப் போய் சம்பாதிக்குறவனுக்குத்தான் வலி தெரியும். வீட்டுல உக்காந்து சொகுசா சீரியல் பாக்குற உனக்குத் தெரியாதுல்ல. உன் அதிகபட்ச வருத்தமே பாக்கியலெட்சுமி சீரியலை இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டானேங்கிறதுதான். நீ விரயமாக்குற ஒவ்வொரு பொருளும் என்ன விலை விக்குதுங்கிற கவலை எனக்குத்தானே”
ஆதிராவுக்கு இதெல்லாம் கேட்க கேட்க ஆச்சரியமே! இத்தகைய பேச்சுகளைக் கேட்டுக்கொள்ளும்போதே தனது வேலையைக் காரணம் காட்டி நடத்தையைக் கேள்விக்குறியாக்கினாள் இந்த சுஜாதா. கூடவே வேலைக்குச் செல்லும் பெண்கள் அதில் ஜெயிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற வியாக்கியானம் வேறு!
பொங்கல் வைத்து முடித்த பிற்பாடு பூஜை ஆரம்பித்தது.
சாஸ்தாவின் பாதத்தில் திருமண அழைப்பிதழை வைத்து நைவேத்தியமாக பொங்கலை படைத்து பூஜையை முடித்துக்கொடுத்தார் பூசாரி.
வினாயகத்தின் குடும்பம் கிளம்பும் முன்னர் சுஜாதாவிடம் பேசவேண்டுமென்றாள் ஆதிரா.
“அவ கிட்ட என்ன பேசணும்? அவ ஆக்கங்கெட்டத்தனமா பேசுவா ஆதிரை” எனச் சிடுசிடுத்தார் மருதநாயகி.
“இரு ஆச்சி! அவங்க கிட்ட ஒரு கணக்கு பாக்கி இருக்கு. அதைத் தீர்த்துட்டு வந்துடுறேன்”
ஆதிரா தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் அலமேலு வைத்தியநாதனின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
அவளோ நேரே வைத்தியநாதனிடம் புன்னகை முகமாக கை கூப்பினாள்.
“வணக்கம் மாமா! எப்பிடி இருக்கிங்க??”
பதில் வரவில்லை. சங்கடப்புன்னகை மட்டும்!
அடுத்து சுஜாதாவிடம் திரும்பினாள்.
“நல்லா இருக்கிங்களா? பொங்கல்ல நெய் மிதக்குதே. தப்பு தப்பு! நெய்ல பொங்கல் மிதக்குது. வாசனை அங்க வரைக்கும் இழுக்குது. ப்ச்! அண்ணா சொன்னது சரிதான். உழைக்குறவங்களுக்குத்தான் காசோட அருமை தெரியும். வீட்டுலயே உக்காந்து தரையைத் தேய்க்குறவங்களுக்கு எப்பிடி தெரியும்?”
நக்கலும் கேலியுமாக ஆதிரா அவளை மட்டம் தட்ட சுஜாதாவின் முகம் கோபத்தில் தணலானது.
அவள் பதிலடி கொடுக்கும் முன்னரே ஆதிரா முந்திக்கொண்டாள்.
“என்னை என்ன சொன்னிங்க? தொழில் வேலைனு இருக்குற பொம்பளைங்க அவங்க நினைச்சதைச் சாதிக்க எந்த எல்லைக்கும் போவாங்களா? அப்ப உங்களை மாதிரி ஹோம்மேக்கர்ஸ் வீட்டுல சொகுசா கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்ள வாழுறதுக்காகப் புருசன் எவ்ளோ கேவலப்படுத்துனாலும் துடைச்சு விட்டுட்டுப் போயிடுவிங்கனு நானும் சொல்லட்டுமா?”

கோபமில்லாமல் தெளிவானக் குரலில் ஆதிரா கேட்கவும் சுஜாதாவோடு அவளது கணவரும் அதிர, அலமேலு மகளுக்காகப் பரிந்து பேசிகொண்டு வந்தார்.
“என் மகளை அசிங்கப்படுத்துறதா நினைச்சு நீ ஒட்டுமொத்த பொம்பளைங்களையும் மட்டமா பேசுற. உன் அம்மாவும் வீட்டோட இருந்தவங்க தான், உன் ஆச்சியும் வீட்டோட இருந்தவங்கதான். அதை மறந்துடாத”
“அவங்க யாரும் வேலைக்குப் போற பொண்ணுங்களை மட்டமா பேசல. அவங்களுக்கு வாய்ச்ச லைஃப் பார்ட்னர்சும் பொண்டாட்டிகளை மட்டம் தட்டி அதை ஜோக்னு சொல்லிக்கிற ரகமில்ல. எனக்கு ஹோம்மேக்கர்சை அவமானப்படுத்தனும்ங்கிற எண்ணம் கிடையாது. ஆனா உங்க பொண்ணு மாதிரி சில ஹோம்மேக்கர்ஸ், வேலைக்குப் போற பொம்பளைங்களுக்குத் தாய்மை, பொறுப்பு எதுவும் இல்ல, சுயநலவாதிங்கனு சாயம் பூசுறாங்கல்ல. அப்ப அந்தப் பொம்பளைங்களுக்கு எப்பிடி வலிக்கும்ங்கிறதை புரிய வைக்க முயற்சி பண்ணுறேன். உங்களுக்கு வீட்டுல இருந்து குடும்பப்பொறுப்பை ஓய்வொழிச்சல் இல்லாம செய்ய பிடிச்சிருக்குங்கிறதுக்காக எல்லா பொம்பளைக்கும் அது பிடிக்கனும்னு அவசியமில்ல. ஒவ்வொருத்தருக்கும் விருப்பங்கள் மாறுபடலாம். அடுத்தவங்க விருப்பத்தை மதிக்க கத்துக்கோங்க. மத்தபடி உங்க புருசன் உங்களை மட்டம் தட்டுறதும், அதை நீங்க கண்டுக்காம விடுறதும் உங்களோட பெர்ஷனல். இதைக் காலம் முழுக்க சகிச்சிக்கிறதும் உங்களோட பெர்ஷனல். அதுக்குள்ள நான் வர விரும்பல. ஒன்னு மட்டும் தெளிவா உங்க மண்டைல ஏத்திக்கோங்க., என்னைக் கமெண்ட் பண்ணுற இடத்துல நீங்க இல்ல. நான் பாத்து பரிதாபப்படுற இடத்துலதான் நீங்க இருக்கிங்க. இதை எப்பவும் மறந்துடாதிங்க. வரட்டுமா?”
ஆதிரா கர்வத்தோடு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப சுஜாதாவின் முகத்தில் ஈயாடவில்லை. தன் கணவர் தன்னை வைத்து கேலியாகப் பேசிய அனைத்தையும் ஆதிரா கேட்டுவிட்டாள் என்பது தெரிந்ததும் முகம் கறுத்துப் போனாள் அவள்.
ஆதிராவுக்கு அன்று மனம் நிறைந்து போனது. பாக்கி இருந்த ஒரு கணக்கையும் தீர்த்த திருப்தியோடு சந்தோசமாகத் திருமணத்துக்குத் தயாரானாள் அவள்.
கூடவே சாஸ்தா கோவிலில் நடந்ததை புவனேந்திரனிடமும் அன்றிரவு மொபைலில் பேசியபோது பகிர்ந்துகொண்டாள்.
“அந்தம்மா என்னைப் பேசிட்டு ஃப்ரீயா போயிடுச்சு. அது எனக்குள்ள ஒரு உறுத்தலா ரொம்ப நாளா இருந்துச்சு. இன்னைக்கு அந்த உறுத்தல் போயிடுச்சு புவன்” என்றாள் அவள் ஆசுவாசத்தோடு.
“எனக்கும் இன்னைக்கு அப்பிடியொரு மொமண்ட் தான்” என அவன் சொல்லவும்
“உங்களுக்குமா?” எனத் திகைத்தாள் அவள்.
“ம்ம்! இன்னைக்கு க்ளவுட் பீ டெக்னாலஜி தச்சநல்லூர் ஆபிசுக்குப் போனேன். டெமோ வெர்சன்ல உள்ள சேஞ்சசை சொல்லிட்டு அப்பிடியே மேரேஜுக்கு இன்வைட் பண்ணுனேன். அங்க மதுமதிய பாத்தேன்”
இப்போது ஆதிராவிடம் கனத்த மௌனம். உள்ளுக்குள் சின்னதாய் சுணக்கம்.
“ஆதி! கேக்குதா?”
“ம்ம்! சொல்லுங்க”
“அவ கிட்ட பேசுனேன். தயவு பண்ணி கல்யாணத்துக்கு வந்துடாதனு சொல்லிட்டு வந்தேன்”
“ஏன் அவ வந்தா நான் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவேன்னு நினைச்சிங்களா?”
“இல்ல! அந்த நல்ல நாள்ல அவளை நான் பாக்க விரும்பல. அதனால சொன்னேன். சொன்ன அப்புறம் மனசுல அவ்ளோ சந்தோசம். எனக்குள்ளவும் ஒரு மிருகம் இருந்திருக்கு பாரேன்”

இப்போது ஆதிரா சத்தமாகச் சிரித்தாள்.
“ஆமா! அது ஒரு கியூட்டான பூனைக்குட்டி” என்று அவள் கலாய்க்க, புவனேந்திரனாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இது போல உரையாடல்களிலும் திருமணத்திற்கு முந்தைய ஏற்பாடுகளிலும் நாட்கள் வேகமாகப் பறக்கத் தொடங்கின!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

